Sunday, September 24, 2006

வ.ந.கிரிதரனின் 'திண்ணை'க் கவிதைகள்!

முல்லை = பாலை!

எத்தனையோ நாட்களாகி விட்டன
நான் இந்த வனத்தில் சிக்கி.
யார் சொன்னது கனல்வது
பாலைகள் மட்டும் தானென்று ?
வந்து பாருங்கள் ஒருமுறை
இந்த முல்லையினுள்.
முல்லைகளே பாலைகளான
விந்தையினைப் புரிந்து கொள்வீர்கள்.
பாலைகளில் தான் கானல் நீர்
பாய்வதென்பதில்லை.
பாருங்கள் இந்தப் பெருவனத்தை.
இங்கும் தான் கானல்கள்
பாய்கின்றன.
கொதிக்கும் அனலிற்குள் சுமந்து செல்லும்
ஒட்டகங்கள் அங்கு மட்டும் தானா ?
வந்து பாருங்கள் இங்கே.
இரண்டு கால் ஒட்டகங்களை
இங்கே நீங்கள் தாராளமாகவே
காணலாம். இவற்றால்
இருப்பையே இரசிக்க
முடியாத அளவிற்கு
முதுகில் சுமைகள்.
சுமந்து சுமந்து சுமந்து
சுமையே வாழ்வாகிப் போன
ஒட்டகங்கள் இவை.
சுழன்று வீசும் பெருங்காற்று
அங்கு மட்டும் தானென்பதில்லை.
இங்குமுண்டு.
ஓங்கிய விருட்சங்களிற்கிடையில்
ஒருமுறை நின்று பாருங்கள்
வீசுவது பெருங்காற்றா இல்லையா
என்பதைப் புரிந்து கொள்வீர்கள்.
வனமென்றால் அங்கொரு மரமிருக்கும்.
அதன் கீழ் இருக்க நிழலிருக்கும்.
அதன் மேல் புள்ளிருக்கும்.
இங்கு மரத்தின் நிழலிலும்
கனலிருக்கும். இரு காற்
புள்ளால் நிறைந்திருக்கும்
மரங்களில் சிறகு விரிக்கும்
நிஜப் புள்ளெங்கே ?
விரிந்திருக்குமிந்த காங்க்ரீட்
வனத்திலிருந்து
கொண்டு
வியந்து கொண்டிருக்கின்றேன்
இன்னும் முல்லைக்கும் பாலைக்கும்
இடையிலுள்ள
வேறுபாடுகளையெண்ணி எண்ணி.

நன்றி: திண்ணை Tuesday October 22, 2002

தாயே! என்னிருப்பில் உன்னிருப்பறிந்தேன்!
உன்னிருப்பாலிருப்பின் மறுப்புதனை
உணர்த்தியெங்கு சென்றாய் ? தாயே!
எங்கு சென்றாய் ?
நினைவுக் கோளத்தினொரு
சித்தவிளையாட்டாய்
இருந்து நீ சென்றதெல்லாம்
அன்னையே! என்
எண்ணப் பறவைகளின் வெறும்
சிறகடிப்போ ? இருந்தவிருப்பை
இதுவரை நான் இவ்விதம்
உணர்ந்தேனா ? இருப்புணர்ந்து
புரிவதற்கு உன்னிருப்பேயொரு
காரணியாயமைந்த விந்தையென்னே!
உன்னிழல் தொடர்ந்து வரும்
குஞ்சுகளாய் வருமெமையரவணைத்தாய்.
காத்து நின்றாய்.
உணர்வெல்லாம் காற்றாக நீ போனதினால்
நனவாய்க் கனவாய் வந்து வந்து
மோதும் செயலென்னே!
என்றேனும் உனைப்பற்றி நீ எண்ணியதுண்டா ?
நாம் நன்றாயிருந்தாலது போதுமென
உன்பணிசெய்து கிடந்தாயே ?
தாயே!உனை நாமெங்கினிக் காண்போமோ ?
இங்கு நீ இருந்ததெல்லாம்,
இங்கு நீ நடந்ததெல்லாம்,
இங்கு நாம் திரிந்ததெல்லாம்
இருந்ததொரு இருப்போ ?
விரியும் வினாக்கள் விடைநாடிச்
சிறகடிக்கும் சிட்டுக்களாய்
சித்தவானினிலே.
விடை தெரியா விடைநாடும்
வினாக்கள் பல சுமந்து
ஒட்டகமாயிப் பாலையிலே
காலையும் மாலையுமாய்
பயணமின்னும் தொடருமோ ?
பயணத்தின் ஒளித்தெறிப்பெல்லாம்
கானற் காட்சியாய் கடந்ததுவோ ?
பாலையும் கானலோ ?
இப்பயணமும் கானலோ ?
இங்கு இப் பயணமும்
கானலோ ?
நெஞ்சிலுரமூட்டியெமை வளர்த்தாய் தாயே!
அஞ்சிடாதுளம் தந்தெமை வார்த்தாய்.
நீ இருந்ததெல்லாம் தாயே! வெறும் நிழலா ?
நீ இருந்ததெல்லாம் தாயே! வெறுங் கனவா ?
உன்னிருப்புமென்னிருப்பால் விளைந்ததொரு
பொய்யானதொரு மெய்யோ ? தாயே!
பொய்யானதொரு மெய்யோ ?
உனது சொல்லும் செயலும்
உணர்வும் பரிவும்
பரவிக்கிடக்கும் வெளிக்குள்
வெளியாய் பரவிக் கலந்தாய்.
மீண்டுமொருமுறை
'நான் ' 'ஏன் ' 'யார் ' என
ஆய்ந்திட வைத்துச் சென்றாய் ?
தாயே!
ஆயினுன் உயிரின் உறவின்
உதிரத் துளியாய் இன்னுமிங்கே
இருக்குமென் இருப்பில் நான்
உனைக் கண்டு தெளிவேன். அதனால்
உனைப் புரிந்தேனிந்த
உலகை அறிந்தேன். ஏன்
எனையும் தெரிந்தேன். என்
இருப்பில் இருந்த
உன்
இருப்பின் பொருள் உணர்ந்தேன்.
தாயே! பொருள் கண்டேன்.

நன்றி: திண்ணை Sunday April 7, 2002[அன்னையின் மறைவையொட்டி எழுதப்பட்ட கவிதையிது].