Wednesday, August 08, 2007

'பல்லி'க்கூடம்! - வ.ந. கிரிதரன் -


-  ஒரு குட்டிக் கதை! ஆனந்தவிகடன் பவளவிழாப் போட்டிக்குத் தெரிவான ரூபா 3000 பரிசு பெற்ற முத்திரைக் குட்டிக்கதை.! -


வெளியில் காற்று பலமாக வீசிக்கொண்டிருக்கிறது. யமுனாவுக்குத் தூக்கமே வரவில்லை. சற்றுத் தள்ளி கிழவி படுத்து உறங்கிக்கொண்டிருக்கிறாள். பேத்தியின் மனநிலை மட்டும் அவளுக்குத் தெரிந்திருக்குமானால், துடித்திருப்பாள்.

இந்தத் தள்ளாத வயதிலும் அவள் தன் உயிரைப் பிடித்துக்கொண்டு வாழ்வதே பேத்திக்காகத்தானே! பஸ் விபத்தொன்றில் மகளையும் மருமகனையும் இழந்ததிலிருந்து இவ்வளவு காலமாக அந்தக் கிழவிதானே யமுனாவைக் கண்ணும் கருத்துமாக வளர்த்து வருகிறாள்!

கிழவியைப் பார்க்கப் பாவமாயிருக்கிறது. தான் செய்வது சரியா என்று யமுனா தன்னைத்தானே கேட்டுக்கொண்டாள்.

அவளது நெஞ்சில் இவ்வளவு போராட்டங்களுக்கும் காரணமாக இருப்பவன் மாதவன். படித்துவிட்டு வேலையற்று ஊர்சுற்றிக் கொண்டிருப்பவன்.. மணந்தால் மாதவன்தானென்று இவளும், இவள்தானென்று அவனும் நினைத்துக்கொண்டிருந்த சமயத்தில்தான், வசதிமிக்க சண்முகத்தை மணந்தால் யமுனாவின் வாழ்க்கை சீராக இருக்குமென்று கணக்கிட்டு, நிச்சயதார்த்தத்துக்கு ஏற்பாடு செய்துவிட்டாள் கிழவி. இதற்கு முடிவு.. மாதவனும் யமுனாவும் ஊரைவிட்டே ஓடிப்போவதுதான்..

நள்ளிரவு மாதவன் வருவான்.. தன்மேல் உயிரையே வைத்திருக்கும் கிழவியிடம்கூடச் சொல்லாமல் மாதவனுடன் ஓடுவது யமுனாவுக்கு கஷ்டமாக இருந்தது. தவிர, மாதவனுக்கோ வேலை வெட்டியென்று எதுவுமே கிடையாது. இந்நிலையில் ஓடிப்போவது சரியான முடிவுதானா?

யமுனாவின் பார்வை, சுவரின்மேல் இரைக்காகக் காத்துக்கொண்டிருந்த பல்லியின்மேல் திரும்பியது.. இந்த நேரம் பார்த்து அங்கே இன்னொரு பல்லி பிரவேசித்தது. ஆண்பல்லியாக இருக்க வேண்டும். மெதுவே, பின்புறமாக வந்து இரைக்காகக் காத்திருந்த இந்தப் பெண்பல்லியைத் தழுவ அது முற்பட்டது.... சட்டென்று இந்தப் பெண் பல்லி அதனிடமிருந்து தப்பித்து நழுவி ஓடத் தொடங்கியது. சற்று நேரம் இப்படி ஆணை அலைக்கழிய வைத்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த அந்தப் பெண்பல்லி, ஆண்பல்லியின் மேல் பரிதாபம் கொண்டதோ என்னவோ... இம்முறை ஓடாமல் ஆண் பல்லியை எதிர்பார்த்து அசையாமல் நின்றது. ஆணும் அதுவரை நிகழ்ந்த ஊடலையெல்லாம் மறந்து கூடலை நாடி பெண்பல்லியை நெருங்கியது. அந்தச் சமயம் பார்த்து எங்கிருந்தோ பூச்சியன்று பெண்பல்லிக்கு முன்பாக வந்து அமர்ந்தது.

அதுவரை காதல் மயக்கத்தில் மூழ்கிக் கலவியின்பத்தை எதிர்பார்த்துக் கிடந்த அந்தப் பெண் பல்லி தன் உணர்வுகளை எல்லாம் கணப்பொழுதில் மாற்றிக் கொண்டு தன் முன்னால் வந்தமர்ந்த பூச்சியின் மீது பாய்ந்தது, 'லபக்‘கென்று பிடித் துச் சுவைக்கத் தொடங்கியது. ஆண்பல்லி ஏமாற்றத்துடன் நின்றது. பசி உணர்வு அவ்வளவு வலிமையானதா? காதலை விட, காமத்தைவிட பசி அத்தனை வலிமையானதா..?

அவள் மாதவனுடன் ஓடிப் போவதால் தற்காலிகத்தீர்வு கிடைக்கலாம். ஆனால்.. எத்தனை நாளைக்குத்தான் அவளை வைத்து அவனால் பராமரிக்க முடியும்? அவனுக்கு ஒரு வேலை கிடைக்கும் வரை எப்படியாவது அவள் காத் திருக்க வேண்டும். கிழவியிடமும் அழுது கதறி அவள் சம்மதத்தை வாங்கிவிடலாம். அதுவரை, என்ன ஆனாலும் சரி... ஓடிப்போக மட்டும் கூடாது...

யமுனா ஒரு தீர்மானத்துக்கு வந்தவளாக விட்டத்தைப் பார்த்தாள். பல்லிகளைக் காணோம்!
நன்றி: ஆனந்தவிகடன் 27-05-2001.

சிறுகதை: சொந்தக்காரன்! - வ.ந.கிரிதரன்


கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலங்களாக விடாமல் உறை பனி (snow) மழை பொழிந்து கொண்டிருந்தது. வீதிகளெல்லாம் உறை பனி படிந்து, படர்ந்து ..போதாதற்குக் குளிர் வேறு. சோமசுந்தரம் மணியைப் பார்த்தார். இரவு மணி பத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. அவரிற்கு இந்தக் குளிரிலை, கொட்டுகின்ற உறை பனி மழையில் நனைந்தபடி வேலைக்குச் செல்லவே விருப்பமில்லாமலிருந்தது. ஊரங்கிக் கிடக்கும் இந்தச் சமயத்தில் சாமத்துக் கோழியாக அலைய வேண்டியிருக்கிறதே என்று நொந்து கொள்ளத்தான் முடிந்தது. ஊரிலை அவர் ஒரு பௌதிக ஆசிரியர். அவரிடம் பயின்ற எத்தனை மாணவர்கள் 'டாக்டர்கள்', 'எஞ்சினியர்கள்' என்று வந்திருக்கின்றார்கள்..ஆனால் ..இங்கோ அவரோ ஏழு நாட்களும் வேலை செய்து கனடாவின் பொருளாதாரத்தினைக் கட்டியெழுப்பும் நல்லதொரு 'இமிகிரண்ட்'. வார நாட்களில் தொழிலாளி; வார இறுதி நாட்களில் தொழிலாளியைக் கண்காணிக்கும், முதலாளிக்கு ஏவல் புரியும் ஒரு கடமை தவறாத பாதுகாவலன். சற்று முன்னர் அவரது மேலதிகாரி ஜோ குறோபட் தொலைபேசியில் கூறியது நினைவிற்கு வந்தது.

"சாம். இன்று உனக்கு நகர மண்டபப் பாதாள வாகன தரிப்பிடத்தில் தான் வேலை ( City hall Under ground parking lot).கடந்த ஒரு வாரமாக நிறைய முறைப்பாடுகள் ...பல வாகனங்களிலிருந்து பொருட்கள் பல களவாடப் பட்டிருக்கின்றன... பல 'வீதி மக்கள்' இரவு நேரங்களில் அங்கு படுத்துறங்குவதாகப் பலர் முறைப்பாடுகள் செய்திருக்கின்றார்கள்... எனக்கு உன்னில் நிறைய நம்பிக்கையுண்டு. கடமை தவறாத கண்டிப்பான பாதுகாவலன் நீ...யாரும் அங்கு அத்துமீறிப் பிரவேசிக்காதபடி பார்த்துக் கொள்ள வேண்டியது உனது பொறுப்பு.."

'இந்தப் உறை பனிக்குளிரிற்குள் இந்தப் 'பார்கிங் லொட்டில்' போய் வேலை செய்யச் சொல்லுகிறானே'டென்று ஜோவின் மேல் எரிச்சல் கூடத் தோன்றியது. வழக்கமாக அவர் வேலை பார்ப்பது வாசனைத் திரவியங்கள் செய்யும் தொழிற்சாலையொன்றில் தான். சுகமான வேலை. 'ரிஷப்ஷ'னில் அமர்ந்திருந்து , தொலைபேசி அழைப்புகளிற்கு பதிலிறுப்பது, மணித்தியாலத்திற்கொருமுறை தொழிற்சாலையை, தொழிலாளர்களை ஒருமுறை சுற்றிப் பார்ப்பது....கட்டடத்திற்குள்ளேயே அதன் கணகணப்பில் சுகமாகக் காய்ந்து கொண்டிருக்கலாம். 'என்ன செய்வது ஆட வெளிக்கிட்டாச்சு. ஆடத்தானே வேண்டும்'

வார இறுதி நாட்களிலாவது ஓய்வெடுக்கலாமென்று பார்த்தால் ..முடிகிறதா? அவரது தர்மபத்தினி அகிலாண்டேஸ்வரி குழந்தைகளை அணைத்தபடி ஆனந்தமாகத் தூங்கிக் கொண்டிருந்தாள். அவளைப் பார்க்கப் பார்க்கப் பொறாமையாகவிருந்தது. அவள் கனடா வந்ததிலிருந்து, கடந்த பத்து வருடங்களாக அவர் அவளை வேலைக்குப் போவென்று வாய்திறந்து கூறியது கூடவில்லை. குழந்தைகளைப் பார்க்கிறாளே, வீட்டைக் கவனிக்கிறாளே... பாவமென்று அவள் மேல் பரிதாபம்தான் கொண்டிருந்தார். ஆனால் அவளென்னடாவென்றால்..."நீங்களும்தான் கனடா வந்து இத்தனை வருடமாச்சு..என்னத்தைச் சேர்த்து வைத்தீர்கள்...ஆளிற்காள் வீடு வாசலென்று இருக்கிறார்கள்...நீங்களோ..'வீடு' 'வீடு' என்று உங்கடை வீட்டாருக்கே எல்லாம் செய்து போட்டீங்கள்...என்னைத்தைக் கண்டனீங்கள்....உங்கடை வீட்டாரே இப்ப உங்களை மதிக்கினமா..." அகிலாண்டேஸ்வரி வாயைத் திறந்தால் அவ்வளவுதான்..அவளது தொணதொணப்பை அவரால் தாங்கவே முடியாது. "இஞ்சேரும்..சும்மா வாயைத் தொணதொணகாதேயும்..நீர் இங்கை வந்து இவ்வளவு வருஷமாய் உமக்கு நான் என்ன குறை வைத்தனான்.."என்று இவர் பதிலிற்குக் கேட்டு வைத்தாலோ ..அவ்வளவுதான்."என்னத்தைச் செய்து கிழித்தனீங்கள்...நீங்களில்லையென்றால் நான் 'வெல்வெயர்' எடுத்துச் சுகமாகவாவது இருந்திருப்பேனே...." என்று அவள் இளக்காரமாகப் பதிலிறுப்பதைத்தான் இவரால் தாங்கவே முடிவதில்லை. ஊரில் பாடசாலையொன்றில் உயர்தர வகுப்பிற்கான பௌதிக ஆசிரியராகவிருந்த அவர், இந்த வயதில் நாற்பது மணித்தியாலங்கள் முதுகு முறிய, முறியவென்று ஒரு தொழிற்சாலையில் வேலை செய்து உழைத்துக் கொண்டு வாடுகின்ற அவரது உழைப்பை எவ்வளவு துச்சமாக அவள் மதித்து வைத்திருக்கின்றாள். அதைத் தான் அவரால் தாங்க முடிவதில்லை. பொங்கிவரும் ஆத்திரத்தை வெகுவாகச் சிரமப்பட்டு அவர் அடக்கிக் கொள்வார். அப்பொழுதெல்லாம் எங்காவது கண்காணாத இடத்திற்கு ஓடிப்போய் விடலாமாவாவென்றிருக்கும். குழந்தைகளின் மேல் அவர் வைத்திருக்கின்ற பாசம் அவரைக் கட்டிப் போட்டு விடும். அவளது 'தொணதொண'ப்பிலிருந்து தப்புவதற்காகவே அவராகத் தேடிக்கொண்ட வார இறுதி வேலைதான் இந்தப் 'பாதுகாவலர்' உத்தியோகம்.

"அப்ப நான் போயிட்டு வாறன். கதவை உள்ளுக்குள்ளாலை பூட்டி வையும். என்ன.."என்று மனைவிக்குக் குரல் கொடுத்து விட்டு வெளியில் வந்த பொழுதுதான் சூழலின் யதார்த்தம் அவரிற்கு உறைத்தது. வீதியெல்லாம் மலை போல் உறை பனி குவிந்து கிடந்தது. வாகன நடமாட்டம், ஆள் நடமாட்டமின்றி உறை பனி பொழிந்து கொண்டிருக்கும் அந்த இரவு ஒரு வித மோனத்தில் ஆழ்ந்திருந்தது. ஒரு மாதிரி 'பஸ்' பிடித்து, பாதாள ரயிலேறி வேலைக்கு நேரத்திற்கு வந்து சேர்ந்து விட்டார். கடமை தவறாத பாதுகாவலனல்லவா அவர். மற்றவரென்றால் காலநிலையினைச் சாட்டாக வைத்து ஆறுதலாக ஆடிப் பாடி வருவார்கள். இதனால் தான் ஜோ அவரை அனுப்பி வைத்திருந்தான். சோமசுந்தரத்தை நம்பி அனுப்பலாம் என்று அவனிற்குத் தெரியும்.

தமக்குரிய 'பூத்'தில் 'காஷியர்கள் தங்களது வேலையினை ஆரம்பித்து விட்டார்கள். அவர்களிற்கு முகமன் கூறிவிட்டுத் தன் அறையினுள் நுழைந்தார் சோமசுந்தரம். இரவு 'பார்க்கிங் லொட்'டினைத் துப்புரவு செய்யும் தொழிலாளியான போலந்து நாட்டுக் கிழவன் இவரிற்கு முகமன் கூறினான்.சோமசுந்தரம் இதற்கு முன்னரும் சில தடவைகள் இங்கு தற்காலிகமாக வேலை செய்திருக்கின்றார். அதனால் போலந்து நாட்டுக் கிழவனை அவரிற்குத் தெரியும். வாயில் நுழைய முடியாத நீண்டதொரு பெயர்.நல்லவன். இரண்டாம் உலக மகா யுத்தத்தில் இராணுவத்தில் கடமையாற்றியவன்.அவனது புதல்வர்களிருவரும் நகரில் 'வான்கூவரில்' மருத்துவர்களாகக் கடமை புரிகின்றார்கள். போர்க் காலக் கதைகள் பலவற்றினை அவன் கூறுவான். ஒருமுறை தரைக் கண்ணி வெடியில் சிக்கிப் பல நாட்கள் அவன் அவஸ்த்தைப் பட்டிருந்திருக்கின்றான். நிலத்திற்குக் கீழுள்ள நான்கு தளங்களையும் கூட்டித் துப்புரவு செய்வது தான் அவனது பிரதான கடமை. அவனுடன் கதைத்த படியே சோமசுந்தரத்தின் பொழுது போகும். கிழவனிற்கும் தனிமையில் கிடைத்த துணையாக இவர் விளங்கினார். அத்துடன் அவ்வப்போது யாராவது அத்து மீறி நுழைந்தால் சோமசுந்தரத்திற்குத் தகவல் தந்தும் அவன் உதவி புரிவான்.

"ஏ! நண்பனே! யாராவது எங்காவது படுத்திருப்பதைப் பார்த்தால் தகவல் தர மறந்திடாதே என்ன?" என்று அவனிற்கு ஒருமுறை நினைவூட்டி விட்டுத் தன் வேலையினைத் தொடர்ந்தார் சோமசுந்தரம். ஜோ வேலை தொடங்கியது அழைக்கக் கூறியிருந்தது நினவிற்கு வந்தது. அழைத்தார். ஜோ பெரிதும் மகிழ்ந்து போனான்."சாம்! கூடிய விரைவில் உனக்குச் சம்பள உயர்வு பெற்றுத்தர முயல்கின்றேன்." என்று உறுதியளித்தான். இவ்விதம் பல உறுதிகளை அவர் ஏற்கனவே ஜோவிடமிருந்து அவர் கேட்டிருக்கின்றார்.

ஒரு மாதிரி பாதி நேரத்தினைத் தாண்டியாகி விட்டது. ஒரு குறிப்பிடத்தக்க சம்பவங்களும் நடக்கவில்லை. மணிக்கொருமுறை நான்கு பாதாளத் தளங்களையும் சுற்றிப் பார்ப்பதும், இருபத்து நான்கு மணிநேர தமிழ் வானொலியில் நிகழ்சிகளைச் செவி மடுப்பதுமாகப் பொழுது போய்க் கொண்டிருந்தது. வெளியில் உறைபனி மழை இன்னும் பொழிந்து கொண்டேயிருந்தது. உறைபனி படர்ந்து கிடக்கும் வீதிகளைத் துப்புரவு செய்வதற்காகன கனரக வாகனங்கள் தங்கள் வேலையினைச் செய்யத் தொடங்கிவிட்டிருந்தன. முதியவர்களிர்கான நிகழ்ச்சியொன்றின் மறு ஒலிபரப்பு வானொலியில் சென்று கொண்டிருந்தது. ஒரு வயதான பெண்மணி தனக்கு மிகவும் பிடித்தமான ஆசிரியர் ஒருவரிற்காக ஒரு பாடலைக் கேட்க விரும்பினார். அதற்காக அவர் கேட்க விரும்பிய பாடல்: "எங்கிருந்தாலும் வாழ்க.." அதற்கு அந்நிகழ்ச்சியினை நடாத்திக் கொண்டிருந்த அறிவிப்பாளர் "அம்மா! அந்தப் பாட்டின் முதல் வரி தவிர அதன் அர்த்தமே வேறாச்சே" என்று கூற பதிலிற்கு அந்த அம்மா "அதையே போடுங்கோவென். அந்தப் புண்ணியவான் எங்கிருந்தாலும் வாழ்க.."என்று மிகவும் அப்பாவித்தனமாகக் கூறியதைக் கேட்ட பொழுது சோமசுந்தரத்திற்குச் சிரிப்பாகவிருந்தது. 'வயது ஏற ஏற முதியவர்கள் குழந்தைகளாகித் தான் விடுகின்றார்கள்' என்று தனக்குள் ஒருமுறை நினைத்துக் கொள்ளவும் செய்தார்.

நேரம் மூன்றை நெருங்கிக் கொண்டிருந்தது. போலந்துக் கிழவன் ஓடி வந்தான்.

"என்ன விசயம்.... இப்படி ஓடி வருகிறாய்.."

கிழவன் ஓடி வந்ததில் சிறிது களைத்துப் போயிருந்தான். நின்று சிறிது நிதானித்தான்.

"நான்காவது தளத்திலை ஒருவன் படுத்திருப்பதைப் பார்த்தேன். என்னுடன் வந்தாயென்றால் காட்டுகிறேன்" என்றான். வானொலியினை நிறுத்தி விட்டு சோமசுந்தரம் அவனுடன் நான்காவது தளத்திற்குச் சாய்தளப் பாதை வழியாகக் கீழிறங்கினார். கிழக்கு மூலை வாசலிற்கண்மையில் அவன் படுத்திருந்தான். ஐம்பதை எட்டிய தோற்றம். கந்தல் உடை. அருகில் நெருங்கிய பொழுது 'வைன்' வாசனையுடன் கூடிய பல நாட்கள் குளிக்காத உடம்பு வாசனை, துவைக்காத அழுக்கான கந்தல் வாசனை என்பனவும் மூக்கைத் துளைத்தன.

அவன் ஒரு பூர்வீக இந்தியன். படுத்திருந்த அந்தப் பூர்வீக இந்தியனிற்கு சோமசுந்தரம் வருவது தெரிந்து தானிருந்தது. தெரியாதது போல் படுத்திருந்தான். இவரைப் போல் எததனையோ பாதுகாவலர்களை அவன் பார்த்திருப்பான் போலும். இதற்கிடையில் அவன் எழும்பாமலிருப்பதைக் கண்ட போலந்துக் கிழவன் அவன் தோள்களை உசுப்பி எழுப்பி விட்டான். ஏதோ முணுமுணுத்தபடி அந்தப் பூர்வீக இந்தியன் எழும்பினான். தூக்கத்தினைக் கெடுத்து விட்ட கோபம் முகத்தில் தெரிய அவன் இவர்களைப் பார்த்தான்.

"மகாராஜாவிற்கு வருகின்ற கோபத்தைப் பார்" என்று போலந்துக் கிழவன் கிண்டல் வேறு செய்தான். சோமசுந்தரத்திற்கு வெளியில் கொட்டிக் கொண்டிந்த உறை பனி மழை ஞாபகத்திற்கு வந்தது. பூர்வீக இந்தியன் மேல் சிறிது பரிதாபம் கூட வந்தது. இதற்கிடையில் போலந்துக் கிழவன் "இவர்களால் தான் சரியான தொந்தரவு. படுத்திருப்பார்கள். யாருமில்லையென்றால் வாகனங்களை உடைத்துத் திருடி விடுவார்கள்" என்றான். அவனது மேலதிகாரி ஜோ அவனிடம் யாரையும் அத்து மீறிப் பிரவேசித்து விடாதபடி பணித்திருந்ததும் நினவிற்கு வந்தது. இந்தப் பூர்வீக இந்தியனைப் பார்த்தால் அப்படியொன்றும் திருடுபவனாகத் தெரியவில்லை. இன்னும் சில மணித்தியாலங்களில் அவரது வேலை முடிந்து விடும். பொழுதும் புலர்ந்தும் விடும். ஆனால் அது மட்டும் இவனைத் தங்க அனுமதிக்க அவரிற்கு அனுமதியில்லை. போதாதற்கு இந்தப் போலந்துக் கிழவன் வேறு அருகில் நிற்கிறான். இவனிற்கு இந்தப் பூர்வீக இந்தியர்கள் மேல் அவ்வளவாக நல்ல அபிப்பிராயம் கிடையாது. குடிப்பதும் திருடுவதும் தான் இவர்களது வாழ்க்கை என்று கருதுபவன். வைத்தி வைத்து விடுவான். சோமசுந்தரம் இக்கட்டான நிலையிலிருந்தார். என்ன செய்யலாமென்று சிந்தித்துப் பார்த்தார். முதலில் போலந்துக் கிழவனை அங்கிருந்து அனுப்பினால் நல்லதென்று பட்டது. அவனிற்கு நன்றித் தான் இவனைக் கவனிப்பதாகக் கூறி அனுப்பி வைத்தார்.கிழவனிற்கு நகர விருப்பமேயில்லை. 'விடுப்பு' பார்ப்பதென்றால் யாரிற்குத் தான் ஆசையில்லை.

போலந்துக் கிழவன் சற்று அப்பால் நகர்ந்ததும் அந்தப் பூர்வீக இந்தியன் மீண்டும் படுப்பதற்கு ஆயத்தமானான். சோமசுந்தரம் சிறிது கண்டிப்பை முகத்தில் வைத்துக் கொண்டார்.

"எதற்காக இங்கு வந்து படுத்திருக்கிறாய். இங்கு படுக்க உனக்கு அனுமதியில்லையென்பது உனக்குத் தெரியுமல்லவா. விடுதிகளிலேதாவதொன்றில் போய்ப் படுப்பது தானே " என்றார்.

"எல்லா விடுதிகளும் நிறைந்து விட்டன. இன்னும் சிறிது நேரம் படுக்க அனுமதியளித்தால் போதும். நான் ஒரு பிரச்னையும் உனக்குத் தர மாட்டேன்" என்று அவன் பதிலிறுத்தான். சோமசுந்தரத்திற்கு அவனை இந்த வகையான காலநிலையில் வெளியேற்றுவதும் நல்லதாகப் படவில்லை. ஆனால் அவரது உத்தியோகத்தில் இவற்றையெல்லாம் பார்க்க முடியாது. கண்டிப்பான, கடமை தவறாத அதிகாரி அவர்.

"பூமிப் பந்தின் இன்னுமொரு கோடியிலிருந்து நான், சொந்த மண்ணை விட்டுத் துரத்தப் பட்டு அகதியாக ஓடி வந்திருக்கின்றேன். நீயோ சொந்த மண்ணிலேயே அதனையிழந்த இந்த மண்ணின் சொந்தக்காரன்". சோமசுந்தரத்திற்கு உண்மையில் அந்தப் பூர்வீக இந்தியன் மேல் ஒருவித தோழமை கலந்த உணர்வு தோன்றியது.

"நானோ அன்னிய நாட்டிலொரு அகதி. இவனோ சொந்த நாட்டிலேயே அகதியாகிப் போனவன்."

ஒரு காலத்தில் இவனது இனத்தவர்கள் அமெரிக்கக் கண்டத்தில் கொடி கட்டிப் பறந்தவர்கள். இயற்கையினைப் பேணுவதில் அன்றே பெரிதும் ஆர்வம் காட்டியவர்கள். இவர்கள் சடங்குகள், தத்துவங்களெல்லாம் இயற்கைச் செல்வத்தைப் பேணுவதை முக்கிய நோக்காகக் கொண்டவை.

சோமசுந்தரம் கடமை தவறாத, கண்டிப்பான, நிறுவனத்திற்குப் பெயர் வாங்கித் தரும் பாதுகாவல் அதிகாரிதான். ஆனால் சோமசுந்தரம் மனிதாபிமானத்தை இழந்த பாதுகாவலனல்லவே.

"நான் உன் வார்த்தைகளை நம்புகின்றேன். ஆனால் விடிந்ததும் போய் விட வேண்டும்" என்று கூறி விட்டுத் திரும்பி நடந்தார் சோமசுந்தரம். முதலாவது தளத்தினைத் துப்புரவு செய்து கொண்டிருந்த போலந்துக் கிழவன் சோமசுந்தரத்தைக் கண்டதும் கேட்டான்: " என்ன அவனைத் துரத்தி விட்டாயா?".

"ஒரு மாதிரி அவனைத் துரத்தி விட்டேன். துரத்துவதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது" என்று பதிலிறுத்தார் சோமசுந்தரம்.

"இந்தக் கொட்டும் உறை பனி மழையிக்குள் அவன் எங்கு போவானோ? பாவம்" என்று இரக்கப் பட்டான் போலந்துக் கிழவன். "பாவம் புண்ணியம் பார்த்தால் இந்த வேலை செய்ய முடியாதே" என்றவாறு சோமசுந்தரம் கடமையில் மூழ்கியவாறு மேலே நடந்தார்.

- நன்றி 'கணையாழி' (கணையாழி டிசம்பர் 2000 'கனடா சிறப்பிதழிலிருந்து..-), பதிவுகள், திண்ணை.

சிறுகதை: Where are you from? - வ.ந.கிரிதரன் -


"டாக்ஸி கிடைக்குமா?"

வார்டன் பாதாள ரயிலிலிருந்து வந்திருந்த அந்தக் கனடிய வெள்ளையினப் பெண்மணி கேட்டபோதுதான் அமைப்பியல் பற்றிய தமிழ் நூலொன்றினை வாசித்துக் கொண்டிருந்த நான் இவ்வுலகிற்கு வந்தேன். "தாராளமாகக் கிடைக்கும். எங்கு போக வேண்டும்?" என்றேன். " பேர்ச்மவுண்ட்/ லாரண்ஸ்" என்று அதற்குப் பதிலிறுத்தபடியே கதவைத் திறந்து டாக்ஸியினுள் ஏறி அமர்ந்தாள் அந்தப் பெண்மணி. வயது முதிர்ந்த, நன்கு பருத்த உடல் வாகுடன் கூடிய தோற்றத்திலிருந்தாள் அவள். முகத்தில் ஒருவித கடுமையுடன் கூடிய பாவம் விரவிக் கிடந்தது. பாதாளரயில் வாகனத் தரிப்பிடத்திலிருந்து வார்டன் வீதிக்கு வந்து கிழக்காக சென்ற்கிளயர் அவென்யுவில் பேர்ச்மவுண்ட் நோக்கித் திரும்பினேன்.

"Where are you from?"

நான் கனடா வந்து பத்து வருடங்களைத் தாண்டி விட்டன. நானொரு பூரண உரிமையுள்ள கனடிய குடிமகன். என்னைப் பார்த்துக் கேட்கின்றாள் இந்த வயோதிப வெள்ளையின மாது எங்கேயிருந்து வந்திருக்கின்றேனென்று. நாளைக்கு இங்கு பிறந்து,வளரும் என் குழந்தைகளைப் பார்த்தும் இது போலொரு வயோதிப வெள்ளையின மாது இதே மாதிரியானதொரு கேள்வியினைக் கேட்கக் கூடும். இவளைச் சீண்டிப் பார்க்க வேண்டுமென்றொரு எண்ணத்தில் " என்னைப் பார்த்தால் நானொரு கனேடியன் மாதிரித் தெரியவில்லையா?" என்றேன். அதற்கு அந்த முதிய வெள்ளையின மாதும் சளைக்காமல் பதிலிறுத்தாள் " அது எனக்குத் தெரிகின்றது. ஆனால் இதற்கு முன் எங்கு வாழ்ந்து வந்தாய்?" என்றாள்.

"அவற்றைச் சொல்ல ஆரம்பித்தால் நேரம் போதாது. வரிசைப் படுத்துக் கூறுகின்றேன். கேட்க உனக்குப் பொறுமை இருக்கிறதா?" என்றேன். "தாராளமாக" என்று காதுகளை நீட்டிக் காத்திருந்தாள் அவள். "இங்கு வருவதற்கு முன் நான் அமெரிக்காவில் சிறிது காலம் வசித்திருக்கின்றேன். அதற்கு முன்னர் பாரிஸில் சிலகாலம், ஜேர்மனியில் சில காலம், சுவிஸில் சில காலம்..." நான் வார்த்தைகளை முடிக்கவில்லை அவள் குறுக்கிட்டாள். " நீ கொடுத்து வைத்த பிறவி. உலகம் முழுவதையும் சுற்றிப் பார்த்திருப்பாய் போலும். உன்னைப் பார்த்தால் எனக்குப் பொறாமையாக இருக்கிறது." என்றவாறே தொடர்ந்தாள் " நான் கேட்டது நீ பிறந்த இடத்தை".

"இந்தியாவை உனக்குத் தெரியுமல்லவா?"

"ஆம்"

"இந்தியாவின் தெற்கு மூலைக்கு அப்பால் விரிந்திருக்கும் இந்து சமுத்திரத்தில் உள்ளதொரு அழகான தீவு என் தாய் வீடு" என்றேன்.
சிறிது நேரம் சிந்தித்தவள் "தெரியவில்லையே" என்றாள்.

" இங்கு பார். நான் சிறுவனாகப் பாடசாலையில் இருந்த பொழுதே புவியலில் உலகின் நீண்ட சாலை யங் வீதி என்று படித்திருக்கின்றேன். உனக்கோ என் பிறந்த மண் பற்றித் தெரியவில்லையே" என்றேன். தொடர்ந்து " சிறிலங்கா பற்றிக் கேள்விப் பட்டிருக்கின்றாயா? அது தான் என் தாய் நாடு" என்றேன். அதற்கு அவள் "ஓ சிறிலங்காவா. நீ சிறி லங்கனா?" என்று வியந்தவள் போல் கேட்டாள். அத்துடன் தொடர்ந்து "ஓ சிலோன். சிலோன் தேநீர் என்றால் எனக்கு நல்ல விருப்பம். அது சரி எப்பொழுது சிலோனை சிறிலங்காவாக மாற்றினார்கள். " என்றாள். "ஸ்ரீலங்காவும் கனடாவைப் போல் தான் முன்பிருந்தது. பொது நலவாய நாடுகளிலொன்றாக. இன்றைய ஜனாதிபதி சந்திரிகாவின் தாய் ஸ்ரீமா பண்டாரநாயக்க காலத்தில் தான் , 1972 இல் குடியரசாக மாற்றினார்கள். அன்றிலிருந்து தான் சிலோன் ஸ்ரீலங்காவாக மாற்றம் அடைந்தது"

பேச்சு வேறு திசைக்கு மாறியது. "இங்கு பார். இன்று நீ எனது பதினைந்தாவது பிரயாணி. இந்தப் பதினைந்தில் 'நீ எங்கிருந்து வந்தாய்?' என்று கேட்ட பத்தாவது ஆள் நீ. நீ தவறாக நினைக்க மாட்டாயென்றால் நான் ஒன்று தாராளமாகக் கேட்கலாமா?"

"கேள். நான் ஒன்றும் தவறாக எடுக்க மாட்டேன். தாராளமாகக் கேள்"

"எதற்காகச் சொல்லி வைத்தது மாதிரி நீங்கள் எல்லோருமே இந்தக் கேள்வியைக் கேட்கின்றீர்கள்? ஒவ்வொருவரின் தோற்றத்தையும் பார்த்ததுமே உங்களுக்குப் புரிந்திருக்குமே. பின்னேன் கேட்கின்றீர்கள்?"

"ஏன் கேட்கக் கூடாதா? நீங்கள் எல்லோரும் வந்தேறு குடிகள். உங்கள் பூர்வீகம் பற்றி அறிய எங்களுக்கு ஆசை இருக்காதா?"

"நீங்களும் தான் வந்தேறு குடிகள். நீங்கள் அன்று வந்தீர்கள். நாங்கள் இன்று வந்திருக்கின்றோம். அவ்வளவு தான் வித்தியாசம்."

" நீ நன்கு பேசப் பழகிக் கொண்டாய்" என்று கூறி அந்த மாது சிரித்தாள்.

" கனேடியக் குடிமகனல்லவா? அது தான்" என்று நானும் சிரித்தேன். அந்த மாதை இறக்க வேண்டிய இடத்தில் இறக்கி விட்டு மீண்டும் வார்டன் பாதாள ரயில் வாகனத் தரிப்பிடத்திற்கு வருவதற்கு முடிவு செய்து வாகனத்தைத் திருப்பினேன். இந்த Where are you from? என்ற கேள்வி இருக்கிறதே. இது மிகவும் சுவாரசியமானது. இங்கு வரும் ஒவ்வொரு குடியேற்றவாசியும் அடிக்கடி எதிர் நோக்கும் கேள்விகளில் ஒன்று. இது கேட்கப் படும் பொழுது, கேட்கும் நபரைப் பொறுத்துப் பல்வேறு அர்த்தங்களில் கேட்கப் படலாம். உண்மையிலேயே அறிய வேண்டுமென்று ஆவலில் கேட்கப் படலாம். அல்லது 'நீ கனடியன் அல்ல' என்னும் ஆழ்மனத்தில் ஒளிந்திருக்கும் துவேஷ உணர்வின் வெளிப்பாட்டினைப் பிரதிபலிப்பதாகவும் இருக்கலாம். ஆனால் இந்தக் கேள்வியினை எதிர் கொள்ளும் நபர் இதனால் அடையும் மன உளைச்சல்களை யாரும் பொருட்படுத்துவதாகத் தெரியவில்லை. ஒவ்வொரு முறைம இதனை எதிர் கொள்ளும் பொழுதும் அவர் அவமானப் படுபவராகவே உணர்ந்து கொள்வதால் அடையும் எரிச்சலினை யாரும் புரிந்து கொள்வதாகத் தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரையில் பல்வேறு அனுபவங்களிற்கும் என்னைத் தயார் படுத்தி வாழ இயல்பூக்கம் அடைந்து விட்டேன். தொழிலிற்காக முகமூடிகளை அடிக்கடி மாற்றுவதில் எனக்கு எந்த விதச் சிரமமோ அல்லது சமூக உளவியற் பிரச்சினைகளோ இருப்பதில்லை. ஆனால் நம்மவர் பலருக்கு ஊரிலை இருந்த 'கொண்மேந்து' (Government) உத்தியோக மோகம் இன்னும் இருக்கத் தான் செய்கிறது.

அடுத்த சில மணித்தியாலங்கள் வார்டன் பாதாள ரயிலை சுற்றியே கழித்து விட்டு டொராண்டோ உள்நகர் ('Down town') நோக்கி வாகனத்தைத் திருப்பினேன். வழியில் இன்னுமொரு வெள்ளையின வாலிபன் வழியில் மறித்தான். கஞ்சா சற்று முன்பு தான் புகைத்திருப்பான் போலும். அவ்வளவு நாற்றம்.

"எங்கு போக வேண்டும்?" என்றேன்.

"சேர்போன்- டண்டாஸ்' என்றான்.

உள்ளே ஏறி அமர்ந்தவன் " நான் புகை பிடிக்கலாமா?" என்றான். பெரிதாக புகை பிடிக்கக் கூடாது என்ற குறி கார்க் கண்ணாடியிலிருந்ததை அவன் கவனிக்கவில்லை. "இல்லை நண்பனே. இந்த டாக்ஸியில் புகை பிடித்தல் தடை செய்யப் பட்டுள்ளது" என்றேன்.
அவனுக்கு ஆத்திரம் சிறிது வந்தது. "ஆனால் நான் புகை பிடிக்கத் தான் போகின்றேன். யன்னலைத் திறந்து விடுகின்றேன். என்ன சொல்கின்றாய்?" என்றான். நான் திடமாக "மன்னிக்கவேண்டும். அனுமதிப்பதிற்கில்லை" என்றேன். அவனது ஆத்திரம் சற்றே அதிகரித்தது. ஆத்திரத்தை வேறு வழியில் காட்ட எண்ணினான். "நீ மிகவும் மெதுவாகப் போகின்றாய்." என்று முறையிட்டான். " என்னுடைய வேக எல்லையை உனக்காக நான் தாண்ட முடியாது. இது தான் என்னுடைய எல்லை. இது உனக்குப் பிடிக்காவிட்டால் நீ தாராளமாக வேறு டாக்ஸி பிடிக்கலாம். ஆட்சேபனையில்லை" என்றேன். அவனது ஆத்திரம் மேலும் அதிகரித்தது. சிறிது நேரம் இருக்கையில் நெளிந்தவன் "நிறுத்து" என்றான். நான் வாகனத்தை வீதியோரமாக நிறுத்தினேன். இறங்கியவன் கதவை அறைந்து சாத்தினான். அத்துடன் " இது கனடா மனிதா. உன்னுடைய நாட்டுக்கே போய் விடு (Go back to your country)" என்றும் பலமாகச் சத்தத்துடன் கூடிய அறிவுரை கூறி விட்டுச் சென்றான். நானும் பதிலிற்கு "இது என்னுடைய நாடு. எந்த நாட்டிற்குப் போகச் சொல்லுகின்றாய்" என்று கேட்டு ஆத்திரத்தை அடக்கி விட்டு எனது வியாபாரத்தைத் தொடர்ந்தேன். மாதம் ஆயிரம் டொலர்களுக்கு டாக்ஸி 'பிளேட்' (Taxi Plate) குத்தகைக்கு எடுத்து, இருபதினாயிரத்திற்கும் மேல் செலவழித்துப் புதுக்கார் வாங்கி, காப்புறுதி, ரேடியோ என்று மாதாமாதம் செலவழித்துச் சொந்தமாக வியாபாரம் செய்யும் எனக்கு இதுவும் வேண்டும் . இன்னமும் வேண்டும். இடையில் ஒரு டிம் கோர்ட்டன் டோனற் கடை தென்பட்டது. கோப்பி குடித்துச் சிறிது ஆறுதல் அடைந்து விட்டு வியாபாரத்தைத் தொடரலாமெனப் பட்டது. டாக்ஸியைப் நிறுத்தி விட்டு உள்ளே நுழைந்தேன். நம்மவர் ஒருவர் தான் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். தெரியாதது மாதிரி ஆங்கிலத்தில் ஒரு 'மீடியம் டபுள் டபுள்' என்றேன். ஒருமுறை என்னைக் கூர்ந்து பார்த்தவர் கேட்டார் "நீங்கள் ஸ்ரீலங்காவிலிருந்தா (Are you from Srilanka)?" என்றார். "ஆம்" என்றேன். "அண்ணை தமிழிலையே கதைக்கலாமே" என்றார். "கதைக்கலாம்" என்றேன். அடுத்து அவர் கேட்டார்:

"அண்ணை ஊரிலை எந்த இடம்?"

நன்றி: திண்ணை, பதிவுகள்


மேற்படி சிறுகதையான Where are you from? பற்றித் திண்ணை விவாதக் களத்தில் தெரிவிக்கப் பட்ட சில கருத்துகளையே கீழே காண்கின்றீர்கள்.
வ.ந.கிரிதரனின் "நீர் எவடம்?" நல்லதொரு கதை இது ஒரு பெரிய பிரச்சினையாக புலம்பெயந்த தமிழர்கட்கு இருக்கிறது. இதில் வெளச்ளைத்தோலர் கேட்பதன் தாற்பர்யம் வேறு? இதே கேள்வியை சக தமிழன் கேட்பதன் உள்ளார்த்தம் வேறு! இந்த இரண்டின் வேறுபாடுகளை வ.ந.கி. சற்று குறிப்புணர்த்தியிருந்தால் கதை இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
- வீரமாமுனிவர் -

"ஈயாத புல்ல ரிருந்தென்ன, போயென்ன, வெட்டிமரங்
காயா திருந்தென்ன, காய்த்துப் பலனென்ன?"**படிக்காசுப்புலவர்

I read your latest story 'Where are you from?' It is very well done and ended with an unexpected turn. I especially liked the smooth manner the story unfolded and the choice of words. Congratulations.
Anbudan
Appadurai Muttulingam

வ.ந.கிரிதரனின் where are you from? சிறுகதை புலம் பெயர்ந்தவர்களின் பிரச்சினைகளில் ஒன்றையும் இலங்கைத் தமிழ் மனோபாவத்தையும் வெளிப்படுத்தும் ஒரு சிறுகதை. பல மாதங்களுக்கு முன்னர் புலம் பெயர் சஞ்சிகைகளில் வெளி வந்த இரு ஆக்கங்களைப் பற்றிச் சொல்லலாம் என நினைக்கின்றேன்.ஒன்று:
பரிஸ் சுரங்க ரெயிலில் ஒரு தமிழனைச் சந்திக்கும் பிரெஞ்சுக்காரன் இதே கேள்வியைக் கேட்க இருவருக்குமான உரையாடலாகத் தொடரும் கதை தேசங்களின் எல்லைகள் பற்றியும் இது தொடர்பான பல விடை இல்லாத கேள்விகளூடாகவும் நகர்ந்து இறுதியில் அந்தப் பிரெஞ்சுக்காரன் இனிமேல் இப்படியான கேள்விகளை யாரிடமும் கேட்கமாட்டேன் என சொல்வதுடன் முடிகின்றது. இது மிகவும் சிறப்பான ஆக்கம். சொல்லவந்ததை தெளஞ்வாகவும் சிறப்பாகவும் சொல்லி இருந்தது. தற்பொழுது என்னிடம் சஞ்சிகை இல்லாதபடியினால் மேலும் தெளஞ்வான விபரங்களைத்தர முடியவில்லை.இரண்டு:
யாழ்ப்பாணத்திலை எவடம்' என்னும் கட்டுரை. இதுவும் புலம் பெயர்நாடொன்றில் சக தமிழர்களால் கேட்கப்படும் கேள்வி பற்றி விவாதிக்கும் சிறப்பான கட்டுரை. மரம் கொத்தி, எக்ஸில் மே, ஜீன் 1998. (கட்டுரையில் வ.ந.கி யைக் கேட்டது போல், ஒருவர் தேனீர் கடையிலும் இதே கேள்வியைக் கேட்கின்றார்.) - மேற்கூறிய இரண்டின் தொகுப்பாகவும், அவற்றின் அளவுக்கு ஆழமில்லாமலும் வ.ந.கி யின் சிறுகதை அமைந்துள்ளது. வ.ந.கி யும் அ.முத்து வும் நான் மேற்கூறியவற்றை படித்தார்களோ தெரியாது. கிரிதரன் படித்திருப்பார் என்று நம்புகிறேன். நெற்றிக் கண்ணைக் காட்டினும் குற்றம் குற்றமே! - மதி (நண்பன்)

நண்பன் எனப்படுகின்ற மதியின் கருத்துகள் பற்றிப் படித்தேன். மதி என்ன இங்கே கூற வருகின்றார்? மேற்படி இரு கட்டுரைகள்/கதைகளின் பாதிப்பாக எழுதிய கதை என கூற வருகின்றாரா? நண்பர் கூறிய இதழ்களை நான் இது வரையில் படிக்கவில்லை. ஆனால் where are you from?, 'ஊரில் எவ்வடம்' போன்றவற்றை அன்றாடம் நாம் எதிர் நோக்குகின்றோம். இதற்கு இவ்வளவு ஆழமாக நன்பர் மதி ஆய்வு செய்திருக்கத் தேவையில்லை. தேநீர் கடைச் சம்பவம் உண்மையிலேயே இங்கு நடந்த சம்பவம் உண்மைச் சம்பவத்தில் கேள்வி கேட்டவருக்குப் பதில் கேள்வியாக 'நீங்களெல்லாம் திருந்தவே போரதில்லையா?' என எதிர்க் கேள்வி கேட்க, இதனை எதிர்பாராத கேட்டவர் ஒரு கணம் திகைத்துப் போனார். மதி தேவையில்லாமல் இவ்வளவு தூரம் ஆய்விற்கு தனது பொன்னான நேரத்தினைச் செலவழித்திருக்கத் தேவையில்லை. புலம் பெயர்ந்த சூழலில் வாழும் ஒருவருக்கு இவையெல்லாம் சாதாரண அன்றாட நிகழ்வுகளென்பது தெரியாமல் இருப்பது ஆச்சர்யம் தான். அது தெரியாமலேயே இல்லாத நெற்றிக் கண்ணைக் காட்டிக் குற்றம் பிடிப்பதென்பது மிகவும் வேடிக்கை. இது எப்படி இருக்கு? - வ.ந.கிரிதரன் -

உங்கள் திண்ணைக் கதை அற்புதம் நட்புடன் - மைக்கல்

Hi Giri, How are you doing? I live in Southern California and I read your short story at thinnai.com. Wonderful one. I really enjoyed the story. I guess every one of us will face the same question. I don't know why, as soon as I finished the reading, I thought to write. Please continue your writings. Good luck.- Sudhahar

திருவாளர். "நண்பன்", வ.ந.கிரிதரனின் கதையைப் போல முன்பும், இனியும் எழுதப்படக்கூடுமென்றுதான் எனக்குத் தோன்றுகிறது. மனிச அனுபவங்களின் தாக்கங்கள்தானே இலக்கியப் படைப்பாகின்றன. இலக்கிய வரலாற்றில் ஒரே கருப்பொருளைக் கொண்ட பலபடைப்புகள் வெவ்வேறு படைப்பாளிகளால் எழுதப்பட்டது உண்டு. ஒப்பியல் பார்வையின் வழியாக இவற்றின் தாரதம்மியங்களை அறிந்துகொள்ளலாம். "நண்பன்" குறிப்பிடும் எக்.¢ல் கட்டுரையும்(மரங்கொத்தி) நான் படித்திருக்கிறேன். ஒவ்வொரு இலக்கியப் படைப்பும் வாசந்?¤ அனுபவ அடியாகத்தான் விளக்கம் கொள்கிறது. ஆகவேதான் வ.ந.கிரியின் இக்கதையை புலம்பெயர்ந்திருக்கும் வாசகர்கள்தான் சிறப்பாக உள்வாங்கி அபிப்பிராயம் தெரிவித்திருப்பதை மேற்படி கருத்துத்தளத்திலேயே நாம் பார்த்துப் புரிந்துகொள்ளலாம். திரு. எம்.ஏ.
நு<மான் அவர்கள் தி.f¡னகிராமனின் 'அம்மா வந்தாள்' நாவலையும், மாப்பசானின் நாவலொன்றையும் ஆராய்ந்து பார்த்திருக்கிறார். இரண்டு நாவலும் சம்பவக்கோவைகளில் ஒத்ததாக இருக்கிறது. ஆகவே உங்களைப்போல தி.f¡வும் மாப்பசானிடம் சுட்டிருக்கிறார் என விவாதிக்க முடியுமா "நண்பனே"? வ.ந..கிரி இத்திண்ணைக் கதையில் குறிப்புணர்த்தவேண்டிய கூறுகள் இருந்தும் தவறியிருக்கிறார். என்பதை முன்பும் நான் எழுதியிருக்கிறேன். - வீரமாமுனிவர் - "ஈயாத புல்ல ரிருந்தென்ன, போயென்ன, வெட்டிமரங் காயா திருந்தென்ன, காய்த்துப் பலனென்ன?"**படிக்காசுப்புலவர் I'm Ashraf from pondicherry.. I red your story from thinnai.com.. It was excellent story. It encomposses full of your feelings... I like it.... I would like to express my feelings over that...that's all.. -Ashraf எழுத்தாளர் பாவண்ணன் கன்னட தலித் எழுத்தாளர் சித்தலிங்கய்யாவின் சுயசரிதையை மொழிபெயர்த்திருக்கிறார்.தலைப்பு ஊரும் சேரியும். ஊர் என்றால் அதில் சேரி சேர்த்தி இல்லை. ஊரில் எங்கே என்ற கேள்வி தலித்துக்கு ஒரு பெரும் inquisition போல. தமிழகத்தில் ஊரா காலனியா என்று கேட்பதுண்டு என சொ.தருமன் எழுதியிருக்கிறார். ஒரு நல்ல கதை அது. சென்னையில் பெசண்ட் நகர் பகுதியில்நான் வீடு பிடிக்க முயன்றபோது நீங்கள் அசைவம் சாப்பிடுவீர்களா என்று பலர் கேட்டார்கள் . இல்லை என்றேன்.ஆனால் அதன் அர்த்தம் என்ன என்று புரிந்தபிறகு சிந்தாரிப்ப்பேட்டைக்கு மாறிவிட்டேன் தமிழ்நாட்டில் ஈழத்தவர்களின் நிறம் எப்படிபார்க்கப்படுகிறது என்று நான் ஒரு காவியமே எழுதுவேன். ஆக இது ஒரு புது வி"யமேயல்ல. யாழ்ப்பாணமும் சென்னையும் பாரீ.¤ம் டொரொண்டோவும் ஒன்றுதான். "நீங்கள் மலையா நதிக்கரையா?" என்று கேட்கப்படுவதன் இழிவு பற்றி பிமல் மித்ரா ஒரு நல்ல கதை எழுதியுள்ளார். வ ந கிரி எழுதுயதுபோல இதே கதையை இன்னும் பலபேர் எழுதுவார்கள். எழுதிக் கொண்டே இருப்பார்கள். - சிவம் கந்தராஜா வ ந கிரிதரனின் சிறுகதை நன்றாகவும் உண்மை கலந்ததுமாக இருந்தது. புலம் பெயர்ந்த மற்றும் என்போல் வேலைக்காகா(உண்மையில் பிழைப்புக்காக) வெளிநாட்டில் வாழும் இந்தியர்களின்/மனிதர்களின் வாழ்வில் தினசரி நடக்கும் சம்பவங்களில் ஒன்றே இதன் அடிப்படை. அதை மிகவும் அழகாக எழுதியுள்ளார் வ.ந.கி. இதில் அவர் ஒரு முடிவான கருத்தை கூறவில்லை என்ற சிலரது வாதம் , அப்ப்டியேன் ஒன்றை எதிர்பார்க்கிறார்கள் என்று கேட்க தோன்றுகிறது. பாராட்டுக்கள் வ.ந.கி. - நாயேன்_பேயேன்


Where are you from? It was a story many Immigrant people experience in new country. It was told very well . NNadesan (Australia)

சிறுகதை: 'கெளதமனின் வாழ்வு! - வ.ந.கிரிதரன் -அ. கெளதமனும், மனோரஞ்சிதமும்!

வானமிருண்டு கறுத்துக் கிடந்ததொரு அந்திப் பொழுதில் வழக்கம்போல் கெளதமன் தான் வசிக்கும் 'அபார்ட்மென்ட்' பலகணியிலிருந்து முடிவற்று விரிந்து, பரந்து கிடக்கும் மெல்லிய இருளில் கறுப்புப் படுதாவாகக் காட்சியளிக்கும் நீல வானைப் பார்த்தபடி பல்வேறு விதமான சிந்தனைகளில் மூழ்கிக் கிடந்தபோது அவனது சிந்தனைகளில் வழக்கம்போல் அதிக இடத்தினை ஆக்கிரமித்திருந்த சிந்தனையாக 'இருப்பும் அது பற்றிய காரணமும்', அடுத்ததாக 'மனிதரும் அவர்தம் உணர்வுகளும், செயல்களும்' இருந்ததென்பதை நிச்சயமாகக் கூற முடியும். விடைதெரியாப் புதிரெனத் தொடரும் இருப்புப் பற்றிய மெய்ஞான விளக்கவுரைகளென்றாலென்ன, விஞ்ஞான விளக்கங்களென்றாலென்னெ, கற்பனையும்,கருத்தும் கலந்த கவிதைகள், கதைகள், நாவல்கள் அல்லது ஓவியப் படைப்புகளென்றாலென்ன எல்லாமே அவனது சிந்தனையை விரிய வைத்து, ஒருவித தெளிவினைத் தந்து, அவற்றிலாழும்போது ஒருவித பரவசநிலையினைத் தந்து, நடைமுறையினை, நிகழ்காலம் மறந்து காலங்கடந்ததோருலகில் சஞ்சரிப்பதற்கு பெரிதும் உதவுவதால் இவையெல்லாம் அவனுக்கு எப்பொழுதுமே உற்ற தோழர்களாக விளங்கினவென்றும் நிச்சயமாகக் கூறலாம். இருப்பின் சகல பக்கங்களையும் ஆராயும் ஆர்வம் மிக்கவனாக அவன் இருந்த காரணத்தினால்தான் அவனால் சார்பியல்தத்துவம் பற்றியோ, சக்திச் சொட்டுப் பெளதிகம் பற்றியோ, இயற்கையை , சமுதாயத்தை வழிநடாத்தும் அடிப்படைக் காரணிகளைப் பற்றியோ, வறுமையில் வாடும் குழந்தைகள் பற்றியோ, மாசுறும் சூழல் பற்றியோ, மூண்டு வியாபித்திருக்கும் போர்ச்சூழல் பற்றியோ, உயிரணுவின் அற்புதமான ஆற்றல் பற்றியோ, நவீன கலை, இலக்கிய முயற்சிகள் பற்றியோ எப்பொழுதுமே தன்னை ஒருவித அர்ப்பணிப்புடன் கூடிய தேடலுக்கு ஈடுபடுத்த முடிந்ததென்றும் மேலும் அவனைப்பற்றிக் கூறும்பொழுது கூறலாம். நூல்கள் வாசித்தலென்பது, அவை எவைபற்றியதாக இருந்தபோதும், எப்பொழுதுமே அவனது இருப்புடன் பின்னிப்பிணைந்து விட்டதொரு, பிரிக்க முடியாததொரு அம்சமாக இருந்ததற்குக் காரணிகளொன்றாக அவனது உடலில் ஆட்சி செலுத்தும் அவனது அப்பாவின் 'ஜீன்' நிச்சயமாக இருக்குமென்றும் துணிந்தும் கூறலாம். அவனது குறிப்பேட்டிலொருமுறை அவன் பின்வருமாறு எழுதியிருந்ததை வாசித்தல் அவனது உளஆளுமை/இயல்பு பற்றிச் சிறிது அறிதற்கு மேலும் உதவக் கூடும். அக்குறிப்பேட்டில் அவன் பின்வருமாறு எப்பொழுதோ எழுதியிருந்ததை இப்பொழுது வாசிப்பதன் மூலம் அவன்பற்றிச் சிறிது புரிதற்கு முயல்வோமாக.

அதில் அவன் 'எனது குருமார்' எனத் தலைப்பிட்டு எழுதியிருந்த சிறு குறிப்பு வருமாறு: "ஒவ்வொரு மனிதனினதும் வாழ்வினைப் பொறுத்தவரையில் யாரோ ஒருவர் குருவாகவேயிருந்து விடுவது இயல்பு; திருடனுக்குக் கூட ஒரு குரு, அது சூழ்நிலையாக அல்லது மனிதனாக அல்லது எதுவுமேயாக இருந்து விடலாம். இந்நிலையில் என் குரு தவறு, என்னைப் பொறுத்தவரையில் குருமார் பலருள்ளனர். என் சிந்தனை மாற்றத்தினைப் பொறுத்தவரையில் குருமார்கள்: ஐன்ஸ்டன், கார்ல்மார்க்ஸ், சார்ள்ஸ் டார்வின், சிக்மண்ட் பிராய்ட், ஆபிரகாம் லிங்கன், மகாத்மா காந்தி, பாரதியார், மார்க்ஸிம் கோர்க்கி... இவ்விதம் பலரைக் குறிப்பிடலாம். இவர்களைப் பற்றி அல்லது இவர்களது நூல்களையெல்லாம் கரைத்துக் குடித்தவனென்பது இதன் பொருளல்ல. ஆனால் இவர்களது தத்துவங்கள், இவர்களது வாழ்க்கை வரலாறுகள்,.. இவையெல்லாமே புதுமை நாடித் தவித்து ஏங்கித் துடித்துக் கொண்டிருந்த என் நெஞ்சினில் சிந்தனைச் சுவாலையினைக் கொழுந்து விட்டெரிய வைத்து விட்டன; அறியாமை இருளினில் மூழ்கிக் கிடந்த என் சிந்தனைதனைச் சீர்செய்து வைத்து விட்டன. தோல்விகளால் நிலைகுலைந்து, தளர்ந்து, மனமொடிந்து கிடந்திட்ட வேளைகளிலெல்லாம் என் நெஞ்சினில் நிலவிய அச்சம்தனை, திகில், விரக்திதனை, நம்பிக்கையின்மை, ஏக்கம்தனை அகற்றி புத்தெழுச்சிதனை ஊட்டிய அருமருந்துகள் எவையென்று எண்ணுகின்றீர்கள்? இப்பெரியார்தம் வாழ்க்கை வரலாறுகளே! அவர்தம் படைப்புகளே! என் சிந்தனையில் மாற்றத்தினை ஏற்படுத்தியவர்களே மேலே குறிப்பிடப்பட்டுள்ளவர்களென்றால், மேரி கியூரியுட்பட சிறுமி ஆன் பிராங் உட்பட, கட்டடக் கலைஞன் லிகோர் பூசியோ உட்பட சகல பெரியார்தம், அறிஞர்தம், கலைஞர்தம் வாழ்க்கை வரலாறுகளுமே என்னைப் படிப்படியாக மாற்றிக் கொண்டு வந்தன; வருகின்றன; வரும். ஆக, உண்மையில் பார்க்கப் போனால் எனது சரியான குருமார்கள் யாரென்று நினைக்கிறீர்கள்? சந்தேகமேயின்றி நூல்கள்தான்; நிச்சயமாகப் பத்திரிகை, சஞ்சிகைகள்தான்; இதற்கும் மேலாக எனது 'உள்ளுணர்வு'தான்; சிறுவயது முதலே என் ஆழ்மனத்தே புதைந்து கிடந்திட்ட ஆசைகளை ஒழுங்கு படுத்தி, சூழல்களிடமிருந்து பாடங்களைக் கற்றிடச் செய்திட்ட, செய்கின்ற உள்ளுணர்வுதான். ஆக இவையெல்லாமே எனது குருமார்களே! வழிகாட்டிகளே! ஓ! உம்மை நான் போற்றுகின்றேன்; உம்மை நான் துதிக்கின்றேன்; உம்மை நான் வணங்குகின்றேன்". இவ்விதமாக இருந்த அவனது குறிப்பொன்றே போதுமானது அவன் எத்தகையதொரு மானுடனென்பதை அறிந்து கொள்வதற்கென்பதையும் நிச்சயமாகக் கூறலாம். சந்தேகமேயில்லாமல், இருண்ட, பரந்ததோர் ஆபிரிக்க வனத்தின் நடுப்பகுதியில் நூல்கள் சூழ அவனை விட்டுவிட்டால், எத்தனை காலமென்றாலும் அவனால் வாழ்ந்து விடக் கூடியதொரு புத்தகப்பூச்சியாக அவனைக் கருதினால் அதிலாச்சரியமொன்றுமில்லைதான், ஆனால் அவ்விதம்தான் மனோரஞ்சிதம் அவனை எப்பொழுதுமே எண்ணிக் கொண்டிருந்தாள்.

யாரிந்த மனோரஞ்சிதமென்று மண்டையைப் போட்டுக் குடைகின்றீர்களா? அவனுக்குத் தெரிந்ததொரு கவிஞர் கூறியதுபோல் 'காமன் சட்டம்' (kaman Law). இன்னும் புரியவில்லையா? 'காமன் லா' (Common-Law). புரிந்ததா? அவள் அவனது 'காமன் லா'வாக இருப்பதால் யாராவது நீங்கள் மேற்படி கவிஞர் குறிப்பிட்டது போலொரு உறவு முறை அவர்களிருவருக்குமிடையில் நிலவும்; நிலவக் கூடுமென நினைத்துக் கிளூகிளூப்படைந்து விடாதீர்கள். பனை மரத்தின் கீழிருந்து பால் குடித்தாலும் கள்ளெனக் கூறும் உலகமொன்றில் வாழ்வதால், ஒரு கூரைக்குள் வாழும் அவர்களிருவரையும் பற்றியும் அவ்விதம் நினைத்தால் அதனால் அவர்களொன்றும் ஆட்சேபிக்கப் போவதில்லை. உண்மையில் அவள் அவ்விதமொரு உறவுக்காகத்தான் அவனிடம் கடந்த ஐந்துவருடங்களாக முயன்று கொண்டிருந்தாலென்றால் ஒருவேளை நீங்கள் கொஞ்சம் ஆச்சரியப்பட்டுப் போகலாம்; ஆனால் உண்மை. அவளும் அவனைப் போலொரு மனநிலை வாய்க்கப்பட்ட பிறவியென்பதால் அவளிடம் அவனுக்கொரு அளவுமீறாத ஈடுபாடொண்டு உண்டு; அவ்வளவே. அவனது இத்தகைய மனப்போக்குக் காரணமேதாவதுண்டாவென நீங்கள் சிறிது ஆராய விளையலாம்; ஆச்சரியமில்லை. அவன் கடந்தகாலத்து நிகழ்வொன்று அதற்குக் காரணமாயிருக்கக் கூடுமென அவன் கூடச் சிந்திப்பதுண்டு, ஆனால் அது பற்றி அவனுக்குக் கூட ஐயமுண்டு. மகா புலமை வாய்ந்ததொரு உளநல மருத்துவர் வேண்டுமானால் அது பற்றி ஆராய்ந்து தன் முடிவினைக் கூற முடியும். ஆனால் சந்தர்ப்பம் வரும்போது அதுபற்றி நீங்களும் அறிந்து உங்களது கருத்தினை அல்லது முடிவினைக் கூறுவதற்கும் அல்லது அடைவதற்கும் சந்தர்ப்பம் ஏற்படும். அப்பொழுது அதுபற்றிப் பார்த்துக் கொள்ளலாம்.

"வழக்கம்போல் கவிஞர் தத்துவவிசாரத்தில் ஈடுபட்டு விட்டாரோ?" இவ்விதம் கேள்வியொன்று எழுந்ததுமே, இதுநாள் வரையில் நீங்கள் வாசித்த கதைபுத்தகங்கள் அல்லது திரைப்படங்களின் பாதிப்பின் விளைவாக நீங்கள் இன்னேரம் அந்தக் குரலுக்குரியவள் யாரென்று ஊகித்திருப்பீர்கள்; உங்கள் அந்த ஊகத்தின்படி அந்தக் குரலுக்குரியவள் மனோரஞ்சிதமாக நிச்சயம் இருந்திருப்பாள். நிச்சயமாக உங்கள் ஊகம் பொய்த்திருக்க வாய்ப்பில்லை; நியாயமில்லை என்பதை உறுதிசெய்தபடி எதிரில் அகன்று,ஒடுங்கி, அகன்றிருந்ததொரு உடல்வாகுடன் நின்றவள் சாட்தாத் மனோரஞ்சிதமே.

ஆ. உறவா ? உணர்வா?

மனோரஞ்சிதத்தின் எழில் மிக்க தோற்றம் ஒருகணம் அவன் சிந்தையை அசைத்து மறுகணம் நிதானத்தை வழக்கம்போல் அளித்துவிடவே கெளதமன் அவளது அழகு பற்றியும், அதற்கும் மேலாக அவள் உடல்முழுவதும் வியாபித்துச் சுடர்ந்து கொண்டிருக்கும் ஞானச்சோபை பற்றியும் இன்னுமொரு கணம் எண்ணிச் சிறிது உள்ளூர ஒருவித தண்மை கலந்த இன்பஉணர்வில் மூழ்கி இதுவரை காலமும் அவளுடன் பழகிய அவனது இருப்பின் வரலாறு பற்றி அடுத்தகணத்தில் உணர்ந்து, அறிந்து, களிப்பெய்து, நிலையற்ற இந்த இருப்பினில் எத்துணை பெறுமதி வாய்ந்ததாக அவளுடனான தொடர்பிருக்கிறதென்று வியந்து, இது இவ்விதமே இருப்பின் முடிவுவரை தொடருமா, அவ்விதம் தொடர்ந்தால் அது, இருப்பு, எவ்விதம் பயனுள்ளதாக, நிறைவுள்ளதாக இருக்குமென மேலும் நினைத்து மீண்டுமொருகணம் அவளது எழில்வாய்ந்த தோற்றத்தில் தன் பார்வையினைத் திருப்பிய அதே சமயம்
அவளுடன் அவ்வப்போது நடைபெறும் உரையாடல்கள் பற்றியும் தன் சிந்தையினைத் திருப்பினான்.

"கெளதமன், எதற்காக நீங்கள் உங்களையே தேவையற்று தீக்கோழி தன தலையினை மண்ணினுள் மூடிக் கொள்வதுபோல் மூடி, உணர்வுகளைக் கடந்ததொருவராகக் காட்டுவதற்கு முயன்று, முயன்று கொண்டிருக்கின்றீர்கள். இன்னும் எத்தனைநாள் தான் நான் காத்துக் கிடப்பது? நம் உறவின் பூரணத்துவத்தினை எட்டுவதிலென்ன இன்னுமிந்த தயக்கம். உணர்வுகள், பசிகள் எல்லாமே இருப்பின் இயல்பான தேவைகளென்பதை எப்பொழுதுதான் புரிந்து கொள்ளப்போகின்றீர்கள். எப்பொழுதுதான் எனக்கு விமோசனம் அளிக்கப் போகின்றீர்கள்?"

இவ்விதமான அவளது வினாக்கள் அடிக்கடி தொடருவதொன்றும் புதிரானதல்ல. கெளதமனும், மனோரஞ்சிதமும் ஒருகூரையின் கீழ் இவ்விதம் வாழ்ந்து வந்தபோதும், தம் உணர்வுகளை, எண்ணங்களைப் பரஸ்பரம் பகிர்ந்து வந்தபோதிலும், இருவரும் ஒருவரையொருவர் பூரணமாக இரசித்து, வாழ்ந்திருந்தபோதிலும், அவள் அவர்களுக்கிடையிலான உறவில் பூரணத்துவம் இன்னுமில்லையென எண்ணினாளென்பதை ஏற்கனவே அறிந்தோம்; ஆனால் அதுபற்றிய அவனின் உணர்வுகளோ வேறாக இருந்தனவென்பதை இனி அறிவதற்கு அவன் அவர்களிருவருக்குமிடையிலான உறவானது சாதாரணத்தை விட அசாதாராணமானதென எண்ணுவதும், உணர்வுகளைக் கடந்ததொரு ஞானத்தினடிப்படையிலுள்ளதெனக் கருதுவதும், சாதாரண இருப்பின் விளைவான உணர்வுகளெல்லாம் அவர்களுக்கிடையிலான உறவின் தன்மையினை நிர்ணயிப்பவையாக இருக்கக் கூடாதென்றதொரு முடிவுக்கு உள்ளூர வந்திருப்பதும் முக்கியமான சில காரணங்கள். உறவு முக்கியமெனின் அது உணர்வுகளைக் கடந்துமிருக்க வேண்டும், அவ்விதம் தாக்குப் பிடிக்க முடியாததொரு உறவு பூரணத்துவமற்றதெனறு அவன் நினைத்தால் அவளோ உறவின் பூரணத்துவமே உணர்வுகளின் சங்கமிப்பில்தான் உள்ளதென நினைத்து வந்தாள். உறவா? உணர்வா?
ஒருமுறை அவள் தனது குறிப்பேட்டில் கீழுள்ளவாறு பாரதியின் வசன கவிதையொன்றினை இரவல்வாங்கி எழுதியிருந்ததை அவன் வாசித்ததுண்டு:

'இருப்பின் எழிலென்னை எப்பொழுதுமே இன்பத்திலாழ்த்துகிறது.
இவ்வுலகம் இனியது. இதிலுள்ள வான் இனிமையுடைத்து.
காற்றும் இனிது.
தீ இனிது. நீர் இனிது. நிலம் இனிது.
ஞாயிறு நன்று. திங்களும் நன்று.
வாந்த்துச் சுடர்களெல்லாம் மிக இனியன.
மழை இனிது. மின்னல் இனிது. இடி இனிது.
கடல் இனிது. மலை இனிது. காடு இனிது.
ஆறுகள் இனியன.
உலோகமும், மரமும், செடியும் , கொடியும்
மலரும், காயும், கனியும் இனியன. பறவைகள்
இனிய.
ஊர்வனவும் நல்லன.
விலங்குகளெல்லாம் இனியவை.
நீர்வாழ்வனவும் நல்லன.
மனிதர் மிகவும் இனியர்.
ஆண் நன்று. பெண் இனிது.
குழந்தை இன்பம்.
கெளதமன் நல்லவன்.
இருப்பின் அற்புதமவன்.
இவனுடன் சுகித்து, இன்புற்று,
உடல், உயிர்கலந்து
இருத்தல் இனிது.
கெளதமா?
ஏன் எனை இவ்விதம்
காமத்தில், விரகத்தில்
வாட்டி வதைக்கின்றாய்?
என்றெனை ஏற்றுக் கொள்ளபோகின்றாய்?'

அதனை வாசித்துவிட்டு அவன் தன் குறிப்பேட்டில் கீழுள்ளவாறு எழுதியிருந்ததை அவள் ஒருமுறை அவனது குறிப்பேட்டினைத் திருட்டுத்தனமாக வாசிந்து அவனது பரந்த உள்ளம் கண்டு மெய்மறந்து, ஒருவித பரவைச நிலையெய்தி, இவனைத் தன் துணைவனாகக் கொள்வதற்குத் தானென்ன தவம் செய்திருக்க வேண்டுமென்று மகிழ்வெய்தி, இவனது இந்த உறவு மட்டும் உணர்வுடன் உடலும் கலந்ததாகவிருக்கும் பட்சத்தில் அது எவ்விதமானதொரு பூரணத்துவம் பெற்றதாகவிருக்குமெனச் சிந்தித்திருந்தாள்.

'இந்தப் பிரபஞ்சம் பரந்து கிடந்து விரிகின்றது எந்தவித முடிவுமற்று. இந்த நீலவான்தான் எத்துணை அழகானது; இங்கு வாழும் சாத்தியங்களைக் கொண்ட உயிரினங்கள் அவை எத்தகைய பரிமாணங்களையெடுத்தபோதிலும்தான் எத்துணை எழில்வாய்ந்தவை. பிரமாண்டமானதிந்தப் பிரபஞ்சத்தின்
வெறுமையான, விரிந்து செல்லும் வெளியினூடு சிறு குமிழென விரையுமிந்த நீலவண்ணக் கோள்தான் எத்துணை இனியது. ஆயினுமேன் இந்த நீலவண்ணக் கோள் போர்களினாலும், ஏழ்மை, வறுமை போன்ற துயர்களினாலும் நிறைந்துபோயிருக்கின்றது? சோகங்களால் நிறைந்து போயிருக்கின்றது? எதற்காக? நல்லதொரு கவிதையினைச் சுவைத்துப் படிதின்பம் துய்த்தல்போல் வாழுதற்குரிய இவ்வாழ்வினையேன் மனிதரிவ்விதம் நாசமாக்குகின்றார்? இருப்பின் பொருள், அர்த்தம் அறிதலே அதன் காரணமாகவிருக்கவேண்டியதென்பதையே உணரமுடியாதவண்ணமேன் மானுடர் தாம் விரித்த சமுதாய வலைகளில் சிக்கி அதன் சிக்கவிழ்ப்பதில் தம் பொன்னான நேரத்தினைச் செலவிடுதலிலேயே தம் இருப்பினைக் கழித்து விடுகின்றார்?

'உலகெலாமோர் பெருங்கன வ·துளே
உண்டு உறங்கியிடர் செய்து செத்திடும்
கலக மானிடப் பூச்சிகள் வாழ்க்கையோர்
கனவிலுங் கனவாகும்; இதனிடை
சில தினங்கள் உயிர்க்கமுதாகியே
செப்புதற்கரிதாக மயக்குமால்
திலகவாணுதலார் தருமையலாந்
தெய்விகக் கனவன்னது வாழ்கவே'

இந்த நீர்க்குமிழியினைப் போன்று அடங்கிவிடும் இந்தக் கணப்பொழுதான வாழ்வினுள் சிக்கிக் கிடக்கும் நாகரிக மனிதர்களான நாம் ஆற்றுவதென்ன? நிலையற்ற தற்காலிகமாகவுள்ளது நமது இருப்பு; இருந்துமிதன் நிலையற்றதிதன் தன்மையினை விளங்காமலேனிந்தக் குத்துவெட்டு, அடிதடி? உணவிற்காக சக உயிர்களைக் கொன்றொழித்திடும் அதே சமயம் எமக்குள்ளேயே மோதல்கள், கொலைகள்; போர்! போர்! போரினால் இன்றைய உலகே வெந்து கொண்டு கிடக்கின்றது. தேவைதானா? இவையெலாம் தேவைதானா? இருக்கப் போகின்ற ஒரு சிறு பொழுதினையும் அமைதியற்று ஆவேசமாகக் கழிப்பதின் பயன் தான் யாதோ? இறுதியில் மரணப்படுக்கையிலும் அமைதியில்லை. ஆனால் இன்றைய மானுடத்தின் தேவை: அன்பு! அன்பு! அன்பு! ஆம். பூரணமாக அன்பு செலுத்திடும் தன்மையும், பொறுமையும், சகிப்புத் தன்மையும் அதே சமயம் தீர்க்கதரிசனமிக்க பார்வையும், செயல்களும் ஆக இவையே இன்றைய தேவைகள்...'

கெளதமனின் அறிவுத்தாகமெடுத்த தேடல் கலந்த உணர்வுகளை அறிவதிலொரு இன்பம் அவளுக்கு. தன்னையே அறிந்ததுபோன்றதொரு தெளிந்த உணர்வு ஆட்கொள்ள அவள் தன்னையே மறந்தின்புற்றுக் கிடப்பாள். சில சமயங்களில் அவள் தன் குறிப்பேட்டில் அவனுடன் கற்பனையில் உறவாடி மகிழ்வதுமுண்டு. அவ்விதமான உரையாடல்களின் மாதிரிக்கொன்று கீழே தரப்பட்டுள்ளது.

மனோரஞ்சிதத்தின் குறிப்பேட்டிலிருந்து....

அவள்: கெளதமரின் சிந்தனையின் ஆழத்தினை நானும் அறிந்து கொள்ளலாமா?

அவன்: நீ என் மீது கொண்டிருப்பதாகக் கூறுகின்றாயே அந்தக் காதலுணர்வுகள் சக்தி வாய்ந்ததாகவிருப்பின் என் மனதின் ஆழத்தினை அறிந்து கொள்வதில் உனக்குச் சிரமமேதுமிருக்கப் போவதில்லை.
அவள்: அப்பாடா! ஒரு வழியாகக் காதலைப் பற்றிக் கொஞ்சமாவது சிந்திக்கத் தொடங்கி விட்டாரே கெளதமர். ஆச்சரியம்தான்... ஆனால்...
அவன்: ஆனால்....
அவள்: ஆனால்... காதலைப் பற்றிச் சிந்திக்க முடிந்தவருக்குக் காமத்தினை உணரமுடியாமல் போவதேனோ? காமம் கலந்த காதலாலன்றோ இந்த
இருப்பு உயிர்த்துடிப்புடன் விளங்குகின்றது. கெளதருக்குப் புரியவில்லையா? அல்லது புரியாததுபோல் நடிக்கின்றாரா?
அவன்: காமத்தைக் கடந்த காதல் இருக்கக் கூடாதா? உணர்வு தாண்டிய உறவு துளிர்க்கக் கூடாதா? காமத்துடன் கூடிய உறவினை விட ஞானத்துடன் கலந்த உறவிலுள்ள இன்பத்தினை அறிய முடியாத அப்பாவிப் பெண்ணாகவிருக்கின்றாயே?

இ. மனோரஞ்சிதத்தின் மனோதிடம்!

கெளதமனின் உளநிலையினை மாற்றுவதெவ்விதம்? ஆடியில் தன்னை ஒருகணம் பார்த்த மனோரஞ்சிதம் தன்னெழில்கண்டு ஒருகணம் தானே கிறங்கினாள். தன் பருத்த முலைகண்டு, புடைத்த குறங்கின் அசைவினில் ஆடாத இவனென்ன ஆடவன்? ஆடைகளை ஒவ்வொன்றாக அகற்றித் தன்னையே இரசித்தாள். இன்று கெளதமனை ஒரு கை பார்த்து விட வேண்டுமென்று கங்கணம் கட்டிக் கொண்டவளாகக் கட்டிலில் ஆடைகலைந்து படுத்திருந்தாள் மனோரஞ்சிதம். விசுவாமித்திரன் முன் கெளதமன் எம்மாத்திரமென எண்ணினாளோ? இன்று அவனை ஒரு கை பார்த்து விடவேண்டுமென திட்சங்கற்பம் செய்து கொண்டவளாக அவனை எதிர்பார்த்துப் படுக்கையில் காத்திருந்தாள் அவள். தன்னெழில் கண்டு அவன் சித்தம் நிலைகுலைய
மாட்டானா என்று ஒருவித எதிர்பார்ப்புடன் காத்து நின்றாள்.

வெளியிலிருந்து தன்னிருப்பிடம் திரும்பிய கெளதமனை அவளது நிர்வாணம் வரவேற்றது. படுக்கையில் புகபெற்றதொரு ஓவியமொன்றில் நிர்வாணமாகச் சாய்ந்து படுத்திருக்குமொரு பெண்ணைப் போல் படுத்திருந்த அவளது தோற்றம் கண்டு அவனது சித்தம் கலங்கியதா? அவளை அவனது பார்வை ஒரு கணத்தில் தலையிலிருந்து உள்ளங்கால்கள்வரையில் ஆராய்ந்து பார்த்தது. விரிந்திருந்த அளகபாரத்தை, அழகிய கண்களை, சிவந்த உதடுகளை, விம்மிப் புடைதிருந்த மார்புகளை, கொடியிடையினை, அகன்றிருந்த இடுப்பினை, தொடைகளையென ஒருகணம் நோக்கினான் அவன். எதற்காக இன்று இவ்விதம் இவள் இவ்விதம் நடந்துகொள்கிறாளெனத் தன்னைத் தானே கேட்டுக் கொண்டவன் இவ்விதம் அவளைப் பார்த்துக் கேள்வியினைத் தொடுத்தான்:

"மனோரஞ்சிதம்! நீ எவ்வளவுதூரம் நமக்கிருவருக்கிடையில் நிலவும் உறவினை மாசுபடுத்தி விட்டாய்?"

அதற்கவள் படுக்கையிலிருந்து எழும்பாமலேயே, "என்ன நம் உறவினை மாசு படுத்திவிட்டேனா? இவ்வளவு நாட்களாகக் காத்துநிற்கின்றேனே.. உங்களுக்கு என் நிலை இன்னும் புரியவில்லையே.... இயற்கையின் தேவையினை, காலத்தின் கட்டாயத்தினைத் தாங்களேன் இன்னும் புரிந்து கொள்ளவில்லை. எதற்காக ஓடிஓடி ஒளிந்து கொள்கின்றீர்கள்? நாணத்தை விட்டுத்தான் கேட்கின்றேன். என்னை ஏற்றுக் கொள்வதிலென்ன தயக்கம்?" என்று பதிலுக்குக் கேள்வி கேட்டாள்.

கெளதமன் அவளை மீண்டுமொருமுறை நோக்கினான். அவளது அங்கங்கள் ஒவ்வொன்றிலும் சுடர்ந்து கொண்டிருந்த இச்சையினைத் தூண்டுமெழிலினை அவன் கண்டானா?

"மனோரஞ்சிதம். உனது உடலின் அங்கங்களின் எழில்காட்டி என்னை மயக்குமளவுக்குத் தாழ்ந்து போய் விட்டாயே? எவ்வளவுதூரம் நம் உறவினைச் சிறுமைப் படுத்தி விட்டாய்? இருப்பின் அர்த்தம்தனை அறியத் துடித்துக் கொண்டிருக்குமென்னை அதன் அறியாமைக்குள் சிக்கவைத்திட முனைந்து விட்டாயே?"

"கெளதமா! என்ன இருப்பின் அறியாமையா? காமம்தானே படைப்பின் ஆதாரம். அதில்லாவிட்டால் நானில்லை. ஏன் நீருமில்லையல்லவா? அது கண்டு விலகியோடுவதிலென்ன நியாயம்? என் தேவை நியாயமானதொன்றல்லவா?"

"நமக்கிடையிலுள்ள உறவின் ஆழத்தைக் காமம்தான் நிர்ணையிக்க வேண்டுமென நீ நினைப்பது எனக்கு ஆச்சரியத்தைத் தருகின்றது. உன் உடலின் அவயங்களின் நேரத்தியில், எழிலில் என் நெஞ்சில் காமம் கட்டவிழ்ந்து பாயவில்லையே. படைப்பின் நேர்த்தியில் சுடர்விடும் உனது அங்கங்கள் ஒவ்வொன்றும் எனக்கு இருப்பின் இரகசியத்தையல்லவா கட்டியங்கூறி நிற்கின்றன. என்னை மீண்டும் மீண்டும் இவ்விதம் கட்டிப் போட முனைந்து விடாதே. நம் உறவின் அடிப்படையே இந்தப் புரிதல்தானே. இருப்பினை மீறுதற்கு முயலுமென்னை நீ மீண்டும் மீண்டும் அதற்குள் கட்டிப் போட முனைவதென்ன நியாயம்? இதுதான் உனக்குத் தேவையென்றால் உனக்கு நானெதற்கு? எனக்குத்தான் நீயெதற்கு? உனக்கு 'நான்' தேவையா? அல்ல
திந்த என் வலிய வனப்பான உடல் தேவையா? அறிவு துலங்குமென் உறவு உனக்குத் தேவையா? அல்லது உணர்வின் சங்கமத்தில் மூழ்க இந்த உடல் தேவையா? அன்று சித்தார்த்தன் உறவுகள் துறந்தோடினான் ஞானம்பெற. நான் அவ்விதம் ஓடவில்லையே மனோரஞ்சிதம். உறவு துறந்து, உணர்வு கடந்து என் தேடல் தொடரவில்லையே. உணர்வடக்கித் தொடருமிந்த உறவினூடல்லவா நான் என் தேடலைத் தொடருகின்றேன். ஆனால் நீயோ .. மீண்டும் மீண்டும் உன் உணர்வு வலைக்குள் சிக்க வைக்க முயன்று கொண்டிருக்கின்றாய். அதன் மூலம் நம்முறவின் சிறப்பினையும் மாசுபடுத்த முனைகின்றாயா? சொல். மனோரஞ்சிதம். சொல்."

கெளதமனையே மீண்டுமொருமுறை உணர்வு பொங்கப் பார்த்தாள் மனோரஞ்சிதம். மறுகணமே தன்னுணர்வடக்கியெழுந்தாள்.

"கெளதமா! இதுதான் உன் முடிவென்றால் நான் உன்னை இனியும் வற்புறுத்தப் போவதில்லை. நம்முறவுக்கு எதுவுமே குறுக்கே வராமல் பார்த்துக் கொள்கிறேன். உணர்வடக்கிய உறவுதான் தேடலுக்கு அவசியமென்று நீ நினைக்கும் பட்சத்தில் நான் அதற்குக் குறுக்கே வரப்போவதில்லை. எனக்கு என் உணர்வினை விட எம்மிடையேயுள்ள உறவுதான், உன்மேல் நான் கொண்ட காதல்தான், முக்கியமானது. அதனை இழப்பதற்கென்னால் ஒருபோதுமே முடியாது. என்றாவதொருநாள் நீ உணர்வுடன் கூடிய உறவின் மூலம் உன் தேடலினைத் தொடர எண்ணினால் அதுவரையில் நான் பொறுமையுடன் காத்து நிற்பேன்"

இவ்விதமாகக் கூறியெழுந்தாள் மனோரஞ்சிதம். கெளதமன் மீண்டுமொருமுறை அவளை நோக்கினான். அவளது அங்கங்கள் ஒவ்வொன்றிலும் சுடர்ந்த ஞானத்தினொளியில் அவன் தன்னை மீண்டுமொருமுறை மறந்தான்; துறந்தான்.
ngiri2704@rogers.com
நன்றி: திண்ணை.காம்; ஜனவரி 7, 2006 பதிவுகள் ஜனவரி 2005; இதழ் 73

சிறுகதை: தேவதரிசனம்! - வ.ந.கிரிதரன் -

கண்ணுக்கெட்டியதூரம் வரையில் விரிந்து பரந்திருந்தது இரவு வான். அந்த இரவின் கருமையினைக் கிழித்துக் கொண்டு முழுநிலா. அடிவானில் தெரிந்த வட்டநிலா உண்மையில் நகரின் இன்னுமொரு தெருவிளக்காகத் தொலைவில் தெரிந்தது. அருகில் கட்டிலில் குழந்தையை அணைத்தபடி தூங்கிக் கிடந்த மனைவியின்மேல் ஒருகணம் பார்வை பதிந்து மீண்டது. மீண்டும் ஜன்னலினூடு விரிந்து கிடக்கும் இரவு வான் மீது கவனம் குவிந்தது. வழக்கம் போல் தத்துவ விசாரம். அர்த்தமேதுமுண்டா? வாழ்க்கையின் நிலையாமையினை உணர்ந்த சித்தார்த்தன் துறந்து சென்றான். துறத்தல்தான் கேள்விக்குரிய பதிலா? அப்பொழுதுதான் அந்த அதிசயம் என் கண் முன்னால் நிகழ்ந்தது. எனக்கு வியப்பை ஏற்படுத்தும் வகையில் என்னருகில் இன்னுமொரு மனித உருவமிருப்பதை அப்பொழுதுதான் அவதானித்தேன். வியப்புடன் ஒருவித திகிலும் கலந்ததொரு உணர்வு மேலிட வினவினேன்:

"யார் நீ? எப்பொழுது இங்கு வந்தாய்?"

"நான்?" இவ்விதம் கேட்டுவிட்டு ஒரு கணம் அந்த அந்நியன் சிரித்தான். தொடர்ந்தான்: "விபரிப்பதற்கு அதுவொன்றும் அவ்வளவு சுலபமல்ல நண்பனே! உனக்குப் பொறுமையிருந்தால் சிறிது விளக்குவேன்."

நான் அந்தப் புதியவனை மெளனமாக எதிர்நோக்கி நின்றேன். அவன் தொடர்ந்தான்.

"என் கால்களைப் பார்க்கிறாயா?" இவ்விதம் கூறியவன் தனது ஆடைகளைச் சிறிது உயர்த்தினான். எனக்கு ஆச்சரியமாகவிருந்தது. அங்கு பாதங்கள் நிலத்தைத் தொடாமல் அந்தரத்தில் மிதந்ததை அவதானித்ததின் வியப்பின் விளைவே எனது ஆச்சரியத்துக்குக் காரணம்.

வந்தவன் தொடர்ந்தான்" "இப்பொழுது என் கண்களைச் சிறிது நேரம் பார்." பார்த்தேன். ஏற்பட்ட வியப்பு தொடர்ந்தது. அங்கு அசைவற்ற கண்களைக் கண்டேன்.

வந்தவன் மேலும் தொடர்ந்தான்: "இப்பொழுது உண்மை புரிந்ததா?"

நான் சிறிது தடுமாறினேன்: "அப்படியென்றால் நீ.. நீங்கள் தேவர்களில் ஒருவரா?"

அவன்: "பரவாயில்லை! நீ தேவனென்றே கூறலாம். அப்படித்தான் உன்னவர்கள் என்னைக் கூறுகின்றார்கள். ஆனால் அவர்கள என்னை அறிந்தது பூரணமற்றது. கட்டுக் கதைகளால் இட்டு நிரப்பி விட்டார்கள். அறியாததனாலேற்பட்ட விளைவு. உனக்கு உண்மை பகர்வேன். நீ அதிசயித்துப் போவாய். புரிந்து கொள்வாய். அதற்காகவே நான் இங்கு வந்துள்ளேன். மேலும் நீ காணும் இந்த உருவம் கூட எனது உண்மையான உருவமல்ல. நான் உன்னுலகுனுள் அடியெடுத்து வைக்கும் சமயங்களிலெல்லாம் இது போன்றுதான் வருவது வழக்கம். சில சமயங்களில் நான் ஆணாகவும் வருவேன். வேறு சில சமயங்களில் நான் பெண்ணாகவும் வருவேன். இன்னுமோர் சமயம் நான் ஆணும் பெண்ணும் கலந்த உருவுமெடுப்பேன்."

அவனே தொடர்ந்தான்: "உண்மையில் உன்னால் ஒருபோதுமே ஒரு நிலைக்குமேல் என்னை அறியவே முடியாது. இருக்கும் உன் அறிவின் துணையுடன் ஓரளவு புரிய மட்டும் தான் முடியும்."

"எனக்கு ஒன்றுமே புரியவில்லையே.." எனக்குச் சிறிது குழப்பமாகவிருந்தது.

"உனக்கு உண்மையில் புரிந்தால் மேலும் குழம்பி விடுவாய்."

"குழப்பமா?"

"ஆம்! கூறுகிறேன் கவனமாகக் கேள்."

சிறிது நேரம் இருவருக்குமிடையில் மெளனம் நிலவியது.

அவனே தொடர்ந்தான்: " நண்பனே! நீ வாழ்ந்து கொண்டிருக்கின்றாயே. இந்த வெளி. கழித்துக் கொண்டிருக்கின்றாயே இந்த நேரம். உண்மையில் இந்தப் பரிமாணங்களுக்குள் சிக்கிக் கிடக்கும் உன்னால் எவ்விதம் உண்மையினை அறிதல் சாத்தியம். உண்மையில் இன்னுமொன்றினையும் அறிந்தால் .."

"அறிந்தால்..."

"உண்மையில் இந்தப் பிரபஞ்சம். நீ காணும் இந்தப் பிரபஞ்சம். நான் என் ஓய்வு நேரத்தில் உருவாக்கியதொரு விளையாட்டு. உன்னைப் போல் தான் நானும் என் இருப்பினைப் பற்றிய விசாரங்களுக்குள் சிக்கிக் கிடந்த வேளை விடை புரியாமல் தவித்த போது ஏற்பட்ட வெறுப்பின் விளைவாக என் முழு அதிகாரத்தின் கீழுள்ளதொரு உலகினைப் படைக்க விரும்பினேன். அதன்பொருட்டு நான் உருவாக்கிய விளையாட்டே நீ காணும் இந்தப் பூவுலகு; அண்டசாரசரங்கள்..எல்லாம். புரிந்ததா?"

"புரியவில்லையே நண்பனே?"

"நீ பரிமாணங்களுக்குள் சிக்கிக் கிடக்கின்றாய். அவற்றைக் கடந்தவன் நான். உனது பரிமாணங்களுக்குள் நீ கணினி விளையாட்டுக்களை உருவாக்கி விளையாடுவதைப் போல் நான் என் பரிமாணங்களுக்குள்ளிருந்து உருவாக்கிய விளையாட்டுத்தான் நீ வாழும், நீ காணும், நீ உணருமிந்த உலகு. உன்னவரைப் பொறுத்த அளவில் நான் தேவன். கடவுள். எது எப்படியோ... உன் பரிமாணங்களை மீறியவன் நான். ஆயின் எனக்கும் சில எல்லைகள் உண்டு. உன்னைப் போல் தான் என் பரிமாணங்களுக்கும் அப்பால் என்ன இருக்கிறது என்பதைப் பொறுத்த வரையில் எனக்கும் ஒன்றுமே தெரியாது. அதற்காகவே என் இருப்பும் கழிந்து கொண்டிருக்கிறது. உன்னைப் போன்ற முப்பரிமாணப் பிரபஞ்சத்தின் எந்த மூலைக்குள்ளும் என்னால் உடனடியாக உன்னையொத்த வடிவினை எடுத்து மிக இலகுவாக உட்சென்று பங்கு பற்ற முடியும். உண்மையில் உன்னுடன் இங்கு உரையாடிக் கொண்டிருப்பபதைப் போன்றதொரு தோற்றமே ஒருவித ஏமாற்றுத்தான். நான் உருவாக்கிய இந்த விளையாட்டுக்குள் செல்வதற்காக நான் உருவாக்கியதொரு பொய்யான தோற்றந்தான் இது. உண்மையில் நான் உன்னைப் பொறுத்தவரையில் உருவமற்றவன் எல்லா உருவங்களையும் எந்நேரத்திலும் எடுக்கக் கூடியவன். பரிமாணங்களை மீறியவன். சகலவிதமான பரிமாணங்களுக்குள்ளும் புகுந்து விளையாடக் கூடியவன். இருந்தும் நானும் ஒரு குறிப்பிட்ட பரிமாணங்களை எல்லையாகக் கொண்டவன் தான். உனக்கும் எனக்குமிடையிலான வித்தியாசம்... நீ என்னை விடக் குறைந்த அளவிலான பரிமாணங்களுக்குள் வாழுமோர் ஐந்து அவ்வளவே. வெளியையும் காலத்தையும் உன்னால் என்றுமே மீற முடியாது. ஆனால் அதற்காக உனது பரிமாணங்களுக்கப்பாலெதுவுமில்லையென்று ஆகி விடமாட்டாது. நீ நான் உருவாக்கியதொரு விளையாட்டின் அங்கம் தான். ஆயினும் உன்னைப் பொறுத்த வரையில் இயலுமானவரையில் இருக்கும் சூழல்களுக்கேற்றபடி நீ ஓரளவுக்காகவாது சுயமாக இயங்கும்படி நான் உன்னை, இந்த உலகை, இங்குள்ள அனைத்து உயிர்களையுமே உருவாக்கியுள்ளேன். இந்த எனது விளையாட்டில் காணப்படும் அனைத்துமே சூழலுக்கு ஈடு கொடுத்து தங்களைத் தாங்களே அறிதற்கு, புடமிடுதற்கு முடியும். அதற்கு ஏற்றவகையில் நான் எழுதிய , வடிவமைத்த விளையாட்டு இருப்பதை நீ இங்கு காணும் உயிர்கள் அனைத்தினதும் அடிபப்டை இயல்புகளிலிருந்து இலேசாகப் புரிந்து கொள்ள முடியும்.. ஆனால் முற்றாக அறிந்து கொள்ளல் சாத்தியமற்றது. அந்த வகையில் நீ உருவாக்கும் கம்யூட்டர் வீடியோ விளையாட்டுக்களை விட எனது இந்த விளையாட்டு அதி அறிவியல் நுட்பம் கொண்டது. இந்தப் பிரபஞ்சத்தில் நான் எழுதிய விளையாட்டில் பல இன்னும் தீர்க்கப்படாத குறைகள் உள்ளன. நீ எழுதும் கணினி ஆணைத்தொடர்களில் காணப்படும் வழுக்கள் போன்றவைதான் அவையும். குறைகளற்ற 'புறோகிறாம்'கள் ஏதேனும் உண்டா. ஆனால் உன்னைப் போல் நான் எனது இந்த விளையாட்டின் பிரச்சினைகளில் தலையிட்டுத் திருத்துவதில்லை. உன்னைப் போல் புதிய புதிய பதிப்புக்களை வெளியிடுவதில்லை. எனது படைப்புக்களான உங்களிடமே அதற்குரிய ஆற்றலையும் கூடவே சேர்த்தே படைத்துள்ளேன். நீ சுயமாக இயங்கும் இயந்திர மனிதர்களை, 'ரோபோட்'டுக்களைப் படைப்பதை ஒத்ததிது. உனது அறியும் ஆற்றல் எனது முக்கியமான அம்சங்களிலொன்று. அதனை நீ எவ்விதம் பாவிக்கின்றாயென்பதில் தான் உனது பிரபஞ்சத்தில் காணப்படும் சகல பிரச்சினைகளுக்கும் உரிய வழிவகைகள் உள்ளன."

இவ்விதம் கூறிய எனது படைப்புக்குக் காரணகர்த்தா மேலும் கூறினான்: "இப்பொழுது சிறிது நேரம் என்னுடன் பயணிக்க உனக்கு விருப்பமா? விரும்பினால் இன்னும் சிறிது உண்மையினை உனக்குக் காட்ட என்னால் முடியும்."

எனக்கு இடையிலொரு சந்தேகம் எழுந்தது. கேட்டேன்: "உன் படைப்பிலொரு அற்பப் புழுவான என்மேல் ஏனிவ்விதம் பரிவு காட்டுகின்றாய்? ஆர்வம் கொள்கிறாய்?"

அதற்கு அவன் சிரித்தான்: "யார் சொன்னது உன்மேல் மட்டும் தான் இவ்விதம் ஆர்வம் காட்டுகின்றேனென்று. இது போல் உன்னவர் பலபேரிடம் அவ்வப்போது நான் இரக்கம் கொண்டு காட்சியளிப்பதுண்டு. அறிதலுக்கு உதவுவதுண்டு. பொதுவாக என் அறிவின் குழந்தைகளான உங்களில் எவரெவர் சிந்திக்கும் ஆற்றலைப் பாவித்துச் சூழலை மீறிச் சிந்திக்க விளைகின்றார்களோ அவர்களிடத்தில் எனக்கு மிகுந்த பாசம் உண்டாவதை என்னால் ஒருபோதுமே தவிர்க்க முடிவதில்லை. அவர்களுக்கு உதவுவது எனக்கு மிகவும் உவப்பானதொரு பொழுதுபோக்கு. எனது படைப்புகளின் திறமை கண்டு நானே அத்தகைய சமயங்களில் பிரமிப்பதுண்டு. நான் உருவாக்கிய விளையாட்டின் அடிப்படையினைப் புரிந்து கொள்ள நீங்கள் முனைவது எனக்கு என் விளையாட்டின் சிறப்பினை எடுத்துக் கூறும் முக்கியமான செயல்களிலொன்று. நன்கு இயங்கும் உனது 'புறோகிறாம்' கண்டு நீ வியப்பது, களிப்பது போன்றது தான் இதுவும். பயணத்தைத் தொடங்குவோமா?"

ஆமெனத் தலையசைத்தேன்.

என் கடவுள் , தேவன் (எப்படி வேண்டுமானலும் நீங்கள் கூறிக் கொள்ளுங்கள். எனக்கு ஆட்சேபணையேதுமில்லை) தொடர்ந்தான்: "இப்பொழுது நான் உன்னை என் பரிமாணங்களுக்குள் காவிச் செல்லப் போகின்றேன். உன் நகரின் முக்கியமான, பலத்த காவலுள்ள சிறைச்சாலையொன்றிற்குச் செல்லப் போகின்றேன். மிகவும் பயங்கரமான காவலுள்ள அச்சிறைச்சாலையில் பல பயங்கரச் செயல்களைப் புரிந்த உன்னவர்களை உன்னவர்கள் அடைத்து வைத்திருக்கின்றார்கள்."

இவ்விதம் அவன் கூறியதைத் தொடர்ந்து என்னைக் கடவுள் தன் பரிமாணத்தினுள் எடுத்துச் சென்றான். அதே கணத்திலேயே நானும் அவனும் என் நகரின் முக்கியமான அந்தச் சிறைச்சாலையினுள் நின்றோம். சிறைக்கைதிகளுக்கு மத்தியில் நாம் நின்றோம். ஆனால் அவர்களில் யாருமே எம்மைப் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. இரவானதால் எல்லோரும் துயில்வதற்குத் தயாராகிக் கொண்டிருந்தார்கள்.

"என்ன வியப்பிது. யாருமே எம்மைப் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லையே" என்றேன்.

அதற்கு அந்தக் காரணகர்த்தா கூறினான்: "அதிலென்ன ஆச்சரியம். நாமிருவரும் இன்னும் எனது பரிமாணத்தினுள் தான் இருக்கின்றோம். அதுதான் காரணம். அவர்களால் தான் அவர்களது பரிமாணங்களை மீறமுடியாதே. நான் இப்பொழுது அவர்களில் சிலரை, உன்னவர்களைப் பொறுத்தவரையில் மிகவும் ஆபத்தானவர்களாகக் கருதப்படும் சிலரை எனது பரிமாணத்தினுள் காவி வரப் போகின்றேன். "

அதனைத் தொடர்ந்து சிலரை அவன் மிக இலகுவாகவே தனது உலகுனுள் எடுத்து வந்தான். சிறைச்சாலையினுள் ஒருவித பதட்டமான சூழல் உருவாகியதை அவதானிக்க முடிந்தது.

கடவுள் கூறினான்: "அவர்கள் தமது உலகிலிருந்து மாயமாக மறைந்த இவர்களைத் தேடுகின்றார்கள். அதுதான் பதட்டத்தின் காரணம்"

"என்ன வழக்கம் போல் கனவுதானா?"

குரல் கேட்கவே திரும்பினேன். எதிரில் துணைவி மரகதவல்லி. எனக்குச் சிறிது குழப்பமாகவிருந்தது. கனவா...இதுவரையில் நிகழ்ந்ததெல்லாம் வெறும் கனவா. இவ்வளவு நேரமும் என்னுடன் இவ்வளவு அறிவுபூர்வமாக உரையாடிக் கொண்டிருந்த கடவுள் கனவுத்தோற்றம் மட்டுமே தானா? இருப்பின் இரகசியத்தினை ஓரளவு அறிந்து விட்டேனென்று களிப்படைந்ததெல்லாம் வெறும் கற்பனை மட்டுமே தானா? இது தான் இவ்விதமென்றால் மறுநாட் காலையோ எனக்கு இன்னும் வியப்பளிப்பதாக புலர்ந்தது. முக்கிய தினசரியொன்றின் அன்றைய காலைப் பதிப்பின் முக்கிய செய்தி பின்வருமாறு தொடங்கியிருந்தது:"சிறைச்சாலையிலிருந்து கைதிகள் மறைவு! மறைவின் காரணம் புரியாத சிறைக் கைதிகள், காவலர்கள் திகைப்பு! பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே வெளியில் மறைந்தனர் கைதிகள் சிலர். கூடு விட்டுக் கூடு பாய்ந்தனரா? விடை தெரியாத புதிர்." அப்படியானால்....?
ngiri2704@rogers.com
பதிவுகள் நவம்பர் 2004; இதழ் 59, திண்ணை

சிறுகதை: 'ஆத்மாவின் புத்துயிர்ப்பு!' - வ.ந.கிரிதரன் -- கி.பி.3025இல் ஒருநாள்.

- பொழுது மெல்லப் புலர்ந்தது சேவல்களினது பறவைகளினதோ ஒலிகளேதுமில்லாமலே.

- கி.பி. 2800 அளவிலேயே இந்த நீலவண்ணக் கோளிலிருந்து உயிரினங்கள் அனைத்தும் ,றறிவு போட்ட குதியாட்டத்தில், மனிதனைத் தவிர அழிந்தொழிந்து போய் விட்டன.

- ஒரு சில விருட்ச வகைகளே எஞ்சியிருந்தன.

- மனிதர்கள் மாத்திரை உணவு வகைகள் பாவிக்கத்தொடங்கி மூன்று நூற்றாண்டுகளைத் தாண்டி விட்டிருந்தன.

- இதற்கிடையில் ஏனைய உயிரினங்களுக்கு ஏற்பட்ட நிலை மனித இனத்துக்கும் ஏற்படும் காலம் வெகு அண்மையில், ஒரு நூற்றாண்டு காலத்துக்குள், அண்மித்து விட்டது. மனிதர்கள்

ஆயிரம் வருடங்களுக்கு முன்னிருந்த பூமியின் நிலையினையொத்த கோளமொன்றினைக் காண்பதற்கான தேடுதலை விரைவுபடுத்த வேண்டிய தேவையிலிருந்தார்கள்.

- கதிரவன் 'சிவப்பு அரக்கன்' நிலைக்கு வருவதற்கு இன்னும் பல பில்லியன் வருடங்களிருந்தன. அதுமட்டும் மனித இனம் இங்கிருக்க முடியாத நிலையினை மானுட இனம் ஏற்படுத்தி விட்டது.

- எவ்வளவு மாசுபடுத்த முடியுமோ அவ்வளவுக்கு மாசுபடுத்தப்பட்டு விட்டது இந்த அழகிய நீல வண்ணக் கோள்.

- இத்தகையதொரு சூழலில் விஞ்ஞானிகள் அண்டவெளிப்பயணங்களின் வேகத்தினைத் துரிதப்படுத்தும் ஆய்வில் ஈடுபட்டிருந்தார்கள்.

- அதில் முன்னணி வகித்த உலகப் புகழ்பெற்ற மருத்துவ விஞ்ஞானி ஆத்மாநாமின் மனம் அன்று மிகுந்த மகிழ்சியுடனும், ஒரு வித பரபரப்புடனுமிருந்ததற்குக் காரணமிருந்தது.

- அவர் ஒரு முக்கிய ஆய்வில் ஈடுபட்டிருந்தார்.

- சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் ஆஸ்திரேலியர்களால் ஆரம்பிக்கப்பட்டிருந்த ஆய்வொன்றின் தொடர்சியினைப் பூரணப்படுத்துமொரு நாளை அண்மிக்கும் வகையிலானது அவரது ஆய்வு.

- குறைந்தது ஒளி வேகத்திலாவது செல்லும் வகையில் பிரயாணத்தின் வேகமிருக்க வேண்டும்? கி.பி.2003இல் ஆஸ்திரேலியர்கள் இதற்கான முதல் வித்தினை விதைத்திருந்தார்கள். அதற்கான பலனை அறுவடை செய்யுமொரு காலம் ஆயிரம் வருடங்களுக்குப் பின்னர் ஆத்மாநாமின் முயற்சியினால் அண்மித்துக் கொண்டிருந்தது. அன்று ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் லேசர் கதிர்களை அழித்து மீண்டும் சிறிது தொலைவில் உருவாக்கிச் சாதனையொன்றினைப் புரிந்திருந்தார்கள். 'தொலைகாவு'தலுக்கான (Teleporting) சாத்தியத்தினை அவர்களின் ஆய்வு அன்று தொடக்கி வைத்திருந்தது. அதன் தொடர்ச்சியான ஆய்வுகளின் விளைவாக இன்று ஆத்மாநாம் ஒரு முழு மனிதனையே 'தொலைகாவு'தல் மூலம் பிரயாணிக்கும் வகையிலானதொரு பொறியினை உருவாக்கி, அதனை வெற்றிகரமாகப் பரீட்சித்துப்பார்க்கவிருக்கின்றார். இதற்காக நகரின் இரு எதிரெதிர் திக்குகளில் சுமார் 10 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்திருந்த இரு ஆய்வு கூடங்களிலுள்ள இரு 'தொலைகாவும்' அறைகள் பாவிக்கப்படவுள்ளன. தொலைகாவும் அறை இலக்கம் 1இலிருந்து தொலைகாவும் அறை இலக்கம் 2ற்கு முழு மனிதரொருவனைக் கடத்துவதற்கான சோதனை அன்று நடக்கவிருந்தது. ஒரு மனிதனின் உடலிலுள்ள, ட்ரில்லியன்கள் கணக்கிலுள்ள மூலக்கூறுகளையெல்லாம் அழித்து மீண்டும் உருவாக்குவதென்றால் அவ்வளவு இலேசான காரியங்களிலொன்றாயென்ன!

- மானுட வரலாற்றில் மிகப்பெரியதொரு பாய்ச்சலை நிகழ்த்திக் காட்டவுள்ளார் ஆத்மாநாம். விஞ்ஞானப் புனைகதைகளில், விஞ்ஞானத் திரைப்படங்களில் மட்டுமே நிகழ்ந்து வந்திருந்ததொரு விடயம், இதுவரையில் கற்பனையில் மட்டுமே சாத்தியமாகியிருந்ததொடு விடயம், இன்று அவரது முயற்சியினால் நடைமுறைச் சாத்தியமாகும் தருணம் ஏற்பட்டுள்ளது. இந்தப்

பரிசோதனை மட்டும் வெற்றிகரமாக அமைந்து விட்டால்..... அதனை எண்ணவே ஆத்மாநாமின் சிந்தையெல்லாம் களியால் பொங்கிக் குதித்தது. சரித்திரத்தில், அவரது சாதனை பொறிக்கப்பட்டுவிடும். சாதாரண சாதனையா என்ன? இந்தப் பரிசோதனை மட்டும் வெற்றியடைந்து விட்டால்.... மனிதர் ஒரு சில வருடங்களிலேயே அயலிலுள்ள சூரியமண்டலத்திலுள்ள கோள்களுக்கு பயணிப்பதற்கான சாத்தியம் ஏற்பட்டு¢விடும்.

- அண்டத்தை அளப்பதற்குரிய வல்லமையினை அவரது ஆய்வின் வெற்றி மனிதருக்கு வழங்கிவிடும்.

- எத்துணை மகத்தான வெற்றியாக அது அமைந்து விடும்.

"ஆத்மா! உன்னைத்தான் பெரிதும் நம்பியிருக்கிறேன். என்னை இந்தக் கடைசித் தருணத்தில் ஏமாற்றி விடாதேயடா?" இவ்விதம் ஆத்மாநாம் ஒருமுறை தனக்குத்தானே கூறிக்கொண்டார்.

அவர் உண்மையில் தனக்குத்தானே கூறிக்கொண்டாலும் அவர் ஆத்மாவென்று விளித்தது அவரையல்ல. அவரது பரிசோதனைக்குத் தன்னை உட்படுத்திக்கொள்ளத் துணிச்சலுடன் வந்ததொரு ஆத்மாவான 'ஆத்மா'வைத்தான். இளைஞனான ஆத்மாவைத்தான்.

ஆத்மாநாம் பத்திரிகையில் சுகாதார அமைச்சினூடாக வெளியிட்டிருந்த விளம்பரத்தைப் பார்த்து முன்வந்திருந்த இளைஞர்களில் அவர் தேர்ந்தெடுத்திருந்தது இந்த ஆத்மாவைத்தான். ஆத்மா உண்மையிலேயேயொரு இயற்பியல்-வானியற் பட்டதாரி. அத்துடன் அத்துறையில் வெகுஜனப்பத்திரிகைகளில் ஆய்வுக்கட்டுரைகள் எழுதிவரும் பிரபல்யமான எழுத்தாளன். ஆத்மாநாமின் ஆய்வின் முக்கியத்துவத்தை மனதார விளங்கி, உணர்ந்து, தனது காலகட்டத்துக்கான பங்களிப்பு என அதனைப் புரிந்து முன்வந்திருந்தான். இந்தப் பரிசோதனையில் தன்னை இழப்பதற்குமவன் துணிந்து வந்திருந்தான்.

சரியாக காலை மணி பத்துக்குப் பரிசோதனை ஆரம்பிப்பதாகவிருந்தது. ஆத்மாநாம் தனது கைக்கடிகாரத்தைப் பார்த்தார். சரியாக மணி ஒன்பது. ஆத்மாநாமை கூட்டிச் செல்வதற்காக ஆய்வு கூடத்திலிருந்து பணியாட்களிருவர் வாகனத்தில் வந்திருந்தார்கள். தொலைகாவும் அறை இலக்கம் 1இல் ஏற்கனவே ஆத்மாவுட்பட வெகுசன ஊடகவியலாளர்கள் பலரும் வந்து காத்திருந்தனர். முதல் நாளிரவிலிருந்தே அவர்களில் பலர் வந்து கூடாரம் அடித்து விட்டிருந்தார்கள். ஆத்மாநாம் ஆய்வுகூடத்தை அடைந்தபொழுது மணி சரியாக ஒன்பது மணி பதினைந்து நிமிடங்கள். அவரை எதிர்பார்த்து ஆத்மா காத்திருந்தான். ஏற்கனவே அவன் உடல்நிலையெல்லாம் சக வைத்தியர்களால் பரிசோதனைகுட்படுத்தப்பட்டு, பரிசோதனைக்கு அவன் தகுதியானவனென அவர்களால் அத்தாட்சிப்படுத்தப்பட்டிருந்தான்.

ஆத்மாநாம் ஆத்மாவைப்பார்த்துக் கேட்டார்: "என்ன திரு.ஆத்மா! பரிசோதனைக்குத் தயாரா?"

ஆத்மா அதற்கு இவ்விதம் பதிலிறுத்தான்: "நான் தயார். நீங்கள் தயாரா?"

இவ்விதம் அவன் கூறியதும், அவனது நகைச்சுவையுணர்வு கண்டு அனைவரும் வியந்து சிரித்தார்கள். ஆத்மா எவ்வளவு நகைச்சுவையுணர்வு மிக்கவனாகவிருக்கிறானென்று மூக்கில் விரல் வைத்து அவனை வாழ்த்தினார்கள்.

ஆத்மாநாம் கேட்டார்: "திரு. ஆத்மா. நீங்கள் வெகுசன ஊடகவியலாளர்களுக்கு ஏதாவது கூற விளைகின்றீர்களா?"

அதற்கு ஆத்மா கூறினான்: "அவர்களேதாவது கேட்கும் பட்சத்தில்"

ஆத்மாநாம் ஊடகவியலாளர்களைப் பார்த்துப் பின்வருமாறு கேட்டார்: "நீங்கள் திரு.ஆத்மாவிடம் ஏதாவது கேட்கவிரும்புகின்றீர்களா""

அதற்குப் பலர் தங்களது கைகளை உயர்த்தினார்கள்.

ஆத்மாநாம் கூறினார்:" எல்லாருக்கும் பதிலிறுப்பது சாத்தியமில்லை. இருவருக்கு மட்டுமே திரு.ஆத்மா பதிலிறுப்பார்"

ஊடகவியலாளர் ஒருவர் எல்லாரையும் முந்திக்கொண்டு பின்வருமாறு கேட்டார்: "திரு.ஆத்மா! உங்களுக்கு இத்தகையதொரு விஷப்பரீட்சையில் ஈடுபடும் எண்ணம் எவ்விதமேற்பட்டது?"

இந்த ஆயிரம் வருடங்களில் கேள்வி கேட்பதில் மட்டும் இன்னும் இந்த ஊடகவியலாளர்கள் இன்னும் கொஞ்சம் கூடப் பரிணாம வளர்சியின்றியிருந்தார்கள் என்பதற்கு சான்றானதொரு வினா.

அதற்கு ஆத்மா சிறிது யோசித்துவிட்டுக் கீழ்வருமாறு பதிலுரைத்தான்:"இதனை விஷப்பரீட்சையென்று சொன்ன முட்டாள் யார்? இது என் வரலாற்றுக் கடமை. ஆயிரம் வருடங்கள் வாழும் வினாடியையொத்த எம் வாழ்வின் பயனாக இதனை நான் கருதுகின்றேன். சிறுவயதிலிருந்தே அண்டவெளிப்பயணம் பற்றிக் கனவு கண்டு வளர்ந்தவன் நான். அதுதான் முக்கிய காரணம்." [ கி.பி.3000இல் மனிதர்கள் ஆயிரம் வருடங்கள் வரை வாழும் நிலையிலிருந்தார்கள். பிறக்கும் ஒவ்வொருவரும் , இருதயம் தொடக்கம், மூளை தவிர, சகல உடலின் அங்கங்களையும் அடிக்கடி மாற்றுவதன் மூலம் சுமார் ஆயிரம் வருடங்கள் வாழக்கூடியதொரு நிலை நிலவிய காலகட்டம்.]

எல்லோரும் ஆத்மாவின் தைரியத்தை மெச்சினார்கள். இன்னுமொரு ஊடகவியலாளர் கூறினார்: "திரு.ஆத்மா! உங்கள் தைரியத்துக்கு நாம் தலை வணங்குகின்றோம். மானுட குலத்தின் நீட்சிக்குத் தங்கள் பங்களிப்பு வரலாற்றில் பொறிக்கப்படும். உங்கள் பயணம் வெற்றியடைய எமது வாழ்த்துக்கள்".

அவரைத் தொடர்ந்து அனவரும் வாழ்த்தி வழியனுப்ப, ஆத்மா தொலைகாவும் அறை இலக்கம் 1ற்குள், விஞ்ஞானி ஆத்மாநாம், மற்றும் அவரது உதவியாளர்கள் சகிதம் நுழைந்தான். வெளியில் ஏனைய மருத்துவர்கள், ஊடகவியலாளர்கள், அரசியல்வாதிகளெனப் பலர் பார்வையாளர் கூடத்தில் காத்திருந்தார்கள். பரிசோதனை தொடங்க இன்னும் சில நிமிடங்களே இருந்தன. ஆத்மாநாம் தொலைகாவும் அறை இலக்கம் 2இலிருந்த சக மருத்துவர்களுடன் கதைத்து அங்கு எல்லாம் தயார்தான் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டார். அங்கும் ஊடகவியலாளர்கள், அரசியல்வாதிகளெனப் பலர் மீள உயிர்த்தெழும் ஆத்மாவை வரவேற்பதற்காகக் காத்திருந்தார்கள்.

ஆத்மாநாம் இறுதியாக ஆத்மாவை பார்த்துக் கூறினார்: "திரு.ஆத்மா! உங்களது இந்தப் பங்களிப்புக்காகத் தலை வணங்குகின்றேன் மானுட இனம் சார்பில். உங்களைப் போன்ற சூழலை மீறிய துணிச்சற்காரர்களால்தான் மானுட இனம் இத்துணைதூரத்துக்கு வளர்ச்சி கண்டுள்ளது. வரலாற்றில் நிலைத்து நின்று விட்டீர்கள் இந்த ஒரு செய்கையின் மூலம். திரு.ஆத்மா உங்களுக்காகத் தலை வணங்குகின்றேன்."

அதற்கு ஆத்மா கூறியவைதான் கீழேயுள்ளவை: "நீங்கள் மிகவும் புகழ்கின்றீர்கள். நான் செய்யும் இந்தச் சாதாரண காரியத்துக்காக என் மனித இனம் பெரும் பயனடையுமானால் அதுவே எனக்குப் பெரு மகிழ்ச்சி".

இதன் பின்னர் ஆத்மா தொலைகாவும் அறை இலக்கம் 1இனுள் விஞ்ஞானி ஆத்மாநாமுடன் நுழைந்தான். அவனைச் சரியாக இருக்கையில் அமர்த்தி விட்டுச் செய்யவேண்டியவை பற்றிய

அறிவுறுத்தல்களை மீண்டுமொருமுறை ஞாபகப்படுத்திவிட்டு ஆத்மாநாம் வெளியில் வந்தார். வரும்பொழுது அவர் பின்வருமாறு தமக்குள் எண்ணினார்: 'எத்துணை துணிச்சலான பையன். ஆத்மா நீ வாழ்க!'

சரியாகப் பத்துமணிக்கு விஞ்ஞானி ஆத்மாநாம் தொலைகாவும் அறை இலக்கம் 1இனை இயக்கி வைத்தார்.

அதே கணத்தில் தொலைகாவும் அறை இலக்கம் 2இல் காத்திருந்த விஞ்ஞானிகள் அறைக் கதவினைத் திறந்தார்கள்.

ஒளிவேகத்தில் தொலைகாவுதல் நடப்பதால் ஆத்மாவின் புத்துயிர்ப்பு அதே சமயத்தில் நிகழவேண்டும்.

அறையினைத் திறந்த மருத்துவ விஞ்ஞானிகளை வெற்றிகரமாகத் தொலைகாவப்பட்டிருந்த ஆத்மாவின் ஆத்மாவற்ற ஸ்தூல உடல் வரவேற்றது.
பதிவுகள் பெப்ருவரி 2005; இதழ் 62, திண்ணை.காம்

சிறுகதை: நீ எங்கிருந்து வருகிறாய்?' - வ.ந.கிரிதரன் -


கி.பி.1964ஆம் ஆண்டு தை மாதம் 14ந்திகதி, தமிழ் மக்களின் முக்கிய திருநாளான தைப்பொங்கள் திருநாளன்று, அவன் இந்து சமுத்திரத்தின் முத்து , சொர்க்கம் என்றெல்லாம் வர்ணிக்கப்படுகின்ற, ஒரு காலத்தில் போர்த்துகேயர், ஒல்லாந்தர் மற்றும் ஆங்கிலேயர்களின் காலனியாக விளங்கிய, 'சிலோன் (Ceylon) என்றழைக்கப்பட்ட, தீவான இன்று ஸ்ரீலங்கா என்றழைக்கப்படுகின்ற இலங்கைத் தீவில் அவதரித்தான். அவன் அவதரித்தபொழுது அவனுக்கொன்றும் இவ்விதம் அவனது வாழ்க்கை பூமிப்பந்தின் பல்வேறு திக்குகளிலும் அலைக்கழியுமென்று தெரிந்திருக்கும் வாய்ப்பு இருந்ததில்லை. ஆனால் தீவின் தொடர்ச்சியான அரசியல் நிலைகள் அவனைப் புலம்பெயர வைத்து விட்டன. இன்று அவன் வட அமெரிக்காவின் முக்கியமானதொரு நாடான கனடாவின் குடிமகன். இது அவனைப்பற்றிய சுருக்கமான வரலாறு. என்புருக்குமொரு அதிகாலைப் பொழுது. அவன் வேலை செல்வதற்காக போக்குவரத்து வாகனத்தினை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றான். அருகிலொரு வெள்ளையின நடுத்தர வயதினன் அவனுக்குத் துணியாக. அவர்களிருவரையும்தவிர வேறு யாருமே அச்சமயத்தில் அங்கிருக்கவில்லை. நிலவிய மெளனத்தினைக் கலைத்தவனாக அந்த வெள்ளையினத்தவன் அவர்களிருவருக்கிமிடையிலான உரையாடலினைத் தொடங்கினான்:

"இன்று வழமைக்கு மாறாகக் குளிர் மிக அதிகம்!"

இங்கு ஒருவரையொருவர் சந்திக்கும்பொழுது அதிகமாகக் காலநிலையினைப் பற்றி அல்லது 'ஹாக்கி' அல்லது 'பேஸ் பால்' விளையாட்டு பற்றியுமே அதிகமாக உரையாடிக் கொள்வார்கள். வருடம் முழுவதும் மாறி மாறிக் காலநிலையினைக் குறை கூறல் பொதுவானதொரு விடயம்.

"உண்மைதான். ஆனாலும் எனக்கு இந்தக் குளிரைத் தாங்க முடியும். ஆனால்.. இந்த உறைபனி (Snow) இருக்கிறதே... அதனை மட்டும் தாங்கவே முடியாது.." என்று இவன் பதிலுக்கு உரையாடலினைத் தொடர்ந்தான். அதற்கு அந்த வெள்ளையினத்தவன் சிரித்தவனாகத் தொடர்ந்தான்:

"நீ வெப்பமான நாட்டினில் பிறந்தவன் அதுதான். ஆனால் எனக்கு இந்த உறைபனியில்லாவிட்டால் இருக்கவே முடியாது. இதற்குள்ளேயே பிறந்து, வளர்ந்து, விளையாடி வளர்ந்தவர்கள் நாம்... அது சரி..."

இவ்விதம் அவன் கூறிச் சிறிது நிறுத்திய பொழுது உடனடியாகவே இவனுக்கு அவன் அடுத்து என்ன கேள்வி கேட்கப் போகின்றானென்பது தெரிந்து விட்டது. இருபது வருடங்களாக இந்த மண்ணில் இருக்கிறானல்லவா. இது கூடத் தெரியாமல் போய் விடுமாவென்ன?

"ஏ! நண்பனே! நீ அடுத்து என்ன கூறப் போகின்றாயென்பது எனக்குத் தெரிந்து விட்டது..." என்று இவன் கூறவும் அவனது முகத்தில் சிறிது வியப்பு படர்ந்தது.

"நீ என்ன சோதிடனா எதிர்காலத்தை எதிர்வு கூறுவதற்கு?"

"நான் சோதிடனல்லன். ஆனால் இந்த மண்ணுடனான எனது பிணைப்பும் சொந்தமும் எனக்கு இந்த விடயத்திலெதிர்வு கூறும் வல்லமையினைத் தந்து விட்டன. அது சரி.. 'நீ எங்கிருந்து வந்தாய்" (Where are you from?') என்பது தானே நீ கேட்க எண்ணிய வினா?"

அதற்கு அவன் சிரித்தபடியே பதிலிறுத்தான்: "நீ நன்றாகவே கனடாவினைப் பற்றிக் கற்றறிந்து விட்டாய்."

"உண்மைதான். ஏனெனில் நான் இந்த நாட்டுக் குடிமகனல்லவா!" என்றான். இந்தக் கேள்வியினை, 'நீ எங்கிருந்து வருகிறாய்?' என்னும் வினாவினை, அவன் இந்த மண்ணில் காலடியெடுத்து வைத்த நாட்களிலிருந்து எதிர்கொண்டு வருகின்றான். இளையவர், முதியவரென்ற பாகுபாடின்றி அவன் அனைவரிடமிருந்தும் அவ்வப்போது எதிர்கொண்டு வருகின்றான். அவன் வந்த பின் இந்த மண்ணில் அவதரித்தவர்களும் வளர்ந்து பெரிதாகி அவனிடம் இந்த வினாவினத் தொடுக்கத் தொடங்கி விட்டார்கள். அண்மையில் அவனிடம் மட்டுமே கேள்விக் கணைகளைத் தொடுத்துக் கொண்டிருந்தவர்கள், இந்த மண்ணில் பிறந்த அவனது வளர்ந்து விட்ட அவனது குழந்தையிடமும் கேட்கத் தொடங்கி விட்டிருந்தார்கள். வந்த புதிதில் அவன் இந்தக் கேள்வியினை ஒருவித ஆர்வத்துடன் எதிர்நோக்கினான். தன்னைப் பற்றி அறிய இவர்களுக்கெல்லாம் எவ்வளவு ஆர்வமென்று மகிழ்வுற்றான். எனவே அப்பொழுதெல்லாம் அவனது இதற்கான பதிலும் விரிவானதாகவே இருக்கும். தன் நாட்டைப் பற்றி, மக்களைப் பற்றியெல்லாம் விரிவாகவே அலுக்காமல், சலிக்காமல் அவன் பதிலுறுப்பான். இப்பொழுதெல்லாம் அவனுக்கு அந்த ஆர்வமில்லை. ஆரம்பத்தில் ஆர்வமாககப் பதிலிறுத்தவன் அதன் பின் பதிலிறுப்பதலில் ஒரு மாற்றத்தினைக் கொண்டு வந்தான். வினாத்தொடுப்போருக்குப் பூகோள சாத்திரம் கற்பிக்கத் தொடங்கினான். இந்தக் கேள்வி எதிர்பட்டதுமே அவன் பின்வருமாறு தனது பதிலைக் கேள்வியொன்றுடன் ஆரம்பிப்பான்.

"இதற்கான பதிலை நீ அறிய வேண்டுமானால்.. அதற்கான எனது பதில். ஊகி என்பதுதான்.."

"ஓகே.. ஊகிப்பதா.. சரி..எங்கே முகத்தைக் காட்டு பார்ப்போம்.... " என்பார்கள். இவனும் முகத்தைக் காட்டுவான். உரையாடல் தொடரும்.

"பார்த்தால்... கயானா.. அல்லது கிழக்கிந்தியனைப் போல் தெரிகிறாய்... ஓகே. நீ இந்தியனா.." என்பார்கள்.

இவன் அதற்குக் கீழுள்ளவாறு பதிலிறுப்பான்:

"நீ நன்கு நெருங்கி விட்டாய்... ஆனால் நான் இந்தியனில்லை... ஆனால் எனது மண் இந்தியாவுக்கு மிக அண்மையிலுள்ளது..."

"ஓகே.... பாகிஸ்த்தானா.. "

"அதுவுமில்லை.... " என்பான்.

"பங்களாதேஷ்.." என்பார்கள். அவ்வளவுதான் அதற்குமேல் பெரும்பாலோருக்கு வேறு நாடுகளின் பெயர்களே தெரிவதில்லை. இவனும் விட மாட்டான்.

" சரி.. உனக்கு நான் சிறிது உதவி செய்கிறேன்.. தயாரா" என்பான்.

அவர்களும் அடுத்த கட்டத்திற்குத் தயாராவார்கள்.

"அது ஒரு அழகான தீவு.. ஆங்கிலேயர்களின் முக்கியமான காலனிகளிலொன்று."

" நீ என்னை நல்லாவே சோதிக்கிறாய்... இனி நான் பூகோள சாத்திரம் இதற்காகவே படிக்க வேண்டும்..." என்று கூறியபடியே மண்டையினைப் போட்டு உடைத்துக் கொள்வார்கள். இறுதியில் இவனும் மனமிரங்கிப் பதிலிறுத்து விடுவான். பின்னர் அதிலும் இவனொரு சிறியதொரு மாற்றத்தினைக் கொண்டு வந்தான். இறுதியாகப் பதிலிறுப்பதைத் தவிர்த்துப் பின்வருமாறு கூறுவான்: 'உனக்கு உண்மையிலேயே இதற்கான பதில் தேவையென்றால்.. வீடு சென்றதும் உலக வரைபடத்தை எடுத்துப் பார் புரிந்து கொள்வாய்... இந்தியாவின் தெற்குப் புறமாக உள்ள தீவு என்னவென்று அறிய முயற்சி செய். பதிலை நீயே கண்டு கொள்வாய்....'

"......."

"என்ன சிந்தனையிலாழ்ந்து விட்டாய்? என் கேள்விக்கென்ன பதில்?" என்றான் அவன்.

"நண்பனே! இதற்கான பதிலுனக்குத் தேவையென்றால்... என் கேள்விக்கு நீ பதில் தரவேண்டும்."

"உன் கேள்வியா? நீ தான் கேள்வியே கேட்கவில்லையே... கேட்காத கேள்விக்கு எவ்விதம் பதில் தரமுடியும்? "

"அவசரப்படாதே... இனிமேல் தான் கேட்கப் போகின்றேன்... நீ தயாரா?'

"நான் தயார். நீ தயாரென்றால் சரிதான்..."

"நீ எங்கிருந்து வருகின்றாய் நண்பனே! "

" நானா.... தொடராண்டோவின் கிழக்குப் பகுதியிலிருந்து வருகின்றேன்.."

"நான் அதைக் கேட்கவில்லை.."

"பின் எதைக் கேட்கிறாய்.."

"உன் மூலமென்ன.. நீ எங்கிருந்து வந்தாய்... இந்த மண்ணுக்கு..."

" நீயென்ன விளையாடுகின்றாயா... இது நான் பிறந்த மண்... "

"நான் அதைக் கேட்கவில்லை.... உன்னுடையா மூலமென்ன.. ஆதியில் உன் குடும்பத்தவர் எங்கிருந்து வந்தார்கள்... அது உனக்குத் தெரியும் தானே..."

"ஓ.. அதுவா... அவர்கள் ஒண்டாரியோ மாநிலத்தில் வடக்கிலுள்ள தண்டர்பேயிலிருந்து வந்தவர்கள்....."

"அதையும் நான் கேட்கவில்லை... அது சரியான பதிலுமல்ல.... " என்றான். கேள்வி கேட்டவன் முகத்தில் சிறிது பொறுமையின்மை, ஆத்திரம் பரவியதை இவன் அவதானித்தான். அது அவன் குரலிலும் தொனித்தது.

" நீ என்னுடன் விளையாடுகிறாய். நான் யார் தெரியுமா? இந்த மண்ணின் குடிமகன். என்னைப் பார்த்து நீ கேலி செய்கிறாய்.."

" நண்பனே... பொறு.. அவசரப்படாதே... நீ இன்னுமென் கேள்விக்குப் பதில் கூறவில்லை. நான் கேட்டதென்னவென்றால்.... உன் தாத்தா, பாட்டி அவர்கள் எங்கிருந்து வந்தார்கள்..."

அவன் கூறினான்: " இந்தக் கேள்வி மூலம் நீ என்னை அவமதிக்கின்றாய்.. கனடியக் குடிமகனொருவனை நீ அவமதிக்கின்றாய்.... அது உனக்குத் தெரிகிறதா?"

"எனக்கு நன்றாகவே தெரிகிறது. உனக்குத் தெரிந்தால் சரிதான்" இவ்விதம் கூறிவிட்டு அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்த போக்குவரத்து வண்டியில் ஏறுவதற்குத் தயாரானான் இவன்.

நன்றி:இசங்கமம் http://www.e-sangamam.com/who.asp
பதிவுகள் டிசம்பர் 2004; இதழ் 60, திண்ணை

சிறுகதை: ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை - வ.ந.கிரிதரன் -

ஞாயிற்றுக் கிழமையாதலால் 'றோட்டி'னில் அவ்வளவு சனநடமாட்டமில்லை. வாகன நெரிச்சலுமில்லை. பொன்னையாவின் 'கொண்டா அக்கோர்ட்' 'சென்ற்கிளயர்' மேற்கில் ஆறுதலாக ஊர்ந்துகொண்டிருக்கின்றது. ஞாயிற்றுக் கிழமைகளில் அல்லது விடுமுறை நாட்களில் காரோடுவதென்றால் பொன்னையாவிற்கு மிகவும் பிடித்தமானதொன்று. எந்தவித 'டென்ஷ'னுமின்றிப் பின்னால் 'ஹோர்ன்' அடிப்பார்களேயென்ற கவலையேதுமின்றி ஆறுதலாக நகரை ரசித்துச் செல்லலாமல்லவா? இருந்தாலும் அண்மைக்காலமாகவே ஞாயிற்றுக்கிழமைகளிலும் 'ஹோர்ன்' அடிக்கத்தான் தொடங்கி விட்டார்கள். நகரம் பெருக்கத் தொடங்கி விட்டது. 'நகரம் பெருக்கப் பெருக்க சனங்களும் பொறுமையை இழக்கத் தொடங்கிட்டாங்கள் போலை' இவ்விதம் இத்தகைய சமயங்களில் பொன்னையா தனக்குத்தானே சொல்லிக் கொள்வான். 'நகரம் வளருகின்ற வேகத்திற்குச் சமனாக சனங்களின்ற வாழ்க்கைத்தரமும் உயரவேண்டும். இல்லாவிட்டால் பிரச்சினைதான்' என்றும் சில வேளைகளில் ஒருவித தீவிர பாவத்துடணும் அவன் சிந்தித்துக் கொள்வான்.

'ஓல்ட்வெஸ்டன்' றோட்டைக் கடந்து 'கீல் இண்டர்செக்ஷ'னையும் கடந்து கார் விரைந்தது. இடப்புறத்தில் 'கனடாபக்கர்ஸி'ன் 'ஸ்லோட்டர்' ஹவுஸ்' பெரியதொரு இடத்தைப் பிடித்துப் ப்டர்ந்திருந்தது. ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கில் மாடுகளைத் துண்டு போடும் பெரியதொரு கசாப்புக்கூடம்.

பொன்னையா இயற்கையிலேயே சிறிது கருணை வாய்ந்தவன். ஏனைய உயிர்களின்மேல் அன்பு வைக்க நினைப்பவன். ஊரிலை இருக்கும் மட்டும் சுத்த சைவம்தான். இங்கு வந்ததும் கொஞ்சங்கொஞ்சமாக மாறி விட்டான். 'இங்கத்தைய கிளைமட்டிற்கு இதையும் சாப்பிடாட்டி மனுஷன் செத்துத் துலைக்க வேண்டியதுதான்'. திடீரென் ஊர்ந்து கொண்டிருந்த 'டிரபிக்' தடைப்பட்டது. பொன்னையா மணியைப் பார்த்தான். நேரம் பதினொன்றையும் தாண்டி விட்டிருந்தது. பஞ்சாப்காரன் பத்து மணிக்கே வரச்சொல்லியிருந்தான்.

பொன்னையாவிற்குத் தெரிந்த ஓரளவு நாணயமான கராஜ் அந்தப் பஞ்சாப்காரனின் கராஜ்தான். ஸ்டியரிங்கில் மெல்லியதொரு உதறல் நேற்றிலிருந்து. அதனைக் காட்டத்தான் பொன்னையா விரைந்து கொண்டிருந்தான். 'நேரங் கெட்ட நேரத்திலை இதென்ன டிரபிக் புளக்..' இவ்விதம் எண்ணியபடி டிரபிக் தடைப்பட்டதற்குக் காரணம் என்னவாகயிருக்குமென் எதிரே நோக்கினான்.

இதற்குள் றோட்டுக் கரையில் சனங்கள் விடுப்பு விண்ணானம் பார்க்கக் கூடத்தொடங்கிட்டுதுகள். இந்த விஷயத்தில் எல்லா மனுஷருமே ஒன்றுதான். எதிரே அவன் பார்வையை மறைத்தபடி கனடா பக்கர்ஸிற்குச் சொந்தமான பெரிய 'ட்றக்'கொன்று நின்றதால் இவனால் ஒழுங்காகப் பார்க்க முடியவில்லை.

றோட்டுக் கரையில் விடுப்புப் பார்த்துக் கொண்டிருந்த சைனாக்காரனொருவனைப் பார்த்து ''ஏ..மேன் ..வட்ஸ் த மாட்டார்? வட்ஸ் கோயிங் ஓன்..." பலமாகக் கத்தினான்.

அதற்கு அந்தச் சைனாக்காரன் தனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் ''பீவ்..எஸ்கேப்..ஸ்லோட்டர்.." என்றான்.

அருகிலிருந்த வெள்ளையனொருவன் சைனாக்காரனின் ஆங்கிலத்தைக் கேட்டுச் சிரித்தான். இவனுக்கும் சிரிப்பாகவிருந்தது. ஆனால் அந்த ஆங்கிலம் கூட விளங்கியது. மாடொன்று ஸ்லோட்டர் ஹவுஸ்ஸிலிருந்து தப்பி வந்து விட்டது என்பதைத்தான் அந்த சைனாக்காரன் அவ்விதம் கூறினான் என்பதும் விளங்கியது.

மரணத்திலிருந்து தப்பிவந்த அந்த இனந்தெரியாத மாட்டின் மேல் ஒருவித பரிதாபம் தோன்றியது. அநுதாபம் படர்ந்தது. காரை வெட்டி றோட்டுக்கரையோரம் நிறுத்தி விட்டு பொன்னையா காரை விட்டிறங்கி வேடிக்கை பார்க்கும் சனங்களில் ஒன்றானான். 'ஸ்ட்ரீட் கார்' செல்லும் இருப்புப் பாதையின் மேல் , சுற்றிவர வேடிக்கை பார்த்தபடி நிற்பவர்களைப்பார்த்து முறைத்தபடி அந்த மாடு நின்றது. அதன் கண்களில் மரண பயம் கவ்விக் கிடந்ததை இவன் உணர்ந்தான். அதைப் பார்க்கப் பாவமாயிருந்தது. பொன்னையாவிற்குக் கவலை தோன்றியது.

உருண்டு திரண்டு கொழுகொழுவென்று வாட்ட சாட்டமாக வளர்ந்திருந்தது. அருகில் சென்று பிடிக்க முனைந்த கனடா பக்கர்ஸ் ஊழியர்களைப் பார்த்து முறைத்தது. முட்டுவது போல் பாசங்கு செய்து முரண்டு பிடித்தது. அருகில் ஒருவரையும் வரவிடாமல் தடுத்து வைப்பதில் ஓரளவு வெற்றி கண்டிருந்தது.

எவ்வளவு நேரத்திற்குத்தான் அதனால், அந்த ஐந்தறிவு உயிரினால், தாக்குப் பிடிக்க முடியும்? 'மட மாடே! மனிதனுடன் போட்டி போட்டு உன்னால் வெல்ல முடியுமா என்ன?'

திடீரென பொன்னையாவிற்குச் சிந்தையில் ஒரு எண்ணம் எழுந்தது.

'இந்த மாட்டின் மனநிலை என்னவாயிருக்கும்?' அருகிலுள்ள ஸ்லோட்டர் ஹவுஸிற்குள் வெட்டுப் படுவதற்காகக் காத்து நிற்கும் ஏனைய மாடுகளின் ஞாபகமும் எழுந்தது. 'இவ்விதம் தப்பிவர இந்த மாடு எவ்வளவு கஷ்ட்டப் பட்டிருக்கும்?'

'கிடைத்த சுதந்திரத்தின் நிரந்தரமற்ற தன்மையைப் பாவம் இந்த மாட்டால் உணரமுடியவில்லை..அதனால்தான் தன்னுயிரைக் காத்துக்கொள்ள கிடைத்த அற்ப சுதந்திரத்தைப் பாதுகாக்க இந்த மாடு வீராவேசத்துடன் முயல்கிறது..'

ஊரில் இருப்பவர்களின் நினைவுகளும் எழாமலில்லை...'இந்த மாட்டைப் போன்ற நிலையில் இருப்பவர்கள் எத்தனை பேர்?..அரைகுறையாகத் தப்பி மீண்டும் அகப்பட்டவர்கள்..தப்புவதற்கு முடியாமல் சமாதியாகிப் போனவர்கள்...'

மீண்டும் கவனம் மாட்டின் மேல் திரும்புகின்றது. இன்னமும் அது மூர்க்கத்துடன் தன்னை நெருங்குபவர்களை எதிர்த்து நிற்கின்றது. யாரும் நெருங்காத சமயங்களில் ஒருவித சோகம் கலந்த பாவத்துடன் அமைதியாக ஒருவித பயத்துடன் நிற்கிறது.

அதன் கண்களிருந்து மெல்ல மெல்ல இலேசாகக் கண்ணீர் வடிகிறது..எதை நினைத்து அழுகிறது? தன் பரிதாபகரமான நிலையை நினைத்தா?தன்னை சமாதியாக்குவதற்குக் கங்கணம் கட்டி நிற்கும் மனிதர்களால் தனக்கேற்பட்ட நிராதரவான நிலையை உணர்ந்தா? ஏன் அது அழுகிறது?

திடீரெனப் பொன்னையாவிற்கு ஒரு எண்ணம் தோன்றுகிறது. 'ஏன் இந்த மாட்டிற்குரிய விலையைக் குடுத்து, இதன் உயிரைக் காப்பாற்றினாலென்ன? ஊரிலையென்றாலும் வீட்டு வளவிலை போய்க் கட்டி வைக்கலாம்...இங்கு எங்கு போய்க் கட்டி வைப்பது..? அப்பார்ட்மென்றிலையா..?அப்படித்தான் காப்பாற்றினாலும் இந்த ஒரு மாட்டைக் காப்பாற்றுவதால் மட்டும் இதன் நிலையில் இருக்கின்ற ஏனைய மாடுகளின் பிரச்சினை தீர்ந்து விடுமா..?'

இதற்கிடையில் யாரோ மாடு டிரபிக்கிற்குத் தடையாயிருப்பதை பொலிஸிற்கு அறிவித்து விட்டார்கள் போலும்.. 'எமர்ஜன்ஸி பிளாஸிங் லைட்'டுடன் 'சைரன்' முழங்க பொலிஸ் காரொன்று விரைந்து வந்து இறங்கியது. இரு பொலிசார் இறங்கினார்கள். கயிரொன்றில் வளையம் செய்து சிறிது நேரம் முயற்சி செய்தார்கள். பலனில்லை. மாடு மிகவும் உறுதியாகவே எதிர்த்து நின்றது. இதற்கிடையில் விஷயத்தை மோப்பம் பிடித்துப் பத்திரிகைக்காரர்கள், தொலைக்காட்சிக்காரர்களென்று கமராக்களுடன் கூடி விட்டனர்.

மாடு தன்னுயிரைக் காப்பதற்கானதொரு போராட்டத்தில், ஜீவமரணப் போராட்டத்திலீடுபட்டிருக்கின்றது. இதை அடக்க, வேடிக்கை பார்க்க, படம் பிடிக்க ஒரு கூட்டம். ஒன்றிற்கும் செயல் பட முடியாத , இயலாத கூட்டம். தானும் அக்கூட்டத்தில் ஒருவன் என்பதை நினைக்கையில் பொன்னையாவிற்குத் தன்மேல் ஒருவித வெறுப்புக்கூடத் தோன்றியது.

தங்கள் முயற்சி சிறிது தோல்வியுற்றதைக்கண்ட பொலிஸார் தங்களிற்கு கூடிக் கதைத்தார்கள். இதற்குள் வீதியில் இரு திசைகளிலும் வாகனங்கள் பெருமளவில் முடங்கத் தொடங்கிவிட்டன.

தொலைவிலிருந்தவர்கள் போக்குவரத்து தடைப்பட்டதன் காரணத்தை அறியாத நிலையில் ஹோர்னகளை மாறிமாறி அடிக்கத் தொடங்கிவிட்டார்கள். நிலைமை கட்டுமீறுவதைப் பொலிஸார் உணர்ந்தார்கள்.

இறுதியில் மாட்டுப் பிரச்சினை ஒரு முடிவிற்கு வந்தது.

ஆறறிவுப் பிராணியின் முன்னால் சுதந்திர வேட்கை நசுக்கப் பட்ட நிலையில் 'ட்ரான்குலைசரா'ல் மயக்கப்பட்டு சாய்ந்த மாட்டைத் தூக்கிய கனடாப் பக்கர்ஸ் ஊழியர்கள் அதனை 'ஸ்லோட்டர் ஹவுஸி'ற்குள் கொண்டு சென்றார்கள்.

ஒருவழியாகப் போக்குவரத்துச் சீர்பட்டது. சனங்கள் ஒவ்வொருவராகக் கலையத் தொடங்கினார்கள்.

பஞ்சாப்காரன் திட்டப் போகின்றானென்ற நினைப்புடன் தன்காரில் பாய்ந்தேறினான் பொன்னையா. கூடவே அடிக்கடி மிருகங்களை வதைப்பதாகக்கூறி வழக்குப் போடும் 'ஹியுமேன் சொசைடி'யின் ஞாபகமும் வந்தது. சிரிப்பு வந்தது.

சிறிது போராடித் தோல்வியுற்ற மாட்டின் நிலைமை அநுதாபத்தை தந்தாலும் அதன் சுதந்திர வேட்கையும் அதற்காக அது போராடிய தீவிரமும் அதன் மேல் ஒருவித பக்தியை, பெருமிதத்தை ஏற்படுத்தியது. சொன்னால் நம்ப மாட்டீர்கள்! அன்றிலிருந்து பொன்னையா மீண்டும் முழுச் சைவமாகிவிட்டான்.
[இச்சிறுகதை ஸ்நேகா பதிப்பகத்தினரால் வெளியிடப்பட்ட 'அமெரிக்கா' தொகுப்பில் இடம் பெற்றுள்ளது. எஸ்.போ மற்றும் இந்திரா பார்த்தசாரதியால் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்ட 'பனையும் பனியும்' சிறுகதைத் தொகுதியிலும் இடம் பெற்றுள்ளது.]

நன்றி: பதிவுகள் யூலை 2000; இதழ் 7. , திண்ணை

சிறுகதை: 1. சீதாக்கா! - வ.ந.கிரிதரன் -
1.
இன்னும் இருள் முழுதாக விலகியிருக்கவில்லை. இலையுதிர்காலம் தொடங்கி விட்டதால் இலேசாகக் குளிர் தொடங்கி விட்டிருந்தது. டொராண்டோ பஸ் நிலையத்தில் பயணிகளின் களை கட்டத் தொடங்கியிருந்தது. மான்ரியால் செல்லும் நண்பனை அனுப்பி விட்டுப் புறப்படுவதற்கு ஆயத்தமான போதுதான் "மன்னிக்கவும். நீ ஸ்ரீலங்கா நாட்டவனா?" என்று ஆங்கிலத்தில் ஆண் குரல் கேட்கவே திரும்பினேன். எதிரே வெள்ளையினத்தைச் சேர்ந்த பஸ் டிரைவரொருவன் நின்றிருந்தான்.

"ஆம். நண்பனே. என்ன விடயம்" என்றேன்.

"நல்லதாகப் போய் விட்டது. நான் மான்ரியாலிருந்து வந்த பஸ் டிரைவர். என்னுடைய பஸ்ஸில் ஒரு ஸ்ரீலங்காத் தமிழ்ப் பெண்ணொருத்தி வந்திருக்கிறாள். அகதியாக வந்தவள். இங்கு அவளுக்கு யாரையுமே தெரியாது. உன்னால் முடிந்தால் உதவ முடியுமா?"

"தாராளாமாக "வென்றேன்.

"மிகவும் நன்றி நண்பனே!" என்றவன் பயணிகள் தங்கியிருக்கும் கூடத்திற்குச் சென்று சிறிது நேரத்தில் சிறிது நேரத்தில் திரும்பி வந்தான்.

"நண்பனே! இந்தப் பெண்ணுக்குத் தான் உன் உதவி தேவை" என்றவாறு அழைத்து வந்த பெண்ணைப் பார்த்த எனக்கு வியப்புத் தாளவில்லை.

"சீதாக்கா" என்று கத்தியே விட்டேன்.

சீதா அக்காவுக்கும் என்னைக் கண்டதில் அளவிடமுடியாத வியப்புத் தான். எதிர்பாராத சந்திப்பல்லவா. மான்ரியால் பஸ் டிரைவருக்கு நன்றி கூறினேன். அவனும் " உனக்கு முன்பே இவளைத் தெரியுமா? நல்லதாகப் போய் விட்டது. எல்லாம் கடவுள் அருள்" என்று கூறி விட்டுச் சென்றான்.

"சீதாக்கா நம்பவே முடியவில்லையே! "யென்றேன்.

"எனக்கும் தான் மாது. பார்த்து எவ்வளவு நாளாச்சு " என்றாள் சீதாக்கா.

சீதாக்கா உண்மையிலேயே நல்ல வடிவு தான். அதிகாலையில் எழுந்து, கோலம் போட்டு. அருகிலிருக்கும் பிள்ளையார் கோயில் சென்று கோயில் ஐயருக்கு வேண்டிய உதவிகளெல்லாம் செய்து வருவதையெல்லாம் வியப்புத் ததும்ப பார்த்துக் கொண்டிருப்பேன். ஊரில் யாருக்கு என்ன உதவியென்றாலும் உதவி செய்யத்
தயங்காத உள்ளம் சீதாக்காவினுடையது. ஆண்பிள்ளையில்லாத குடும்பம். வயதான தாயையும் பார்த்துக் கொண்டு, ஊரிலிருந்த நெசவு சாலையில் வேலை பார்த்துக் கொண்டு, எந்தவிதமான சூழல்களையும் துணிவாக ஏற்றுக் கொண்டு வளையவரும் சீதாக்காவைப் பார்க்கும் போதெல்லாம் பெருமையாகவிருக்கும். சீதாக்காவுக்கு எப்பொழுதுமே துணை நான் தான். நூல் நிலையம் போகும்போது என்னைத் தான் எப்பொழுதும் கூட்டிச் செல்வாள். சீதாக்காவும் என் மூத்த அக்காவும் நல்ல சிநேகிதிகள். இருவருக்குமிடையில் நாவல்களைப் பரிமாறுவது நான் தான். கல்கி, விகடனில் வந்த தொடர்கதைகளை அழகாகக் கட்டி வைத்திருப்பாள். ஜெயகாந்தன், உமாசந்திரன், நா.பார்த்தசாரதி, அகிலன், கல்கி, ஜெகசிற்பியன் நாவல்களென்றால் சீதாக்காவுக்கு உயிர். ஆனால் ..சீதாக்கா பாவம். இவ்வளவு அழகிருந்தும், குணமிருந்தும் அவளுக்குக் கல்யாணம் மட்டும் ஆகவேயில்லை. இந்த ராஜகுமாரியைக் கூட்டிக் கொண்டு போக எந்த ராஜகுமாரன் வரப் போகின்றானோவென்றிருக்கும். நான் ஊரில் இருந்த வரையில் ஒரு ராஜ குமாரனுக்கும் அந்த அதிருஷ்ட்டம் வாய்த்திருக்கவில்லை. எண்பத்து மூன்று கலவரத்தைத் தொடர்ந்து நான் நாட்டை விட்டு வெளியேறி விட்டேன். அதன் பிறகு இப்பொழுதுதான் பத்து வருடங்கள் கழித்து சீதாக்காவைக் காண்கின்றேன்.

"சீதாக்கா நம்பவே முடியவில்லையே" என்றேன்.

"எனக்கும்தான் மாது. நம்பவே முடியவில்லை. நான் நம்புகிற கதிர்காமக் கந்தன் என்னைக் கை விடவில்லை" என்றாள் சீதாக்கா.

"சீதாக்கா எப்ப ஊரிலையிருந்து வந்தனீங்கள்"

"அது பெரியதொரு கதை. ஆறுதலாகச் சொல்லுகிறன். அது சரி நீ எப்ப கனடா வந்தனீ. ஜேர்மனியிலை நிற்கிறதாகவல்லவா கேள்விப்பட்டனான்"

"ஜேர்மனியிலைதான் இருந்தனான். போன வருஷம் தான் இங்காலை வந்திட்டேன். அங்கும் பிரச்சினைகள் தானே. நாங்களிருந்த இடத்திலை நாசிகளின்ற கரைச்சல் வேறு. மற்றது அங்கிருந்தால் 'பேப்பரும்' இலேசாகக் கிடைக்காது "

குடியுரிமைக்கான பத்திரங்களை 'பேப்பர்' என்றுதான் பொதுவாகக் கூறுவது வழக்கம்.

"இங்கே யாரோடை இருக்கிறாய் மாது"

"நானும் ஒரு நண்பனுமாக அபார்ட்மெண்ட் எடுத்து இருக்கிறம். கோப்பி ஏதாவது குடிக்கப் போறீங்களா சீதாக்கா"

இருவருமாக அருகிலிருந்த டோனட் கடையொன்றுக்குச் சென்று காப்பி அருந்தி விட்டு எனது இருப்பிடம் நோக்கிப் பயணித்தோம். பாவம் சீதாக்கா. ஊரில் இருந்த போதெல்லாம அவளுக்கு ஏதாவது உதவிகள் செய்ய வேண்டெமென்று நினைப்பேன். ஆனால் அதற்கான வசதிகள் என்னிடமிருக்கவில்லை. ஆனால் இம்முறை எனக்கு அதற்கான வசதிகள் நிறையவேயிருக்கின்றன. சீதாக்காவுக்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்ய வேண்டுமென மனதினுள் முடிவு செய்து கொண்டேன்.

'டொன்வலிப் பார்க்வே'யில் அதிகாலையென்ற படியால் வாகன நெரிச்சல் அவ்வளவாகவிருக்கவில்லை. மெல்லிய குளிர்காற்றில் விரைவதே சுகமாகவிருந்தது.

"சீதாக்கா நேராக ஊரிலிருந்தா வாறீங்கள்.."

"அது ஒரு பெரிய கதை. நானும் அவருமாக ஊரிலையிருந்து போன மாசம் ஒரு ஏஜெண்ட்டோடை வெளிக்கிட்டனாங்கள். அவரை சிங்கப்பூரிலை விமான நிலையத்திலை நிற்பாட்டிப் போட்டாங்கள். இனி இங்கையிருந்து கொண்டு தான் அவரைக் கூப்பிட முயற்சி செய்ய வேண்டும்"

என்ன! சீதாக்காவுக்குக் கல்யாணம் ஆகி விட்டதா? நிம்மதியாகவிருந்தது.

"சீதாக்கா எப்ப உங்களுக்குக் கல்யாணம் நடந்தது? எனக்குத் தெரியாதே."

"போன வருஷம் தான். அவர் எங்கள் ஊர்ப் பள்ளிக்கூடத்திலை வாத்தியாராகவிருந்தவர். வெளியூர்க்காரர். எங்களுடைய வீட்டிலைதான் சாப்பாடு. அப்ப ஏற்பட்ட பழக்கம் தான். நல்ல மனுஷண்டா மாது"

சீதாக்காவின் முகத்தில் வெட்கத்தின் சாயை படிந்தது.

"ஒன்றுக்கும் கவலைப் படாதையக்கா. எப்படியாவது அவரை இங்கே கூட்டி வந்து விடலாம்"

என்று சீதாக்காவுக்கு ஆறுதல் கூறியபொழுது மனதினுள் எப்படியாவது இம்முறை சீதாக்காவுக்கு உதவி செய்ய வேண்டுமென முடிவு செய்து கொண்டேன். அவளுக்குத் திருமணம் செய்து வைக்க உதவ வேண்டுமென எண்ணியதுண்டு. அதற்கான சந்தர்ப்பங்கள் கிடைக்கவில்லை. ஆனால் இப்பொழுதோ அவளை அவளுடைய கணவனுடன் சேர்த்து வைக்க ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. கட்டாயம் என்னால் முடிந்த உதவிகளைச் செய்ய வேண்டும்.

2.

"சீதாக்கா, இவன் தான் என் 'ரூம்மேட்' சபாபதி. உன்னை மாதிரித்தான் சரியான சாமி பைத்தியம். சபா! சீதாக்கா எங்களுடைய ஊர் தான். பஸ் டேர்மினலிலை தான் சந்தித்தனான். கொஞ்ச காலத்திற்கு எங்களுடன் தான் தங்கப் போகின்றா"

"ஹலோ. உங்களைப் பற்றி இவன் அடிக்கடி கதைப்பான் "

சபாபதிக்கும் சீதாக்காவுக்கும் உடனடியாகவே ஒத்துப் போய் விட்டது.

"மாது! உனக்கு நல்லதொரு நண்பன் வாய்த்திருக்கிறான்" என்று மனம் நிறைந்து பாராட்டினாள்.

சீதாக்கா வந்ததிலிருந்து எங்களுடைய அபார்ட்மெண்ட்டின் கோலமே மாறி விட்டது. அதுவரையில் பிரம்மச்சாரிகளுக்குரிய வகையில் அலங்கோலமாகக் கிடந்த அப்பார்ட்மெண்ட் தலைகீழாக மாறி விட்டது. அபார்ட்மென்டிற்கே ஒருவித வடிவும் ஒழுங்கும் வந்து விட்டது. அதிகாலையிலேயே எழுந்து விடும் சீதாக்கா டேப்பில் எம்.எஸ்.சின் சுப்ரபாதத்தினைப் போட்டு விடுவாள். குளித்து விட்டு எந்த வித விகல்பமுமில்லாமல் குறுக்குக் கட்டுடனேயே உலராத கூந்தல் தோள்களில் புரண்டபடியிருக்க அபார்ட்மெண்ட் முழுக்க சாம்பிராணி புகையை பரப்பி விடுவாள். அதுவரை அழுது வடிந்து கொண்டிருந்த அபார்ட்மெண்ட்டிற்கே ஒருவித லக்சுமிகரக் களை வந்து விட்டது. என்னைவிடச் சபாபதிக்குத் தான் சரியான சந்தோசம். தன்னைப் போலொரு சரியான சாமிப் பைத்தியம் வந்து விட்ட மகிழ்ச்சி அவனுக்கு.

நான் சீதாக்காவை இங்கு அனுப்பிய முகவருடன் தொடர்பு கொண்டு அவளுடைய கணவர் பற்றிய தகவல்களைப் பெறு முயன்றேன். அதில் வெற்றியும் கண்டேன். அவளது கணவன் இன்னும் தன்னுடைய பராமரிப்பில் தான் இருப்பதாகவும், அவனை எப்படியும் கனடா அனுப்புவது தனது கடமையென்றும் அவன் உறுதி தந்தான். சீதாக்காவையும் அவளது கணவனுடன் கதைப்பதற்கு ஒழுங்குகள் செய்தான்.

"இஞ்சேருங்க! நீங்க ஒன்றுக்கும் கவலைப் படாதையுங்கோ. நான் சொல்லுவேனே மாது. அவனும் இங்கு தான் இருக்கிறான். அவனுடன் தான் தங்கியிருக்கிறன். நான் நம்பியிருக்கிற கதிர்காமக் கந்தன் என்னைக் கை விடேல்லை. உங்களையும் கெதியிலை கொண்டு வந்து சேர்த்து விடுவான். மாது. அவர் உன்னோடையும் கொஞ்சம் பேச வேண்டுமாம்"

என்று தொலைபேசியைத் தந்தாள் சீதாக்கா.

"மாது! மெத்தப் பெரிய நன்றி. நீங்க செய்த உதவியை மறக்க மாட்டோம்" என்று அவளது கணவன் மன நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தான்.

"நீங்கள் ஒன்றுக்கும் கவலைப் படாதீங்கோ அங்கிள். எப்படியும் கெதியிலை இங்கை வந்து விடுவீங்கள். சீதாக்காவைப் பற்றிக் கவலையே பட வேண்டாம்" என்று அவருக்கு உறுதியளித்தேன்.

3.
நாட்கள் சில விரைவாக சென்று மறைந்தன. மாதங்கள் சிலவும் கடந்து சென்றன. சீதாக்காவின் கணவர் விடயத்தில் இன்னும் முன்னேற்றம் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. இரண்டாம் முறையும் ஏதோ தடங்கல். சீதாக்கா முகத்திலும் சில வேளைகளில் கவலை படரத் தொடங்கியது.
"சீதாக்கா! ஒன்றுக்கும் கவலைப் படாதீங்கோ. எப்படியும் அவர் கெதியிலை வந்து விடுவார்" என்று ஆறுதல் கூறினேன்.

ஏன் தான் கடவுள் சீதாக்காவை இப்படிப் போட்டுச் சோதிக்கின்றாரோ என்றிருக்கும். இதற்கிடையில் எனக்கும் ஊரில் திருமணத்திற்கு ஏற்பாடுகள் நடந்து முடிந்திருந்தன. பெண்ணைப் பார்ப்பதற்காக என்னைக் கொழும்பு விரைவில் வரும்படி அக்கா கடிதம் போட்டிருந்தா. கனடா மாப்பிள்ளையென்றபடியால் கொழுத்த சீதனாமாம். பெட்டையும் நல்ல வடிவாம். சிவப்பாய் தக்காளிப்பழம் மாதிரி. தமிழ்த் திரைப்படக் கதாநாயகர்கள் மாதிரி கனவுகளில் மிதக்க ஆரம்பித்தேன். இவ்விதமாக நாட்கள் சென்று கொண்டிருந்த சமயத்தில் தான் நான் சபாபதியிலேற்பட்டிருந்த மாற்றத்தினை அவதானிக்கத் தொடங்கினேன். அடிக்கடி ஊர் சுற்றிக் கொண்டிருந்தவன் இப்பொழுதெல்லாம் அநேகமாக அப்பார்ட்மென்டே கதியாகக் கிடக்கத் தொடங்கினான். அதிகாலையே சீதாக்காவுடன் சேர்ந்து எழுந்து விடத் தொடங்கினான். குறுக்குக் கட்டுடன் சாம்பிராணித் தட்டுடன் வரும் சீதாக்காவின் மேல் அவனது கண்கள் இரகசியமாக மேயத் தொடங்கியதைத் தற்செயலாக அவதானித்தேன். ஓரிரவு வீடு அபார்ட்மெண்ட் திரும்பிய பொழுது வீடியோவில் தமிழ்த் திரைப்படமொன்று ஓடிக் கொண்டிருந்தது. சீதாக்கா சோபாவில் சாய்ந்து நித்திரையாகிக் கிடந்தாள். படம் பார்த்துக் கொண்டிருந்தவள் அப்படியே தூங்கிப் போயிருக்க வேண்டும். அவளது சேலை கூட இலேசாகி மார்பிலிருந்து விலகிக் கிடந்தது. இதனை உணராமல் தூங்கிக் கிடந்தவளை வெறித்துப் பார்த்தபடி நின்றிருந்த் சபாபதி என்னை கண்டதும் சிறிது திகைத்தவனாகத் தனது பார்வையினை மாற்றினான். எனக்கு முதல் முறையாகக் கவலையேற் பட்டது. சீதாக்காவுக்கு இவனாலேதாவது மனக் கஷ்ட்டங்களேற்பட்டு விடக் கூடாதேயென்று மனம் தவித்தது. சபாபதி நல்லவன்.ஆனாலும் பருவக் கோளாறு. தவறிழைக்க மாட்டானென்று பட்டது. ஆனால் ..எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்குமோ? சீதாக்காவை அவளது கணவருடன் சேர்த்து வைக்கும் மட்டும் அவளைப் பாதுகாத்து வைக்க வேண்டுமேயென்று மனது கிடந்து அடித்துக் கொண்டது.
இதற்கெல்லாம் முடிவு....சபாபதியை வெளியே அனுப்புவது தான். இவன் என் நீண்ட கால நண்பனல்லவே, கனடாவிற்கு வந்த இடத்தில் அறிமுகமானவன் தானே. ஒரு நாள் அவனைத் தனியாக அழைத்துக் கொண்டு அருகிலிருந்த டோனட் கடைக்குச் சென்றேன்.

"இங்கை பார் சபா. உன்னோடைத் தனியாக ஒரு விசயம் பேச வேண்டும்"

'என்ன? ' என்பது போல் அவன் என்னை நோக்கினான்.
"இஞ்சை பார் சபா. நான் சுத்தி வளைக்க விரும்பவில்லை. இனியும் நீ என்னுடன் இருப்பதை நான் விரும்பவில்லை. சீதாக்கா போகும் மட்டுமாவது நீ என்னுடனிருப்பதை நான் விரும்பவில்லை. உனக்கு விளங்குமென்று நினைக்கிறேன். இந்த அபார்ட்மெண்டுக்கு நீ வரும் போதே ஒரு மாதம் நிற்கிறனென்று தான் நீ வந்தனீ. நானும் விரைவிலை கல்யாணம் செய்யவிருக்கிறன். அதன் பிறகு என்னுடைய மனுசியும் வந்து விடுவாள். நீ வேறை அபார்ட்மெண்ட் பார்க்கிறது நல்லது..."

சபாபதி இதற்கேதும் மறுப்புத் தெரிவிக்காதது எனக்கு ஆச்சர்யமாகவிருந்தது. அடுத்த வாரமே அவன் இடம் மாறி விட்டான். சீதாக்காவுக்குக் கூட வியப்பாகவிருந்தது. "ஏன் கெதியிலை மாறிவிட்டான். உங்களுக்கிடையிலை ஏதாவது பிரச்சினையோ?' என்று கேட்டாள்.

4.
சபாபதியின் அமைதிக்கான காரணம் விரைவிலேயே விளங்கி விட்டது. அபார்ட்மெண்ட் மாறிய வேகத்திலேயே அவன் எனக்கும் சீதாக்காவுக்குமிடையில் தொடர்பு இருப்பதாக கதையினைப் பரப்பி விட்டான். நான் இதனைக் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. இவன் இவ்வளவு நஞ்சு மனம் கொண்டவனாக இருப்பானென்று நான் கனவில் கூட நினைத்திருக்கவில்லை. எனக்கு என்னைப் பற்றிக் கவலையேதுமில்லை.ஆனால் இவற்றால் சீதாக்காவுக்கு ஏதாவது பிரச்சினைகளேதாவது வந்து விடக் கூடாதேயென்று மனம் கிடந்து தவித்துக் கொண்டது. இதற்கு என்ன செய்யலாமென்று மூளையைப் போட்டுக் குடைந்தது தான் மிச்சம். இதற்கிடையில் இதன் முதலாவது விளைவாக அக்காவின் கடிதம் வந்திருந்தது.

" தம்பி, உனக்குப் பேசிய கல்யாணம் முறிந்து விட்டது. உனக்கும் எங்களுடைய சீதாக்காவுக்கும் தொடர்பாமென்று யாரோ கதை கட்டி விட்டிருக்கிறாங்கள் போலை. அவங்களுடைய காதுகளுக்கும் அந்தக் கதை போய் விட்டது. இந்தச் சம்மந்தம் வேண்டாமென்றிட்டாங்கள். நான் சொல்லுறனென்று குறை நினைக்கதையடா. பனை மரத்தினடியில் நின்று பால் குடிச்சாலும் கள்ளு குடிக்கிறதாத் தானிந்த உலகம் சொல்லும். உன்னை எனக்குத் தெரியும். சீதாவை எனக்குத் தெரியும். ஆன இந்த உலகத்துக்கு இதெல்லாம் விளங்கவாப் போகுது. நீ சீதாவுக்குத் தனியாக அபார்ட்மெண்ட் பார்த்து வைக்கிறதுதான் உனக்கும் நல்லது. அவவுக்கும் நல்லது. அவளின்ற புருசனுக்கும் இந்தக் கதை போய் ஏதாவது பிரச்சினை வரக் கூடாது பார்"

இவ்விதம் எழுதியிருந்தாள். எனக்குக் கவலை கவலையாகவிருந்தது. சீதாக்காவை நினைத்தால் தான் பாவமாயிருக்கு. பாழாய்ப்போன் சீதனப் பிரச்சினையால் தள்ளிப் போய்க்கொண்டிருந்த அவளுடைய நல்ல காலம் அவளைப் புரிந்து கொண்ட ஒரு இராமன் அவளுக்குக் கிடைத்திருக்கிறான். சீதாப் பிராட்டியையே இந்தப் பாழாய்ப் போன ஊர் விட்டு வைக்கவில்லையே. அக்கினி குளிக்கவல்லவா வைத்து விட்டது. பாவம் சீதாக்கா. இவளை மட்டும் சும்மா வைத்து விடுமா?

5.
அன்று வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த பொழுது ஒரு முடிவுடன் வந்து கொண்டிருந்தேன். என்னுடன் வங்கியில் வேலை பார்க்கும் சக நண்பியான யோகமாலா அவளும் தாயுமாகத் தான் அண்மையில் வாங்கிய 'கொண்டோ'விலையிருக்கிறாள். அவளுடன் இப்பிரச்சினை பற்றிக் கதைத்ததில் அவள் சீதாக்காவை அவள் கணவர் வரும் மட்டும் தன்னுடன் வந்து தங்கியிருக்க உதவுதாக உறுதியளித்தாள். அதற்குப் பதிலாக என்னால் முடிந்த அளவுக்கு அவளுக்கு வாடகை தருவதாக நானும் உறுதியளித்தேன். இது பற்றி சீதாக்காவுடன் கதைக்க வேண்டுமென்று முடிவு செய்தேன். எப்படித் தொடங்குவது என்பது தான் தெரியவில்லை. ஒரு களங்கமில்லாத நட்புக்குக் கூடக் களங்கம் கற்பித்து விடுகின்றதே இந்த உலகம். ஊரில் தான் பிரச்சினை என்று வந்தால் இங்கும் நாட்டு நிலைமகளால் ஓடி வந்த சீதாக்காவுக்கு உதவக் கூட முடியாமலிருக்கிறதே.

அபார்ட்மெண்ட் வந்த எனக்கு முதலில் அதிர்ச்சி காத்திருந்தது. வழக்கமாக வந்து கதவைத் திறக்கும் சீதாக்காவைக் காணவில்லை. அபார்ட்மெண்ட் இருளில் மூழ்கிக் கிடந்தது.

லைற்றைப் போட்டேன். சீதாக்காவைக் ஓரிடத்திலும் காணவில்லை. அப்பொழுதுதான் மேசையில் விரித்து வைக்கப் பட்டிருந்த கடிதத்தினை அவதானித்தேன். அவசரமாக எடுத்துப் பிரித்தேன். சீதாக்கா தான் எழுதியிருந்தாள்.

"மாதவா! நான் இப்படி சொல்லிக் கொள்ளாமல் போவதற்காகக் கோபிக்க மாட்டாயென்று நினைக்கிறேன். இன்று என்னுடைய கணவர் சிங்கப்பூரிலிருந்து போன் பண்ணியிருந்தார். அப்பொழுதுதான் உன்னையும் என்னையும் சேர்த்துக் கதை கட்டியிருந்த விசயம் பற்றிக் கூறினார். அவரது கவலையெல்லாம் உன்னைப் பற்றித் தான். அவருக்கு என்னைப் பற்றி நல்லாத் தெரியும். இந்தக் கதைகளைப் பற்றியெல்லாம் கவலைப் பட மாட்டார். எனக்கு இப்பிடியொரு நல்ல புருசன் கிடைத்தது கதிர்காமக் கந்தனின்ர அருளால் தான். உன்னுடைய அக்காவும் இன்று பகல் போன் பண்ணியிருந்தா. அப்பத் தான் எனக்கு உன் கல்யாணம் நின்ற விசயமே தெரியும். நான் இங்குள்ள சுப்பர்மார்க்கட்டிலை அடிக்கடி சந்திக்கிற மட்டக்களப்புப் பெட்டையொன்று தனியாத் தான் அபார்ட்மெண்ட் எடுத்துத் தங்கியிருக்கிறா. அவ ஒவ்வொரு முறை சந்திக்கிற போதும் தன்னுடன் வந்து விடும்படி கேட்கிறவ. அவவுடன் போவதாக முடிவு செய்து விட்டேன். என்னாலை உனக்கு வீணாகப் பிரச்சினைகளேதாவது வந்து விடக் கூடாது பார். உன்னுடன் நேரிலை இதை கூற எனக்குத் துணிவில்லை. அதுதான் கூறாமலே போகின்றேன். நான் உனக்குப் பிறகு ஆறுதலாகப் போன் எடுக்கிறேன்...இப்படிக்கு... சீதாக்கா" என்றிருந்தது.

தொப்பென்று சோபாவில் போய்ச் சாய்ந்தேன். ஊரில் இருந்த மட்டும் ஒரு ராஜகுமாரி போல் வளைய வந்து கொண்டிருந்த சீதாக்காவுக்கு உதவ முடியவில்லையே என்று வருத்தமாக இருக்கும். அன்னிய நாட்டிலாவாது ஒரு சந்தர்ப்பம் வந்ததேயென்று சந்தோசப் பட்டால் அதற்கும் கொடுத்து வைக்கவில்லையேயென்று கவலையாகவிருந்தது. நாட்டு நிலைமைகளால் உறவுகள் பிரிபட்ட நிலையில் வந்திருந்த சீதாக்காவுக்கு உதவுதற்குக் கூட இந்தப் பாழாய்ப்போன சமுதாயம் விட்டு வைக்க மாட்டெனென்கிறதே. எத்தனை நாட்டுக்குத் தான் புலம் பெயர்ந்து போயென்ன? புலன் பெயர்ந்தோமா?

நன்றி: திண்ணை, பதிவுகள்.
'சீதாக்கா' சிறுகதை பற்றிப் பரிமாறப்பட்ட கருத்துகள் கீழே தரப்பட்டுள்ளன.

அன்புள்ள கிரிதரன், திண்ணை மின்னிதழில் உங்களுடைய சீதாக்கா கதையைப் படித்தேன். மிக நன்றாக இருந்தது. கடைசி வரியில் கேட்கப்பட்ட கேள்வி சிந்திக்கத்தக்கது. பாராட்டுக்கள். அன்புடன் மதுரபாரதி

"சீதாக்கா": உலகின் நல்ல மனிதர்களை; நற்சிந்தனைகளை என்று தன் "சீதாக்கா" கதையில் காட்டியிருக்கும் வ.ந.கி. இக்கதையை எழுதிய நேரத்தில் கொஞ்சம் உறங்கியிருந்தால் அவர் உடல் நலத்திற்கு நன்மையளித்திருக்கும். அயோக்கியனாகச் சித்தரிக்கப் பட்டிருக்கும் அறை நண்பனைத் தவிர மற்றெல்லாப் பாத்திரங்களும் சுத்த யோக்கியர்களாக சிந்திக்கிறார்கள். அப்படியானால் இன்றைய சமூகத்தில் இந்த யோக்கியர்களைக் காண்பதே அரிதாகி விட்டதா? கதை சொல்லியுடனோ அல்லது அறை நண்பனுடனோ சீதாக்கா ஏன் உறவுவைக்கக் கூடாது? "கண்காணிப்புச் சமூகம்" என்கிற "தற்கற்பிதக் தனங்கள்" எல்லாம் மீண்டும் மீண்டும் விலங்கிடவே பயன்படலாம். பாதை மாறிகள், அயோக்கியர்கள், எதிரோடிகளுக்கு உள்ள தற்துணிச்சல் இல்லாததற்கு யோக்கியர்கள் கவலை கொள்ளவெண்ண்டும். வ.ந.கி. யின் எழுத்து நடையில் மாற்றமிருக்கிறது. கதையின் ஓட்டம் தடையற்று வழுக்கிச் செல்கிறது. கருவின் அழுத்தங்கள் கூடுகின்றபோது நல்ல கதைகளை வ. ந.கி. யால் எழுதமுடியும்! -செங்கள்ளுச் சித்தன் (திண்ணை விருந்தினர் பக்கத்தில்)-

சித்தரின் திண்ணை படைப்புகள் பற்றிய கருத்துகளிற்காக நன்றிகள். சீதாக்கா பற்றிய அவரது கருத்துகளில் 'சீதாக்கா ஏன் கதை சொல்லியுடன் அல்லது நண்பனுடன் உறவு வைத்துக் கொள்ளக் கூடாது?' எனக் கேள்வியொன்றையும் எழுப்புகின்றார் சித்தர்? ஏன் சித்தர் இவ்விதம் கேள்வி எழுப்புகின்றார்? 'சொம்பு போல் குடிவைக்குள்ளே சோறு போல் கொதிக்கும் கள்'ளை மாந்திய மயக்கத்தில் அவர் இவ்விதம் கேள்வி கேட்கின்றாரோ நாமறியோம்? ஆனாலும் அந்தக் கேள்வியின் அரத்தமற்ற தன்மையினை யாம் புரிவோம். ஒரு பெண் என்றால் அவள் இன்னொரு ஆணுடன் புணர்வதைத் தான் பலர் தவறாகப் பெண் உரிமையென விளங்கிக் கொண்டிருக்கின்றார்கள் பலர் என்பது போல் எனக்கொரு சந்தேகம். சித்தருக்கும் அவ்விதமொரு எண்ணப் பாங்குள்ளதோ தெரியவில்லை. இந்தக் கதையில் வரும் சீதாக்கா ஒரு இரக்கத்திற்குரிய பாத்திரம். சமூகத்தில் நிலவுகின்ற சீதனப் பிரச்சினையால் அழகிருந்தும் குணமிருந்தும் இவளது கல்யாணம் பல வருடங்களாகத் தடைப்பட்டு விட்டிருந்ததொரு நிலையில் புலம் பெயர்ந்தவளையும் சோதனைகள் பல வடிவங்களில் தொடர்கின்றது? அன்புக்குரிய கணவனை இன்னுமொரு நாட்டில் இழந்த நிலையில் ஆதரவற்றதொரு சூழலில் அன்னிய நாட்டில் புகல் தேடும் இவளது நிலையினை உணர்ந்து கொள்ளாமல் எதற்காக இவளை இவ்விதமானதொரு கோணத்தில் சித்தர் பார்க்கின்றாரோ? பெண் என்றால் அவள் வெறும் புணர்விற்குரியதொரு பண்டம மட்டும் தானா? இக்கதையில் வரும் சீதாக்கா உண்மையில் கொடுத்து வைத்தவள். உண்மையில் இது போன்ற பல உண்மைச் சம்பவங்களில் பெண்கள் பலர் சீரழிக்கப் பட்டிருப்பதையே அவர்களது குடும்பங்கள் சிதறிக்கப் பட்டிருப்பதையே காணமுடிகின்றது. இவையெல்லாம் பெண்களை வெறுமனே பாலியல் தேவைகளைத் தீர்ப்பதற்குரிய பண்டங்களிலொன்றாகக் கருதி அணுகியதால் வந்த வினைகளென்பது எனது கருத்து. ஆனால் மேலுள்ள கதையில் வரும் சீதாக்கா கொடூர சிந்தையுள்ளதொரு கணவனிடமிருந்து விலகியோடி வந்து இன்னுமொரு துணையினைத் தேடுபவளாக இருந்து அதனை மறுத்திருந்தால் சித்தர் கூறுவதில் நியாயமிருக்கக் கூடும்? - மாயவன் -('திண்ணை' விருந்தினர் பகுதியில்)

அம்பி மாயா! சித்தன் "சீதாக்கா" குறித்து எழுதியதில் 50% சரியென்றே அடியேனுக்குப் படுகிறது.ஆனாலும் பெண்ணுரிமைப்போர் என்பதை கட்டற்ற பாலுறவாகவும், எதுக்கெடுத்தாலும் ஆண் சொல்வதை எதிர்க்கவேண்டும் என்றும், இன்னும் எத்தனையோ வல்லடிவழக்குகளாகவும் ப்ரிந்துவைத்துக்கொண்டு செயற்படும் நாரீமணிகளையும், அவர்தம் பக்கவாத்தியங்களையும் நினைக்க சிரிப்புத்தான் வருகிறது..!இதே போல இலக்கியத்தில் ஒரு கோஷ்டி இருக்கிறது. ஒரு மாஜிக்கல் கதை, ஒரு பின்நவீனக்கதை, ஒரு ஒருபாலுறவுக்கதை, என்று செருப்புக்கேற்ப காலைத் தறிப்பவர்கள் காட்டும் சர்க்கஸ் பெரிய தொந்தரவு. மற்றும் உன் "சீதாக்கா" கதையை ஒரு பாட்டியோ, அல்லது வேலை இல்லாமல் வீட்டில் இருக்கும் ஒரு கதைகாவியோ ரெலிபோனில் மற்றவருக்கு அளக்கக்கூடும்.... இதில் கதையம்சம் இருக்கிறது கலைத்துவமோ, பாத்திரங்களின் பன்முக வெளிப்பாடுகளோ ஒன்றுமேயில்லையே. சற்றுச் சிந்தித்துப்பார் மகனே!! -பிரியா (திண்ணை விருந்தினர் பகுதியில்)-

சீதாக்கா கதை புலம் பெயர்ந்தாலும் புலன் பெயரவில்லை என்பதையே அதன் மையக் கருத்தாக எடுத்தாண்டுள்ளார் ஆசிரியர். பெண்ணியமோ, பெண் பிரச்சனைகளோ பேசுவதாக இல்லை அந்த கதை. அப்படிப் பேச முயன்றிருந்தால் சீதாக்காளின் சிந்தனையிலிருந்து கதை வந்திருக்கும். இது கதை சொல்லி (ஓர் ஆண்) அவர் பார்வையிலிருந்தே வந்திருக்கின்றது. சீதாக்கா பார்வையிலிருந்து வந்திருந்தால் சீதாக்கா தன் மேல் தவறான பார்வை செலுத்தும் அறைத் தோழனை தானே உணர்ந்து தனது நடவடிக்கையைச் செய்திருப்பாள். சீதாக்கா எல்லாவற்றுக்கும் ஆணை எதிர்பார்த்து இருப்பவளாகச் சித்தரித்திருக்க மாட்டர். புலம் பெயர்ந்தாலும் புலன் பெயரவில்ல என சொல்ல வந்த விசயத்தில் ஆசிரியர் வெற்றி கண்டிருக்கிறார். ஆனால் அதில் வரும் பெண் உணர்வுகள் மறைக்கப்பட்டது வருத்தமே -திலகபாமா ( சிவகாசி)-

சீதாக்கா எல்லாவற்றுக்கும் ஆணை எதிர்பார்த்து இருப்பவளாகச் சித்தரித்திருக்க மாட்டர்.' எனத் திலகபாமா கூறுவது தவறு.
இக்கதையில் வரும் சீதாக்கா இறுதியில் தனித்தே முடிவு எடுக்கின்றாள். அவ்விதம் அவள் எடுக்கும் முடிவு அவளாகவே எடுக்கும் முடிவு. அதற்குக் கூட அவளுக்கு இன்னுமொரு பென்ணே உதவுகின்றாள். எந்த வொரு ஆணையும் சார்ந்து அவளது முடிவு இருக்கவில்லையே. அதே சமயம் திலகபாமா கதை 'புலம் பெயர்ந்தும் புலன் பெயராத' தமிழ் மக்களின் நிலையினைக் கூறுவது எனக் கூறுவதும் சரிதான். அதே சமயம் பிரியர் படைப்பு பற்றிக் கூறுவதில் எனக்கு உடன்பாடில்லை. எந்தவொரு படைப்பிலுமே முழுமை இல்லை. இயற்கையின் படைப்பான எம்மிலும் தான். ஆனால் மனிதர் படைக்கும் எழுத்துப் படைப்புகளில் மட்டும் பலர் முழுமையைத் தேட விளைகின்றார்கள். ஒரு படைப்பு பல்வேறு காரணங்களுக்காக புரியப்படலாம். சுவைக்கப் படலாம்.சில படைப்புகளில் கதையமசம் சிறந்திருக்கலாம். சிலவற்றில் அழகியல் அமசம் சிறந்திருக்கலாம். சிலவற்றில் கூறப்படும் பொருள் சிறந்திருக்கலாம். ஆனால் ஒரு படைப்பில் எல்லாமே முழுமையாக , அனைவரது பார்வையிலும், அமைந்து இருப்பதில்லை. ஒருவருக்கு அவ்விதம் அமைந்திருப்பதாகப் பட்டால் இன்னொருவருக்கு அவ்விதம் அமைந்திருப்பதில்லை. சித்தரிற்கு அதன் நடை பிடித்திருக்கின்றது. பிரியருக்கு அதில் கதையம்சம் இருப்பதாகப் படுகின்றது. திலகபாமாவுக்கு அது கூற வந்த பொருள் பற்றியும் அதன் வெற்றி பற்றியும் ஒருவித கருத்து இருக்கின்றது. மதுரபாரதிக்கு கதை 'நன்றாக' வந்திருப்பதாகப் படுகின்றது. உதாரணமாகப் பிரியருக்கு ஆழ்வார் பிரசுரங்களில் அளவற்ற பிரியம் இருக்கும். ஆனால் அனவருக்கும் அவ்வாறே இருப்பதில்லையே. இந்நிலையில் இவ்வுலகில் 'முழுமையற்ற படைப்பினில் முழுமையைத் தேடும் மூடர் நாம்' என்று படுகின்றது. அதற்காக 'சீதாக்கா' ஒரு சிறப்பான கதையென்று வரிந்து கட்டிக் கொண்டு வாதாட நான் இங்கு வரவில்லை. அதில் பலமுமிருக்கலாம். பலவீனமுமிருக்கலாம். ஆனால் ஒரு சிலரையாவது அது பற்றிக் கருத்துக் கூற அது நிர்ப்பந்தித்துள்ளது. அந்த வகையில் அதற்கும் ஒரு வெற்றியுண்டு என்றே படுகின்றது. -மாயவன் -(திண்ணை, விருந்தினர் பகுதியில்)

Dear Giritharan, I read your "Seetha Acca" short story and am very much impressed. You have written nicely, what is happening in our society in the western world today. With regards, Rajah. (பதிவுகள் கடிதங்களிலிருந்து)
நன்றி: பதிவுகள் மார்ச் 2002; இதழ் 27. , திண்ணை