Friday, July 20, 2007

தொடர் நாவல்: குடிவரவாளன் - வ.ந.கிரிதரன் -

அத்தியாயங்கள் 18 & 19!அத்தியாயம் பதினெட்டு: ஹென்றியின் சாமர்த்திய(ம். / மா?)

நான்காவது வீதி மேற்கு , ஏழாவது அவென்யு, கிறிஸ்போபர் வீதி ஆகிய வீதிகள் சந்திக்கும் சந்திப்பிலுள்ள நடைபாதையொன்றில் நடைபாதை வியாபாரம் செய்து கொண்டிருந்த ஹென்றியை முதலில் ஹரிபாபுதான் அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தான்: "இவன்தான் நான் கூறிய ஹென்றி. எஸ்கிமோ ஹென்றி." அவ்விதம் கூறியபொழுது ஹரிபாபுவின் வதனத்தில் இலேசானதொரு பெருமிதம் கலந்த முறுவலொன்று ஓடி மறைந்ததுபோல் இளங்கோவுக்குப் பட்டது. அந்தப் பெருமிதம் அவனது குரலிலும் தொனித்ததாகவும் பட்டது. ஒருவேளை 'பார்த்தாயா என் சாமர்த்தியத்தை, மராத்தியனான நான் கண்டம் கண்டம் விட்டுக் கண்டம் பாய்ந்து வந்து, இங்கு இந்த நாட்டின் ஆதிக்குடிகளிலொருவனைக் கட்டி வைத்து வேலை வாங்குகின்றேனே! என்ன நினைத்துக் கொண்டாய் என்னைப் பற்றி..'யென்று அவன் கருவத்துடன் உள்ளூர நினைத்துக் கொண்டிருக்கலாமோவென்று இளங்கோ தனக்குள்ளே எண்ணிக் கொண்டான். அதே சமயம் குள்ளமாகவும், குட்டையான கால்களுடனும் அந்த எஸ்கிமோ இருந்தான். இளங்கோவுக்கு அவனை அங்கு பார்த்ததும் ஆச்சரியமாகவிருந்தது. அந்த ஆச்சரியம் தனது குரலில் தொனிக்க வேடிக்கையாக, "எஸ்கிமோவான உனக்கு இங்கென்ன வேலை. துருவத்தை விட்டு நீயும் புலம்பெயர்ந்து விட்டாயா? உன்னையும் நாகரிக மோகம் பற்றிக் கொண்டு விட்டதாயென்ன?" என்றான். அதைக் கேட்டதும் எஸ்கிமோ ஹென்றியும் இலேசாகச் சிரித்துக் கொண்டான்: "எத்தனை நாள்தான் துருவத்திலேயே சஞ்சரிப்பது. குளிர் அலுத்து விட்டது. துருவம் விட்டுத் துருவமாகப் பறவைகளே வருடா வருடம் இடம்மாறும்போது மனிதனான நான் மாறுவதிலென்ன தப்பு? ஒரு மாறுதலுக்காக இந்த மாநகருக்கு வந்தவனை இந்த ஹரிபாபு இவ்விதம் வளைத்துப் பிடித்துக் கொண்டான்" என்றும் சிறிது மேலதிகமாகத் தகவல்களைப் பகிரிந்தும் கொண்டான்.

இளங்கோ: "என்ன எஸ்கிமோவுக்குக் குளிர் அலுத்துவிட்டதா? ஆச்சரியமாகவிருக்கிறதே.."

"இதிலென்ன ஆச்சரியம். என்னைப்போலிங்கு இந்த மாநகரை நோக்கிப் பல எஸ்கிமோக்கள் படையெடுத்திருக்கின்றார்கள்" என்ற எஸ்கிமோ ஹென்றியைப் பார்த்து இப்பொழுது அருள்ராசா இடைமறித்திவ்விதம் கேட்டான்: "நானறிந்தவரையில் எஸ்கிமோக்களால் குளிர்பிரதேசங்களைக் கடந்து வேறிடங்களுக்குச் சென்று வாழ அவர்களது உடலமைப்பு இடம் கொடுக்காதென்றல்லவா இதுவரையில் எண்ணியிருந்தேன். உன்னைப் பார்த்தால் அவ்விதம் தெரியவில்லையே"

இதற்கு ஹென்றியின் பதில் அறிவுபூர்வமானதாகவும், தர்க்கச் சிறப்பு மிக்கதாகவுமிருந்தது: "வெப்பமான காலநிலையில் சஞ்சரித்த உன்னால் இந்தக் குளிர்பிரதேசத்திற்கு வந்து வாழ முடியுமென்றால் இந்தக் கண்டத்திலேயே பிறந்து வளர்ந்த எனக்கு இதே கண்டத்தின் இன்னுமொரு பகுதியில் வசிப்பதிலென்ன கஷ்ட்டமிருக்க முடியுமென்று நீ நினைக்கின்ன்றாய்?"

இப்பொழுது ஹரிபாபு இடைமறித்து உரையாடலினைத் தொடர்ந்தான்: "ஹென்றி நல்ல சுறுசுறுப்பான கடுமையான உழைப்பாளி. இவனுடன் ஒரு சில மணித்தியாலங்கள்வரையில் நீங்களிருவரும் இருந்து இவன எவ்விதம் வியாபாரத்தினை நடத்துகின்றானென்று பார்த்துவிட்டு வாருங்கள். அதன் பின்னர் உங்களுக்கும் இந்த வியாபாரத்தை இவனைப் போல் தனியாக இன்னுமொரு நடைபாதையில் நடத்தலாமென்று நம்பிக்கையேற்பட்டால் உங்களுக்கும் நாளை முதல் இவனைப் போல் இன்னுமொரு இடத்தை ஏற்பாடு செய்து
விடுகின்றேன்."

இதன்பின்னர் ஹென்றி பக்கம் திரும்பிய ஹரிபாபு இவ்விதமாகக் கட்டளையிட்டான்: "ஹென்றி, இவர்களிருவருக்கும் நமது வியாபாரத்தைச் சிறிது விளக்கி விடு. நடைபாதையிலிருந்து எல்லோராலும் வியாபாரம் செய்து விட முடியாதல்லவா" . அதன்பின்னர் அவர்களிடம் விடைபெற்றுக் கொண்டு ஹரிபாபு தன்னிருப்பிடத்துக்குச் சென்று விட்டான். இப்பொழுது இளங்கோவும், அருள்ராசாவும் ஹென்றியுடன் தனித்து விடப்பட்டனர்.

ஹென்றி முக்கியமாக விறபனைக்கு வைத்திருந்த பொருட்களாகப் பித்தளையினாலான பல்வகைச் சிற்பங்கள், பூஜை வழிபாடுகளுக்குரிய குத்து விளக்கு போன்ற உபகரணங்கள், தேநீர் அருந்துவதற்குரிய கிண்ணங்கள் போன்ற பல்வகைச் சமையற் பாத்திரங்கள், இன்னும் பல பித்தளைப் பொருட்கள் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். அது தவிர பல்வேறு வகைகளினான குளிர்காலத்துக்குரிய ஆடை வகைகள், மேலும் ஊரில் குறவர்/குறத்தி விற்பார்களே அத்தகைய பாசிமணி , ஊசிமணிமாலை போன்ற ஆபரண வகைகளெனப் பலவகைப் பொருட்கள் அவனிடம் விற்பனைக்கிருந்தன. நடைவாசிகள் பலர் அவ்வப்போது அவன் விரித்திருந்த கடையை ஆவலுடன் பார்த்தார்கள். சிலர் பேரம்பேசி சில பொருட்களை வாங்கியும் சென்றார்கள். ஒரு பருத்த வெள்ளைக்காரப் பெண்மணி தன் காதலனான ஒரு கறுப்பினத்து வாலிபனுக்கு நல்லாயிருக்குமென ஊசிமணி மாலையொன்றை வாங்கிப் பரிசளித்தாள். அவனும் பல சிணுங்கல்களுக்குப் பின்னர் அவளை முத்தமிட்டுத் தன் நன்றியினைத் தெரிவித்துக் கொண்டு அந்த மாலையினை வாங்கியணிந்து கொண்டான். இவ்விதமாகத் தன வியாபாரத்திலும் கவனமாகவிருந்து கொண்டு அவ்வப்போது இவர்களுடனும் உரையாடலினைத் தொடர்ந்து கொண்டிருந்தான் ஹென்றி. இளங்கோ ஹென்றியின் வியாபாரதிறமைகளையும் அவதானித்தான். அவன் தன் பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு விறபதற்குக் கையாளும் உரையாடற் தந்திரங்களையும் அவதானித்தான்.

இதே சமயம் அருள்ராசாவும் இளங்கோவும் அவ்வப்போது தமக்குள்ளும் தமிழில் உரையாடினார்கள். அருள்ராசாவுக்கோர் ஐயமேற்பட்டது."இளங்கோ, உன்னாலை இப்படி விற்க முடியுமென்று நினைக்கிறியா?"

இதற்கு இளங்கோ "விற்கிறதுக்குக்கென்ன. அவ்வளவு கஷ்ட்டமாகத் தெரியேலையே. எனக்கென்றால் செய்யலாம் போலைத்தான் கிடக்கு. நீ என்ன நினைக்கிறாய்?" என்று எதிர்க் கேள்வி கேட்கவும் அருள்ராசா "செய்து பார்க்கிறதிலை பிரச்சினையொன்றுமில்லையென்றுதான் படுகுது. செய்து பார்ப்பம். எதுக்கும் முதலிலை இவனிட்டையும் ஏதாவது விசயத்தைக் கறக்கலாமாவென்று பார்ப்போம்" என்றான்.

இவர்கள் தங்களுக்குள் அடிக்கடி பேசிக் கொள்வதை அவ்வப்போது அவதானித்த எஸ்கிமோ ஹென்றி "என்ன இவ்விதம் விறபதற்குப் பயமாகவிருக்கிறதா? " என்று கேட்டான். இதற்கு "அப்படியொன்றுமில்லை" என்று பதிலளித்த இளங்கோ " அது சரி. நீ எவ்விதம் ஹரிபாபுவைக் கண்டு பிடித்தாய?" என்று கேள்வியொன்றினையும் கேட்டு வைத்தான்.

அதற்குச் சிரித்தபடியே ஹென்றி கீழுள்ளவாறு நீண்டதொரு பதிலினையளித்தான்:

"இந்த 'கிறீன்விச் கிராமம்' கலைஞர்களுக்கும், உல்லாசப்பிரயாணிகளுக்கும் பெயர் போனது. மேலும் நியூயார்க் மாகாணப் பல்கலைக்கழகமும் இங்குதானுள்ளது. மாலையென்றால் வாசிங்டன் சதுக்கத்துப் பூங்காவுக்கு அண்மையிலுள்ள நடைபாதைகளில் கோடைகளில் ஓவியர்கள் நடைபாதைவாசிகளை அப்படியே வரைந்து சம்பாதித்துக் கொண்டிருப்பதைக் காணலாம். நானும் இந்நகருக்கு வந்ததும் இவ்விதமாக உடனடியாகவே எனது நடைபாதை வியாபாரத்தை ஆரம்பித்து விட்டேன். வாசிங்டன் சதுக்கப்
பூங்காவுக்கண்மையிலுள்ள 'மக்டூகல்' வீதி நடைபாதையில்தான் ஆடைவகைகளை வைத்து விற்றுக் கொண்டிருந்தேன். அப்போழுதுதான் ஒருநாள் இந்தக் ஹரிபாபுவைக் கண்டேன். இவன் அப்பொழுதுதான் தனது நடைபாதை வியாபாரத்தை ஆரம்பித்திருந்தான். ஒருநாள் இந்தப் பகுதியைச் சுற்றி யார் யாரெல்லாரும் இத்தகைய நடைபாதை வியாபாரங்களையெல்லாம் இங்கே செய்து கொண்டிருக்கிறார்களோவென்பதை அறிவதற்காக வந்து கொண்டிருந்தவன் பார்வையில் நான் தட்டுப்பட்டேன். என்னைக் கண்டதுமே அவனுக்கு என்னைப் பிடித்துப் போய் விட்டது. மேலும் இந்தப் பகுதியில் அவனுக்குப் போட்டியாக நானொருவன் மட்டும்தான் இவ்விதம் அவன் விற்கும் பொருட்களிலொன்றான ஆடைவகைகளை விற்றுக் கொண்டிருந்தேன். எனவே என் பொருட்களை மொத்தமாக விலைபேசி வாங்கி என்னைத் தன்னுடன் சேர்த்துக் கொண்டால் நல்ல வேலையாள் கிடைத்ததாகவும் அதே சமயம் வியாபாரத்தில் எதிரியொருவனை ஒழித்ததாகவும் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடிக்கலாமென்பது அவனது கணக்கு. அவ்விதம் அவனடித்த
கல்லில் அகப்பட்டவன்தான்இந்த எஸ்கிமோ ஹென்றி. எனக்கென்ன வேலைக்கு வேலையாகவும் ஆயிற்று. என்னிடமிருந்த பொருட்களை விற்றதாகவும் ஆயிற்று"

"ஆனால் ஹென்றி. சொந்தமாகத் தொழில் செய்யும்பொழுது நீ இன்னும் அதிகமாகச் சம்பாதிக்கலாமல்லவா?. அதையிட்டு நீ
கவலைபப்டுவதில்லையா?"

இதற்குச் சிறிது நேரம் அமைதியாகவிருந்த எஸ்கிமோ ஹென்றி மெதுவான குரலில் அவர்களைப் பார்த்துக் கூறினான்: "நீங்களிருவரும் யாரிடமும் கூறுவதில்லையென்று, குறிப்பாகக் ஹரிபாபுவிடம் கூறுவதில்லையென்று எனக்குச் சத்தியம் செய்தால் நானொரு உண்மை சொல்வேன்".

அவன் இவ்விதம் புதிராகக் கூறவும் இளங்கோவுக்கும், அருள்ராசாவுக்கும் அவனிடமிருந்து அந்த இரக்சியத்தை எபப்டியாவது அறிந்து விட வேண்டுமென்று ஆவல் பொங்கியது. அந்த ஆவல் குரலிலும் தொனிக்க , இருவரும் ஒரே சமயத்தில் "நிச்சயமாக ஒருத்தரிடமும் சொல்ல மாட்டோம். சொல்" என்றார்கள்.

அதற்கு எஸ்கிமோ ஹென்றி கூறினான்: "நீங்கள் கேட்டீர்கள் சொந்தத் தொழிலைக் கைவிட்டது கவலையைத் தரவில்லையாவென்று. யார் சொன்னது நான் என் சொந்தத் தொழிலைக் கை விட்டேனென்று."

இளங்கோ: "கை விடாமலென்ன.. இப்பொழுது நீ ஒருவருக்குக் கீழ்தானே வேலை செய்கிறாய்?"

ஹென்றி: "பார்வைக்கு அவ்விதம் தென்பட்டாலும் நான் இன்னும் என் சொந்தத் தொழிலையும் கவனித்துக் கொண்டுதானிருக்கிறேன். அதோ பார் அந்த எனது தோற் பையில் கொண்டு வரும் எனது பொருட்களையும் அவ்வப்போது இங்கு வரும் வாடிக்கையாளர்களுக்கும் விற்று விடுகின்றேன். பார்த்தாயா என் சாமர்த்தியத்தை"

சிறிது நேரத்துக்கு முன்தான் 'பார்த்தாயா என் சாமர்த்தியத்தை'யென்று இவனை வேலைக்கு வைத்தவன் பார்வையாலேயே வெளிப்படுத்திச் சென்றதாக எண்ணிக் கொண்டிருந்த இளங்கோவுக்கு குள்ளத்தோற்றத்துடனும் குள்ளக் கால்களுடமிருந்த இந்த எஸ்கிமோவின் இந்த நேரிடையான பதில் சிறியதொரு அதிர்ச்சியினையுமேற்படுத்தியது. எவ்வளவு இயல்பாக இவனால் இன்னொருவனின் முதுகில் குத்துவதை வெளிப்படையாகக் கூற முடிகிறது.

இவனது அதிர்ச்சியினைப் பார்த்த ஹென்றி கேட்டான்: "என்ன பயந்து விட்டாயா?"

இளங்கோ: "இல்லை. இவ்விதன் வெளிப்படையாகவே கூறுகின்றாயே. அதுதான் சிறிது அதிர்ச்சி. எல்லோரும் இவ்விதமான விடயங்களைக் களவாகச் செய்வார்கள். நீயோ எம்மில் இவ்வளவு நம்பிக்கை வைத்து வெளிப்படையாகக் கூறுகிறாயே."

ஹென்றி: "அதிகமாகப் பாவம் புண்ணியத்தை இங்கு பார்த்து விடாதே. அவ்விதம் பார்ப்பவனானால் உன்னால் இந்த நகரில் எதுவுமே செய்ய முடியாது. நண்பனே! இது நாய் நாயைத் தின்னும் உலகம். மறந்து விடாதே!"

அச்சமயம் மேலும் சில பாவனையாளர்கள் வந்து விடவே ஹென்றி அவர்களைக் கவனிக்கச் சென்று விட்டான். அச்சமயம் பார்த்து அருள்ராசா இளங்கோவிடம் கூறினான்: "காய் பொல்லாத காய்தான் எமனையே பச்சடி போட்டு விடுவான் போலை".

அத்தியாயம் பத்தொன்பது: கோஷின் காதல்!
அன்றைய தினம் மாலை இளங்கோவும் அருள்ராசாவும் வீடு திரும்பியபோது அவர்களது சிந்தனையெல்லாம் அடுத்தநாள் அவர்கள் ஹரிபாபுவுக்காக ஆரம்பிக்கவிருக்கும் நடைபாதை வியாபாரத்தின் மீதிலேயேயிருந்தது. அனறு சில மணித்தியாலங்கள் ஹென்றியுடன் பொழுதினைக் கழித்ததன் மூலம் ஓரளவுக்கு அவர்களுக்கு ஹரிபாபுவின்நடைபாதை வியாபாரம் பற்றிய புரிதலேற்பட்டுவிட்டிருந்தது. சிறிது முயன்றால் விற்பனையை மேலும் அதிகரிக்கலாம் போலவும் அவர்கள் எண்ணினார்கள். இதே சமயம் இளங்கோ தடுப்புமுகாமிலிருந்து வெளிவந்த நாளிலிருந்து அன்றுவரையிலான அவர்களது வாழ்வின் நிக்ழ்வுகளை ஒருகணம் எண்ணிப் பார்த்தான். இதுவரையில் புதுப்புது அனுபவங்களுக்குமேல் அனுபவங்களாக பொழுதுகள் விடிந்து கொண்டிருந்தனவேயல்லாமல் ஓர் உறுதியான
அடித்தளத்தைப் பொருளியல்ரீதியிலிட்டு எதிர்காலத்தைக் கட்டியெழுப்பும் வகையில் எந்தவிதமான சம்பவங்களுமே நிகழவில்லையே என்ற உண்மை உறைத்தது. அந்த நினைப்புடன் அவன் அருள்ராசாவிடம் கூறினான்: "அருள்! இதுவரையிலை ஒன்றுமே எங்கடை எதிர்கால வாழ்க்கையை உறுதியாகக் கட்டுகிறமாதிரி அமையேலை. பார்ப்பம். இந்தத் தடவியாவது அமையுதாவென்று.."

அதற்கு அருள்ராசாவின் பதிலிவ்விதம் அமைந்தது: "என்னடா இளங்கோ. எப்பவுமே 'பாசிடிவ் திங்கிங்க்' அது இதென்று கதைத்துத் திரியிற நீயே இப்பிடிக் கதைக்கிறதை நினைச்சால் நானென்னத்தைச் சொல்ல. நீ அடிக்கடி சொல்லுற மாதிரி எல்லா
அனுபவங்களையுமே எதிர்கால வெற்றிக்கான படிக்கட்டுக்களாக எடுக்க வேண்டியதுதானே. அதைவிட்டிட்டு இப்பிடி நெகட்டிவ்வாகக் கதைக்கிறதாலை என்ன லாபம்?"

இளங்கோவுக்கு அருளின் கூற்று மனநிறைவினைத் தந்தது. அதே சமயம் தன் சொற்களையே வைத்து நண்பன் தன்னை மடக்கியதை நினைத்து உள்ளூர ஒருவித பெருமையும் கொண்டான். சோர்ந்திருந்த அவனது மனம் வழக்கம்போல் மீண்டும் துள்ளியெழுந்து விட்டது. அத்துடன் "அருள்! நீ சொல்லுறதும் ஒரு விதத்திலை சரிதான். எங்களுக்குக் ஹரிபாபுவிடம் கிடைச்சிருக்கிற சந்தர்ப்பம் ஒருவிதத்திலை
நல்ல சந்தர்ப்பமாகத்தான் படுகுது. விற்பனைக் கலையை எங்கடை வாழ்க்கையிலைப் பிரயோகித்துப் பார்க்கிறதுக்கு இது நல்லதொரு சந்தர்ப்பம் என்று கருதவேண்டியதுதான். அதுதான் உண்மையும் கூட. எங்களாலை முடிந்த அளவுக்கு ஹரிபாபுவிடமாவது நிலைச்சு நிற்க முடியுதாவென்று பார்ப்பம்" என்றும் கூறினான்.

ஹரிபாபுவுடனான வேலை பற்றிய சிந்தனைகளுடனும், எதிர்காலக் கனவுகளுடனும் தம்மிடம் திரும்பியவர்களை கோஷ் வரவேற்றான்: "நண்பர்களே! இன்று போன விடயம் என்னவாயிற்று? காயா? பழமா?"

அதற்கு இளங்கோவே முதலில் பதிலிறுத்தான்: "ப்ழம்தான். நாளையே அவனுக்கு வேலையை ஆரம்பிக்கப்போகின்றோம். இன்று அவனது விற்பனயாளனான எஸ்கிமோ ஹென்றியுடனிருந்து வியாபாரத்தின் நுணுக்கங்களைக் கவனித்துக் கொண்டோம்"

இச்சமயம் இடைமறித்த கோஷ் "என்ன மராத்திய முதலாளி எஸ்கிமோவிடமும் வேலை வாங்குகின்றானா? ஆள் ஊரையே தின்ற கள்ளனாகவிருப்பான் போல் தெரிகிறதே!" என்று வியந்தான்.

இதற்கு அருள்ராசா பின்வருமாறு பதிலளித்தான்: "ஒருவிதத்தில் நீ சொல்லுவதுபோல் ஊரைத்தின்று ஏப்பமிட்டவன் போல்தான் தெரிகிறான். இன்னும் அவனுடன் பழகி அவனைப் பற்றிய போதிய தகவல்கள் பெற்றுக் கொண்டதன் பின்னர்தான் அவனைப் பற்றிய
எந்தவொரு முடிவுக்கும் வரமுடியும். எதற்கும் அவனுடனும் வேலை செய்து பார்ப்போம். முயன்று பார்ப்பதில்தான் தவறொன்றுமில்லையே."

இவ்விதம் அருள்ராசா கூறவும் இளங்கோ கூறினான்: "அருள்! சரியாய்ச் சொன்னாய். அவசரப்பட்டு முடிவுகளை எடுத்து விட்டுப் பிறகு கஷ்ட்டப்படுகிறதிலும்பார்க்க ஆறுதலாக முடிவுகளை எடுக்கப் பழக வேண்டும் அதுக்கு நல்லதொரு சந்தர்ப்பம் வந்து வாய்ச்சிருக்கு"

இச்சமயம் மீண்டும் அவர்களது உரையாடலில் தன்னையும் பிணைத்துக் கொண்ட கோஷ் " நண்பர்களே! இந்த விடயத்தில் எனக்கு உங்களை நிரம்பவும் பிடித்திருக்கிறது. எத்தனை தடவைகள் முயற்சி பிழைத்தாலும் , எதிர்பார்த்த விளைவினை ஏற்படுத்தாது போனாலும் தளர்ந்து விடாமல் மீண்டும் மீண்டும் முயற்சி செய்கிறீர்களே! அது எனக்கு நன்கு பிடித்துள்ளது. நீங்கள் பிழைத்துக் கொள்வீர்கள். ஒருவேளை இம்முறையும்...."

அருளராசாவும் இளங்கோவும் ஏககாலத்தில் கேட்டார்கள்" ஒருவேளை இம்முறையும்.... .. என்ன பிழைத்துக் கொண்டால் என்றுதானேகூற வருகிறாய்?"

அதற்கு கோஷ் " ஒருவேளை இம்முறையும் உங்களது இந்த முயற்சி பிழைத்து விட்டால் கவலைப் படாதீர்களென்று கூற வந்தேன். நான் என் தொழிற்சாலையில் கதைத்து நிச்சயம் உங்களுக்கொரு வேலை எடுத்துத் தர முயல்கின்றேன் என்ன கூறுகிறீர்கள்?"

இதற்கு இளங்கோ "கோஷ். நல்ல சமயத்தில் நல்ல வார்த்தைகள் பேசி நெஞ்சில் பாலை வார்த்தாய். உன்னை மறக்கவே மாட்டோம். நீ இவ்விதம் கூறியது எமக்கு இந்த வேலையினைச் சிறப்பாகச் செய்வதற்குரிய மன வலிமையினை அளித்து விட்டது. இந்த வேலை போனால் எப்படியாவது நீ எங்களுக்கொரு வேலை எடுத்துத் தருவாயென்ற நம்பிக்கையொன்று முகிழ்த்துள்ளது. அந்த நம்பிக்கை எங்களுக்கு இந்த வேலையினை உற்சாகத்துடன், நம்பிக்கையுடன் செய்வதற்குரிய ஆற்றலினை அளித்து விடுமென்ற நம்பிககை நிறையவே ஏற்பட்டுவிட்டது." என்றான்.

கோஷ்: "நல்லது. அதுதான் தேவை. இதில் மட்டும் நீங்கள் வெற்றி பெற்று விட்டீர்களென்றால் உங்களைப் பிறகு பிடிக்க முடியாது. அதற்குப் பிறகும் இந்த அப்பாவி கோஷை நீங்கள் உங்கள் அடிமனதில் வைத்திருப்பீர்களா? வைத்திருப்பீர்களென்று நினைக்கிறேன்."

நண்பர்களிருவரும் ஒரே சமயத்தில்: "நிச்சயமாக. கோஷை நினைக்காமல் யாரை நினைப்பதாம்?"

கோஷ் உள்ளூர மகிழ்வுடன்: "பிறகென்ன! புது வேலை கிடைத்ததற்கொரு 'பார்ட்டி' போட வேண்டியதுதானே?"

இளங்கோ: "அதற்கென்ன, போட்டால் போயிற்று"

பிறகென்ன அன்றிரவுப் பொழுதும் குடியும் கும்மாளமுமாகக் கழிந்தது. ஆனந்தமாகப் பொழுதினைக் கழித்தனர். பல்வேறு விடயங்களைப் பற்றியும் தமக்குள் பல்வேறு எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டனர். நனவிடை தோய்ந்தனர். அவ்விதமான நனவிடை தோய்தலில் உரையாடல் காதலில் வந்து நின்றது. கோஷ்தான் இந்த விடயத்தைப் பற்றி உரையாடலினை முதலில் ஆரம்பித்தவன்: "இளங்கோ. அடிக்கடி உனக்கு ஊரிலிருந்து ஒரு நாளைக்கு பத்து இருபதென்று கடிதங்கள் வருகிறதே. எல்லாமே காதற் கடிதங்களா?"

அதற்கு அருள்ராசா இவ்விதம் சிறிது கேலியாகக் கூறினான்: "அதையேன் கேட்கிறாய். ஐயா மேல் பழகாமலே வந்த காதலின் விளைவு அது."

இதற்கு கோஷ் சிறிது வியப்புடன் "என்ன பழகாமலே வந்த காதலா? அப்படியும் காதல் வருமா என்ன? "என்றான்.

அதற்கு அருள்ராசா "வருமாவா. ஐயாமேலை வந்திருக்கிறதே" என்றான்.

இச்சமயம் உரையாடலில் குறுக்கிட்ட இளங்கோ "இதுவொரு பெரிய கதை. பிறகொரு சமயம் கூறுகிறேனே. இப்பொழுது இதெல்லாவற்றையும் கொஞ்ச நேரமாவது மறந்து விட்டு உற்சாகமாகப் பொழுதினைக் கழிப்போமே"

இச்சமயம் கோஷின் முகம் சிறிது வாட்டமடைந்தது. "இளங்கோ நீ கொடுத்து வைத்தவன். என் நிலையைப் பார். ஒரு சமயம் ஒருத்தியை நீண்ட காலமாக ஒரு தலைக்காதலாக விரும்பினேன். அவளோ அதை எள்ளி நகையாடிவிட்டு இப்பொழுது
இன்னுமொருத்தனுடன் கூடி வாழ்கிறாள். அதையே மறக்க முடியாமல் இன்னும் கிடந்து மனது வாடிக்கொண்டுதான் இருக்குது."

இளங்கோவுக்கும், அருள்ராசாவுக்கும் கோஷின் காதற்கதை சிரிப்பையும், வியப்பையும் கூடவே தந்தது.

"என்ன ஒருதலைக் காதலியை நினைத்து இன்னும் வாடிக்கொண்டிருக்கிறாயா. இருதலைக்காதலென்றாலும் பரவாயில்லை. அதுவும் ஒருதலைக் காதல். அதற்காக யாராவது இவ்விதம் மனதைப் போட்டு வருத்திக் கொண்டிருப்பார்களா?"

இவ்விதம் இளங்கோவும், அருள்ராசாவும் கூறவும் கோஷிற்குச் சிறிது சினமேற்பட்டது. எவ்வளவு எளிதாக அவனது அந்தக் காதலை அவர்கள் எடைபோட்டு விட்டார்கள். பதினைந்து வருடங்களாக அவன் மனதுக்குள் உருகி உருகி வளர்த்த காதல் உணர்வுகளை எவ்விதம் எளிதாகக் கருதிவிட்டார்கள். சுமித்திராவின் ஞாபகம் நெஞ்சில் தலைகாட்டியது. சுமித்திரா அவனது நெஞ்சில் காதற்பயிரை வளர்த்துவிட்டுப் பின்பு காட்டுப் பன்றியாகச் சீர்குலைத்தவள். அது அவள் தவறா?

சுமித்திராவின் நினைவுகள் தந்த கனத்தினைத் தாளமுடியாதவனாக இன்னுமொரு மிடறு 'ஜானிவாக்கரை' உள்ளே தள்ளினான் கோஷ். அவனது கண்கள் மதுமயக்கத்தால் மேலும் சிவந்தன. இளங்கோவுக்கும், அருள்ராசாவுக்கும் அவனது காதற்கதையைக் கேட்பதிலொரு சுவாரசியமேற்பட்டது. இச்சமயம் வீட்டுச் சொந்தக்காரர் அஜித்தும் வந்து அவர்களுடன் இணைந்து கொண்டார். வரும்போதே இலேசாக அவர்களது உரையாடலைச் செவிமடுத்துக் கொண்டு வந்தவர் "என்ன காதல் அது இதுவென்று அடிபடுகிறதே. என்ன விசயம்?" என்றார். அவர் இவ்விதம் கேட்கவும் அருள்ராசா கூறினான்: "அங்கிள். நீங்களே சொல்லுங்கள் யாராவது ஒருதலைக்காதலுக்காக இவனைப் போல்
இவ்விதம் வாழ்க்கையை வீணாக்குவார்களா?"

இவ்விதம் அருள்ராசா கேலியாகக் கூறவும் கோஷின் சினம் மீண்டுமேறியது. "இங்குபார். இவ்விதம் மீண்டும் மீண்டும் நீ என்னை அவமதித்தால் நான் இப்பொழுதே இந்தப் பார்ட்டியிலிருந்து விலகிவிடுவேன்".

விளையாட்டு வினையாவதை உணர்ந்த இளங்கோ "கோஷ். அவன் கிடக்கிறான் விடு. நாங்கள் உன் காதலை நம்புகிறோம் இல்லையா அங்கிள்" என்றான். அதற்கு 'அங்கிள்' அஜித்தும் ஒத்துப்பாடினார்: "காதல் உணர்வுகள் ஒருதலையோ இருதலையோ புனிதமானவை என்பது என் கருத்து. காதலுக்காக ஒருவர் தன்னையே இழக்கச் சித்தமாகவிருக்கிறாரே. ஒருதலையோ இருதலையோ அந்த உறுதி உண்மையானதுதானே. எனக்குத் தெரிந்து ஒரு பெண்மணி ஒருத்தர்மேல் ஒருதலையாகக் காதல் கொண்டார். ஆனால் அவர் காதலித்தவரோ இதுபற்றி ஒன்றுமே அறியாமல் அந்தப் பெண்மணியின் உயிர்த்தோழி ஒருவரைக் காதலித்து மணந்து கொண்டார். அந்தப் பெண்மணியோ அதற்குப் பின் யாரையும் திருமணமே செய்யவில்லை. வாழ்க்கை முழுவதுமே தான் காதலித்தவரின் நினைவுடனேயே
வாழ்ந்து கொண்டிருக்கிறார்.இதைப்பற்றி என்ன சொல்லுகிறீர்கள்"

இப்பொழுது அருள்ராசா மீண்டும் உரையாடலினுள் தன்னை நுழைத்துக் கொண்டான்: "கோஷ். என்னை மன்னித்துக் கொள். நான் உன் ம்னதைப் புண்படுத்துவதற்காக எதனையும் கூறவில்லை. என்னைப் பொறுத்தவரையில் இந்தக் காதல் கீதல் உருகலெல்லாம் தேவையில்லாதவை. பருவக் கோளாறுகள். அதனால்தான் அவ்விதம் கூறினேன். ஆனாலும் இவ்விதம் காதல்வயப்பட்டு வாழும் மனிதர்களைக் கண்டு ஒவ்வொருமுறையும் நான் வியப்பதுண்டு. ஒருவேளை அவ்வுணர்வுகளை அறிந்து கொள்ளும் பக்குவமெனக்கில்லையோ தெரியவில்லை"

இப்பொழுது கோஷ் கூறினான்: "நண்பனே! பரவாயில்லை. நானும் சிறிது மிகையாக என் உணர்வுகளைக் கொட்டி விட்டேன். அவற்றை நீயும் மறந்துவிடு. ஒருவேளை நீ சொல்லுவதும் சரியாக இருக்கலாம். நான்தான் தேவையில்லாமல் என் வாழ்க்கையை இந்த உணர்வுகளுக்காக வீணடித்துக் கொண்டிருக்கிறேனோ தெரியவில்லை"

இளங்கோ: "கோஷ். நீண்டகாலமாக ஒருத்தியை விரும்பியதாகக் கூறினாய். எவ்வளவு காலமாக?"

கோஷ்: "பதினைந்து வருடங்களாக அவளை, சுமித்திராவை, நான் எனக்குள்ளேயே விரும்பியிருக்கிறேன். அவளிடம் இதுபற்றி எதுவுமே கூறாமலேயே எனக்குள்ளேயே பதினைந்து வருடங்களாக நான் அவளை விரும்பியிருக்கிறேன்.."

அனைவரும் வியப்புடன் :" என்ன பதினைந்து வருடங்களாகவா... இவ்வளவு வருடங்களாக ஒருமுறையாவது உன்காதலை நீ அவளுக்கு வெளிப்படுத்தவில்லையா! என்ன ஆச்சரியமிது. இந்தக் காலத்தில் இப்படியெல்லாம் கூட நடக்குமா!"

கோஷ்: "அதுதான் எனக்கும் புரியவில்லை. நானேன் அவ்வளவு காலம் அவ்விதம் ஓட்டினுள் தலையை நுழைத்துவிட்ட ஆமையாக இருந்திருந்தேனோ? எனக்கும் புரியவில்லை. ஆனாலொன்று.. அந்தப் பதினைந்து வருடங்களில் ஒவ்வொரு நாளும் நான் சுமித்திராவை நினைக்காத நாளில்லை. ஒவ்வொரு நாளும் அவளை நிணைத்திருக்கின்றேன். அவளைப் பற்றிய கனவுகளைக் கண்டிருக்கிறேன். அவளைப் பற்றி ஒவ்வொரு கணம் நான் நினைக்கும் போதும் என் நெஞ்சம் விரகத்தால் உருகி வழியும். என் ஆழ்மனது முழுவதும் அவளே நிறைந்திருப்பதால்தான் நான் அவ்விதம் நினைப்பதாகக் கருதினேன். அவ்விதம் ஒருவரை ஆழ்மனதொன்ற ஆழமாக
நினைப்போமானால் அந்த நினைவுக்குரியவ்ரும் காலப்போக்கில் அவ்விதமே நினைப்பாரென்றொரு ஆழமானதொரு நம்பிக்கை உளவியல்ரீதியில் எனக்கிருந்தது. அதனால் நான் அவளைப்பற்றி ஆழமாக உருகிக் காதலிப்பதைப்போல் அவளும் என்னைக்
காதலிப்பாளென்றொரு ஆழமான நம்பிக்கையுடன் வாழ்ந்திருந்தேன். பதினைந்து வருடங்களாக அவ்விதமே காலத்தைக் கழித்து விட்டேன். அதன்பிறகே அவளிடம் சொல்லுவதற்குரிய துணிவும் ஏற்பட்டது. ஆனால் அந்தச்சமயம் அவள் இன்னொருத்தனுக்குச் சொந்தமாகிவிட்டாள். இருந்தும் சந்தர்ப்பமேற்பட்ட்போது அவளிடமே கூறினேன். அவ்விதம் கூறாவிட்டால் என் தலையே உடைந்து
சுக்குநூறாகிவிடும்போலிருந்ததால் என் மனப்பாரத்தை இறக்கி வைப்பதற்காக அவளிடமே அவ்விதம் சந்தர்பப்மேற்பட்டபோது அவ்விதம் கூறினேன். அவ்விதம் கூறியதன்மூலம் என் காதல் வெற்றியடையாததாகவிருந்தாலும் ஒருவிதத்தில் அவளும் அறியும் சந்தர்ப்பமேற்பட்டதன்மூலம் இருதலைக் காதலாகி விட்டதல்லவா. அதன்பின்தான் என் மனப்பாரம் சிறிது குறைந்தது."

'அங்கிள்' அஜித்: "கோஷ். நீ அவ்விதம் அவளிடம் உன் காதலைத் தெரியப்படுத்திய சமயம் அவள் என்ன கூறினாள்? ஆத்திரப்பட்டாளா? அனுதாப்பட்டாளா?"

கோஷ்: "முதலில் நானும் அவ்விதமானதொரு பதில்தாக்கத்தைத்தான் அவளிடமிருந்து எதிர்பார்த்தேன். ஆனால் அவளோ மிகவும் இயல்பாக அதனை எடுத்துக் கொண்டாள். அவளிடம் நான் கேட்டேன் 'இவ்விதம் கூறியதற்காக ஆத்திரப்படுகிறீர்களா'வென்று. 'என்னைப் பற்றித் தவறாக நினைக்கிறீர்களாவென்று'. ஆனால். அவளோ மிகவும் இயல்பாக என்னில் மிகவும் மதிப்பு வைத்திருப்பதாகக் கூறி அந்தச் சூழலையே மாற்றி வைத்து விட்டாள். அந்தக் கணத்திலிலிருந்து நான் அவள் பற்றிய நினைவுகளை மனதின் மூலையில் மூட்டை கட்டி வைத்து விட்டேன். இருந்தாலும் அந்தப் பதினைந்து வருடத் தாக்கம் அவ்வளவு எளிதில் போய் விடுமாயென்ன? நிறைவேறாக் காதல்
உணர்வுகள் தொல்லை தருவதைப் போல் வேறெந்த உணர்வுகளும் தொல்லை தருவதில்லை"

இவ்விதமாகக் கோஷ் தன் காதற் கதையினை அவர்களுடன் பகிர்ந்து கொண்டதைத்தொடர்ந்து மற்றவ்ர்களும் தங்கள் காதல்
அனுபவங்களைக் பகிர்ந்து கொள்ளத் தொடங்கினார்கள். முதலில் 'அங்கிள்' அஜித்தே தன் காதற்கதையைச் சுருக்கமாகப் பகிர்ந்து கொண்டார்: "என் காதல் கதையைக் கேட்டால் உங்களுக்குச் சிரிப்பாகவிருக்கும். நானும் ஒருத்தியைக் காதலித்தேன். நான் யார் மூலம் அவளுக்குக் காதற்கடிதங்களை அனுப்பினேனே அவள்தான் இன்று எனக்கு மனைவியாக இருக்கிறாள். அக்கடிதங்களை அன்று ஆசையோடு வாங்கியவள் தன் வீட்டாரின் சொல்லுக்கடங்கி என்னைவிடப் படித்த பணக்கார மாப்பிள்ளையாகப் பார்த்துப் பிடித்துக் கொண்டாள். அன்று நான் பட்ட வேதனையைக் கண்டு பரிதாப்பட்டு பத்மா என்னைத் தன் கணவனாக ஏற்றுக் கொண்டாள். இனறு பத்மா இல்லாமல் ஒரு வாழ்வையே என்னால் கற்பனை செய்து பார்க்க முடியாது. வாழ்க்கையென்றால் எப்பொழுதுமே இப்படித்தான். நினைப்பதொன்று நடப்பதொன்று. சூழலுக்கேற்ப வாழப்பழகிக் கொள்ள வேண்டும்"

இச்சமயம் இளங்கோவுக்கும் தன் முதற்காதல் அனுபவங்கள் ஞாபகத்துக்கு வந்தன. கூடவே சிரிப்பும் வந்தது. அவன் தன் வாழ்க்கையில் ஒருமுறைதான் காதற் கடிதமென்று எழுதியிருக்கிறான். பதினாறு வயதுக் காதல். அவளது சுருண்ட கூந்தலும், நிலம் நோக்கிய பார்வையும், கூரிய கண்களும் அவனைப் பாடாய்ப்படுத்தி விட்டதன் விளைவாக ஒரு கடிதமொன்றினை எழுதி அவளிடம் நேரிலேயே துணிவாகக் கொடுத்து விட்டான். அதில் அவள் அவனை விரும்பும் பட்சத்தில் வரும்போது தலையில் மல்லிகைப் பூ வைத்து வரும்படி கூறியிருந்தான். அவ்விதம் விரும்பாவிட்டால் அந்தக் கடிதத்தைக் கெட்ட கனவாக் மறந்து விடும்படியும், யாரிடமும் அது பற்றிக் கூற வேண்டாமெனவும் கூறியிருந்தான். அவளோ.. அவன் என்ன செய்ய வேண்டுமென எதிர்பார்த்தானோ அதனைச் செய்யாமல், எவையெல்லாவற்றையெல்லாம் செய்யக் கூடாதென்று எழுதியிருந்தானோ அவற்றையெல்லாம் செய்தாள். அதன்பிறகு அவளது தோழிமாரெல்லாரும் வழியில் அவனைக் கண்டால் அந்தக் கடிதத்தைப் பற்றிக் கூறி எள்ளிநகையாடத் தொடங்கி விட்டார்கள். அவனோ.. அத்துடன் அந்தக் காதற்கதைக்கு முற்றுப் புள்ளி வைத்துவிட்டு அவள் கொடுத்து வைத்தது அவ்வளவுதானென்று தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து விட்டான். அதன்பிறகு அவளை அவன் ஒருமுறை கூடச் சந்திக்கவேயில்லை. அதெல்லாம் அந்த வயதுக் கோளாறு. அத்தகைய கோளாறுகளால்தான் அந்தப் பருவமும் பூத்துக் குலுங்குகிறது. அந்த வயதில் விரும்பிய எத்தனைபேர் நிஜ வாழ்வில் இணைகிறார்கள்? இவ்விதமாக அன்றையை இரவுப் பொழுது உற்சாக பானமருந்தி காதல் பற்றிய நனவிடை தோயலுடன் கழிந்தது.

[தொடரும்]

தொடர் நாவல்: குடிவரவாளன் - வ.ந.கிரிதரன் -

அத்தியாயங்கள் 16 &  17!
அத்தியாயம் பதினாறு: 'ஹரிபாபுவின் விளம்பரம்!'

காலை மணி பத்திருக்கும். இளங்கோ படுக்கையில் புரண்டு கொண்டிருந்தான். அறை நண்பர்களனைவரும் வேலைக்குப் போய் விட்டிருந்தார்கள். அருள்ராசாவும் ஏதோ அலுவலாக வெளியில் சென்று விட்டிருந்தான். அன்று இளங்கோவின் மனநிலை எங்கும் செல்வதற்கு இடம் கொடுக்கவில்லை. அன்றையைப் பொழுதினைத் தன்னிருப்பிடத்திலேயே ஓய்வெடுத்துக் கழிப்பதற்கு அவன் மனம் விரும்பியது. கடந்த சில வாரங்களாக அலைந்த அலைச்சலில் உடம்பு முறிந்து போய் விட்டிருந்தது. ஓய்வை உடலும் உள்ளமும் நாடின. படுத்திருந்தபடியே சிந்திப்பதிலுமொரு சுகமிருக்கத்தான் செய்தது. அவனது சிந்தனை ஒரு கணம் குடை வியாபாரத்தில் பதிந்து மீண்டது. இலேசாக இளநகையொன்று கோடிழுத்தது. நியூயார்க்கில் குடை வியாபாரம்... . நல்லதொரு அனுபவம். முதலுக்கு நிச்சயம் நட்டமில்லாமல் அவர்களது குடை வியாபாரம் அமைந்திருந்தது நல்லதொரு மகிழ்ச்சிகரமான அனுபவமாக அமைந்திருந்தது. அவன் அன்று எட்டுக் குடைகளை நாற்பது டாலர்களுக்கு விற்றிருந்தான். அருள்ராசா ஏழு குடைகளை முப்பத்தைந்து டாலர்களுக்கு விற்றிருந்தான். அவனுக்கு இருபது டாலர்கள் இலாபமும், நான்கு குடைகள் மீதியுமாகக் கிடைத்திருந்தன. சொந்தத் தொழில் செய்வதில் உண்மையில் இன்பமிருக்கத்தான் செய்கிறது. யாரிடமும் கையேந்தாமல், தன் தலைவிதியினைத் தானே நிர்ணயிப்பதிலுள்ள சுகமே தனிதானென்று பட்டது.

யாரோ நடந்து வருமோசை கேட்டது. வந்தது திருமதி பத்மா அஜித். அவளது கைகளிலொரு வான் கடிதம் கிடைத்தது. இளங்கோ படுக்கையிலிருந்து எழுந்தமர்த்தான். பத்மா அஜித் அவனிடம் கடிதத்தைத் தந்தவாறு கூறினாள்: "இக்கடிதம் உனக்குத்தான் இளங்கோ?"

"நன்றி" என்றவாறு கடித்ததை வாங்கிக் கொண்டான். ஊரிலிருந்து அம்மா எழுதியிருந்தாள்.

அவனருகில் சற்றுத் தள்ளி அமர்ந்தவளாகத் திருமதி பத்மா அஜித் கேட்டாள்: "இளங்கோ எவ்விதம் உனது வேலை தேடும் படலம் போகிறது?:

"எல்லா வழிகளிலும் நானும் முயற்சி செய்து கொண்டுதானிருக்கிறேன். இதுவரையில் ஒன்றும் பெரிதாக வந்தமையவில்லை."

"இந்தியா எப்ரோட் பத்திரிகையில் விற்பனை முகவனுக்குரிய விளம்பரமொன்று வந்திருந்தது. உடனடியாகத் தேவையாம். அன்றாடம் கைகளில் ஊதியம் வழங்கப்படுமாம். அதைப் பார்த்ததும் உன் ஞாபகம்தான் வந்தது. அந்த விளம்பரத்தை மட்டும் கத்தரித்து வைத்துள்ளேன் உனக்குத் தேவைப்பட்டாலுமென்று... விருப்பமென்றால் சொல்லு. எடுத்துத் தருகிறேன்"

இளங்கோவுக்கு மீண்டும் குடை வியாபார நினைப்பு வந்தது. சிரித்துக் கொண்டான்.

"என்ன சிரிக்கிறாய் உனக்குள்ளேயே இளங்கோ" என்றாள் திருமதி பத்மா அஜித்.

"ஒன்றுமில்லை. குடை விற்ற கதை ஞாபகத்திற்கு வந்தது?

"அதென்ன புதுக்கதை. குடை வியாபாரம் செய்தாயா? எங்கே?"

இவ்விதம் திருமதி பத்மா அஜித் கேட்கவும் இளங்கோ அவளுக்குத் தாங்கள் செய்த குடை வியாபாரம் பற்றி விரிவாக எடுத்துரைத்தான். அதனைக் கேட்டதும் திருமதி பத்மா அஜித் விழுந்து விழுந்து சிரித்தாள். அத்துடன் கூறினாள்: " நீ பிழைத்துக் கொள்வாய். உனக்கு எந்தச் சூழலையும் எதிர்த்து நின்று போராடும் ஆற்றல் நிறையவே உள்ளது. உன்னை மாதிரியெல்லாம் என்னால் செய்து பார்க்கவே முடியாது."

"பார்த்தீர்களா குடை வியாபாரம் கூட இப்பொழுது ஒருவகையில் எனக்கு உதவப் போகிறதை.."

"குடை வியாபாரம் உதவப் போகிறதா?"

"நீங்கள் கூறிய விற்பனை முகவன் வேலைக்கு இப்பொழுதே எனக்கு அமெரிக்க விற்பனை முகவன் அனுபவம் குடை விற்பனை செய்ததன் மூலம் கிடைத்து விட்டதல்லவா? இந்த அமெரிக்க அனுபவத்தை மூலதனமாக வைத்து அடுத்த வேலை எடுக்க முடிகிறதல்லவா."

"பார்த்தாயா இளங்கோ. எந்தச் செயலுமே வீணாகப் போவதில்லை. ஏதோ ஒருவகையில் உதவத்தான் செய்கிறது இல்லையா? குடை வியாபாரம் உனக்கு நட்டத்தைத் தரவில்லை. அதே சமயம் அமெரிக்க அனுபவத்தையுமல்லவா தந்துள்ளது. எதற்கும் அந்த விளம்பரத்தைக் கொண்டு வந்து காட்டுகிறேன். வாசித்துப் பார். பிடித்திருந்தால் சென்று முயன்று பார். சில் நேரம் அதிருஷ்ட்டம்கூட அடிக்கலாம் யார் கண்டது?"

இவ்விதம் கூறிய திருமதி பத்மா அஜித் கீழே சென்று சில நிமிடங்களிலேயே அந்த விளம்பரத்துடன் திரும்பி வந்தாள். அந்த விளம்பரத்தை வாங்கி வாசித்தான் இளங்கோ. அதில் பின்வருமாறு சுருக்கமாக எழுதப்பட்டிருந்தது:

'உடனடியாக இரு விற்பனை முகவர்கள் தேவை. மணித்தியாலத்திற்கு நான்கு டாலர்கள் ஊதியமாக வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் ஹரிபாபுவை 'மேற்கு நான்காம் தெருவும், அமெரிக்கா அவென்யுவும் சந்திக்குமிடத்தில் (வடமேற்கில்) வந்து சந்திக்கவும்'

அந்த விளம்பரம் அவனுக்குச் சிறிது விசித்திரமாகப் பட்டது.

"இந்த விளம்பரம் எனக்கு நூதனமாகப் படுகிறது. வித்தியாசமான விளமபரம்!"

"ஏன் அப்படிச் சொல்கிறாய் இளங்கோ?"

"விற்பனை முகவர்களுக்கான விளம்பரம். ஆனால் வீதியின் மூலையொன்றில் சந்திக்கும்படி கூறப்பட்டுள்ளதே. விநோதமாக உங்களுக்குப் படவில்லையா?"

அப்பொழுதுதான் அந்த விடயமே திருமதி பத்மா அஜித்துக்கும் உறைத்தது.

"நீ சொல்லுவதும் சரிதான் இளங்கோ. நான் அந்த விடயத்தைப் பெரிதாகக் கவனிக்கவில்லை. நீ சொல்லிய பின்புதான் கவனித்துப் பார்க்கின்றேன். உண்மைதான். விநோதமான விளம்பரம்தான். ஒருவேளை..."

"ஒருவேளை.. என்ன திருமதி பத்மா அஜித் அவர்களே!"

"ஒருவேளை ஹரிபாபு நடைபாதை வியாபாரியோ. எதற்கும் ஒருமுறை அவனைப் போய்ப் பார்ப்பதுதான் சரியாகப் படுகிறது. சிலவேளை.."

"என்ன சிலவேளை... பத்மா அஜித் அவர்களே!"

"சிலவேளை அந்நியர்களுக்குத் தன்னிருப்பிடத்தைக் காட்ட அவன் விரும்பவில்லையோ என்னவோ"

"நீங்கள் கூறுவதும் சரிதான். முதல்வேளையாக ஹரிபாபுவைச் சென்று சந்திக்க வேண்டியதுதான். அவனிடமே வேலை என்னவென்று கேட்டுத் தெரிந்து கொள்வதுதான் சரியான நடைமுறை. அதற்குமுதல் வீணாக ஏனிந்தக் கற்பனை. தேவையற்ற மன உளைச்சல்."

இதற்குள் திருமதி பத்மா அஜித் எழுந்து கொண்டாள்: " இளங்கோ. மீண்டும் கூறுகிறேன். என்னுடைய ஆலோசனையென்னவென்றால்... நீங்கள் கூறியபடியே அவனை, ஹரிபாபுவை, சந்திக்க வேண்டியதுதான்"

இளங்கோவுக்கும் அவள், திருமதி பத்மா அஜித், கூறுவதே சரியாகப் பட்டது.

அந்திச் சூரியனின் தண்ணொளியில் பூமிப்பெண் குளித்துக் கொண்டிருந்தாள். பகல் முழுவதும் நகரில் அலைந்து திரிந்துவிட்டு அருளராசா மெதுவாக வந்து சேர்ந்தான்.

"அருள். உனக்கொரு விசயம் தெரியுமே?"

"என்ன... "

"திருமதி பத்மா அஜித் ஒரு விளம்பரப் பிரதியினைத் தந்தவர். அதில் விற்பனை முகவர்கள் தேவையெனப் போட்டுள்ளதாம். ஆனால்..."

"ஆனால்... என்ன இளங்கோ?"

"எனக்கென்றால் அந்த விளம்பரத்திலெங்கோவொரு குறை இருப்பதுபோல் படுகிறது"

"உனக்கெப்பவுமே இப்படித்தான். ஏதாவதொன்றிலை குறை கண்டுபிடிக்காவிட்டால் உனக்குப் பொழுதே விடியாதே!"

"பின்னே... விற்பனை முகவர்கள் தேவையென்று விளம்பரம். ஆனால் நடைபாதையில் சந்திப்பும் , நேர்முக வர்ணனையுமாம். இது எப்படியிருக்கு?"

"இளங்கோ! எதற்குமொருமுறை அந்த விளம்பரத்தை மீண்டும் படித்துப் பார். சில சமயங்களில் உண்மைகூட நித்திரை கொள்வதுண்டு."

"சரி சரி அருள். சுற்றி வலைத்துப் பேசாமல் விசயத்திற்கு வா. இப்பொழுது நான் என்ன செய்யவேண்டுமென நீ நினைக்கிறாய்? "

"'நாமிருவரும் அந்த விளம்பரத்திலுள்ளவாறே நாளைக் காலை ஹரிபாபுவை அவன் குறிப்பிட்ட இடத்திலேயே சென்று சந்திப்போம். அவன் குறிப்பிடும் வேலை பற்றி மேலுமதிகத் தகவல்களை அச்சந்திப்பின் மூலம் பெற்றுக் கொள்ளமுடியும். பிடித்திருந்தால் செய்கிறோம். பிடிக்காவிட்டால் திரும்பி விடுவோம்.குடியா முழுகி விடப் போகிறது. நீ என்ன சொல்லுகிறாய்?"

இளங்கோவுக்கும் அருள் கூறுவதே சரியாகப் பட்டது.

"அருள் நீ கூறுவதே சரி. அவ்விதமே நாளைக் காலைப் பொழுதினைக் ஹரிபாபுவுடம் கழித்து விடுவோம்."

இவ்வாறு நண்பர்களிருவரும் அன்றிரவு நீண்ட நேரம் இவ்விடயம் பற்றியயே கதைத்துக் கொண்டிருந்துவிட்டுத் தூங்கிப் போனார்கள். தூங்கப் போவதற்கு முன் இளங்கோ தாயாரின் கடிதத்தை எழுத்து வாசித்தான். அதில் பின்வருமாறு சுருக்கமாக எழுதப்பட்டிருந்தது:

'இளங்கோ! நீ அங்கு நல்ல சுகமாக இருப்பாயென நினைக்கிறேன்; வேண்டுகிறோம். புது இடம். கொஞ்சம் கவனமாக இருக்கப் பழகு. இங்கு நாங்கள் அனைவரும் சுகமே. இங்கு சூழ்நிலையொன்றும் அவ்வளவு சரியாக இல்லை. எல்லாம் கடவுளுக்கே வெளிச்சம். பார்வதி நேற்றும் வந்து போனவ. அவ மட்டும் அவசரத்துக்கு உதவியிருக்காவிட்டால் நீ வெளியிலை போயிருக்க முடியாது. பாவம் அவள். உன் நிலையும் எனக்கு விளங்குது. இவ்வளவு நாளும் உள்ளுக்குள்ளை உன்னை வைச்சிருந்தாங்கள். இப்பத்தான் வெளியிலை விட்டிருக்கிறான்கள். கெதியிலை உழைக்கப்பார். அப்ப அப்ப கொஞ்சம் கொஞ்சமாவது அனுப்பி வைச்சாயென்றால் உதவியாகவிருக்கும்.'

அத்தியாயம் பதினேழு: ஹரிபாபுவின் நடைபாதை வியாபாரம்!
அன்றிரவு முழுவதும் இளங்கோவுக்கு மறுநாள் சந்திக்கவுள்ள ஹரிபாபு பற்றியும் அவனது தொழில் என்னவாகவிருக்கக் கூடுமென்பது பற்றியுமே சிந்தனையாகவிருந்தது. அவனது விளம்பரத்தைப் போல் அவனும் புதிரானவனாகயிருப்பானோ என்றொரு எண்ணமும் அவ்வப்போது எழுந்தோடியது. எது எப்படியோ இந்த வேலை மட்டும் கிடைத்து விட்டால் அதுவும் நிலையானதாகவிருந்து விட்டால் நல்லதென்று பட்டது. தாயாரின் கடிதம் கூட அவனுக்கு உடனடியாக வேலையொன்றினை எடுப்பதன் அவசியத்தை வலியுறுத்தியது. அவனுக்கு அப்பொழுது ஆச்சி அடிக்கடி கூறுமொரு பொன்மொழி ஞாபகத்துக்கு வந்தது. 'பாவி போன இடமெல்லாம் பள்ளமும் திட்டியும்' என்பதுதானது. அந்தப் பழமொழி அவனுக்காகவே உருவானதுபோல் பட்டது. ஆச்சியைப் பற்றி நினைத்ததும் அவனுக்கு எப்பொழுதுமே பெரும் பிரமிப்புத்தான் ஏற்படுவது வழக்கம். ஆச்சி அன்றைய காலத்து மனுசி. ஏட்டுக் கல்வியைவிட அதிகளவு அனுபவ அறிவு மிக்கவளவள். எந்த நேரமும் சிரித்த முகமும், மகிழ்ச்சியுமாகவும் காணப்படுவாள். ஒருநாளாவது ஆச்சி கோபப்பட்டு அவன் பார்த்தே கிடையாது. 'மகராசனாய்ப் போயிட்டு வா' வென்று அவள் அடிக்கடி வாழ்த்தி அனுப்பும்போது ஒவ்வொரு முறையும் அவனும் அவனது நண்பர்களும் உற்சாகத்துடன் கூடிய மகிழ்ச்சியினையே அடைவது வழக்கம். ஆச்சியின் சமையல் மாதிரி இதுவரையில் வேறெங்கும் அவன் கண்டதில்லை. அவளது மூளைக்கீரையும், குழம்பும், தயிரும் எத்தனை தடவைகள் உண்டாலும் அலுக்காதவை. உடல், உள்ளமிரண்டிலும் உறுதி மிக்கவளவள். ஆச்சியின் இன்னுமொரு விஷேசம் அவள் வாயிலிருந்து அவ்வப்போது உதிரும் வார்த்தைகள். சொற்களை வைத்து ஜாலம் காட்டுவதில் வல்லவளவள். எழுபதுகளில் அவன் 'பெல்பாட்டமும்' நீண்ட தலைமுடியுமாய்த் திரிந்து கொள்ளும்போது காணுகையில் 'வாடா பீத்தல் பறங்கி" என்று வரவேற்பாள். அடிக்கடி சைக்கிள் செயினில் சிக்கிக் கொழுப்புப் படிந்து கிடக்கும் பெல்பாட்டத்துடன் பீத்தல் பறங்கியாக நுழையுமவன் அசடு வழியச் சிரிப்பான்.

அன்றிரவு கோஷிடமும் அடுத்த நாள் ஹரிபாபுவைச் சந்திப்பது பற்றி இளங்கோ குறிப்பிட்டான். கோஷுக்கும் சிறிது ஆச்சரியமாகவிருந்தது. "ஹரிபாபு ஆச்சரியமான பேர்வழியாக இருக்கிறானே!" என்று சிறிதளவு வியந்தானவன். அத்துடன் கூறினான்: "பெயரினைப் பார்த்தால் மராத்திக்காரன் போலிருக்கிறான். எதற்கும் நாளைக் காலை அவனைச் சென்று பார்த்துவிட்டு வந்து எங்களுக்குக் கதையினைக் கூறு. கேட்பதற்கு ஆவலாகவிருக்கிறோம்."

"கோஷ். அதெப்படி அவ்வளவு தீர்மானமாகக் கூறுகிறாய் அவன் மராத்திக்காரனென்று.."

இதற்கு கோஷ் ஒருமுறை இலேசாகச் சிரித்தான். "ஹரிபாபு நாராயண் என்றொரு பிரபலமான மாரத்திக்காரனின் 'நான்' என்றொரு நாவலை , இந்திய சாகித்திய அக்கடமியால் பதிப்பிக்கப்பட்டது; வாசித்திருக்கின்றேன். நல்லதொரு நாவல். தகழியின் 'ஏணிப்படிகள்', வாசுதேவநாயரின் 'காலம்' போன்று நல்லதொரு நாவலது. அதனால்தான் நீ ஹரிபாபுவென்றதும் மராத்திக்கரனாகவிருப்பானோ என்று சந்தேகப்பட்டேன். எதற்கும் அவனைப் போய் நேரிலேயே பார். அப்பொழுதுதான் சரியான நிலை புரியும்"

இளங்கோவுக்கும் அவன் கூறுவதே சரியாகப் பட்டது. "இந்த வேலை மட்டும் கிடைத்து விட்டால் திருமதி பத்மா அஜித்துக்குத்தான் நன்று கூறவேண்டும்."

இதற்குக் கோஷ் சிரித்தான்: "இளங்கோ, அளவுக்கதிகமாக அவளைப் புகழாதே. எல்லாம் காரியத்துடன்தான். நீ வேலை செய்தால்தானே ஒழுங்காக அவளுக்கு வாடகை கிடைக்கும். அந்தக் கரிசனைதான் காரணம். வேறொன்றுமல்ல"

"எனக்கென்றால் அவளை அவ்வளவு குறைத்து மதிப்பிடுவது சரியாகப் படவில்லை. இருந்தாலும் உனது பேச்சுரிமையினை மதிக்கிறேன்" என்றான் இளங்கோ. அருள்ராசாவுக்கு இளங்கோ கூறுவதே சரியாகப் பட்டது.

அன்றிரவும் ஒருவாறு கழிந்து மீண்டுமொருமுறை பொழுது புலர்ந்தது. இளங்கோவினதும், அருள்ராசாவினதும் வேலை தேடும் ப்டலம் ஆரம்பமாகியது. அதற்கு முதற்படியாகக் ஹரிபாபுவைச் சந்திப்பதற்காக 'நான்காம் தெரு மேற்கு' நோக்கிய பயணத்தை ஆரம்பித்தார்கள். அவன் விளம்பரத்தில் குறிப்பிட்டிருந்த சந்திக்குச் சென்றபொழுது காலை பத்துமணியினைத் தாண்டி விட்டிருந்தது. நான்காவது வீதி மேற்கும், ஆறாவது அவென்யுவும் சந்திக்குமிடத்தில், வடமேற்குப் புறத்தில் அவன் கண்டது ஓர் இந்தியத் தம்பதியினரின் நடைபாதை வியாபாரத்தினைத்தான். ஆணுக்குச் சிறிது வயதாகியிருந்தது. ஆனால் அந்த இந்தியப் பெண்மணியோ வயதில் மிகவும் இளமையுடன் காணப்பட்டாள். பார்ப்பதற்குச் சங்கராபரணத்தில் நடித்த மஞ்சு பார்கவி போலிருந்தாள். உண்மையைச் சொல்லப்போனால் அவன் கூட அத்திரைப்படத்தில் நடித்த சங்கீத வித்வானைப் போல் முதுமையான தோற்றத்துடனிருந்தாலும், உடலமைப்பைப் பொறுத்தவரையில் திடகாத்திரமாகக் காணப்பட்டான். அவர்களுடன் இன்னுமொரு வெள்ளையினத்து யுவதியும் 'ஜீன்ஸும், டீசேர்ட்டுமாக'க் காணப்பட்டாள்.

அத்தம்பதியினரை அண்மித்த இளங்கோ "என் பெயர் இளங்கோ.." என்று வார்த்தைகளை முடிக்கவில்லை அவர்களில் அந்த ஆண் "அது நீதானா? நல்லதாகப் போய் விட்டது. நான்தான் விளம்பரம் கொடுத்திருந்த ஹரிபாபு. நீ சரியான இடத்துக்குத்தான் வந்திருக்கிறாய்" இவ்விதம் இளங்கோவையும் அருள்ராசாவையும் பார்த்துக் கூறிய ஹரிபாபு அந்தப் பெண்மணிபக்கம் திரும்பி "இந்திரா! நான் இவர்களுடன் சிறிது கதைத்து விட்டு வருகிறேன். அதுவரை வியாபாரத்தைச் சிறிது கவனித்துக் கொள்" என்றான். அத்துடன் அந்த வெள்ளையினத்து யுவதியினைப் பார்த்து "இங்கிரிட், இந்திராவுடன் துணையாகச் சிறிது நேரம் இருந்து கொள். உடனேயே வந்து விடுகிறேன்" என்றான்.

பதிலுக்கு இந்திரா என்னும் அந்தப் பெண்மணிக்கு வணக்கம் கூறிவிட்டு இளங்கோவும், அருள்ராசாவும் ஹரிபாபுவைத் தொடர்ந்து சென்றனர். ஹரிபாபு அவர்களை அருலிருந்த தேநீர்க்கடையொன்றுக்கு அழைத்துச் சென்றான். "நீங்கள் இருவரும் என்னை வந்து சந்தித்ததற்கு மகிழ்ச்சி. ஆறுதலாகத் தேநீர் அருந்தியபடி எல்லாவற்றையும் விபரமாகக் கூறுகிறேன். உங்களுக்கும் பிடித்திருந்தால், எனக்கும் உங்களைப் பிடித்திருந்தால் நாம் இணைந்து பணியாற்றலாம்." என்று செல்லும் வழியில் ஹரிபாபு கூறினான். அவன் தொடர்ந்தும் விபரிக்கப் போகும் வேலைவாய்ப்பு பற்றிய விபரங்கள் எததகையதாகவிருக்கக் கூடுமென்று எண்ணியபடியே அவன் கூறுவதையும் செவிமடுத்தபடி அவனைத் தொடர்ந்தனர் அவர்கள். அவனுடன் அவ்விதம் செல்கையிலேயே அவனுடன் இணைந்து பணியாற்றுவதில் எந்தவித ஆட்சேபனையுமேற்படப் போவதில்லையென்று பட்டது.

அத்தேநீர்க்கடையின் ஒரு மூலையில் சென்றமர்ந்தனர். ஹரிபாபுவே அனைவருக்கும் தேநீர் வாங்கி வந்தான். தேநீரைச் சிறிது சுவைத்தபடி "இப்பொழுது ஓரளவுக்குப் புரிந்திருக்குமே" என்றான். இதற்கு இளங்கோவே முதலில் பதிலிறுத்தான்:
"நடைமுறையினைப் பார்க்கும்பொழுது ஓரளவு ஊகிக்க முடிகிறது. பத்திரிகையில் விற்பனையாளர்கள் தேவையென்று விளம்பரம் செய்திருந்தீர்கள். ஆக, உங்களுக்குத் துணையாக நாங்கள் விற்பதற்கு உதவப் போகின்றோமென்று படுகிறது.."

இப்பொழுது ஹரிபாபு இடைமறித்துப் பினவருமாறு கூறினான்: "சரியாகக் கூறினாய். நீ கெட்டிக்காரன். நான் உடனடியாக விஷயத்திற்கே வருகிறேன். விசயம் இதுதான். இப்பொழுது நாங்கள் அதுதான் நானும் என் மனைவியும் அந்த வெள்ளைக்காரியும் நடைபாதையில் வைத்து வியாபாரம் செய்து கொண்டிருக்கிறோம். இன்னுமொருவன் ஹென்றி, அவனொரு எஸ்கிமோ இனத்தைச் சேர்ந்தவன் , எங்களுக்காக அடுத்த சந்தியிலிருந்து விற்றுக் கோண்டிருக்கிறான். எங்கள் வியாபாரத்தை இன்னுமொரு சந்திக்கு விஸ்தரிக்க வேண்டியிருக்கிறது. இப்பொழுது வியாபாரம் சுறுசுறுப்பாகவிருக்கிறது. காற்றுள்ள் போதே தூற்றிக் கொள்ள் வேண்டியதுதானே. அதுதான் எங்களது திட்டம். அதற்காகத்தான் விளம்பரம் செய்திருந்தோம். உங்களுக்குப் பிடித்திருந்தால் ஹென்றியைப் போல் நீங்களிருவரும் அந்த விற்பனையினைக் கவனித்துக் கொள்ளலாம். என்ன நினைக்கிறீர்கள்? பிடித்திருக்கிறதா? உங்களால் சமாளிக்க முடியுமென்று நினைக்கிறீர்களா?"

இப்பொழுது அருள்ராசா வினாத் தொடுத்தான்: "அது சரி, எவற்றையெல்லாம் நாம் விற்க வேண்டும்?"

இதற்குக் ஹரிபாபு இவ்விதம் பதிலளித்தான்: "சரியான கேள்வி. பிரதானமாக என் ஸ்டோரில் ஏராளமாகவிருக்கும் செப்புச் சிலைகள் போன்ற பல இந்தியப் பொருட்களை நீங்கள் நடைபாதையில் வைத்து விற்கவேண்டும். அத்துடன்..."

"அத்துடன்..." இவ்விதமிழுத்தது இளங்கோ.

"அத்துடன் காலநிலைக்கேற்ற ஆடை வகைகள், ஆபரண வகைகள் போன்றவையும் என்னிடம் நிறையவுள்ளன. அவற்றையும் விற்கவேண்டும். நீங்களிருவரும் ஒன்றாக நின்று ஒருவருக்கொருவர் உதவியாகவிருக்கலாம்."

"எவ்வளவூ நேரம் வேலை செய்ய வேண்டும்? எத்தனை மணிக்கு ஆரம்பிக்க வேண்டும்? எத்தனை மணிக்கு முடிக்க வேண்டும்? எவ்வளவு எங்களுக்கு ஊதியமாகக் கிடைக்கும்?"

இவ்விதம் இளங்கோ படபடவென்று கேள்விகளைத் தொடுக்கவே ஹரிபாபு இலேசாகச் சிரித்தான். அத்துடன் கூறினான்: "காலை ஒன்பது மணியிலிருந்து மாலை ஐந்து மணிவரை வேலை செய்தால் போதுமானது. வியாபாரம் மிகவும் 'பிசி'யாகக் காணப்பட்டால் நீங்களிருவரும் மேலதிகமாக வேலை செய்ய விரும்பும் பட்சத்தில் வேலை செய்யலாம். அன்றாடம் உங்களது ஊதியம் வழங்கப்படும். என்ன நினைக்கிறீர்கள்? அட மறந்து விட்டேனே.. விளம்பரத்தில் கூறிருந்தபடியே மணித்தியாலத்திற்கு நான்கு டாலர்கள் ஊதியமாக வழங்கப்படும். என்ன சொல்லுகிறீர்கள்?"

இளங்கோவுக்கும், அருள்ராசாவுக்கும் அப்போதிருந்த பொருளியற் சூழலின் விளைவாக எந்தவொரு வேலையினையும் நிராகரிக்கும் மனநிலை இருக்கவில்லை. வழிய வந்த சீதேவியினை யாராவது எட்டி உதைவார்களா? எனவே ஒருமித்த குரலில் கூறினார்கள்: "எங்களுக்குப் பூரண சம்மதமே.."

அவர்களது அந்தவிதப் பதில் அவனை மகிழ்வித்திருக்க வேண்டும்.

"நல்லது. உங்களிருவரையும் எனக்கும் மிகவும் பிடித்துப் போயுள்ளது. அதற்குமுதல் உங்களிருவரையும் ஹென்றிக்கும் ஒருமுறை அறிமுகம் செய்து வைக்க வேண்டும். உங்களுக்கும் மிகவும் பயனுள்ளதாகவிருக்கும். தேநீர் அருந்தி முடித்ததும் நாம் அனைவரும் ஒருமுறை ஹென்றியைச் சென்று சந்திப்போம். அவனுக்கும் மகிழ்ச்சியினை அளிப்பதாவிருக்கும். சிறிது நேரம் அவனுடன் நீங்களிருவரும் நின்று வியாபாரத்தை நடத்தும் வழிமுறைகள் பற்றி மேலதிகமான தகவல்களையும் பெறமுடியுமல்லவா?"

இவ்விதமாக அவர்களுக்கிடையில் தொடர்ந்த உரையாடல் தொடர்ந்தது. அனைவரும் தேநீர் அருந்தி முடித்ததும் ஹரிபாபு அவர்களிருவரையும் அழைத்துக் கொண்டு ஹென்றியின் இருப்பிடத்தை நோக்கி நடையைக் கட்டினான். அவர்களும் அவனைத் தொடர்ந்தனர்.

[தொடரும்]

தொடர் நாவல்: குடிவரவாளன் - வ.ந.கிரிதரன் -

அத்தியாயம் பதினைந்து: நியூயார்க்கில் குடை வியாபாரம்!

நண்பர்களிருவரும் குடிவரவுத் திணைக்கள அதிகாரிகளைச் சந்தித்துவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தார்கள். நாற்பத்திரண்டாவது வீத்யில் அமைந்திருந்த நூலகத்தை மையமாக வைத்து 'பிராட்வே' சாலை வழியாக நடந்து வந்து கொண்டிருந்தார்கள். சிறிது நேரம் நூலகத்திற்குச் சென்று பத்திரிகைகள், சஞ்சிகைகளைப் புரட்டினால் நல்லதுபோல் இளங்கோவுக்குப் பட்டது. அருள்ராசா இளங்கோவைப் போல் பத்திரிகைகள், சஞ்சிகைகள், இலக்கியெம்ன்று எதிலும் பெரிதாக ஆர்வமற்றவன். ஆனால் கல்வி சம்பந்தமான, தொழில் வாய்ப்புகள் சம்பந்தமான, வியாபாரம் சம்பந்தமான விடயங்களில் ஆர்வமுள்ளவன். அவை பற்றிய விடயங்களை படிப்பதில் அதிகக் கவனம் செலுத்துபவன். அவனுக்கும் சிறிது நேரத்துக்கு நூலகம் சென்று ஏதாவது பிடித்த விடயங்களைப் பற்றிய பத்திரிகை, சஞ்சிகைகளைப் புரட்டினால் நல்லதுபோல் பட்டது. சிறிது நேரம் ஓய்வெடுத்தததும் போலாகுமெனப் பட்டது. இதன் காரணமாக இருவருக்கும் நூலகம் செல்வதில் எந்தவிதக் கருத்து வேறுபாடுகளும் ஏற்படவில்லை. எனவே நூலகத்தை நோக்கி நடையைக் கட்டினார்கள். அப்பொழுதும் அவர்களது சிந்தனை முழுவதும் குடிவரவு அதிகாரிகளுடனான சந்திப்பு பற்றியேயிருந்தது. இளங்கோ டிம் லாங்கைன்ச் சந்தித்திருந்தான். அருள்ராசாவுக்கு வந்து வாய்த்தவனோ டிம் லாங்கினைப் போல் அவ்வளவு வேடிக்கையானவனாக இருக்கவில்லை. வழக்கம்போல் அதிகாரிகளுக்குரிய கடின முகபாவமும், வார்த்தைகளை அளந்து, அதிகாரத்துடன் கொட்டும் தன்மையும் கொண்டவனாக விளங்கினான். எனவே அவனுக்கும் அருள்ராசாவுக்குமிடையிலான உரையாலும் மிகவும் குறுகியதாகவே அமைந்து விட்டதில் ஆச்சரியமேதுமிருக்கவில்லை. அவனொரு இத்தாலிய அமெரிக்கன். கிளாட் மன்சினி என்பது அவனது பெயர். அவனுக்கும், அருள்ராசாவுகுமிடையில் நடைபெற்ற உரையாடலும் பினவருமாறு சுருக்கமாக மட்டுமே அமைந்திருந்தது:

அருள்ராசாவின் ஆவணப் பிரதிகளைப் பார்த்தபடியே குடிவரவுத் திணைக்கள அதிகாரி கிளாட் மன்சினி " உனக்கு என்னவிதத்தில் உதவ முடியும்?" என்று ஆரம்ப வினாவினைத் தொடுத்தான்.

அதற்கு அருள்ராசா " சமூகக் காப்புறுதி இலக்க அட்டை எடுப்பது பற்றியே விசாரிப்பதற்காக இங்கு வந்துள்ளேன்.." என்றான்.

அதற்கு கிளாட் மன்சினி " உனது விடயம் சம்பந்தமாக எங்களிடமிருந்து உனக்குரிய பதில் வரும் வரையில் எதுவும் செய்வதற்கில்லை. அதுவரை நீ பொறுத்திருக்கத்தான் வேண்டும்." என்று பதிலிறுத்தான். அதற்கு மேல் அவனுடன் கதைப்பதில் எந்தவிதப் பயனுமில்லை என்பதை உணர்ந்து கொண்ட அருள்ராசா பதிலுக்கு நன்றி தெரிவித்து விட்டு வெளியேறினான்.

"அவனொரு குரங்கன். கொஞ்சங்கூட மனிதாபிமானமற்றவன். அவனுக்கு என் பிரச்சினையைக் காது கொடுத்துக் கேட்கவே பொறுமையில்லை. இந்த விசயத்திலை நீ குடுத்து வைச்சவன் இளங்கோ"

"என்ன உனக்கு அவன் சொன்னதைத்தான் டிம் லாங்கினும் சொன்னான். என்ன அவன் கடுமையாச் சொன்னதை இவன் கொஞ்சம் வேடிக்கையாகச் சொன்னான். அவ்வளவுதான். மற்றப்படி முடிவு ஒன்றுதான்."

இவ்விதமாக உரையாடலைத் தொடர்ந்துகொண்டு நடந்து கொண்டிருந்தார்கள். அப்பொழுதுதான் இளங்கோ வானத்தைக் கவனித்தான். விரைவாகவே நகரத்துவானம் இருண்டு வந்துகொண்டிருந்தது. காற்றும் பலமாக வீச்த் தொடங்கி விட்டிருந்தது. வாயு பகவானைத் தொடர்ந்து வருணபகவானின் ஆட்டம் இன்னும் கொஞ்ச நேரத்திலேயே தொடங்கிவிடும்போல் காலநிலை தென்பட்டது.

"போகிற போக்கைப் பார்த்தால் மழை கெதியிலை அடிச்சுக் கொட்டும் போலை" என்றான் அருள்.

"பாத்தால் அபப்டித்தான் தெரியுது. இந்த நேரத்துக்கு ஊரிலை இருக்க வேணும். மழை பெய்யுறதிலை கூட எவ்வளவு அழகு. இங்கை சலனப்படத்தைப் பார்த்த மாதிரித்தான். பார்கலாம் ஆனால் இரசிக்க முடியாது...."

நண்பர்களின் உரையாடல் அப்படி இப்படித் திரும்பி அன்றாட வாழ்க்கைப் பிரச்சினையில் வந்து நின்றது.

"எபடியென்றாவது கெதியிலை ஒரு வேலை எடுக்க வேண்டும். 'பேர்மனென்ற்' வேலையாக இருந்தால்தான் கொஞ்சமாவது காசைச் சேர்க்கலாம். இல்லாவிட்டால் உழைப்பதும் செலவழிப்பதுமாகவே பொழுது போய் விடும். காசைச் சேர்க்க முடியாது."

"நீ சொல்வது சரிதான் இளங்கோ. ஆனால் ஒழுங்கான வேலைதான் கிடைக்க மாட்டவே மாட்டேன்கிது. என்ன செய்யலாம். எல்லாமிந்த சோசல் இன்சுரன்ஸ் கார்ட் இல்லாததால் வந்த கரைச்சல்தான்.."

"அருள். எனக்கொரு யோசனை தோன்றுது..."

"என்ன..."

"ஏன் நாங்கள் இன்னொருவனிடத்திலை வேலை தேட வேண்டும். நாங்களே ஏதாவது சொந்தமாகச்செய்ய முடியுமாவென்று பார்க்கலாமே... நியூயாய்க்கிலை எத்தனைபேர் சொந்தமாகத் தொழில் செய்து முன்னுக்கு வந்திருக்கிறான்கள்.. நீ என்ன சொல்லுறாய்?'

"அது சரி.. நீ சொல்லுறதும் ஒரு விதத்திலை சரியாய்த்தானிருக்கு. ஆனா கையிலையோ எந்தவிதச் சேமிப்புமில்லை. இந்த நிலைமையிலை எப்படிச் சொந்தத் தொழில் செய்யுறது. அப்படிச் செய்தாலும் எந்தத் தொழிலைச் செய்யுறது?"

வானத்தின் கருமை கூடிக் கொண்டே வந்தது. அருகிலிருந்த கட்டங்களிலிருந்து ஒரு சில மாடப்புறாக்கள் சிறகடித்துப் பறந்தன. இளங்கோவின் சிந்தனையிலொரு பொறி தட்டியது.

"எனக்கொரு யோசனை வருது அருள்."

"என்ன..?"

"ஒரு சின்ன 'பிசினஸ்' செய்து பார்க்க நல்லதொரு சந்தர்ப்பம் கிடைச்சிருக்கு.."

"எந்தச் சந்தர்ப்பத்தைச் சொல்லுறாய்? எனக்கென்றால் ஒன்றுமாய் விளங்கேலையே.. வடிவாய் விளக்கமாய்த்தான் சொல்லேன்.."

"இன்னும் கொஞ்ச நேரத்திலை மழை கொட்டோ கொட்டென்று கொட்டப் போகுது.."

"அதுக்கும் பிசினசுக்கும் என்ன சம்பந்தம்..?"

"சம்பந்தமிருக்கே.. இந்த பிசினசைச் செய்து பார்க்கிறதாலை பெரிசாய்ப் பணம் கிடைக்காட்டியும் நாங்கள் சொந்த பிசினஸ் செய்யக் கூடியவர்களாவென்று 'டெஸ்ட்' பண்ணிப் பார்க்க இதுவொரு நல்லதொரு சந்தர்ப்பம்..."

"பெரிசாகப் புதிர் போடாமல் கெதியாச் சொல்லித் தொலை. தலை வெடித்து விடும் போலைக் கிடக்கு"

"மழைக்கும் இப்ப நாங்க செய்யப் போகிற பிசினசுக்கும் தொடர்பிருக்கென்று சொல்லியும் இன்னும் உனக்கு விளங்கவில்லையே. இப்பவாது விளங்குதா என்ன பிசினசென்று?"

"இஞ்சைபார் இளங்கோ. நானொன்றும் உன்னை மாதிரி பெரிய மூளைசாலியில்லை. பேசாமல் சொல்லித் தொலை. புதிர் போடுறானாம் புதிர். இருக்கிற நிலைமையிலை இதுக்கொன்றும் குறைச்சலில்லை" என்று அருள் சிறிது சலித்துக் கொண்டான்.

"உன்னிடம் எவ்வளவு டொலர்களிருக்கு அருள்?"

"என்னத்துக்குக் கேட்கிறாய்? ஏன், கையிலை இப்ப ஐம்பது டொலர்களைவரை இருக்கு?"

"அது காணும். என்னட்டையும் கையிலை ஒரு நாற்பது இருக்கு. ஆனால் அவ்வளவு செலவு வராது. ஆளாளுக்கு இருபது டொலர்களை வரைதான் செலவு வரும். நான் நினைச்ச பிசினசுக்கு இரண்டு பேருக்கும் சேர்த்து நாற்பது டொலர்கள் காணும்."

இளங்கோவே தொடர்ந்தான்: "இன்னும் கொஞ்ச நேரத்திலை மழை வந்துவிடும். அதற்குள்ளை கெதியாக பிசினசைத் தொடங்க வேண்டும்.
நான் சொல்ல வந்த பிசினஸ் குடை வியாபாரம்தான்.."

அருளுக்குச் சிறிது திகைப்பாகவிருந்தது. அவன் சிறிதும் இதனை எதிர்பார்க்கவில்லை.

"என்ன குடை வியாபாரமோ.. உனக்கென்ன விசரே பிடிச்சிருக்கு? உண்மையாத்தான் சொல்லுறியோ?"

"ஓம் அருள். உண்மையாத்தான் சொல்லுறன். குடை வியாபாரம்தான். அதிலையென்ன வெக்கம். கஷ்ட்டம். செய்து பார்க்க வேண்டியதுதான்.."

"எனக்கென்றால் ரோட்டிலை நின்று விக்கிறதுக்கு அவ்வளவு விருப்பமாயில்லை. வேறை ஏதாவது பிசினசிருந்தால் சொல்லு.."

"இஞ்சைபார் அருள். இப்பிடி எல்லாத்துக்கும் வெக்கப்பட்டால் எங்களாலை ஒன்றுமே செய்ய முடியாது. யாரைப் பார்த்து வெக்கப்படுகிறாய்? இந்த ஊர்ச் சனங்களைப் பார்த்தா? நாளைக்கு நீ பசியிலை கிடந்து வாடினா அவங்களா வந்து உனக்குச் சோறு போடப் போகிறான்கள்? தேவையில்லாமல் வெக்கப்படுறதை விட்டிடு. சொந்தமாகத் தொழில் செய்ய வேண்டுமென்றால் இப்பிடியெல்லாம் வெக்கப்படக் கூடாது. எங்களாலை முடியுமாவென்று பார்க்க வேண்டும். என்ன சொல்லுறாய்?"

"நீ சொல்லுறதிலையுமொரு நியாயமிருக்கு. வெக்கப்பட்டால் வியாபாரமொன்றும் செய்ய முடியாதுதான். இறங்கிப் பார்க்க வேண்டியதுதான். இப்ப என்ன செய்ய வேண்டுமென்று நீ நினைக்கிறாய்?"

"உனக்கொரு டசின், எனக்கொரு டசின் குடைகள் வாங்குவம். எம்பயர் ஸ்டேட் பில்டிங்கினொருபக்கம் நீ நின்று வில். மற்றப்பக்கம் நான் விக்கிறேன். ஆளுக்கு பத்துக் குடைகளை ஐந்து டொலர்களுக்கு வித்தாலும் ஒவ்வொருவருக்கும் முப்பது டொலர்களாவது மிஞ்சும். இரண்டு குடைகளும் மிச்சம். முழுவதையும் விக்க முடிஞ்சால் அது உண்மையிலேயே பெரிய சாதனை."

"இளங்கோ! நோ செல்லுறதைக் கேட்க நல்லாய்த்தானிருக்கு. நீ நினைக்கிறாயா விக்க முடியுமென்று. அப்பிடி வித்தால் உண்மையிலேயே நல்லதுதான். இருபது டொலர்களிலையிருந்து முப்பது டொலர்கள் லாபம். முயற்சி செய்யுறதாலை நாங்களொன்றும் இழக்கப் போகிறதில்லை. 'நதிங் டு லூஸ்'"

அதுவரை பொறுமையாக இருந்த வானம் இலேசாகத் துமிக்கத் தொடங்கியது. அதனை அவதானித்த இளங்கோ கூறினான்: "இனியும் மினக்கெடக் கூடாது. எங்கேயாவது 'ஹோல் சேல்' கடைகளேதாவது தெரிகிறதா பார்"

அவர்களுடைய நல்ல காலமோ என்னவோ அருகிலேயே சிறிய மொத்தவிலைக் கடையொன்று பிராட்வே வீதியில் தென்பட்டது. அங்கு சென்று இரு 'டசின்' குடைகளை டசின் இருபது டொலர்களுக்கு வாங்கினார்கள். குடைகளுடன் வெளியில் வந்தபோது நண்பர்களிருவருக்கும் ஓர் இனம் புரியாத மகிழ்சியேற்பட்டது. உலகப் புகழ்பெற்ற மாநகரில் குடை விற்பதை எண்ணுகையில் ஒருவித வியப்பும், ஆர்வமுமேற்பட்டன. நண்பர்களிருருவரும் குடைகளுடன் உலகப் புகழ்பெற்ற 'எம்பயர் ஸ்டேட் பில்டிங்கை' வந்தடைந்தபொழுது அதுவரை பொறுமையாகத் துமித்துக் கொண்டிருந்த நகரத்து மழை நகரத்து வானிலிருந்து கொட்டோ கொட்டென்று கொட்டத் தொடங்கி விட்டது. இடியும், மின்னலும் , காற்றும் கூடிய மழை. திடீர் மழையினை எதிர்பார்க்காத நகரத்துவாசிகள் சிலர் டாக்சிகளிலேறிப் பறந்தார்கள். பணத்தில் சிக்கனம் பிடிக்கும் சிலர் கட்டடங்களின் முகப்புகளின் கீழ் காத்து நின்றார்கள். மேலும் சிலரின் கவனம் குடை வியாபாரிகளின் பக்கம் திரும்பியது. இளங்கோவும் அருள்ராசாவும்"குடை ஒன்று ஐந்து டொலர்கள் மட்டுமே. குடை! குடை!" என்று கூவிக்கொண்டே தங்களது குடை வியாபாரத்தை ஆரம்பித்தார்கள். நியூயார்க் மாநகரில் நடைபாதையில் நின்று குடை விற்பதிலுமொரு 'திரில்' இருக்கத்தான் இருக்கிறதென்று எண்ணிய இளங்கோ "குடை. வலிமையான குடை. நல்ல குடை. ஓடி வாருங்கள். ஒருமுறை பரீட்சித்துப் பாருங்கள். குடை ஒன்று ஐந்து டொலர்கள் மட்டுமே!" என்று பலமாகக் கத்தி பாவனையாளர்களைத் தன்பக்கம் இழுப்பதற்கு முயன்றுகொண்டிருந்தான். அதில் ஓரளவு வெற்றியும் அடைந்திருந்தான். இவ்விதமாக நண்பர்களிருவரதும் குடை வியாபாரம் ஆரம்பத்தில் மந்தமாக ஆரம்பித்து விரைவிலேயே மழையின் அதிகரிப்புடன் அதிகரிக்கத் தொடங்கியது.

[தொடரும்]

தொடர் நாவல்: குடிவரவாளன் - வ.ந.கிரிதரன் -

அத்தியாயம் பதினான்கு: 'வேடிக்கையான குடிவரவுத் திணைக்கள அதிகாரி!'வரவேற்புக் கூடத்தில் அமர்ந்திருந்த பெண் அதிகாரியிடம் முதலில் இளங்கோதான் தங்களை அறிமுகம் செய்தான்:

"இனிய காலை உங்களுக்கு உரித்தாகட்டும்"

அதற்கு அந்தப் பெண் அதிகாரி "உங்களுக்கும் எனது காலை வந்தனங்கள். இன்று நீங்கள் என்ன விடயமாக இங்கு வந்திருக்கின்றீர்கள்?" என்று வரவேற்றபடியே எதிர்வினாவொன்றினையும் தொடுத்தாள்.

"எனது பெயர் இளங்கோ. இவனது பெயர் அருள்ராசா. நாங்கள் இருவரும் இங்கு அரசியல் அடைக்கலம் கோரி விண்ணப்பித்துள்ள விண்ணப்பதாரிகள்" என்று கூறிய இளங்கோ அவளுக்கு அமெரிக்கக் குடிவரவு திணைக்களத்தினால் கொடுக்கப்பட்டிருந்த விண்ணப்பத்தின் புகைப்படப் பிரதியினை எடுத்துக் கொடுத்தான்.

அதனை வாங்கிச் சிறிது நேரம் பார்த்த அந்தப் பெண் அதிகாரி பின்னர் இவ்விதம் கூறினாள்:

"இது நீங்கள் விண்ணப்பித்த விண்ணப்பப் பத்திரத்தின் பிரதி. இதனை வைத்துக் கொண்டு ஒன்றும் செய்ய முடியாது. அவர்களிடமிருந்து இது சம்பந்தமாக உங்களுக்குப் பதிலொன்று வரும். அதன் பின்னர் வாருங்கள்.."

"மேடம், அது சம்பந்தமாகத்தான் இங்குள்ள அதிகாரியொருவருடன் பேச விரும்புகின்றோம். இதற்கான பதில் எப்பொழுது வருமோ தெரியாது. இந்த நிலையில் 'சமூகக் காப்புறுதி இலக்க' அட்டைக்குக் கூட விண்ணப்பிக்க முடியாதுள்ளது. எங்களுடன் வந்துள்ள வேறு மாகாணங்களில் வசிக்கும் எல்லோருக்கும் 'சமூகக் காப்புறுதி இலக்க அட்டைகள்' வழங்கப்பட்டுவிட்டன. அதில்லாமல் எங்களால் எந்தவித வேலையும் செய்யமுடியாமலுள்ளது. அதுதான் அதுபற்றி இங்குள்ள அதிகாரியொருவருடன் கதைக்க விரும்புகின்றோம். இதற்கு உதவினால் நன்றியுள்ளவர்களாகவிருப்போம்."

இவ்விதம் இளங்கோ மிகவும் பணிவாகக் கூறியது அந்தப் பெண் அதிகாரியின் இதயத்தைத் தொட்டுவிட்டது. அதன் பிரதிபலிப்பு குரலில் சிறிது தெரிய அவள் "உங்கள் நிலை எனக்குப் புரிகிறது. என்னைப் பொறுத்தவரையில் உங்கள் கோரிக்கைக்கான பதில் வராமல் இங்குள்ளவர்களால் என்ன செய்ய முடியுமோ? எதற்கும் உங்கள் ஆசையை நான் தடுக்க விரும்பவில்லை. முயற்சி செய்து பாருங்கள். உங்களை அழைக்கும்வரையில் அங்குள்ள ஆசனங்களில் சென்று அழைப்பு வரும்வரையில் காத்திருங்கள்" என்றாள்.

இளங்கோவுக்கு அவளது பரிவான குரல் சிறிது ஆறுதலைத் தந்தது. அந்த மகிழ்ச்சி அடுத்து அவன் தொடுத்த வினாவிலும் பிரதிபலித்தது.

"மேடம், இன்னுமொரு சிறு கேள்வி. நாங்களிருவருமே ஒரே சமயத்தில் ஒன்றாக அகதிக் கோரிக்கைக்கு விண்ணப்பித்தவர்கள். நாங்களிருவருமே ஒரே சமயத்தில் அதிகாரியொருவரைச் சந்திக்க முடியுமா? அல்லது தனித்தனியாகத்தான் சந்திக்க வேண்டுமா?"

"ஒரே நேரத்தில் சந்திப்பது முடியாத காரியம். தனித்தனியாகத்தான் சந்திக்க வேண்டும். குறைந்தது ஒன்றிரண்டு மணித்தியாலங்களாவது காத்திருக்க வேண்டி வரலாம்."

இவ்விதம் அந்தப் பெண் அதிகாரி கூறவும் அவளுக்கு மீண்டுமொருமுறை நன்றியினைத் தெரிவித்துக்கொண்டு கூடத்திலிருந்த நாற்காலிகளில் காத்திருக்கும் ஏனையவர்களுடன் வந்தமர்ந்து கொண்டார்கள் இளங்கோவும் அருள்ராசாவும்.

"அருள், எனக்கென்றால் சரிவருமென்று தெரியவில்லை. எதுக்கும் முயற்சி செய்து பார்ப்பதில் தவறில்லைதானே. முயற்சி செய்து பார்ப்போம். குடியா முழுகி விடப்போகுது."

"என்னடா இளங்கோ. 'பொசிட்டிவ்வா திங்க்' பண்ணுற நீயே இப்பிடி தளர்ந்து விடலாமா? சரிவருமென்று எண்ணிக்கொண்டே இறங்கினால் எல்லாம் வெற்றிதான். இறங்குவம். காலை விடுவம். நல்லதே நடக்குமென்று நம்புவோம்"

"ஓம் அருள். நீ சொல்லுறதும் சரிதான். எவ்வளவுதான் 'பொசிட்டிவ்'வாக இருந்தாலும் சில சமயங்களில் மனசு சலிச்சு விடத்தான் செய்கிறது."

"அதுக்குமொரு காரணமில்லாமலில்லை."

"என்ன காரணம்.."

"எப்பொழுதுமே எங்கட, மனுசரின்ற , குணவியல்புகள் ஒரே மாதிரி இருக்காதாம். ஏறி இறங்கிக் கொண்டுதானிருக்குமாம். நிலவு பிறை நிலவாகி, முழுநிலவாகி, அமாவாசையில் மறைந்து மீண்டும் வளரத் தொடங்கிறதே. அது மாதிரித்தான் எங்கள் குணவியல்புகளும். சில நேரம் எந்தவிதக் காரணமுமில்லாமல் ஒரு பிரச்சினையுமில்லாத நேரத்தில் மனசு சலிச்சுச் சோர்ந்து கிடக்கும். இன்னொரு சமயம் தலைக்கு மேலை பிரச்சினைகள் கூடுகட்டியிருக்கைக்கே மனசு கிடந்து உற்சாகமும், ஆனந்தமும் பொங்கக் கூத்தடிக்கும்."

இளங்கோவுக்கு அருளின் விளக்கம் ஆச்சரியத்தை அளித்தது.

" அருள், நீ கூறுவது சரிதான். இவ்வளவு விசயம் தெரிந்து வைத்திருக்கிறாயே.. ஆச்சரியம்தான். உளவியல் மருத்துவராகப் போயிருக்க வேண்டும். 'மிஸ்' பண்ணியிட்டாய்."

இவ்விதமாக அவர்களிருவரும் அளவளவியபடியிருந்த வேளையில் அவனது பெயரை உள்ளிருந்து வந்த வெள்ளையின அதிகாரியொருவன் அழைத்தான்.

"யாரது.. இளங்கோ"

"நான்தான்" என்றவாறெழுந்த இளங்கோ அருள்ராசா பக்கம் திரும்பியபடி "எங்கேயும் போயிடாதே. நான் வரும்வரைக்கும் இங்கைதான் நில்" என்றவன் அந்த அதிகாரியைப் பின்தொடர்ந்து உள்ளே சென்றான். தன் காரியாலய அறைக்கு அவனை அழைத்துச் சென்ற அந்த அதிகாரி அருகிலிருந்த ஆசனத்திலமரும்படி சைகை காட்டினான்.

"என் பெயர் 'டிம் லாங்கின்'. சரி, இன்றைக்கு எதற்காக இங்கு விஜயம் செய்திருக்கிறாய்?"

அவனுக்குப் பதில் சொல்வதற்கு முன்னர் இளங்கோ தன்னிடமிருந்த ஆவணங்களை, இலங்கை இனப்பிரச்சினை தொடர்பான பத்திரிகைச் செய்திகளின் போட்டோப் பிரதிகளை, அண்மைய யூலைக் கலவரத்தைப் பற்றி வெளிவந்த தகவல்கள், புகைப்படங்களை எடுத்துக் காட்டினான். அதிலொன்று நிர்வாணமாக்கப்பட்ட தமிழனொருவனைச் சுற்றி, அந்த அப்பாவியைக் கொல்வதற்கு முன்னதாக குடித்துக் கும்மாளமடித்துக் கொண்டிருந்த காடையர் கும்பலின் படம். அதனைப் பார்த்ததும் அந்த அதிகாரி முகம் சுளித்தான். "காட்டுமிராண்டிகள். காட்டுமிராண்டிகள்" என்று தனக்குள்ளேயும் சிறிது கூறிக் கொண்டான்.

அந்த அதிகாரியும் சிறிது மடங்கக் கூடிய ஆசாமியாக அவனுக்குப் பட்டது.

"சேர், இலங்கைத் தமிழர்கள் இனரீதியில் பாதிக்கப்பட்டவர்கள். அந்தப் புகைப்படப்பிரதியில் கொல்லப்படுவதற்காகக் காத்திருக்குமந்த அப்பாவியுமொரு தமிழன்தான். நானுமொரு ஈழத்தமிழன்தான்..."

இவ்விதம் அந்த அதிகாரிக்குத் தன் நிலையினை விபரிக்க முற்படுகையில் இளங்கோவுக்கு அந்தக் கணத்தில் அந்தப் புகைப்படப்பிரதியிலுள்ள அந்த அப்பாவித் தமிழனின் நிலை மிகவும் தெளிவாக, அனுபவரீதியாகப் புரிந்தது. நெஞ்சுணர்ந்தது. இரத்தம் சொட்டுமுடலுடன், நிர்வாணக் கோலத்தில், கூனிக்குறுகியபடி, வெறிபிடித்தாடும் மிருகங்களுக்கு மத்தியிலிருந்தபோது அவன் என்ன நினைத்திருப்பானோ? ஊரிலெங்கோ காத்து நிற்கும் அவனது மனைவியை அல்லது 'எப்போ அப்பா வருவாரோ'வென்று இன்பக் கனவுகளுடன் காத்து நிற்குமொரு இளங்குருத்தை அல்லது நோகும் நெஞ்சுடன் துஞ்சாதெங்கோ விழித்திருக்கும் காதலியை , முதுமையில் அவனுதவியை நாடி நிற்குமந்ததாயை, சகோதரனை, சகோதரியையெல்லாம் நினைத்திருப்பானோ? அவனது அந்தக் கூனிக் குறுகிய தோற்றம் ஈழத்தமிழர்களின் துயரத்தினொரு குறியீடாக விளங்கியதுபோல் பட்டது.

"சேர், வேலை செய்யாமல் இங்கு வாழ்க்கையைக் கொண்டு நடத்துவது மிகவும் சிரமமாகவுள்ளது. வேலை எடுக்க வேண்டுமென்றால் 'சமூகக் காப்புறுதி இலக்கத்தைக் ' கேட்கிறார்கள்.."

அதனைக் கேட்டதும் அந்த அதிகாரி சிறிது சிரித்தான். அத்துடன் " நியுயார்க்கிலிருக்கிறாய். நியுயார்க் உயர்ந்த கட்டடங்களுக்கு மட்டும் புகழ்பெற்றதொன்றில்லை. இன்னுமொன்றிற்கும் அது புகழ் மிக்கது. தெரியுமா?" என்றதும்

இளங்கோ "தெரியும். கேளிக்கையான இரவு வாழ்க்கைக்கும் புகழ் பெற்றதுதான்" என்று பதிலிறுத்துச் சிரித்தான். அதற்கு 'டிம் லாங்கின்' தன் பருத்த தொந்தியசையச் சிரித்தான்: "மிக விரைவிலேயே நீ நல்லாத்தான் நியூயார்க்கைப் புரிந்து வைத்திருக்கிறாய். ஏதாவது அனுபவங்களுண்டா?" என்றும் கண்களைச் சிமிட்டினான்; அத்துடன் "அதுவல்ல சரியான பதில்" என்றும் 'பொடி' வைத்துப் பேசினான்.

"எனககுத் தெரியவில்லையே" என்று பதிலுக்கு இளங்கோ தலையைச் சொரிந்தான்.

டிம் லாங்கினே தொடர்ந்தான்: "சரி சிறியதொரு துப்பு தருகிறேன். கண்டு பிடிக்கிறாயா பார்க்கிறேன். உன் இன்றைய இருப்பிலேயே பதிலும் அடங்கியுள்ளது. அதாவது என் கேள்விக்குரிய சரியான பதில் உன் இன்றைய இருப்பிலுள்ளது. எங்கே பதிலை இப்பொழுது கூறு பார்க்கலாம்?"

இளங்கோவுக்கு அந்த வெள்ளையினத்து அதிகாரியின் போக்கு சிறிது வியப்பினைத் தந்தது. மிகவும் வேடிக்கையாகப் பேசுகிறான். வழக்கமான அதிகாரிகளுக்குரிய கண்டிப்பு, கர்வமெதுவுமில்லாமல் மிலவும் இயல்பாக, நட்புணர்வுடன், குதூகலமிக்க சிறுவனொருவனின் ஆனந்த உணர்வுகுடன் அவன் பேசுகிறான். அவனது கேள்விக்கு பதிலிறுக்க முடியாமல் இளங்கோ வெற்றிகரமாகப் பின்வாங்கினான்.

டிம் லாங்கினே தொடர்ந்தான்: "நியூயார்க் மில்லியன் கணக்கில் வசிக்கும் சட்டவிரோதக் குடிகளுக்கும் பெயர் போனதென்பதை எவ்விதம் நீ மறக்கலாம்? நீயே அவர்களிலொருவன்தானே. இவர்களெல்லாருமே இங்கு எந்தவிதச் சட்டரீதியான ஆவணங்கலுமில்லாமல்தான் வேலை செய்கிறார்கள். அவர்களைப் போல் உன்னாலும் வேலை செய்ய முடியும். போய்ச் செய். உன்னுடைய கோப்புக்குக்குரிய சரியான மறுமொழி வாஷிங்டனிலுள்ள இராஜாங்க திணைக்களத்திலிருந்துதான் வரவேண்டும். அதன்பிறகுதான் எங்களால் எதுவும் செய்ய முடியும். இருந்தாலும் உன் நிலை பற்றிய என் பரிந்துரையினை அனுப்பி வைக்கிறேன். விரைவிலேயே உனக்கு அவர்களிடமிருந்து பதில் வருமென்று எதிர்பார்க்கிறேன். அதுவரையில் நியூயார்க் உன்னையும் வாழவைக்குமென்று நிச்சயமாக நம்புகிறேன்."

"அது சரி.. களவாக வேலை செய்து கொண்டிருக்கும்போது உங்களது அதிகாரிகள் யாராவது என்னைப் பிடித்து விட்டால்.." என்று இளங்கோ இழுத்தான். அதற்கு டிம் லாங்கின் "நீ தற்போது வைத்திருக்கிற ஆவணங்களைக் காட்டு. அவர்கள் புரிந்து கொள்வார்கள். நீ சட்டவிரோதமாகவிருந்தாலும் ச்ட்டரீதியாகத்தான் பதிவு செய்து இருக்கிறாய். எனவே அவர்கள் புரிந்து கொள்வார்கள். வெருட்டினால் பசி பொறுக்கவில்லை. அதுதான் வேலை செய்கிறேன். வேண்டுமானால் தடுப்பு முகாமிலேயே கொண்டு சேர்த்து விடுங்கள் என்று சொல். ஆளை விடு என்று ஓட்டம் பிடித்து விடுவார்கள். ஒன்றுக்கும் பயப்படாதே. அமெரிக்கா நிச்சயம் உன்னை வாழ வைக்கும்" என்று பதிலுரைத்து, வாழ்த்தி வழியனுப்பி வைத்தான். அவனுக்கு நன்றி கூறி விட்டு வெளியில் வந்த இளங்கோவின் சிந்தையில் அந்த அமெரிக்கக் குடிவரவுத் திணைக்கள அதிகாரியின் பருத்த தொந்தியும், வேடிக்கையான பேச்சும், நியூயார்க்கில் சட்டவிரோதமாக வேலை செய்து வாழ்வதெப்படி, அகப்பட்டால் குடிவரவுத் திணைக்கள அதிகாரிகளிடமிருந்து தப்புவதெப்படியென்று டிம் லாங்கின் தந்த ஆலோசனைகளும் அவனைப் புதிர் நிறைந்ததொரு மனிதனாகப் புலப்படுத்தின; சிரிப்பும் கூடவே வந்தது.

[தொடரும்]

தொடர் நாவல்: குடிவரவாளன் - வ.ந.கிரிதரன் -

அத்தியாயம் பதின்மூன்று: வேலை வேண்டும்!
இன்னுமொரு பொழுது பூத்தது வழக்கம் போல் இருப்பியற் பிரச்சினைகளுடன். அருள்ராசாவும், இளங்கோவும் அன்றையப் பொழுதினை எப்படி ஆரம்பிப்பது, கழிப்பது என்ற சிந்தனையில் ஆழ்ந்திருந்தனர். இளங்கோ இவ்விதம் உரையாடலினை ஆரம்பித்தான்:

"அருள், எப்ப்டியாவது இன்னுமொரு வேலையைக் கெதியிலை எடுக்க வேணும். உன்னுடைய 'பிளான்' என்ன?"

"நானும் எனக்கேற்ற வேலையொன்றைத் தேடிக் கோண்டுதானிருக்கிறன. கிடைக்க மாட்டேனென்கிறதே. எங்கை போனாலும் 'சோசல் இன்சுரன்ஸ் கார்ட்'டை அல்லவா கேட்கிறான்கள். எனக்கென்னென்றால் 'இமிகிரேஷன் ஓபிசு'க்குப் போய் அதை எடுக்கிற வழியை முதலிலை பார்த்தால் நல்லதென்று படுகுது. நீ என்ன சொல்லுறாய்?"

"அருள். நீ சொல்லுறதும் நல்ல 'ஐடியா'தான். இன்றைக்கு முதலிலை அங்கு போய் விசாரித்து விட்டுப் பிறகு அங்கிருந்தே வேலை தேடும் படலத்தைத் தொடங்குவோம்.."

"அதுவும் நல்ல 'ஐடியா'தான். அப்பிடியே செய்வம். அதுக்கொரு முடிவைக் கண்டு விட்டு, அது சரிப்படாதென்றால் நானும் உன்னைப் போல எந்த வேலையை என்றாலும் செய்ய என்னைத் தயார் படுத்த வேண்டும்."

"அது சரி. உனக்கு இமிகிரேசன் ஓபிஸ் எங்கையிருக்கிறதென்று தெரியுமே?'

"26 'பெடரல் பிளாசா'வில்தானொருக்கு. பிரச்சினையென்னவென்றால்..."

"என்ன பிரச்சினை..?

" 'சோசல் இன்சுரன்ஸ் காட்'டை எடுக்க வேண்டுமென்றால் அதற்கு வேறு சில அடையாள அட்டைகள் தேவை. முதலிலை எங்களுக்கு இன்னும் சட்டரீதியாக வேலை செய்கிறதுக்குரிய பத்திரங்களெதுவுமில்லை. 'பாஸ்போர்ட்' கூட கையிலை இல்லை.."

"'பாஸ்போர்ட்' ஏனில்லை. 'இமிகிரேசனி'டம்தானே குடுத்திருக்கிறம்தானே. அதை அவங்கள் சரிபிழை பார்க்கலாம்தானே"

"அடுத்தது... கோஷ் சொன்னவன்..."

"என்ன சொன்னவன்?"

"பாஸ்போர்ட் அதோடை வேலை தருபவடரிடமிருந்து வேலையை உறுதி செய்தொரு கடிதமும், மற்றது வேலை செய்வதற்குரிய அனுமதிப் பத்திரமும் தேவையாம். அவை இருந்தால்தான் 'சோசல் இன்சுரன்ஸ் கார்ட்' எடுக்கலாமாம்."

"அடக் கோதாரி. இதுக்கு எங்கை போறது. சாணேற முழம் சறுக்கும் போலைக் கிடக்கே.."

"வேறை என்ன செய்யிறது. சும்மா இருக்கிறதை விட முயற்சி செய்யுறது நல்லதுதானே.."

"இது சரி வராட்டி என்ன செய்யிறதாம்..."

"இது சரிவராட்டி ஏதாவது சமூகசேவை செய்யும் அமைப்பொன்றிடமிருந்து சட்டரீதியான சேவையைப் பெற 'டிரை' பண்ணலாம். அபப்டிப் பட்ட பல அமைப்புகள் இங்கை இருக்காம்"

"எதுக்கும் முதலிலை இமிகிரேசன் ஓபிஸுக்குப் போய் அங்கையிருக்கிற ஒரு ஓபிசரைக் கண்டு கதைப்போம். எங்களிடமிருக்கிற நாட்டிலை சட்டவிரோதமாகத் தங்கியிருக்கிற 'இமிகிரேசன் டொக்குமன்றைக்' காட்டி கதைப்போம். தற்போதைக்கு அது ஒன்றதுதான் எங்களிடமிருக்கிற ஒரேயொரு 'டொக்குமென்ற்'. முதலிலை அதை வைத்து ஆரம்பிப்பிப்போம்"

"நீ சொல்லுறதும் சரிதான். 'ட்ரை' பண்ணாமல் என்ன நடக்குமென்று முதலிலையே முடிவெடுக்க முடியாது. கேட்காமல் எதுவுமே கிடைக்காதுதானே"

"அதுதான் ஒரு கிறித்தவ பாட்டுக் கூட இருக்குதே.."

"எந்த பாட்டை நீ சொல்லுறாய்?"

"கேளுங்கள் கிடைக்கப்படும். தட்டுங்கள் திறக்கப்படும். கேளுங்கள் கிடைக்குமென்றார் இயேசு கேளுங்கள் கிடைக்குமென்றார்"

"சரி கேட்டுப் பார்ப்பம் இமிகிரேசன் ஓபிசரிடம். கிடைத்தால் நல்லது. கிடைக்காவிட்டாலும் எதையாவது செய்து பிழைத்துக் கொள்ள வேண்டியதுதான்."

"அருள்! நீ 'மைக்கல் கிரிக்டனின்' ஜுராசிக் பார்க் நாவல் படிச்சனியா?"

"ஸ்டீபன் ஸ்பில்பேர்க்கின் படமாய் வந்து சக்கை போடு போட்டதே அந்த ஜுராசிக் பார்க்கைத்தானே சொல்லுறாய்?"

"அதே ஜுராசிக் பார்க்கைத்தான் சொல்லுறன். உயிரினம் எப்படியும் தப்புறதுக்கு வழியைக் கண்டு பிடித்துவிடுமென்பதை அற்புதமாகச் சொல்லும் கதை. இயற்கையுடன் விளையாடக் கூடாதென்பதையும் இன்னுமொரு கோணத்தில் சொல்லும் கதை. விஞ்ஞான தொழில்நுட்பத்தின் மாற்றுப் பக்கத்தை, விபரீத விளைவுகளை அறிவுறுத்தும் கதை. எதனையும் வியாபாரமாக்கி, விறபனைப் பொருளாக்கி இலாபம் பண்ணத் துடிக்கும் இன்றைய மேற்குலக சமுதாயத்தின் ஆசைக்கு விழுந்த பலத்த அடியினைச் சொல்லும் கதை. இப்படியே சொல்லிக் கொண்டே போகலாம்.."

"அது சரி. அதுக்கும் எங்கட நிலைக்குமென்ன சம்பந்தம். எதுக்காக அதை இங்கை சொல்ல வாறாய் இளங்கோ"

"எதுக்குச் சொல்ல வாறனென்றால்.... 'சோசல் இன்சுரன்ஸ் கார்ட்' கிடைக்குதோ இல்லையோ நாங்கள் தொடர்ந்தும் வாழத்தான் போறம். இங்கை இருக்கிற வரைக்கும் முடிந்த வரைக்கும் முயற்சி செய்யத்தான் போறம். அந்தக் கார்ட் கிடைத்தால் வாழ்க்கை இலகுவாகக் கழியும். நல்லதொரு வேலை எடுத்து முன்னேறலாம். இல்லையென்றால் எந்த தொட்டாட்டு வேலையையென்றாலும் செய்து இருப்பைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டியதுதான்"

இவ்விதமாக அவர்களுக்கிடையில் உரையாடல் தொடர்ந்தது. எவ்விதமாவது குடிவரவுத் திணைக்கள அதிகாரியொருவரிடம் தங்களது நிலையினை விளக்கிச் சமூகக் காப்புறுதி அட்டையினைப் பெறுவதற்கு இயலுமானவரையில் முயற்சி செய்ய வேண்டும். அவருக்கு இலங்கைத் தீவின் இன்றைய அரசியல் நிகழ்வுகளை, நிலைமைகளை, அண்மைக்காலத்து நிகழ்வுகளை குறிப்பாகக் கறுப்பு யூலை 83 நிகழ்வுகளை, தொடர்ச்சியாகத் தமிழ் மக்கள் மேல கட்டவித்து விடப்படும் அரச பயங்கரவாத நடவடிக்கைகளை, இவறையெல்லாம் விரிவாக ஆதாரங்களுடன் அவருக்கு விபரிக்க வேண்டும். ஈழத் தமிழர்கள் சம்பந்தமாக மேற்கு நாட்டு வெகுசன ஊடகங்களில் வெளிவந்த செய்திக் குறிப்புகளின் போட்டோப் பிரதிகளை அறுக் சேர்த்து வைத்திருந்தது நல்லதாகப் போய் விட்டது. அவற்றை ஆதாரங்களாகக் காட்ட முடியும். இவ்விதமாக நண்பர்களிருவரும் உரையாடி முன்னெடுக்க வேண்டிய ஆரம்ப கட்ட நடவடிக்கைகளைப் பற்றி அலசி ஆராய்ந்து அவை பற்றித் தீர்க்கமான முடிவினையெடுத்தார்கள். அதன் பின் அவர்கள் ஏற்கனவே தீர்மானித்தபடி 'பெடரல் பிளாசா'விலுள்ள குடிவரவுத் திணைக்களத்துக்குச் செல்ல முடிவு செய்து அன்றைய பயணத்தை அவ்விதமே ஆரம்பித்தார்கள்.!

[தொடரும்]

தொடர் நாவல்: குடிவரவாளன் - வ.ந.கிரிதரன் -

அத்தியாயம் பன்னிரண்டு: மீண்டும் தொடங்கும் மிடுக்கு!

அதிகாலை நேரத்திற்குரிய மெல்லிய குளிர் எங்கும் பரவிக் கிடந்தது. கீழ் வான் சிவந்து கிடந்தது அதிகாலைக் கருக்கிருளுக்கோர் அழகினை அளித்தது. விடிவெள்ளியும், முழு நிலவும் நட்சத்திரக் கன்னியர் சிலருடன் பிரிவதற்கஞ்சி இன்னும் உறவாடிக்
கொண்டிருந்தார்கள். நியுயார்க் நகரை நோக்கித் திரும்பிக் கொண்டிருந்த இளங்கோவின் சிந்தனை கடந்த வார நிகழ்வுகளையே அசை போட்டுக் கொண்டிருந்தது. அவனால் அந்தக் கிரேக்கனின் கடலுணவு உணவகத்தில் ஒரு வாரம் வரையிலேயே தாக்குப் பிடிக்க முடிந்தது. வெள்ளிக் கிழமை மட்டும் தாக்குப் பிடிப்பதே அவனுக்குப் பெரும் சிரமமாகப் பட்டது. வெள்ளிக் கிழமை காலை வேலையினை ஆரம்பிப்பதற்கு முன் அவன் தன் முடிவினை நெப்போலியனுக்குக் கூறியபோது அவன் சிறிதும் இதனை , இவ்வளவு சீக்கிரத்தில், எதிர்பார்க்கவில்லையென்பதை அறிய முடிந்தது. அதனை அவனது வினாவும் நிரூபித்தது.

"உனக்கு வேலை பிடிக்கவில்லையா?"

அதற்கு இளங்கோ இயலுமானவரையில் தன் மனச்சாட்சியின்படியே பதிலிறுக்க முடீவு செய்தவனாக "வேலை பிடிக்கவில்லையென்று சொல்வதற்கில்லை..." என்று கூறிக் கொண்டிருக்கையில் நெப்போலியன் இடைமறித்துக் கேட்டான்:

"பின். வேலை சிரமமாயிருக்கிறதா?"

"அதுதான் முதற் காரணம். தொடர்ந்து நீண்ட மணி நேரம் வேலை செய்து விட்டு இருப்பிடம் திரும்பிப் படுக்கையில் சாய்ந்தால்
மறுநாள் எழும்பியதுமே மீண்டும் வேலைக்கு வந்து விட வேண்டும். அது மிகவும் சிரமமாயிருக்கிறது. உடம்பும் முறிந்து போய் விடுகிறது. அடுத்தது..."

"அடுத்தது..."

"சிரமமப்படுகின்ற அளவுகேற்ற ஊதியமுமில்லை. இரண்டு பேருடைய வேலையை ஒரு ஆளே செய்வது அவ்வளவொன்றும்
எளிதாகவில்லை.."

இவ்விதம் இளங்கோ கூறியது நெப்போலியனுக்குச் சிறிது திகைப்பினை அளித்திருக்க வேண்டும். அதனை அவனது அடுத்த கேள்வி நிரூபித்தது: "இரண்டு பேருடைய வேலையா..? யார் உனக்குக் கூறினார்கள்?"

"யார் சொல்ல வேண்டும்.. வேலையின் அளவீனைப் பார்த்தாலே தெரியவில்லையா?"

இவ்விதம் இளங்கோ கூறியது நெப்போலியனுக்குச் சிறிது விசனத்தை அளித்திருக்க வேண்டும்.

"இருப்பதோ சட்டவிரோதம். இதை விட வேறென்ன வேலையினை நீ எதிர்பார்க்கிறாய்.?"

இவ்விதம் நெப்போலியன் அவனது நிலையினைச் சுட்டிக் காட்டிக் கூறியது இளங்கோவுக்கு ஆத்திரத்தை அளித்தது. அது குரலில் தொனிக்க அவன் இவ்விதம் கூறினான்: "நான் சட்டவிரோதமாகத் தற்போதிருந்தாலும் அதற்குரிய பத்திரங்களுடன்தான் இருக்கிறேன்.
சட்டரீதியாகத்தான் நாட்டினுள் நுழைந்தவன். தவிர்க்க முடியாத நிலையில் இங்கு தங்க வேண்டியதாயிற்று." அதே சமயம் இவ்விதம் இவனுடன் தன் சொந்த வாழ்வு பற்றிய விபரங்களையெல்லாம் தெரிவிக்கத்தான் வேண்டுமா என்றும் பட்டது. இவ்விதம் நினைத்தவன் "என்னால் இந்த வேலையைச் செய்யவில்லை என்று வைத்துக் கொள். என்னால் செய்யக் கூடிய வேலைகளைத் தேடிப்பார்க்கிறேன். இங்கிருந்து கொண்டு இந்த வேலையை இன்னும் ஒரு வாரம் செய்தேனென்றால் எனக்கு விசரே பிடித்து விடும். இப்பொழுது கூட என்னால் இந்த வேலையினைத் தொடர்ந்து செய்ய முடியும் நிபந்தனையொன்றின் அடிப்படையில்.." என்று இழுத்தான்.

அதற்கு நெப்போலியன் "என்ன நிபந்தனை விதிக்கிறாயா? இவ்விதம் நிபந்தனை விதிக்கும் முதல் ஆள் நீ தான். சரி உன்
நிபந்தனையைத்தான் சொல்லேன்.." என்றான்.

"பத்து மணித்தியாயம் மட்டுமே வேலை செய்வேன். அதற்குரிய ஊதியம் தரவேண்டும். மேலதிகமாக வேலை செய்ய வேண்டுமென்றால் அதற்குமுரிய ஊதியம் தரவேண்டும். இலவசமாகச் செய்ய என்னால் முடியாது. சிரமப்படுகிற அளவுக்கு ஊதியம் கிடைத்தால் மனதைச் சமாதானப்படுத்தவாவது முடியும். சிரமத்திற்குரிய பலன் சிறிதாவதிருக்க வேண்டும்."

இளங்கோவின் பதில் உண்மையிலேயே நெப்போலியனுக்கு வியப்பினை அளித்தது.

"இங்கு பார் என் நண்பனே. நீ நன்கு வேலை செய்யும் ஆள். மிகவும் கடுமையான உழைப்பாளி. உன்னை இழப்பது எனக்கு மிகுந்த கவலையினை அளிக்கிறது. உன்னை மாதிரி இன்னுமொருவனைத் தேடிப் பிடிப்பது மிகவும் சிரமம். ஆனால் நீ கேட்பதைத் தர எனக்கு உரிமையில்லை. உணவக்ச் சொந்தக்காரன் நிச்சயம் இதற்குச் சம்மதிக்க மாட்டான். நியூயார்க்கில் மில்லியன் கணக்கில் இத்தகைய வேலைக்கு நாயாய் அழைந்து கொண்டிருக்கிறார்கள். பீற்றரிடம் கூறினால் இன்னொருவனை அவன் அனுப்பி விடுவான். இருந்தாலும் இவ்வாரம் நீ கடுமையாக உழைத்ததற்காக நன்றி. இன்று மாலை உனக்குரிய ஊதியத்தைக் கணகெடுத்துத் தந்து விடுகிறேன். உன் எதிர்கால நல்வாழ்வுக்கு எனது வாழ்த்துக்கள்."

இவ்விதம் நெப்போலியன் வெளிப்படையாகக் கூறியது அவன்பால் சிறிது மரியாதையினை இளங்கோவின் மனதிலேற்படுத்தியது.
அவனைப் பொறுத்தவரையில் எந்த ஊதியத்திற்கும் வேலைக்கு ஆள் பிடிப்பது அவ்வளவு கஷ்ட்டமான காரியமில்லை. முகவன் பீற்றரின் அலுவலகத்தில் தவமிருக்கும் 'கொக்குக'ளின் ஞாபகம் நினைவிற்கு வந்தது.

அச்சமயம் அவனுக்கு எமிலியின் ஞாபகம் வந்தது. அங்கு பணி புரியும் பணிப்பெண்களில் அவள் சிறிது வித்தியாசமானவள்.
நியூஜேர்சியிலுள்ள கல்லூரியொன்றில் 'ஓட்டல் நிர்வாகம்' பற்றிய துறையில் படித்துக் கொண்டிருந்தாள். உண்மையில் அவள்தான்
அவனுக்கு அந்த வேலையை அவனுக்கு முன்னர் இருவர் செய்து கொண்டிருந்த விபரத்தைக் கூறியவள். நாள் முழுவதும் அவன் படும் சிரமத்தைக் கண்டு அவ்வப்போது ஓய்வெடுக்கும் சமயங்களில் அவனுடன் உரையாடுமொரு சம்யம் கூறியிருந்தாள். அத்துடன் நியூயார்க்கிலேதாவது வேலையினை பாரென்று அறிவுரையும் கூறியிருந்தாள்.

உண்மையில் எமிலி சிறிது கண்டிப்பானவளும் கூட. உதவிச் சமையற்காரன் மார்க் ஒரு வேடிக்கையான பேர்வழி. பெண்களென்றால் வழியும் பிரிவினன். அவர்களுடன் சல்லாபிப்பதில், அங்க சேஷ்ட்டைகள் புரிவதில் ஆன்ந்தம் கொள்பவன். அவர்கள் அப்பால் நகர்ந்ததும்
'எளிய விபச்சாரிகளென்று' நையாண்டி செய்பவன். அங்கு பணிபுரியும் பணிப்பெண்கள் ஒவ்வொரு முறை சமையலறைக்குள் வரும்போதும் அவர்களுடன் ஒரு சில நிமிடங்களாவது சல்லாபிக்கவும், அவர்களது பிருஷ்டங்களை வருடவும் அவன் தவறுவதேயில்லை. ஆனால் எமிலியுடன் மட்டும் அவன் அவன் பருப்பு வேகாது. அவளுடன் மிகவும் பெளவ்வியமாக நடந்து கொள்வான்.

இளங்கோவின் சிந்தனை எமிலியிலிருந்து மீண்டும் நிகழ்கால வாழ்க்கைப் பிரச்சினைக்குத் திரும்பியது. அருள்ராசா அவன் உடனேயே திரும்பியதும் நிச்சயம் 'நக்கல'டிப்பான். 'இதுதான் நான் இந்த வேலைக்கே போகவில்லை. எனக்கு முதலிலையே தெரியும் நீ நின்று பிடிக்க மாட்டாயென்று. ஏன் சொல்லுவானென்று இருந்தனான்' என்பான். யார் என்ன சொன்னாலும் கவலைப்படுவத்ற்கில்லை. மீண்டும் முகவன் பீற்றரிடம் செல்வதில் பயனில்லை. அவன் இப்படித்தான் ஏதாவதொரு இடத்திற்கனுப்பப் போகின்றான். நியூயார்க்கிலேயே
வேறெங்காவது தேடிப்பார்க்க வேண்டும். அதற்கிடையில் சமூகக் காப்புறுதி இலக்க அட்டையினை எடுக்க முடியுமாவென்று பார்க்க
வேண்டும். குறைந்தது ஒரு வாரமாவது தாக்குப் பிடித்ததால் கையில் கொஞ்சமாவது பணமாவதிருக்கு. இல்லாவிட்டால்
கஷ்ட்டமாயிருந்திருக்கும். அடுத்த முயற்சியினை இன்னும் முனைப்புடன் செய்வதற்கு இந்தப் பணம் உதவும். இவ்வாறு பல்வேறு சிந்தனைகளில் மூழ்கியவனாகப் பயணித்துக் கொண்டிருந்தானவன்.

வெளியினூடு மிகவும் வேகத்துடன் விரைந்து கொண்டிருக்கும் இந்தக் கோளத்தினுள் அவனது இந்தச் சிறிய பயணம் தொடர்ந்து
கொண்டிருக்கிறது. எத்தனை விசித்திரமான உலகம்! எத்தனை விசித்திரமான இருப்பு! விரையும் வேகத்தைக் கூட உணர முடிவதில்லை. உணராமல் எத்தனை கும்மாளங்களைப் போட்டுக் கொண்டிருக்கின்றோம். ஒவ்வொரு நிமிடமும் இந்தப் பூமிப பந்தின் எந்த மூலையிலாவது குண்டுகள் வெடிக்காமல் பொழுது கழிந்திருக்கிறதா? எத்தனை எததனை மோதல்களாலும், இரத்தக் களரிகளாலும் நிறைந்து போய்க் கிடக்கிறதிந்த உலகம். இவ்வளவும் இந்தப் பிரமாண்டமான வெளியினூடு விரையுமிந்தக் கோளத்தின் வாயுக் குமிழிக்குள் இருந்து கொண்டு ஆடும் கூத்தினால்தானே? இந்தக் குமிழியும் எந்தக் கணத்திலென்றாலும் உடைந்து விடலாம். ஏற்கனவே ஓட்டை போட்டாகி விட்டது. இன்னுமெத்தனை நாளைக்கோ இந்த இருப்புமிந்த உலகில்? அதனைக் கூட உணராமாலேனிந்த ஆட்டம்?

இத்தகைய தனித்த பயணங்களில், அதிகாலைகளில், அந்திப் பொழுதுகளில், இருண்ட நகரத்து வானை இரசித்து வருகையிலெல்லாம் அவனது மனம் இவ்விதமான இருப்பு பற்றிய தத்துவச் சிந்தனைகளிலாழ்ந்து விடுகிறது. அது அவனது வழக்கமாகியும் விட்டது. இவ்விதமே இந்தக் கணமே எல்லாவற்றையும் துறந்து ஓடி விடலாமாவென்றிருக்கும். மறுகணமே நடைமுறையின் வலைக்குள் சிக்கி அதிலாழ்ந்து விடுவான். இருத்தலிற்கான போராட்டத்தில் மூழ்கி விடுவான். வாழ்க்கை மீண்டுமொரு சுழலத் தொடங்கிவிடும். மகாகவியின் 'மீண்டும் தொடங்கும் மிடுக்கு' கவிதை வரிகள் சில ஞாபகத்திற்கு வந்தன. 'மப்பன்றிக் காலமழை காணா மண்ணில் சப்பாத்தி முள்ளும் சரியாய் விளையாது. ஏர் ஏறாது. காளை இழுக்காது. இருந்தும் பாறை பிளந்து பயன் விளைப்பான் அந்த விவசாயி. ஆழத்து நீரகழ்ந்து நெல் வளர்ப்பான். அந்த் நெல்லோ... 'சோ'வென்று நள்ளிரவில் கொட்டுமொரு மழையில்..., ஆட்டத்து மங்கையராயாடிய அப்பயிரினமோ வீழ்ந்தழிந்து பாழாகிப் போம். வெள்ளம் வயலை விழுங்கும். இருந்துமென்ன அந்த விவசாயி தளர்ந்து விடுவானா? வெள்ளம் வற்றியதும் வலக்கரத்தில் மண்வெட்டியேற்றி மீண்டும் கிண்டத் தொடங்கி விடுவான். சேர்த்தவற்றை முற்றும் சிதற வைக்கும் வான் பார்த்து அவன் அயர்ந்து விடுவதில்லை. முதலில் இருந்து முன்னேறுதற்காய் மீண்டும் தொடங்கும் அவன் மிடுக்கு'. இருப்பின் சவால்களை எதிர்த்துத் துணிச்சலுடன் வாழ்வை எதிர்நோக்கும் விவசாயி பற்றிய கவிதை மனித வர்க்கத்தின் சவால்களைக் குறிப்பாக நம்பிக்கையுடன் விபரிக்கும். இந்த வேலை போனாலென்ன? அவன் தளர்ந்தா போய் விடுவான். நிச்சயம் அவன் வாழ்வில் மீண்டும் தொடங்கும் மிடுக்கு! மீண்டும் தொடங்கும் மிடுக்கு! மீண்டும் தொடங்கும் மிடுக்கு!

தொடரும்]

தொடர் நாவல்: குடிவரவாளன் - வ.ந.கிரிதரன் -

அத்தியாயம் பதினொன்று: இளங்கோ இலங்கா ஆன காதை!

அந்தக் கடலுணவுக்குப் பெயர்பெற்ற உணவகம் நியூஜேர்சி மாநிலத்தின் 'நிவார்க்' என்னும் நகரில் பிரதான கடைத்தெருக்கண்மையில் அமைந்திருந்தது. இளங்கோ அவ்விடத்தை அடைந்தபொழுது அப்பொழுது காலை நேரம் பத்தைத் தாண்டி விட்டிருந்தது. முன்னரே முகவன் பீற்றர் ஏற்பாடு செய்திருந்ததன்படி தலைமைச் சமையற்காரன் நெப்போலியன் அவனை எதிர்பார்த்துக் காத்திருந்தான். முதல் வேலையாக உணவகத்திற்குக் கூட்டிச் சென்றவன் அங்கிருந்த உதவிச் சமையற்காரன் 'மார்க்'கை அறிமுகம் செய்து வைத்தான். நெப்போலியன் உருவத்தில் உண்மையான நெப்போலியனுக்கு எதிர்மாறான தோற்றத்திலிருந்தான். ஆறடிக்கும் சற்று அதிகமான உயரத்தில், அடர்த்தியான நரைத்த மீசையுடன் ஒரு காலத்தில் 'ஹாலிவூட்டி'னைக் கலக்கிய 'சார்ஸ் புரோன்சன்' போன்ற தோற்றத்திலிருந்தான். அவனுக்கு எதிர்மாறாக இளைஞனாக அகன்ற, சிரிப்புடன் கூடிய வட்ட முகத்துடன் காணப்பட்டான் மார்க். பணிப்பெண்கள் சிலர் அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தார்கள்.

மார்க்கைப் பார்த்து நெப்போலியன் பின்வருமாறு இளங்கோவை அறிமுகம் செய்து வைத்தான்: "மார்க். உன் தலையிடி இன்றுடன் தொலைந்தது. இனிமேல் இவன்தான் உனக்கு உற்ற உதவியாளனாகவிருப்பான். இன்றைக்கே வேலையினை ஆரம்பிக்கின்றான். இவனுக்குரிய அன்றாட வேலைபற்றிய அனைத்துத் தகவல்களையும் தெளிவாக விளக்கி விடு. இவனுடைய பெயர் என் வாயில் நுழைவதற்குக் கஷ்ட்டமானது. உன் பெயர் என்ன என்பதை இவனுக்குக் கூறு?"

"இளங்கோ" என்றான் இளங்கோ.

"இலங்கா.." என்று இழுத்து ஒருமுறை உச்சரித்துப் பார்த்தான் மார்க்.

"இலங்கா இல்லை. இளங்கோ" என்றான் இளங்கோ.

மீண்டும் மார்க்கும், நெப்போலியனும் ஒருமுறை "இலங்கா" என்றிழுத்தார்கள

"அதுவும் ஒருவிதத்தில் சரிதான். ஏனென்றால் நான் இலங்கையைச் சேர்ந்தவன். இலங்காவென்பதும் ஒருவிதத்தில் பொருத்தமாயிருக்கிறது" என்று இலேசாகச் சிரித்தான் இளங்கோ.

அச்சமயம் அவ்விடத்துக்குப் பணிப்பெண்ணொருத்தி ஓடி வந்தாள். "எமிலி" என்று அவளை அழைத்த நெப்போலியன் இளங்கோவிடம் "இலங்கா, இவள்தான் பணிப்பெண் எமிலி. மிகவும் நல்லவள். கலகலப்பானவள். இவளுக்கும் உன் உதவி மிகவும் தேவைப்படும். இவளைப் போல் இன்னும் சிலர் வேலை செய்கின்றார்கள். மேலும் சிலர் மாலையில் தான் வருவார்கள்" என்றான்.

எமிலியும் பதிலுக்கு அவனைப் பார்த்து சிநேகிதமான பார்வையொன்றினை வீசி 'ஹாய்' என்று கூறி விட்டுத் தன் பணியில் மூழ்கி விட்டாள்.

நெப்போலியன் மார்க்கிடம் "மார்க். இலங்காவுக்கு வேலை பற்றிய எல்லா விடயங்களையும் விளக்கி விடு. வேலையை அவன் இப்பொழுதே ஆரம்பிக்கலாம்" இவ்விதம் கூறியவன் இளங்கோவிடம் 'இலங்கா, என் அறைக்கு வா. உன்னிடம் இன்னும் சில விடயங்களைப் பற்றிப் பேச வேண்டும்" என்றான்.

அவனைத் தொடர்ந்து இளங்கோவும் அவனது காரியாலய அறைக்குச் சென்றான்.

அருகிலிருந்த இருக்கையினைக் காட்டியவன் 'இருக்கலாம்' என்பதற்குரிய சைகையினைக் காட்டினான். இளங்கோ அமர்ந்ததும் இவ்விதம் கூறினான்: "இங்கு எல்லோரும் உனக்கு ஒத்துழைப்பார்கள். நீ மட்டும் உன் வேலையினை ஒழுங்காகச் செய்தால் போதுமானது. மூன்று நேரமும் இங்கு உன் சாப்பாட்டினை முடித்துக் கொள்ளலாம். இன்றிரவு வேலை முடிந்ததும் உன்னை உன்னிருப்பிடத்தில் கொண்டு சென்று விடுவேன். நாளை முதல் அங்கிருந்து நீ வேலைக்கு வரவேண்டும் நடந்தே வந்து விடலாம். அவ்வளவு தொலைவில்லை. எனக்குத் தெரிந்த வயது முதிர்ந்த தம்பதியின் வீடுதான். மாடியில் அறைகளை வாடகைக்கு விட்டிருக்கிறார்கள். உன்னைப் போல் வேறு சிலரும் அங்கு தங்கியிருக்கிறார்கள். நல்லவர்கள்"

இளங்கோ மெளனமாகவிருந்ததைப் பார்த்து நெப்போலியன் "இலங்கா! உனக்கு ஏதாவது கேள்விகள் இவ்விடயத்திலிருந்தால் இப்பொழுதே கேட்டு விடு" என்றான்.

அதற்கு இளங்கோ "வேலை நேரம், மற்றும் அதற்குரிய ஊதியம் பற்றியெதுவும் கூறவில்லையே.. " என்றிழுத்தான்.

அதற்குரிய நெப்போலியனின் பதில் இவ்விதமாக அமைந்திருந்தது: "காலை 10 மணியிலிருந்து மாலை 10 மணிவரைதான் உனது வேலைநேரம். அதற்குள் உனக்குரிய வேலைகளையெல்லாம் முடித்து விட வேண்டும். அவ்விதம் முடிக்காவிட்டால் எவ்வளவு நேரம் சென்றாலும் முடித்து விட்டுத்தான் செல்ல வேண்டும். ஆனால் மேலிடத்தால் எனக்கிடப்பட்ட கட்டளையின்படி உனக்கு காலை பத்து மணியிலிருந்து இரவு பத்து மணிவரையில்தான் ஊதியம் வழங்குவார்கள். ஊதியமாக மணித்தியாலத்திற்கு முன்று டாலர்கள் வழங்கப்படும். அதே சமயம் உனக்கு உணவு மற்றும் இருப்பிடம் எல்லாம் இலவசமாகக் கிடைப்பதையும் நீ எண்ணிப் பார்க்க வேண்டும். உனக்கு இவ்விடயத்தில் மேலதிகமாக ஏதாவது கேள்விகளிருந்தால் என்னிடம் அவ்வப்போது கேட்டுக் கொள்ளலாம். இப்பொழுது நான் உன்னை மார்க்கிடம் ஒப்படைக்கப் போகின்றேன். அவன் உனக்கு உனது வேலை சம்பந்தமான எல்லா விடயங்களையும் விளக்குவான்."

அதன்பிறகு நெப்போலியன் இளங்கோவை உதவிச் சமையற்காரன் மார்க்கிடம் கொண்டு சென்று ஒப்படைத்தான். அத்துடன் " மார்க் இலங்காவை உன்னிடம் ஒப்படைக்கின்றேன். நீ முன்பே கூறியதுபோல் எல்லாவற்றையும் விளக்கிவிடு" என்று மேலும் கூறிவிட்டகன்றான்.

மார்க் இளங்கோவிடம் "இலங்கா, ஏதாவது சாப்பிட விரும்பினால் சாப்பிட்டுக் கொண்டே பேசலாம்" என்றவன் முட்டையும் வதக்கிய உப்பிடப்பட்ட பன்றியிறைச்சியும் கூடிய வெண்ணெயிடப்பட்ட வாட்டிய பாண் துண்டுகளைக் கொண்டு வந்து வைத்தான். அத்துடன் குடிப்பதற்கு ஆரஞ்சுப் பழச்சாறும் கொண்டு வந்தான். அத்துடன் தனக்குக் குடிப்பதற்குத் தேநீர் கொண்டு வந்தான். சிறிது நேரம் இளங்கோ உண்பதைப் பார்த்துக் கொண்டிருந்தவன் இளங்கோவுக்குரிய நாளாந்தப் பணிகளை விபரிக்கத் தொடங்கினான்:

"இலங்கா, உன்னுடைய முக்கியமான வேலைகளாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம். முதலாவது முக்கியமான வேலை பணிப்பெண்கள் அவ்வப்போது கொண்டு வரும் கோப்பைகளை அதற்குரிய கோப்பை கழுவும் இயந்திரத்தில் உடனடியாகக் கழுவி வைப்பது. அப்பொழுது கோப்பைகளில் பாவிக்காமல் வரும் வெண்ணெய்க் கட்டிகள், பழக்கூழ் ('ஜாம்') போன்றவற்றை எறியக் கூடாது. அவற்றை இன்னுமொரு கோப்பையில் சேகரிக்க வேண்டும். அத்துடன் சில சமயங்களில் திரும்ப வரும் பெரு இறால்களின் ('லாப்ஸ்டர்') கோதுகளையும் சேகரிக்க வேண்டும்.

அது முதலாவது முக்கியமான பணி. அதில் நீ தாமதித்தால் பணிப்பெண்கள் திணறிப் போவார்கள். எனவே ஒவ்வொரு முறை அவர்கள் கோப்பைகளைக் கொண்டு வந்ததுமே இயலுமானவரையில் உடனடியாகக் கழுவி வைத்து விட வேண்டும். இரண்டாவது முக்கியமான பணி எனக்கு நீ ஒத்துழைப்பதுதான். ஒவ்வொரு முறையும் மீன்கள், இறைச்சி வகைகள் போன்றவற்றைப் பொறித்து விட்டுக் கறிச்சட்டிகளை அதோ அந்தத் தொட்டிகளில் போட்டு விடுவேன். நீ கோப்பை கழுவும் சமயங்களில் அவ்வப்போது அந்தத் தொட்டியையும் கவனித்துக் கொள்ள வேண்டும். ஓரளவு நிறைந்ததுமே அவற்றைக் கழுவி வைத்தால் உனக்கும் வேலை இலகுவாகிவிடும். எனக்கும் பெரிய உதவியாகவிருக்கும். அடுத்த முக்கியமான பணியாக அவ்வப்போது அசுத்தமாகி விடும் சமையலறைத் தரையினைச் சுத்தம் செய்வது. சமையலறை மட்டுமல்ல, உணவகத்தின் தரையையும் கேட்கப்படும் பட்சத்தில் துப்புரவாக்கி விட வேண்டும். இறுதியாக இரவு உணவகம் மூடியதும், உணவகம் முழுவதையும் கூட்டித் துப்புரவாக்கி விட வேண்டும். குப்பைகளைக் கட்டி வெளியில் எடுத்துச் சென்று வைத்து விட வேண்டும். இவ்வளவும்தான் உனது பிரதான நாளாந்தக் கடமைகள். வேலை சிறிது சிரமமானதுதான். ஆனால் அதனை இலகுவாக்குவது உனது கைகளில்தானுள்ளது"

மார்க்கின் விபரிப்பு இளங்கோவுக்குப் பிரமிப்பினைத் தந்தது. அவனது அதுவரையிலான வாழ்நாளில் அவன் உடல் உழைப்பினை வாழ்வுக்காகவென்று மேற்கொண்டதில்லை. இதுதான் முதலாவது தடவை அவ்விதம் மேற்கொள்ளப் போகின்றான். சிறு வயதிலிருந்தே அடிக்கடி வருத்தம் வந்து விடும் மெலிந்த உடல்வாகு அவனுடையது. உடல் பலகீனமாகிவிடும் சமயங்களிலெல்லாம் ஒருவிதமான மூட்டுவலியால் உபாதைப்படத் தொடங்கிவிடுவான். ஊரிலிருந்த காலகட்டத்தில் அவனது அம்மா தேங்காய் உரிப்பதற்குக் கூட அவனை அனுமதிக்க மாட்டாள். அவ்விதம் பொத்திப் பொத்தி அவனை வளர்த்திருந்தாள்.

அவனது மெளனத்தைக் கண்ட மார்க் கேட்டான்: "என்ன இலங்கா! பயந்து விட்டாயா? இதற்கு முன்பே உனக்கு இது போன்ற ஏதாவது அனுபவமிருக்கிறதா?"

இல்லையென்று கூறினால் ஒரேயடியாகக் அனுப்பி விட்டாலும் விடுவார்கள். எத்தனையோ நாட்கள் காத்திருந்து , 'ஓடு மீன் ஓடி, உறு மீன் வருமளவும் வாடிக் காத்து நின்ற கொக்காக' நின்று பெற்ற வேலையல்லவா. அவ்வளவு இலகுவில் நழுவ விட்டு விடலாமா? எனவே இளங்கோ பின்வருமாறு பதிலிறுத்தான்:

"பயமா! எனக்கா! இந்த வேலைக்கா! எனக்குப் இந்த வேலை பழைய ஞாபகங்களை நினைவூட்டி விட்டன" என்றான்.

"பழைய ஞாபகங்களா..!" என்று வியந்தான் மார்க்.

"முன்பு ஒருமுறை உன்னவர்களினொருவனின் கப்பலில் இது போன்ற வேலையினைச் செய்திருக்கின்றேன். ஏன் இலங்கையில் இருந்த காலகட்டத்தில் கூட என்னூர் சுபாஸ் கபேயில் இது போன்ற வேலைகளைச் செய்திருக்கின்றேன் (வாழ்க சுபாஸ் கபே என்று மனது வாழ்த்தியது). அந்த நாள் ஞாபகங்கள் வந்து விட்டன" என்றான்.

மார்க் சிரித்தபடியே "நீ சொல்வது சரிதான். பழசு எப்பொழுதுமே பொன்தான்" என்றவன் தனக்குள் 'ஆள் பார்வைக்குத்தான் மெலிந்து, ஒல்லியாகவிருக்கின்றான். உண்மையில் இந்த விடயத்தில் பழமும் தின்று கொட்டையையும் போட்டவனாகவிருக்க வேண்டும். முகவன் பீற்றர் சரியானவனைத்தான் தேர்ந்தெடுத்து அனுப்பியிருக்கின்றான். இவ்வளவு காலமும் கறிச்சட்டிக் கழுவ, கோப்பை கழுவவென்று இரண்டு பேரை வைத்துச் சிரமப்பட்டது போதும். அபபடியிருந்தே அந்தக் கள்ளன்களிருவரும் சொல்லாமல் கொள்ளாமல் ஓடி விட்டான்கள். நல்ல வேளை இவனுக்கு அந்த விடயம் தெரியாது. தெரிந்திருந்தால் உண்மையில் பயந்திருப்பான். இவனெப்படி இந்த இரண்டு வேலையையும் செய்கிறானென்று பார்ப்போம்' என்றெண்ணிக் கொண்டான்.

இவை எதுபற்றியும் தெரியாத 'இலங்கா'வென்கின்ற இளங்கோ பணிக்குரிய மேலங்கிகளை அணிந்து கொண்டு தன் பணியினை ஆரம்பித்தான்.


தொடரும்]