Friday, October 16, 2009

சுய விமர்சனம்: என் படைப்புகளும், நானும்! - வ.ந.கிரிதரன் -


நான் சிறுவனாகவிருந்த காலத்திலிருந்து அவ்வப்போது நாவல்களென்ற பெயரில் எழுதிக் கொண்டுதான் வருகின்றேன். அவற்றில் பல தற்போது என்னிடமில்லை. இருந்தாலும் என் எழுத்து வாழ்க்கையில் அவற்றுக்கும் முக்கியமானதோரிடம் என்னைப் பொறுத்தவரையிலுண்டு என்பதால் அவற்றின் முக்கியத்துவம் என்னைப் பொறுத்தவரையில் எந்தவிதத்திலும் குறைந்து விடப்போவதில்லை. என் பால்யகாலத்தில் தமிழகத்தின் வெகுஜனசஞ்சிகைகள், பத்திரிகைகளால் நிறைந்திருந்த வீட்டுச் சூழலே அந்தவயதில் என் எழுத்தார்வத்தைத் தூண்டிவிட்ட முக்கியமான காரணிகளிலொன்று. இதனால்தான் என்னைப் பொறுத்தவரையில் எப்போதுமே இலக்கியத்தின் பல்வேறு பிரிவுகளும் ஏதோ ஒரு வகையில், பல்வேறு காரணங்களால், பல்வேறு காலகட்டங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவையாக, தேவையாக இருக்கின்றன. நான் அடிக்கடி கூறுவதுபோல் ஒரு குழந்தை எடுத்த எடுப்பிலேயே எழுந்து நின்று நடக்கத் தொடங்குவதில்லை. உருண்டு, தவழ்ந்து பின்னரே பலவேறு முயற்சிகளுக்குப் பின்னர் எழுந்து நின்று சிரிக்கத் தொடங்குகிறது. எழுந்த எடுப்பிலேயே எல்லோரும் ஞானசம்பந்தரைப் போல் மூன்று வயதிலேயே உமையம்மையின் முலைப்பாலுண்டு ஞானம்பெற்று கவி புனையத் தொடங்கிவிடுவதில்லை. ஒரு படைப்பாளியோ அல்லது இலக்கிய ஆர்வலரோ படிப்படியாகத்தான் வளர்ச்சி பெற்று வருகின்றார்கள். ஆரம்பத்தில் அம்புலிமாமா, கண்ணன் போன்ற சஞ்சிகைகள் அல்லது பத்திரிகைகளின் பாலர் மலர்களில் தொடங்கிப் பின்னர் படிப்படியாக வெகுசன சஞ்சிகைகள், பத்திரிகைகளினூடு வளர்ந்து பின்னர் மெல்ல மெல்ல தி.ஜா. , புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், ராமகிருஷ்ணன் என்று தங்களது இலக்கியப் படைப்புகளினூடான வளர்ச்சியைப் படிப்படியாக அடைகின்றார்கள். அதனால்தான் என்னைப்பொறுத்தவரையில் இத்தகைய வெகுசனப் படைப்புகளும் இலக்கியத்தின் முக்கியமானதோர் பகுதியாக விளங்குகின்றன. எல்லாப் பிரபலமான, தரமான படைப்பாளிகள் எல்லோருமே தததமது வாழ்க்கையில் வெகுசன இலக்கியப் படைப்புகளினூடுதான் வளர்ந்து வந்திருப்பார்கள். அவர்கள் பலரின் நினைவுக் குறிப்புகள் மற்றும் சுயசரிதைகள் பலவற்றின் வாசிப்பு இதனைத்தான் உறுதி செய்கின்றன. ஒரு இலக்கிய ஆர்வலரின் அல்லது படைப்பாளியின் வாசிப்பானது பலவேறு படிகளினூடாகப் பரிணாம வளர்ச்சிபெற்று வருவதுதான் இயற்கை. அது அம்மா அம்புலிமாமா காட்டி பற்சோறு ஊட்டுவதிலிருந்து தொடங்கி, பாலர் கதைகள், வெகுசன இலக்கியப் படைப்புகளென்று தொடங்கிப் பின்னர் படிப்படியாக காப்கா, உம்பத்தே ஈகோவென்று விரிவடைகின்றது. அதற்காக எல்லோருடைய வாசிப்புமே இவ்விதமாக முழுமையாக பரிணாம வளச்சியடைந்து விடுகின்றது என்பதில்லை. ஆனாலும் பலவேறு தரப்பினரின் வாசித்தலுக்கும் ஏதோவொரு வகையான இலக்கியப் போக்கின் தேவை எப்போதுமே இருக்கத்தான் செய்கின்றது.

ஹா! ஹா! ஹா!என் பாலயப் பருவத்தில் என் அப்பாவும் அம்மாவும் அவ்வப்போது ஆனந்தவிகடனில் வெளிவந்த ஜெயகாந்தன் படைப்புகளைப் பற்றி அடிக்கடி விவாதித்துக் கொள்வார்கள். குறிப்பாக ஆனந்தவிகடனில் அன்றைய காலகட்டத்தில் ஜெயகாந்தனின் பல சிறுகதைகள், முழுநாவல்கள் முத்திரைக் கதைகளாக வெளிவந்துகொண்டிருந்தன. 'ஆடும் நாற்காலிகள் ஆடுகின்றன', 'கோகிலா என்ன செயுது விட்டாள்?', 'யாருகாக அழுதான்?', 'உன்னைபோல் ஒருவன்', 'அக்கினிப் பிரவேசம்' இவ்விதம் பல படைப்புகள அன்றைய காலகட்டத்தில் ஆனந்த விகடனில் வெளியாகியிருந்தன. அதனைத் தொடர்ந்து 'ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம்', 'ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்' போன்ற நாவல்களை விகடனும், 'சில நேரங்களில் சில மனிதர்கள்' போன்ற நாவல்களைத் தினமணிக் கதிரும் வெளியிட்டிருந்த காலகட்டம். அன்றைய காலகட்டத்தில் அதுவரையில் மூன்று பாகங்களுடன் வெளியாகிக் கொண்டிருந்த தொடர்கதைகளின் நீளம் ஓரளவுக்குக் குறைந்திருந்தது. அறுபதுகளில் வெளியாகும் பெரும்பாலான வெகுசன சஞ்சிகைகளில் நிச்சயமாக மூன்று பாகங்களுக்குக் குறையாமல் தொடர்கதைகள் வெளியாவதில்லை. நான் கூறவந்ததென்னவென்றால் இவ்விதமாக வெகுசன சஞ்சிகைகளும், படைப்புகளும் கோலோச்சிக்கொண்டிருந்த காலகட்டமொன்றில்தான் நான் வாசிக்கத் தொடங்கியிருந்தேன்; எழுதத் தொடங்கியிருந்தேன். வெகுசன இதழ்களில் வெளியான தொடர்கதைகளை வாராவாரம் காத்திருந்து மக்கள் வாசித்தார்கள். ஓவ்வொரு சஞ்சிகையும் போட்டி போட்டுக் கொண்டு பிரபல எழுத்தாளர்களின் தொடர்கதைகளைப் பாகங்களில் வெளியிட்டுக் கொண்டிருந்த காலகட்டமது. நா.பா, ஜெகசிற்பியன், அகிலன், சாண்டிலயன் போன்றோரது தொடர்கதைகள் பெரும்பாலும் மூன்று பாகங்களில் வெளியான காலமது. அவ்விதமானதொரு சூழலின் பாதிப்பால் அன்றைய காலகட்டத்தில் என் பாடசாலை அப்பியாசப் புத்தகங்களில் பல தொடர்கதைகளை எழுதிக் குவித்தேன். அவற்றிலொன்று 'மறக்க முடியுமா?'. அதைவிட இன்னும் பல குறுநாவல்கள். அவற்றிலொன்று: 'மழைப் பெய்து ஓய்ந்தது'. இவற்றின் முழுக் கதையும் தற்போது ஞாபகத்திலில்லை. இருந்தாலும் 'மழை பெய்து ஓய்ந்தது'. என்னுக் கதையின் ஆரம்பமும், முடிவும் மட்டும் இன்னும் ஞாபகத்திலுள்ளன. அந்தக் கதையின் ஆரம்பத்தில் கதாநாயகன் மிகவும் பலமாக 'ஹா ஹா ஹா'வென்று குரலெடுத்துச் சிரிப்பான். ம்ழை பெய்யத் தொடங்கியிருக்கும். அதுவொரு மர்மக் கதை. கதையின் இறுதியில் சிக்கல் அவிழ்ந்து, மழையும் பெய்து ஓய்ந்திருக்கும். கதாநாயகன் மீண்டும் பலமாகக் 'ஹா ஹா ஹா'வென்று சிரிப்பதுடன் கதை முடிந்திருக்கும். அதனைப் படித்துவிட்டு அப்பா பலமாகக் 'ஹா ஹா'வென்றுச் சிரித்தார். அப்பொழுது எங்கள் வீட்டிற்கு அடுத்த வீட்டில் குடியிருந்த அடுத்தவீட்டு மாமியும் அன்றைய என் வாசகர்களிலொருவர். என் கதைகளை வாசித்துவிட்டுக் குறிப்பாக அந்த 'மழை பெய்து ஓய்ந்தது' கதையினைப் படித்துவிட்டு பலமாகக் 'ஹா ஹா'வென்று சிரித்தபடியே வந்து பாராட்டுத் தெரிவித்தார். நல்லவேளை, அந்த 'மழை பெய்து ஓய்ந்தது' கதை தற்போது என்னிடமில்லை. இருந்திருந்தால் அதனைப் படித்துவிட்டு நீங்களனைவரும்கூடக் 'ஹா ஹா ஹா'வென்று கல்கியின் ரவிதாசன் பாணியில் சிரித்துச் சிரித்தே வயிறுகள் புண்ணாகியிருப்பீர்கள். நல்லவேளை தப்பித்தீர்கள்.

சித்தி வீட்டில் கொண்டாடிய சித்திரையும், ஈழநாடும்......அவ்விதமாக ஆரம்பத்தில் நாவல்கள் சிலவற்றை எழுதிய நான் அதன் பின்னர் கவிதைகள் சில எழுதுவதில் ஆர்வத்தைச் செலுத்தினேன். தமிழகச் சஞ்சிகைகளில் வெளியான தீபாவளிக் கவிதைகளின் பாதிப்பில் ஓர் அறுசீர் விருத்தமொன்றினை அப்பொழுது யாழ்ப்பாணத்திலிருந்து வெளியான ஈழநாடு பத்திரிகையின் சித்திரைச் சிறப்பிதழுக்காக என் அப்பாவின் பெயரில் எழுதி அனுப்பினேன் (ஆனால் இதற்கு முன்னர் என் பெயரில் பொங்கல் கவிதையொன்றை சுதந்திரன் பத்திரிகை பிரசுரித்திருந்தது. அது ஒரு சிறுவர் கவிதை. அதுவே அச்சில் வெளியான எனது முதலாவது கவிதை). அன்றைய காலகட்டத்தில் மரபுக் கவிதைகள் பற்றிய போதிய அறிவு இருக்கவில்லை. இருந்தாலும் அப்பாணியில் அமைந்திருந்த ஏனைய பத்திரிகை, சஞ்சிகைகளில் வெளிவந்திருந்த கவிதைகளின் பாணியில் (குறிப்பாகத் தமிழக வெகுசன இதழ்களின் தீபாவளி மலர்களில் வெளியான கவிதைகளின் பாணியில்) எழுதி அனுப்பியிருந்தேன். சித்தி வீட்டுக்குச் சித்திரைத் திருநாளன்று செல்வது பற்றி எழுதியிருந்தது ஞாபகத்திலுள்ளது. அதனை ஈழநாடும் நான் எதிர்பார்க்காமலேயே பிரசுரித்தும் விட்டது. அப்பாவும் மகிழ்ச்சியடையக் கூடுமென்று அதனைக் காட்டி அப்பாவிடமிருந்து திட்டு வாங்கிக் கட்டிக் கொண்டேன். அதே சமயம் ஈழநாடு பத்திரிகையின் மாணவர் மலரில் கவிதைகள், கட்டுரைகளென அவ்வப்போது எழுதத் தொடங்கியிருந்தேன். 'ஆசிரியர்', 'வான்மதி' போன்ற கவிதைகள் சில ஈழநாடு வாரமலரின் மாணவர் மலரில் வெளியாகியிருந்தன (பின்னர் வீரகேசரி, தினகரன், சிந்தாம்ணி, ஈழமணி போன்ற பத்திரிகைகள் புதுக்கவிதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பிரசுரிக்கத் தொடங்கியபொழுது அவ்ற்றில் சுமார் நூறு வரையிலான கவிதைகளை எழுதியிருப்பேன். அக்காலகட்டத்தில் புதுக்கவிதைகளை வீரகேசரி உரைவீச்சு என்னும் தலைப்பில் பிரசுரித்து வந்தது. சிரித்திரனும் நடத்தியதொரு கவிதைப் போட்டியில் "புது'மை'ப்பெண்" என்று எழுதிய சிறு கவிதையொன்று பாராட்டுக் கவிதைகளிலொன்றாகத் தெரிவுசெய்யப்பட்டுப் பிரசுரிக்கப்பட்டிருந்தது.) உண்மையில் ஈழநாடு பத்திரிகையின் வாரமலர் என்னைப் பொறுத்தவரையில் மிகவும் முக்கியமானதோர் விடயம். என் ஆரம்பகால எழுத்துலகின் பல்வேறு காலகட்டங்களில் ஈழநாடு களமமைத்துக் கொடுத்து ஊக்குவித்திருந்தது மிகவும் மிகவும் முக்கியமானதொரு விடயம். ஆரம்ப்த்தில் மாணவர் மலரில் என் படைப்புகளைப் பிரசுரித்த ஈழநாடு பின்னர் எனது பதினமப் பிராயத்தில் சிறுகதைகள் சிலவற்றையும் பிரசுரித்து ஊக்குவித்திருந்தது. உருவகக் கதையொன்றும் 'நியதி' என்னும் பெயரில் ஈழநாடு பிரசுரித்தது. (அக்காலகட்டத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த 'வெற்றிமணி' என்னும் சிறுவர் மாத சஞ்சிகையும் எனது மாணவர்காலப் படைப்புகளைப் பிரசுரித்து ஊக்குவித்தது. அப்பொழுது நான் ஏழாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தேன். இது தவிர சிரித்திரன் சஞ்சிகை வெளியிட்ட 'கண்மணி' என்னும் சிறுவர் சஞ்சிகையிலும் எனது சிறுவர் கதையொன்று வெளியானது. சிரித்திரனிலும் ஒரு சில சிறுவர் கவிதைகள் வெளியாகியதாக ஞாபகம்). 'மணல் வீடுகள்', 'இப்படியும் ஒரு பெண்', 'அஞ்சலை என்னை மன்னித்துவிடு'... போன்ற சிறுகதைகள் சில திரு. பெருமாளை வாரமலர் ஆசிர்யராகக் கொண்டு வெளிவந்த ஈழநாடு வாரமலர் பிரசுரித்திருந்தது. (தினகரனிலும் 'ஆலமரத்தடியில் பிறந்த ஞானம்' என்னுமொரு எனது இச்சிறுகதை பிரசுரமாகியிருந்தது இச்சமயத்தில் நினைவு கூர்கின்றேன்.) பின்னர் எனது பல்கலைக்கழகக் காலகட்டத்தில் 'நல்லூர் இராஜதானி', மற்றும் யாழ்நகரில் காணப்பட்ட பழமையின் சின்னங்கள் பலவற்றைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் பற்றி நான் எழுதிய சில கட்டுரைகளையும் பிரசுரித்திருந்தது. அன்றைய காலகட்டத்தில் கவிஞர் வ.ஐ.ச. ஜெயபாலனுடன் ஒரு சில நாட்கள் யாழ்நகர முழுவது மேற்படி சின்னங்களைப் பார்க்கத் திரிந்தது ஞாபகத்திற்கு வருகின்றது. எந்நேரமும் வாய்க்கு வாய் 'ராசா' , 'தம்பி' என்று அழைத்து உரையாடலினைத் தொடர்வது அன்றைய காலத்தில் அவரது வழக்கமாயிருந்தது. இந்த வகையில் அப்பொழுது யாழ் பழைய சந்தையிலிருந்த கங்கா சத்திரம்' பற்றி 'பழமையின் சின்னங்கள் பாதுகாக்கப்படுவதன் பற்றிய' எனது ஈழநாடுக் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன். அக்கட்டுரை வெளிவந்து சிறிது காலத்திலேயே அந்தக் 'கங்கா சத்திரம்' யாழ் மாநகர சபை நிர்வாகத்தால் இடிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. பல வருடங்கலின் பின்னர் கவிஞர் ஜெயபாலனை தொராண்டோவில் சந்தித்தபொழுது அதனை மறக்காமல் குறிப்பிட்டபோது ஆச்சரியமடைந்தேன். இன்னும் அக்காலகட்டத்தை மறக்காமல் நினைவில் வைத்திருக்கிறாரே என்பதை எண்ணுகையில் மகிழ்ச்சியாகவிருந்தது.

நான் ஈழநாடு பத்திரிகையினூடு வளர்ந்த எழுத்தாளனென்று கூறிகொள்வதில் மகிழ்ச்சியைடைகின்றேன். அண்மையில் மல்லிகையின் 43வது மலரில் ஈழத்தின் பிரபல நாவலாசிரியர்களிலொருவரான செங்கை ஆழியான் ஈழநாட்டுக் கதைகள் பற்றி எழுதியிருந்த ஆய்வுக கட்டுரையில் ஈழநாட்டுப் பத்திரிகையின் படைப்பாளிகளை ஏழு தலைமுறைப் படைப்பாளிகளாகப் பிரித்து என்னை ஏழாந்தலைமுறைப் படைப்பாளிகளொருவராகக் குறிப்பிட்டு எனது கதைகள் சிலவற்றையும் குறிப்பிட்டிருந்தது ஆச்சரியத்தையும், மகிழ்ச்சியையும் ஒருங்கே அளித்தன. யாருமே ஈழநாட்டுப் படைப்புகளை மறந்துவிடவில்லையென்பது ஒரு வித ஆறுதலைத் தந்தது. ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சியில் ஈழநாடு பத்திரிகைக்கும் முக்கியமானதோரிடமுண்டு. யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த பத்திரிகையென்ற பெருமையும் அதற்குண்டு. அதன் காரணமாகவே பல தடவைகள் அந்நிறுவனம் எரிக்கப்பட்டதும் மறந்துவிடக்கூடிய சம்பவங்களிலொன்றல்ல.

சிரித்திரன் பெற்றுத் தந்த வாசகி....
எனது பதின்ம வயதுப் பருவத்தில் என்னை ஊக்குவித்த இன்னுமொரு சஞ்சிகை சிரித்திரன். சிரித்திரனில்தான் எனது முதலாவது சிறுகதை வெளியாகியிருந்தது. 'சலனங்கள்' என்னும் அச்சிறுகதை சிரித்திரன் சஞ்சிகை நடாத்திய அறிஞர் அ.ந.கந்தசாமி நினைவுதினச் சிறுகதைப் போட்டியில் பாராட்டுப் பெற்ற கதைகளிலொன்றாக வெளியாகியிருந்தது. அந்தக் கதை மூலம் எனக்குச் சிரித்திரன் ஆசிரியரின் தொடர்பு கிட்டியது. சிரித்திரன் ஆசிரியரின் மகனான ஜீவகன் அப்பொழுது யாழ் இந்துக் கல்லூரியில் படித்துக் கொண்டிந்தார். என்னிலும் சில வயதுகள் மூத்தவர். அவர் மூலம்தான் நான் தான் அச்சிறுகதையினை எழுத்தியவனென்ற விடயம் சிரித்திரன் ஆசிரியருக்குத் தெரிந்தது. அதன் பிறகு நான் இலங்கையில் இருந்த காலம் வரையில் பல, தடவைகள் சிரித்திரன் ஆசிரியரைச் சந்திக்கும் சந்தர்ப்பம் கிட்டியது. மேற்படி சிறுகதை எனக்கு இன்னுமொரு வாசகரையும் அறிமுகப்படுத்தி வைத்தது. உண்மையில் அவர் ஒரு வாசகி. அவர்தான் பிரபல யாழ் இந்து மகளிர் கல்லூரியின் முதல்வராகவிருந்த செல்வி இராமநாதன். அவர் என் அம்மாவின் பாட்சாலைத் தோழிகளிலொருவர். அச்சிறுகதை மூலம் என் வாசகர்களொலொருவராக மாறியவர். அன்றிலிருந்து பல தடவைகள் என் எழுத்து முயற்சிகளுக்கு மறைமுகமாக ஆதரவளித்து ஊக்கியவர். என் அம்மாவுடன் சந்திக்கும் சந்தர்ப்பங்களில் பல தடவைகள் அவர் ஈழநாடு, சிரித்திரனில் வெளிவந்த ஒரு சில படைப்புகளைப் பற்றி ஆக்கபூர்வமான கருத்துகளைக் கூறி ஊக்குவித்தவர். ஒரு முறை நானும் , என் நண்பர்களிலொருவனான அநபாயனும் அவரைச் சென்று அவரது விட்டிலேயே சந்தித்திருந்தோம். அப்பொழுதும் அவர் என் எழுத்து முயற்சிகளைப் பாராட்டி ஊக்குவித்தார். வயதில் முதிர்ந்தவரான அவர் அன்று பாடசாலை மாணவனாக்விருந்த என் ஆரம்பகாலத்துப் படைப்புகளுக்கு முக்கியத்தும் கொடுத்து பாராட்டியது உண்மையில் எவ்வளவு ஆரோக்கியமானவிடயமென்பது இப்பொழுது விளங்குகின்றது.

மனையடி சாத்திரமும் , மண்ணின் மாண்பும்!சிரித்திரன் ஆசிரியரைப் பொறுத்தவரையில் இறுதியாக நான் சந்தித்தது கே.கே.எஸ். வீதியில் அவர் புது வீடு கட்டிய காலகட்டத்தில். அப்பொழுது நான் மொறட்டுவைப் பல்கலைக கழகத்தின் கட்டடக்கலை மாணவனாக இருந்த சமயம். ஒரு காலத்தில் கட்டடக்கலை மாணவனாகயிருந்தவர் சிரித்திரன் ஆசிரியர் சிவஞானசுந்தரம் அவர்கள். அன்று கட்டப்பட்டுக்கொண்டிருந்த நிலையிலிருந்த வீட்டினைச் சுற்றிக் காட்டிய ஆசிரியர் , வீட்டின் அமைப்பு தன் துணைவியாரின் தூண்டுதலில் மனையடி சாத்திரத்திற்கேற்ப பல மாறுதல்களை அடையவேண்டியிருந்தது பற்றிச் சிரித்தவாறே கூறியதும் தற்போது ஞாபகத்திற்கு வருகிறது. அன்றைய காலகட்டத்தில் 'மண்ணின் மாண்பு' என்னுமொரு நாவலை எழுதிச் சிரித்திரன் ஆசிரியரிடம் கொடுத்திருந்தேன். அது கிழக்கிலங்கையின் கடற்கரைக்கிராமமொன்று எவ்விதம் உல்லாசப் பிரயாணிகளின் வருகையால் சீரழிகின்றது என்பது பற்றியது. அவ்விதமாக அங்குள்ள உல்லாசப் பயணிகளின் விடுதியொன்றில் பணியாற்றும் உள்ளூர்ப் பெண்ணொருத்தி எவ்விதம் சந்தர்ப்பச் சூழ்நிலைகளால் தவறுகின்றாள் என்பது பற்றியும், பின்னர் எவ்விதம் அவளது கணவனை அவளை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கின்றானென்பது பற்றியும் கூறும் நாவலது. அக்கடற்கரைக் கிராமத்து மக்களின் அமைதியான வாழ்வினை எவ்விதம் உல்லாசப்பயணிகளின் வரவும், அவர்களின் தன்னிச்சையான வாழ்வும் பாதிக்கின்றன் என்பது பற்றிய நாவல். அந்த நாவலை வாசிக்கக் கொடுத்திருந்தேன். ஆனால் அது சிரித்திரனிலும் பிரசுரமாகவில்லை. அதன் மூலப்பிரதி மீண்டும் எனக்குக் கிடைக்கவுமில்லை. பல மாதங்களின் பின்னர் அப்பிரதி தொலைந்து விட்டதாக ஆசிரியர் கூறினார்.

பாடும் பறவைகளும், உறவு தேடும் உள்ளமும்...இதன்பின்ன்ர் இன்னுமொரு நாவல் எழுதியிருந்தேன். அதன் பெயர் 'பறவைகள் பாடுகின்றன'. ஏனோ தெரியவில்லை அன்றைய காலத்து என் நாவல் முயற்சிகள் பலவற்றில் விதவை மறுமணம் முக்கியமாக வலியுறுத்தப்பட்டிருந்தது. மேற்படி நாவலிலும் ஒரு விதவை மறுமணம் விபரிக்கப்பட்டிருக்கும். அன்றைய காலகட்டத்தில் என் தங்கைமாரின் சிநேகிதிகள் சிலர், என் நண்பர்கள் சிலரென்று பலரின் கைகளுக்கு மேற்படி நாவல் மாறிப் பலரின் கருத்துகளையும் எனக்குப் பெற்றுத் தந்திருந்தது. இவையெல்லாம் நூலுருப் பெறவில்லையாயினும், என்னைப் பொறுத்தவரையில் அன்றைய காலகட்டத்தில் என் எழுத்தார்வததின் வடிகால்களாக விளங்கியவை அவை என்ற முக்கியத்தும் வாய்ந்தவை. இது போல் இன்னொரு நாவலும் எழுதியிருந்தேன். அதன் பிரதி இப்பொழுதும் என்னிடமுள்ளது. 'உறவு தேடும் உள்ளம்' என்னும் தலைப்பில் எழுதப்பட்ட குறுநாவல். நாற்பது பக்கங்களுக்குள் அடங்கியது. எண்பதுகளில் முழங்காவில் குடியேற்றத்திட்டத்திற்குச் சென்ற அனுபவத்தின் அடிப்படையில் பூங்குடிக் கிராமமென்ற குடியேற்றத் திட்டக் கிராமமொன்றில் நடைபெறுவதாக அமைந்திருக்கும் நாவல். நாவலின் கதாநாயகி எழுத்தார்வம் மிக்கவள். கணவனோ நேர்மையான விவசாயி. அவனை ஆனை அடித்துக் கொன்று விடுகிறது. நகருக்கு மேற்படிப்புக்காகச் செல்லவிருக்கும் கதாநாயகனுக்கும் கதாநாயகிக்குமிடையிலான நட்பு பற்றியது நாவல். அத்துடன் குடியேற்றத் திட்ட வாசிகள் எவ்விதம் பலவேறு நபர்களால் சுரண்டப்படுகின்றார்களென்பது பற்றியும் நாவல் விபரிக்கும். முழங்காவில் அனுபவத்தில் எவ்விதம் அப்பாவிகளான அக்கிராமத்து மக்கள் அங்குள்ள சங்கககடை மனேஜர், தபாலதிபர், தொழில்நுட்பத் திட்ட உத்தியோகத்தர்கள் எனப் பலராலும் சுரண்டப்படுவதைக் கண்டபோது வேதனையாகவிருநதது. அந்த வேதனையின் விளைவாகவும், தமிழகத்து வெகுசன படைப்புகளின் தாக்குதல்களின் விளைவினாலும் உருவான கலவையாக உருவான நாவலிது. முற்றுப் பெறாத நாவல் பின்னர் வலிந்து முற்றுப் பெற வைக்கப்பட்டுள்ளது.

கணங்களும், குணங்களும்....இவ்விதமாக நான் நாவல்கள் சில எழுதிய போதும் அவை எதுவும் எந்தப் பத்திரிகைகளிலோ சஞ்சிகைகளிலோ வெளிவாகவில்லை. முதல்முறையாக பத்திரிகையொன்றில் வெளிவந்த நாவலென்றால் அது 'கணங்களும் , குணங்களும்' தான். மணிவாணன் என்னும் பெயரில் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் வெளிவந்த நாவல். ( அதற்கு முன்னர் மான்ரியாலிலிருந்து வெளிவந்த கையெழுத்துப் பத்திரிகையான 'புரட்சிப்பாதை' சஞ்சிகையில் 'மண்ணின் குரல்' வெளிவந்திருந்தாலும் அது கையெழுத்துச் சஞ்சிகையென்பதால் 'கணங்களும் குணங்களும்' என்பதையே அச்சு ஊடகமொன்றில் வெளிவந்த முதலாவது நாவலாகக் கருதுகின்றேன்.) நாவலைப் படிப்பவர்கள் உடனேயே எழுபதுகளில் தமிழகத்தில் வெளிவந்த நாவல்களின் பாதிப்புகள், காண்டேகரின் கதைகளின் பாதிப்புகள் இருப்பதைக் கண்டுகொள்வார்கள். தன் காதலியைப் பாலியல் வல்லுறவுக்குட்படுத்திச் சிறைத்தண்டனை பெற்ற நாயகன் , மீண்டும் விடுதலையானதும் அவளைச் சந்தித்துப் பாவமன்னிப்புப் பெற வேண்டி அவளிருக்கும் வவுனியாவுக்குச் செல்லுகின்றான. அவனது, அவனது காதலுக்குரியவள், மற்றும் அங்கு எதிர்ப்ப்டும் இன்னுமொரு பெண் ஆகியோரின் பார்வையில் கூறப்படும் கதையிது. இயற்கை வர்ணனைகள், தத்துவச் சிக்கல்கள் ஆகியன பற்றிய பல்வேறு கோணங்களில் இந்நாவலின் பாத்திரங்கள் சிந்திப்பார்கள். தமிழகத்திலிருந்து வெளிவந்த 'மண்ணின் குரல்' நாவல் தொகுப்பில இந்நாவலுமுண்டு. இந்நாவலின் பெயராகக் 'கணங்களும் குணங்களும்' என்னும் பெயர் வந்ததற்கும் ஒரு காரணமுண்டு. என்னுடைய பாடசாலை நண்பர்களிலொருவன் கீதானந்தசிவம். மிகவும் ஆன்மிகத் தேடுதல் மிக்கவன். எபொபொழுதும் கேள்விக்குமேல் கேள்வியாகக் கேள்விகளைக் கேட்டே, உரையாடல்களைச் சிந்திக்க வைக்கும் ஆற்றல் மிக்கவன். ஒரு முறை இவனுடன் நிகழ்த்திய தொலைபேசி உரையாடலொன்றில் 'நல்லது, கெட்டது' ஆகியனவற்றைப் பற்றிய விவாதமொன்றெழுந்தது. சில கணங்களில் எவ்விதம் நல்லவர்கள் கூடத் தவறுகளைச் செய்து விடுகின்றார்கள் என்பது பற்றியெல்லாம் அவ்வுரையாடலில் அவன் பல்வேறு கருத்துகளை உதிர்த்தான். அப்பொழுது சில கணங்கள் எவ்விதம் சிலரது குணங்களை மாற்றித் தவறிழைக்க வைத்து விடுகிறது என்று எண்ணியதன் விளைவாக உருவானதுதான் 'கணங்களும், குணங்களும்' என்னும் தலைப்பு. இந்நாவல் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' (தமிழ்நாடு) / மங்கை பதிப்பகம் (கனடா) வெளியீடாக வெளிவந்த 'மண்ணின் குரல்' நாவற் தொகுப்பில் அடங்கிய நாவல்களிலொன்று.

பொதுவாக எனக்கு எழுதுவதும், வாசிப்பதும் மூச்சு விடுவதைப் போல. அவையில்லாமல் என்னால் வாழவே முடியாது. எந்தச் சந்தர்ப்பத்திலும் என்னால் இவையிரண்டையும் விட்டு விடவே முடிந்ததில்லை. ஆனால் நான் ஒரு போதுமே யாருடைய பாராட்டுதல்களுக்காகவும், விமர்சனங்களுக்காகவும் எழுதுவதில்லை. எனவே எதை எழுதினாலும் அதனை நான் அனுபவித்தே எழுதுவதுண்டு. என் எழுத்தில், படைப்புகளில் பொதுவான அம்சங்களாக என் வாழ்வில் அனுபவங்களிருக்கும் அதே சமயம் இருப்பு பற்றிய என் தேடல்கள், இயற்கையின் மீதான என் பற்றுதல் ஆகியன ஆங்காங்கே விரவிக் கிடக்கும். உதாரணமாகக் 'கணங்களும், குணங்களும்' நாவலை எடுத்துக் கொண்டால் அதில் வரும் கீழுள்ள பத்திகளைக் கவனித்தாலே போதும் மேற்படி கூற்றினை விளங்கப்படுத்த.


'வாழ்வுதான் எத்தனை விசித்திரமானது. என் வாழ்வின் ஒரு கட்டப் பயணத்தை முடித்துவிட்டுப் புதிய பயணத்தை ஆரம்பித்தவனாக் வந்த என்னை எவ்விதம் இச்சூழல் இன்னுமொரு பயணத்தில் இலாகவகமாகப் பிணைத்து விட்டது. வாழ்வை இன்னுமொரு கோணத்தில் பார்க்கும்படி எவ்விதம் என்னைக்கொண்டு வந்து நிறுத்தி விட்டது. அன்றாட வாழ்வே பிரச்சனையாக ஒவ்வொரு நாளுமே போராட்டமாக வாழ்வும் இந்த மக்கள்.... இவ்வளவு நெருக்கமாக விரிவாக நான் இதுவரை உலகை இன்னுமொரு கோணத்தில் வைத்துப் பார்த்ததே இல்லை. இதுவரையில் நான் எவ்விதம் வெறும் சுயநலக்காரனாக மட்டுமே, என் உணர்வுகளை மட்டுமே முதன்மைப்படுத்தி வாழ்ந்து விட்டிருந்தேன்.

சாதாரண ஒரு மத்திய வர்க்கத்து வாழ்க்கை வட்டத்துடனான பரிச்சயமே கொண்டிருந்த என்னை, முதன் முறையாக ஏழ்மையின் அவலங்களைப்பற்றி ஏறெடுத்துப் பார்க்கத் தூண்டி விட்டிருந்தது எனது இந்தப் புதிய அனுபவம், ... வாழ்வையே பிரச்சனைகளின் போர்க்களமாக எதிர்நோக்கும் இம்மக்களுடன் ஒப்பிடுகையில் என்னைப் போன்றவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் எவ்வளவோ அற்பத்தனமானவையாக , அர்த்தமற்றவையாக அல்லவா தெனப்டுகின்றன. சாதாரண குடும்ப உறவுகளே, நிலவும் பொருளாதாரச் சூழலினால் சிதைந்துவிட... வாழ்வையே அதன் பயங்கரங்களையே தனித்து எதிர்நோக்கி நிற்கும் இந்த மக்களைப் பார்க்கையில் என்னையறியாமலேயே என் நெஞ்சில் ஒருவித பரிவு கலந்த வேதனை இழையோடியது. பெரும்பாலானவர்கள் அப்பாவிகளாக இருக்கிறார்கள். கடினமாக உழைக்கின்றார்கள். ஒருவருக்கொருவர் பரஸ்பரம் உதவியாக இருக்கிறார்கள். எனக்கு என்னை நினைகையிலேயே ஒரு கணம் வெறுப்பாக வந்தது. இவ்வளவு காலமும் எவ்விதம் நான் என் தனிமனித உணர்வுகளையே பூதாகாராமாக்கி, அதற்காகவே வாழ்ந்து விட்டிருந்தேன். அதன் ஒரு பகுதியாக நான் இழைத்துவிட்ட தவறும், தணடனையும்....'

'மனது முன்னெப்போதையும்விட , மிக மிக இலேசாக , இன்பமாக, தெளிவாக , உறுதியாக விளங்குகின்றது. நான் வாழும் இந்த உலகம், இந்த ஆகாயம், தொலைவுகளில் கோடு கிழிக்கும் பறவைக் கூட்டங்கள், ஒளிக்கதிர்களை வாரி வழங்கும் ஆதவன், தண்ணென்று ஒளிவீசி வரும் முழுநிலா, வருடிச் செல்லும் வாயுபகவான், இரவுகளில் கண்சிமிட்டிச் சிரிக்கும் நட்சத்திரப் பெண்கள்.. இந்த மரம், மக்கள், மண், ... எல்லாமே இன்பமாக என்னில் ஒரு பகுதி போன்று அல்லது அவற்றின் ஒரு பகுதி நான் போன்றதொரு பரவசமாகத் தெரிகிறது.

திடீரென்று மனதில் ஒரு காட்சி தென்படுகின்றது. அடிக்கடி என் கனவுகளில் தோன்றும் ஒரு காட்சிதான் அது. மனித நடமாட்டம் அரிதாகக் காணப்பட்ட ஆதிமானிடர் வாழும் ஒரு காலம் போன்றதொரு சூழல்... ஓங்கும் விருட்சங்கள்.. சீறும் காற்று.. உறுமியோடும் புலி முதலான விலங்குகள்... ஓயாது பொழியும் மழை வெள்ளமாக அருவியாக, பேராறாகப் பெருக்கெடுத்து..... அலைக்கரம் கொண்டு சாடும் கடல்... இவற்றிடையே இயற்கையின் குழந்தையாக நான்.

இந்தக் காட்சி என் மனதில் தோன்றியதும் , அலுப்பாகச் சலிப்பாகக் காணப்படும் கணங்கள் அர்த்தம் நிறைந்வையாகக் காணப்படுவது வழக்கம். அது ஏன் என்பதற்கான சரியான உளவியல் காரணம் எதுவாக இருக்குமோ எனக்குச் சரியாகத் தெரியாது... ஆனால் இயற்கையின் குழந்தையான நீ .. இயற்கையுடனான உன் வாழ்வை இழந்து இன்றைய செயற்கை முலாம் பூசப்பட்ட இயற்கையினுள் மாய்ந்து கிடக்கின்றாயே.. அதுவே உன் பிரச்சனைகளின் உறையுள்.. என்கின்ற தெளிவு கலந்த சிந்தனையின் விளைவாக இருக்கலாம்...' (மண்ணின் குரல்; பக்கங்கள் 233, 234, 235 & 235)

மேற்படி 'மண்ணின் குரல்' தொகுப்பிலுள்ள இன்னுமொரு நாவல் 'மண்ணின் குரல்' 1984 காலப்பகுதியில் மான்ரியால், கனடாவிலிருந்து வெளிவந்த 'புரட்சிப்பாதை' கையெழுத்துப் பத்திரிகையில் தொடராக வெளியாகி முற்றுப் பெறாமல் நின்று போன கதை. பின்னர் கனடாவில் பூர்த்தியாக்கப்பட்டு ஒரு சில கவிதைகள், கட்டுரைகளுடன் நூலுருப் பெற்றது. கனடாவிலிருந்து வெளிவந்த முதலாவது நாவலென்ற பெருமை இதற்குண்டு. கனடாவிலிருந்து வெளிவந்த 'மண்ணின் குரல்' நாவலடங்கிய நூல் அதனுடன் மேலும் சில கவிதைகளையும், அரசியற் கட்டுரைகளையும் உள்ளடக்கியிருந்தது. ஆனால் தமிழகத்தில் வெளிவந்த 'மண்ணின் குரல்' நாவல் தொகுப்போ நான்கு நாவல்களின் தொகுப்பாக வெளிவந்திருந்தது. எண்பதுகளின் ஆரம்பத்தில் குறிப்பாக 1983 இனக்கலவரத்தைத் தொடர்ந்து ஈழத்துத் தமிழ்ப்பகுதிகளில் நிலவிய சூழலை மையமாக வைத்து, வர்க்க விடுதலையுடன் கூடிய தமிழீழ விடுதலையினை வலியுறுத்திய நாவல். தலைமறைவாக இருந்து விடுதலைப் போராட்டத்தில் குதித்துவிட்ட விடுதலைப் போராளிகளைப் பற்றி, இராணுவத்தால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட தமிழ்ப் பெண்ணொருத்தி, விடுதலைப் போராளியொருத்தியின் காதலி, போராட்டத்தில் இணைந்தது பற்றி, பின்னர் சாதாரண இளம் வயதுக்கேயுரிய எதிர்பார்ப்புகளுடன் வாழ்ந்து கொண்டிருந்த அவளது தங்கையின் காதலன் எவ்விதம் அவளது வழியைப் பின்பற்றிப் போராட்டத்தில் இணைந்து கொளகின்றானென்பது பற்றி விபரிக்கும் சிறிய நாவல். கருத்துக்கு முக்கியத்துவம் கொடுத்துப் படைக்கப்பட்ட இந்நாவல் அன்றைய காலத்து என் மனதின் பிரதிபலிப்பாக விளங்கும் காலத்தின் சூழலின் விளைவாக உருவான நாவல். கருத்தினை மையமாக வைத்து உருவான இச்சிறு நாவலில் ஆங்காங்ககே தூவிக் கிடக்கும் கருத்துகள் சிலவற்றைக் கீழே காணலாம்:

'தம்பி! மனிதனால் அறியமுடியாதபடி புதிர் நிறைந்ததாக இப்பிரபஞ்சத்தின் தோற்றமிருப்பதை நான் ஒப்புக்கொள்கிறேன் தம்பி. பொருளும், சக்தியும் ஒன்றென்று நவீன விஞ்ஞானம் கூறுகின்றது. என்னைப் பொறுத்தவரையில் இவ்வுலகம், கிரகங்கள், நட்சத்திரங்கள், .. பால்வெளிகளை உள்ளடக்கிய இயற்கையே சக்தி. அச்சக்தியே இயற்கை. இயறகையில் யாவுமே ஒழுங்காக இருக்கின்றன. .. மனிதனும் ஒழுங்காக இருப்பானாயின் பிரச்சனைகளே இல்லை...'

'அறியாமையில் உருவான சமயம் என்கின்றீர்களே! அதனை நீங்கள் நம்புகிறீர்களா?"

"தம்பி! நமக்கும் மேலாகவொரு புதிரான சக்தி இருப்பதை நான் ஏற்றுகொள்கிறேன். ஆனால் சமயத்தையோ அதன் மூடத்தனமான கோட்பாடுகளையோ நான் ஏற்கவில்லை....

அன்ராடம் பிரச்சனைகளால் ஆடும் மனிதனைப் பிரச்சனைகளைத் தீர்த்துப் புதுபாதை காட்டுவதற்குச் சமயங்கள் முயலவில்லை. மாறாக என்ன செய்கின்றன...

- ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தைக் காட்டு -

- கொடுமை செய்பவன் நரகத்திற்குச் செல்வான் -

- எல்லாவற்றையும் கடவுள் மேல் பழி போட்டுவிட்டு நிம்மதியாகவிரு -

இவ்விதமான போதனைகளால் சமயம் மனிதனைப் பிரச்சனைகளுக்கு முகம் கொடுப்பதற்குப் பதில் பிரச்சனைகளிலிருந்து தப்பியோட வைப்பதால், மனிதனை மனிதனாக வாழ்வதற்கு நடைமுறைச் சாத்தியமான வழிகளைக் கூறாமல் நடைமுறைக்கொவ்வாத நரகத்தைப் பற்றியும், சொர்க்கத்தைப் பற்றியும் போதிப்பதால்.. அததகைய சமயத்தை நான் ஆதரிக்கவில்லை.. நமக்குப் புதுவிதமான , நடைமுறைக்குச் சாத்தியமான , பிரச்சனைகளுக்கு அறிவுபூர்வமான தீர்வுகளைக் கூறுகின்ற சமயம் தான் தேவையே தவிர, மூட நம்பிக்கைகளுடன் கூடிய, மனிதனை பிரச்சனைகளிலிருந்து கோழையைப் போல் ஓட வைக்கின்ற சமயம் தேவையில்லை...' (பக்கங்கள் 327 & 328)

'ஆகா.. அந்தியின் சிவப்பிலும் ஒரு தத்துவமே தெரிகிறது"

சிந்தனையினின்றும் நீங்கியவனாக அநபாயன் திரும்பினான். எதிரில் சாமியார் நின்றிருந்தார்.

"இரவு என்னும் கொடுங்கோலன் பகலைக் குற்றிக் குதறியதன் விளைவோ இந்தச் சிவப்பு..." என்றபடியே அருகீலமர்ந்த சாமியாரையே ஆவலுடன் நோக்கினான் அநபாயன்.

"இவ்வுலகில் வாழ்வே ஒரு போராட்டம்தான்.. ஒவ்வொரு உயிருமே தனது வாழ்விற்காகப் போராடிக் கொண்டுதானிருக்கின்ரது... போராட்டமென்பது இயற்கையில் இயல்பாக, நியதியாகவே உள்ளது..."

மேலும் தொடர்ந்தார்:

"இயறகையின் முரணபாடுகளும், போராட்டங்களுமே வரலாற்றை வழி நடாத்திச் செல்கின்றன. ஆதியில் மனிதனின் அகவுலகோ இருண்டு கிடந்தது. அறியாமை அங்கே குடி கொண்டிருந்தது. அவன் தன் அறியாமையின் விளைவாக, புறவுலகில் நிலவிய முரண்பாடுகளைப் பிழையாகக் கையாண்டதன் விளைவே, பிரச்சனைகளைச் சிக்கலாக்கியது.. அவனது அறிவு வளர, வளர முரண்பாடுகளை அவன் கையாணட விதம் , பழைய முரண்பாடுகள் இருந்த இடத்தில் புதிய முரணபாடுகளைக் குடியமர்த்தின. இத்தகைய புதிய முரண்பாடுகளைஒ அவன் தீர்க்கையில் மேலும் சில முரண்பாடுகள் உருவாகின..." (பக்கங்கள் 346 &347)


இவ்விதமாகச் செல்லும் நாவல் பின்வருமாறு முடிந்திருக்கும்:

'அதோ பாருங்கள்... உலகின் நானா பக்கங்களிலுமே அடக்கு, ஒடுக்கு முறைகளுக்கெதிராக ஒரு மக்கள் கூட்டம் தர்மத்திறகான வேள்வித் தீயினில் குதித்துப் போராடிக் கொண்டிருப்பதை.... வறட்டு வேதாந்ததினுள்ளும், அடிமைத்தளைகளுக்குள்ளும், அறியாமையினுள் மாண்டிருக்கும் மானுடத்தைப் புத்துயிர்ப்படையச் செய்வதற்காக, நடுக்கும் குளிரினுள், அர்த்த இராத்திரிகளில், கொடிய வனாந்தரங்களில், குகைகளில், மலைச்சாரல்களில், காடுகளில், ஊன் உறக்கமின்றி , இரவு பகல்களாக, ஏற்றத்தாழ்வுகளால, நாற்றமெடுத்துச் சீழ்பிடித்துச் சிதைந்து கிடக்கும் சமுதாயத்தினைச் சீர்சிருத்துவதற்காக அவர்கள் ஜீவ மரணப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். தாம் பிறந்த மண்ணில், தாணடவமாடிடும் அநீதியினை, அக்கிரமத்தினை அழித்தொழிப்பதறகாக, மலிந்து கிடக்கும் பொய்மையினை ஒழித்திடுவதற்காக, புழுதியில் புரண்டு கிடக்கும் பெண்மையின் புனிதத்தினைப் பேணுவ்தற்காக, சிதைந்துவிட்ட குடும்ப உறவுகளைச் சீராக்குவதற்காக, இழந்துவிட்ட அமைதியையும், இன்பத்தினையும் மீண்டும் நிலைநிறுத்துவதற்காக, மண்ணுடனான தமது கடமையினைச் செய்வதறகான புனிதப் போரினில் அவர்கள் ஈடுபட்டிருகின்றார்கள்.... இந்த மண்ணின் மைந்தர்கள் நடத்தும் போராட்டம் ஒருக்கிறதே.. அது என்றுமே தோற்றுவிடுவதில்லை. இவர்கள் இறந்து விடலாம். இவர்கள் ஏற்றி வைத்த இலட்சியச்சுடர்கள் அணைந்து விடுவதில்லை. விதைத்த தர்மப் பயிர்கள் மடிந்து விடுவதில்லை. இவர்களது உடல்கள் இம்மண்ணுடன் கலந்து விடுகையில்... இம் மண்ணில் வீசும் தென்றலும் புரட்சிப் பண் பாடி நிற்கும். துளிர்க்கும் புற்களும் போர்ப்பண்ணிசைத்து விடும். மலையருவிகள், குன்றுகள்... இங்கெல்லாம் இம்மண்ணின் குரல் கேட்கின்றதே.. உங்களுக்கு அவை புரிகின்றதா? ... ஆமாம்! என்று இம்மண்ணில் அநீதியும், அக்கிரமும் அழிந்தொழிந்து விடுகின்றதொ, பொய்மை உருக்குலைந்து போகின்றதோ, பெண்மை போற்றிடப் படுகின்றதோ, குடும்ப உறவுகள் சீர்பெற்று விடுகின்றனவோ, அன்றுவரை இம்மண்ணின் குரலும் ஒலித்துக் கொண்டுதானிருக்கும்.
எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
இருந்ததும் இந்நாடே! அதன்
முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து
முடிந்ததும் இந்நாடே! அவர்
சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து
சிறந்ததும் இந்நாடே! இதை
வந்தனை கூறி மனத்தில் இருத்தி என்
வாயுற வாழ்த்தேனோ" ( பக்கங்கள்: 352, 353 & 354 )

இவ்விதமாக மேற்படி தொகுப்பிலுள்ள 'மண்ணின் குரல்' அன்றைய காலகட்டத்து என் மனநிலையினைப் பிரதிபலிக்குமொரு படைப்பு. தமிழ் மக்களின் விடுதலையினை வலியுறுத்தும் நாவல். ஆனால் அதன் பின் தமிழ் விடுதலைப் போராட்டத்தில் நடைபெற்ற தவறான போக்குகளை, நிகழ்வுகளை, ஆரோக்கியமாக விமர்சனத்துக்குள்ளாக்கிய படைப்புகளாக மேற்படி தொகுப்பிலுள்ள 'வன்னி மண்', மற்றும் 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்' என்னுமிரு நாவல்களையும் கூறலாம். மேற்படி நாவல்களிரண்டும் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகை / சஞ்சிகையில் வெளிவந்த நாவல்கள். ஆரோக்கியமாக விமர்சனத்துக்குள்ளாக்கிய படைப்புகளென்று நான் கூறுவதற்குக் காரணங்களுண்டு. மேறபடி விமர்சனங்கள் ஒரு போதுமே தமிழ் மக்களின் நியாயமான போராட்டங்களைக் கொச்சைப்படுத்தும் வகையில் அமைந்திருக்கவில்லை. மிகவும் பலமாக சகோதரப் படுகொலைகளை, 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' கேள்விக்குள்ளாகினால் , 'வன்னி மண்' நாவலோ அப்பாவிகள் யாராகவிருந்தாலும் (சிங்களவர்களோ அல்லது தமிழர்களோ) அவர்களுக்கெதிராகத் துப்பாக்கிகள் நீட்டப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியது.

வன்னி மண்ணில் என் வாழ்வு....மேற்படி 'வன்னி மண்' என் வாழ்வின் பால்ய காலத்தில் நடைபெற்ற உண்மைச் சம்பவமொன்றின் அடிப்படையில். நடைபெற்ற நிகழ்வொன்றின் அடிப்படையில், தமிழ் மக்களின் போராட்டத்தை அணுகும் நாவல். என் பாலய காலத்தில் நான் , வவுனியா மகாவித்தியாலயத்தில் படித்துக் கொண்டிருந்தேன். என் அம்மா அங்குதான் ஆசிரியையாகக் கற்பித்துக் கொண்டிருந்தார். அச்சமயம் மன்னார் வீதியில் அமைந்திருக்கும் குருமண்காடு என்னும் பகுதி ஓரிரு குடும்பங்களையே உள்ளடக்கிய, ஒற்றையடிப் பாதையினை மட்டுமே கொண்டிருந்த , காடு மண்டிக் கிடந்ததொரு பகுதி. அங்கு நாங்கள் போவதற்கு முன்னரே ஒரு சிங்கள பாஸ் குடும்பமும் வாழ்ந்து வந்தது. எந்நேரமும் சிரித்தபடி காட்சியளிக்கும் அந்த பாஸ் குடும்பத்தவர்கள் நல்ல அயலவர்களாக விளங்கிவந்தார்கள். எங்களது பண்டிகைகளில் எங்களது உணவு வகைகள் அவர்களது வீட்டிற்குப் போகும். அவர்களது பண்டிகைக் காலங்களில் அவர்களது பாற்சோறு ('கிரி பத்' ) போன்ற உணவு வகைகள் எங்களுக்கு வரும். அவர்களுடன் அன்றைய காலகட்டத்தில் அருகிலிருந்த பட்டாணிச்சுப் புளியங்குளம் என்னும் குளத்திற்குக் குளிக்கப் போவதுண்டு. அப்பொழுது எனக்கு நீந்தத் தெரியாது. நீந்துவதற்குப் பழகிக் கொண்டிருந்தேன். அந்த பாஸ் குடும்பத்தவருடன் சாந்தா என்று ஒரு சிங்கள இளைஞனும் வசித்து வந்தான். அவன் நன்கு நீந்துவான். நீந்தத் தெரியாத நான் அக்குளத்தில் மிதந்து கொண்டிருந்த மரக்குற்றியொன்றைப் பற்றிப் பிடித்தவண்ணம் நீந்தப் பழகிக் கொண்டிருந்தேன். அருகில் சாந்தாவும் நீந்திக் கொண்டிருப்பான். ஒரு நாள் இவ்விதம் மரக்குற்றியினைப் பிடித்தவண்ணம் நீந்திக் கொண்டிருந்தேன். அருகிலேயே சாந்தாவும் நீந்திக் கொண்டிருந்தான். நீந்திக் கொண்டிருந்தவன் மிகவும் ஆழமாக விளங்கிய குளத்தின் நடுப்பகுதிக்கு வந்து விட்டேன். அந்தச் சமயத்தில் மரக்குற்றியைப் பிடித்திருந்த பிடி நழுவி விடவே நான் நீரினுள் மூழ்க ஆரம்பித்துவிட்டேன். இதனைக் கண்ட சாந்தா மிகவும் விரைவாக என்னருகே நீந்திவந்து மூழ்கிக் கொண்டிருந்த என்னைப் பற்றித் தூக்க முயன்றான். அவன் கழுத்தைச் சுற்றிப் பலமாக மூழ்கிக் கொண்டிருந்த நான் கட்டிப்பிடித்துக் கொள்ளவே என்னுடன் சேர்ந்து அவனும் மூழ்க ஆரம்பித்தான். இதனை அவதானித்த குளக்கரையிலிருந்த என் அக்கா கத்தவே, அப்பொழுது கரையில் நின்று சவர்க்காரம் போட்டுக் கொண்டிருந்த பாஸ் , உடனடியாகவே நீந்திவந்து மூழ்கிக் கொண்டிருந்த எங்களிருவரையும் தன் இரு கைகளால் கிடுக்கிப் பிடி பிடித்தபடி கரைக்கு இழுத்துவந்து காப்பாற்றினார். அன்று அந்த பாஸ் எங்களைக் காப்பாற்றியிருக்காவிட்டால். இன்று நான் உங்கள் முன்னிருந்து இவ்விதம் கதை கூறிக்கொண்டிருக்க மாட்டேன். அதன் பின்னர் நாங்கள் மீண்டும் யாழ்ப்பாணம் போய் விட்டோம். யாழ் இந்துக் கல்லூரி, மொறட்டுவைப் பல்கலைக் கழகமென்று திரிந்த என் வாழ்க்கை இன்று கனடாவில் தொடர்கிறது. இதற்கிடையில் இலங்கையில் தமிழ்ர் விடுதலைப் போராட்டம் முனைப்புடன் கொழுந்து விட்டெரிய ஆரம்பித்து விட்டிருந்தது. இனங்களுக்கிடையில் நிலவிய புரிந்துணர்வுகள் சிதைந்தன. முக்கியமாக எல்லைப் புறங்களில் வாழ்ந்த பல்வேறு மக்களுக்கிடையில் நிலவிய நட்புடன் கூடிய சூழலை நாட்டில் ஏற்பட்ட அரசியல் நிலைமைகளும், இனக்கலவரங்களும் , அரசபடையினரின் அடக்குமுறைகளும், தமிழ் மக்கள் மேல் கட்டவிழ்த்து விடப்பட்ட பயங்கரவாதச் சட்டமும் மோசமாகச் சீரழித்து விட்டன. நானும் காலப்போக்கில் அந்த பாஸ் குடும்பததவரை மறந்து விட்டேன். பின்னர் பல வருடங்களின் பின்னர் நான் கனடாவில் வசிக்கும்போதுதான் கேள்விப்பட்டேன் அந்த பாஸ் குடும்பததவர்களுக்கு ஏற்பட்ட நிலைமையினை. 1983ற்குப் பின்னர் நிலவிய சூழலில், தமிழ் விடுதலை அமைப்பொன்றினால் அந்த பாஸின் குடும்பம் முழுவதுமே ஒட்டுமொத்தமாக அழிக்கப்பட்டதாகவும், அதனை அந்தப் பகுதியிலேயே வாழ்ந்த அந்த அமைப்பின் பொறுப்பாளரே செய்ததாகவும், பின்னர் அந்தப் பொறுப்பாளர் இன்னுமொரு அமைப்பினால் கொலை செய்யப்பட்டதாகவும் கேள்விப்பட்டேன். அந்த பாஸ் பின்னர் சிங்கள இராணுவத்துடன் சேர்ந்தியங்கியதாகவும் அதனாலேயே இவ்விதம் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் கூறப்பட்டது. சுயாதீன விசாரணைகளேதுமற்ற நிலையில் நான் கேள்விப்பட்ட அந்த அமைப்பின் பெயரைக் குறிப்பிட விரும்பவில்லை. ஆயினும் அந்த பாஸ் குடும்பம முழுவதும் அருகிலிருந்த காட்டிற்குள் கொண்டு செல்லப்பட்டுக் கொலைசெய்யப்பட்டதாகக் கேள்விப்பட்ட தகவல் என்னைப் பாதித்தது. என்னையும் ,மூழ்கிக் கொண்டிருந்த சாந்தா என்ற சிங்கள் இளைஞனையும் காப்பாற்றிய அந்தச் சம்பவம்தான் உடனடியாக நினவிற்கு வந்தது. உடனடியாகவே வன்னி மண்ணில் கழிந்த என் பால்யகாலத்து நினைவலைகள் ஓடி மறைந்தன. வன்னி மண்ணுடனான என வாழ்வின் அனுபவங்களின் நனவிடை தோய்தலினூடாக எவ்விதம் அந்த வன்னி மண்ணின் அமைதி கலந்த சூழல் நாட்டின் அரசியல் நிகழ்வுகளால் படிப்படியாக மாற்றமடைந்தது என்பதை விளக்குமொரு நாவலாக இந்த வன்னி மண் நாவல் உருவானது. அப்பாவிகள் யாராகவிருந்தாலும் அவர்கள் மேல் துப்பாக்கிகள் நீட்டப்படுவதை என்னால் ஏறக முடியாது. அதே சமயம் ஈழத் தமிழ் மக்களின் நீதியான போராட்டத்தினையும் என்னால் கொச்சைப்படுத்த முடியாது. வன்னி மண் நாவல் மேற்படி இரண்டுவிதமான என்மனப் போக்குகளையும் விவரிக்கும். மேற்படி நாவல் தாயகம் சஞ்சிகையில் தொடராக வெளிவந்துகொண்டிருந்த சமயம் கனடா வந்திருந்த எழுத்தாளர் மாலனுடனானதொரு குறுகிய சந்திப்பு எழுத்தாளர் ரதனின் இருப்பிடத்தில் நிகழ்ந்தது. அப்பொழுது நடைபெற்ற உரையாடலின்போது மாலன் 'ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டம் நடைபெறும் இச்சூழலில் எந்தவொரு ஈழத்தமிழ் எழுத்தாளராவது அப்பாவிச் சிங்கள மக்கள்மேல் நடைபெறும் தாக்குதல்பற்றிக் கண்டித்து எழுதியிருக்கின்றார்களா? இல்லையே' என்று குறைபட்டுக் கொண்டார். அப்பொழுது 'வன்னி மண்ணி'ல் இவ்விதமானதொரு கண்டனத்தை வெளியிட்டிருக்கின்றேன் என்று கூற நினைத்தேன். ஆனாலும் கூறவில்லை.

மேற்படி 'வன்னி மண்' நாவலில் வரும் கீழுள்ள சில பத்திகள் என் மனநிலையினைத் தெளிவாக விளக்கும்:

"..இன்று உன்னால் உயிர் கொடுக்கப்பட்ட நான் இருக்கிறேன். ஆனால் .. நீ.. உளவாளியென்று உன்னோடு சேர்த்து முழுக்குடும்பத்தையும் கூண்டோடு கைலாசமேற்றி அனுப்பிவிட்டார்கள். நியாயப் படுத்துவதற்கா ஆட்களில்லை. எதையும் நியாயப்படுத்த அடுக்கடுக்காக அள்ளி வீசக் காரணங்களாயில்லை. சொந்தச் சகோதரர்களையே தெருவில் எரித்துப் போட்டுவிட்டு அதற்குமொரு நியாயம் கற்பித்த பரம்பரையைச் சேர்ந்தவர்களல்லவா நாங்கள்... வழக்கம்போல் இதற்கும் காரணங்களை அள்ளி வீசுவோம்.
- பாஸ் இராணுவததிற்கு உளவு சொன்னான் -
- பாஸின் மனுசிக்கும் இராணுவத்துக்கும் அப்படியிப்படி ஏதோ தொடர்பாம். விட்டு வைக்கக் கூடாது...-
- அவங்கட பிள்ளைகளும் சேர்ந்துதானாம் -
- போராட்டப் பாதையிலே இதையெல்லாம் விட்டு வைக்கக் கூடாது -
ஆனால் எனக்குத் தெரிந்த நீ .. என்னைவிட அம்மண்ணுடன் உனக்குத்தான் அதிக சொந்தம். நாங்கள் முதன் முறையாக வந்தபோதே அந்தப் பகுதி காடுமண்டிப் போய்க்கிடந்தது. ஆனால் நீ வந்தபோதோ நான் பிறந்திருக்கவேயில்லை. அந்தப் பகுதி எந்த நிலையில் இருந்திருக்கும். இளைஞனான நீ கனவுகளுடன் , கற்பனைகளுடன் புது மண்ணில் வாழ்க்கையைத் தொடங்கியிருப்பாய். திட்டங்கள் பல போட்டிருப்பாய். எல்லாம் அழிக்கப்பட்டுவிட்டன. ..... போராட்டம், இராணுவத் தீர்வு என்ற பெயரில் இன்னும் எத்தனை அப்பாவி உயிர்கள் பலியாகப் போகின்றனவோ? போரில் நேரடியாக ஈடுபட்டவர்களின் அழிவைவிட இதுவரை அழிந்துபோன பாதிக்கப்பட்ட அப்பாவி உயிர்களின் எண்ணிக்கைதான் மிகமிக அதிகம். உலகம் முழுவதும் நிலைமை இதுதான். இதன் முடிவு தானென்ன?

... நான் நிச்சயம் நம்புகிறேன். நீ உளவாளியாகவிருக்க முடியாது. என் உயிரைக் காப்பாற்றும்போது நான் தமிழன் நீ சிங்களவனென்று நீ நினைத்திருக்கவில்லை. மனிதனென்றுதான் எண்ணினாய். அந்த மனிதாபிமானத்தை எனக்கு விளங்கும். என் எதிர்பார்ப்பையும் மீறி உண்மையிலேயே காலம் உன் நெஞ்சிலும் இன உணர்வுகளை விதைத்து விட்டிருந்தால்.. அதற்கும் கூட உனக்கும், உன் குடும்பததவர்களுக்கும் கிடைத்த தண்டனை கொடியதுதான்... மிகவும் கொடியதுதான்... ." (மண்ணின் குரல் ; பக்கங்கள்: 96,97 & 98)

இந்த நாவலின் நோக்கம் பற்றி மேற்படி 'மண்ணின் குரல்' நாவல் தொகுப்பின் இறுதியில் பின்வருமாறு கூறியிருந்தேன். அதனை இங்கு மீண்டுமொருமுறை குறிப்பிடுவதும் பொருத்தமானதே:

'எம்மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராட ஆயுதம் ஏந்தியவர்கள் தொடர்ந்தும் தமக்கிடையில் மோதித்தேவையற்ற அழிவுகள் ஏற்படுவதைத் தவிர்க்க வேண்டும். அப்பாவிகள் யாராகவிருந்தாலும் அவர்களுக்கெதிராகத் துப்பாக்கிகள் நீட்டப்படுவது நிறுத்தப்பட வேண்டும்' என்பதில் என் மனம் மிகவும் தெளிவாகவேயிருந்தது. மேற்படி தாயகம் பத்திரிகையில் வெளிவந்த எனது இன்னுமொரு நாவலான 'அருச்சுனனின் தேடலும் , அகலிகையின் காதலும்' நாவல் முக்கியமாக அமைப்புகளிடையே நிலவிய சகோதரப் படுகொலைகளையும், உட்படுகொலைகளையும், சமுதாயப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக ஆயுதமேந்தியவர்களால் களவு, விபச்சாரம் போன்றவற்றைத் தம் வயிற்றுக்காகப் புரிந்தவர்களை மரணதண்டனைக்குள்ளாக்கிய செயல்களையும் கண்டிக்கிறது. அவ்விதம் கண்டிக்கும் அதே சமயம் அந்நாவல் பின்வருமாறு முடிவது அதன் நோக்கத்தைத் துல்லியமாகவே புலப்படுத்தும்:

" அநியாயமாக, அப்பாவிகள் தண்டிக்கப்படுவதன் காரணம் , சாகடிக்கப்படுவதன் காரணம் விசாரணைகளின்றி விரைவாகத் தண்டனைகள நிறைவேற்றப்படுவதுதான். நீ சொல்வதும் உண்மைதான். ஒரு தனி மனிதனுக்கு உணவில்லை எனில் செகத்தினை அழித்திடுவோம் என்று பாரதி பாடியதும் இதனால்தான். ஒவ்வொரு மனிதனினதும் தனிப்பட்ட உரிமைகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும். பேச்சுரிமை, எழுத்துரிமை உட்படச் சகல உரிமைகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும். போராட்டச் சூழலில் நீண்ட விசாரணைகளை எதிர்பார்க்க முடியாதுதான். இருந்தாலும் மரணதண்டனைகள் விடயத்தில் இயக்கங்கள் மிகுந்த கவனமெடுக்க வேண்டும். இயக்கரீதியாக, சரியான வழியில், பிரச்சினை அணுகப்படவேண்டும். தண்டனைகளை நிறைவேற்றுவதில் அதிக அவசரம் காட்டக் கூடாது. இயக்கங்கள் தங்களது இயக்க விதிகளை, யாப்புகளை மறுசீரமைக்க வேண்டும். மனித உரிமைகளுக்கு மதிப்பளிப்பதில் முன்னிற்க வேண்டும். அதே சமயம் ஒற்றுமையற்று சிதைந்திருக்கும் எம் மக்களுக்கிடையே , இயக்கங்களுக்கிடையே ஒற்றுமை ஏற்பட வேண்டும். நடந்தவற்றைக் கெட்ட கனவாக மறந்துவிட்டு , புதிய பாதையில் இனியாவது நடைபோட வேண்டும். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். இந்தத் தை என்றாலும் நமக்கு நல்லதொரு வழியைக் காட்டட்டும்." (மண்ணின் குரல்; பக்கம் 220)

மேற்படி நாவல்கள் எழுதப்பட்ட காலத்தில் எனக்குத் தெரிந்து யாருமே இவ்விதம் இயக்க உள்முரண்பாடுகளை, இயக்க முரண்பாடுகளை, அப்பாவி மக்கள் மீதான படுகொலைகள், விபச்சாரம், களவு போன்ற வயிற்றுக்காகத் தவறிழைத்தவர்கள் சீர்திருத்தப்படுவதற்குப் பதிலாக, அவ்வாறு அவர்களை வாழ நிர்ப்பந்தித்த சமுதாயத்தைத் திருத்துவதற்குப் பதிலாக, பாதிக்கப்பட்ட அந்த மக்களுக்கே தண்டனை கொடுத்த செய்கையினைக் கண்டித்து நாவல்கள் படைத்திருக்கின்றார்களா? எம் மக்களின் தேசிய விடுதலையுடன் அவர்களது சமுதாயப் பிரச்சினைகளையும் தீர்க்கப் போகின்றோமென்று கூறிய அமைப்புகள், அத்தகைய அமைப்பின் விளைவாக உருவானவர்களுக்குத் தண்டனை அதுவும் மரணதண்டணை கொடுத்ததை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர்களை அவ்விதம் வாழ நிர்பந்தித்த சமுதாய அமைப்பினைத் திருத்துவதன் மூலம்தான் அத்தகைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியுமென்பதென் நிலைப்பாடு. அதை விட்டு விட்டு, வறுமையின் காரணமாக அவ்விதம் வாழ்ந்த மக்களுக்குத் தண்டணை கொடுத்த செயல தவறானதென்பதென் கருத்து. ஆயினும் செழியன் போன்ற முன்னாள் போராளிகள் சிலர் தமது அனுபவங்களைப் பதிவு செய்திருக்கின்றார்கள்? ஆனால் படைப்பாளிகள் யாராவது இவ்விதம் புனைகதைகளைப் படைத்திருக்கின்றார்களா? மேற்படி நாவல்களெல்லாம் 90களின் ஆரம்ப காலகட்டத்தில் எழுதப்பட்டனவென்பதை நினைவில் வைப்பதும் நல்லதே. அக்காலகட்டச் சூழலின் வரலாற்றுக் கடமை கருதி, கருத்துக்கு முக்கியத்துவம் கொடுத்துப் படைக்கப்பட்ட நாவல்களவை. அவை கூறும் பொருளின் அடிப்படையில் மேற்படி நாவல்களுக்கும் முக்கியத்துவமுண்டு என்று நான் கருதுகின்றேன்.

இவை தவிர 'அமெரிக்கா' என்றொரு சிறுநாவலும் தாயகம் சஞ்சிகையில் தொடராக வெளிவந்தது. பின்னர் மேலும் சிறுகதைகளையும் உள்ளடக்கி, தமிழகத்தில் ஸ்நேகா பதிப்பக வெளியீடாக 'அமெரிக்கா' என்னும் பெயரில் தொகுப்பாக வெளிவந்தது. இது பற்றிப் பத்திரிகைகள், சஞ்சிகைகள் சிலவற்றில் (சரிநிகர், புதியபாதை) விமர்சனங்கள் வெளியாகியிருந்தன. மேற்படி 'அமெரிக்கா' அமெரிக்காவிலுள்ள தடுப்புமுகாம்களில் வாடும் அகதிகள் பற்றியது. என் சொந்த அனுபவத்தின் விளைவான பதிவு. பின்னர் 'அமெரிக்கா II ' என்னுமொரு இன்னுமொரு விரிவான நாவல் திண்ணை மற்றும் பதிவுகள் இணைய இதழ்களில் தொடராக வெளிவந்தது. நியூயார்க் மாநகரத்தில் ஈழத்தமிழ அகதியொருவனின் அனுபவங்களை விபரிப்பது. இன்னும் நூலுருப் பெறவில்லை. கூறும் பொருளிலும், கூறும் முறையிலும், பாத்திரப் படைப்பிலும் என் நாவல்களில் முக்கியமானதொன்றாக இதனை நான் கருதுகின்றேன். இந்நாவலில் வரும் மாந்தர் தொடக்கம் அனுபவங்கள் அனைத்துமே ஏனைய புலம்பெயர் படைப்புகளிலிருந்து சிறிது வேறுபட்டு வாசிப்பவர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தினைத் தரக்கூடுமென்று நான் எண்ணுகின்றேன். இந்நாவல் நூலுருப் பெறும்போது மேலும் பலரது கவனத்தைக் கவரக் கூடும்.

இவ்விதமாக எனது நாவல்கள் எல்லாவற்றிலுமே சமகாலப் பிரச்சினைகளின் தாக்கங்கள் என் அனுபவங்களினடிப்படையில் மலிந்து கிடக்கும். அதே சமயம் மேற்படி நாவல்களிலெல்லாம் இருப்பு பற்றிய என் கேள்விகளும், இயற்கையின் மீதான் என் ஆழ்ந்த காதலும் இழையோடிக் கிடப்பதை வாசிப்பவர்கள் அறிந்து கொள்ளலாம். மேற்படி நாவல்களைத் தவிர இணைய இதழ்களில் வெளியான பல சிறுகதைகள் புலம்பெயர்ந்த என் அனுபவத்தின் விளைவான உருவானவை. கவிதைகளும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் எழுதியிருக்கின்றேன். இருப்பு பற்றிய என் கேள்விகளைக் கருப்பொருளாகக் கொண்டு அதிக எண்ணிக்கையில் எழுதியுள்ளேன். இதே போல் கட்டுரைகள் பலவும் பதிவுகள் இணைய இதழில் பத்தி எழுத்துகளும் (ஒரு சில புனைபெயர்களில்) சமகால சமூக, அரசியல் மற்றும் இலக்கிய நிகழ்வுகள், விடயங்களைப் பற்றி எழுதியுள்ளேன். ஆகச் சுருக்கமாகக் கூறின், என் படைப்புகள் எதுவாகவிருந்தாலும் (கதையோ, கட்டுரையோ அல்லது கவிதையோ எதுவாகவிருந்தாலும்) அவற்றில் நிச்சயமாக என் மண்ணின், புலம்பெயர்ந்து வாழும் சூழலின் அனுபவப் பதிவுகள் நிச்சயமாக இழையோடியிருக்கும். அதே சமயம் இருப்பு பற்றிய என் தேடலின் விளைவான சிந்தனைகளும் அவற்றில் நிச்சயம் விரவியே கிடக்கும். [மேற்படி 'மண்ணின் குரல்' தொகுதியின் பிரதிகள் சில என்னிடமுள்ளன. வாங்க விரும்புவர்கள் ngiri2704@rogers.com என்னும் எனது மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள். விலை, தபாற் செலவு மற்றும அனுப்ப வேண்டிய முகவரி போன்ற விடயங்களைத் தருகிறேன்.)


ngiri704@rogers.com

Monday, June 22, 2009

நகர மாந்தரும், நகர் பற்றிய அவர்தம் மனப்பிம்பங்களும், பேராசிரியர் 'கெவின் லிஞ்ச்' இன் நகரொன்றின் பிம்பக்' கோட்பாடு பற்றிய புரிதலும்! - வ.ந. கிரிதரன் -

நகர மாந்தரின் நகர் பற்றிய மனப்பிம்பங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை. ஒரு பிரதியொன்று எவ்விதம் வாசகனொருவரின் அறிவு, அனுபவம், புரியும் தன்மை போன்ற பல்வேறு காரணிகளால் நிர்ணயிக்கப்படுகின்றனவோ அவ்விதமே நகர மாந்தரின் நகர் பற்றிய மனப்பிம்பங்களையும் பல்வேறு காரணிகள் தீர்மானிக்கின்றன. நகர மாந்தரின் நகர் பற்றிய உளப்பதிவுகள் அவர்களது அந்நகரினுடான அனுபவங்கள். அதன் விளைவாக உருவான நினைவுகள், அந்நகரிலுள்ள கட்டடங்கள். முக்கியமான இடங்கள், அங்கு வாழும் ஏனைய மக்கள், அங்கு நிகழும் பலவேறு விதமான செயற்பாடுகள். நகரின் முக்கியமான அடையாளங்களாகத் திகழும் சின்னங்கள்,... ... என இவை போன்ற பல காரணிகளின் விளைவாக உருவாகுகின்றன. நகர அமைப்பு வல்லுநர்கள் நகர்களைப் புனர் நிர்மாணம் செயகையில் அல்லது புதியதொரு நகரமொன்றினை நிர்மாணித்திடும்போது அங்கு வாழும் மாந்தரின் மேற்படி மனப்பிம்பங்கள் அல்லது பதிவுகள் பற்றிய போதிய அறிவினைப் பெற்றிருப்பது அவர்களது பணிக்கு மிகவும் இன்றியமையாதது மட்டுமல்ல பயனுள்ளதுமாகும். இவ்விதமாக நகர மாந்தரின் அவர் வாழும் நகர் பற்றிய மனப்பிம்பங்களை மையமாக வைத்து அந்நகரினை அறிவதற்கு இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் முயனறவர்தான் பேராசிரியர் கெவின் லிஞ்ச் Professor Kevin Lynch).

நகரொன்றின் பெளதிக யதார்த்தத்திலிருந்து எவ்விதமான மனப்பிம்பங்களை அந்நகரத்து மாந்தர் உள்வாங்கிக் கொள்கிறார்கள் என்பது பற்றிய ஆய்வொன்றினை நகர மாந்தர்கள் பலருடனான நேர்காணல்கள் பலவற்றின் மூலம் கண்டறிந்த அவர் அவற்றின் பெறுபேறுகளை அடிப்படையாக வைத்து நகரின் பிம்பம்' (The Image Of the City) என்றொரு நல்லதொரு சிந்தைக்கு விருந்தளிக்கும், மேலும் அதனை விரிவடையவைக்கும் ஆய்வு நூலொன்றினை வெளியிட்டிருந்தார். மேற்படி அவரது ஆய்வானது நகர மாந்தரின் மேற்படி நகர் பற்றிய உளப்பதிவுகள் பற்றிய முக்கியமான பல நவீன கருதுகோள்களுக்கு அடிப்படையாக விளங்குகின்றது. மேலும் நகரொன்றின் உருவம் பற்றிய , அங்கு காணப்படும் கட்டடச் சூழல் அல்லது கட்டடக்கலை எவ்விதம் மேற்படி அந்நகர மாந்தரின் நகர் பற்றிய பிம்பத்திற்குக் காரணமாயிருக்கின்றது பற்றிய புரிதலுக்கு மிகவும் பங்களிப்புச் செய்துள்ளது என்று கூறினால் மிகையான கூற்றல்ல.

இவ்விதமான நகரத்து மாந்தரின் அந்நகர் அவர்களது மனங்களில் ஏற்படுத்திவிடும் மனப்பிம்பங்களை நிர்ணயிக்கும் முக்கிய ஆதாரப்பகுதிகளாக ஐந்து விடயங்களை பேராசிரியர் கெவின் லிஞ்ச் அவர்கள் தனது ஆய்வுகள் மூலம் இனங்கண்டார். அவையாவன:

1. நகரின் மாந்தரின் நடமாட்டத்திற்கு உதவும் பல்வகைப் பாதைகள் (Pathways)
2. நகரின் பல்வேறு தனமையினைப் பிரதிபலிக்கும் பிரதேசங்கள் அல்லது பகுதிகள் (Districs)
3. நகரின் பல்வேறு பகுதிகளைப் பிரிக்கும் ஓரங்கள் (Edges)
4. நகரின் முக்கிய அடையாளங்களாக விளங்கும் கட்டடங்கள் போன்ற நில அடையாளச் சின்னங்கள் (Lanadmarks)
5. நகரின் பல்வேறு செயற்பாடுகளின் மையப் புள்ளிகளாக விளங்கும் நகரின் பகுதிகள் ( Nodes)

நகர மாந்தரொருவரின் அந்நகர் பற்றிய அவரது மனப்பிம்பங்களை முக்கிய ஆதாரப்பகுதிகளாக விளங்குபவை மேலுள்ள ஐந்து பகுதிகளுமே என்பதைப் பேராசிரியர் லிஞ்சின் மேற்படி 'நகரின் பிம்பம' என்னும் ஆய்வு புலப்படுத்தும். இனி இன்னும் சிறிது விரிவாக மேற்படி ஐந்து ஆதாரப் பகுதிகள் பற்றியும் பார்ப்போம்.

1. பாதைகள் (Pathways)
நகரொன்றில் அந்நகரத்து மாந்தரின் நடமாட்டத்துக்குதவும் வகையில் பல்வேறு பாதைகள் பிரதான கடுகதிப் பாதைகளிலிருந்து, புகையிரதப் பாதைகள், கால்வாய்கள் தொடக்கம் குச்சொழுங்கை வரையிலெனப் பல்வேறு பாதைகள் காணப்படும். மேற்படி பேராசிரியர் லிஞ்சின் ஆய்வின்படி பாதைகள் நகர மாந்தரின் நகர் பற்றிய் பிம்பங்களை உருவாக்குவதில் முக்கியமான பங்கினை வகிப்பதை அறிய முடிந்தது. பல்வேறு காரணங்களுக்காக நகரத்து மாந்தர் மற்றும் அந்நகருக்கு வருகை தரும் பயணிகள் ஆகியோர் மேற்படி பாதைகளினூடு பயணிப்பர். அவ்விதமான பயணங்களின்போது மேற்படி பாதைகளினூடு பயணிக்கும் அனுபவமானது மேற்படி பயணிகளுக்கு, நகர மாந்தருக்குப்ப் பல்வேறு வகையிலான ம்னப்பதிவுகளை,மனக்கிளர்ச்சிகளை உருவாக்குகின்றன. இவையெல்லாம் சேர்ந்தே அவர்களது அந்நகர் பற்றிய மனப்பிம்பங்களை உருவாக்குகின்றன. ( யாழ் இந்துக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபொழுது மாலை நேரங்களில் துவிச்சக்கர வண்டியில் வீடு நோக்கிக் கல்லுண்டாய் வெளியை ஊடறுத்துச் செல்லும் பிரதான வீதியினூடு செல்வதை இச்சமயத்தில் எண்ணிப் பார்க்கின்றேன். ஓட்டு மடத்தில் தொடங்கி காரைநகர் நோக்கிச் செல்லும் பிரதான பாதையது. ஆரம்பத்தில் முஸ்லீம் மக்களின் குடியிருப்பான பொம்மை வெளி தாண்டினால் அடுத்து விரிவது காக்கைதீவுக் கடற்புறம். மீன் சந்தையுடன் கூடிய முக்கியமான் யாழ்நகரின் நெய்தல் நிலப்பகுதி அது. ஒரு புறம் ஆனைக்கோட்டை மறுபுறம் காக்கைதீவுக் கடற்பகுதி. இதனைத் தாண்டினால் விரிவது நவாலியின் புகழ்பெற்ற மண்மேடுகளுடன் கூடிய மருதநிலப் பகுதி. மேற்குபுறம் புல்வெளியுடன் கூடிய கடல்சிறிது உள்வாங்கிய காக்கைதீவுக் கடற்பிரதேசம். மருதமும் நெய்தலும் இணையும் அற்புதம். அதனைத் தாண்டினால் கல்லுண்டாய் வெளியும் , உப்பளமும். மேலும் நீளும்பாதை வடக்கு அராலி, தெற்கு அராலியெனப் பிரிந்து மீண்டும் வட்டுக்கோட்டையில் இணைந்து ஒன்று காரைநகர் நோக்கியும் அடுத்தது சித்தன்கேணி நோக்கியும் செல்லும். வ்டக்கு அராலி/ தெற்கு அராலியெனப் பாதை பிரிவதற்கு முன்னர் யாழ்ப்பாணத்தின் புகழ்பெற்ற வழுக்கியாறு அராலிக் கடலுடன் கலப்பதற்காகக் கட்டப்பட்டுள்ள சிறிய பாலமொன்றைக் காணலாம். மேறப்டி வழுக்கியாறு பற்றிய பிரபல ஈழத்து எழுத்தாளர் செங்கை ஆழியானின் சிரித்திரன் சஞ்சிகையில் வெளிவந்த 'நடந்தாய் வாழி வழுக்கியாறு' என்னும் பயணக்கட்டுரைத் தொடர் வயிறு குலுங்க வைக்கும் நல்லதொரு பயணத் தொடராக அப்பருவத்தில் எனக்குப் பட்டதும் நினைவுக்கு வருகிறது. மேற்படி பாதையானது என் இளம் பிராயத்திருப்புடன் பின்னிப் பிணைந்துள்ள பாதைகளிலொன்று. என் பால்யகாலம் வன்னி மண்ணில் கழிந்ததென்றால் அதன்பின்னான என் பதின்ம பருவம் யாழ் மண்ணிலும் அதன் சுற்றாடலிலும் கழிந்திருந்தது. அவ்வயதில் மேற்படி கல்லுண்டாய் வெளியினூடு காரைநகர் நோக்கி நீண்டிருக்கும் பாதையானது என் மனதிலேற்படுத்திய பதிவுகள் , பிம்பங்கள் பற்பல. அந்தியில் அவ்வழியே பயணித்தலோரினிய அனுபவம். ஆண்டின் பல்வேறு பருவங்களுக்கேற்ப அப்பயணத்தின் அனுபவங்களும் பலவகையின. அதிகாலையில் துவிச்சக்கர வண்டிகளில் நகர் நோக்கிப் படையெடுக்கும் தொழிலாளர்கள் அந்திசாயும் நேரங்களில் தத்தமது கிராமங்களை நோக்கி மீள் படையெடுப்பர். அதி காலைகளில் வழுக்கியாறு கடலுடன் கலக்குமிடத்தில் அமைந்துள்ள பாலத்தினடியில் மீனவர்கள் இறால் பிடித்துக் கொண்டிருப்பார்கள். இன்னும் சில பருவங்களில் காக்கைதீவுக்கும், கல்லுண்டாய் உப்பளத்திற்குமிடையிலான பாதையின் ஓரங்களில் மீனவர்கள் பிடித்த கடலட்டைகளை அவித்துக் காயப்போட்டிருப்பார்கள். அப்பிராந்தியமெங்கும் கடலட்டைகளின் அவியும் மணமும், உலரும் மணமும் நிறைந்திருக்கும். கடலட்டைகளை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்வதில் அப்பகுதி கடற்றொழிலாளர்களின் பங்கும் முக்கியமானது. காலை நேரங்களில் காக்கைதீவுக் கடற்கரையில் அமைந்திருந்த மீன்சந்தை ஒரே ஆரவாரமாக விளங்கும். கடற்பறவைகளால் நிறைந்திருக்கும். அந்திக் கருக்கிருளில் கட்டுமரங்களில் க்டலில் மீன்பிடிப்பதற்காகப் பயணத்தைத் தொடங்கியிருப்பர் கடறொழிலாளர்கள். தொலைவில் சற்றுமுன்னர்தான் கடலுக்குள் மூழ்கியிருந்த கதிரவனால் சிவந்து சிவந்து கிடந்த வானம் மேலும் சிவந்திருக்கும். இவ்விதமாக அப்பாதையானது என்னிடத்திலேற்படுத்திய மனப்பதிவுகள், பிம்பங்கள் அழியாத கோலங்களாக இன்றுமென் சிந்தையின் ஆழத்திலுள்ளனவென்றால் பாதைகள் எவ்விதம் நகர மாந்தரின் மனப்பிம்பங்களை உருவாக்குவதில் பங்கு வகிக்கின்றனவென்பதை வாசகர்கள் புரிந்து கொள்ளலாம்.)

2. பிரதேசங்கள் அல்லது பகுதிகள் (Districts)
நகரானது பலவேறு அம்சங்களுடன் கூடிய சுற்றுப்புறங்களையும் (Component neighbourhoods) அல்லது பிரதேசங்களையும் (Districts) உள்ளடக்கிக் காணப்படும். உதாரணமாக உள்நகர் (Downtown) , புறநகர் (uptown), அதன் மையப்பகுதி, வர்த்தக மையப் பகுதி, தொழிற்சாலைகளை உள்ளடக்கிய பகுதிகள், பல்கலைக்கழகப் பிரதேசங்கள் மற்றும் 'டொராண்டோ' போன்ற பல்சமூக மக்கள் வாழும் நகர்களில் அவ்வினங்கள் அதிகமாக செறிந்து வாழும் அல்லது வர்த்தகம் செய்யும் பிரதேசங்கள் எனப் பல்வேறு தனித்த அமசங்களைப் பிரதிபலிக்கும் பிரதேசங்களை அல்லது சுற்றுப்புறங்களைக் காணமுடியும். சில சமயங்களில் மேற்படிப் பிரதேசங்கள் தமக்கேயுரிய தனித்த அடையாளங்களுடன் ('டொராண்டோ'வின் நிதிமையமான உள்நகர்ப் பகுதி) விளங்கும். இன்னும் சில சமயங்களிலோ தனித்த சிறப்பியல்புகளற்று சிறப்பியல்புகளின் கலவையாகவும் (மான்ஹட்டனின் நடுநகர்ப் பிரதேசம் போன்று (midtown) விளங்குவதுண்டு. இவையெல்லாம் நகர மாந்தரொருவரின் அந்நகர் பற்றிய மனப்பிம்பங்களை உருவாக்குவதில் முக்கியமான பங்களிப்பை நல்குகின்றனவெனலாம்.

3. ஓரங்கள் (Edges)
ஓரங்களை நகரின் பிரதேசங்களைப் பிரிக்கும் எல்லைகளாகக் குறிப்பிடலாம். இவை பாதைகளைப் போல் முக்கியமானவையாக இல்லாதபோதும் நகர் மாந்தரொருவரின் நகர் பற்றிய மனப்பிம்பங்களை உருவாக்குவதில் முக்கிய பங்கினை வகிப்பவை. பெரும் வாவியினை உள்ளடக்கிய 'டொராண்டோ' போன்ற மாநகர்களைப் பொறுத்தவரையில் குளக்கரையானது நகரையும் நீரையும் பிரிக்குமோரெல்லையாக ஓரமாக விளங்குகின்றது. இவ்விதமே கடுகதிப் பாதைகளையும், மக்கள் வசிப்பிடங்களையும் பாதுகாப்பு, மற்றும் வாகன ஒலித்தொல்லை போன்றவற்றிலிருந்து பிரிப்பதற்காகக் கட்டப்பட்டுள்ள நீண்ட சுவர்களையும் ஓரங்களிலொன்றாகக் குறிப்பிடலாம். (சீனாவின் நீண்ட சுவரினயும் இங்கு நினைவு கூரலாம்). முதலாவதில் ஓரமானது நீரையும் நிலத்தையும் பிரிக்கும் வகையில் அமைந்திருந்தாலும், அநத ஓரமானது நிலத்திலிருந்து நீருக்கோ அல்லது நீரிலிருந்து நிலத்திற்கோ மாந்தரின் நடமாட்டத்தைத் தடுப்பதில்லை. ஆயினும் இரண்டாவது உதாரணத்தில் சுவரானது ஓரெல்லையாக விளங்கி மக்கள் அதனூடு ஊடறுத்துச் செல்வதைத் தடுக்கிறது. இன்னும் சில சமயங்களில் ஓரமொன்றினைக் கண்டறிவது கடினமானது. உதாரணமாக 'டொராண்டோ'வின் கிழக்கில் அமைந்திருக்கின்ற சீனந்கர்ப் பிரதேசமானது அதற்கணமையில் அமைந்துள்ள 'குட்டி இந்தியா' பிரதேசத்துடன் படிப்படியாக ஆடையொன்றின் இரு பகுதிகள் இணைவதைப் போல் இணைந்து கலந்து விடுவதைக் காணலாம்.

4. நில அடையாளச் சின்னங்கள் (Landmarks)
அடையாளச் சின்னங்களும் நகர் பற்றிய பிமபங்களை நகர மாந்தரிடையே உருவாக்குவதில் முக்கியபங்காற்றுகின்றன. இத்தகைய அடையாளச் சின்னங்கள் தனித்து, உயர்ந்து தொலைவிலிருந்தும் அந்நகரினைப் பிரதிநிதித்துவம் செய்யும் நியூயார்க்கின் 'எம்பயர் ஸ்டேட்' கட்டடம் அல்லது 9-11இல் அழிந்த இணைக் கோபுரங்களான 'உலக வர்த்தக மையக்' கட்டங்களைபோன்று வான் முட்டும் கட்டடங்களாகவோ அல்லது 'டொராண்டோ'வின் புகழ்பெற்ற 'சி.என்' கோபுரம் (C.N.Tower) போன்ற கோபுரங்களாகவோ இருக்கலாம். தஞ்சையின் புகழ்பெற்ற தஞ்சைப்பெரிய கோயில் , பாரிஸின் சாயும் கோபுரம் மற்றும் குதுப்மினார் போன்ற கட்டடங்களையும் இவ்விதம் குறிப்பிடலாம். அல்லது குறிப்பிட்ட பிரதேசங்களுக்கு மட்டுமே புலப்படக்கூடிய பூங்காவிலுள்ள கட்டடமாகவோ அல்லது நீரூற்றாகவோ அல்லது சிலையாகவோ கூட இருக்கலாம். அண்ணா சமாதி, எம்.ஜி.ஆர் சமாதி, புகழ்பெற்ற அரண்மனைகள், ஆலயங்கள், தாதுகோபங்கள போன்ற கட்டடங்களை இதற்குதாரணங்களாகக் குறிப்பிடலாம்.

5. மையப்புள்ளிகள் ( Nodes)
இவையும் மேற்படி அடையாள சின்னங்கலைப் போன்று விளங்கினாலும் இவ்விதமான மையப் புள்ளிகள் வேறுபடுவது மற்றும் முக்கியத்துவம் பெறுவது அப்புள்ளிகளில் நடைபெறக்கூடிய செயற்பாடுகளிலிருந்துதான். நகரில் காணப்படும் பிரதானமான சதுக்கங்கள், பாதைகள் சந்திக்கும் சந்திகள் போன்றவற்றை இதற்குதாரணங்களாகக் குறிப்பிடலாம். நியூயார்க்கின் 'டைம்ஸ்' சதுக்கம் , 'டொராண்டோவின்' புதிய நகர மணடபமும் அதனுடன் கூடிய 'நேதன் பிலிப்' சதுக்கமும், மற்றும் புதிதாக அண்மையில் நிர்மாணிக்கப்பட்ட 'டன்டாஸ்' சதுக்கமும் அங்கு நடைபெறும் செயற்பாடுகள் காரணமாக நகரின் முக்கிய மையப்புள்ளிகளாக இருக்கும் அதே சமயம் முக்கியமான நில அடையாளச் சின்னங்களாகவும் விளங்குகின்றன. மேலும் 'டைம்ஸ்' சதுக்கம் அப்ப்குதியில் சிரப்பியல்பு காரணமாக அந்நகரின் முக்கியமான பிரதேசங்களீலொன்றாக (District) விளங்குவதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இவ்விதமாக மேற்படி ஐந்து ஆதாரப்பகுதிகளும் எவ்விதம் நகர மாந்தரின் நகர் பற்றிய மனப்பிம்பங்களை உருவாக்குகின்றன என்பதை ஆராயும் நகரின் விம்பம் பற்றிய பேராசிரியர் கெவின் லிஞ்சின் நகர அமைப்பு பற்றிய கோட்பாடானது நகர அமைப்புத் துறையின் முக்கியமானதொரு கோட்பாடுகளிலொன்றாக விளங்குகின்றது. நகரின் புனரமைப்புத் திட்டங்களில், அல்லது நிர்மாணத்திட்டங்களில் மேற்படி கோட்பாடு மிகவும் பயன் மிகவும் முக்கியமானதே.

[இச்சமயத்தில் மொறட்டுவைப் ப்லகலைக் கழகத்தில் கட்டடக்கலை முடித்தபின்னர் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் மற்றும் நகர அமைப்பு அதிகார சபை ஆகியவற்றில் பணியாற்றிய காலங்களில் கொழும்பு மாநகர், புதிய பாராளுமன்றம் போன்ற பல நில அமைப்பு (Landscape) , நகர் அமைப்புத் (Town Planning) திட்டங்களில் பணியாற்றிய நினைவுகள் மீளெழுகின்றன. அவற்றில் முக்கியமானதொன்று மேற்படி பேராசிரியர் லிஞ்சின் நகர் விம்பக் கோட்பாட்டின் அடிப்படையில் நகர் அமைப்பு வல்லுநரான டிக்சன், கட்டடக்கலை/ நகர் அமைப்பு வல்லுநரான சிவபாலன் (இவர் பின்னர் சிங்கப்பூரில் பணியாற்றியபோது மரணித்து விட்டார்) , கட்டடக்க்லைஞரான வைரமுத்து அருட்செல்வன் ஆகியோருடன் இணைந்து மேற்கொண்ட கொழும்பு மாநகரின் பிம்பம் பற்றிய ஆய்வு. அது பலரின் பாராட்டுதல்களைப் பெற்றதும் நினைவுக்கு வருகின்றது).

ngiri2704@rogers.com
20/06/2009:

Friday, June 19, 2009

'உலகக் கிராமத்து' மக்களே! - வ.ந.கிரிதரன் -

அங்கே
எனது மண்ணில்
மக்கள் மெளனித்திருக்கின்றார்கள்.
மெளனமாக்கப்பட்டிருக்கின்றார்கள்.
இரவும், பகலுமென
ஓடியோடி அவர்கள் உருக்குலைந்து விட்டார்கள்.
நிலப்பொந்துகளுக்குள் வாழும் முயல்களுக்கோ
அல்லது மண்ணெலிகளுக்கோ கிடைக்கும்
தூக்கத்தைக் கூட , நிம்மதியைக் கூட
அவர்கள் இழந்து விட்டிருந்தார்கள்.
சிட்டுக் குருவியொன்றுக்கிருக்கக் கூடிய
குறுகிய மட்டுப்படுத்தப்பட்ட சுதந்திரத்தைக் கூட
அவர்களால் அனுபவிக்க முடியாதவாறு
அவர்கள் நிலத்துக்கடியில் புதைந்து கிடந்தார்கள்.
இப்பொழுது வேலிகளுக்குள் வதைபட்டுக்
கிடக்கின்றார்கள்?

குண்டு மழையில் மானுட நாகரிகத்தின்
அற்புதங்களையெல்லாம், பெருமைகளையெல்லாம்
அவர்கள் இழந்து விட்டிருந்தபோது.
மெளனித்திருந்தது அவர்கள் மட்டுமா?
அவர்களைச் சுற்றியிருந்தவர்களும்தான்.
நாளும், பொழுதும், கணமும்
அவர்கள் சீர்குலைக்கப்பட்டபோது
மெளனித்திருந்தது அவர்கள் மட்டுமா?
அவர்களைச் சுற்றியிருந்தவர்களும்தான்.
எல்லோரும் மெளனித்திருந்தார்கள்.
ஓரிருப்புக்குரிய கெளரவத்தை, மாண்பினை,
மகிழ்ச்சியினையெல்லாம்
அவர்கள் இழந்து, தெருத்தெருவாக,
காடு மேடு, நீர்நிலைகளினூடாகவெல்லாம்
ஓடிக்கொண்டிருந்த போதெல்லாம்
மெளனித்திருந்தது அவர்கள் மட்டுமா?
அவர்களைச் சுற்றியிருந்தவர்களும்தான்.

அங்கங்கள் சிதைக்கப்பட்டன; உயிர்கள்
வதைக்கப்பட்டன; கற்பனைகள், கனவுகள்
நொருக்கப்பட்டன; இருந்தும் அனைவரும்
திரைப்படமொன்றினைப் பார்ப்பதுபோல்
மெளனித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
அனைவருக்கும் புரிந்திருந்ததா?
சரி எது? பிழை எது? என்பதெல்லாம்.
இருந்தும் அவர்களை நகர விடாமல்
எவை கட்டிப் போட்டிருந்தன?

கிராமங்களை அன்பினூற்றென்று சொன்ன
புண்ணியமான மானுடரே?
'உலகக் கிராமங்களில்; ஏன் அவை
சிதைந்து போயின என்பதற்கான
காரணங்களைக் கூறுவீரா?
எல்லைகளற்ற , குறுங் கிராமத்து
மக்களே! எல்லைகளால்.
இன்னும் எத்தனை காலம்தான்
நீங்கள் குறுகிக் கிடக்கப் போகின்றீர்கள்?
இன்னும் எததனை நாட்களுக்குத்தான்
மெளனித்திருக்கப் போகின்றீர்கள்?
இன்னும் எததனை நாட்களுக்குத்தான்
மெளனித்திருக்கப் போகின்றோம்?

ngiri2704@rogers.com

Monday, June 08, 2009

அறிஞர் அ.ந.கந்தசாமியின் பன்முக ஆளுமை!

முல்லை அமுதனின் காற்றுவெளி அமைப்பினால் வெளியிடப்பட்ட 'இலக்கியப் பூக்கள் ' நூலில் வெளியான கட்டுரை. நூலில் வெளியான கட்டுரையின் மூல வடிவம்.

அறிஞர் அ.ந.கந்தசாமியின் பன்முக ஆளுமை!

- வ.ந.கிரிதரன் -

அறிஞர் அ.ந.கந்தசாமி பல்துறை விற்பன்னராகவிருந்தவர். இலக்கியத்தின் சகல பிரிவுகளிலும் சிறுகதை, நாவல்,நாடகம், விமர்சனம், மொழிபெயர்ப்பு, கவிதை எனச் சகல பிரிவுகளிலும் கொடி கட்டிப் பறந்தவர். ஈழத்து முற்போக்கிலக்கியத்தின் முன்னோடிகளில் முக்கியமானவராகக் கருதப் படுபவர். தனக்குப் பின்னால் ஓர் எழுத்தாளப் பரம்பரையையே உருவாக்கிச் சென்றவர். செயல் வீரர் கூட. நாற்பதுகளில் வில்லூன்றி மயான சாதிப் படுகொலை பற்றி முதற்தடவையாகத் துணிச்சலுடன் குரல் கொடுத்த கவிஞன். புதுமைப் பித்தன் போன்றவர்களை மீண்டும் இனம் கண்டது போல் அ.ந.க.வையும் மீண்டும் விரிவாக இனம் காண்பது ஈழத்துத் தமிழ் இலக்கியத்திற்கு முக்கியம். தான் வாழ்ந்த மிகவும் குறுகிய காலத்தில் சமூகத்திற்காக, மொழிக்காக அ.ந.க ஆற்றிய பங்களிப்பு வியப்பிற்குரியது. அ.ந.க தான் வாழ்ந்த காலத்தில் பல இளம் படைப்பாளிகளைப் பாதித்தவர். பலர் உருவாகக் காரணமாகவிருந்தவர். ஈழத்துத் தமிழ் இலக்கிய உலகைப் பொறுத்தவரையில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் பங்களிப்பு அளப்பரியது. அவரது பன்முகப் பார்வைகளையும் வெளிக்கொணரும் வரையில் படைப்புகள் நூலுருப் பெறவேண்டிய தேவையுள்ளது. அ.ந.கவின் படைப்புகள் அனைத்தும் சேகரிக்கப்பாடு நூல்களாக வெளிவரவேண்டியது காலத்தின் கட்டாயம் மட்டுமல்ல அந்த மகத்தான எழுத்துக் கலைஞனின் தன்னலமற்ற , இலட்சிய வேட்கை மிக்க இலக்கியப்பணிக்கு நாம் செய்யும் கைம்மாறுமாகும். இதுவரையில் அவரது இரு படைப்புகள் மாத்திரமே நூலுருப் பெற்றுள்ளன. அதுவும் அவரது இறுதிக் காலத்தில் தமிழகத்தில் வெளிவந்த 'வெற்றியின் இரகசியங்கள்'. அடுத்தது 'மதமாற்றம்' மதமாற்றம் கூடத் தனிப்பட்ட ஒருவரின் நிதியுதவியின் மூலம் தேசிய கலை இலக்கியப் பேரவையின் பெயரில் வெளிவந்ததொரு நூல்.

அ.ந.கந்தசாமியின் ஆரம்ப வாழ்க்கை பற்றிய தகவல்கள்...

அ.ந.க.வின் வாழ்நாள் பாரதியின் வாழ்நாளைப் போலக் குறுகியது. பாரதி 39 வருடங்களே வாழ்ந்திருந்தார். 8-8-1924 பிறந்த அ.ந.க. 44 ஆண்டுகள் வாழ்ந்திருந்தார். பெப்ருவரி 14, 1968 அன்று மறைந்தார். அ.ந.கவின் தந்தையாரான நடராஜா யாழ் வண்ணார்பண்ணையில் வாழ்ந்திருந்தவர். சிறைச்சாலையில் வைத்திய அதிகாரியாக விளங்கியவர். தாயார் பெயர்: கெளரியம்மா. ஒரு சகோதரர்: நவரத்தினம். சகோதரி: தையல்நாயகி. நடராஜா பல சொத்துக்களின் அதிபதியாக விளங்கியவர். அ.ந.கவுக்கு ஐந்து வயதாயுள்ளபோது தந்தை இறந்து விட்டார். தாயாரும் தந்தை இறந்து 41ஆம் நாள் இறந்து விட்டார். குழந்தைகள் மூவரையும் நீதிமன்றம் சட்டரீதியான பாதுகாவலர் ஒருவர் பொறுப்பில் விட்டது. [உண்மையில் கொழும்பிலிருந்த உறவினரொருவர் மூன்று குழந்தைகளையும் தன் பாதுகாப்பில் எடுத்துச் சென்றதாகவும், அ.ந.க.வி பாட்டி நீதிமன்ற உதவியின் மூலம் தன்வசம் எடுத்துக் கொண்டதாகவும் அறியப்படுகிறது.] இந்தச் சொத்துக்கள் பல பாதுகாவலர், அதற்குப் பொறுப்பான சட்டத்தரணி ஆகியோரால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு அழிக்கப்பட்டதாக அறிகின்றோம். [ அ.ந.க. தனது கல்வியை மேலும் தொடர முடியாமல் போனதற்கு இது முக்கிய காரணம். அல்லாவிடில் அ.ந.க. நிச்சயமொரு கலாநிதியாகக் கூட வந்திருப்பார். இந்நிலையில் குறுகிய காலத்தில் அவர் நிறைய நூல்களைக் கற்று, இலக்கியத்தின் பல்வேறு துறைகளிலும் வெற்றிகரமாகக் கால் பதித்ததோடு, செயல்வீரராகவும் விளங்கியது அவரது ஆற்றலைத்தான் காட்டுகிறது. அதனால்தான் அவர் வாழ்ந்த காலத்திலேயே அறிஞர் அ.ந.கந்தசாமியென அனைவராலும் அழைக்கப்பட்டார்.] இச்சமயத்தில் ஆரம்பக் கல்வியை யாழ் இந்துக் கல்லூரியில் கற்ற அ.ந.க. சிறிதுகாலம் அளவெட்டி சென்று உறவினர் சிலருடன் வாழ்ந்து வந்தார். அளவெட்டியிலிருந்த காலத்தில் அ.ந.க. தனது கல்வியினைத் தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியில் தொடர்ந்தார். பின்னர் மீண்டும் யாழ் இந்துக் கல்லூரியில் எஸ்.எஸ்.எல்.சி கல்வி கற்று பின்னர் கொழும்பு சென்றார்.

அ.ந.க. பதினாலு வயதிலிருந்தே எழுதத் தொடங்கி விட்டார். ஈழகேசரி சிறுவர் பகுதியில் எழுத ஆரம்பித்தார். அச்சமயம் ஈழகேசரி நடத்திய பேச்சு, கதை, கட்டுரைப் போட்டிகளில் பங்குபற்றியுள்ளார். கதைப்போட்டியில் முதற்பரிசும் பெற்றுள்ளதாக அறிகின்றோம்.

மறுமலர்ச்சிக் குழுவின் உருவாக்கத்துக்குரியம் முக்கிய காரணகர்த்தாக்களில் ஒருவர் அ.ந.க.. ஏனையவர்கள்: தி.ச.வரதராசன், பஞ்சாட்சர சர்மா, நாவற்குழியூர் நடராசன். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தோற்றத்துக்கு முக்கியமானவர்களிலொருவர் அ.ந.க. அதன் சங்கக் கீதத்தை இயற்றியவரும் அவரே. மறுமலர்ச்சிக் காலகட்டம் என்னும் பொழுது 'மறுமலர்ச்சி' என்னும் சஞ்சிகையின் காலகட்டத்தை மட்டும் கருதுவது தவறு. மறுமலர்ச்சி அமைப்பினரால் வெளியிடப்பட்ட சஞ்சிகையே 'மறுமலர்ச்சி' சஞ்சிகை என்பதை நினைவில் வைத்துக் கொள்வது அவசியம். அ.ந.கந்தசாமி மறுமலர்ச்சி சஞ்சிகையில் சிறுகதைகள் எழுதாவிட்டாலும் 'மறுமலர்ச்சி' அமைப்பு உருவாவதற்குரிய முக்கிய காரணகர்த்தாக்களிலொருவர்.இந்த வகையில் அ.ந.க.வை மறுமலர்ச்சி எழுத்தாளரென்று கூறுவதில் எந்தவிதத் தவறுமில்லை.

அ.ந.க சிறிதுகாலம் கொழும்பு கறுவாக்காட்டுப் பகுதியில் மணமுடித்து வாழ்ந்திருந்ததாக அறிகின்றோம். இவரது குடும்பவாழ்க்கை நீடிக்கவில்லை. திருமணத்தில் ஏற்பட்ட ஆள்மாறாட்டமே இதற்குக் காரணம். பார்த்த பெண் ஒருத்தி. மணந்ததோ அவரது சகோதரியை. இதனால் தான் போலும் அ.ந.க.வின் பல படைப்புகளில் ஆள்மாறாட்டமுள்ள சம்பவங்கள் காணப்படுகின்றன போலும்.

சிறுவயதிலேயே வீட்டை விட்டுத் தனியாகக் கொழும்பு சென்ற அ.ந.க பட்டதாரியல்ல. ஆனால் கலாநிதிகள் தமது நூல்களை அவருக்கு அர்ப்பணிக்குமளவுக்குப் புலமை வாய்ந்தவர். கலாநிதி கைலாசபதி தனது 'ஓப்பியல் இலக்கியம்' என்னும் நூலினை அறிஞர் அ.ந.கந்தசாமிக்கு அர்ப்பணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பாரதியைப் போல் அ.ந.க.வும் தனது குறுகிய காலகட்ட வாழ்வில் சாதித்த சாதனைகள் அளப்பரியன. சிறுகதை, கவிதை, நாடகம், நாவல், மொழிபெயர்ப்பு, விமர்சனம், உளவியல், சிறுவர் இலக்கியம் என இலக்கியத்தின் பல்வேறு பிரிவுகளிலும் காத்திரமான பங்களிப்புச் செய்தவர் அ.ந.க. தமிழில் மட்டுமல்ல ஆங்கிலத்திலும் மிகுந்த புலமை வாய்ந்தவர்.

அ.ந.கந்தசாமியின் சிறுகதைகள்....

அறிஞர் அ.ந.கந்தசாமி சுமார் 60 சிறுகதைகளாவது எழுதியிருப்பாரென அறியக் கிடக்கின்றது. இவற்றில் உதவி வந்தது (பாரதி இதழ்) , வழிகாட்டி ( பாரதி இதழ்) , .இரத்த உறவு (பாரதி) , .புதுப் புனல் ( உதயம் மலரில்) , .நாயினும் கடையர் ( வீரகேசரி) , .காளிமுத்து இலங்கை வந்த கதை ( தேசாபிமானி) , .பாதாள மோகினி (சுதந்திரன்) , .நள்ளிரவு (சுதந்திரன்) , .ஐந்தாவது சந்திப்பு ( சுதந்திரன்) , .பரிசு ( சுதந்திரன்) , குருட்டு வாழ்க்கை .,.உலகப் பிரவேசம் , .ஸ்ரீதனம் , .பிக்பொக்கட் , சாகும் உரிமை , கொலைகாரன் , சாவுமணி போன்றவை பற்றிய தகவல்களையே பெற முடிந்தது. இவற்றிலும் ஒரு சிலவற்றையே பெற முடிந்தது. ஏனையவை ஆங்காங்கே பத்திரிகை, சஞ்சிகைகளில் சிதறிக் கிடக்கின்றன. இவற்றில் எத்தனை காலத்தால் அழியுண்டு போயினவோ நாமறியோம். இந்நிலையில் இயலுமானவரையில் அவை சேகரிக்கப்பட வேண்டும். ஆவணப் படுத்தப்பட வேண்டும்.

இவரது சிறுகதைகள் பற்றித் தனது 'ஈழத்துத் தமிழ்ச் சிறுகதை மணிகள்' நூலில் அண்மையில் மறைந்த எழுத்தாளர் செம்பியன் செல்வன் 'இரத்த உறவு (மறுமலர்ச்சி), நாயிலும் படையர் (வீரகேசரி), காளிமுத்து இலங்கை வந்த கதை (தேசாபிமானி) பாதாள மோகினி, நள்ளிரவு, ஐந்தாவது சந்திப்பு (சுதந்திரன்), பரிசு, குருட்டுவாழ்க்கை, உலகப்பிரவேசம், ஸ்ரீதனம், பிக்பொக்கட், சாகும் உரிமை, கொலைகாரன், உதவிவந்தது, வழிகாட்டி ஆகிய கதைகளை அ.ந.க. தனது நல்ல கதைகள் எனக் குறிப்பிட்டுள்ளார். 'இரத்தஉறவு, ஐந்தாவது சந்திப்பு, நாயிலும் கடையர், - ஆகிய கதைகள் இவருக்குப் பெரும் புகழீட்டிக் கொடுத்தன. முதலிரு கதைகளும் சிங்கள மொழியில் பெயர்க்கப்பட்டு புகழ்பெற்றவை. தேயிலைத் தோட்டவாழ்வு பற்றிய ‘நாயிலும் கடையர்’ - மிகச் சிறந்த தமிழ்ச் சிறுகதை என பல்வேறு ஈழத்து விமர்சகர்களால் பாராட்டப்பட்டதொன்று.... அத்துடன் 'வாழ்வின் உயிர் நாடியான சமூகப்பிரச்சினையான இவற்றைப் பொருளாகக் கொண்டு இவரின் கதைகள் எழுந்தன. சமூக ஆராய்வின்போது எழும் முடிவுகள் - தத்துவஞானிக்குத் தத்துவங்களாகவும், எழுத்தாளனுக்கு கதைகளாகவும் வெளியாகின்றன. உண்மையில் சிறந்த எழுத்துக்கள் வாழ்வின் நடப்பியல்பில் பிறப்பன அல்ல. அவ்வியல்புகளின் ஆராய்வின் முடிவிலேயே பிறக்கின்றன என்பதற்கு இவரின் கதைகள் சிறந்த உதாரணங்களாகும்' என்று கூறுவது கவனிக்கத் தக்கது.

அ.ந.கந்தசாமியின் கவிதைகள்..

கவீந்திரன், பண்டிதர் திருமலைராயர், கலையரசன், சிப்பி, புரூனே என்னும் புனைபெயர்களிலும் எழுதிக் குவித்தவர். மரபுக் கவிதை எழுதுவதில் மிகுந்த பாண்டித்தியம் மிக்கவர் அ.ந.க. ஆனால் இவரது மரபுக்கவிதைகள் ஏனைய பண்டிதர்களின் மரபுக்கவிதைகளைப் போன்றவையல்ல. துள்ளு தமிழ் கொஞ்சுபவை.அன்றொருநாள் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த வள்ளிப்பிள்ளை என்பவரின் பிரேதத்தை நகரசபைக்குச் சொந்தமான வில்லூன்றிமயானத்தில் புதைப்பதற்காகத் தலைமை தாங்கிச் சென்ற ஆரியகுளத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி என்பவர் சாதி வெறியர்களால் கொல்லப்பட்ட நிகழ்வை இவரது 'வில்லூன்றி மயானம்' என்னும் கவிதை சாடுகிறது. இச்சம்பவம் நிகழ்ந்த காலத்தில் ஏனைய கவிஞர்கள், எழுத்தாளர்களெல்லாம் அதனை விமர்சிக்கப் பயந்திருந்த நிலையில் அறிஞர் அ.ந.க அதனை வன்மையாகக் கண்டித்தார். தீண்டாமைக்கெதிராக வெடித்திட்ட புரட்சித்தீயாக அதனைக் கண்டார்.

'சிறுகதையைப் போலவே, கவிதைத் துறையிலும் இவர் வெற்றியீட்டினார். 'எதிர்காலச் சித்தன் பாட்டு', துறவியும் குஷ்டரோகியும், சத்திய தரிசனம் என்பன சிறந்தவை' என்பார் எழுத்தாளர் செம்பியன் செல்வன். இவரது ஆரம்பக் கவிதைகளிலொன்றான 'சிந்தனையும், மின்னொளியும்' நல்லதொரு கவிதை. 'ஈழத்துச் சாகித்திய அமைப்பின் இலக்கிய நிகழ்வொன்றில் பாடப்பட்ட இவரது ‘கடவுள் - என்சோரநாயகன்' என்ற கவிதையைக் கேட்ட, தென் புலோலியூர் மு. கணபதிப்பிள்ளை ‘ ஒரு நூற்றாண்டிற்கு ஒருமுறைதான் இப்படிப் பட்ட நல்ல கவிதை தோன்றும்’ என்று கூறியதாக அநதனி ஜீவா, செம்பியன் செல்வன் போன்ற பல எழுத்தாளர்கள் தமது கட்டுரைகளில், ஆய்வு நூல்களில் பதிவு செய்துள்ளார்கள். எழுத்தாளர் காவலூர் ராஜதுரையும் அ.ந.க.பற்றியத் தினகரனில் எழுதிய கட்டுரையில் "சாகித்திய மண்டலத்தின் 'பா ஓதல்' கவி அரங்கிலும் கந்தசாமியின் குரல் ஒலித்தது. 'கடவுள் என் சோர நாயகன்' என்னும் தலைப்பில் அவர் ஓதிய பா, அவரே குறிப்பிட்டதுபோல, தமிழுக்கே புதியது. 'நாயகனாகவும், நாயகியாகவும், குழந்தையாகவும் மற்றும் பலவாறாகவும் கடவுளைத் தமிழ்க் கவிஞர் பலர் பாவித்திருக்கின்றார்கள். ஆனால் எவராவது சோர நாயகனாகப் பாவித்ததிண்டோ?' என்றார் கந்தசாமி" என்று குறிப்பிட்டுள்ளார். இவையெல்லாம் அ.ந.க ஈழத்துக் கவிதையுலகில் தவிர்க்கப்படாத முக்கிய படைப்பாளியென்பதை உறுதி செய்யும்.

அ.ந.க.வின் நாவல், நாடக முயற்சிகள்....

அ.ந.க.வின் ஒரேயொரு நாவல் 'மனக்கண்' தினகரனில் 1967இல் தொடராக வெளிவந்து வாசகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பினைப் பெற்றது. இதன காரணமாகவே பின்னர் அ.ந.க.வின் உற்ற நண்பர்களிலொருவரான சில்லையூர் செல்வராசனால் வானொலி நாடகமாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுஸ்தாபனத்தினரால் ஒலிபரப்பப் பட்டது. பதிவுகள் இணைய இதழிலும் இந்நாவல் அண்மையில் தொடராக வெளிவந்திருந்தது. (ஆயினும் இந்நாவலிம் அத்தியாயம் முப்பதினை கண்டெடுக்க முடியவில்லை. இந்த அத்தியாயமிலாமலே பதிவுகள் இணைய இதழில் மேற்படி நாவல் வெளிவந்தது..) இந்த நாவல் முடிந்தபொழுது அ.ந.க. தனது முடிவுரையினை 'நாவல்' பற்றியதொரு நல்லதொரு ஆய்வுக்கட்டுரையாக வடித்துள்ளார். அதிலவர் மனக்கண் பற்றிய தனது எண்ணங்களையும் பகிர்ந்து கொண்டுள்ளார். இது தவிர அ.ந.க. தனது இறுதிக்காலத்தில் 'களனி வெள்ளம்' என்னுமொரு நாவலினையும் தோட்டத்தொழிலாளர்களை மையமாக வைத்து எழுதிக் கொண்டிருந்ததாகவும், அவர் இறந்ததும் எழுத்தாளர் செ.கணேசலிங்கனிடமிருந்த அப்பிரதி 1983 கலவரத்தில் எரியுண்டு போனதாகவும் அறிகின்றோம். செ.கணேசலிங்கன் அ.ந.க.வின் இறுதிக் காலத்தில் அவரைப் பராமரித்தவர்களிலொருவர். அதுபற்றித் தனது குமரன் சஞ்சிகையில் அ.ந.க.வின் இறுதிக்காலம் பற்றிய தொடர் கட்டுரையொன்றினையும் எழுதியுள்ளது குறிப்பிடத் தக்கது.

அ.ந.க. தாஜ்மகால் பற்றிய 'கடைசி ஆசை' , 'அமர வாழ்வு' போன்ற குறுநாடகங்கள் சில எழுதியுள்ளதாக அறிகின்றோம். ஆயினும் 1967இல் கொழும்பில் நான்கு தடவைகள் மேடையேற்றப்படுப் பலத்த வாதப்பிரதிவாதங்களை ஈழத்து இலக்கிய உலகில் எழுப்பிய 'மதமாற்றம்' என்னும் நாடகம் அவரது காத்திரமான பங்களிப்பினை என்றும் வெளிப்படுத்தி நிற்கும். இந்நாடகம் கலாநிதி கைலாசபதி அவர்களை மிகவும் கவர்ந்த நாடகங்களிலொன்று. அது பற்றி அவர் 'இதுவே தமிழில் இதுவரை எழுதப்பட்ட நாடகங்களில் ஆகச்சிறந்தது’ என்று குறிப்பிட்டுள்ளது இதனைப் புலப்படுத்தும். இது பற்றி அ.ந.கந்தசாமியே விமர்சனக் கட்டுரையொன்றினை இலங்கையிலிருந்து வெளிவந்த 'ராதா' என்னும் பத்திரிகையில் எழுதியுள்ளார்.

எழுத்தாளர் அந்தனி ஜீவா தினகரனில் அ.ந.க. பற்றி எழுதிய 'சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன்; என்னும் தொடரில் 'எதிர்காலத்தில் ஈழத்து நாடகத்தைப் பற்றி விமர்சகர்கள் விமர்சிக்கும் பொழுது அ.ந.க.வின் மதமாற்றத்தை மைல்கல்லாக வைத்துத் தான் கணக்கிடுவார்கள்' என்று குறிப்பிடுவது மிகையான கூற்றல்ல. மேற்படி அ.ந.க.வின் நாடகத்தைப் பற்றிய தனது 'டெய்லி மிரர்' விமர்சனத்தில் அ.ந.க.வின் நாடகத் திறமையினை ஆங்கில அறிஞர் பெர்னாட்ஷாவோடு ஒப்பிட்டு விமர்சித்திருப்பது அ.ந.க.வின் நாடகப் புலமையினை வெளிப்படுத்தும்.

அ.ந.கவும் உளவியலும்...

"வெற்றியின் இரகசியங்கள்" என்ற அ.ந.கந்தசாமியின் உளவியல் நூலினைப் பாரி பதிப்பகத்தினர் தமிழகத்தில் வெளியிட்டுள்ளனர். மேற்படி நூலில் பல்வேறு உளவியற் கோடுபாடுகள் பற்றியெல்லாம், அவற்றை வாழ்வின் வெற்றிக்கு எவ்வகையில் பாவிக்கலாம் என்பது பற்றியெல்லாம் தனக்கேயுரிய துள்ளுதமிழ் நடையில் அ.ந.க. விபரித்திருப்பார்.

அ.ந.க.வின் மொழிபெயர்ப்பு முயற்சிகள்.....

1943இலிருந்து 1953வரை இலங்கைத் தகவற் திணைக்களத்தில் மொழிபெயர்ப்பாளராகப் பணிபுரிந்தார். அச்சமயம் பல ஆங்கில நூல்களைப் பணிநிமித்தம் மொழிபெயர்த்துள்ளார். (அந்தனி ஜீவா தனது 'சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன்' என்னும் கட்டுரையில் அ.ந.க இலங்கை அரச தகவற் துறையில் 12, 13 வருடங்கள் பணியாற்றி ஓய்வு பெற்றதாகக் குறிப்பிடுவார். தகவற்துறையில் பணிபுரிந்த் காலகட்டத்தில் தகவற்துறையினால் வெளியிடப்பட்ட 'ஸ்ரீலங்கா' இதழாசிரியராகவும் அ.ந.க.வே விளங்கினார்). அதன் பின்னர் தோட்டத் தொழிலாளர் சங்கத்தில் முழுநேர ஊழியராகப் பணியாற்றினார். தனியார் நிறுவனங்களுக்கு ஆங்கில நூல்களை மொழிபெயர்க்கும் பணியினையும் செய்து வந்தார். ஒப்சேவரில் புரூவ் ரீடராகவும் சில காலம் வேலை பார்த்துள்ளார். வீரகேசரி ஆசிரியர் குழுவில் பணியாற்றியுள்ளார். கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியராக விளங்கிய அ.ந.க தேசாபிமானி பத்திரிகையின் ஆரம்பகால ஆசிரியர்களில் ஒருவர். பின்னர் அக்கட்சியிலிருந்து வெளியேறினார். அக்காலகட்டத்தில் சுதந்திரன் பத்திரிகையில் சேர்ந்து அதன் ஆசிரியராகச் சிறிது காலம் பணியாற்றினார். ஆங்கிலப் பத்திரிகையான டிரிபியூனில் சிலகாலம் பணியாற்றினார். அச்சமயம் நிறைய திருக்குறள் பற்றிய ஆங்கில ஆய்வுக் கட்டுரைகளை எழுதினார். எமிலி சோலாவின் 'நானா' (நாவல்'- , பெர்ட்ராண்ட் ரசலின் 'யூத அராபிய உறவுகள்', 'பொம்மை மாநகர்' என்னும் சீன நாவல், ஓ ஹென்றியின் சிறுகதைகள் மற்றும் பல படைப்புகளை மொழிபெயர்த்தவரிவர். இவையெல்லாம் சேகரிக்கப்பட வேண்டும். இவற்றை வைத்திருக்கும் படைப்பாளிகள் இவை பற்றிய தகவல்களை எமக்கு அறியத் தந்தால் நன்றியுடையவர்களாகவிருப்போம்.

எமிலிசோலாவின் நாவலான 'நானா'வைச் சுதந்திரனில் மொழிபெயர்த்து அ.ந.க. வெளியிட்டபோது அது பெரும் வாதப்பிரதிவாதங்களைக் கிளப்பியதை சுதந்திரனில் பிரசுரிக்கப்பட்டுள்ள கடிதங்களிலிருந்து அறியமுடிகின்றது. அ.ந.க.வின் மொழிபெயர்ப்பில் எமிலி சோலாவின் 'நானா' சுதந்திரனில் 21-10-51தொடக்கம் -28-8-1952 வரையில் மொத்தம் 19 அத்தியாயங்கள் வெளிவந்துள்ளன. முதலாவது அத்தியாயம் 'முதலிரவு' என்னும் தலைப்பிலும், பத்தொன்பதாவது அத்தியாயம் 'போலிஸ்' என்னும் தலைப்பிலும் வெளிவந்துள்ளன. பத்தொன்பதாவது அத்தியாயம் , தொடரும் அல்லது முற்றும் என்பவையின்றி, ஓசையின்றி முடிந்துள்ளதைப் பார்க்கும்போது ' நானா' நாவல் அத்துடன் முடிவு பெற்றுள்ளதா அல்லது நடுவழியில் வாதப்பிரதிவாதங்கள் காரணமாக நிறுத்தப்பட்டுள்ளதா என்பதை மூல நூல் பார்த்துத்தான், நாவலை வாசித்துப் பார்த்துத்தான் முடிவு செய்யவேண்டும். நாவல் வெளிவந்தபோது வெளிவந்த வாசகர் கடிதங்களிலிருந்து பெரும்பாலான வாசகர்களை நானா அடிமையாக்கி விட்டாளென்றுதான் தெரிகின்றது. எதிர்த்தவர்கள் கூட அ.ந.க.வின் மொழிபெயர்ப்பினைப் பெரிதும் பாராட்டியிருப்பதையும் அவதானிக்க முடிகிறது. நாவலை அ.ந.க தனக்கேயுரிய அந்தத் துள்ளுதமிழ் நடையில் மொழிபெயர்த்துள்ளார். நாவல் காரணமாகச் சுதந்திரனின் விற்பனை அதிகரித்துள்ளதையும், நானாவை வாசிப்பதில் வாசகர்களுக்கேற்பட்ட போட்டி நானா வெளிவந்த சுதந்திரனின் பக்கங்களைக் களவாடுவதில் முடிந்துள்ளதையும் அறிய முடிகிறது. . மூத்த எழுத்தாளர் டொமினிக் ஜீவா 'நானா' பற்றி சுதந்திரனுக்கு எழுதிய வாசகர் கடிதமொன்றில் '"நானா" கதை சுதந்திரனில் வெளிவரத்தொடங்கிய பின்பு மார்க்கெட்டில் சுதந்திரன் பத்திரிகைக்கே தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பலர் கடைகளுக்குச் சென்று பத்திரிகை கிடைக்காமல் வெறுங்கையுடன் திரும்பிச் சென்றுள்ளதை நான் கண்ணாரக் கண்டேன். அதனால் பலர் சேர்ந்து ஒரு பத்திரிகையை வாசிக்க வேண்டிய நிர்ப்பந்தமும் ஏறபட்டுள்ளது. தமிழாக்கம் அபாரம்' என்று தனது கருத்தினைப் பதிவு செய்திருக்கின்றார். இலங்கையிலிருந்தும் மட்டுமல்ல தமிழக்த்திலிருந்தும் பலர் 'நானா' பற்றிய தமது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கின்றார்கள். இதுபோல் பண்டிதர் திருமலைராயர் என்னும் பெயரில் அ.ந.கந்தசாமி எழுதிய 'கண்ணகிப் பாத்திரம் பெண்மையின் சிறப்பைக் காட்டுகிறதா? பெண்ணடிமையின் சிகரம் என்பதே சாலப் பொருந்தும்' என்னும் கட்டுரையும் பலத்த வாதப்பிரதிவாதங்களைக் கிளப்பி விட்டுள்ளதை அன்றைய சுதந்திரன் இதழின் பக்கங்கள் நமக்குத் தெரிவிக்கின்றன.

அ.ந.க. என்றொரு விமர்சகர்....

சிறுகதை, கவிதைகள், நாடகம், நாவலெ, மொழிபெயர்ப்பு என்றெல்லாம் எழுத்தில் கால் பதித்த அ.ந.க. பல்வேறு அரிய இலக்கியக் கட்டுரைகளை, விமர்சனக் கட்டுரைகளை, நூல் மதிப்புரைகள் மற்றும் சினிமா பற்றிய விமர்சனக் கட்டுரைகள்,தேசிய இலக்கியம், கவிதை, நாடகத் தமிழ், சிலப்பதிகாரம்' என்றெல்லாம் பல்வேறு விடயங்கள் பற்றி அ.ந.க. எழுதிய படைப்புகள் பல்வேறு சிற்றிதழ்கள், பத்திரிகைகளிலெல்லாம் வெளிவந்திருக்கின்றன. வெண்பா பற்றிய தொடர் கட்டுரைகளை வீரகேசரியில் எழுதியுள்ளதாகவும் அறிகின்றோ. இதனால் அ.ந.க.வை ஈழத்துத் தமிழ் இலக்கியத்தின் முக்கிய விமர்சகர்களிலொருவராகவும் ஆய்வாளர்கள் பலர் குறிப்பிட்டுள்ளனர்.

பண்டிதர் திருமலைராயர் என்னும் பெயரில் இவர் சுதந்திரனில் எழுதிய சிலப்பதிகாரம் பற்றிய ஆய்வுக் கட்டுரைகள் தமிழகத்திலும், இலங்கையிலும் வாதப்பிரதிவாதங்களைக் கிளப்பின. பெரியாரின் குடியரசு பத்திரிகையிலும் இவற்றில் சில மீள்பிரசுரம் செய்யப்பட்டதாக அறியப்படுகிறது.

தமிழ் மட்டுமின்றி ஆங்கிலத்திலும் மிகுந்த புலமை பெற்ற அ.ந.க. ஆங்கிலத்திலும் சிலப்பதிகாரம், திருக்குறள், கெளடில்யரின் அர்த்தசாத்திரம் பற்றியெல்லாம் விமர்சனக் கட்டுரைகளை எழுதியுள்ளார். இவை டிரிபியூன் போன்ற ஆங்கில சஞ்சிகைகளில் வெளிவந்துள்ளதாகவும் அறியப்படுகிறது.

அ.ந.க.வும் சிறுவர் இலக்கியமும்!

சிறுவர் இலக்கியத் துறையில் அ.ந.க தன் பால்ய காலத்தில் ஈழகேசரி மாணவர் மலரில் எழுதியுள்ளதாக அறிகின்றோம். இவையும் சேகரிக்கப்பட வேண்டுமெனக் கருதுகின்றோம். இது தவிர 'சங்கீதப் பிசாசு' என்றொரு சிறுவர் நாவலொன்றினையும் அ.ந.க எழுதியுள்ளார். எழுபதுகளின் இறுதியில் யாழ்ப்பாணத்திலிருந்து சிரித்திரன் ஆசிரியர் சிவஞானசுந்தரத்தால் வெளியிடப்பட்ட 'கண்மணி' என்னும் சிறுவர் சஞ்சிகையில் அந்நாவலின் சில அத்தியாயங்கள் வெளிவந்த்துள்ளன. பின்னர் 'கண்மணி' நின்று விடவே அந்நாவலும் குறையுடன் நின்று விட்டது. அந்நாவல் முதன் முதலில் 'சிரித்திரனில்' வெளிவந்ததாகச் சிரித்திரன் ஆசிரியர் அவருடனான உரையாடலொன்றின்போது குறிப்பிட்டதாகவொரு நினைவு. இது பற்றிய தேடலினையும் தொடங்க வேண்டும்.

அ.ந.க.வின் உரைநடை...

அ.ந.க என்னும் கிணறினைத் தோண்டத் தோண்டப் பெருகிவரும் இலக்கிய ஊற்று எம்மைப் பெரிதும் பிரமிக்க வைக்கின்றது. அவருக்குப் பெருமை சேர்க்குமின்னுமொரு விடயம் அவரது அந்தத் துள்ளுதமிழ் உரைநடை. இது பற்றிய செம்பியன் செல்வனின் 'ஈழத்தமிழ்ச் சிறுகதை மணிகள்' "இவரின் படைப்புக்களின் வெற்றிகளுக்கு இவரின் உரை நடையும் முக்கிய காரணம் எனலாம். எளிய வாக்கியங்களாக கருத்துக்களை வெளியிட்டார். அக் கருத்துக்களை உவமை, உருவகச் சொல்லாட்சிகளினால் அழகுபடுத்தியும், கம்பீரத் தொனியேற்றியும், எல்லாருக்கும் புரியும்வண்ணம் மக்கள் முன் வைத்தார். இப் பண்பு சிறுகதைகளில் மட்டுமல்லாது, ஆராய்ச்சிக் கட்டுரைகளிலும், கொள்கை விளக்கக் கட்டுரைகளிலும் எல்லாரையும் வசீகரிக்கும் வண்ணம் அழகழகான, ஆழமான, எளிய உவமை உருவங்களை அமைத்து எழுதுவார். சாதாரணமாக ஒரு சிறு கட்டுரையிற் கூட குறைந்தது பத்தோ பதினைந்து உவமை உருவங்களைக் காணலாம்." என்று குறிப்பிடும்.

வானொலியில் அ.ந.க....

இலங்கை வானொலியின் "கலைக்கோல" நிகழ்ச்சியிலும் மாதந்தோறும் அ.ந.க. வின் விமரிசினங்கள், "உலக நாடகாசிரியர்கள்" பற்றிய அறிமுகவுரைகள் ஒலிபரப்பப்பட்டதாகவும் அறிகின்றோம். அவரது இறுதிப் படைப்பாக 'மொழிபெயர்ப்பு நாடக'மொன்று ஒலி பரப்பப்பட்டதாகவும் அறிகின்றோம். அ.ந.க.வின் வானொலி முயற்சிகளைப் பற்றி இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்திலும் இவர் பற்றிய தேடலினைத் தொடர வேண்டிய தேவையினை இது வலியுறுத்தும்.

இவை தவிர பேச்சுக் கலையிலும் வல்லவர் அ.ந.க. அத்துடன் பல கவியரங்குகளிலும் பங்கு பற்றிய அன்றைய காலத்து இலக்கிய வானில் நட்சத்திரமாக மின்னியவர் அ.ந.க என்பதைத்தான் அவர் பற்றிய கட்டுரைகள், நூல்கள் தெரிவிக்கின்றன.

செயல் வீரர் அ.ந.க!

அ.ந.க. எழுதியதுடன் மட்டும நின்று விட்டவரல்லர். செயல் வீரரும் கூட. தான் கொண்ட கொள்கைகளுக்காக இறுதி இறுதி வரையில் போராடியவர். 'வீரகேசரியில் பணிபுரிந்தபோது, இவரின் கடமை, எழுத்துடன் மட்டும் நின்றுவிடாது. செயல் முறையிலும் தீவிரமடைந்தது. வீரகேசரியில் முதன் முதலாகத் தொழிற் சங்கம் ஒன்றினைத் தாபித்து தொழிலாளர் உரிமைக்காகப் பாடுபட்டவர்' என்று தனது ''ஈழத்துச் சிறுகதை மணிகள்' நூலில் குறிப்பிடுவார் எழுத்தாளர் செம்பியன் செல்வன. இது பற்றிய அந்தனி ஜீவாவின் 'சாகாத இலக்கியத்தின் சரித்திரன் நாயகன்' ''வீரகேசரி' ஆசிரியர் குழுவில் பணியாற்றினார். வீரகேசரியில் பணியாற்றிய காலத்தில் அச்சகத் தொழிலாளர்கள் படும் துன்பத்தைக் கண்டு மனம் நொந்தார். அவர்களின் நலனில் அக்கறை கொண்டார். பொதுவுடமைக் கருத்துகளில் ஊறிப்போயிருந்த அ.ந.க. அச்சகத் தொழிலாளர்களுக்காகப் போராடத் தயங்கவில்லை. அதனால் அச்சக முதலாளிகளின் வெறுப்பினைச் சம்பாதித்துக் கொண்டார். அதனால் வீரகேசரியிலிருந்து விலக்கப் பட்டார்." என்று பதிவு செய்யும்.

மேற்படி கட்டுரையில் அந்தனி ஜீவா அ.ந.க.வின் மார்க்சிய ஈடுபாடு பற்றிப் பின்வருமாறு குறிப்பிடுவார்:

"பின்பு கம்யூனிஸ்ட் கட்சி முழுநேர ஊழியரானார். கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்ப் பத்திரிகையான 'தேசாபிமானி'யின் முதலாவது ஆரம்பகால ஆசிரியர் அ.ந.கந்தசாமியே. 'தேசாபிமானி'யின் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டார். அப்பத்திரிகையில் அவர் எழுதிய சிறுகதைகள், அரசியற் கட்டுரைகள் அனைவரின் கவனத்தையும் கவர்ந்தன. கம்யூனிஸ்ட கட்சியின் முழுநேர ஊழியராகக் கடமையாற்றிய காலத்தில் அ.ந.கந்தசாமி தொழிற்சங்க இயக்கங்களில் பெரும் ஈடுபாடு கொள்ளத் தொடங்கினார். மலையகத்தின் எல்பிட்டி என்னுமிடத்தில் சிலகாலம் தோட்டத் தொழிலாளர்கள் பிரதிநிதியாகக் கடமையாற்றினார். உழைப்பையே நம்பி வாழும் தோட்டத் தொழிலாளர்களின் நலனில் அக்கறை காட்டித் தீவிரமாக உழைத்தார். அவர்களின் இன்ப துன்பங்களில் பங்கு கொண்டார். அ.ந.கந்தசாமி மலைநாட்டு உழைக்கும் தொழிலாளர்கள் மீது எப்பொழுதும் பெருமதிப்பு வைத்திருந்தார். தொழிலாளர்களினுரிமைப் போராட்டத்தில் முன்னின்று உழைத்துள்ளார். அவர்களின் உரிமைக்காகத் தோட்ட நிர்வாகத்தினரிடம் நியாயம் கோரியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற பிரசித்தி பெற்ற டிராம் தொழிலாளர்களின் போராட்டம் வெற்றி பெற உழைத்தவர்களில் முக்கியமான ஒருவராக அ.ந.கந்தசாமி கணிக்கப் படுகின்றார். தொழிற்சங்க ஈடுபாடு கொண்ட காலங்களில் தொழிலாளர்களின் வாழ்க்கை நிகழ்ச்சிகளை வைத்து அமர இலக்கியங்களைச் சிருஷ்டித்துள்ளார். கம்யூனிஸ்ட கட்சிக்குள் நடந்த போராட்டத்தின் காரணமாக அ.ந.கந்தசாமியும் அவரைச் சார்ந்த ஏழெட்டுப் பேரும் வெளியேற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.".

அ.ந.க.வின் இலக்கியக் கோட்பாடுகள்!

"'மக்கள் இலக்கியம்' என்ற கருத்தும் 'சோஷலிஸ்ட் யதார்த்தம்' என்பனவுமே என் மனதைக் கவர்ந்த இலக்கிய சித்தாந்தங்களாக விளங்குகின்றன" எனத் தனது பிரசித்தி பெற்ற 'நான் ஏன் எழுதுகிறேன்' என்னும் கட்டுரையில் குறிப்பிடும் அ.ந.க. பின்வருமாறு தான் எழுதுவதன் நோக்கம் பற்றி விபரிப்பார்:

"எழுத்தாளன் வாழ்க்கையை விமர்சிப்பதுடன் நின்று விடக்கூடாது. அந்த விமர்சனத்தின் அடிப்படையில் வாசகர்களுக்கு எதிர்காலத்தில் நம்பிக்கை ஊட்டவேண்டும். அவ்வித நம்பிக்கையில்லாவிட்டால் முன்னேற்றமில்லை. வாழ்வே இல்லை. இவ்வித பிரக்ஞையில் பிறக்காமல் வெறுமனே யதார்த்தத்தை ஒரு சுத்த இலட்சியமாகக் கொண்டு எழுதும்போது நம்பிக்கைக்குப் பதில் அவநம்பிக்கையின் தொனிகளே கேட்க ஆரம்பிக்கலாம். நைந்த உள்ளத்தின் சோகக்குரலாகக் கேட்கும் எழுத்தால் பயனில்லை. நொந்த உள்ளத்தின் செயல் துணிவுகொண்ட வேகக் குரலாக அது ஒலிக்க வேண்டும். வாழ்வதற்கு நேரடியாகவோ, குறிப்பாகவோ, மெளனமாகவோ வழிகாட்டும் எழுத்தே எழுத்து. இந்தக் கருத்துகள் என்னை உந்துகின்றன. அவற்றுக்காகவே நான் எழுதுகின்றேன்.

மனிதன் சமுதாயத்தின் ஒரு அங்கம். அவனுக்கு சமுதாயப் பொறுப்பொன்று உண்டு. வெறுமனே உண்ணுவதும், உறங்குவதும், புலனுகர்ச்சிகளில் ஈடுபடுவதும் வாழ்க்கையாகாது. அறிவு வளர்ச்சி பெற்ற மனிதன் இவற்றோடு வேறு சில காரியங்களையும் செய்ய விரும்புவான். மற்றவர் முகத்தின் புன்னகை தோட்டத்தில் பூத்துக் குலுங்கும் முல்லைமலர் போல் அவனுக்கு இன்பத்தையூட்டும். "இன்று நாம் வாழும் சமுதாயத்தில் நாம் புன்னகையைக் காணவில்லை. துன்பமும், துயரமும், அழுகையும், ஏக்கமும், கண்ணீரும், கபலையுமாக நாம் வாழுமுலகம் இருக்கிறது. ஏழ்மைக்கும், செல்வத்துக்கும் நடக்கும் போரும், அடிமைக்கும், ஆண்டானுக்கும் நடக்கும் போரும், உயர்சாதியானுக்கும் தாழ்ந்த சாதியானுக்கும் நடக்கும் போரும், அசுரசக்திகளுக்கும், மனித சக்திகளுக்கும் நடக்கும் போரும் இன்று உலகையே கலங்க வைத்துக் கொண்டிருக்கின்றன. இப்போர்களினால் வாழ்வே ஒரு சோககீதமாகிவிட்டது. இப்போர்களை எவ்வளவு விரைவில் ஒழிக்க முடியுமோ அவ்வளவு விரைவில் ஒழித்துவிட வேண்டும். அதன்ப பின்தான் போரொழிந்த சமத்துவ சமுதாயம் பூக்கும். அதைப் பூக்க வைக்கும் பணியில் எழுத்தாளன் முன்னோடியாகத் திகழ வேண்டும் என்ற கருத்தை உலகின் புகழ்பெற்ற பேனா மன்னர்கள் என் மனதில் தோற்றுவித்தனர்.

பிரெஞ்சுப் புரட்சி கண்ட ரூசோ, வால்டயர் தொடக்கம் மார்சிம் கோர்க்கி, எஹ்ரென்பேர்க் வரைக்கும் எல்லா நல்ல எழுத்தாளர்களும் இந்தச் செய்தியையே எனக்குக் கூறினர். பேர்னாட் ஷாவின் எழுத்துகளும் இன்றைய பேட்ரண்ட் ரசல் எழுத்துகளும் கூட சமுதாய முன்னேற்றத்துக்குரிய பிரச்சினைகளுக்குத் தீர்ப்பு காணும் பணியை அலட்சியம் செய்துவிடவில்லை. வங்கக் கவிஞர் தாகூரும், தமிழ்க் கவிஞன் பாரதியும் தாம் வாழ்ந்த சமுதாயத்தின் உடனடிப் பிரச்சினைகளைத் தீர்க்கும் பணிக்குத் தமது பேனாக்களை அர்ப்பணம் செய்ய மறக்கவில்லை....உலகப் பண்பாட்டுப் பாடிய பாரதிதாசனும் சமுதாய ஊழல்களைச் சுட்டெரிக்கும் பணிக்குத் தன்னாளான சேவையைச் செய்திருக்கின்றான்."

'தேசாபிமானி'யில் வெளிவந்த மேற்படி கட்டுரை எண்பதுகளில் மொறட்டுவைப் பல்கலைக் கழகத் தமிழ்ச் சங்க வெளியீடான 'நுட்பம்' சஞ்சிகையிலும் மீள்பிரசுரம் செய்யப்பட்டது. அ.ந.க மறைந்தபொழுது அவரது மேற்படி கட்டுரையினைப் பிரசுரித்த தேசாபிமானி 'போர்ச்சுவாலை அமரச் சுடராகியது' என்றொரு ஆசிரியத் தலையங்கத்தினையும் வரைந்து தனது அஞ்சலியினைச் செலுத்தியது.

இவையெல்லாம் ஈழத்துத் தமிழ் இலக்கியத்தில் அறிஞர் அ.ந.க.வின் அளப்பரிய பங்களிப்பினைத் தெளிவாக விளக்கி நிற்கின்றன. இன்று அ.ந.க பற்றிக் குறிப்பிடும் ஒரு சில எழுத்தாளர்கள் அவரது பன்முக ஆற்றலின் பின்னணியில் அவரை ஆய்வு செய்ய மறந்து சில சமயங்களில் மேலோட்டமாகக் கருத்துகளைத் தெரிவிப்பது அவர்களது அறியாமையின் விளைவே. அ.ந.க. போதிய ஆய்வுகளின்றி அவர் பற்றிய கருத்துகளைத் தெரிவிப்பதை தவிர்த்து விடுவது நல்லது. "ஈழத்தமிழிலக்கிய உலகின் பல்வேறு துறைகளிலும் ஈடுபட்டு மற்றையோரால் மறுக்கவோ மறைக்கவோ முடியாதளவிற்கு சிறந்த தொண்டாற்றினார். நவீன தமிழ்க்கலை வடிவங்களாக உருவகித்த சிறுகதை, நாவல், விமர்சனம், மொழி பெயர்ப்பு என்பனவற்றுடன் நாடகம், கவிதை ஆகிய துறைகளையும் - புத்தாற்றல் நிரம்பிய ஆக்ரோஷ வேகத்துடன் சமூகச் சீர்கேடுகளைக் கெல்லி எறியவும், ‘புதியதோர் உலகு’ அமைக்கவும் ஏற்றகருவிகளாக்கினார்" என்று குறிப்பிடும் செம்பியன் செல்வன் "இவரைப்பற்றிய உண்மையான மதிப்பீடு பல் துறைகளையும் தழுவியதாகவிருந்தாலன்றி முழுமையடையா"வென்று குறிப்பிடுவதை மேற்படி அரைகுறை ஆய்வாளர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். அத்துடன் இது பற்றிய தனது வேதனையினை "அ.ந. கந்தசாமி சுமார் நாற்பது சிறுகதைகள் வரையே எழுதியிருப்பார் என அவரின் நெருங்கிய இலக்கிய நண்பர்களால் அறியவருகின்றது. அவை யாவும் ஆங்காங்கே அவர் பணியாற்றிய பத்திரிகைகளிலும், கையெழுத்துப் பிரதிகளிலும் சிதறிக்கிடக்கின்றன. அவரது சிறுகதைகள் இன்றுவரை தொகுப்பாக வெளிவராதிருப்பது விந்தையான வேதனையே, அவரால் உற்சாகப் படுத்தப்பட்டும் உயர்த்தப்பட்டும் உருவாக்கப்பட்ட இலக்கியவாணர்கள் எத்தனையோ பேர் இன்று ஈழத்தமிழிலக்கிய உலகில் மட்டுமல்லாது சமூக நிலையிலும் உயர்நிலை பெற்று விளங்குகின்றனர். அவர்களோ அன்றிப் பிற பதிப்பங்களோ, அ.ந. கந்தசாமியின் படைப்புக்களை நூலுருவில் கொணர முயலவேண்டும். அவர் தன் ஆயுட்காலம் முழுவதும் தொடர்பு கொண்டிருந்த இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கமாவது இவ்விடயத்தில் ஆழ்ந்த கவனம் செலுத்தவேண்டும்" என்றும் வெளிப்படுத்துவார்.

அன்றைய காலகட்டத்தில் வெளிவந்த 'தமிழமுது' என்னுமோர் சிற்றிதழின் ஆசிரியரான சரவணையூர் மணிசேகரன் தனது 'அ.ந.க.வும் அவர் சிருஷ்டிகளும்' என்னும் ஆசிரியத் தலையங்கத்தில் "அவர் சாகும்போதும் இலக்கியப் பெருமூச்சு விட்டுத்தான் இறந்தார். அவரைச் சந்திக்கப் போனால் எந்த நேரமும் எங்களோடு பேசிக்கொள்வது தமிழ் இலக்கியம்தான். அவர் தமிழ் இலக்கியத்துக்காக தன் உடல், பொருள், ஆவி அத்தனையும் அர்ப்பணித்தார்.... ஏ குளிகைகளே! சமூகத்துக்காக அவர் சிருஷ்டித்தவர். அவர் சிருஷ்டிகளை புத்தக உருவில் கொண்டுவர முயற்சிக்காத இந்த நன்றி கெட்ட சமூகம் போலவா நீ அவர் உயிரைப் பிடித்து வைக்காது துரோகம் செய்து விட்டாய்? 'தமிழமுது' அழுகின்றாள். அவள் கண்களில் நீர் துளிக்கின்றது. அவர் படத்தை (அமரர் அ.ந.கந்தசாமி) முகப்பில் தாங்கியபின்புதான் அவள் மனம் கொஞ்சம் சாந்தியடைகின்றது." என்று சாடியிருப்பார்.

இவ்விதம் ஈழத்துத் தமிழ் இலக்கிய உலகிற்குப் பல்துறைகளில் அரிய பங்காற்றிய அறிஞர் அ.ந.க.வின் படைப்புகளை இனியாவது இன்றைய தமிழ் உலகு வெளிக்கொணர முயற்சிகள் செய்ய வேண்டும். ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் அவரது படைப்புகளைச் சேகரிக்க உதவினாலே அதுவேயொரு மிகப்பெரிய சேவையாகவிருக்கும்.


ngiri2704@rogers.com

Sunday, June 07, 2009

கவீந்திரன் கண்ட கனவு!

கவீந்திரன் கண்ட கனவு: ஈழத்துத் தமிழ்க் கவிதையுலகில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் பங்களிப்பு! - வ.ந.கிரிதரன்-

-ஈழத்துத் தமிழ்க் கவிதை வரலாற்றில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் கவிதைகளுக்குத் தனியிடமுண்டு. சிறுகதை, கவிதை, நாடகம், மொழிபெயர்ப்பு, சிறுவர் இலக்கியம் , உளவியல், விமர்சனமென இலக்கியத்தின் சகல பிரிவுகளிலும் வெற்றிகரமாகக் கால் பதித்த பெருமையும் இவருக்குண்டு. 'ஈழத்துத் த்மிழ் இலக்கிய வரலாற்றிலே கவிதை மரபில் குறிப்பிடத்தக்க மாற்றம் நிகழ்ந்த காலப்பகுதி 1940ம் ஆண்டுக் காலப்பகுதியாகும். 1940ம் ஆண்டிலிருந்து ஈழத்தில் முற்றிலும் நவீனத்துவமுடைய கவிதை மரபொன்று தோன்றி வளரத் தொடங்கியது. இக்கவிதை மரபைத் தொடங்கியவர்கள் ஈழத்தின் மணிக்கொடியெனப் பிரகாசித்த மறுமலர்ச்சிக் குழுவினர்களாவர். இந்த மறுமலர்ச்சிக் குழுவிலும் அ.ந.கந்தசாமியவர்கள் , மஹாகவியெனப் புனைபெயர் கொண்ட உருத்திரமூர்த்தி, இ.சரவணமுத்து என்பவர்களே கவிதைத் துறையில் குறிப்பிடத்தக்கவர்களாக இருந்துள்ளனர். இவர்களே ஈழத்தில் நவீனத்துவமுடைய கவிதை மரபையும் தொடக்கி வைத்தவர்கள். இவர்களால் தொடக்கி வைக்கப்பட்ட நல்ல கவிதை என்பதும் பண்டித மரபு வழிபட்ட உருவ அம்சங்களையும் , நிலபிரபுத்துவ சமூகக் கருப்பொருட்களையும் உள்ளடக்கமாகக் கொண்ட செய்யுளிலிருந்து வேறுபட்டு நவீன வாழ்க்கைப் போக்குகளைப் பொருளடக்கமாகக் கொண்டமைவது என்ற வரைவிலக்கணம் உடையதாகவுள்ளது' என்று செல்வி ஜுவானா என்னும் யாழ் பல்கலைக்கழக மாணவியொருத்தியின் ஆய்வுக் கட்டுரையில் கூறப்பட்டிருப்பது அ.ந.க.வை இன்றைய தலைமுறை மறந்துவிடவில்லை என்பதையே காட்டுகிறது [மறுமலர்ச்சிக் குழுவினரால் வெளியிடப்பட்ட சஞ்சிகையே 'மறுமலர்ச்சி' சஞ்சிகை. இச்சஞ்சிகையில் எழுதிய படைப்பாளிகளையே மறுமலர்ச்சி எழுத்தாளர்களாகக் காணும் போக்கொன்று செங்கை ஆழியானுட்பட இன்று இலக்கிய விமர்சனங்கள், ஆய்வுகள் செய்ய விரும்பும் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையினைச் சார்ந்த செல்லத்துரை சுதர்ஸன் போன்றவர்கள் மத்தியில் நிலவுவதாகத் தெரிகிறது. இது ஒரு பிழையான அணுகுமுறை. மறுமலர்ச்சிச் சங்கத்தை உருவாக்கி, அதில் பாடுபட்டவர்களின் படைப்புகள் யாவும் மறுமலர்ச்சிப் படைப்புகளாகத்தான் கருதப்பட வேண்டும். உண்மையில் மறுமலர்ச்சிச் சிறுகதைகள், அல்லது மறுமலர்ச்சிக் கவிதைகள், அல்லது மறுமலர்ச்சிப் படைப்புகள் , மறுமலர்ச்சி எழுத்தாளர்கள் என்று குறிப்பிடும்போது அது மறுமலர்ச்சி சஞ்சிகையில் எழுதிய எழுத்தாளர்களை மட்டும் குறிக்கவில்லை. அந்த 'மறுமலர்ச்சி' இதழினை வெளியிட்ட மறுமலர்ச்சிச் சங்கத்தினை உருவாக்கியவர்களின் படைப்புகளையும் குறிக்கிறது. இதுவே சரியான நிலைப்பாடாகவிருக்க முடியும் என்பதென் கருத்து. செங்கை ஆழியான, செல்லத்துரை சுதர்ஸன் போன்றோர் இந்த விடயத்தில் கருத்துச் செலுத்த் வேண்டுமென்பதென் அவா. சி. மௌனகுரு, மௌ. சித்திரலேகா, எம். ஏ. நுஃமான் ஆகியோரால் இணைந்து எழுதப்பட்ட 'இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத்தமிழ் இலக்கியம்' என்னும் நூலில் ஈழத்துக் கவிதையுலகின் ம்றுமலர்ச்சிக் கட்ட காலம் பற்றிக் குறிப்பிடும்போது அ.ந.கந்தசாமி, மகாகவி, நாவற்குழியூர் நடராசன் ஆகியோரை மறுமலர்ச்சிக் காலகட்டத்தின் முக்கியமான கவிஞர்களாகக் குறிப்பிடுகின்றார். அத்துடன் கவீந்த்திரன் என்னும் புனைபெயரிலும் எழுதிய அறிஞர் அ.ந.கநதசாமியை ஈழத்தின் தமிழ்க் கவிதையில் முத்லாவதாக இடதுசாரிச் சிந்தனையினை அறிமுகப்படுத்திய படைப்பாளியாகவும் குறிப்பிடுவர்.இவ்விதம் மறுமலர்ச்சிக் காலகட்டம் பற்றியே குறிப்பிடப்படவேண்டுமே தவிர 'மறுமலர்ச்சி' சஞ்சிகையின் படைப்புகளை மட்டும் மையமாக வைத்து மறுமலர்ச்சிக் காலகட்டத்தை எடை போடக்கூடாது. அவ்விதமான போக்கு ஏற்கனவே குறிப்பிட்டதுபோன்று மறுமலர்ச்சிக் காலகட்டம் பற்றிய பிழையான பிம்பத்தினைத் தந்துவிடும் அபாயமுண்டு. - பதிவுகள்]

அ.ந.க. ஒரு செயல் வீரர். ஏனையவர்களைப் போல் வாயளவில் நின்று விட்டவரல்லர். தான் நம்பிய கொள்கைகளுக்காக இறுதிவரை பாடுபட்டவர். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் ஆரம்பகர்த்தாக்களிலொருவர். மேற்படி சங்கத்தின் கீதமாகவும் இவரது கவிதையே விளங்குகின்றது. அவரது கவிதைகளின் கருப்பொருட்களாகத் தீண்டாமை, தோட்டத்தொழிலாளர் இழிநிலை, சமூக ஏற்றத்தாழ்வுகள், சமுதாயச் சீரமைப்பு, இயற்கை, காதல், தத்துவம், வர்க்க விடுதலை, பிடித்த அளுமைகள் போன்றவை விளங்குகின்றன. இவரது கவிதைகள் தமிழமுது, தேன்மொழி, ஈழகேசரி, வசந்தம், வீரகேசரி, பாரதி, தினகரன், ம்ல்லிகை, நோக்கு, இளவேனில், சுதந்திரன், ஸ்ரீலங்கா போன்ற பத்திரிகை, சஞ்சிகைகளில் வெளிவந்திருக்கின்றன [அ.ந.க.வின் கவிதைகள் வெளிவந்த பத்திரிகைகள், சஞ்சிகைகள் மற்றும் அவர் பங்கு பற்றிய கவியரங்குகள் பற்றிய விரிவான ஆய்வொன்று மேற்கொள்ளப்படவேண்டியதவசியம்.]. இவரது ஆரம்ப காலத்துக் க்விதைகளிலொன்றான , ஈழகேசரியில் வெளிவந்த, 'சிந்தனையும், மின்னொளியும்' என்ற கவிதை முக்கியமான கவிதைகளிலொன்று. 'அர்த்த இராத்திரியில் கொட்டுமிடித்தாளத்துடனும், மின்னலுடனும் பெய்யும் மழையைப் பற்றிப் பாடப்படும் இக்கவிதையில் , அந்த இயறகை நிகழ்வு கூடக் கவிஞரிடம் சிந்தனையோட்டமொன்றினை ஏற்படுத்தி விடுகின்றது. கணப்பொழுதில் தோன்றி அழியும் மின்னல் கூட ஒரு சேதியைக் கூறிவிடுகிறது. அது என்ன?

'கொட்டுமிடித்தாளம் இசைய நடம் செய்யும்
மட்டற்ற பேரழகு வான்வனிதை போல் மின்னல்
தோன்றி மறைந்ததுவே; சிந்தனையின் தரங்கங்கள்
ஊன்றியெழுந்தன இவ் வொளிமின்னல் செயல் என்னே?
வாழ்வோ கணநேரம்; கணநேரம் தானுமுண்டோ?
சாவும் பிறப்புமக் கணநேரத் தடங்குமன்றோ?
ஐனனப் படுக்கையிலே ஏழைமின்னல் தன்னுடைய
மரணத்தைக் கண்டு துடிதுடித்து மடிகின்ற
சேதி புதினமன்று....' (ஈழகேசரி)

இவ்விதமாகக் கணப்பொழுதில் தோன்றி மறையும் மின்னல் கூறும் சேதிதானென்ன? அதன் சோதிதான் அதன் சேதி. சிறுகணமே வாழ்ந்தாலும் அம்மின்னல் உலகிற்கு ஒளி வழங்குவதன் மூலம் நல்லதொரு சேவையைச் செய்து விட்டுத்தான் ஓடி மறைகிறது. மனித வாழ்வும் இத்தகைய மின்னலைப் போன்றுதான் விளங்க வேண்டும். இதுதான் மண்ணின் மக்களுக்கு கணப்பொழுதில் தோன்றி மறையும் மின்னல் சொல்லும் சேதி. இதுதான் கவிஞரிடத்தில் அவ்வியற்கை நிகழ்வு தூண்டிவிட்ட சிந்தனையின் தரங்கங்கள்.

'....அச் சேதியிலே நான் காணும்
சோதி கொளுத்திச் சோபிதத்தைத் செய்துவிட்டு
ஓடி மறைகிறது; வாழும் சிறு கணத்தில்
தேடி ஒரு சேவை செகத்திற்குச் செய்ததுவே!
சேவையதன் மூச்சு; அச்சேவை யிழந்தவுடன்
ஆவிபிரிந்து அகல்வானில் கலந்ததுவே!
என்னே இம் மின்னல(து) எழிலே வென்றிருந்தேன்.
மண்ணின் மக்களுக்கு மின்னல் ஒரு சேதி சொல்லும்.
வாழும்சிறு கணத்தில் வைய மெலாம் ஒளிதரவே
நாளும் முயற்சி செய்யும் நல்லசெயல் அதுவாகும்.'

மேற்படி 'சிந்தனையும் மின்னொளியும்' என்னும் அ.ந.க.வின் ஆரம்பகாலக் கவிதை அ.ந.கவிற்கு மிகவும் பிடித்ததொரு கவிதை. மேற்படி மின்னலைப் போலவே தோன்றி குறுகிய காலமே வாழ்ந்து ஒளி வீசி மறைந்த்வர் அ.ந.க. மின்னல் கூறிய பாடத்தினையே பின்பற்றி வாழ்ந்தவர் அவரென்பதை அவரது 'தேசாபிமானி' பத்திரிகையில் வெளிவந்த கட்டுரையான 'நான் ஏன் எழுதுகிறேன்? ' என்னும் கட்டுரை புலப்படுத்துகிறது. (வ.ந.கிரிதரனை இதழாசிரியராக கொண்டு வெளிவந்த மொறட்டுவைப் ப்லகலைக்கழகத் தமிழ்ச் சங்கத்தினரின் 'நுட்பம்' (1981) வருடாந்தச் சஞ்சிகையிலும் இக்கட்டுரை மீள்பிரசுரம் செய்யப் பட்டிருக்கின்றது.] அக்க்ட்டுரையில் மேற்படி தனது ஆரம்பகாலக் கவிதையினைக் குறிப்பிடும் அ.ந.க. மேலும் தொடர்ந்து கூறுவார்:

'....இம்மின்னல் எனக்குணர்த்தும் செய்தி என்ன? "சில நாட்களே நீ இவ்வுலகில் வாழ்ந்தாலும் மக்களுக்கும், உலகுக்கும் பயனுள்ளவனாக வாழ். இன்று நீ இருக்கிறாய். நாளை இறந்து விடலாம். ஆகவே நன்றே செய்க. அதையும் இன்றே செய்க" இது தான் மின்னல் சொல்லித் தரும் பாடம். இருளை விரட்டி ஒளியைப் பரப்பும் மின்னல் சமுதாயத்தில் சூழ்ந்துள்ள மடமை, வறுமை முதலான இருள்களை நீக்கி, அறிவையும் ஆனந்தத்தையும் பரப்பும்படி எனக்குப் பணித்தது. வாழ்க்கையையே இதற்காக அர்ப்பணிக்கவேண்டும் என்ற ஆசை மேலிட்ட நான் என் எழுத்தையும் அத்துறைக்கே பயன்படுத்த வேண்டும் என்று நினைத்ததில் வியப்பில்லை அல்லவா?...'

இதன் மூலம் அ.ந.கவின் ஆரம்பகாலக் கவிதையான் 'சிந்தனையும், மின்னொளியும்' கவிதை அவரது எதிர்கால இலக்கிய வாழ்வின் அடித்தளமாக, உந்து சக்தியாக விளங்குவதைக் காணமுடிகிறது. அவரது படைப்புகள் எல்லாமே மேற்படி அவரது இலட்சிய வேட்கையைப் புலப்படுத்துவனவாகவேயிருக்கின்றன.

இவரது இன்னுமொரு கவிதையான 'வில்லூன்றி மயானம்' சமுதாயத்தில் நிலவிய சாதிக் கொடுமையினை, அதன் கட்டுப்பாடுகளை வன்மையாகச் சாடுகின்றது. தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த வள்ளிப்பிள்ளை என்பவரின் பிரேதத்தை நகர சபைக்குச் சொந்தமான வில்லூன்றி மயானத்தில் புதைப்பதற்காகத் தலைமை தாங்கிச் சென்ற ஆரியகுளத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி என்பவர் சாதிவெறியர்களால் கொல்லப்பட்ட நிகழ்வைச் சாடும் கவிதையிது. இச்சம்பவம் நிகழ்ந்த காலகட்டத்தில் ஏனைய கவிஞர்களெல்லாரும் அதனை விமர்சிக்கப் பயந்திருந்த நிலையில் , அறிஞர் அ.ந.க அதனை வன்மையாகத் துணிச்சலுடன் கண்டித்தார். தீண்டாமைக்கெதிராக வெடித்திட்ட புரட்சித் தீயாக அதனை இனங்கண்டார்:

'நாட்டினர்நீர் அறிவீர் வில்லூன்றி தன்னில்
நாம் கண்ட ஈமத்தீ வெறுந்தீ அன்று
கேட்டினிலே உளபிணத்தை உண்பதற்குக்
கிளர்ந்தெழுந்த தீயன்று நெடுநா ளெங்கள்
நாட்டினிலே கிளைபரப்பும் சாதி என்னும்
நச்சுமர வீழ்ச்சியினைக் காண்பதற்காய்க்
வாட்டமுற்ற மக்களுளம் கனன்று பொங்கும்
வல்லதொரு புரட்சித்தீ வாழ்க வஃது...'

மனிதர்கள் ஏழை, பணக்காரர் என்று ஏற்றத்தாழ்வுகள் பார்த்தல் தகாது. ஒருவரிற்கொருவர் அன்புடன் வாழ்தல் வேண்டும். அருவருப்பினையொதுக்கிச் சேவை மனப்பான்மையுடன் வாழ வேண்டுமென்பதை இவரது 'துறவியும், குஷ்ட்டரோகியும்' என்னும் கவிதை கூறுகிறது. தானமெடுப்பதற்காகச் செல்லும் துறவியொருவருக்குத் தானமிடுவதற்காகச் செல்வர்கள் பலர் காத்து நிற்கின்றார்கள். அவரோ குஷ்ட்டரோகத்தால் வ்ருந்துமோர் ஏழை தரும் உணவை அன்புடன் வாங்கி உண்ணுகிறார். அவ்விதம் உண்ணுகையில் அப்பாத்திரத்தினுள் நோயினால் அழுகி வீழ்ந்திருந்த அந்த ஏழையினது விரலொன்றினைக் க்ண்டும் அருவருப்படையாது, முகம் சுளிக்காது , அதையொதுக்கி வைத்துவிட்டு உணவையுண்ணுகின்றார். இதனை மேற்படி 'சுதந்திரன்' பத்திரிகையில் வெளிவந்த 'துறவியும், குஷ்ட்டரோகியும்' கவிதை விபரிக்கும்:

'உணவையிடும் போதந்தக் குஷ்ட நோயால்
உக்கி உணர்விழந்திருந்த விரலில் ஒன்று
பிணக்கமுற்று ஓடு தன்னில் வீழ்ந்தந்தப்
பீடைதனைக் கண்டனன் கண்டபோது
கனமுனிவன் சாந்த முகம் மாறாதந்த
கையில் விரலெடுத்ததனை மெல்ல நீக்கி
மனதினிலே ஒரு சிறிது மாசுமின்றி
வாயினிலே மெல்லமெல்ல அள்ளி உண்டான்.

புல்லுணவை நல்லுணவாய் ஏற்றதனை
புத்தமிர்தமாய் மதித்துப் புசித்தான் ஏழை
நல்லவொரு நண்பன் இந்த முனியில் கண்டான்!
நானிலத்தில் விஷமாகும் தனிமை என்னும்
கொல்லுகின்ற வியாதிய·து போயொளியும்
கொண்டனவன் பெரிய இன்பம் குவலயத்தில்
இல்லை இதுபோலில்லை இல்லை என்று
எண்ணி எண்ணி களிக்கடலில் மூழ்கிவிட்டான்.. ' (சுதந்திரன்)


'கவீந்திரன்' என்னும்பெயரிலும் அ.ந.க கவிதைகள் எழுதியுள்ளார். 'சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன்' என்னும் தினகரனில் வெளிவந்த தொடர்கட்டுரையில் எழுத்தாளர் அநதனி ஜீவா 'அ.ந.க. ஆரம்பகாலத்தில் கவீந்திரன் என்னும் பெயரில் நிறைய எழுதியிருப்பதாகக் குறிப்பிடுவார். 'தேசபக்தன்' பத்திரிகையில் 'கசையடிக் கவிராயர்' என்னும் பெயரில் அ.ந.க இலக்கிய உலகின் மோசடிகளைச் சாடிக் கவிதைகள் பல எழுதியுள்ளதாகவும் மேற்படி அந்தனி ஜீவாவின் கட்டுரை தெரிவிக்கின்றது. [மேலும் பல புனைபெயர்களில் அ.ந.க எழுதியுள்ளதாக அறிகின்றோம். இது பற்றியும் விரிவான ஆய்வுகள் நடைபெற வேண்டும்.] 'தேயிலைத் தோட்டத்திலே' என்ற இவரது கவிதை 'பாரதி' சஞ்சிகையில் 'கவீந்திரன்' என்னும் புனைபெயரில் வெளிவந்தது. காலையில் விழித்தெழுந்து, குழந்தைக்குப் பாலூட்டி விட்டு, அக்குழந்தை பற்றிய எதிர்காலக் கனவுகளில் மூழ்கி, பழையதை உண்டுவிட்டு, மூங்கிற் கூடையினை முதுகினில் மாட்டிவிட்டு வேலைக்குச் செல்லும் தோட்டத் தொழிலாளப் பெண்ணொருத்தியைப் பற்றிப் பாடும் கவிதையிது.

'பானையிலே தண்ணீரில இட்டிருநத
பழயதனை எடுத்தே உண்டுமிஞ்ச
மானைநிகர் கண்ணாள் தன் மணவாளர்க்கு
மற்றதனை வைத்துவிட்டு விரைந்து சென்று
கானகத்து மூங்கிலிலே வேய்ந்த கூடை
கழுத்தினிலே பின்புறமாய்த் தொங்கவிட்டு
தானெழுந்து விரைவாள் தன் வேலைக்காடு!
தன் கண்ணின் ஓரத்தைத் துடைத்துக்கொள்வாள்! '

இது போல் இன்னுமொரு கவிதையான 'முன்னேற்றச் சேனை' (மேற்படி இரு கவிதைகளும் 'பாரதி' என்னும் சஞ்சிகையில் வெளிவந்தவை ) 'மூடத்தனம் யாவு நிர் மூலமாகி வீழ்ந்திட', 'மங்கி நிற்கும் பாசிசத்தை மண்ணிடத்தே புதைத்திடப்' புறப்பட்ட 'முன்னேற்றச் சேனை' பற்றிப் பாடும்.

அ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன்' என்னும் கவிதை அ.ந.க.வின் மிக முக்கியமான கவிதைளிலொன்று. நிகழ்கால மனிதனொருவன் காலத்தைத் தாண்டி எதிர்காலச் சித்தன் வாழும் உலகிற்கு வந்துவிடுகின்றான். நாடு, மதம், மொழி, இனம், ஏழை, பணக்காரன், சாதியென்று பிளவுண்டு, போர்களினால் சூழப்பட்டிருக்கும் நிகழ்கால உலகிற்கு எதிராகப் பிரிவினைகளற்ற, பேதங்களற்ற மனிதர்களென்றவொருரீதியில் அன்புடன் வாழும் சமுதாயமொன்றில் வாழும் எதிர்காலச்சித்தனொருவனின் உலகினைச் சித்திரிக்கும் கவிதையிது. அருமையான கவிதை. எதிர்காலச் சித்தனிற்கும், நிகழ்கால மனிதனுக்குமிடையில் நிகழும் உரையாடலாக அமைந்துள்ள நீண்ட் கவிதை.

'அரசெல்லாம் ஒழிந்துலகில் ஓரரசே யுண்டாம்
அறங்கூறும் ஒருமதமே உலகெல்லாம் ஆகும்
விரசமொடு விகற்பங்கள் வளர்க்குமொழி எல்லாம்
வீழ்ந்துவிடும் ஒருமொழியே ­வ்வுலகில் உண்டாம்
சரசமொடு உலகத்து மககளெல்லாம் தம்மைச்
சமானர்கள் மனித்குலம் என்ற இன மென்பார்
அரசர்கள் ஏழைபணக்காரனென்ற பேதம்
அத்தனையும் ஒழிந்து விடும் எதிர்கால உலகில்'

என்று எதிர்காலச் சித்தன் கூறுவான். அத்துடன் அச்சித்தன் வாழும் புதுயுகத்தில் மானிடர்கள் இனம், மதம், நாடு போன்ற எல்லைகளைக் கடந்து மனிதர்களென்ற ஓரினமாகவும், ஒரே மொழிபேசுபவர்களாகவும் விளங்குவர். அவ்வெதிர்காலச் சித்தன் வாழும் உலகு காலம் தாண்டிச் சென்ற நிகழ்கால மனிதனுக்கு மிகுந்த உவகையினைக் கொடுத்தது. அதன் விளைவாக அவன் எதிர்காலச் சித்தனைப் பார்த்து,

"எதிர்காலச் சித்தா உன் இனியமொழி கேட்டேன்.
எண்ணங்கள் விரிவடையும் என்னுடன் நீவந்து
மதி கெட்டார் வாழ்கின்ற வையகத்தில் புதிய
வாழ்வேற்றிச்செல்வாயோ..' என்றிறைஞ்சி நிற்கிறான்.

அதனைக் கேட்டதும் எதிர்காலச்சித்தனின் இதழ்களிலே குஞ்சிரிப்பொன்று பிறக்கின்றது. அச்சிரிப்பினூடு 'காலத்தின் கடல்தாவி நீ இங்கு வந்த காரணத்தால் ஏதறிவு என்பதை நீ கண்டாய். ஆனால் உன்னுலகில் நிகழ்கால மயக்கத்தில் வாழ்வோர் இந்த ஞானத்தினைக் காண்பாரோ? இல்லை. இத்தகையதொரு நிலையில் காலத்தை நான் தாண்டிக் காசினிக்கு வந்தால் விடத்தைத் தந்து சோக்கிரதரைக் கொண்ட உன் சோதரர்கள் கட்டாயம் என்னை ஏற்றி மிதித்திடுவார்கள்' என்கின்றான். அதனால் 'நிகழ்கால மனிதா! நான் அங்கு வரேன். நீ போவாய்' என்கின்றான். எனவே ஏமாற்றத்துடன் மீண்டும் நிகழ்கால உலகிற்கே நிகழ்கால மானுடன் திரும்புகின்றான். திரும்பியவனை நடைபெறும் மடைமைப் போர்களும், நடம் புரியும் தீதுகளும் திடுக்கிட வைக்கின்றன. 'என்றிவர்கள் உண்மை காண்பாரோ?' என ஏக்கமுற வைக்கின்றன. அதனையே கவிஞர் பின்வருமாறு கூறுவார்:

'புதுயுகத்தின் குரல்போல் எதிர்காலச் சித்தன்
புகன்றமொழி கேட்டபின்னர் யானவனைப் பார்த்து
"எதிர்காலச் சித்தா உன் ­னியமொழி கேட்டேன்.
எண்ணங்கள் விரிவடையும் என்னுடன் நீவந்து
மதி கெட்டார் வாழ்கின்ற வையகத்தில் புதிய
வாழ்வேற்றிச்செல்வாயோ என்றிறைஞ்சி நிற்க
மெதுவாகச் செவ்விதழ்கள் திறந்ததையுமங்கே
மென்னிலவுக் குஞ்சிரிப்புப் பிறந்ததையும் கண்டேன்.

காலத்தின் கடல் தாவி நீ­ங்கு வந்த
காரணத்தால் ஏதறிவு என்பதை நீ கண்டாய்
ஞாலத்தில் நிகழ்கால மயக்கத்தி லுள்ளோர்.
ஞானத்தைக் கான்பாரோ? காணார்களப்பா
காலத்தை யான்தாண்டிக் காசினிக்கு வந்தால்
கட்டாயம் ஏனையவர்கள் ஏற்றிமிதித்திடுவார்
ஆலத்தைத் தந்தன்று சோக்கிரதரைக் கொன்ற
அன்பர்களுன் மனிதச் சோதரர்களன்றோ?

ஆதலினால் நிகழ்கால மனிதா அங்கு
யான்வரேன் நீபோவாய் என்றான் ஐயன்
காதலினால் கால்களென்னும் கமலம் தொட்டுக்
கண்ணொற்றி விடைபெற்றேன் திரை நீங்கிற்று.
பாதகர்கள் முழுமடைமைப் போர்கள் சூழும்
பாருக்கு நிகழ்காலம் வந்தேன் எங்கும்
தீதுகளே நடம்புரியும் நிலைமை கண்டு
திடுக்கிட்டேன் என்றிவர்கள் உண்மைகாண்டல்?'

மேற்படி கவிதையினைத் நவீனத்தமிழ்க் கவிதையுலகில் வெளிவந்த முதலாவது விஞ்ஞானக் கவிதையெனக் குறிப்பிடலாமா? ஆய்வாளர்கள்தான் பதிலிறுக்க வேண்டும். ஆயினும் நான் அவ்விதம்தான் கருதுவேன். மேற்படி 'எதிர்காலச் சித்தன்' கவிதை நிகழ்கால மனிதன் காலம் கடந்து செல்வதை மட்டும் குறிக்கவில்லை. அ.ந.க கண்ட் இலட்சிய உலகினையும், கனவினையும் கூடவே வெளிப்படுத்தி நிற்கின்றது. நவீனத்தமிழ்க் கவிதையுலகில் குறிப்பிடத்தக்க முக்கியமான கவிதைகளிலொன்றாக இதனை நான் இனங்காணுகின்றேன். அ.ந.க.வையே மேற்படி கவிதையில் வரும் எதிர்காலச்சித்தனாகவும் நான் உணருகின்றேன். அவரது உள்ளத்தில் கனன்று கொண்டிருந்த இலட்சியக் கனவின் வடிவமாகவே எதிர்காலச் சித்தன் விளங்குகின்றான். அத்துடன் அ.ந.க.வின் சிந்தனைத் தெளிவினையும், கவி புனையும் ஆற்றலையும் கூட மேற்படி கவிதை விளக்கி நிற்கின்றன.

அ.ந.கந்தசாமி அவ்வப்போது கவியரங்கங்களிலும் பங்குபற்றித் தலைமை வகித்துள்ளார்; கவிதைகள் பாடியிருக்கின்றார். அ.ந.க.வின் கவியரங்கப் பங்களிப்பைக் குறிப்பிடும் அந்தனி ஜீவா த்னது 'சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன்' கட்டுரையில் '1966ம் ஆண்டு ஸ்ரீலங்கா சாகித்திய மண்டபத்தில் நடத்திய ''பாவோதல்'' நிகழ்ச்சியில் அ.ந.கந்தசாமி பாடிய ''கடவுள் என் சோர நாயகன்'' என்ற கவிதை பாவோதல் நிகழ்ச்சிக்கு வந்திருந்த பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றது. அந்தக் கூட்டத்தில் குறிப்புரையாற்றிய தென்புலோலியூர் மு.கண்பதிப்பிள்ளை "ஒரு நூற்றாண்டிற்கு ஒரு தடவைதான் இதைப் போன்ற நல்ல கவிதை தோன்றும்" எனப் பாராட்டினார். பல கவிதை அரங்குகளின் தலமைப் பீடத்தை அலங்கரித்துள்ளார் அ.ந.க' என்று குறிப்பிட்டுள்ளது இங்கு கவனிக்கத் தக்கது. இவ்விதமாக அவர் பங்குபற்றிய கவிதையரங்கொன்றுதான் வேலணையூர்த் தொல்காவிய மன்றில் நடைபெற்ற தமிழ்மறை விழாக் கவியரங்கு. தமிழ் மறையாம் திருக்குறளினை வழங்கிய 'வள்ளுவர்' பற்றிய நீண்ட கவிதை தமிழ்க் கவிதையுலகில் திருவள்ளுவர் பற்றி வெளிவந்த அற்புதமான கவிதைகளில் நானறிந்த வரையில் முதன்மையானது. மேற்படி கவிதை வள்ளுவரின் சிறப்பினையும், கூடவே அ.ந.க அவர்மேல் வைத்திருந்த அபிமானத்தையும் புலப்படுத்தி நிற்கும். அத்துடன் அழகாகச் சொற்களை அடுக்கிச் சிந்தனையைத் தூண்டும் வகையில், மனதினை ஈர்க்கும் வகையில் கவிபுனையும் அ.ந.க.வின் ஆற்றலுக்கு எடுத்துக்காட்டாகவும் விளங்குகின்றது.

'மதங்களை அடிப்ப்டையாக புலவர்கள் கொள்ளுமொரு காலகட்டத்தில் வள்ளுவரோ மன்னுலக வாழ்வை மட்டுமே அடிப்படையாகக் கொள்கின்றார். மற்றவரோ வீடென்றும், மோட்சமென்றும் புனைய வள்ளுவரோ இல்வாழ்வுக்குரிய அறம், பொருள், இன்பம் பற்றி உரைத்திடுகின்றார்' இவ்விதம் கூறும்
அ.ந.க

'இது நல்ல மாற்றமென இங்கெடுத்துச் சொல்வோம்.
இவர் குறளைக் கையேந்தி இவ்வுலகை வெல்வோம்' என்கின்றார்.

அத்துடன் 'வறுமையினை ஒழித்திடுதல் வேண்டுமெனும் நெஞ்சினை வள்ளுவனார் கொண்டிருந்தார் என்பதை'

'வேந்தரது அரண்சிறப்புச் சொல்லவந்தபோது 1"உறுபசியும் பிணிநோயும் செறுபகையும் சேரா(து) உற்றிடுதல் ஒன்றல்ல நா"டென்று கேட்டார்' என்று குறிப்பிடும் அ.ந.க மேலும் 'பெரும்பசியை முதற்குற்ற மெனஎடுத்துச் சொன்னார் பெரும்புலவர் வள்ளுவனார் ஏழைகளின் தோழன்' என்று விபரிக்கும் அ.ந.க மேலும் தொடர்ந்து வள்ளுவனார் வழிவந்த பாரதியார் 'தனி யொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்' என்றார். ஆனால் வள்ளுவரோ 'தள்ளுவதோ வாழ்க்கையினைப் பிச்சைஎடுத் திங்கே? அவ்விதமேல் சாய்கஅந்த ஆண்டவனும்' என்று பல்லாண்டுகளுக்கு முன்னர் குறிப்பிட்டதைச் சுட்டிக் காட்டுவார்:

'வள்ளுவனார் வழிவந்த பாரதியார் சொன்னார்
2"வையத்தை அழித்திடுவோம் தனிமனிதன் ஒருவன்
உள்ளநிறை வோடுண்ண உணவில்லை என்று
உளம்வருந்து வானாயின்" என்பதவர் பாட்டு.
வள்ளுவர் தாமும்பல் லாண்டுகட்கு முன்னர்
வழுத்தினார் இதன் பொருளை ஆவேசத்தோடு
3"தள்ளுவதோ வாழ்க்கையினைப் பிச்சைஎடுத் திங்கே?
அவ்விதமேல் சாய்கஅந்த ஆண்டவனும்" என்றார்'

இவ்விதமாக வள்ளுவரை மக்கள் கவிஞ்னாக, ஏழைகளின் தோழனாக அவனது குறட்பாக்களினூடு காணும் கவிஞர்

'கலைக்காகக் கலைஎன்று கதறுபவர் உண்டு
கருத்துக்கே முதன்மை தரும் வள்ளுவனார்கண்டு
கலைஇந்தச் சமுதாய வளர்ச்சிக்கே என்று
கருத்துடையார் உணரட்டும் காசினியில் அன்று
விலையில்லாத் திருக்குறளைத் தந்திட்ட மேதை
வியனுலகில் காட்டுகின்றார் பாதையதே பாதை.
கலைஞர்களே எழுந்திடுங்கள் வள்ளுவனார் காட்டும்
கவினுடைய பாதையிலே பேனாவை ஓட்டும்'

என்று மேலும் பாடி , வள்ளுவரை கருத்துக்கு முக்கியம் தரும் கலை படைக்குமொரு சமுதாயச் சிந்தனை மிக்க படைப்பாளியாகச் சித்திரிப்பார். கலை கலைக்காக என்று கருதுபவர்கள் கலை இந்தச் சமுதாய வளர்ச்சிக்கே என்று வள்ளுவரைப் பார்த்து உணரட்டுமென்கின்றார். அவர் காட்டும் பாதையிலே பேனாவை ஓட்டட்டுமென்கின்றார். மக்களுக்காக இலக்கியம் படைப்பதையே தனது இலட்சியமாகக் கொண்டு செயலாற்றிவந்த அ.ந.க. வள்ளுவரையும் அத்தகையதொரு கோணத்திலேயே அவனது குறட்பாக்களினூட் இனம் காண்கின்றார். இச்சமயத்தில் அ.ந.க.வின் இலக்கியம் பற்றிய கருத்துகளை நினைவு கூர்வது பொருத்தமானதே. ஏற்கனவே குறிப்பிட்டுள்ள 'நான் ஏன் எழுதுகிறேன்' என்னும் கட்டுரையில் அவர் பின்வருமாறு கூறுவது கவனிக்கத்தக்கது. அவரது எழுத்தின் நோக்கம் பற்றிய அவரது உள்நோக்கத்தினை எடுத்தியம்பும் வரிகளிவை. அவரைப் பற்றி ஆய்வு செய்ய விரும்பும் ஆய்வாளர்களுக்கு மிகவும் உதவக் கூடிய வரிகளிவை.:

'மனிதன் சமுதாயத்தின் ஒரு அங்கம். அவனுக்கு சமுதாயப் பொறுப்பொன்று உண்டு. வெறுமனே உண்ணுவதும், உறங்குவதும், புலனுகர்ச்சிகளில்> ஈடுபடுவதும் வாழ்க்கையாகாது. அறிவு வளர்ச்சி பெற்ற மனிதன் இவற்றோடு வேறு சில காரியங்களையும் செய்ய விரும்புவான். மற்றவர் முகத்தின் புன்னகை தோட்டத்தில் பூத்துக் குலுங்கும் முல்லைமலர் போல் அவனுக்கு இன்பத்தையூட்டும். "இன்று நாம் வாழும் சமுதாயத்தில் நாம் புன்னகையைக் காணவில்லை. துன்பமும், துயரமும், அழுகையும், ஏக்கமும், கண்ணீரும், கம்பலையுமாக நாம் வாழுமுலகம் இருக்கிறது. ஏழ்மைக்கும், செல்வத்துக்கும் நடக்கும் போரும், அடிமைக்கும், ஆண்டானுக்கும் நடக்கும் போரும், உயர்சாதியானுக்கும் தாழ்ந்த சாதியானுக்கும் நடக்கும் போரும், அசுரசக்திகளுக்கும், மனித சக்திகளுக்கும் நடக்கும் போரும் இன்று உலகையே கலங்க வைத்துக் கொண்டிருக்கின்றன. இப்போர்களினால் வாழ்வே ஒரு சோககீதமாகிவிட்டது. இப்போர்களை எவ்வளவு விரைவில் ஒழிக்க முடியுமோ அவ்வளவு விரைவில் ஒழித்துவிட வேண்டும். அதன்ப பின்தான் போரொழிந்த சமத்துவ சமுதாயம் பூக்கும். அதைப் பூக்க வைக்கும் பணியில் எழுத்தாளன் முன்னோடியாகத் திகழ வேண்டும் என்ற கருத்தை உலகின் புகழ்பெற்ற பேனா மன்னர்கள் என் மனதில் தோற்றுவித்தனர்.

பிரெஞ்சுப் புரட்சி கண்ட ரூசோ, வால்டயர் தொடக்கம் மார்சிம் கோர்க்கி, எஹ்ரென்பேர்க் வரைக்கும் எல்லா நல்ல எழுத்தாளர்களும் இந்தச் செய்தியையே எனக்குக் கூறினர். பேர்னாட் ஷாவின் எழுத்துகளும் இன்றைய பேட்ரண்ட் ரசல் எழுத்துகளும் கூட சமுதாய முன்னேற்றத்துக்குரிய பிரச்சினைகளுக்குத் தீர்ப்பு காணும் பணியை அலட்சியம் செய்துவிடவில்லை. வங்கக் கவிஞர் தாகூரும், தமிழ்க் கவிஞன் பாரதியும் தாம் வாழ்ந்த சமுதாயத்தின் உடனடிப் பிரச்சினைகளைத் தீர்க்கும் பணிக்குத் தமது பேனாக்களை அர்ப்பணம் செய்ய மறக்கவில்லை.... உலகப் பண்பாட்டுப் பாடிய பாரதிதாசனும் சமுதாய ஊழல்களைச் சுட்டெரிக்கும் பணிக்குத் தன்னாளான சேவையைச் செய்திருக்கின்றான்.

"மக்கள் இலக்கியம்" என்ற கருத்தும் "சோஷலிஸ்ட் யதார்த்தம்" என்பனவுமே என் மனதைக் கவர்ந்த இலக்கிய சித்தாந்தங்களாக விளங்குகின்றன. எழுத்தாளன் வாழ்க்கையை விமர்சிப்பதுடன் நின்று விடக்கூடாது. அந்த விமர்சனத்தின் அடிப்படையில் வாசகர்களுக்கு எதிர்காலத்தில் நம்பிக்கை ஊட்டவேண்டும். அவ்வித நம்பிக்கையில்லாவிட்டால் முன்னேற்றமில்லை. வாழ்வே இல்லை. இவ்வித பிரக்ஞையில் பிறக்காமல் வெறுமனே யதார்த்தத்தை ஒரு சுத்த இலட்சியமாகக் கொண்டு எழுதும்போது நம்பிக்கைக்குப் பதில் அவநம்பிக்கையின் தொனிகளே கேட்க ஆரம்பிக்கலாம். நைந்த உள்ளத்தின் சோகக்குரலாகக் கேட்கும் எழுத்தால் பயனில்லை. நொந்த உள்ளத்தின் செயல் துணிவுகொண்ட வேகக் குரலாக அது ஒலிக்க வேண்டும். வாழ்வதற்கு நேரடியாகவோ, குறிப்பாகவோ, மெளனமாகவோ வழிகாட்டும் எழுத்தே எழுத்து. இந்தக் கருத்துகள் என்னை உந்துகின்றன. அவற்றுக்காகவே நான் எழுதுகின்றேன்.

எழுத்தில் பலவகை உண்டு. நேரடிப் பிரச்சார எழுத்து ஒருவகை. கதை, கவிதை, நாடகம் என்ற உருவங்களில் வாழ்க்கையின் படமாகவும் வழிகாட்டியாகவும் எழுதப்படுபவை வேறொருவகை. இந்த இரண்டாவது வகை எழுத்தே இலக்கியம். அதுவே நிலைத்து நிற்கும் தன்மை வாய்ந்தது. ஆகவே அதைப்பற்றியே நான் இங்கு அதிகமாகக் கூறியிருக்கிறேன்.'


இவ்விதமாக எழுத்து பற்றிய கருத்துள்ள அ.ந.க வள்ளுவரையும் அவ்விதமான, மக்களுக்காக இலக்கியம் படைத்த் படைப்பாளியாகவே இனங்காண்கின்றார். அதனால்தான்

'நெசவுசெயும் தொழிலாளி நேர்மையுள நெஞ்சன்
செய்திட்ட நிறைநூ லில் பெய்திட்ட எண்ணம்
இசைவுடனே காலத்தை வென்றிங்கு வாழும்!
எல்லைகளைக் கடந்திங்கு உலகெல்லாம் சூழும்' என்கின்றார்.

அ.ந.க. வை வள்ளுவரைப் போல் மகாதமா காந்தியின் துணைவியார் அன்னை கஸ்தூரிபாயும் மிகவும் கவர்ந்தவர். அவரது மறைவையொட்டி அவர் எழுதிய 'அன்னையார் பிரிவு' என்னும் ஈழகேசரியில் வெளியான நினைவுக் கவிதையொன்றே அதற்குச் சான்று. அதிலவர் அன்னை பற்றி 'ஒப்பரிய
காந்தியரி னொப்பில்லாத
ஓர்மனைவி செம்மையறங் காத்த சீர்மைச்
செப்பரிய பெரும்புகழாள் தேய மெல்லாம்
தாயெனவே செப்பிடுமோர் இல்லின் தெய்வம்' எனவும்

'சீதையும் சாவித்திரியாம் தேவி மற்றும்
சிறப்புள்ள நளாயினி என்போரெல்லாம்
காதையிலே உலாவுகின்ற கன்னியர்கள்
கடுகேனும் உண்மையங்கு இல்லை யென்று
ஓதியவர் தலைநாணச் செய்து பெண்மைப்
பெருங்குலத்தின் உயர்வுதனை நாட்டினாய்' எனவும் குறிப்பிடும் அ.ந.க, அன்னையார் இறந்த செய்தியினை 'மாரியினிலே பெருமழைதான் கொட்டுகின்ற காரிரவில் பல்லிடிகள் பின்னே வந்த பேரிடி'யாய் உணருகின்றார்.

இவ்விதமாகக் கவீந்திரனின் கவிதைகள் ஈழத்துத் தமிழ்க் கவிதையுலகில் முக்கியமான படைப்புகளாக விளங்கி நிற்கின்றன. அ.ந.க. வின் கவிதைகள் எல்லாமே போர்ச்சுவாலைகளாகத்தான் இருந்தன என்பதற்கில்லை, அவ்வப்போது காதல் போன்ற மென்மையான உள்ளத்துணர்வுகள் பற்றியும் பாடியுள்ளார். முற்போக்குக் கவிஞரொருவர் இவ்விதமாகவெல்லாம் பாடலாமா என்ற்ம் சிலர் கேட்பர். அதற்கு அ.ந.க. முன்பு குறிப்பிட்டுள்ள 'நான் ஏன் எழுதுகிறேன்?' என்னும் கட்டுரையினை மீண்டும் ஒருமுறை அசைபோடுதல் தகுமே. அதிலவர் கீழுள்ளவாறு குறிப்பிட்டிருப்பார்:

'எழுத்தில் பலவகை உண்டு. நேரடிப் பிரச்சார எழுத்து ஒருவகை. கதை, கவிதை, நாடகம் என்ற உருவங்களில் வாழ்க்கையின் படமாகவும் வழிகாட்டியாகவும் எழுதப்படுபவை வேறொருவகை. இந்த இரண்டாவது வகை எழுத்தே இலக்கியம். அதுவே நிலைத்து நிற்கும் தன்மை வாய்ந்தது. ஆகவே அதைப்பற்றியே நான் இங்கு அதிகமாகக் கூறியிருக்கிறேன். ஆனால் சோஷலிஸ யதார்த்தப் பாதையில் இலக்கியப் பணிபுரிவோர் வெறும் அழகையே நோக்காகக்கொண்ட கருத்துகள் இயற்கையாக மனதில் தோன்றும்பொழுது அவற்றை எழுதாது விட்டுவிட வேண்டுமா? நல்ல கருத்துகளைக் கருக்கிச் சாகவிட்டு விடவேண்டுமா என்று கேட்கப்படுகிறது.

பாரதி முற்போக்குக் கவிஞன். ஆனால் மக்கள் பிரச்சினைகளைப் பாடிய அதே வாயால் 'கண்ணன் என் காதலனை'யும் பாடினான். ஆம், தோட்டக்காரன் கத்தரிக்காயையும், கீரையையும், தக்காளியையும் பயிரிடுகிறான். ஆனால் வீட்டு வாசலிலே மல்லிகைக் கொடியைப் படர விடுவதில்லையா? கத்தரித் தோட்டத்து வேலையின் களைப்புப் போக, மல்லிகைப் பந்தலின் நறுமணத்தை மகிழ்ச்சியோடு உறிஞ்சி மகிழ அதன் கீழ்ச் சென்று உட்காருவதில்லையா? எமக்கு நெல்லும் வேண்டும். கோதுமையும் வேண்டும். காய்கறிகளும் கிழங்குகளும் வேண்டும். ஆனால் ரோசா மலர்களும் வேண்டும். ரோசாமலர்களை மனநிறைவுக்காக நடும் தோட்டக்காரன் ரோசா மலர் நடுபவன் என்று சொல்லப்படமாட்டான். தோட்டக்காரன் என்றுதான் அழைக்கப்படுவான். பிள்ளையைத் தூங்க வைக்கத் தாலாட்டுப் பாடுவோம். ஏற்றமிறைக்கையில் ஏற்றப்பாட்டுப் பாடுவோம். அணிவகுப்பில் புரட்சிக் கீதம் பாடுவோம். ஆனால் குளிக்கும் அறையில் வெறும் ஸ்வரங்களை நாம் வாய்விட்டு இசைப்பதில்லையா?

சோஷலிச யதார்த்தப் பாதையில் முற்போக்கு இலக்கியம் சமைப்பவனைக் கடும் விலங்குகளால் கட்டிவிடக்கூடாது. பொதுவாக ஒரு எழுத்தாளன் எத்துறைக்குத் தன்னை அர்ப்பணிக்கிறான் என்பதைப் பார்க்க வேண்டும். அதில் அவன் சரியாக இருந்தால், மற்ற விஷயங்கள் சம்பந்தமாக நுணுக்கமாகச் சட்டதிட்டங்களை உண்டாக்குதல் அவன் கலைச் சுதந்திரத்தில் தலையிடுவதாகும். 'சிந்தனையும் மின்னொளியும்' தொடக்கம் 'எதிர்காலச்
சித்தன் பாட்டு ' வரை என் கருத்தோட்டம் ஒன்றாகவே இருந்திருக்கிறது. ஆனால் இடையிடையே ரோசாக்களையும் நான் நட்டதுண்டு. 'புரட்சிக் கீதம்' பாடாத வேளையில் 'காதல் கீதம்' பாடியதுமுண்டு. வெறும் சுவரங்களை இசைத்ததுமுண்டு. என்றாலும் என் பொதுவான இலட்சியம் ஒன்று. என் எழுத்துக்கள் மக்களை உயர்த்த வேண்டும். அவர்களின் போராட்டங்களில் எந்த அம்சத்தோடாவது அவை சம்பந்தப்பட்டிருக்க வேண்டும். இந்த இலட்சியத்துக்காகவே நான் எழுத ஆசைப் படுகிறேன். ஆனால் போர்க்களத்தில்கூட பூக்கள் பூப்பதுண்டு. இதை நாம் மறக்கக்கூடாது. வாளேந்திப் போர்க்களம் புகும் வீரன் கூட தும்பை மாலையை கழுத்திலணிந்து செல்வது பண்டைத் தமிழ் நாட்டு வழக்கமாகும். இந்த விவகாரம் இக்கட்டுரைக்குப் புறப்பிரச்சினையானாலும் முற்போக்கு இலக்கியத்தோடு சம்பந்தப்பட்ட பிரச்சினையென்பதால் சில வார்த்தைகள் கூறும்படி நேரிட்டது. முடிவாக "எதற்காக எழுதுகிறேன்?" என்பதற்கு நான் இரத்தினச்சுருக்கமாகச் சில காரணங்களைக் கூறி இக்கட்டுரையை முடிக்க விரும்புகிறேன். முதலாவதாக என் வாழ்வு சமுதாயத்துக்குப் பயனுள்ளதாக வேண்டும் என்ற காரணம். சுரண்டலும் அநீதியும் நிறைந்த சமுதாயத்தை ஒழிக்கவும் புதிய ஒளிமிக்க சமுதாயத்தை தோற்றுவிக்கவும் என்னாலான பணியை எழுத்து மூலம் செய்ய வேண்டுமென்ற காரணம். இதனை நான் முன்னரே விரித்துக் கூறிவிட்டேன்.'

ஈழத்து மரபுக் கவிஞர்களில் குறிப்பிடத்தக்க கவிஞர்களிலொருவர் வித்துவான் க.வேந்தனார். இவரது கவிதைகளின் சிறப்பம்சங்களிலொன்று அவரது கவிதைகளில் காணப்படுகின்ற முற்போக்குக் கருத்துகள். ஈழத்துத் தமிழ்க் கவிதையுலகில் இவரது 'காலைத் தூக்கிக் கண்ணில் வைத்து கட்டிக் கொள்ளும் அம்மா' என்னும் குழந்தைப் பாட்டு மிகவும் புகழ் பெற்றது. க.வேந்தனாரின் இன்னுமொரு கவிதை 'கவிஞன்' அதிலவர் பின்வருமாறு
கூறுவார்:

'வாடுகின்ற மக்களினம் மாட்சி கொள்ள
மறுமலர்ச்சிப் பெருவாழ்வை வழங்கு மாற்றல்
கூடுகின்ற கொள்கையினால் எழுச்சி கொண்டு
குமுறுகின்ற கோளரியே கவிஞ னாவான்!'

இவ்விதமாகக் வாடுகின்ற மக்களினம் மாட்சி கொள்ள கோளரியாக வாழ்ந்த கவிஞன்தான் அ.ந.கந்தசாமி. ஈழத்துத் தமிழ்க் கவிதையுலகின் முக்கியமான கவிஞரான அ.ந.கவின் தமிழ்க் கவிதைக்கான பங்களிப்பை மறைத்துவிட முனைவோர் முழுப் பூசணிக்காயைச் சோற்றினுள் மறைக்க முயலும் அறிவிலிகளே! ஆய்வாளர்களல்லர்.

அ.ந.கந்தசாமியின் கவிதைகள் சில!

சிந்தனையும் மின்னொளியும்!

சாளரத்தின் ஊடாகப் பார்த்திருந்தேன் சகமெல்லாம்
ஆழ உறங்கியது அர்த்த ராத்திரி வேளையிலே,
வானம் நடுக்கமுற, வையமெல்லாம் கிடுகிடுக்க,
மோனத்தை வெட்டி யிடியொன்று மோதியதே!
'சட்' டென்று வானம் பொத்ததுபோல் பெருமாரி
கொட்டத்தொடங்கியது. 'ஹேர்' ரென்ற இரைச்சலுடன்
ஊளையிடு நரியைப் போல் பெருங்காற்றும் உதறியது.
ஆளை விழுத்திவிடும் அத்தகைய பேய்க்காற்று
சூறா வளியிதுவா உலகினையே மாய்க்க வந்த
ஆறாத பெருஊழிக் காலத்தின் காற்றிதுவா?
சாளரத்துக் கதவிரண்டும் துடிதுடித்து மோதியது.
ஆழிப்பெரும் புயல்போல் அல்லோலம் அவ்வேளை
உலகம் சீரழிவிற்ற(து); அப்போ வானத்தில்
மாயும் உலகினுக்கு ஒளிவிளக்கந் தாங்கிவந்த
காயும் மின்னலொன்று கணநேரம் தோற்றியதே.
கொட்டுமிடித்தாளம் இசைய நடம் செய்யும்
மட்டற்ற பேரழகு வான்வனிதை போல் மின்னல்
தோன்றி மறைந்ததுவே; சிந்தனையின் தரங்கங்கள்
ஊன்றியெழுந்தன இவ் வொளிமின்னல் செயல் என்னே?
வாழ்வோ கணநேரம்; கணநேரம் தானுமுண்டோ?
சாவும் பிறப்புமக் கணநேரத் தடங்குமன்றோ?
ஐனனப் படுக்கையிலே ஏழைமின்னல் தன்னுடைய
மரணத்தைக் கண்டு துடிதுடித்து மடிகின்ற
சேதி புதினமன்று; அச் சேதியிலே நான் காணும்
சோதி கொளுத்திச் சோபிதத்தைத் செய்துவிட்டு
ஓடி மறைகிறது; வாழும் சிறு கணத்தில்
தேடி ஒரு சேவை செகத்திற்குச் செய்ததுவே!
சேவையதன் மூச்சு; அச்சேவை யிழந்தவுடன்
ஆவிபிரிந்து அகல்வானில் கலந்ததுவே!
என்னே இம் மின்னல(து) எழிலே வென்றிருந்தேன்.
மண்ணின் மக்களுக்கு மின்னல் ஒரு சேதி சொல்லும்.
வாழும்சிறு கணத்தில் வைய மெலாம் ஒளிதரவே
நாளும் முயற்சி செய்யும் நல்லசெயல் அதுவாகும்.
இந்த வாறாகச் சிந்தனையில் ஆழ்ந்துவிட்டேன்.
புந்தி நடுங்கப் புரண்டதோர் பேரிடி; நான்
இந்த உலகினிற்கு வந்தடைந்தேன்; என்னுடைய
சிந்தனையால் இச்சகம்தான் சிறிதுபயன் கண்டிடுமோ?

-அறிஞர் அ.ந.கந்தசாமியின் ஆரம்பகாலக் கவிதையிது. ஈழகேசரியில் வெளிவந்தது.-


எதிர்காலச் சித்தன் பாடல்!

எதிர்காலத் திரைநீக்கி அதற்கப் பால்யான்
ஏகிட்டேன் ஏகிட்ட போதில் என்முன்
கதிர்போலும் ஒளிமுகத்தான் கருனையூறும்
கமலம்போற் கண்ணினையான் ஒருவன் வந்தான்
"எதிர்கால உலகமி·து மனிதா நீயிங்
கேன்வந்தாய் இவன்காணும் பலவுமுன்னை
அதிர்வெடி போல் அலைக்கழிக்கும் ஆதலாலே
அப்பனே நிகழ்காலம் செல்க" என்றான்.

அறிவினிலே அடங்காத தாகம் கொண்டேன்
அவ்வுரையால் அடங்கவில்லை அவனை நோக்கிச்
'செறிவுற்ற பேரறிவின் சேர்க்கை வேண்டும்
செந்தமிழன் யானொருவன் ஆதலாலே
மறுவற்ற பேராண்மைக்கோட்டை என்னை
மலைவுறுத்தா தெதிர்காலம்" என்று கூறிக்
குறுகுறுத்த விழியுடையான் குழுத வியான்
குணமென்ன பெயரென்ன என்று கேட்டேன்.

"எனக்குமுன்னே சித்தர்பலர் இருந்தா ரப்பா
எதிர்காலச் சித்தன்யான் நிகழ்காலத்தர்
உனக்குமுன்னர் வாழ்ந்திட்ட சித்த ரல்லால்
உன்காலச் சித்தரையும் ஏற்கா ரப்பா
மனக்குறைவால் கூறவில்லை மகிதலத்தில்
மடமையொரு மயக்கத்தின் ஆட்சி என்றும்
கனத்துளதிங் கென்பதையே கருதிச் சொன்னேன்
காசினியின் பண்பிதனைக் கானப் பா நீ.

வருங்காலச் சித்தனுரை செய்த வார்த்தை
வையகத்தார் அறிதற்காய் இங்கு சொல்வேன்
"பெரும்போர்கள் விளைகின்ற நிகழ்காலத்தில்
பிளவுறுத்தும் பலவகையாம் பேதமுண்டு
ஒருமைபெறும் மனிதர்களை ஒன்றா வண்ணம்
ஊடமைத்த சுவரனைய பேதம் யாவும்
நோக்கிடுவாய் தூரஎதிர் கால மீதே"

அண்டுபவர் அண்டாது செய்வதேது
அநியாய பேதங்கள் பெயரைச் சொல்வேன்
துண்டுபட்டுத் தேசங்கள் என்றிருத்தல்
தூய்மையாம் இனம்மொழிகள் மதங்க ளென்று
அன்றுதொட்டிங் கின்றுவரை இருக்குமந்த
அர்த்தமிலாப் பிரிவினைகள் எல்லாம் சாகும்.
ஒன்றுபட்டிவ் வுலகெல்லாம் ஒற்றையாகும்
ஒருமொழியில் ஓரரசு பிறக்குமப்பா.

அரசெல்லாம் ஒழிந்துலகில் ஓரரசே யுண்டாம்
அறங்கூறும் ஒருமதமே உலகெல்லாம் ஆகும்
விரசமொடு விகற்பங்கள் வளர்க்குமொழி எல்லாம்
வீழ்ந்துவிடும் ஒருமொழியே இவ்வுலகில் உண்டாம்
சரசமொடு உலகத்து மககளெல்லாம் தம்மைச்
சமானர்கள் மனித்குலம் என்ற இன மென்பார்
அரசர்கள் ஏழைபணக்காரனென்ற பேதம்
அத்தனையும் ஒழிந்து விடும் எதிர்கால உலகில்.

செந்தமிழும் சாமீழச் சிங்களமும் சாகும்
செகமெல்லாம் ஒருமொழியே தலை தூக்கி நிற்கும்.
நந்தமிழர் இனம் இனஞ்சாகும் பிற இனமும் சாகும்
நாடெல்லாம் மனித இனம் ஒன்றுதலை தூக்கும்.
எந்தமொழி இவ்வுலகில் நிலவுமெனக் கேட்பில்
எண்ணீக்கை கொண்டமொழி எம்மொழியோ இங்கு
அந்த மொழி தானப்பா அரசாகும் உண்மை
அதுநன்று தானப்பா பிரிவினைகள் ஒழிதல்.

நிகழ்காலச் செந்தமிழர் இது கேட்டுச் சீறி
நீசனுரை நிகழ்த்தாதே செந்தமிழே உலகின்
புகழ்மொழியாய் உலகத்தின் பொது மொழியும் ஆகும்
புதுமைதனை காண்பீர்கள் என்றுபுகன் றிடுவார்.
இகழ்ந்திடுவார் எதிர்காலச் சித்தனுரை தன்னை
இம்மியள வேணும்பி மானமில்லா மூர்க்கன்
நிகழ்காலத் திருந்திருந்தால் செய்வதறிந்திடுவோம்.
நெஞ்சுபிள ந் தெறிந்திருப்போம் என்றுனிகழ்த்திடுவார்.

பிறப்பாலே யானுயர்வு தாழ்வுரைக்க மாட்டேன்
பிறப்பாலே என்மொழியே சிறந்ததெனச் சொல்லேன்.
பிறப்பென்றன் வசமாமோ? பிரமத்தின் வசமாம்.
பீருவில் பிறந்திருந்தால் பீருமொழி பீடே
வெறிமிகுந்த நிகழ்காலத் தீதுணரமாட்டார்
விழழுக்கே பெருங்கலகம் விளக்கின்றார் அன்னார்
அறிவற்றே துன்பங்கள் அனவர்க்கும் விளைப்பவர்
ஐய்யய்யோ இவர்மடமை எனென்ன்று சொல்வேன்.

புதுயுகத்தின் குரல்போல் எதிர்காலச் சித்தன்
புகன்றமொழி கேட்டபின்னர் யானவனைப் பார்த்து
"எதிர்காலச் சித்தா உன் இனியமொழி கேட்டேன்.
எண்ணங்கள் விரிவடையும் என்னுடன் நீவந்து
மதி கெட்டார் வாழ்கின்ற வையகத்தில் புதிய
வாழ்வேற்றிச்செல்வாயோ என்றிறைஞ்சி நிற்க
மெதுவாகச் செவ்விதழ்கள் திறந்ததையுமங்கே
மென்னிலவுக் குஞ்சிரிப்புப் பிறந்ததையும் கண்டேன்.

காலத்தின் கடல் தாவி நீஇங்கு வந்த
காரணத்தால் ஏதறிவு என்பதை நீ கண்டாய்
ஞாலத்தில் நிகழ்கால மயக்கத்தி லுள்ளோர்.
ஞானத்தைக் கான்பாரோ? காணார்களப்பா
காலத்தை யான்தாண்டிக் காசினிக்கு வந்தால்
கட்டாயம் ஏனையவர்கள் ஏற்றிமிதித்திடுவார்
ஆலத்தைத் தந்தன்று சோக்கிரதரைக் கொன்ற
அன்பர்களுன் மனிதச் சோதரர்களன்றோ?

ஆதலினால் நிகழ்கால மனிதா அங்கு
யான்வரேன் நீபோவாய் என்றான் ஐயன்
காதலினால் கால்களென்னும் கமலம் தொட்டுக்
கண்ணொற்றி விடைபெற்றேன் திரை நீங்கிற்று.
பாதகர்கள் முழுமடைமைப் போர்கள் சூழும்
பாருக்கு நிகழ்காலம் வந்தேன் எங்கும்
தீதுகளே நடம்புரியும் நிலைமை கண்டு
திடுக்கிட்டேன் என்றிவர்கள் உண்மைகாண்டல்?

வள்ளூவர் நினைவு!

வள்ளுவனார் செய்திட்ட நிறைநூலைப் போற்றி
வாழ்த்தெடுக்க வந்திட்டேன் வன்கவிஞர் மன்றில்
தெள்ளுதமிழ்த் தீங்கவிதைத் தேனமுதம் நல்கும்
தெவிட்டாத நடராசர் கவியரங்கின் தலைவர்
விள்ளுகவி கேட்டோம்; பிறர்கவியும் கேட்டோம்
வேலணையூர் வீசுபுகழ் தொல்காவிய மன்றில்
வள்ளுவனார் புகழ்பாட வாய்த்ததொரு வாய்ப்பு
வாய்ப்பளித்த பண்டிதர்க்கு என்னுளத்தின் வாழ்த்து.

பாட்டாலே உலகத்தைக் கவர்ந்திட்ட பேரில்
பைந்தமிழர் தம்மிடையே வள்ளுவர்போல் யாரே?
பாட்டாளிக் கவிஎனவே அன்னவனைப் போற்றி
பரவிடுவேன் அதற்கும்பல் ஆதாரம் சொல்வேன்
நாட்டினிலே மிகச்சிறந்த நெசவென்னும் கலையை
நற்றொழிலாய்க் கொண்டிட்ட கவியரசர் கோமான்
பாட்டாக வடிவெடுத்தான் அநுபவத்தின் கோர்வை
பாரெல்லாம் போற்றுததைத் தமிழ்வேதம் என்றே.

மதங்களினை அடிப்படையாய்ப் பிறபுலவர் கொள்ள
மன்னுலக வாழ்வைமட்டும் வள்ளுவனார் கொண்டார்
விதவிதமாய் வீடென்றார் மோட்சமென்றார் மற்றோர்
வீரமிகும் வள்ளுவனார் அறம்பொருளோ டின்பம்
இதமாக இல்வாழ்வில் காணுமிவை மூன்றும்
இனிமையுள முப்பால்நூல் எற்றியுரைத்திட்டார்
இதுநல்ல மாற்றமென இங்கெடுத்துச் சொல்வோம்
இவர்குறளைக் கைஏந்தி இவ்வுலகை வெல்வோம்.

வறுமையினை ஒழித்திடுதல் வேண்டுமெனும் நெஞ்சம்
வள்ளுவனார் கொண்டிருந்தார் என்பதையார் இங்கே
வெறுமொழிஎன் றியம்பிடுதல் கூடுமிதோ பாரீர்
வேந்தரது அரண்சிறப்புச் சொல்லவந்தபோது
1"உறுபசியும் பிணிநோயும் செறுபகையும் சேரா(து)
உற்றிடுதல் ஒன்றல்ல நா"டென்று கேட்டார்
பெரும்பசியை முதற்குற்ற மெனஎடுத்துச் சொன்னார்
பெரும்புலவர் வள்ளுவனார் ஏழைகளின் தோழன்.

வள்ளுவனார் வழிவந்த பாரதியார் சொன்னார்
2"வையத்தை அழித்திடுவோம் தனிமனிதன் ஒருவன்
உள்ளநிறை வோடுண்ண உணவில்லை என்று
உளம்வருந்து வானாயின்" என்பதவர் பாட்டு.
வள்ளுவர் தாமும்பல் லாண்டுகட்கு முன்னர்
வழுத்தினார் இதன் பொருளை ஆவேசத்தோடு
3"தள்ளுவதோ வாழ்க்கையினைப் பிச்சைஎடுத் திங்கே?
அவிவிதமேல் சாய்காந்த ஆண்டவனும்" என்றார்.

நெசவுசெயும் தொழிலாளி நேர்மையுள நெஞ்சன்
செய்திட்ட நிறைநூ லில் பெய்திட்ட எண்ணம்
இசைவுடனே காலத்தை வென்றிங்கு வாழும்!
எல்லைகளைக் கடந்திங்கு உலகெல்லாம் சூழும்!
திசையெல்லாம் கேட்கட்டும் திருக்குறளின் கோஷம்!
தீரட்டும் ஓயட்டும் தீயர்வெளி வேஷம்!
இசைநூலை நாமிழந்தோம் நாடகமும் இழந்தோம்
ஏதிழந்தா லுமிந்தக் குறளொன்று போதும்.

கடலெழுந்து விம்மியது காவிரியின் நீரில்
கடல்வெள்ளம் கலக்கின்ற புகாரென்னுமூரில்
கடலுண்ட தய்யாநம் கற்கண்டுத் தமிழை
கணக்கில்லா நூல்கலெள்ளாம் கடலோடு போச்சு!
கடலுக்குத் தமிழினிமை தெரிந்ததனால் வந்த
காரியமோ யாமறியோம்! செந்தமிழர் நாட்டுக்
கடலன்றோ கவியமுதின் சுவைதெரிந்த தென்று
கவிராயர் சொலக்கூடும்! சத்தியமும் அதுவோ?

நீருண்ட இவைபோக இருப்பதெல்லாம் எச்சம்
நெருப்போடு கறையான்கள் உண்டவற்றின் சொச்சம்
பாரிடத்தே பைந்தமிழின் நூலெல்லாம் சேர்த்துப்
பஷ்மீகர மானாலும் குறளென்னும் சொத்து
ஊரிடத்தே எஞ்சிநின்றால் அ·தொன்று போதும்
உற்றகுறை எங்களுக்கு இல்லை இவன் யாதும்
நேரில்லா வள்ளுவனார் குறள்வாழ்க வாழ்க
நிறைநூ லின் கருத்திந்த உலகெல்லாம் சூழ்க.

கலைக்காகக் கலைஎன்று கதறுபவர் உண்டு
கருத்துக்கே முதன்மை தரும் வள்ளுவனார்கண்டு
கலைஇந்தச் சமுதாய வளர்ச்சிக்கே என்று
கருத்துடையார் உணரட்டும் காசினியில் அன்று
விலையில்லாத் திருக்குறளைத் தந்திட்ட மேதை
வியனுலகில் காட்டுகின்றார் பாதையதே பாதை.
கலைஞர்களே எழுந்திடுங்கள் வள்ளுவனார் காட்டும்
கவினுடைய பாதையிலே பேனாவை ஓட்டும்.

செந்தமிழர் நாட்டுக்குப் புகழ்தருமோர் நூலின்
சிறப்புசில எடுத்துரைத்தேன் என் அறிவில் பட்ட
பைந்தமிழ்நற் கருத்துக்களைப் பகர்ந்துள்ளேன் இங்கு
பகர்ந்தவற்றில் கொள்வதனைக் கொள்வீர்கள் மற்ற
நொய்ந்திட்ட கருத்துக்களை நோயென்று தள்ளீ£ர்
நுவலரிய புகழ்பெற்றாள் தமிழன்னை பெற்ற
மைந்தர்களே மாநிலத்தில் குறள்புகழைப் பாடி
மகிழ்ந்திடிவீர் நீவிரிங்கு நீடூழி வாழி.

-வேலணையூர்த் தொல்காவிய மன்றில் நடைபெற்ற தமிழ்மறை விழாக் கவியரங்கில் அ.ந.கந்தசாமி பாடியவை.-

நான் செய் நித்திலம்!

வானிலோர் முத்தினை வைத்திழைத் ததுபோல்
வளர்மதி தவழ்ந்தது; மாடியின் மீதுயான்
இப்பி ஒன்றில் முத்தொன் றிட்டனன்;
கழிந்தது; கழிந்தபின் என்மனை விளங்கக்
கண்ணன் போலொரு கனிவாய்க் குழந்தை
வந்தது; வந்தபின் வாணிலா முகத்தென்
மனையாள் அதைஎன் மடியிடைக் கிடத்தி
ஈரைந்து திங்களின் முன்னால் ஒருநாள்
நீங்கள் செய்த நித்திலம் இதுவே.
என்று கூறி மகிந்தனள்; அவள் கண்
ஓரம் கண்டேன்; ஒளிமுத் தொன்று
அங்கு துடித்ததும் கண்டனன்; அவள் விழி
தொட்டேன்; முத்துத் தீய்ந்தது; மகிழ்ச்சியில்
உள்ளத்திப்பியில் உதித்துக் கண்வழி
வந்தஅம் முத்தில் வையகத் தின்பம்
யாவும் கண்டனன்; அம்முத்தெனது
மடியிடைக் கிடந்த மணிமிசை விழுந்திட
மணியை எடுத்துநான் மலர்க்கரம் தடவி
உச்சி மோந்தே உளம்மகிழ்ந் திட்டேன்.
நான் செய் நித்திலம் தேன் செய்ததுவே!

வில்லூன்றி மயானம்!

நாட்டினர்நீர் அறிவீர் வில்லூன்றி தன்னில்
நாம் கண்ட ஈமத்தீ வெறுந்தீ அன்று
கேட்டினிலே உளபிணத்தை உண்பதற்குக்
கிளர்ந்தெழுந்த தீயன்று நெடுநா ளெங்கள்
நாட்டினிலே கிளைபரப்பும் சாதி என்னும்
நச்சுமர வீழ்ச்சியினைக் காண்பதற்காய்க்
வாட்டமுற்ற மக்களுளம் கனன்று பொங்கும்
வல்லதொரு புரட்சித்தீ வாழ்க வ·து.

மக்கள்குல மன்றோநாம் மரமோ கீ¢ழாம்
மாடுகளோ விலங்குகளோ கூறும் என்று
திக்கற்றான் நெஞ்சினிலே பிறந்த வைரத்
தீ அதுவாம் திசை எங்கும் பரவுதற்கு
மக்கள்நாம் மறுப்பதெவர் என்று கூறி
மாவுரிமைப் போர்தொடங்கி விட்டான் அந்தத்
திக்கதனை வில்லூன்றித் திருத்த லத்தைச்
சிர்ந்தாழ்த்தி வணங்குவோம் புனித பூமி.

கேளீர் ஓர் வீரமிகு காதை ஈது.
கிளரின்பம் நல்குமொரு சேதி யன்றோ?
பாழினிலே பயந்திருந்த பாம ரர்கள்
பலகாலந் துயில்நீங்கி எழுந்துவிட்டார்
வாழியரோ வரப்போகும் நவயு கத்தின்
வளக்காலை இளம்பருதி வரவு ணர்த்தும்
கோழியது சிலம்பலிது வெற்றி ஓங்கல்
கொள்கைக்காதரவு, நல்குவோம் நாம்.

பரம்பரையாய்ப் பேணிவந்த பழக்கமென்று
பழங்கதைகள் பேசுகின்றார் மனிதர் பார்ப்பின்
பரம்பரையாய்ப் பேணிடினும் தீயதான
பழக்கமெனப் பகுத்தறிவாற் கண்ட பின்னும்
சிரங்குவிப்பதோ அதற்கு? மூடச் செய்கைச்
சிறுமைஎன்று செகமெல்லாம் நகை நகைத்துச்
சிரிபபதற்குச் செவிதாரீர் தீண்டாய்ப் பேயின்
சிரங்கொய்தே புகைத்திடுவோம் வாரீர் வாரீர்.

அன்னையார் பிரிவு!

ஒப்பரிய காந்தியரி னொப்பில் லாத
ஓர்மனைவி செம்மையறங் காத்த சீர்மைச்
செப்பரிய பெரும்புகழாள் தேய மெல்லாம்
தாயெனவே செப்பிடுமோர் இல்லின் தெய்வம்;
இப்புவிதான் கலங்கிடவும் இந்தியத்தாய்
அழுதரற்றிக் கூவிடவும் இறந்துபட்டாள்;
இப்பெரிய துன்பந்தான் இதயந் தன்னை
ஈர்க்குதே இந்தியர்கள் வேர்க்கின்றாரே!

பாரதத்தின் மக்களெல்லாம் காந்திதம்மைப்
பண்புடைய பிதாவென்றும் அம்மையாரைச்
சீருதவும் செவ்வியளாம் மாதாவென்றுஞ்
சிந்தையிலே நினைத்திருந்தார் அந்தோ வின்று
நீருகுத்து நிலைகலங்கல் ஆனா ரன்னை
தனைப்பிரிந்தே வாடுகின்றார்; நீளுந் துன்பம்
பாரிடத்தெ கொண்டுவிட்டார் செயல்ம றந்து
பரிதவித்துப் பதறுகின்றார் என்னே துன்பம்!

மாரியினிலே பெருமழைதான் கொட்டுகின்ற
காரிரவில் பல்லிடிகள் பின்னே வந்த
பேரிடிபோல் வந்ததையோ! அன்னை யாரின்
பிரிவுதனை என்னசொல்வேன்; காந்தியாரின்
சீரினிய பத்தினியே! சிறப்பின் மிக்க
கஸ்த்தூரி யன்னாய்! எம் கருத்தே! கண்ணே!
பாரினிலே யெமைவிட்டும் சென்றாய்! இ·தோ
பண்புடையார் செயல்? நம்மை மறந்தாய் கொல்போ?

சீதையும் சாவித்திரியாம் தேவி மற்றும்
சிறப்புள்ள நளாயினி என்போரெல்லாம்
காதையிலே உலாவுகின்ற கன்னியர்கள்
கடுகேனும் உண்மையங்கு இல்லை யென்று
ஓதியவர் தலைநாணச் செய்து பெண்மைப்
பெருங்குலத்தின் உயர்வுதனை நாட்டினாய்! நல்
மாதரசே! மாதர்களை முன்னே வைத்தாய்
உன்வாழ்வு மாதிரியை மறத்த லாமோ?

நகரம்!

நகரத்துக் கூச்சலெல்லாம் நடுத் தெருவினிலே மோதிப்
பகர்தற்கு பிரியதான குழப்பத்தை உண்டுபண்ணும்
சகலர்க்கும் ஏதோ இந்த 'சட்டுப்புட்' அவசரந்தான்
அகலக் கால் வைத்து அங்கு மாந்தர்கள் பாய்கின்றாரே!

அப்பப்பா! மனிதர் தம்மில் ஆயிரம் வகைகள் உண்டோ!
தொப்பிக்குள் புகுந்திருப்போர் தொந்திகள் பருத்தோர்மற்றும்
சப்பாத்துக் காலர் நல்ல சால்வைகள் தரித்தோர் என்று
எப்படி எல்லாம் எங்கள் இனத்தினில் மாறுபாடு?

பெண்களைப் பற்றி எம்மால் பேசிடப்போமோ? சில்லோர்
கண்களை மறைக்கும் நீலக் கண்ணாடி தரித்தோர் கையில்
வண்ண நற் குடையர் சேலை வனப்புற அணிந்தோர் தங்கள்
பொன் மேனியால் குமரர் புத்தியும் இழந்து போனார்.

ட்ராமோடும் பஸ் ஓடும் காரோடும் சைக்கிள் ஓடும்
ட்ராமோடத் தாமோடி ஏறுவர் சில்லோர் நல்ல
தாமரை முகமொன்றந்த ட்\ராமிலே தளிர்க்க அ·தை
காமனின் அம்பு தாக்கக் களிப்பொடு பார்ப்பார் சில்லோர்

ரிக்ஷாக்கள் என்னுமந்த மனிதரைப் பூட்டி ஓட்டும்
ஜட்காக்கள் தாமும் ஓடும் சந்திகள் தம்மில் கார்கள்
உட்கார்ந்து விடும்கொடிய ட்ரபிக்ஜாம்கள் என்று சொல்வார்.
கட்பார்வைக்கு எங்கும் கும்பல் குழப்பமே! கூச்சல்தானே!

நகரத்தில் கனத்தொகைக்கு நலிவில்லை இருந்த போதும்
அகத்தினைத் திறந்து பேச ஆட்கள் இல்லைப் பார்த்தால்
வகை வகை மரம் வளர்ந்து மண்டிய காடும் போல்தான்
நகரத்தின் பண்பு இங்கே மனிதப் பண்பில்லை யம்மா!

காற்றிலே தூசு சேரும் கட்டுடல் வெயர்வை சேரும்
நூற்றிலே ஒருவரில்லை அடுத்தவர் நினைவு கொள்ளல்
நாற்றம் சாக்கடையைச் சேர நற்கொசுக் கூட்டம் மண்டி
தூற்றலைப் போல் சுருதி ஒன்றினை எழுப்பும் காணீர்!

சிற்றிடை மாதரர்கள் சிகை அலங்கார மென்னே!
கற்றை போல் பாம்பைப்போல் கரியதோர் மதியைப் போல்
புற்றைப் போல் புதரைப் போல் புதுப்புது மோஸ்தரெல்லாம்
கற்ற காரிகையர் செய்கை கணக்குக்கும் அடங்குமோதான்!

செல்வத்தின் செழிப்பு ஓர்பால் தீயதாம் வறுமை என்னும்
கொல்புலி வாயிற்பட்ட கும்பலோ மறு பக்கத்தில்
பல்விதப் பண்பும் சேர்ந்து கணமேனும் அமைதிப் பண்பு
நல் விதம் தோன்றா இந்த நகரம் கொல் நர கமாமே!

- சுதந்திரன் மார்ச் 18, 1951

அ.ந.கந்தசாமியின் நெடுங்கவிதை: கைதி!

1.
சட்ட மென்னும் கருங்கல்லால்
சமைத்த சிறைவீ டிதுவாகும்
சட்டம் சரியோ பிழையோ நான்
சாற்றவறியேன் அறிவதெலாம்
கஷ்ட்டமிந்தச் சிறை வாழ்வு
கருங்கற் சுவரும் பலமாகும்
மற்றதெல்லாம் எற்றுக்கு
மனதே வீணில் அலைவதுமேன்?

2.
சிறைவீ டென்று கூறிவிட்டால்
சிறியோர் தாமோ அங்கிருப்போர்?
நிறைந்த அறிவின் அலைவீசும்
நீலக் கடலே அனையாரும்
திறந்தே இருளைப் பிளந்தொளியை
திக்கிற் சிதற் விட்டோரும்
மறைந்தே உறைந்த ஆலயமாம்
வணங்கற்குரிய கோவிலிதாம்!

3.
கிரேக்க ஞானி சோக்ரரும்
கீழைத்தேச மகாத்மாவும்
உரைக்க வொண்ணா நற் பெருமை
உத்தமரின்னும் பல நூறாய்த்
தரைக்கே உண்மை வழிகாட்ட
தாரணி தோன்றிய நன் மலர்கள்
சிறைக்கே சுகந்தம் வீசி நின்ற
சிறுமை உலகம் இதுவன்றோ?

4.
பெரியோர் வாழ்ந்த இச்சிறையில்
பேதை நானும் இடம் பெற்றேன்!
அரிதே இந்த அதிர்ஷ்டத்தை
அறிந்த நண்பர் யாவர்க்கும்
விரிவாய் உரைத்து மகிழ்தற்கு
விலங்காய் அமைந்த கொடுஞ் சிறையே!
சரிந்தே உந்தன் சுவரெல்லாம்
சாய்ந்தே ஒழிந்து போகாவோ?

5.
வானின் சிறிய மலர்கள் போல்
வாவும் வண்ணப் பறவைகளை
கான வேடன் கைப்பற்றி
கட்டிக் கூட்டில் இட்டதுபோல்
மானிடப் புள்ளின் சிறகதனை
மழுங்க வெட்டிச் சிறைவைக்கும்
நானிலப் புல்லர் கூட்டம்போல்
நாசகாரர் இங்குண்டோ?

6.
பறவை நல்லூன் உணவாகும்
பயனைக் கருதி அடைக்கின்றார்!
கறவைப் பசுவைப் பாலுக்காய்க்
கட்டிவைத்துக் கறக்கின்றார்!
வறிதே மனிதர் கூட்டத்தைச்
சிறையில் வைத்து வளர்க்கின்றார்!
சிறையில் வாழ்ந்தேன் ஆயினுமிச்
சிறுமை சிரிப்பைத் தந்திடுமே!

7.
களவு செய்தால் சிறையென்று
கனன்றே என்னை இங்கிட்டார்!
களவு களவு என்ப தெல்லாம்
கருத்தைச் செலுத்திப் பார்க்கையிலே
முழுதும் பெரிய விளையாட்டே
மூடத்தனத்தின் முடிபேயாம்!
களவு களவு என்ற பதக்
கருத்தை நானும் கழறுவனே!

8.
உள்ளவனிடத்தில் இல்லாதான்
உணவின் உடையின் தேவைக்காய்
மெல்லச் சிறிதே எடுத்திட்டால்
மேதினி அதனைக் களவென்னும்!
உள்ளவனிடத்தில் அல்லாமல்
உடைமை யற்றவன் கையிருந்து
இல்லா மனிதன் எடுப்பதற்கு
எங்ஙன் முடியும் இயல்பு வீரே!

9.
இன்னும் கூறுவன் கேளுமினோ!
இல்லாமனிதன் உள்ளவனைப்
பன்னிப் பன்னிக் கேட்டாலும்
பயக்கும் பயனோ மிகச் சொற்பம்!
சென்னியில் அடித்துப் பறித்தாலோ
சிவந்த ரத்தம் வீணாகும்!
அண்ணல் காந்தி சொல்லிவைத்த
அகிம்சை வழியே களவாகும்!

10.
கள்வர் கள்வர் எனக்கூறி
கருணையற்றோர் ஏழைகளை
மெள்ள இங்கே தள்ளுகிறார்
மேலாம் செல்வர் பகலினிலே
கொள்ளை அடிப்போர் உலகெங்கும்
குவையாய்ப் பணத்தில் புரள்கின்றார்!
கள்வர் தமக்கே சிறையென்றால்
அவர்க்கே முதலிடம் தருவீரே!

11.
களவு பிடிக்கும் சட்டமெல்லாம்
காசினி வதியும் செல்வர்களே
அழகாய்த் தம்பொருள் காப்பதற்கு
ஆக்கி வைத்த தந்திரமாம்!
வளமார் கிளிகள், பறவையினம்
வனத்தில் வதியும் விலங்குகளில்
களவுச் சட்டம் ஒன்றுண்டோ?
கழறும் கவிதை ரசிகர்களே!

12.
சிறையில் உடலைப் பிணித்தாலும்
சிந்தனை சிறகு தீயவில்லை!
முறையாய் நினைவு முழுவதுமே
முழங்கித் தீர்க்கத் தருணமிலை!
சிறைவாய்க் கதவை நோக்குகிறேன்,
இரும்புக் கம்பிகள் எண்ணுகிறேன்
சிறையே! என்னுளம் கவிதையினால்
சிலிர்க்க வைத்தாய் நீ வாழ்க!

13.
இரும்புக் கம்பிகள் பின்னால் நான்
இருந்து குமையும் வேளைகளில்
இரும்புக் கம்பிகள் எத்தனை யென்
றெண்ணி எண்ணி அலுத்துவிட்டேன்!
திரும்பத் திரும்ப எண்ணிடிலும்
திடமாம் கம்பிகள் பதினெட்டே!
திரும்பத திரும்ப எண்ணுவதேன்
திடுமெனக் கூடிக் குறையுமென்றா?

14.
கருங்கற் சுவரைப் பார்க்கின்றேன்
கருமைந் நிழல் படர்ந்துள்ள
நெருங்கும் சந்துகள், மூலைகளில்
நெஞ்சம் செலுத்தி நோக்குகின்றேன்!
கருங்கற் சுவரின் இடையினிலே
காணும் சிறையே! இவ்வுலகின்
கருங்கல் லிதயத் துறைகின்ற
காரிருள் சின்னம் நீயேதான்!

நன்றி: சுதந்திரன் ஆகஸ்ட் 5, 1951.

***************

அ.ந.க. பற்றி மேலும் சில இணைய இணைப்புகள்:

1.அறிஞர் அ.ந.கந்தசாமியின் 15 கவிதைகள்! http://www.geotamil.com/pathivukal/poems_15_ANK.htm
2.கவீந்திரனின் (அறிஞர் அ.ந.கந்தசாமியின் ) கவிதைகள் சில ..http://www.geotamil.com/pathivukal/poems_september2008.htm#ANK
3.அறிஞர் அ.ந.கந்தசாமி http://www.geotamil.com/pathivukal/poems_ank.html
4.அ.ந.க.ந்தசாமியின் படைப்புகள் சில: http://www.geotamil.com/pathivukal/ank_unicode_november2006.htm
5.அறிஞர் அ.ந.கந்தசாமி! பன்முக ஆளுமையுள்ள ஈழத்திலக்கிய முன்னோடி!
சிறு அறிமுகம்! http://www.geotamil.com/pathivukal/ANKANTHASAMI.html
6.அ.ந.கந்தசாமியின் வலைப்பதிவு: http://ankanthasamy.blogspot.com/
7. சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன் - அந்தனி ஜீவா.http://www.geotamil.com/pathivukal/ankbyanthonyjeevaa.html
...
ngiri2704@rogers.com