Friday, August 04, 2006

வ.ந.கிரிதரனின் கவிதைகள் சில!

வ.ந.கிரிதரனின் கவிதைகள் சில!

இருப்பொன்று போதாது
இருத்தல் பற்றியெண்ணி இருத்தற்கு!

- வ.ந.கிரிதரன் -

படைப்பின் நேர்த்தியெனைப்
பிரமிக்க வைத்திடுதல்போல்
பாரிலெதுவுமில.

வீழும் மலர்,
ஒளிரும் சுடர்,
துணையில் களிப்புறும் இணை,
நிலவுமனைத்திலுமிங்கு
நிலவும் நேர்த்தியென்
நினைவைக் கட்டியிழுத்தல்போல்
நினைவெதுவுமில.

முறையெத்தனையெனினும்
மறையாத நினைவுப் புயல்!

இருப்பு,
இன்னும் புதிர் மிகுந்து
இருந்திடுமோ?
இல்லை இதுவும்
'நிச்சயமற்றதொரு
தற்செயலின்'
சாத்தியம் தானோ?

இருப்பொன்று போதாது
இருத்தல் பற்றியெண்ணி
இருத்தற்கு!

விண்ணும் மண்ணும்!

வ.ந.கிரிதரன்

விரிந்து கிடக்குமிந்த விசும்பு
ஓர் உளவியல் நிபுணரைப் போல்
பலருக்கு அறிவுரை பகரும்
அதிசயத்தினைப் பார்த்து
ஒவ்வொரு முறையும்
அதிசயித்துப் போகின்றேன்.

'வானத்தைப் போல்.....'
அப்பொழுதெல்லாம் இவ்விதம்
நான் எனக்குள்ளேயே அடிக்கடி
கூறிக் கொள்வதில்
ஒரு வித மகிழ்ச்சியில்
பூரித்துப் போகின்றேன்.
இவ்விதமான வேளைகளில்
ஒரு மாபெரும் நூலகத்தினைப் போல்
இந்த வானம் எவ்வளவு விடயங்களைத்
தன்னுள் தாங்கி வைத்திருக்கின்றதென்பதை
உணர்ந்து கொள்கின்றேன்.
கற்பதற்கெவ்வளவு உள.
கற்பதற்கெவ்வளவு உள.

காலவெளி நூலகத்தில்தான்
கற்பதற்கெவ்வளவு உள.
அளவுகளுக்குள்ளிருந்து ஆகாயம் பார்க்கும்
மண்பார்த்து
அப்பொழுதெல்லாம் இந்தவான் தனக்குள்
நகைத்துக் கொள்ளுமோ!
அப்பொழுதெல்லாம் கீழ்க்கண்டவாறு
நினைத்துக் கொள்வேன்:
'படைகளுக்குள்ளோரிருப்பு! மேலும் படையெடுப்பெதற்கு?'
ஆகாயத்தின் இயல்புகளில் சில: அகலம்! விரிவு!
அவை கூறும் பொருளெம் அகம் உணர்தல் சாத்தியமா?
'அகத்தின் விரிவில், அகலத்தில்
மண்ணிலின்பம்! அட மானுடரே!'

தன்னியல்பினுள் விடைபொத்தி
வைத்திருக்கும் விசும்பு
மண்ணின் கேள்விகள் அனைத்துக்கும்.
விண்ணிலிருந்து மண்
கற்பதற்கு நிறைய உள.
கற்பதற்கு நிறைய உள.

முதற்காதல்!

அதிகாலைகளில் ஆடி அசைந்து
அகமசைத் தாயிழையவள் சென்றதெல்லாம்,
பொட்டிட்டுப் பின்னலிட்டு நிலம் பார்த்து
நடைபயின்று நங்கையவள் நடந்ததெல்லாம்,
இன்றும் நனவிடைதோய்கையில்
நினைவுக்கு வருவதுண்டு.

பிள்ளைப் பிராயத்தில் அவள்
பெண்மை கண்டு மயங்கினான் மாகவி.
முதற்காதல் வயப்படாத
மனிதருளரோ?

வாழ்வேயொரு போராய்
வாழ்வேயொரு புயலாய் மாறிடாது
நந்தவனமாயிருக்குமொரு பொழுது. ஆங்கு
பூத்திடும் அற்புதமானதொரு பூவோ
முதற்காதல்!

பெரும்பாலும் முதற்காதல்
முற்றுப் பெறுவதில்லை;
அதனால் தான் அது
முதற்காதல்!
இல்லாவிடினது இறுதிக்
காதலுமன்றோ!

நகர் வலம்!

- வ.ந.கிரிதரன் -

பெரு நகரின் இருண்டதொரு
அந்தியில் தொடங்கினேன்
என் நகர் வலத்தை
ஒரு மன்னனைப் போல.

சகதிக்குள் குளித்துக் கொண்டிருக்கும்
ஓர் எருமையைப் போல்
புரண்டு புரண்டு குளித்துக்
கொண்டிருந்தது
நகரம்.

வீதிக் கால்வாய்கள் வழியாக
மெதுமெதுவாய்
நகர்ந்து கொண்டிருந்த
வாகனப் பாம்புகளை
அவை வயிற்றில் சுமப்பவர்களை
வியப்புடன் ஒருவித அருவருப்புடனும்
பார்த்துக் கொண்டிருந்தனர்
நகரத்து மாந்தர்.

உயரமான, பழையதொரு
கோதிக் பாணியில் அமைந்திருந்த
கிறித்தவ
ஆலயமொன்றின் உச்சியில் வாசம்
செய்யும் புறாக்கள் சில
பறப்பதும் சிறகுகளை
உதறுவதுமாக
பறவைகளின் இருப்பின் சாட்சியாகச்
சோர்ந்து கிடந்தன.

இரவின் கருமையை கார் மேகங்கள்
மேலும் அதிகரித்துப்
பார்வைப் புலத்தினைப் பழுதாக்கின.

அழகான பெண்கள் அலங்கரித்தபடி
கரைகளில் நின்றபடி
கால்வாய்களில் நகரும் பாம்புகளையும்
அவற்றில் பயணித்தவர்களையும்
ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

இந்த இரவு முழுக்க
இவர்களது பொழுது
இவ்விதமே கழியும்?

ஆகாயமே கூரையாக வாழும்
ஊர் உலாத்தி மனிதர்கள்
உற்சாகம் குன்றி நகரின் நடுநடுவே தெரியும்
நந்தவனங்களில் போர்வைகளிற்குள்
நடுங்கி, முடங்கிக் கிடந்தனர்
எந்தவிதக் கணப்புமின்றி.

கிளப்புகளில் களியாட்டம்
தொடங்கி விட்டது.
மேடைகளில் ஆண்கள், பெண்கள்
ஆடைகளின்றி ஆடினர்
முலைகளைக் குறிகளைக்
குலுக்கியபடி.

பாயும் மதுவெள்ளத்தில் நீந்தி நீந்தி
மூழ்கினர் நகரத்தின்
பெருங்குடி மக்கள்.

போதை வஸ்த்து, பியர், விஸ்கி
பொங்கி நகரை வெள்ளக்த்தில்
மூழ்க வைத்தன.

திருடர்கள் கன்னக்கோல் வைத்தழகு
பார்க்கத் தொடங்கினர்.
துப்பாக்கிக் கரங்கள் நீண்டு
நகரைச் சுற்றி வளைக்கத் தொடங்கி விட்டன.

பகல் முழுக்கச் சட்டங்கள் இயற்றிவர்கள்,
உரிமை பற்றி வாய் கிழிய முழங்கியவர்கள்,
பார்களில், ஓட்டல்களில்
சல்லாபித்துக் கிடந்தனர்.

நகரை நோக்கி இன்னும் பலர்
படையெடுப்புகள் நிகழ்த்திக் கொண்டிருந்தார்கள்.
ஆலைகளில், உணவகங்களில்
இன்னும் மனிதர்கள் உழைத்துக்
கொண்டுதானிருந்தார்கள்
எந்தவித களிப்புமின்றி இருப்பிற்காக
ஆனால் பெருங் கனவுகளுடன்.

களியாட்டமிடும் நகரை
ஓரமாக ஒதுங்கி நின்று பார்த்து
ஏக்கத்துடன் சோகித்துக் கிடந்தன
கிராமங்கள்.

நகரத்தின் விளையாட்டைச்
சகிக்க முடியாத விண்மீன்கள்
தங்களை மூடித்
தொலைந்து போயின
எங்கோ.

விரிந்து கிடந்த பெருவானோ
எந்தவிதச் சலனமுமின்றி
மெளனித்துக் கிடந்தது
இது வழக்கமானதொரு
நிகழ்வு போல.

சுடர்களற்ற இந்த இரவில்,
இந்த மழையில்
எதற்காக நான்
என் நகர்வலத்தை
ஆரம்பித்தேன்?

நகரத்து மனிதனின் புலம்பல்!

- வ.ந.கிரிதரன் -

மரங்களிலிருந்து 'காங்ரீட்' மரங்களிற்கு...
குரங்கிலிருந்து மனிதனிற்கு...
ஆதிமானுடத்திலிருந்து அதியுயர் மானுடத்திற்கு...
பரிணாம நிகழ்வு, வளர்ச்சி என்கின்றது
முந்தாநாள் சந்திரனில்
கால் பதித்தவனின் சுற்றம்.
இதற்கொரு விளக்கம் வேறு...
ஒளியையுறுஞ்சுதலென்பது
இவ்விரு விருட்சங்களிற்கும்
பொதுவான செயலென்று கருத்தியல் வேறு.
உறுஞ்சுதலிலொன்றெனினுமிவை
உம்மைப்போல் விருட்சத்தோழரே!
உணவைப் படைப்பதில்லையே?
உயிரையெமக்குத் தருவதில்லையே?
தோழரே! நீரோ மேலும் நிழலைத்தந்தீர்!
உமது காயைத்தந்தீர்! கனியைத்தந்தீர்.!
இலையைத்தந்தீர்! இறுதிலும்மையே தந்தீர்!
ஆனால்.......
நவீன விருட்சங்களிவை தருவதென்ன?
'நன்றி மறத்தல்' நம்மியல்பன்றோ?
நன்றியை மறந்தோம்.
நண்பருனது தொண்டினையிகழ்ந்தோம்.
இதனால் இன்றெமக்கு
இரவு வானத்துச் சுடரையும்
நிலவுப்பெண்னின் எழிலையும்
பாடும் புள்ளையும்
இரசிக்கும் உரிமை கூட
மறுதலிக்கப் பட்டு விட்டது.
உம்மையிழந்ததினால்
இந்த மண்ணும் உலர்ந்து போனது.
'எரியுண்ட தேச'மென்பதாக
இன்று எமது கிரகமும்
'எரியுண்ட கிரகம்' என்பதாச்சு.

ஞானம்!

- வ.ந.கிரிதரன் -

நேரம், சூழல், இடம்
இவையெல்லாம் சரியாக
அமைந்து விடவேண்டும்
சிந்தை குடையும்
சில சிக்கல்களை அவிழ்ப்பதற்கு.
அப்பொழுதுதான் அதுவரை
புதிராய்த் தெரிந்ததெல்லாம்
'ப்பூ' இவ்வளவுதானா என்றிருக்கும்.
பிரமிப்பில் அத்தகைய தருணங்களில்
நான்
ஆழ்ந்து விடுவதுண்டு.
அறிவின் தெளிவெனை
புடமிட்டு வைத்துவிடும்
தருணங்களவை.
புரியாதவற்றைத் தெரிதற்கு
நான் இப்பொழுதெல்லாம்
முன்புபோல் குத்துக்கரணங்களடித்து
முயல்வதில்லை.
கூடிவரும் பொழுதுகளிற்காகவும்,
பொருந்தியதொரு சூழலுக்காகவும்,
அமைந்தவோரிடத்துக்காகவும்
நான்
இப்பொழுது காத்திருக்கப் பழகிவிட்டேன்.

கவிதை: கனவுக் குதிரைகள் (Walt Bresette நினைவாக)!

ஆங்கிலத்தில்: அல் ஹண்டர் (Al Hunter)!
தமிழில்: வ.ந.கிரிதரன்!

1 நிலவு வெளிச்சத்திற்குக் கீழாக
விண்ணில் எனது கனவுக் குதிரைகள்
தெற்கு நோக்கி ஓடும்.
தெற்கு: பயணம் இங்குதான் முடியும்,
அத்துடன் தெற்கு: பயணம்
இங்குதான்
மீண்டும் தொடங்கும் - ஆத்மாக்களின் பயணத்தில்.
தெற்காகச் செல்லும் அடிச்சுவட்டில்
செல்லுமிடம் தெரியாமல்
ஒருவேளை மூடப்பட்ட
நதிப் பள்ளத்தாக்கு நோக்கி
அல்லது மறைந்திருக்கும்
மலைப்பாறைகளினுச்சியின்
மேலாகச் செல்லும் கிளைவிட்டுச்
செல்லும் பாதைகளுமுண்டு.
குதிரைகள் அங்கு போவது கிடையாது.
நான்கு நாட்களாக இரவும் பகலுமாகப்
பயணித்து விட்டு
அதிகாலைப் பொழுதில்
உண்பதற்காக அவை தங்கும்.
கனவுக் குதிரைகள் முன்னர்
கடந்து சென்ற இந்த வழியில்,
நினைவுகளின் ஞாபகங்களின் பழந்தீயில்
அவை இரவுகளினூடும்
அந்திக் கருக்களினூடும்
தம்மைச் சூடேற்றிக் கொள்ளும்.
ஐந்தாவது நாட் காலையில்
அவை கடக்கத் தேவையில்லாத
ஆற்றங்கரையினை வந்தடையும்.
மீண்டுமொரு வைகறையில் மீள்பிறப்பிற்காக
ஏனைய கனவுக் குதிரைகள் கூடும் தெற்குக் கரையினை அடையும் வரையில்,
நீரின் மேற்பரப்பினூடாக
வைரங்களைப் போல் நர்த்தனமிட்டபடி
அவற்றின் குளம்புகளே அவற்றினை இழுத்துச் செல்லும்.
ஓ! உயர்ந்த ஞாபகசக்தி மிக்கவரே
திரும்பி வாரும். திரும்பி வாரும்
எனது கனவுகளின் வளம் மிக்க
நீல வயல்களிற்குள்...

2 பனித்துளிகள் ஒட்டிக் கொண்டிருக்கும்
இனிய புதிய புற்களிருக்குமிடத்தில்,
உதிக்கும் சூரியனை நோக்கி
உனது குதிரையினைத் திருப்பியபடி,
அதன் பிடரி மயிரினை ஒரு சேரப் பிடித்தபடி,
கனவுகள் பயிரிடப்படாத வயலிற்குள் முறைத்தபடி
நீல இருதயத்துடன் நீ!
அதனை நீர் அருந்தவிடு. அதனைச் சுவைக்க விடு.
அதன் பின் அதன் மீது சவாரி செய்.

மூலம்: பிரிட்டிஸ் கொலம்பியாப் பல்கலைக் கழகத்தினால் வெளியிடப்படும் கனேடிய இலக்கியம் ( Canadian Literature காலாண்டிதழ், மாரி 2000, இதழ் இலக்கம்: 167)

நன்றி: பதிவுகள்.காம், திண்ணை.

கவிதை: இருப்பதிகாரம்! - வ.ந.கிரிதரன்

நிலை மண்டில ஆசிரியப்பா!

வானினை நிலவினை வரையினை மடுவினை
தேனினை யொத்த சொல்லினை உதிர்க்கும்
அணங்கினை அகன்ற இடையினைத் தனத்தினை
மீறிட முடியா சிந்தையை மேலும்
தேனிசை சிற்பம் சித்திரம் கலைகள்
மொழியும் இனமும் மண்ணும் பொன்னும்
குதலைக் குறும்பும் அன்பும் சிரிப்பும்
ஆட்டியே வைக்கும் மீட்சி யுண்டா?
என்றென் துயரும் பிடிப்பும் சாகும்?
விரியு மண்ட மடக்கு மண்டம்
அதனை யடக்க மற்றோ ரண்டம்.
வெறுமை வெளியில் பொருளின் நடனம்.
இதற்குள் துளியெனக் கரையு மிருப்பு.
இதுவும் நிசமா நிழலாக் கனவா?
நனவும் கனவா? கனவும் நனவா?
விடைகள் நாடித் தொடரும் வினாக்கள்.
விடைக ளற்ற வினாக்கள்! வினாக்கள்!
இருப்பு அறிந்திட தேடித் தொடரும்
இருப்பே எந்தன் வாழ்வே வாழ்வே!
இதனை அறிதல் புரித லெவ்விதம்?
நூலினைக் குருவினை அறிவினை உணர்வினைக்
கோளினைச் சுடரினை வெளியினை விரிவினை
வாழ்வினைத் தாழ்வினைத் துயரினை மகிழ்வினை
அறித லெவ்விதம்? புரித லெவ்விதம்?
கலவிக் குலாவி யிருந்திடு மவைகளாய்
இருந்தே யிருப்பின் இவ்வித இடரெலாம்
இல்லா தொழிந்து இருந்தன்றோ இருக்கும்?
செயற்கை சமைத்திட சிந்தை தந்த
செயலினால் தானோ செகத்தினில் துயரோ?
அன்பினை ஆக்கிட அறிவினைப் பாவிக்க
என்னவர் உன்னவர் நம்மவர் மறந்திட்ட
பண்பினால் தானோ பாரினில் பகைமை?
தாமரை இலைமேல் தண்ணீர் போன்று
தரணியில் வாழ்ந்திடும் பக்குவம் கொண்டு
நானினைச் சித்தினை அசித்தினை அறிந்து
விருப்பு விட்டு வாழ்ந்திடும் தன்மை
வந்திடு மென்றால் அதுவே போதும்.

வேறு....

அந்திக் கதிரின் சிவப்பில் நாளும்
சிந்தை யிழந்து இருத்த லின்பம்!
இரவில் வானில் நீந்தும் மீன்கள்
வரவி லிதயம் மூழ்கிக் களிக்கும்.
விசும்பும் மதியும் கதிரும் காற்றும்
புள்ளும் மற்று மிருக்கு மனைத்தும்
படைப்பின் திறனை பறையே சாற்றும்.
இன்ப வெள்ளம் மடையை யுடைக்கும்.
கூகைக ளுலாவிடும் நள்யாமப் பொழுதும்
அகத்தினி லுவப்பினை யேற்றி வைத்திடும்.
உறவினை உதறி யுண்மை அறிதல்
துறவென ஆயிடு மதனா லதனை
ஏற்றிடே னானால் உள்ளி ருந்தே
உண்மை காணலே சிறந்ததோ தறியேன்.
எவ்வித மிருப்பின் உண்மை அறிவேன்.
உளையு முளத்தின் உளைவை எவ்விதம்
தணிப்பேன் தணித்துப் பதிலை அறிவேன்?

நன்றி: பதிவுகள்.காம், திண்ணை.காம்

Tuesday, August 01, 2006

மனிதரின் ஆளுமையும் சிக்மண்ட் பிராய்டும்! - வ. ந. கிரிதரன் -

"மனிதன் சூழ்நிலையின் கைதி" என்றொரு கூற்று நிலவுகின்றது. கூர்ந்து கவனிப்போமாயின் மனிதரின் வாழ்வின் பெரும்பாலான படிகளை நிர்ணயிப்பது அவர் வாழும் சமுதாயத்தில் நிலவிடும் புறச்சூழல்தான். இச் சூழலின் தாக்கம் அல்லது பாதிப்பு ஒவ்வொரு மனிதரின் மீதும் ஒரே விதமான தாக்கத்தினை வெளிப்படுத்துவதில்லை. மாறாக அவரது உடனடிச் சூழலான குடும்பச் சூழல், அவரது அகச்சூழல், என்பவற்றிற்கேற்பவே இப்பாதிப்பும் அவரிடத்தில் ஏற்படுத்தும் விளைவுகளும் இருந்து விடுகின்றன. வர்க்கங்களால், ஏற்றத்தாழ்வுகளால் பிளவுண்டு கிடக்கும் புறச்சூழல் மனிதரில் ஏற்படுத்தும் பாதிப்புகள் மிகவும் வலியவை. பெரும்பாலான தெளிவுள்ள மனிதர்களே இச்சூழலின் தாக்குதல்களிற்கு ஈடுகொடுக்க முடியாமல் நீரோட்டத்தில் அள்ளுப்பட்டுச் செல்லும் கட்டையைப் போல் அள்ளுண்டு போகும்போது சாதாரணமனிதர்களின் நிலை என்ன? இத்தகைய பாதிப்புகளிலிருந்து தப்பிப் பிழைத்த ஒருசிலரே சூழலை மீறிய சரித்திர புருஷர்களாக, மானிட வழிகாட்டிகளாக உருவாகுகின்றார்கள்.

இவ்வாறு மனிதரைப் பல வழிகளிலும் ஆட்டிப்படைக்கும் இம் மனதினை மனோவியல் அறிஞரான சிக்மண்ட் பிராய்ட் இரு பகுதிகளாகப் பிரிக்கின்றார். 1. உணர்வு மனம் (அல்லது புற மனம்) 2. உணர்விற்கப்பாற்பட்ட மனம் (அல்லது ஆழ் மனம்) மனிதரின் மனதின் முக்காற் பங்கினை உள்ளடக்கியிருப்பது இந்த உணர்ச்சிக்கப்பாற்பட்ட ஆழ் மனமே. சகல விதமான அபிலாஷைகள், எதிர்பார்ப்புகளைப் புதைத்து வைத்துள்ளது. இந்த ஆழ்மனம்தான் மனிதரது சகல விதமான பிரச்னைகளிற்கும் காரணம். பகுத்தறிவு பேசுவது மனிதரின் உணர்வு மனம். ஆனால் அவரது உணர்விற்கப்பாற்பட்ட மனமான ஆழ்மனதினிலே அவர் பேசும் பகுத்தறிவிற்கேற்ற கொள்கைகள், எண்ணங்கள் பதிந்திராவிட்டால்..அவர் எவ்வளவு பகுத்தறிவு வாதம் புரிந்தும் பயனில்லை. இன்றைய பெரும்பான்மையான சமய , அரசியல் தலைவர்களுட்பட சாதாரண மக்களினதும் நிலை இதுதான். உணர்ச்சிகரமாகப் பேசுவதொன்று, செய்வதொன்றாக இருப்பதைப் பார்த்துப் பார்த்து அலுத்துக் கிடக்கின்றோமே.இந்நிலைக்குக் காரணம் இந்தப் புற , அக (ஆழ்)மனங்களிற்கிடையிலான போராட்டம்தான். புறச்சூழல், அகச்சூழலின் விளைவுகள் மனிதரில் புறமனதினில் ஏற்படுத்தும் பாதிப்பு செயலுருப் பெற வேண்டுமானால் அவரது ஆழ்மனமும் புறமனமும் ஒன்றாக இயங்க வேண்டியது அவசியம்.

மனிதரின் மனம் பற்றிய ஆய்வுகளில் பல புரட்சிகரமான கோட்பாடுகளைக் கண்டு பிடித்தவர் சிக்மண்ட் பிராய்ட். வீயன்னாவில் மருத்துவப் பட்டப்படிப்பை முடித்து மருத்துவராகக் கடமையாற்றிய பிராய்ட்டினைப் பாதித்த முக்கிய விடயங்களாகப் பின்வருவனவற்றைக் கூறலாம். இவையே இவரது மனம் பற்றிய பல்வேறு கோட்பாடுகள் தோன்றுவதற்குக் காரணங்களாகவிருந்தன என்று துணிந்து கூறலாம்.

1. டார்வினின் கூர்ப்புக் கொள்கை. ( இக்கொள்கையின் முன்னர் ஏனைய மிருகங்களிருந்து பிரித்துப் பார்க்கப் பட்ட மனிதர் இதன் அறிமுகத்தின் பின்னரோ மிருகங்களில் ஒன்றாகக் கருதப்பட்டனர். அதே சமயம் மனிதர் பற்றிய ஆய்வுகளை இயற்கை விஞ்ஞான முறைகளிற்கேற்ப மேற்கொள்ளக் கூடிய சாத்தியக் கூறுகளை இக்கோட்பாடு உருவாக்கியது ).

2. கஷ்டாவ் பெச்னோவின் (Gustav Fechneo- பிரபல்யமான ஜேர்மானிய தத்துவஞானி) கண்டுபிடிப்பான உளவியல் விஞ்ஞானம் (Science of Psychology). இது மனமும் விஞ்ஞான பூர்வமாக ஆய்வு செய்யப்பட முடியுமென்பதை நிலை நாட்டியது.

3. நவீன பெளதிகத்தின் புதிய கண்டுபிடிப்புகளான சக்தி பற்றிய குவாண்டம் கொள்கைகளும் பிராய்டின் மனம் பற்றிய ஆய்வுகளிற்குப் பெரிதும் உதவின. இக்குவாண்டம் கொள்கையின் படி சக்தியும் பொருளைப் போல் அளக்கப்படக் கூடியதெனவும் அதே சமயம் சக்தி அழிக்கப் பட முடியாதெனவும் அறியப் பட்டது. மேலும் இப்புதிய கண்டுபிடிப்புகளின் வாயிலாக மனிதரும் சக்தியின் வடிவம் (Energy System) என்பதும், எந்த விதிகள் பெளதீகத்தில் உள்ளனவோ அதே விதிகளிற்கமையவே மனிதரும் இயங்குகின்றாரெனவும் நிரூபணமாயிற்று.
இதுதவிர பிராய்டின் வளர்ச்சிக்கு அவரது மருத்துவத் தொழிலும், அவரது ஆழ்ந்த அறிவும் பெரிதும் காரணங்களாகவிருந்தன. பிராய்டின் முக்கிய கண்டுபிடிப்பு 'இயக்கவியல் மனோவியல்' அல்லது 'இயக்க உளவியல்' ( Dynamic Psychology) ஆகும். இயக்கவியல் விதிகளை மனிதரின் ஆளுமைக்கும் (Personality) அவரது உடலிற்கும் பாவிக்க முடியுமென்பதைக் கண்டுபிடித்ததே இவரது மிகப் பெரிய சாதனையாகும். நவீன விஞ்ஞான வளர்ச்சியிலும் இது ஒரு மைல்கல்லே. இயக்கவியல் உளவியல் மனிதரில் ஆளுமையிலேற்படுத்தும் மாற்றங்களை விளக்குவதாகும். இங்கு மனிதரின் ஆளுமையென நான் கூறுவது ஒரு மனிதரின் குணவியல்புகளையே குறிக்கின்றது.

பிராய்டின் கருத்துப்படி ஒரு மனிதரின் மன இயல்புகள் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன அல்லது அவரது மனவியல்புகள் மூன்று வடிவங்களில் செயற்படுவதாகக் கூறலாம். 1. உணர்வு உந்தும் இயல்பு (id) 2. நான் என்னும் முனைப்பு (Ego) 3. அதியுயர் மனக் கூறு (Super Ego)

1. உணர்வு உந்தும் இயல்பு (id)

இந்த உணர்வு உந்தும் இயல்பென்றாலென்ன? மனிதரில் ஏற்படும் சகல விதமான ஆசைகள், உணர்வுகள் (உதாரணமாகப் பசி, பாலுணர்வு போன்றவற்றினைக் கூறலாம்) என்பவற்றிற்குக் காரணம் இந்த உணர்வு உந்தும் இயல்புதான். இவ்வாறு உருவாகும் உணர்வுகளிற்கு வடிகாலொன்றினைத் தேடுவதுதான் இந்த உணர்வு உந்தும் இயல்பினது பிரதான செயற்பாடாகும். பிராய்டின் கருத்துப்படி இந்த உணர்வு உந்தும் இயல்பின் செயற்பாடானது மனிதரின் வாழ்வின் பிரதான நோக்கமான இன்பத்தினை அடைதலைப் (Pleasure Principle) பூர்த்தி செய்வதாகவேயுள்ளது. ஆனால் மேற்படி உணர்வு உந்தும் இயல்பின் பிரதான குறைபாடென்னவென்றால்..இது வெளி உலகைப்பற்றி , யதார்த்த நிலைமைகளைப் பற்றிக் கவலைபடுவதேயில்லை. உதாரணமாகப் பசியினால் பீடிக்கப்பட்டுள்ள குழந்தையொன்றினை நோக்குவோம். முதலாவதாக இத்தகைய பசி உள் உணர்வு (Hungry Instinct) எவ்விதம் குழந்தையிடம் உருவாகின்றதென்ற கேள்விக்குப் பிராய்டின் விடை, இவ்விதமான உள்ளுணர்வுகள் மனிதரின் பிறவியிலேயே உருவாகின்றன என்பதுதான். பசியால் பீடிக்கப்பட்டுள்ள குழந்தை அதனைப் பூர்த்தி செய்வதற்காக அழுகின்றது. இவ்விதம் அழும் குழந்தையிலேற்படும் பாதிப்புகள் அதன் உணர்வுகள் உந்தும் இயல்பு (id) வளர்ச்சிக்கு மேலுமுதவுகின்றன. இவ்விதம் அழும் குழந்தையிலேற்படும் உணர்வு உந்துமியல்பானது இருவிதமான செயல்முறைகளில் அல்லது படிகளில் உருவாகுகின்றன. ஆரம்பப் படிமுறை (Primary Process). இக்கட்டமானது குழந்தையின் மனதில் அப்பசி உணர்வினைத் தீர்க்கக் கூடிய உணவு பற்றிய பிம்பத்தினை (image) இனங்காட்டி விடுகின்றது. இவ்விதம் உணர்சிகளிற்கு வடிகாலான தீர்வினை பிம்பத்தின் மூலம்மனதில் உருவாக்கும் செயற்பாட்டினை பிராய்ட் ஆசையைப் பூர்த்தி செய்யும் செயற்பாடென்கின்றார் (Wish Fullfillement). பிராய்டின் கருத்துகளின்படி நாம் காணும் கனவுகளெல்லாம் இத்தகைய ஆசையைப் பூர்த்தி செய்யும் செயற்பாடுகளே. ஆனால் இவ்வுணர்வு உந்தும் இயல்பானது உள்ளத்தில் ஆசையினைப் பூர்த்தி செய்யத் தூண்டும் அக பிம்பத்தினையும்(Subjective memory image), அப்பிம்பத்தின் உண்மையான புற வடிவத்தினையும் (மேற்படி குழந்தை உதாரணத்தில் 'உணவினையும்') வேறுபடுத்திப் பார்க்கும் தனமையற்றதாகவே இருந்து விடுகின்றது. அதிலும் இத்தகைய ஆசையினைப் பூர்த்தி செய்யும் பொருளின் பிம்பத்தினை மனதினில் இனக்காணுவதால் மட்டும் அக்குழந்தையின் பசி தீர்ந்து போய்விடுவதில்லை. உண்மையான உணவினை அதற்கு ஊட்டுவதால் மட்டுமே அதன் பசி தீர்ந்து விடுகின்றது. பசியால் அழும் குழந்தையின் பசியினைத் தீர்க்கும் உணவின் விம்பம் உள்ளத்தில் உருவாகுவது ஆரம்பப் படியென்றால் அப்பசி உணர்வினை உண்மையில் பூர்த்தி செய்வதற்கு இரண்டாவது படியொன்றின் (Secondary Process) அவசியமும் தேவையாகின்றது. மனதின் மற்றொரு இயல்பான 'நான் என்னும் முனைப்புடன்' (Ego) அது சம்பந்தப் பட்டுள்ளது.

2. நான் என்னும் முனைப்பு (Ego)

உணர்வு உந்தும் இயல்பானது பாலியல் உணர்வு அல்லது பசி உணர்வு அல்லது வேறெதாவது உணர்வுகள் தோன்றும் பொழுது அதனைத் தீர்ப்பதற்கு தவிக்கின்றது. அது வெளியுலகைப் பற்றியோ வேறெதனைப் பற்றியோ கவலைப் படுவதில்லை. அதே சமயம் அது மேற்படி உணர்வுகளிற்கு தீர்வினைத் தரக்கூடிய வடிகாலின் உண்மை வடிவினையும், உள்ளத்தே உருவாகும் அது பற்றிய விம்பத்தினையும் வேறு படுத்திப் பார்க்கும் தன்மையினயும் கொண்டிருக்கவில்லை. அதனால் தான் பசியால் அழும் குழந்தை கைக்குக் கிடைத்ததை வாயினுள் போட்டு விடுகின்றது. இச்சமயத்தில் தான் மனதின் ஆளுமையினை உருவாக்கும் மற்றொரு இயல்பான 'நான் என்னும் முனைப்பு' (Ego) முக்கியத்துவம் பெறுகின்றது. இது உணர்வு உந்தும் இயல்பினைப் (id) போலல்லாது உலகினைப் பற்றிய யதார்த்த நிலையினைக் கவனத்தில் எடுத்துக் கொள்கின்றது. ஆனால் 'உணர்வு உந்தும் இயல்போ' இதற்கு மாறாக 'இன்பத்தை அடைதல்' பற்றியே கவனத்தில் எடுத்துக் கொள்கிறது. இந்த 'நான் என்னும் முனைப்பே' 'உணர்வு உந்தும் இயல்பினால்' உருவான ஆசைகள், அபிலாஷைகள் போன்ற உணர்வுகளிற்குத் தீர்வினை வடிகாலினைக் கூறுகின்றது. உண்மையில் 'இந்த நான் என்னும் முனைப்பு' வழிமுறைகளைத் தான் கூறுகின்றதேயொழிய அம்முறை சரியா அல்லது தவறா அல்லது நன்மை பயக்குமா தீமையினை ஏற்படுத்துமா என்றெல்லாம் வேறுபடுத்திப் பார்க்கும் தன்மையற்றதாகவே இருக்கின்றது. இத்தகையதொரு நிலையில் தான் மனம் செயற்படும் முறைகளில் மூன்றாவதான 'அதியுயர் மனக் கூறு' (Super Ego) முக்கிய பங்கினை வகிக்கத் தொடங்குகின்றது.

3. 'அதியுயர் மனக் கூறு' (Super Ego)

உதாரணமாகப் பாலியல் உணர்வுகளால் தீவிரமாக பாதிக்கப் பட்ட ஒரு மனிதன்ஒருவன் நிலையினைப் பார்ப்போம். அவனில் கிளர்ந்தெழும் உணர்வுகள் உணர்வு உந்தும் இயல்பின் விளைவினால் ஏற்படுவதாகும். அதனை அடைவதற்குரிய வழிமுறைகளை அடையாளம் கண்டு அவனைச் சிறிது தடுத்து வைப்பது 'நான் என்னும் முனைப்'பின் தன்மையாகும். அம்மனிதன் ஒரு பெண்ணுடன் உறவு கொள்ள விழைகின்றான். அதனை அவன் பலாத்காரமாகவும் பெற்றுக் கொள்ள முடியும். அல்லது அவன் வாழும் சமூகத்தில் நிலவும் சட்ட திட்டங்களிற்கேற்பவும் அவனால் அவனது உணர்வுகளிற்கு வடிகாலினைத் தேட முடியும். இச்சமயத்தில் தான் 'அதியுயர் மனக்கூற்றின்' (Super Ego) பங்களிப்பு அவசியமாகின்றது.இவ்'வதியுயர் மனக்கூறான'து மேற்படி மனிதனின் குழந்தைப் பருவத்திலிருந்தே பெற்றோர்கள், ஆசிரியர்கள், மத குருமார்கள் முதலான அவன் மேல் ஆதிக்கம் செலுத்தும் மனிதர்களினூடாகவும், சமுதாயத்தில் நிலவும் சட்ட திட்டங்களின் விளைவாகவும் அவனடைந்த பாதிப்புகளிற்கேற்பவே நன்மை தீமைகளைச் சீர்தூக்கிப் பார்க்கின்றது.

மனித ஆளுமை....

ஆக மொத்தத்தில் மனிதரின் ஆளுமையினை நிர்ணயிப்பவை உணர்வு உந்தும் இயல்பிற்கும், நான் என்னும் முனைப்பிற்கும், அதி யுயர் மனக் கூறிற்கும் இடையிலேற்படும் மோதல்களின் விளைவேயென்று துணிந்து கூறலாம்.

இவ்விதம் மனதின் செயற்பாடுகளைச் செய்வதற்குரிய சக்தியினை மனம் எவ்வாறு பெற்றுக் கொள்கின்றது? பிராய்ட் இச்சக்தியினை 'மனச் சக்தி ' என்கின்றார். மின்சக்தி காந்த சக்தி வெப்பச் சக்தி என்பதைப் போல் இம் மனச் சக்தியும் சக்தியின் ஒரு வடிவமே.உடலினை இயக்கும் உடற் சக்திதான் தேவைப்படும் போதெல்லாம் மனச் சக்தியாகவும் மாறிக்கொள்கின்றதென்று கருதினார் சிக்மண்ட் பிராய்ட். மின்சக்தி பல்வேறு வேலைகளைச் செய்யப் பயன்படுத்த்தப் படுவதைப் போல், மனச் சக்தியும் உளவியல் வேலைகளான் சிந்தித்தல், உணர்தல், ஞாபகப் படுத்துதல் முதலானவற்றை செய்வதற்கு உதவுகின்றது என அவர் நம்பினார். அன்றாடம் பல்வேறு வகைப் பட்ட நெருக்கடிகளிற்கிடையில் அகப்பட்டுத் தத்தளிக்கும் நாம் அந்நெருக்கடிகளிருந்து தப்புவதற்கு மூடத்தனமான கோட்பாடுகளையெல்லாம் துணைக்கழைத்து ஆறுதல் அடைகின்றோம். இத்தகையதொரு சூழலில்தான் எம்மன இயல்புகளை, அது செயற்படும் போக்குகளையெல்லாம் அறியவேண்டுவதன் அவசியம் அதிகமாகின்றது. இவ்விதம் எம்மை நாமே அறிந்து கொள்வதன் மூலம், சுத்திகரித்துக் கொள்வதன் மூலம்புறச் சூழலின் பாதிப்புகளிற்குச் சரியாக முகம் கொடுத்துச் செயற்படக் கூடிய அகச் சூழலை உருவாக்குவதன் மூலம் எம்வாழ்வு பயன் பெறுவது மட்டுமல்ல எம் சமுதாயப் பங்களிப்பினையும் செய்யக் கூடியதாகவிருக்கும். ம்வாழ்வு பயன் பெறுவது மட்டுமல்ல எம் சமுதாயப் பங்களிப்பினையும் செய்யக் கூடியதாகவிருக்கும்.

நன்றி: பதிவுகள்.காம், திண்ணை.காம்

பிரபஞ்ச வடிவம் பற்றிய புரிதல்கள்!

இரவு நேரங்களில் அண்ணாந்து விரிந்து கிடக்கும் ஆகாயத்தைப் பாருங்கள். கோடிக் கணக்கில் பரந்து கொட்டிக் கிடக்கும் நட்சத்திரங்களை, கிரகங்களை உபகிரகங்களைக் கவனியுங்கள். அதே சமயம் இன்னும் ஒன்றையும் மனதிலே ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள். ஒவ்வொரு செக்கனும் பிரமாண்டமானதொரு வேகத்தில் விரிந்து கொண்டிருக்கும் பிரபஞ்சமொன்றின் சிறியதொரு கோணத்தில் விரைந்து கொண்டிருக்கும் சிறியதொரு கோளொன்றில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்பதே அது. நெஞ்சினைப் பிரமிக்க வைத்து விடுகின்றதல்லவா! அப்படியானால் நம்மால் ஏனிந்த வேகத்தை உணர முடியவில்லை? மூடியதொரு புகையிரதத்தினுள் இருக்குமொருவருக்கு எவ்விதம் புகையிரதம் வேகமாகச் செல்வது தெரியாதோ அது போன்றதொரு நிலையில் தான் எம்முடைய நிலையும். பூமியைச் சுற்றிப் படர்ந்திருக்கும் வாயு மண்டலம்தான் எம்மை மூடிய புகையிரத்தைனைப் போல் இக்கோளினை வைத்திருக்கின்றது. அதனால் தான் எம்மால் எமது வேகத்தைக் கூட உணர முடியாமலிருக்கின்றது. இன்னும் ஒரு காரணம் - எம்மைச் சுற்றியுள்ள சுடர்களுக்கும், கிரகங்களுக்குமிடையிலான தொலைவு மிக மிக அதிகமானது. இத் தொலைவும் எமது வேகத்தினை உணரமுடியாதிருப்பதற்கு இன்னுமொரு காரணம். புகைவண்டியினுள் விரையும் ஒருவருக்கு அருகில் தெரியும் காட்சிகள் வேகமாகச் செல்வது போலும், மிகத் தொலைவிலுள்ள காட்சிகள் ஆறுதலாக அசைவது போலவும் தெரிவதற்கு அடிப்படைக் காரணம் தொலைவு தான்.

இவ்விதம் எல்லையற்றுப் பரந்து கிடக்கும் இப்பிரபஞ்சம் பற்றி அறிவதன மூலம் மனிதர்கள் தம் பிறப்பின் காரணத்தின் சூத்திரத்தை அறிவதற்கு முயன்று கொண்டிருக்கின்றார்கள். அரிஸ்டாட்டில், கலிலியோ, நியூட்டன் , ஐன்ஸ்டைனென்று பிரபஞ்சம் பற்றிய கோட்பாடுகள் மேலும் மேலும் வளர்ச்சியடைந்து வந்துள்ளன. வந்து கொண்டிருக்கின்றன.

இந்த வகையில்தான் 'அலெக்ஸாண்டர் பிரிட்மென்'னுடைய (Alexander Friedman) (1920) பிரபஞ்சம் பற்றிய கருத்துகளையும் பார்க்க வேண்டும். ஐன்ஸ்டைனின் கணித சூத்திரங்களை ஆராய்ந்து கொண்டிருந்த பிரிட்மான் பிரபஞ்சத்தின் உருவ அமைப்பு பற்றிய கோட்பாடுகளை விபரித்தார். அலெக்ஸாண்டர் பிரிட்மான் பிரபஞ்சத்தில் காணப்படும் பொருளின் அளவு பற்றி ஆராய்ந்தார். இப்பிரபஞ்சத்தில் காணப்படும் பொருளானது வெளியை வளைக்கும் தன்மை படைத்தது. எனவே இப்பிரபஞ்சத்தில் காணப்படும் பொருளின் அளவு பற்றி ஆராய்ந்த பிரிட்மான் 'இப்பிரபஞ்சத்தில் காணப்படும் பொருளின் மொத்த அளவானது இப்பிரபஞ்சத்திற்கு ஒரு வடிவினை, உருவ அமைப்பினை உருவாக்கும் அளவுக்குப் போதுமானது' என எடுத்துக் காட்டினார்.

இவரது கருத்துப்படி பிரபஞ்சத்தின் உருவ அமைப்பானது மூன்று விதமாகக் காணப்படுவதற்குச் சாத்தியமுள்ளது. இவற்றை அவர் முறையே 'மூடிய பிரபஞ்சம்', 'திறந்த பிரபஞ்சம்', 'தட்டையான பிரபஞ்சம்' என மூன்றாகப் பிரித்தார். 'மூடிய பிரபஞ்சம்' என்றாலென்ன? அது எப்படியிருக்கும்? மூடிய பிரபஞ்சத்திற்கு உதாரணமாக ஒரு கோளத்தின் அமைப்பையே குறிக்கலாம். கோளமொன்றின் வடிவம் எவ்விதம் வளைந்து காணப்படுகிறதோ அவ்விதமே இப்பிரபஞ்சமும் வளைந்து மூடிய நிலையில் இருப்பதற்குச் சாத்தியங்களுள்ளன. உண்மையில் ஒருவர் இவ்வகையான மூடிய பிரபஞ்சத்தில் நேர் கோட்டில் பயணம் செய்வாரென்றால் மீண்டும் தனது தொடக்க இடத்துக்கே வந்து விடுவார். இவ்வகையான நிலையினை நமது பூமியுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் உண்மை மிகவும் இலகுவாக விளங்கி விடும். உதாரணமாகப் பூமியின் மேற்பரப்பில் ஓரிடத்திலிருந்து பயணத்தைத் தொடங்குமொருவர் நேராக நடந்து செல்வாரேயானல் மீண்டும் தனது தொடக்குப் புள்ளிக்கே வந்து விடுவாரல்லவா? அது போல் தான் 'மூடிய பிரபஞ்சத்தி'னுள் பயணிப்பவரின் நிலையும். பிரபஞ்சத்தின் உருவ அமைப்பு பற்றிய அடுத்தவகை 'திறந்த வகைப் பிரபஞ்சம்' ஆகும். குதிரையொன்றின் முதுகில் அமர்ந்து செல்லப் பாவிக்கபப்டும் 'சேணம்' போல் அதனது அமைப்பிருக்கும். இவ்வகையான 'திறந்த பிரபஞ்ச'த்திற்கு முடிவென்பதேயில்லை. இவ்வகையான பிரபஞ்சத்தில் ஓரிடத்தில் பயணத்தைத் தொடங்குபவர் நேராகச் செல்லும் பட்சத்தில் கூட மீண்டும் தனது தொடக்க இடத்துக்குத் திரும்புவதேயில்லை. போனவர் போனவரே. மூன்றாவது வகையான பிரபஞ்சத்தின் வடிவைத் 'தட்டை'யானதெனக் குறிப்பிட்டோமல்லவா? உண்மையில் இவ்வகையான பிரபஞ்ச வடிவ அமைப்பானது மூடிய வடிவ அமைப்புக்கும், திறந்த வடிவ அமைப்புக்கும் இடைப்பட்ட வகையிலான வடிவ அமைப்பினச் சேர்ந்தது. இவ்வகையான வடிவை முடிவற்று நீண்டிருக்கும் மேசை ஒன்றின் மேற்பரப்புக்கு ஒப்பிடலாம்.

பிரபஞ்சத்தின் வடிவ அமைப்பினை அறிவதற்குரிய இன்னுமொரு வழி இப்பிரபஞ்சத்தில் காணப்படும் பொருளின் அடர்த்தியினை அறிவதாகும். இவ் அடர்த்தியின் அளவுக்கேற்ப பிரபஞ்சம் மூடியதா, திறந்ததா அல்லது தட்டையானதா என அறிந்து கொள்ள முடியும். ஒரு கன சதுர மீற்றரில் மூன்று பொருள் அணுக்களிருப்பதைப் பிரபஞ்சத்தின் பொதுவான அடர்த்தியாகக் கணித்திருக்கின்றார்கள். இப்பிரபஞ்சத்தில் காணப்படும் பொருளின் அடர்த்தியானது மேற்குறிப்பிடப்பட்ட பொதுவான அடர்த்தியிலும் கூடியதாகவிருப்பின் நமது பிரபஞ்சமானது 'மூடிய பிரபஞ்சமாக'விருக்கும். குறைவாகவிருந்தால் 'திறந்த வகைப் பிரபஞ்சமாகவும்', ஒரே அளவாகவிருந்தால் 'தட்டையான பிரபஞ்ச'மாகவுமிருக்கும். ஆனால் இதுவரையிலான ஆய்வுகளின்படி கண்டுபிடிக்கப்பட்ட பிரபஞ்சத்தின் பொருள் அடர்த்தி மிகமிகச் சிறியதாகத்தானிருக்கிறது. நம் கண் முன்னால் விரிந்து கிடக்கும் இப்பிரபஞ்சத்தின் பொருள் அடர்த்தி , பொருட் செறிவு இவ்வளவு சிறியதா? நம்பவே முடியவில்லையல்லவா? பெளதிக வானியல் அறிஞர்களாலும் இதனை நம்பத்தான் முடியவில்லை. அதனால் தான் அவர்கள் இப்பிரபஞ்சத்தில் காணப்படும் பொருளின் பெரும்பான்மையான பகுதி நமது கண்களுக்குப் புலப்படாத வகையில் இன்னுமொரு வடிவிலிருக்க வேண்டுமென நம்புகின்றார்கள். இவ்வகையான பொருளினை 'இருண்ட பொருள்' (Dark Matter) என அவர்கள் பெயரிட்டு ஆராய்ச்சிகள் நடத்துகின்றார்கள். அப்படியானால் இவ்வகையான கரும்பொருள் எங்கே ஒளிந்துள்ளது? இவ்வகையான பொருள் ஒளிந்திருக்கச் சாத்தியமான இடங்களில் ஒன்று 'கருந்தொளை'கள் (Black Holes)அல்லது 'கரும் ஈர்ப்பு மையங்க'ளாகும். இத்தகைய கருந்தொளைகளிலிருந்து ஒளியே வெளியேறுவதில்லை என்பதனால், இவற்றினுள் ஒளிந்திருக்கும் பொருளின் அளவை அறிவது கூடத் தற்போதைய நிலைமையில் சிரமமாகத் தானிருக்கின்றது.

இவ்விதமாக நமது பிரபஞ்சத்தின் வடிவம் பற்றியும், அதன் வடிவம் இங்கு காணப்படும் பொருளின் அடர்த்தி பற்றியும், அது சம்பந்தமாகத் தொடரும் ஆய்வு பற்றியும் பார்த்தோம். இதே சமயம் நமது பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றிய ஆய்வுகளும் தொடரத்தான் செய்கின்றன. தற்போது நிலவும் கோட்பாடுகளின்படி மிகப் பிரபல்யமாக விளங்கும் கோட்பாடு 'பெரு வெடிப்புக்' (Big Bang) கோட்பாடு என அழைக்கப்படுகிறது. இதன்படி இப்பிரபஞ்சமானது ஆரம்பத்தில் ஓரிடத்தில் குவிந்திருக்க வேண்டும். ஒரு கட்டத்தில் அதனுள் நிலவிய ஈர்ப்புச் சக்தியின் அளவுன் அதிகரித்து, வெப்பநிலை உயர்ந்து வெடித்திருக்க வேண்டும். அவ்வெடிப்பிலிருந்து உருவானதே தற்போது காணப்படும் இப்பிரபஞ்சம் என விளக்குகிறது இக்கோட்பாடு. நடைபெற்ற, நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆராய்ச்சி முடிவுகளெல்லாம் இக்கோட்பட்டிற்குச் சாதகமாகவேயிருக்கின்றன. இதற்கு ஆதாரமாகப் பின்வருவனவற்றைக் கூறலாம். உதாரணமாக 'இப்பிரபஞ்சமானது பெருவெடிப்பின் மூலம் உருவாகியிருக்கும் பட்சத்தில் ஆரம்பத்தில் அவ்வெடிப்புடன் சேர்ந்து வெளியான பெருமலவு கதிரியக்கம் இன்றும் கூட மிகக் குறைந்த அளவிலேனும் பரவியிருக்க வேண்டும்' என ரஷ்ய விஞ்ஞானியான ஜோர்ஜ் கமாவ் என்பவர் கருதினார். இதனை 'பின்னணிக் கதிரியக்கம்' (Background Radiation) என அழைத்தார்கள். இது 1965ஆம் ஆண்டில், அமெரிக்காவின் நியுஜேர்ஸி மாநிலத்தில் அமைந்துள்ள 'பெல்' ஆய்வுக்கூடத்தில் 'ஆர்னோ பென்ஷியாஸ்' (Arno Penzias) மற்றும் ரொபேர்ட் வில்சன்' (Robert Wilson) ஆகியோரால் ஆய்வுகளின் மூலம் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. பெருவெடிப்புக் கோட்பாட்டிற்கு ஆதாரமான இன்னுமொரு விடயம் என்னவென்றால்..அதுதான் நமது பிரபஞ்சத்தின் விரியும் தன்மை. நமது பிரபஞ்சம் ஒவ்வொரு கணமும் விரிந்து கொண்டிருக்கின்றது என்ற உண்மையினை அமெரிக்க வானியல் அறிஞரான 'எட்வின் ஹபிள்' என்பவர் கண்டு பிடித்தார். இதன்படி விரியும் பிரபஞ்சத்தின் வேகம் கண்டு பிடிக்கப்பட்டது. அவ்வேகத்திலிருந்து இப்பிரபஞ்சமானது சுமார் 15 பில்லியன் வருடங்களுக்கு முன்னர் ஓரிடத்தில் குவிந்து செறிந்திருக்க வேண்டுமென்பதும் அறியப்பட்டுள்ளது. இக்கண்டு பிடிப்பு பெருவெடிப்புக் கோட்பாட்டிற்கு ஆதரவாகவுள்ளது. அதே சமயம் நம் மனதில் பல கேள்விகள் எழாமலில்லை. அப்படியானால் இவ்விதமான பொருட்களெல்லாம் ஆரமப்த்தில் எவ்விதம் உருவாகின? பெருவெடிப்புக்கு முன்னர் இருந்ததென்ன? நமது பிரபஞ்சம் போன்று வேறும் பல்கோடிப் பிரபஞ்சங்கள் தமது பாதைகளில் விரிந்து கொண்டிருக்கின்றனவா? அப்படியானால் இன்னுமொரு விரிந்து கொண்டிருக்கும் பிரபஞ்சமொன்றுடன் நமது பிரபஞ்சம் மோதுவதற்குச் சாத்தியங்களுண்டா? இவ்விதம் பலப் பல வினாக்கள் எழுகின்றன அல்லவா?

'பெருவெடிப்புக்' கோட்பாடு போல் இப்பிரபஞ்சம் பற்றிய வேறு சில கோட்பாடுகளும் நிலவத்தான் செய்கின்றன. அவற்றிலொன்றுதான் 'உறுதி நிலைக்' கோட்பாடு. இகோட்பாட்டினை 1948இல் பிரிட்டிஷ் வானவியல் அறிஞரான 'பிரட் ஹொய்ல்' (Fred Hoyle) மற்றும் ஆஸ்திரியர்களான 'தோமஸ் கோல்ட்' (Thomas Gold) மற்றும் 'ஹெர்மன் பாண்டி' (Hermann Bondi) என்பவர்கள் முன் வைத்தனர். இப்பிரபஞ்சமானது தற்போது எவ்விதம் காணப்படுகிறதோ அவ்விதமே இது வரை காலமும் இருந்து வந்துள்ளது. இனியும் இருக்கும். இந்நிலையில் இதன் தோற்றம் பற்றியெல்லாம் கவலைப் படுவதில் அர்த்தமேயில்லை. ஏனெனில் இப்பிரபஞ்சமானது எப்பொழுதுமே இருந்து வந்துள்ளது. இதற்கு ஆரம்பமேயில்லை. இக்கோட்பாடு பிரபஞ்சம் விரியும் தன்மையினை ஒத்துக் கொள்கிறது. ஆனால் பிரபஞ்சம் விரிவதால் அடர்த்தி குறைகிறது என்பதை இக்கோட்பாடு ஏற்றுக் கொள்ளவில்லை. இக்கோட்பாட்டின்படி வெற்றிடத்திலிருந்து எந்நேரமும் பொருளானது உற்பத்தியாகிக் கொண்டேயிருப்பதால், விரிவடைந்த போதும், பிரபஞ்சத்தின் அடர்த்தி குறைவதேயில்லை. ஆனால் இக்கோட்பாட்டினால் 'பின்னணிக் கதிரியக்க'த்தினை விளங்கப்படுத்த முடியவில்லை.

இன்னுமொரு சுவீடன் நாட்டைச் சேர்ந்த பெளதிக/வானியல் அறிஞரான 'ஹான்ஸ் அல்வென்'(Hannes Alfven) என்பவரின் கருத்துப்படி நமது பிரபஞ்சமானது இன்னுமொரு மாபெரும் பிரபஞ்சமொன்றின் சிறு பகுதியொன்றில் ஏற்பட்ட வெடிப்பின் விளைவுதான். இவரது கணிப்பின்படி நமது பிரபஞ்சமானது சம அளவிலான பொருளையும் எதிர்ப்பொருளினையும் கொண்டுள்ளதாகவிருக்க வேண்டும். பொருளுக்கும் எதிர்ப்பொருளுக்கும் இடையிலான மோதலின் விளைவாக உருவான பெருவெடிப்பே நம் பிரபஞ்சத்தின் விரிவுக்குக் காரணம். இவ்விதமாக பொருளும் எதிர்ப்பொருளும் ஒன்றுடனொன்று மோதும் போது அவை முற்றாக அழிந்து (Annihilation) விடுகின்றன. அவ்விதம் அழியும் போது புரோட்டான்களும், இலத்திரன்களும் உருவாகின்றன. இதனால் அழிவு நடைபெறும் இடத்திற்கண்மையில் விரைவான அதிகரிப்பு (Rapid Expansion) ஏற்படுகின்றது. ஆனால் இவ்விதம் 'அழிவு' (Annihilation) ஏற்படும் போது கட்டாயம் காமாக் கதிர்கள் உருவாகியிருக்க வேண்டும். அவற்றை மிக இலகுவாகக் காமாத் தூரதரிசினிகளால் (Gamma Telescope) அவதானிக்கக் கூடியதாகவிருக்க வேண்டும். ஆனால் அவ்விதமான அவதானிப்பெதனையும் இதுவரையில் அறியமுடியவில்லையென்பது 'ஹான்ஸ் அல்வென்'வின் கோட்பாட்டிற்கு ஏற்பட்ட பின்னடைவுகளிலொன்று. இதற்கு 'ஹான்ஸ் அல்வென்' 'நாமிருக்கும் பொருட்குமிழியானது அவதானிக்கப் படக்கூடிய பிரபஞ்சத்திலும் அதிகமாயிருப்பதே இதற்குக் காரணம்' என்றொரு வாதத்தை முன்வைத்தார். அவ்விதமாயின் இவ்வாதம் இன்னுமொரு எதிர்வாதத்தினை முன் வைத்துவிடும் அபாயமிருக்கிறது. அது 'இக்கோட்பாடு எதிர்வு கூறும் பிரபஞ்ச அமைப்பினை அவதானிக்க முடியாதென்றால் அதனை பரிசோதிப்பதெவ்விதம்' என்பதுதான் அது. பிரிட்டிஷ் பெளதிகவியல்/வானியல் விஞ்ஞானியான ஸ்டீபன் ஹார்கின்ஸ்ஸின் (Stephen Hawking) கருத்து என்னவென்றால்...நமது பிரபஞ்சத்தின் இருப்பானது மூடிய நேர வளையத்தை ஒத்தது. இவரது கருத்துப்படி பெருவெடிப்பில் உருவாகும் பிரபஞ்சமானது இறுதியில் ஒரு குறிப்பிட்ட நிலையில், அதாவது பிரபஞ்சத்தின் விரிவடையும் வேகமானது அதியுயர் நிலையினை அடைந்ததும் அதுவரையில் முன்னோக்கிச் சென்று கொண்டிருந்த நேரமானது பின்னோக்கி செல்லத் தொடங்கும். எதுவரை இவ்விதமாக நேரமானது பின்னோக்கிச் செல்லுமென்றால் இன்னுமொரு பெருவெடிப்பு ஏற்படும் வரையில்தான். அதன் பின்னர் நேரமானது மீண்டும் முன்னோக்கி நகரத் தொடங்கும். இவ்விதமாக இப்பிரபஞ்சமானது மீண்டும் மீண்டும் வெடித்துக் கொண்டேயிருக்கும். உண்மையில் இத்தகைய பிரபஞ்சத்தில் வசிக்கும் ஒருவருக்கு நேரம் முன்னோக்கிச் செல்கிறதா அல்லது பின்னோக்கிச் செல்கிறதா என்பது கூடத் தெரியாது. ஏனெனில் அவரால் நேரம் முன்னோக்கிச் செல்வதாக மட்டும் தான் உணர முடியும். உண்மையில் தற்போது நேரம் முன்னோக்கிச் செல்கிறதா அல்லது பின்னோக்கிச் செல்கிறதா என்பது கூடச் சரியாகத் தெரியாது. இவ்விதமாக இருக்கிறது ஸ்டீபன் ஹார்கின்ஸ்ஸின் சிந்தனையின் போக்கு. இன்னும் சில கோட்பாடுகளோ ஆரம்பத்தில் ஒரு பெரு வெடிப்பல்ல பல பெருவெடிப்புகள் ஏற்பட்டிருக்க வேண்டுமெனத் தெரிவிக்கின்றன.

[இக்கட்டுரையின் மூலப் பிரதி 5/4/1992 வீரகேசரி வாரவெளியீட்டில் வெளி வந்தது.தற்போது ஒரு சில மாற்றங்களுடன் பதிவுகளில் வெளிவருகிறது.]

நன்றி: பதிவுகள்.காம், திண்ணை.காம்

சிங்கை நகர் பற்றியதொரு நோக்கு!

சிங்கை நகர் நல்லூர் தமிழரசர்களின் இராஜதானியாக விளங்குவதற்கு முன்னர் விளங்கிய நகர். இதன் இருப்பு பற்றிப் பல்வேறு விதமான ஊகங்கள், கருதுகோள்கள் நிலவுகின்றன. ஒன்றிற்குப் பின் முரண்பாடான ஊகங்கள் ஆய்வாளர்களை மேலும் மேலும் குழப்பத்திலாத்தி வைப்பனவாகவுள்ளன. முதலியார் இராசநாயகம், சுவாமி ஞானப்பிரகாசர் போன்றோர் வல்லிபுரமே சிங்கை நகராக இருந்திருக்கக் கூடிய சாத்தியங்கள் உள்ளதாகக் கருதுவர். பேராசிரியர் சிற்றம்பலமோ நல்லூரே சிங்கைநகரெனக் கருதுவார். கலாநிதி க.குணராசா, கலாநிதி ப.புஷ்பரட்ணம் ஆகியோர் பூநகரிப் பகுதியிலேயே சிங்கை நகர் அமைந்திருந்ததாகக் கருதுவர். ஆனால் கலாநிதி புஷ்பரடணத்தை மேற்கோள் காட்டி கலாநிதி குணராசா சிங்கை நகர் பூநகரிப் பகுதியில் இருந்ததை வலியுறுத்துவார். கலாநிதி புஷ்பரட்ணமோ கலாநிதி குணராசாவின் நூல்களை தனது சிங்கை நகர் வாதத்திற்கு வலு சேர்ப்பதற்காகக் குறிப்பிடுவார். ஆனால் இவர்கள் இருவருக்குமிடையிலும் கூட சிங்கை நகர் என்னும் பெயர் வந்ததற்கான காரணம், மற்றும் சிங்கை நகரின் தோற்றத்திற்கான காலகட்டம் ஆகியவற்றில் மாறுபட்ட குழப்பகரமான கருத்துகளே நிலவுகின்றன. இக்கட்டுரையில் இவர்களிருவரினதும் சிங்கைநகர் பற்றிய கருதுகோள்களில் காணப்படும் வலுவிழந்த தன்மைபற்றி சிறிது ஆராய்வோம். பின்னுமோர் சமயம் இது பற்றி மேலும் விரிவாக ஆய்வோம். கலாநிதி புஷ்பரட்ணத்தின் தர்க்கத்தில் காணப்படும் முரண்பாடுகள் சிங்கை நகர் பற்றிய சுவாமி ஞானப்பிரகாசர் மற்றும் முதலியார் செ.இராசநாயகம் ஆகியோரின் சிங்கைநகர் பற்றிய கருதுகோட்களுக்கே வலுசேர்ப்பதாக அமைகின்றன என்பது அடியேனின் நிலைப்பாடு.

சிங்கை நகர் பற்றிய கலாநிதி குணராசா பின்வருமாறு கூறுவார்: "... உக்கிரசிங்கன் புதிய தலைநகர் ஒன்றினைத் தன் இராச்சியத்தில் உருவாக்க விரும்பி வன்னிப் பிரதேசத்தில் திக் விஜயம் ஒன்றினை மேற்கொண்டான். அவன் வன்னி மார்க்கமாகச் செல்லுகையில் வன்னியர்கள் ஏழுபேரும் எதிர்கொண்டு வந்து வன்னி நாடுகளைத் திறை கொடுத்து ஆள உத்தரவு கேட்டார்கள். உக்கிரசிங்கன் அதற்குச் சம்மதித்தான். அப்பிரதேசத்தில் அவன் உருவாக்கிக் கொண்ட தலைநகர் சிங்கை நகராகும்..." (நூல்: 'யாழ்ப்பாண அரசபரம்பரை'- க.குணராசா; பக்கம் 59).

வன்னியர்கள் வாழ்ந்த பகுதி அடங்காப்பற்று என அழைக்கப்பட்டது. இதற்குரிய முக்கிய காரணங்களிலொன்று வன்னிச் சிற்றரசர்கள் பலதடவைகள் யாழ்மன்னர்களுட்பட ஏனைய மன்னர்களுக்கு அடங்காமல் வாழ்ந்தவர்கள் என்னும் கூற்று. சில சமயங்களில் யாழ்மன்னர்களுக்கெதிராகக் கலகங்களையும் தூண்டி விட்டுள்ளதை யாழ்ப்பாண வைபவமாலை (யாழ்ப்பாணவைபவமாலை, முதலியார் குலசபாநாதன் பதிப்பு; பக்கம் 37-40) விபரிக்கும். மேலும் பழைய வரலாற்று நூல்களில் பூநகரி, பல்லவராயன் கட்டு போன்ற வன்னிப் பகுதிகளை 'வெளிநாடு' (யாழ்ப்பாணவைபவமாலை: பக்கம் 29) என்றுதான் அழைத்துள்ளார்கள். இவ்விதமான வெளிநாடொன்றிற்கு, அதிலும் அதிக அளவில் எதிர்ப்புச் சூழல் நிலவியதொரு இடத்துக்கு எதற்காக இராஜதானி கதிரைமலையிலிருந்து மாற்றப்பட்டது?

"...சிங்கை நகர் என்ற பெயர் கலிங்கநாட்டு நகரங்களுள் ஒன்றாகிய ஸிங்கபுரத்தின் தொடர்புடைய பெயர் என்று கொள்ள இடமுண்டு.... சிங்கை நகர் என்ற பெயர், முதன் முதல் கதிரைமலையிலிருந்து தலைநகரை வேறிடத்திற்கு மாற்றிப் புதிய தலைநகர் ஒன்றினை உருவாக்கிய உக்கிரசிங்கனின் பெயரைத் தாங்கி சிங்க(ன்) நகர் என விளங்கியிருந்தது எனக் கொள்வதே சாலப் பொருத்தமானது." (நூல்: 'யாழ்ப்பாண அரசபரம்பரை'- க.குணராசா; பக்கம் 59) என்பார் க.குணராசா.

இதுபற்றிய கலாநிதி புஷ்பரட்ணத்தின் கருதுகோள் வேறானது. அவர் சோழரே சிங்கைநகரென்னும் பெயர் ஏற்படக் காரணமென்பார்: " ...இப்பெயர் ஒற்றுமை கூடக் கலிங்கநாட்டுச் சிங்கபுரத்தொடர்பால் நேரடியாக வட இலங்கைக்கு வந்ததெனக் கூறுவதைவிடத் தமிழகத்துடனான தொடர்பால் வந்ததெனக் கூறுவதே பொருத்தமாகத் தோன்றுகிறது. ஏனெனில் தமிழகத்திலும் இப்பெயர் நீண்டகாலமாகப் புழக்கத்திலிருந்து வந்துள்ளது. கி.பி. 7ஆம் நூற்றாண்டில் ஆட்சிபுரிந்த பல்லவ மன்னன் சந்திராதித்ய காலச் செப்பேடு சிங்கபுர என்ற இடத்தில் இவன் அமைத்த ஆலயம் பற்றிக் கூறுகிறது....... அதே போல வட இலங்கையை வெற்றி கொண்ட முதலாம் பராந்தக சோழன் கால இரு நகரங்கள் சிங்கபுரம், சிங்கபுரநாடு என்ற பெயரைப் பெற்றிருந்தன. அத்துடன் கொங்கு மண்டலத்திலுள்ள காங்கேயநாடு சோழர் ஆட்சியின்போது சிங்கை என்ற இன்னொரு பெயரையும் பெற்றிருத்தது. இச்சிங்கை நாட்டு வேளாளத் தலைவர்களுக்கு சோழர்கள் இட்ட மறுபெயர் சிங்கைப் பல்லவராயர் என்பதாகும். இவர்கள் சோழருடன் இணைந்து இலங்கை நாட்டுடனான அரசியலிலும், படையெடுப்புக்களிலும், வர்த்தகத்திலும் ஈடுபட்டதற்குப் பல சான்றுகள் உண்டு.." (நூல்: தொல்லியல் நோக்கில் இலங்கைத் தமிழர் பண்பாடு - ப.புஷ்பரட்ணம்; பக்கம் 183)

முதலியார் இராசநாயகம் 'கோட்டகம' கல்வெட்டில் 'பொங்கொலி நீர்ச் சிங்கை நகராரியன்' எனக் குறிப்பிட்டிருப்பதைக் காரணம் காட்டி அதற்குரிய பிரதேசமாக வல்லிபுரமே அவ்விதமான துறைமுகப் பொலிவுள்ள நகரென்று கருதுவார். ஆனால் கலாநிதி க.குணராசாவோ இது பற்றிப் பின்வருமாறு கூறுவார்: "....யாழ்ப்பாணக் கடனீரேரி அன்று பொங்கு கடலாகவே விளங்கியது....." (நூல்: 'யாழ்ப்பாண அரசபரம்பரை'- க.குணராசா; பக்கம் 60) பதினான்காம் நூற்றாண்டில் நிகழ்ந்த சம்பவத்தைக் கூறுவது கோட்டகம கல்வெட்டு. இக்காலகட்டத்தில் கலாநிதி க.குணராசா குறிப்பிடுவது போல் யாழ்ப்பாணக் கடனீரேரி பொங்கு கடலாக இருந்ததா என்பது சந்தேகத்திற்குரியது. இதற்குப் பல நூறு வருடங்களுக்கு முன்னரே மாந்தை கூடத் தன் முக்கியத்துவத்தினை இழந்து விட்டது. பொங்கு கடலாகவிருந்த யாழ்ப்பாணக் கடனீரேரி மிக விரைவாக அதன் இன்றைய நிலைக்கு மாறி விட்டதா?

இவ்விடத்தில் முதலியார் இராசநாயகத்தின் இவ்விடயம் சம்பந்தமான கருதுகோள்களை ஆராய்வதும் பயனுள்ளதே. இவரது 'யாழ்ப்பாணச் சரித்திரம்' பண்டைய யாழ்ப்பாணம் பற்றி விபரித்தபடியே தொடங்குவது குறிப்பிடத்தக்கது. அதில் பின்வருமாறு விபரிக்கப்பட்டுள்ளது: "இப்போது குடாநாடாக விருக்கும் யாழ்ப்பாணம், முன்னொரு காலத்தில் அதாவது கிறிஸ்துவுக்கு அநேக ஆயிரம் ஆண்டுகட்கு முன்னரே, இரண்டு தீவுகளாகவிருந்தது. மேற்கே நாகதீவம், மணிநாகதீவம், மணிபுரம், மணிபல்லவம் என்னும் நாமங்களால் வழங்கபப்பட்ட பெருந்தீவும், கிழக்கே எருமைத் முல்லைத்தீவு, எருமைதீவு என்று பெயர்பெற்ற சிறுதீவும் ஆக இரு பிரிவாக இருத்தது. காலந்தோறும் பூகம்பங்களினாலும், பிரளயங்களினாலும் அழிக்கப்பட்டு, மேற்கே ஒன்றாயிருந்த பெருந்தீவகம் பலதீவுகளாகப் பிரிக்கப்பட்டது. காரைதீவு, வேலணை, மண்டைதீவு, புங்குடுதீவு, அனலைதீவு, நயினாதீவு, நெடுந்தீவு முதலிய தீவுகளும், வலிகாமமும் அப்பெருந்தீவகத்தின்பகுதிகளேயாம். அவ்வாறே கிழக்கே ஒன்றாகவிருந்த சிறுதீவகம் களப்புக் கடலால் வடமராட்சி, தென்மராட்சி, பச்சிலைப்பள்ளியென்னும் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது. பண்ணைக்கடல், பூநகரிக்கடல், யானையிறவுக்கடல் என்னுங் களப்புக்கடல்கள் முன்னே வங்காளக்குடாக்கடலுடன் சேர்ந்து, ஆழமும் அகலமும் உள்ளனவாயிருந்தன; அன்றியும் மேலைத்தேசங்களிலும், சீனம் முதலிய கீழைத்தேசங்களிலுமிருந்து போக்குவரவு செய்யுங் கப்பல்களுக்குப் பெரும் வழியாகவும், சோளகம் வாடைக்காற்றுக்கள் தொடங்குங் காலங்களில் உண்டாகும் புயல்களுக்கு, அக்கப்பல்களின் ஒதுக்கிடமும் உறைவிடமுமாகவும் இருந்தன" ('யாழ்ப்பாணச்சரித்திரம்'; பக்கம்1-2). இவ்விதமாகவிருந்த நிலை காலப்போக்கில் மாறி யாழ்ப்பாணக்குடாநாடு உருவாகியதற்குக் காரணங்களாக வங்காளக்குடாக்கடலின் அலைகளால் ஒதுக்கப்படும் மணற்றிரளினையும், வடக்கில் முருகைக்கற்பூச்சினால் உண்டாக்கப்படும் கற்பாறைகளையும், தெற்கிலிருந்து சோளகக்காற்றினால் கொண்டுவரப்படும் மணலினையும் சுட்டிக் காட்டுவார் முதலியார் இராசநாயகம்.

மேலும் இவரது ஆய்வின்படி கி.மு முதலாம் நூற்றாண்டிலிருந்து , கி.பி..மூன்றாம் நூற்றண்டுவரையில் மாதோட்டம் புகழ்மிக்க துறைமுகமாகவிருந்தது. கிரேக்கர், ரோமர் மற்றும் அராபியர்கள் எனப்பலர் மாதோட்டத்துறைமுகத்து தமது கீழைத்தேய வியாபாரநிமித்தம் வந்து போயினர். மன்னாரிலும் ,மாதோட்டத்திலுங் காணப்படும் பெருக்குமரங்கள் அராபியர்களால் கொண்டுவரப்பட்டவையே என்பது இவரது கருத்து.

மாதோட்டம் பற்றி யாழ்ப்பான இராச்சியம் பின்வருமாறு விபரிக்கும்: "அக்காலத்தில் இலங்கையின் பிரசித்த துறைமுகம் மாதோட்டம் என்னும் பெருந்துறையே. அதைப் பிரதான துறைமுகமாகக் கொண்டு வங்காளக்குடாக்கடலுக்கூடாய்க் கீழைத்தேசங்களுக்குப் போகும் மரக்கலங்களும், சீன தேசத்திலிருந்து வரும் மரக்கலங்களும் யானையிறவுக்கடலுக்கூடாகப் போக்குவரவு செய்வதுண்டு" (யாழ்ப்பாணச்சரித்திரம்'; பக்கம் 19).

அக்காலகட்டத்தில் நாவாந்துறை, பூநகரி மற்றும் கல்முனை ஆகியனவும் துறைமுகங்களாக விளங்கியதாகவும், நாவாந்துறையிலிருந்து வழுக்கியாற்றின் வழியே தலைநகராயிருந்த கதிரைமலைக்கு சங்கடம் என்னுந் தோணிகளில் வியாபாரப்பண்டங்கள் ஏற்றி செல்லப்பட்டனவென்றும், இதனாலேயே நாவாந்துறைக்கு சங்கடநாவாந்துறையென்னும் பெயர் இப்பொழுதும் வழங்கிவருவதாகவும் இராசநாயகம் அவர்கள் மேலும் கருதுவார்.

இவ்விதமாகப் புகழ்பெற்று விளங்கிய மாதோட்டம் 'மண்ணேறிட்டிருந்தபடியால் துறை உபயோகம் அருகி, ஒன்பதாம் நூற்றாண்டளவில் கப்பல்கள் அத்துறைக்கு வருதல் முற்றாக ஒழிந்து, அதன் பின் முஸ்லீம்கள் வரத்தொடங்கிய காலத்தில் அவர்கள் நூல்களில் 'கலா'வென்றழைக்கப்பட்ட ஊராத்துறை முக்கியத்துவம் பெற்றதென்று கருதுவார் இராசநாயகம் அவர்கள்.

சி.பத்மநாதனின் மாந்தை பற்றிய கருத்தும் இத்தகையதே. 'சோழராட்சிக்குப் பிற்பட்ட காலத்தில் மாந்தை நகரம் வீழ்ச்சியுற்றது. பதினோராம் நூற்றாண்டின்பின் மாந்தைத் துறைமுகத்திற்குத் தூரதேசங்களிலிருந்து ஆழ்கடல் வழிச் செல்லும் பெருங்கப்பல்கள் வந்திருந்தமைக்குச் சான்றுகளில்லை. ஆழ்கடல் வழியான வாணிபத்தில் ஒரு பிரதானதொடர்பு நிலையம் என்ற நிலையினை இழந்தமையால் மாந்தையில் நகர வாழ்க்கை சீரழிந்தது. கி.பி.1050 ஆம் ஆண்டிற்குப் பிறபட்ட சாசனங்களிலும் இலக்கியங்களிலும் மாந்தையிலுள்ள வணிகரைப்பற்றியோ அங்கிருந்த கட்டட அமைப்புகளைப்பற்றியோ குறிப்புக்கள் காணப்படவில்லை' என்பார் அவர் (கட்டுரை: 'இலங்கை தமிழ வணிகக் கணங்களும் நகரஙக்ளும்'- சி.பத்மநாதன்; 'சிந்தனை' ஆடி 1984 இதழிலில்).

கி.மு காலத்திலிருந்தே வங்காளக்கடலினூடு தூர நாடுகளுக்குச் செல்லும் கப்பல்கள் யானையிறவுக் கடலினூடு மாந்தை துறைமுகம் வழியாகப் பயணிக்க முடிந்ததால் அந்நகர் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்ததாகவிருந்தது. காலப்போக்கில் யானையிறவுக் கடல் மண்மேடிட்டுத் தூர்ந்ததால் அது தடைபடவே காலப்போக்கில் மாந்தை தன் முக்கியத்துவத்தினை இழந்தது. இதேசமயம் பதினான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த இபின் பதூத்தா என்னும் முஸ்லீம் பயணி ஆரிய மன்னனை இலங்கையின் சுல்தானெனவும், பல கப்பல்களுடன் விளங்கிய கடற்படையினை அவன் வைத்திருந்தது பற்றியும் தெரிவித்திருக்கின்றான். இத்தகைய மன்னனின் சிங்கை நகர் அமைந்திருக்கக் கூடிய இடம் வல்லிபுரம் போன்றதொரு பகுதியாக இருந்திருப்பதற்கே அதிகமான சாத்தியங்களுள்ளன.

இத்தகையதொரு நிலைமையில் க.குணராசா அவர்கள் 'யாழ்ப்பாணக் கடனீரேரி அன்று பொங்கு கடலாகவே விளங்கியது' என்று பொதுவாகக் கூறுவது பொருத்தமற்றதாகவே படுகிறது. கோட்டகம் கல்வெட்டில் கூறப்பட்டுள்ள 'பொங்கொலி நீர்சிங்கைநகர்' பூநகரியினை அண்டிய வன்னி மாவட்டத்தில் இருப்பதை வலியுறுத்துவதற்காக அவ்விதம் கூறினார் போலும். அவர் கூறுவது உண்மையானால் கடந்த எட்டு நூற்றாண்டுகளுக்குள் பொங்கு கடலாக விளங்கிய யாழ்ப்பாணக் கடனீரேரி தூர்ந்து இன்றைய நிலையினை அடைந்திருக்க வேண்டும். மேலும் யாழ்பாடி பற்றிய யாழ்ப்பாண வைபவமாலையின் கூற்றினைக் குறிப்பிடும் கலாநிதி க.குணராசா பின்வருமாறு குறிப்பிடுவார்: "...கண்தெரியாத ஒரு யாழ்ப்பாடிக்கு இசைக்குப் பரிசாகத் தனது இராச்சியத்திற்கு வடக்கே இருந்து ஒரு மணல் வெளியே தமிழ்மன்னன் ஒருவன் பரிசளித்ததாகக் கூறும் இச்சம்பவத்தின் உண்மை பொய் எவ்வளவு என்பதை ஆராய்வதைவிடுத்து மணல் வெளியாகக் கருதப்பட்ட யாழ்ப்பாணம் வடக்கேயிருந்தது என்றால், அதைப் பரிசாகத் தந்த மன்னன் இருந்தவிடம் தென்நிலப்பரப்பாக இருந்தது என்பது ஏற்றுக் கொள்ளப்படத்தக்கதே.." ((நூல்: 'யாழ்ப்பாண அரசபரம்பரை'- க.குணராசா; பக்கம் 62).

இது பற்றிய கலாநிதி ப.புஷ்பரட்ணத்தின் கூற்றும் இத்தகையதே. "... இதில் சிங்கை நகருக்கு வடக்கிலுள்ள நாடு மணற்றிடர் எனக் கூறப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் என்னும் பெயர் 15ஆம் நூற்றாண்டில் ஏற்படும்வரை இதும்மணற்றி, மணவை, மணற்றிடர் என அழைக்கப்பட்டதற்கு ஆதாரங்களுண்டு....... இதில் வடக்காகவுள்ள இப்பிராந்தியத்தை சிங்கையில் இருந்து ஆட்சிபுரிந்த மன்னன் யாழ்ப்பாணனுக்கு வழங்கினான் எனக் கூறுவதிலிருந்து யாழ்ப்பாணத்திற்குத் தெற்காக சிங்கையிருந்தது தெரிகிறது. இங்கே யாழ்ப்பாணத்திற்குத் தெற்காக வன்னிப் பிராந்தியமே இருப்பது கவனத்தில் எடுத்துக் கொள்ளத்தக்கது..." (நூல்:'தொல்லியல் நோக்கில் இலங்கைத் தமிழர் பண்பாடு'- ப.புஷ்பரட்ணம்; பக்கம்: 168). உண்மையில் இவர்களிருவரும் கூறும் யாழ்ப்பாண வைபவமாலையில் ".... அரசன் அதைக்கேட்டு மிகுந்த சந்தோசம் கொண்டு அவனுக்குப் பரிசிலாக இலங்கையின் வட திசையிலுள்ள மணற்றிடர் என்னும் நாட்டைக் கொடுத்தான்.."(நூல்: 'யாழ்ப்பாண வைபவமாலை' - மயில்வாகனப்புலவர், முதலியார் குலசபாநாதன் பதிப்பு; பக்கம்:24) என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது.. சிங்கை நகருக்கு வடக்கிலுள்ள நாடு மணற்றிடரென்று கூறப்படவில்லையே. 'இலங்கையின் வட திசையிலுள்ள மணற்றிடர்' என்றுதானே கூறப்பட்டுள்ளது. இலங்கையின் வடதிசையில்தானே யாழ்ப்பாணமுள்ளது. இதிலென்ன ஆச்சரியம்? சிங்கை நகரிலிருந்து ஆண்ட மன்னன் இலங்கையின் வடக்கிலுள்ள மணற்றிடரென்பதை ஏன் கலாநிதி குணராசாவும், கலாநிதி புஷ்பரட்ணமும் சிங்கை நகருக்கு வடக்கிலென்று வலிந்து பொருள்கண்டார்கள்? இலங்கை என யாழ்ப்பாண வைபவமாலையில் குறிப்பிடப்படுவதை கலாநிதி குணராசாவும், கலாநிதி புஷ்பரட்ணமும் சிங்கைநகரினைக் குறிப்பதாகக் கருதுகின்றார்களா? ஏன்?

இவற்றையெல்லாம் பார்க்கும்போது சிங்கைநகர் பூநகரிப்பகுதியில் இருந்திருக்கலாமென்று ப.புஷ்பரட்ணம் மற்றும் க.குணராசா ஆகியோர் கருதுவது காத்திரமான வாதமாகப் படவில்லை. மேலும் யாழ்பாடி கதையினை ஆதாரம் காட்டும் அவர்கள் அதில் யாழ்ப்பாணத்தை (மணற்றிடர்) சிங்கை நகருக்கு வடக்கிலுள்ளதொரு நகராக வலிந்து பொருள்கண்ட விதமும் எப்படியாவது தங்களது 'சிங்கை நகர் பூநகரிப் பகுதியிலிருந்துள்ளதென்ற' கருத்தினை எப்படியாவது நிறைவேற்றவே அவர்கள் முனைந்துள்ளார்களோவென்ற ஐயத்தினை ஏற்படுத்துகிறது. மேலும் ப.புஷ்பரட்ணம் அவர்கள் தனது சிங்கை நகர் பற்றிய கருத்தினை நிறுவுவதற்காக பூநகரிப்பகுதியில் கிடைக்கப்பெறும் கட்டடப்பகுதிகள், நாணயங்கள் மற்றும் இடப்பெயர்களையும் துணைக்கழைப்பார். ஆனால் இவையெல்லாம் அப்பகுதியின் வரலாற்று முக்கியத்துவத்தினை வலுப்படுத்துகின்றனவேயல்லாமல் அங்கொரு இராஜதானி இருந்திருப்பதற்கான உறுதியான சான்றுகளாகக் கருதமுடியாது. வரலாற்றில் கி.மு.காலகட்டத்திலிருந்தே முக்கியத்துவம் பெற்றிருந்த பூநகரிப்பகுதியில் அரசர்கள், சிற்றரசர்கள், வணிகக்கணங்கள் மற்றும் படைத்தலைவர்களுக்கெல்லாம் மாளிகைகள், வியாபாரநிலையங்கள், மற்றும் அரசமுக்கியத்துவம் வாய்ந்த கட்டடங்கள் இருந்திருப்பது இயல்பே. அத்தகைய பகுதியில் இதன் காரணமாகப் பெருமளவில் நாணயங்கள் கிடைக்கப்படுவதும், அரச முக்கியத்துவம் வாய்ந்த இடப்பெயர்கள் நிலவுவதும் பெரிதான ஆச்சரியப்படத்தக்க விடயமல்ல. இவற்றைக் கண்டுவிட்டு , விழுந்தடித்துக் கொண்டு, இதற்குக் காரணம் அங்கொரு அரசு இருந்ததுதான் என்று முடிவுக்கு வந்து விடுவது உறுதிமிக்க தர்க்கமாகப் படவில்லை. இதற்கு மாறாக கி.மு.காலத்திலிருந்தே சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக விளங்கிய பூநகரிப் பகுதி பின்னர் சோழர் காலத்திலும், யாழ்ப்பாண அரசின் காலத்திலும் அதன் கேந்திர, வர்த்தக, இராணுவரீதியான முக்கியத்துவத்தினை இழக்காமலிருந்துள்ளதையே மேற்படி கட்டடச் சிதைவுகளும், இடப்பெயர்களும் மற்றும் கண்டெடுக்கப்பட்ட நாணயங்களும் உறுதிப்படுத்துகின்றன என்று வேண்டுமானால் வாதிடலாம். அது பொருத்தமாகவும், வலுவானதாகவுமிருக்கும்.

உசாத்துணை நூல்களில் சில: 1. 'யாழ்ப்பாண வைபவமாலை'- மாதகல் மயில்வாகனப் புலவர் (முதலியார் குல. சபாநாதன் பதிப்பு)
2. 'யாழ்ப்பாணச் சரித்திரம்' - முதலியார் செ.இராசநாயகம்
3. 'தொல்லியல் நோக்கில் இலங்கைத் தமிழர் பண்பாடு'- ப.புஷ்பரட்ணம்
4. 'யாழ்ப்பாண அரச பரம்பரை' - கலாநிதி க.குணராசா
5. 'இலங்கைத் தமிழ் வணிகக் கணங்களும் நகரங்களும் (கி.பி.1000 - 1250) -சி.பத்மநாதன் (ஆய்வுக் கட்டுரை; 'சிந்தனை' ஆடி 1984 இதழ்).
6. 'இலங்கையில் திராவிடக் கட்டிடக்கலை' - கலாநிதி கா.இந்திரபாலா

நன்றி: பதிவுகள்.காம், திண்ணை.காம்

பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு!

தத்துவஞானிகள் மண்டைகளைப் போட்டுக் குடைந்துகொண்டிருக்கும் தத்துவ மோதல்களிற்கு இன்றுவரை சரியானதொரு தீர்வில்லை. 'இவ்வுலகம், இங்கு வாழும் ஜீவராசிகள், இப்பிரபஞ்சம் எல்லாமே அவன் விளையாட்டு. அவனின்றி அவனியில் எதுவுமேயில்லை' என்று சமயம் கூறும். இதனைக் கருத்துமுதல் வாதம் என்போம். நம்புபவர்கள் 'கருத்து முதல்வாதிகள்'. இவர்கள் 'சிந்தனை, புலனுணர்வு என்பவை ஆன்மாவின் செயலென்றும், இவ்வான்மாவானது அழியாதது, நிரந்தரமானது' என்றும், 'இவ்வுலகு, இயற்கை யாவுமே சக்தியின் விளைவு' என்றும் கூறுவார்கள். அதுமட்டுமல்ல 'இவ்வுலகமென்பது (காண்பவை, செயல்கள் எல்லாமே) சிந்தனையின் அதாவது உணர்வின் விளைபொருளே' என்றும் கூறுவார்கள். ஆனால் இதற்கு மாறான கருத்துள்ள தத்துவஞானம் 'பொருள் முதல்வாதம்' எனப்படுகின்றது. இதனை நம்புபவர்கள் 'பொருள்முதல்வாதிகள்' எனப்படுவர். இவர்கள் கருத்துப்படி 'ஆன்மா நிலையானது, அழிவற்றது' என்பதெல்லாம் வெறும் அபத்தம். கட்டுக்கதை. சிந்தனை என்பது பொருள் வகை வஸ்த்துவான மூளையின் செயற்பாடே. நிலையாக இருப்பது இந்த இயற்கை (பொருள்) ஒன்றே'. இவ்வுலகினின்றும் வேறாகத் தனித்து ஒரு சக்தி இருக்கின்றது என்பதை எதிர்க்கும் இவர்கள் 'அப்படி எதுவுமில்லை' என்கின்றார்கள். 'இவ்வியற்கையில் ஏற்பட்ட பரிணாம மாற்றங்களே உயிரினங்கள் உருவாகக் காரணம்' என்கின்றார்கள். நவீன இயற்கை விஞ்ஞானத்தை இவர்கள் ஆதாரமாகக் கொள்கின்றார்கள். இந்நிலையில் பாரதியை ஆராய்வோமாகில் அவனும் இந்தப் பிரச்சினையை அசட்டை செய்து விடவில்லை என்பதைக் கண்டு கொள்ளலாம். பாரதியின் கீழுள்ள கவிதை வரிகள் அவனை ஒரு கருத்து முதல்வாதியாகக் காட்டுகின்றன. 'அல்லா' என்ற கவிதையில் பாரதி பின்வருமாறு பாடுகின்றான்.

"..பல்லாயிரம் பல்லாயிரம் கோடியண்டங்கள் எல்லாத்திசையிலுமோரெல்லையில்லா வெளிவானிலே நில்லாது சுழன்றோட நியமஞ் செய்தருள் நாயகன்..'

'மகாசக்தி வாழ்த்து' என்னும் கவிதையில் அவன் கூறுவதோ?

"..விண்டுரைக்க அரிய அரியதாய் விரிந்த வானவெளியென நின்றனை. அண்ட கோடிகள் வானிலமைத்தனை அவற்றில் எண்ணற்ற வேகம் சமைத்தனை. மண்டலத்தை அணு அணுவாக்கினால் வருவதெத்தனை யோசனை கொண்ட தூரம் அவற்றிடை வைத்தனை கோலமே! நினைக் காளியென்றேத்துவேன்.."

மேலுள்ள பாடல் வரிகள், மற்றும் பாரதியின் அனேக தெய்வப் பாடல்கள் கூறுவதென்ன? இந்த உலகம், இந்தப் பிரபஞ்சம் யாவற்றையும் ஆக்கியது ஒரு சக்தி , அதுவே கடவுள் என்பதையல்லவா? ஆனால் இவ்விதம் இயற்கைக்கு வேறாக ஒரு கடவுளைப் படைக்கும் கருத்து முதல்வாதியாக விளங்கும் பாரதியால் , கண்ணெதிரே தெரியும் காட்சிகளை, அவற்றின் உண்மையினைக் கருத்து முதல்வாதிகளைப் போல் மாயை என்று ஒதுக்கித் தள்ளிவிட முடியவில்லை. பொருள் உண்மையென்ற பொருள்முதல்வாதத்தினையும் மறுத்து விட முடியவில்லை. பாரதியின் 'உலகத்தை நோக்கி வினவுதல்' என்ற கவிதையினைப் பார்த்தால்....

"..நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே நீங்களெல்லாம் சொப்பனம் தானோ? பலதோற்ற மயக்கங்களோ? கற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே, நீங்களெல்லாம் அற்ப மாயைகளோ? உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ? வானகமே! இளவெயிலே! மரச்செறிவே! நீங்களெல்லாம் கானலின் நீரோ? வெறுங் காட்சிப் பிழைதானோ? போனதெல்லாம் கனவினைப் போல் புதைந்தழிந்தே போனதினால் நானுமோர் கனவோ? இந்த ஞாலமும் பொய்தானோ? காலமென்ற ஒரு நினைவும் காட்சியென்ற பல நினைவும் கோலமும் பொய்களோ? அங்கு குணங்களும் பொய்களோ?.."

இவ்விதமாகக் 'காண்பவை , கருதுபவை ' யாவுமே பொய்யோ எனக் கருத்து முதல்வாதிகளைப் போல் வினவும் பாரதியார் மேழுள்ள கவிதையின் இறுதியில் பின்வருமாறு முடிக்கின்றார்.

"..சோலையிலே மரங்களெல்லாம் தோன்றுவதோர் விதையிலென்றால், சோலை பொய்யாமோ? இதைச் சொல்லொடு சேர்ப்பீரோ? காண்பவெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்பமன்றோ? வீண்படு பொய்யிலே நித்தம் விதி தொடர்ந்திடுமோ? காண்பதுவே உறுதி கண்டோம். காண்பதல்லால் உறுதியில்லை. காண்பது சக்தியாம். இந்தக் காட்சி நித்தியமாம்..."

ஆரம்பத்தில் கருத்து முதல்வாதிகளைப் போல் வினவிய பாரதி , இறுதியில் பொருள் முதல்வாதியாக முடிக்கின்றான். அதனால் தான் கருத்து முதல்வாதிகளைப் போல் 'காண்பதெல்லாம் மாயை'யென்று முடிக்காமல் 'காண்பது சக்தியாம். இந்தக் காட்சி நித்தியமாம்' என்று முடிக்கின்றான். இவ்விதமாக பாரதி தனிக் கருத்து முதல்வாதியாகவும் இல்லாமல், தனிப் பொருள்முதல்வாதியாகவுமில்லாமல் , கருத்து முதல்வாதத்திற்கும் பொருள் முதல்வாதத்திற்குமிடையில் ஒருவித இணக்கமான போக்கினை, சமரசப் போக்கினைக் கைக்கொள்பவனாகக் காணப்படுகின்றான். உண்மையில் பாரதி 'அல்லா', 'மகாசக்தி வாழ்த்து' மற்றும் பல பக்திப் பாடல்களின் அடிப்ப்டையில் கருத்துமுதல்வாதியாகத் தென்பட்டாலும், 'உலகத்தை வினவுதல்' என்ற கவிதையினூடாக நோக்கும் போது மேலே கூறப்பட்டதைப் போல் இருவிதமான தத்துவவியற் போக்குகளுக்குமிடையில் ஒரு சமரசம் செய்பவனாகவே தென்படுகின்றான். உண்மையில் பாரதியிடம் காணப்படும் இத்தகைய முரண்பாடுகளெல்லாம் அவனது ஆர்வமிக்க, உலகை அறியும் நோக்கு மிக்க மனப் போக்குகளின் வளர்ச்சியின் வெளிப்பாடுகளே. இத்தகைய போக்கினையே அவனது 'சுயசரிதை' என்ற கவிதையின் பின்வரும் வரிகளும் புலப்படுத்துகின்றன.

"..மாயை பொய்யென முற்றிலும் கண்டனன். மற்றுமிந்த பிரமத்தினியல்பினை ஆய நல்லருள் பெற்றிலன். தன்னுடை அறிவினுக்கு புலப்படலின்றியே தேய மீதெவரோ சொலுஞ் சொல்லினைச் செம்மையென்று மனத்திடை கொள்வதாம் தீய பக்தியியற்கை வாய்ந்திலேன். சிறுது காலம் பொறுத்தினுங் காண்பமே.."

மாயை பொய்யெனக் கூறும் பாரதி, 'பிரமத்தின் இயல்பினை அறிய இன்னும் அருள் பெறவில்லை' என்று கூறும் பாரதி, 'அறிவிற்கு புலப்படாத எவற்றையும் நம்பும் தன்மையில்லாத பாரதி, அத்தகைய அறிவு நிலையினை அடையும் வரை பொறுப்பேன் என்கின்றான். இவ்விதமாக பாரதியின் அறிவுத் தாகமெடுத்து அலையும் மனதில் ஏற்பட்ட தர்க்கப் போராட்டத்தின் விளைவுகளே அவனது மேற்கூறப்பட்ட முரண்பாடுகளே தவிர வேறல்ல. இத்தகைய முரண்பாடுகள் அவனது மாபெரும் மேதைமையின் வளர்ச்சிப் படிக்கட்டுக்களே.

நன்றி: பதிவுகள்காம், திண்னை.காம்

பாரதி ஒரு மார்க்ஸியவாதியா?

பாரதியார் ருஷ்யப் புரட்சியினைப் பாராட்டி வரவேற்று 'புதிய ருஷ்யா' என்னும் கவிதையில் பின்வருமாறு பாடுகின்றார். "குடிமக்கள் சொன்னபடி குடிவாழ்வு/மேன்மையுறக் குடிமை நீதி/கடியொன்றெழுந்தது பார் குடியரசென்று/உலகறியக் கூறிவிட்டார் அடிமைக்குத் தளையில்லை யாருமிப்போது/அடிமையில்லை அறிக என்றார்/இடிபட்ட சுவர் போலே கலி விழுந்தான்/ கிருதயுகம் எழுக மாதோ". இதன் மூலம் ருஷ்யப் புரட்சியினை இனங்கண்டுகொண்டு முதன்முதலாகப் பாடிய இந்தியக் கவிஞனென்ற பெருமையினையும் பாரதியாரே தட்டிக் கொள்கின்றார். பாரதியின் 'மாதர் விடுதலை' பற்றிய கவிதைகள், கட்டுரைகள், 'கியூசின்' என்னும் வீரமாதினைப் பற்றிய கட்டுரைகள், அம்மாதின் கவிதை மொழிபெயர்ப்புகள், புதிய ருஷ்யாவைப் பற்றிய கவிதை, 'செல்வம்', 'தொழிலாளர்' என்னும் தலைப்பிலான கட்டுரைகள், மற்றுமவர் தத்துவப் பாடல்கள் இவையாவுமே நமக்குக் கூறி நிற்பவை தானென்ன? பாரதி ஒவ்வொரு விடயத்தினைப் பற்றியும் பல்வேறுவகைப்பட்ட கருத்துகளையும் வெகு நுணுக்கமாகப் பரிசீலித்துள்ளாரென்பது மட்டுமல்ல, சமகாலத்து நடப்புகளையும் அறிந்துள்ளாரென்பதையும்தான்.

இன்றைய உலகில், முரணான பல்போக்குச் சிந்தனையாளர்கள் ஒவ்வொருவரும் தத்தமது பார்வைகளில் பாரதியினைக் கண்டு புளகாங்கிதமடைந்து கொள்கின்றார்கள். இந்நிலையில் பாரதியின் உண்மையான நிலைப்பாட்டினை அறிந்து கொள்ள முயல்வது மிகவும் அவசியம். இது பற்றிய அவனது முரண்பட்ட போக்குகளை, தேடலை அவனது எழுத்துகளினூடே அறிந்து கொள்ள முயலவதே சாலச் சிறந்தது.

'பாரத சமுதாயம்' என்னும் கவிதையில் அவன் பின்வருமாறு பாடுகின்றான்: "முப்பது கோடி ஜனங்களின் சங்கம் முழுமைக்கும் பொதுவுடமை./ஒப்பில்லாத சமுதாயம் உலகத்துக்கொரு புதுமை/ மனிதருணவை மனிதர் பறிக்கும் வழக்கம் இனியுண்டோ?/மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்க்கை இனியுண்டோ?/பலனில் வாழ்க்கை இனியுண்டோ?" இவ்விதம் பாரதியின் கவிதைகள் 'பொதுவுடமை'யினையும் 'சமத்துவத்தையும்' வரவேற்றுப் பாடுகின்றன. இவ்விதம் பொதுவுடமைக் கருத்தினை வரவேற்றும், ஆயுதம் தாங்கி நிகழ்த்தப்பட்ட ருஷ்யப் புரட்சியினையும் வரவேற்றுப் பாடிய பாரதியை மார்க்ஸியவாதிகள் புரட்சியினை , ஆயுதப் புரட்சியினை வரவேற்றிடும் ஒரு கவிஞனாக எண்ணி விடுகின்றார்கள். ஆனால் உண்மை இதுவா? பாரதியாரின் ஆவேசத்தினையூட்டிடும் சுதந்திரப்பாடல்களையும், பாப்பாப் பாட்டில் "பாதகஞ் செய்பவரைக் கண்டால் நாம்/பயங்கொள்ளலாகாது பாப்பா!/மோதி மிதித்து விடு பாப்பா! /அவர் முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா!" என்று பாடுவதையும் பார்த்துவிட்டு அவர் வன்முறையின் மூலம் தீர்வு காண்பதனையே விரும்புவதாக ஒரு சாரார் கருதிவிடுகின்றார்கள். ஆனால் இவை எல்லாவற்றையுமே தவிடு பொடியாக்கி விடுகின்றது பாரதியின் 'செல்வம்' என்ற கட்டுரை. அதில் அவர் பின்வருமாறு கூறுகின்றார்:

"ஏற்கனவே ருஷ்யாவில் ஸ்ரீமான் லெனின் ஸ்ரீமான் மிந்த்ரோஸ்கி முதலியவர்களின் அதிகாரத்தின் கீழ் ஏற்பட்டிருக்கும் குடியரசில் தேசத்து விளைநிலமும் பிற செல்வங்களும் தேசத்தில் பிறந்த அத்தனை ஜனங்களுக்கும் பொதுவுடமையாகி விட்டது. இக்கொள்கை ஜெர்மனியிலும் ஆஸ்த்திரேலியாவிலும்துருக்கியிலும் அளவற்ற வன்மை கொண்டு வருகின்றது. ருஷ்யாவிலிருந்து இது ஆசியாவிலும் தாண்டிவிட்டது. வட ஆசியாவில் பிரமாண்டமான பகுதியாக நிற்கும் சைபீரியா தேசம் ருஷ்யாவின் ஆதிக்கத்தைச் சேர்ந்ததால் அங்கும் இந்த முறைமை அனுஷ்டானத்திற்கு வந்து விட்டது. அங்கிருந்து இந்தக் கொள்கை மத்திய ஆசியாவிலும் பரவி வருகின்றது. ஐரோப்பாவிலுள்ள பிராண்ஸ் இங்கிலாந்து முதலிய வல்லரசுகள் இந்த முறைமை தம் நாடுகளுக்குள்ளும் பிரவேசித்து வரக்கூடும் என்று பயந்து அதன் பரவுதலைத் தடுக்குமாறு பலவிதங்களில் பிரயத்தனங்கள் புரிந்து வருகின்றார்கள். ஆனால் இந்த முறைமை போர் கொலை பலாத்காரங்களின் மூலமாக உலகத்தில் பரவிவருவது எனக்குச் சம்மதம் இல்லை. எந்தக் காரணத்தைக் குறித்தும் மனிதருக்குள்ளே சண்டைகளும் கொலைகளும் நடக்கக் கூடாதென்பது என்னுடைய கருத்து. அப்படியிருக்க ஸமத்வம், ஸகோதரத்துவம் என்ற தெய்வீக தர்மங்களைக் கொண்டோர் அவற்றைக் குத்துவெட்டு பீரங்கி துப்பாக்கிகளினால் பரவச் செய்யும்படி முயற்சி செய்தல் மிகவும் பொருந்தாத செய்கையென்று நான் நினைக்கின்றேன்.."

இதே கட்டுரையில் இன்னுமோரிடத்தில் பாரதியார் பின்வருமாறு கூறுகின்றார்:

"..'கொலையாளிகளை அழிக்க கொலையைத் தானே கைக்கொள்ளும்படி நேருகின்றது. நியாயம் செய்வோரை அநியாயத்தாலேதான் அடக்கும்படி நேருகிறது' என்று ஸ்ரீமான் லெனின் சொல்லுகிறார். இது முற்றிலும் தவறான கொள்கை. கொலை கொலையை வளர்க்குமே ஒழிய அதை நீக்க வல்லதாகாது. அநியாயம் அநியாயத்தை விருத்தி பண்ணுமேயொழிய குறைக்காது. பாபத்தை புண்ணியத்தாலே தான் வெல்ல வேண்டும். பாபத்தை பாபத்தால் வெல்லுவோம் என்பது அறியாதவர் கொள்கை..." இவ்விதமாகக் கூறுமவர் இன்னுமோரிடத்தில் பின்வருமாறு கூறுகின்றார்:"மேலும் ருஷ்யாவிலுங்கூட இப்போது ஏற்பட்டிருக்கும் 'ஸோஷலிஸ்ட்' ராஜ்யம் எக்காலமும் நீடித்து நிற்கும் இயல்புடையதென்று கருத வழியில்லை. சமீபத்தில் நடந்த மஹாயுத்தத்தால் ஐரோப்பிய வல்லரசுகள் ஆள்பலமும் பணபலமும் ஆயுதபலமும் ஒரேயடியாகக் குறைந்து போய் மஹாபலஹீனமான நிலையில் நிற்பதை ஒட்டி மிஸ்டர் லெனின் முதலியோர் ஏற்படுத்தியிருக்கும் 'கூட்டு வாழ்க்கை' குடியரசை அழிக்க மனமிருந்தும் வலிமையற்றோராகி நிற்கின்றனர். நாளை இந்த வல்லரசுகள் கொஞ்சம் சக்தியேறிய மாத்திரத்தில் ருஷ்யாவின் மீது பாய்வார்கள். அங்கு உடமை இழந்த முதலாளிகளும் நிலஸ்வான்களும் இந்த வல்லரசுகளுக்குத் துணையாக நிற்பர். இதனின்றும் இன்னும் கோரமான யுத்தங்களும் கொலைகளும் கொள்ளைகளும் ரத்தப் பிரவாகங்களும் ஏற்பட இடமுண்டு...".

இவை எவற்றை எமக்கு உணர்த்தி நிற்கின்றன. ஒன்றினை மட்டும் அவை எமக்கு வெகுதெளிவாகவே உணர்த்தி நிற்கின்றன. அதாவது பாரதியார் பொதுவுடமைச் சமுதாயத்தினை ருஷ்ய அமைப்பு முறையினை வரவேற்றிடுகின்றார். ஆனால் ருஷ்யப் புரட்சி நிகழ்ந்த முறையினைத் தான் வரவேற்றிடவில்லை. அதே சமயம் ருஷ்ய நாட்டினைக் கொடுங்கோலன் ஜார் வருத்தி வந்திட்ட முறையினைக் கண்டு மனம் வெதிர்த்திட்ட பாரதியார் அக்கொடுங்கோலனின்றும் ருஷ்ய மக்களை விடுவித்த புரட்சி என்பதற்காக ருஷ்யப் புரட்சியினைப் பாராட்டிய போதும் வன்முறைப் புரட்சியினை அவர் மனம் ஒப்பவில்லை.
அதே சமயம் 'ருஷ்யாவின் விவாக விதிகள்' என்னும் கட்டுரையில் அவர் பின்வருமாறு எழுதுகின்றார்:

"..போல்ஷிவிக் ஆட்சி ஏற்பட்ட காலத்திலே அதற்குப் பலவகைகளிலும் தோஷங்கள் கற்பிப்பதையே தம் கடமையாகக் கருதியவ்ர்களிலே சிலர் அதன் மீது ராஹரீக நெறிகளிலே குற்றங்கள் சுமத்தியது போதாதென்று, போல்ஷிவிஸ்ட் கட்சியார் ஸ்திரீகளையும் பொதுவாகக் கொண்டு ஒருத்தியைப் பலர் அனுபவிக்கிறார்களென்ற அபாண்டமான பழி சுமத்தப்பட்டது. ஆனால் 'கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு'. ஒன்பதாம் நாள் உண்மை எப்படியேனும் வெளிப்பட்டுவிடும். ஒரு பெரிய ராஜ்ஜியத்தைக் குறித்து எத்தனை காலம் பொய் பரப்பிக் கொண்டிருக்க முடியும்? சில தினங்களின் முன்பு இங்கிலாந்து தேசத்தில் மாஞ்செஸ்டர் நகரத்தில் பிரசுரஞ் செய்யப்படும் 'மாஞ்செஸ்டர் கார்டியன்' என்ற பத்திரிகை நவீன ருஷ்யாவின் விவாக விதிகளைப் பற்றிய உண்மையான விபரங்களைப் பிரசுரஞ் செய்துள்ளது. அவற்றைப் பார்க்கும்போது நவீன ஐரோப்பிய நாகரிகம் என்று புகழப்படும் வஸ்த்துவின் நியாயமான, உயர்ந்த பக்குவநிலைமை மேற்படி போல்ஷிவிஸ்ட் விவாக சம்பிரதாயங்களில் எய்தப்பட்டிருக்கின்றதென்று தெளிவாக விளங்குகின்றது. ஆன்பெண் இருபாலாரும் பரிபூர்ண ஸமானம் என்ற கொள்கைக்கு பங்கம் நேரிடாதபடி விவாகக் கட்டை சமைக்க வேண்டும் என்பதே ஐரோப்பிய நாகரிகத்தின் உண்மையான நோக்கம். ..அந்த வகையில் பார்த்தால் ஐரோப்பாவின் இதரபகுதிகளைக் காட்டிலும் நவீன ருஷ்யா உயர்ந்த நாகரிகம் பெற்றுள்ளதென்பது ப்ரத்யஷமாகத் தெரிகிறது..."

இவையெல்லாம் நமக்குக் காட்டி நிற்பவைதான் யாதோ? பாரதியார் புதிய ருஷ்ய சமுதாய அமைப்பினை வரவேற்றிடுகின்றார் என்பதையல்லவா?..சமுதாயத்தில் காணப்படும் ஏற்றத்தாழ்வுகளை ஆவேசத்துடன் கண்டித்த பாரதியை நவீன ருஷ்ய அமைப்பு முறை கவர்ந்திட்ட போதிலும் அது ஏற்பட்ட வழியினை அவனால் மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டிட முடியவில்லை. அதனால் தான் இவ்விடயம் பற்றிய அவனது கேள்விகள் தேடல் ஆகியன அவனது பல்வேறு கட்டுரைகளில் வெளிப்பட்டு நிற்கின்றன. அதே சமயம் மேற்படி கட்டுரைகள் அவன் தன் மனதுக்கேற்ற வழியில் இவற்றிற்கான தீர்வுகள் பற்றிச் சிந்தித்திருப்பதையும் புலப்படுத்தி நிற்கின்றன. உதாரணமாக அவனது 'செல்வம்; என்ற கட்டுரையில் பின்வருமாறு அவன் கூறுவான்:

"..முதலாவது இந்தியாவிலுள்ள நிலச்சுவான்களும் முதலாளிகளும் ஐரோப்பிய முதலாளிகள் நிலச்சுவான்களைப் போல் ஏழைகளின் விஷயத்தில் அத்தனை அவமதிப்பும் குரூர சித்தமும் பூண்டோரல்லர். இவர்களுடைய உடமைகளைப் பிடுங்க வேண்டுமென்றால் நியாயமாகாது. அதற்கு நம் தேசத்திலுள்ள ஏழைகள் அதிகம் விரும்பவும் மாட்டார்கள். எனவே கொள்ளைகளும், கொலைகளும், சண்டைகளும் பலாத்காரங்களுமில்லாமல் ஏழைகளுடைய பசி தீர்ப்பதற்குரிய வழியைத் தான் நாம் தேடிக் கண்டு பிடித்து அனுஷ்டிக்க முயல வேண்டும். செல்வர்களுடைய உடமைகளைப் பலாத்காரமாகப் பறித்துக் கொள்ள முயலுதல் இந்நாட்டிலே நான் மேற்கூறியபடி பொருந்தவும் செய்யாது. ஸாத்தியமும் இல்லை.."

மேலுள்ள பாரதியாரின் கூற்றினை வாசிப்பவர் பாரதியாரின் முரண்பட்ட போக்கினை வெகு இயல்பாகவே விளங்கிக் கொண்டிட முடியும். பொதுவுடமையினைப் போற்றிப் பாடிடும் பாரதியார், நவீன் ருஷ்யாவினை, அதன் அமைப்பு முறையினை, அங்குள்ள பெண்களின் நிலையினை வரவேற்ற பாரதியார் "இவர்களுடைய உடமைகளைப் பிடுங்க வேண்டுமென்றால் நியாயமாகாது. .."என்று கூறுவது 'தனியுடமை'யை ஆதரிப்பதாகுமன்றோ எனக் கேட்கலாம். ஆனால் இன்னுமோரிடத்தில் "செல்வர்களுடைய உடமைகளைப் பலாத்காரமாகப் பறித்துக் கொள்ள முயலுதல் இந்நாட்டிலே நான் மேற்கூறியபடி பொருந்தவும் பொருந்தாது.." என்று கூறுவது மறைமுகமாகக் கூறி நிற்பது தானெது? செல்வர்களுடைய உடமைகளைப் பலாத்காரமாகப் பறித்துக் கொள்ள முயலுதல் கூடாது. ஆனால் அமைதியானதொரு வழியில் இதற்கான தீர்வு காணப்படலாம் என்பதைத்தானே. ருஷ்யப் புரட்சியினை வரவேற்கும் பாரதி, அங்குள்ள பெண்கள் நிலையினை வரவேற்கும் பாரதி ஆயுதப் புரட்சி விடயத்தில் மிகவும் தடுமாற்றத்துடன் காணப்படுவதை மேற்படி கூற்றுகளால் அவதானிக்க முடிகிறது. இத்தகையதொரு தடுமாற்றத்தின் விளைவினை அவனது 'தொழிலாளர்' என்னும் கட்டுரையிலும் காணக்கூடியதாகவிருக்கிறது. அதிலோரிடத்தில் அவன் பின்வருமாறு கூறுவான்:

"..எனவே இந்தியாவில் முதன் முதலாக தொழிலாளர் கிளர்ச்சி தோன்றியிருக்கும் இந்தச் சமயத்தில் நம்முடைய ஜனத் தலைவர்கள் முதலாளிகள் தொழிலாளிகள் என்று இருதிறத்தாரையும் ஆதரவுடன் கலந்து புத்தி சொல்லி மனஸ்தாபங்களை ஏறவொட்டாதபடி முளையிலே கிள்ளிவிட முயற்சி செய்யவேண்டும். தொழிலாளரை முதலாளிகள் இகழ்ச்சியுடன் கருதி நடத்துவதை உடனே நிறுத்துவதற்குரிய உபாயங்கள் செய்ய வேண்டும்...ஆரம்பத்திலேயே நாம் இதற்குத் தகுந்த ஏற்பாடுகள் செய்யாவிடின் நாளடைவில் ருஷ்யாவிலுள்ள குழப்பங்களெல்லாம் இங்கு வந்து சேர ஹேது உண்டாய்விடும்... ருஷ்யாவில் சமீபத்திலே அடுக்கடுக்காக நிகழ்ந்து வரும் புரட்சிகளின் காரணத்தால் அவ்விடத்து சைனியங்களில் பெரும்பகுதியார் தொழிற்கட்சியையும் அபேதக் கொள்கைகளையும் சார்ந்தோராய் விட்டனர். இதனின்றும் அங்கு ராஜ்யாதிகாரம் தொழிற்கட்சிக்குக் கிடைத்து விட்டது. தேசத்து நிதியனைத்தையும் சகல் ஜனங்களுக்கும் பொதுவாகச் செய்து எல்லோரும் தொழில் செய்து ஜீவிக்கும்படி விதித்திருக்கின்றார்கள். தேசத்துப் பிறந்த ஸர்வஜனங்களுக்கும் தேசத்து செல்வம் பொது என்பது உண்மையாய் விடில், ஏழைகள் செல்வர் என்ற வேற்றுமையினால் உண்டாகும் தீமைகள் இல்லாமல் போகும்படி ஸகலரும் தொழில் செய்துதான் ஜீவிக்க வேண்டும் என்ற விதி வழங்குமானால் தேசத்துத் தொழில் மிகவும் அபிவிருத்தியடைந்து ஜனங்களின் சேஷமமும் சுகங்களும் மேன்மேலும் மிகுதியுறும். எனவே ருஷ்யாவிலுள்ள அபேவாதிகளுடைய கொள்கைகள் அவ்வளவு தீங்குடையனவல்ல. ஆனால் அவற்றை வழக்கப்படுத்தும் பொருட்டு அவர்கள் நாட்டில் ஏற்படுத்தியிருக்கும் தீராச்சண்டையும் அல்லலுமே தீங்கு தருவனவாம். ருச்க்யக் கொள்கைகள் இப்பொழுது அனுஷ்டிக்கப்படும் ருஷ்யமுறைகளின்படி உலகத்தில் ஸ்தாபனம் பெற்று வெற்றி பெற வேண்டுமானால் அதற்குள்ளே முக்காற்பங்கு ஜனம் கொலையுண்டு மடிந்து போவார்கள். வெளிநாட்டுப் போர் அத்தனை பெரிய விபத்தன்று. நாட்டுக்குள்ளேயே செல்வர்களும், ஏழைகளும், ஒருவரையொருவர் வெடிகுண்டுகளாலும், துப்பாக்கிகளாலும், பீரங்கிகளாலும், தூக்குமரங்களாலும் கொல்லத் தொடங்குவார்களாயின் அது தீராத தொல்லையாய் விடுமன்றோ?"

இவையெல்லாம் வெளிப்படுத்தி நிற்பவைதான் யாதோ? இவற்றில் காணப்படும் பாரதியின் தடுமாற்றம் நமக்கு உணர்த்துவதுதானெதுவோ? சமுதாயப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ருஷ்யாவின் கோட்பாடுகளை ஓரளவுக்கு பாரதியார் ஏற்றுக் கொள்கின்றார். ஆனால் அதனை அடைவதற்கு ருஷ்யா கைக்கொள்ளும் ஆயுதப் புரட்சியினையும், பாட்டாளிவர்க்கச் சர்வாதிகாரத்தினையும் தான் அவரால் ஏற்றுக் கொண்டிட முடியவில்லை. இந்த எதிர்ப்பின் விளைவே அவரது கற்பனாவாத சோஸலிசமான 'ஏழை', 'பணக்காரன்', 'தொழிலாளி', 'முதலாளி' ஆகியோருக்கிடையிலான இணக்கம் பற்றிய கோட்பாடுகள். இதன் காரணமாகவே செ.கணேசலிங்கன் 'பாரதி கண்ட கனவுப் பெண்' என்னும் கட்டுரையில் கூறுவதைப் போல் ('மேகம்', நவம்பர்-டிஸம்பர் 1982) பாரதியின் போக்கு இந்திய தேசிய முதலாளிகளின் புரட்சியோடு ஒன்றி நிற்பது போல் படுகிறது. ஆனால் உண்மையில் பாரதி முதாளித்துவப் புரட்சியொன்றினை எதிர்பார்த்திடவில்லை என்பதைத் தான் அவரது 'சுதந்திரப்பள்ளு' , 'விடுதலை', 'பாரத சமுதாயம்' போன்ற கவிதைகள் புலப்படுத்தி நிற்கின்றன. [ அதே சமயம் மானுடத்தின் முழுவிடுதலை பற்றியும் பாரதி பெரிதும் சிந்தித்திருக்கின்றானென்பதையும் அவனது படைப்புகள் நமக்குப் புலப்படுத்தி நிற்கின்றன. மானுடத்தின் முழுவிடுதலை அகவிடுதலயினைப் பெறுவதன் மூலம், மனிதர் இயற்கையுடன் இணக்கமாக வாழ்வதன் மூலம் மட்டுமே பெற முடியும் என்று அவன் கருதுவதையே அவனது 'சர்வமத ஸ்மரஸம்' , 'தாய்மாண்பு', 'அன்பு செய்தல்' முதலான கவிதைகள் உணர்த்தி நிற்கின்றன. ஆனால் பாரதியின் இந்த நிலைப்பாடு விரிவாக ஆராயப்படவேண்டியதொன்று]. அதே சமயம் மேற்படி கட்டுரையில் செ.கணேசலிங்கன் பாரதியின் இந்தப் போக்குக்குக் காரணம் பற்றிக் குறிப்பிடும் பொழுது "..விஞ்ஞான பூர்வமான சோஸலிசத்தைப் பாரதி அறிந்திருக்கவில்லை. சோஸலிச அமைப்பில் சாதி, சமய, பெண்ணடிமைத்தனப் பேதங்கள் எப்படி முழுமையாக நீக்கப்படும் என்பதை அவன் தெரிந்திருக்கவில்லை.." என்றும் கூறுவார். இவ்விதமாக 'மார்க்ஸியக்' கோட்பாடுகளைப் பற்றிய பூரண அறிவினை பாரதியார் அடையமுடியாமலிருந்ததற்கு அன்றைய சூழ்நிலை காரணமாகவிருக்கலாம். மார்க்ஸியக் கோட்பாடுகள் சம்பந்தமான போதிய நூல்கள் அவரது கைகளுக்குக் கிடைக்காமல் போயிருந்திருக்கலாம். கிடைத்திருந்தால் அவர் மான்செஸ்டர் கார்டியன் போன்ற பத்திரிகைகளில் வெளிவந்த கட்டுரைகளை விரிவாக ஆராய்ந்ததைப் போல் நிச்சயம் அக்குவேறு ஆணிவேறாக ஆராய்ந்திட முயன்றிருப்பார். 'வரலாற்றுப் பொருள்முதல்வாதம்' பற்றியெல்லாம் விரிவாக ஆராய முயன்றிருப்பார். அவ்விதமெல்லாம் அவர் செய்யாததற்கு செ.க. கூறுவது போல் பாரதியாருக்கு அவ்விடயங்களில் பூரண விளக்கமில்லாமல் இருந்திருப்பதே காரணமாக இருந்திருக்கக் கூடும். இந்நிலையில் அவர் தன் அறிவுக்கெட்டிய வகையில் முதலாளி தொழிலாளிகளுக்கிடையிலான இணக்கத்தைத் தீர்வாகக் கொண்ட கற்பனாவாத சோசலிச அமைப்பென்ற தீர்வுக்கு வந்திருக்கலாம். அதற்கு மாறாக அவர் மார்க்ஸியத் தத்துவஙக்ளையெல்லாம் விரிவாக அறிந்துள்ள நிலையில் மேற்படி முடிவுக்கு வந்திருந்தால் செ.க.கூறுவதைப் போல் அவரை இந்திய முதலாளிகளின் புரட்சியுடன் ஒன்றியிருந்த ஒருவராகக் கருத முடியும். மாறாக மார்க்ஸியத் தத்துவம் பற்றிய பூரணமான விளக்கமற்ற நிலையில், அவர் வாழ்ந்த இந்தியச் சூழ்நிலைகளின் விளைவாக அவர் வந்தடைந்த தீர்வே அவரது ஏழை/பணக்காரன், முதலாளி/தொழிலாளி ஆகியோருக்கிடையிலான இணக்கம் பற்றிய கற்பனாவாத சோஸலிசத் தீர்வு [ ஏனென்றால் பொதுவுடமையினை, ருஷ்ய அமைப்பு முறையினை அவர் வரவேற்கின்றார்]. இந்நிலையில் பாரதி ஒரு மார்க்ஸியவாதியா என்னும் கேள்வியே அர்த்தமற்றதொரு கேள்வி. ஆனால் பாரதியின் மேதமை அவரது காலகட்டச் சூழலுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில்தான் எத்தனை மகத்தானதென்று புலப்படும். அதனை விட்டுவிட்டு இன்றைய சூழலிலிருந்து கொண்டு, தான் வாழ்ந்த சூழலை மீறிச் சிந்தித்த, வாழ்ந்த பாரதியை செ.க. முதலியோர் அலசுவது போல் அலசுவது பயனற்றது. உண்மையில் பாரதியார் அன்றையச் சூழலில் 'ருஷ்யா'வை பற்றித் தனது நோக்கினத் திருப்பியதும், பெண்களின் நிலை பற்றிய பிரச்சினையில் ரஷ்ய, ஐரோப்பிய முறைகள் பற்றிய ஆய்வினை நடத்தியதும், இந்திய தத்துவ நூல்களை விரிவாக ஆராய்ந்ததும், 'நிற்பதுவே நடப்பதுவே' என்னுங் கவிதையில் பொருள்முதல்வாத/கருத்து முதல்வாதத் தத்துவங்களையிட்டு ஆராய விளைந்ததும், தீண்டாமை/பெண் விடுதலை பற்றிச் சூழலை மீறிச் சிந்தித்ததும்..இவை யாவுமே மகத்தான விடயங்களாகும். அவர் வாழ்ந்த சூழலில் அந்த அளவுக்குச் சூழலை மீறிச் சிந்தித்ததே மாபெரும் அற்புதமெனலாம். இதுவே சரியான நிலைப்பாடாகப் படுகிறது.

[பாரதியார் நினைவாக இக்கட்டுரை பிரசுரமாகின்றது. முதன் முதலில் இக்கட்டுரை 4/2/1983 இல் எழுதப்பட்டது. இதனைத் தழுவிய இன்னுமொரு கட்டுரை 'தேடல்' இதழில் பிரசுரமானது.]


நன்றி: பதிவுகள்.காம், திண்ணை.காம்

ஜெயமோகனின் ' கன்னியாகுமரி'

ஜெயமோகனின் 'கன்னியாகுமரி' நாவலின் கதைச்சுருக்கத்தினைப் பின்வருமாறு கூறலாம்: மிகவும் கேவலமான ஆசாபாசாங்களுடன் கூடிய கதாநாயகன் திரைப்பட இயக்குநர் ரவிகுமார்.எந் நேரமும் காமத்தில் உழன்று கொண்டேயிருக்கும் இவன் மிகவும் ஆழமாகவும் சிந்திப்பவன்.மிகவும் அற்பமாகவும் சிந்திப்பவன்.தன் கண் முன்னால் நான்கு முரடர்களால் பாலியல் வல்லுறவிற்குள்ளாக்கப் பட்ட காதலி விமலாவைக் கோழையாகக் கைவிட்டவன். அவ்வுறவில் அவளும் ஆனந்தம் அடைந்திருக்க வேண்டுமெனக் கற்பனை செய்பவன். பல வருடங்களிற்குப் பின்னர் கன்னியாகுமரியில் படத் தயாரிப்பிற்கொன்றிற்காக தயாரிப்பாளர், கதாசிரியர், நடிகை பிரவீணாவுடன் தங்கியிருக்கும் இவன், நடிகையுடன் புணர்வதுடன், பெண்களைப் பாலியல் பண்டமாகவே கருதிய,கருதும் தனது மன உளைச்சல்களையெண்ணிப் போராட்டத்தில் சிக்கியிருக்கிறான். தனது பழைய காதலியான , தன்னால் கைவிடப்பட்ட படித்த விமலாவை கன்னியாகுமரியில் சந்திக்கிறான். அவளோ விடுமுறைகளில் படிக்காத ஆண்களாகத் தேர்ந்தெடுத்து ஊர் சுற்றுமொரு பெண்ணாக மாறியிருக்கிறாள். அமெரிக்காவிலிருந்து தனது கிரேக்க ஆண் நண்பனுடன் கன்னியாகுமரிக்கு வருகை தந்திருக்கின்றாள். அவளுடனான சந்திப்பு மீண்டும் இயக்குநர் ரவிகுமாரின் மனப் போராட்டங்களை அதிகரித்து விடுகின்றது. பல பெண்களுடன் உறவு வைத்திருந்த இவன் திருப்தியடைந்தது சைலஜா என்னுமொரு பெண்ணுடன் தான். தனது மனைவியுடனான உறவிலோ அல்லது நடிகை பிரவீணாவுடனான் உறவிலோ இவனால் சைலஜாவுடன் அடைந்ததைப் போல் திருப்தியினை அடைய முடியவில்லை. தனது முன்னால் காதலியுடன் ஒருநாளாவது 'அவளைப் புணர்ந்து, ஒருமுறை உச்சத்தின் வெறுமையில் எகிறிச் சுழன்றிறங்கச் செய்தால் போதுமெ'ன நினப்பவன் இவன். விமலா தனது படித்த செருக்கினைத் தன்முன்னால் காட்டுவதாக வெதும்புமிவன் அவளை அதற்காக 'தேவடியா நாயே, நான் போடறேண்டி சூப்பர்ஜீன்ஸ். வேஷமா போடறே. வேஷம் போட்டா பயந்துடுவேன்னு நெனைச்சியா? என்னை என்ன கேணையன்னு நினைச்சியா? வேஷம் போடு ஜெயித்திடுவியா?நான் ஜெயிக்கிறேன் உன்னை. உன்னை ஜெயிச்சாத் தான் எனக்கு சினிமா,. என் சினிமா உன் மார்புக்குள்ள இருக்குடி நாயே. சயிண்டிஸ்ட்டு. ...த்தூ..அமெரிக்காக்காரிது..உன்னைப் பிளந்து என் சினிமாவ வெளியே எடுக்கிறேண்டி..பாம்ப பிதுக்கி நாகமணிய எடுக்கிறேண்டி..' எனப் படுக்கையைப் பகிர்ந்து கொண்ட நடிகை பிரவீணாவிடம் புலம்புவன். அதே சமயம் நடிகை பிரவீணாவையும் ' சீ விளக்கப் போடுடி தேவடியா நாயே. என் எச்சிலத் தின்னுட்டு எங்கிட்டே படுக்கிற நாயி. நீ என்ன கேக்காம விளக்க அணைக்கிறியா? விளக்க போடுறீ..நாயே..' எனத் திட்டுபவன். தனது முன்னால் காதலியின் மேல் இருந்த ஆத்திரத்தின் காரணமாக அவளைப் பாலுறவிற்குட்படுத்திய கேடிகளிலொருவனான ஸ்டீபனையே தனது போலிஸ்கார நண்பனொருவனின் உதவியுடன் தேடிப் பிடித்துக் கொண்டு வந்து விமலாவின் முன்னால் நிறுத்துகின்றான். அவளோ இரு பெண் புத்திரிகளுடன் அல்லாடும் அவனது நிலைக்கு இரக்கப் பட்டு உதவி செய்யவும் முன்வருகின்றாள். இறுதியில் நடிகையும் கதாசிரியருடன் அவனை விட்டு ஓடிப் போய் விடுகின்றாள். காதலியும் அமெரிக்கா சென்று விடுகின்றாள். இவன் தனித்துப் போய் விடுகின்றான். இதுதான் கதைச் சுருக்கம்.

இந் நாவலிற்கான கரு கி.ராஜநாராயணின் கன்னியாகுமரியை மையமாக வைத்துப் ,பின்னப் பட்ட சிறுகதைகளிலொன்றான 'கன்னிமை' என்னுமொரு சிறுகதையினை மையமாக வைத்து உருவானதாக நாவலின் நாயகன் ரவிகுமாரினூடாக நாவலாசிரியர் ஜெயமோகன் நினைவு கூருகின்றார். ஜெயமோகனின் முன்னுரையினையும், நாவலில் ஆங்காங்கே விவரிக்கப் படும் கன்னியாகுமரி பற்றிய விளக்கங்களையும் ஒதுக்கி விட்டுப் பார்த்தால் இந்த நாவலை நிச்சயமாக ஒரு 'ஆபாச இலக்கியம்' என்னும் பிரிவிற்குள் இலகுவாக அடக்கி விடலாம். அப்படி விடாமல் ஜெயமோகனின் மேற்படி முன்னுரையும், கன்னியாகுமரி பற்றிய தத்துவ விளக்கங்களும் நம்மைத் தடுத்து விடுவதால் நாவலைப் பற்றிச் சிறிது ஆராய வேண்டிய நிலைமைக்கு நம்மைத் தள்ளி விட்டு விடுகின்றன.

கன்னியாகுமரியைப் பற்றி நாவலில் பல இடங்களில் குறிப்பிடப் படுகின்றன. உதாரணத்திற்குப் பின் வருவனவற்றினைக் குறிப்பிடலாம்:

" 'கன்னியாகுமரியோட ஐதீகம் தெரியுமில்லையா?'

'தெரியும்.'

'தேவியைத் தாலிகட்ட ஸ்தாணுமாலயன் கிளம்பினார். பிரம்மாவும் விஸ்ணூவும் சிவனும் ஒன்றான மூர்த்தி. படைத்தல், காத்தல், அழித்தல் அதாவது கிரியாசக்தியே அவன் தான். ஆனா வந்து சேரலை. வரப் போவதுமில்லை. தேவி இந்தக் கடல் முனையில் கன்னியா காத்திருக்கா. யுகயுகமா. இன்னும் எத்தனையோ யுகங்களுக்கு எத்தனை பெரிய தனிமை, எத்தனை உக்கிரமான காத்திருப்பு இல்லையா?'

'ஆமா.'

'இதை நாம கடல்னு சொல்றோம். ஆனா இது கடல்கள். மூணு கடல்கள் ஒண்ணோடொண்ணு மோதிக் கலந்து கொந்தளிச்சிட்டிருக்கு. எனக்குத் தோணுது உள்ளே ஆழத்தில அந்தக் கடல்களோட உக்கிரம் இன்னும் அதிகமா இருக்கும்னு. அதி பயங்கரமான மெளனத்தில் ஒரு துளி அசைவு கூட இல்லாம மூணு பிரமாண்டங்களும் மோதி உச்சக் கட்டத்திலே அப்பிடியே நின்னுட்டிருக்கும்னு. யுகங்களா அந்த உச்சக் கட்டம் நீண்டு நீண்டு போயிட்டிருக்கு.' [பக்கங்கள்: 26,27] "

" 'கன்னித்தன்மைதான் இங்க தேவியோட அழகு. ஆனா சாதாரண கன்னி இல்லை. காத்திருக்கிற கன்னி. ஒரு நாளைக்கும் முடியாத காத்திருப்பு. ரெண்டையும் சேத்து யோசித்தாத்தான் நாம தேவியைப் புரிஞ்சு கொள்ள முடியும்.' [பக்கம் 28 ]
"

இவற்றிலிருந்தும் நாவலின் சம்பவங்களிலிருந்தும் சில உண்மைகள் வெளிப்படுகின்றன. ஒன்று நாவலில் வரும் பாத்திரங்களெல்லாம் நடைமுறையில் நிலவும் கற்பு பற்றிய ஐதீகத்தினை உடைத்தெறிந்து காமத்தில் மனம் போனபடியெல்லாம் சுகித்து வாழுகின்றார்கள். அதே சமயம் இச்சம்பவங்கள் நடைபெறும் சூழலோ கன்னித்தன்மையினைப் பேணி யுகயுகமாய்க் காத்திருக்கும் கன்னித்தெய்வம் குடியிருக்கும் கன்னியாகுமரியில். இதன் மூலம் ஜெயமோகன் கற்பு பற்றிய கோட்பாட்டினைக் கேள்விக்குறியாக்கின்றாரென்று கூறலாமா? அவ்விதம் கேள்விக்குறியாக்குவதற்கு நாவல் முழுக்க நாயகனின் நடிகையுடன், ஏனைய பெண்களுடனான காமச் சல்லாபங்களை விபரித்திருக்க வேண்டிய தேவை தேவைதானா? கற்பு என்னும் கோட்பாட்டினைக் கேள்விக்குறியாக்கிய படைப்புகளில் காலத்தால் முந்தியது இரு பெரும் இதிகாசங்களில் ஒன்றான மகாபாரதம். திரெளபதி என்னும் பாத்திரம் மூலம் , சூரிய பகவானிற்குப் புத்திரனைப் பெறும் குந்தியென்னும் பாத்திரம் மூலம், இராமயணத்தில் கூட 'அசோகவனத்தில்' நெடு நாட்கள் தங்கியிருந்து திரும்பிய சீதாப் பிராட்டி மூலம் ஏற்கனவே கேள்விக்குறியாகியதொரு விடயத்தினைத் தான் 'கன்னியாகுமரியும்' செய்கிறதென்று ஜெயமோகன் கூறுகின்றாரா? [ஜெயமோகன் தனது அடுத்த நாவல் 'அசோகவனம்' எனக் கூறுகின்றார். இத்தகையதொரு நவீன சீதாப் பிராட்டியினைப் படைத்து சில கேள்விகளை எழுப்ப உத்தேசித்திருக்கிறாரோ தெரியவில்லை.]ஜெயகாந்தன் ஏற்கனவே 'அக்கினிப் பிரவேசம்' என்ற குறு நாவலிலும் அதன் தொடர்ச்சியான 'சில நேரங்களில் சில மனிதர்களென்'ற 'காலங்கள் மாறும்' நாவலிலும் , 'ரிஷி மூலம்' குறு நாவலிலும் மிகவும் தீவிரமாக அதே சமயம் மிகவும் நாசூக்காக இக்கோட்பாட்டினைக் கேள்விக்குறியாக்கியிருக்கின்றார். புதுமைப் பித்தனும் 'பொன்னகரமென்'ற இருபக்கச் சிறுகதையில் மிகவும் ஆக்ரோசமாகக் கேள்விக் குறியாக்கியிருக்கின்றார். 'பாலும் பாவையில்' விந்தன் அகல்யா என்னும் பாத்திரம் மூலம் கேள்விக்குறியாக்கியிருக்கின்றார். மு.வரதராசனாரின் 'நெஞ்சின் ஒரு முள்' நாவலும் இவ்விடயத்தினைக் கேள்விக்குரியாக்கிய படைப்புகளிலொன்றுதான். இவ்விதமாகப் பல படைப்புகளைக் கூற முடியும். ஜெயமோகனும் தன் பங்கிற்கு 'கற்பு' பற்றிய கோட்பாடு பற்றி கேள்வியெழுப்புவதாக இந்நாவலைக் கூற முடியுமா?

ஒரு நாவலைப் படித்து முடியும் போது அப்படைப்பானது படிப்பவரிடத்தில் எத்தகையதொரு தாக்கத்தினை ஏற்படுத்துகின்றதென்பதிலேயே அப்படைப்பின் வெற்றி தங்கியுள்ளது. புதுமைப் பித்தனின் 'பொன்னகரத்தி'னைப் படித்து முடிக்கும் போது வருவதென்ன? அம்மாளு செய்த காரியத்திற்காக யாரும் அவளைக் காறித்துப்புவதில்லை. மாறாக அவளது நிலையுடன் ஒப்பிடும் பொழுது கற்பு பற்றிய கோட்பாடே பின்னுக்குத் தள்ளப்பட்டுப் போய் விடுகிறது. அவளை இந்நிலைக்கு ஆளாக்கி விட்ட சமுதாயத்தின் மேல் சீற்றம் வருகின்றது. ஒரு பணக்கார இளைஞனின் காமத்திற்குத் தன்னை சந்தர்ப்ப சூழ்நிலைகளினால் இழந்து விட்ட பாடசாலை மாணவியான கங்காவிற்கு அவளது தாயார் தண்ணீர் வார்த்து அக்கினிப் பிரவேசம் செய்யும் போது ஜெயகாந்தன் என்ன இலாகவமாக இக்கோட்பாட்டினைக் கேள்விக்குறியாக்கி விடுகின்றார். ஆனால் மேற்படி 'கன்னியாகுமரி' நாவலில் வரும் நாயகன் இயக்குநர் ரவிகுமாரின் வக்கிரமான மன ஓட்டங்களை நாவல் முழுக்க வாசித்து முடிக்குமொருவரிற்கு வரும் உணர்வுகளென்ன? ஒரு மூன்றாந்தர பாலியல் நாவலொன்றினை வாசிக்கும் போது ஏற்படும் மன உணர்வுகளைத் தவிர வேறேதாவது உனர்வுகள் வருகின்றதா? நாவலின் முன்னுரையில் ஜெயமோகன் பின்வருமாறு கூறுகின்றார்:

" இன்று தனிமனிதன் முதன்மைப்பட்டு சமூகம் இரண்டாம்பட்சமாகி விட்டது என்று மிகப் பொதுப்படையாகக் கூறலாம். தனி மனித அறம், தனி மனித உண்மை, தனி மனித உன்னதம் ஆகியவை முக்கியமாகிவிட்டன. இந்த நூறு வருடங்களில் உலகம் முழுக்க எழுதப் பட்ட இலக்கியப் படைப்புகளில் பொது அம்சமாக காணப்படுவது இந்தப் போக்கே என்பது என் புரிதல். ஒவ்வொரு தனி மனிதனும் அவனுடைய வாழ்வில , அவனுக்குச் சாத்தியமான உச்சங்களை நோக்கி நகர்வதென்பதே இந்த யுகத்தின் இலட்சிய இயங்குமுறை. அந்நகர்வின் போக்கில் பிறருக்கு ஊறு விளைவிக்கத படி, பிறரைத் தடை செய்யாதபடி ( அல்லது அங்கீகரித்த தடைகளை மட்டும் அளித்தபடி ), அவன் செயல்பட வேண்டுமென்ப்தே இன்றுள்ள ஒழுக்க நெறிகளின் சாரம் என்று படுகிறது. இந்நாவலை இத்தகைய புது ஒழுக்கமொன்றை நோக்கிய தேடல் என்று கூறலாம்."

ஆனால் இந்நாவலில் வரும் நாயகன் நடை முறைகளெல்லாம் பிறரை அவமானப் படுத்துவையாகவல்லவா இருக்கின்றன. எடுத்ததற்கெல்லாம் 'வாயை மூடு தேவடியா நாயே' என்று வசை பாடுபவனாகவிருக்கின்றான். ஏற்கனவே இவன் இயக்கிய 'ஏகயாய ராஜகுமாரி' யிலேயே இவன் உச்சத்தினை அடைந்து விட்டதாகக் கூறி நடிகை பிரவீண இன்னுமொருவனுடன் சென்று விடுகின்றாள். இவனோ தனது முன்னால் காதலியுடன் புணர்ந்து உச்சத்தினை அடைய வேண்டுமென நினைப்பவன். ஜெயமோகன் கூறலாம். இந்நாவல் ஒரு குறியீட்டு நாவலென்று. கன்னியாகுமரி பற்றியும், ஒரு சில இந்து சமய தத்துவங்கள் பற்றியும் ஆங்காங்கே தூவி விடுவதால் மட்டும் இத்தகைய குறியீட்டு நாவல்களைப் படைக்க முடியுமென்றால் எமது 'அழகியின் ஆவி'யினைப் படைக்கும் மர்மக் கதை மன்னர்களெல்லாம் இத்தகைய குறியீட்டு நாவல்களைப் படைக்கத் தொடங்கி விடுவார்கள்.

'அல்பேர்ட் காம்யூ'வின் 'அன்னியன்' நாவலில் வரும் நாயகனின் நடைமுறைகளில் ஒரு வித அன்னியத் தன்மை தென்படும். தாயாரின் மரணச் செய்தியினை மேலதிகாரியிடம் கூறி வேலைக்கு விடுமுறை எடுப்பதற்கே தயங்குவானவன். அத்தகையதொருவிதமான அன்னியத் தன்மை இந்நாவலின் நாயகனிடத்திலும் காணப் படுகின்றது. அவ்விதம் காணப்பட்டாலும் இப்பாத்திரம் படைக்கப் பட்ட விதம் இந் நாவலின் நோக்கமான 'இந்நாவலை இத்தகைய புது ஒழுக்கமொன்றை நோக்கிய தேடல் என்று கூறலாம்' என்று கூறும் ஜெயமோகனின் நோக்கத்தினைச் சிதைத்து விடுகின்றது. ஏற்கனவே கூறியது போல் படைப்பானது படித்து முடித்ததும் வாசகரிடத்தில் எழுப்பும் உணர்வினைப் பொறுத்தே அதன் வெற்றி தங்கியுள்ளது. அந்த வகையில் ஜெயமோகனின் 'கன்னியாகுமரி' ஒரு வெற்றிகரமான படைப்பாயென்றால் அது ஒரு கேள்விக்குறிதான்.

நன்றி: திண்ணை.காம், பதிவுகள்.காம்