Wednesday, October 24, 2007

தொடர் நாவல்: குடிவரவாளன்! - வ.ந.கிரிதரன் -



அத்தியாயம் இருபத்தேழு: இன்று புதிதாய்ப் பிறந்தேன்!

1.நாளை மறுநாள் அவன் அமெரிக்க மண்ணில் காலடி வைத்துச் சரியாக ஒருவருடமாகப் போகின்றது. இளங்கோவுக்குக் காலத்தின் கடுகதிப் பயணம் ஆச்சரியத்தைத் தந்தது. பால்யகாலத்தில் ஒரு வருடம் ஒன்பதுவருடங்கள் போல ஆறுதலாக விரைந்ததுபோல் இப்பொழுது நினைத்துப் பார்க்கும் போதிருக்கிறது. எந்தவித வாழ்க்கைப் போராட்டங்களையும் சுமக்க வேண்டிய பொறுப்புகளின்றி, சுதந்திரச் சிட்டுக்களாகப் பெற்றோரின் அரவணைப்பில் பொழுது எவ்வளவு ஆறுதலாக, இனிமையாகக் கழிந்தது? இரவுகளில் கொட்டிக் கிடக்கும் சுடர்களை, மின்மினிகளை, முழுநிலவை, பெருவிழி ஆந்தைகளை, நத்துக்களை, அணில்களை, விண்ணில் கோடிழுக்கும் நீர்க்காகங்களை, குக்குறுப்பான், கொண்டைக் குருவி, மாம்பழத்திக் குருவி, ஆலா, ஆட்காட்டி, ஊருலாத்தி, கிளி, மைனா, மணிப்புறாவெனப் புள்ளினங்களையெல்லாம் இரசிப்பதற்கு நிறையவே பொழுதுகளிருந்தன. ஆனால் இன்று... இருத்தற் போராட்டத்தின் சுமைகளையெல்லாம் தாங்கவேண்டிய சூழலில், இரசிப்பதற்குக் கூடப் பொழுதுகளில்லை? அவ்வளவு விரைவாகக் அவற்றின் பயணம்! இருந்தாலும் இவ்வளவு இடர்களுக்கிடையிலும் ஒரு சில நூல்களையாவது படிப்பதற்கு அவனால் முடிந்தது. சிந்திப்பதற்கு முடிந்தது. இந்த ஒரு வருடத்தில் அவன் வாழ்வு ஏதாவது பயன்களைப் பெற்றிருக்கிறதா? பொருளியல்ரீதியில் பலவகை அனுபவங்களைத்தவிர எந்தவிதக் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களுமில்லை. ஆனால் ஒன்று... இந்த அனுபவங்கள் மிகுந்த பயனுள்ளவை. இருப்பின் பல்முனைத் தாக்குதல்களையும் உறுதியுடன் உள்வாங்கி, நம்பிக்கையுடன் எதிர்த்து நடை பயிலும் பண்பினை அவனுக்கு அளித்துள்ளவை இந்த அனுபவங்கள்தான். 'அச்சமில்லை, அமுங்கதலில்லை. நடுங்குதலில்லை நாணுதலில்லை. பாவமில்லை, பதுங்குதலில்லை. ஏது நேரிடினு மிடர்ப்பட மாட்டோம். கடல்பொங்கி எழுந்தாற் கலங்க மாட்டோம். யார்க்கு மஞ்சோம். எதற்கு மஞ்சோம். எங்கு மஞ்சோம். எப்பொழுது மஞ்சோம். வான் முண்டு. மாரியுண்டு. ஞாயிறுங் காற்றும் நல்ல நீரும், தீயு மண்ணும், திங்களு மீன்களும் உடலுமறிவு முயிரு முளவே' என்னும் உறுதியான மனப்பாங்கினை அவை அவனுக்களித்துள்ளன.

வவுனியா நண்பன் ஜெயரட்ணத்தின் உணவகத்திலும் சிறிது காலம் நண்பகற் பொழுதில் உணவு விநியோகிக்கும் பணியாளாகப் பணி புரிநது பார்த்து விட்டான். அதற்குப் பின் சிறிது காலம் வங்க நண்பன் கோஷின் தொழிற்சாலையிலும் தொழிலாளியாக வேலை பார்த்தான். அதுவும் ஓரிரு மாதங்களே நீடித்தது. அதன் பின் வழக்கம்போல் மீண்டும் இருப்புடனான போராட்டம் தொடங்கி விட்டது. ஏற்கனவே முடிவு செய்திருந்ததன்படி மேலும் இந்த மண்ணில் தொடர்ந்திருப்பதை நினைத்துப் பார்க்கவே அவனால் முடியாததாகவிருந்தது. எந்தவிதச் சட்டபூர்வமான ஆவணங்களுமின்றி , பொருளியல்ரீதியில் ஒருவித உறுதியான நிலையினை அடைந்து, ஆழமாக வேரூன்றுவதற்கு முடியாமலிருந்தது. இந்த நிலையில் அவன் ஒரு முடிவுக்கு வந்தான். நாளை மறுநாள் இந்த மண்ணில் காலடிவைத்துச் சரியாக ஒருவருடமாகிறது. அடுத்த வருடத்தின் முதல் நாளன்று அவனால் இந்த மண்ணில் ஒரு கணம்கூட இருக்க முடியாது. நாளை மறுநாளிரவு அவனது வாழ்வின் அடுத்த கட்டம் ஆரம்பமாகவேண்டும். மீண்டும் முதலிலிருந்து, அடிமட்டத்திலிருந்து, நம்பிக்கைகளுடன், கனவுகளுடன், எதிர்பார்ப்புகளுடன், உற்சாகத்துடன் அவனது இருதத்லுக்கான பயணம் தொடங்க வேண்டும். இதற்கு ஒரே வழி.. எந்த மண்ணை நோக்கிக் கடந்த ஆவணி மாதத்தில், ஈழதில் வெடித்த இனக்கலவரத்தைத் தொடர்ந்து அவன் புறப்பட்டானோ, எந்த மண்ணை நோக்கிய அவனது பயணம் இடையில் இந்த மண்ணில் தடைபட்டதோ, அந்த மண்ணை நோக்கி, கனடாவை நோக்கி, அவனது பயணம் மீண்டும் புதிதாக ஆரம்பிக்க வேண்டும். கையிலுள்ள இருநூறு டாலர்களுடன், அவன் மீண்டும் தன் பயணத்தை ஆரம்பிக்க வேண்டும். இவ்விதமாக இறுதித் தீர்மானமெடுத்தவுடன் அன்றிரவு அவன் தன் அறை நண்பர்களுக்குத் தன் எதிர்காலத்திட்டங்களை எடுத்துரைத்துப் பிரிவதற்கு முன்னர் அவர்களுடன் இறுதிப் பொழுதினை மகிழ்ச்சியுடன் கழிக்க வேண்டுமென்றும் எண்ணிக் கொண்டான். இவ்விதமாக உறுதியானதொரு முடிவினைத் தன் எதிர்காலம் பற்றியெடுத்ததும், அவனது நெஞ்சின் பாரம் சிறிதளவு குறைந்தது. அந்தவிடத்தை களியுடன் கூடியதொரு உற்சாகம் கலந்த உணர்வுகள் ஆக்கிரமித்துக் கொண்டன. அன்றிரவு அறை நண்பர்களுடன் ஆனந்தமாகக் கூடிக் கதைத்தான்.

அவனது முடிவுக்கு கோஷ் ஆதரவளிக்கவில்லை. அவனது நிலைப்பாடு இளங்கோ இன்னும் சிறிது காலமாவது இருந்து முயன்று பார்க்கலாமென்பதாகவிருந்தது. ஆனால் அருள்ராசா அவ்விதமே சிறிது காலம் மேலுமிருந்து முயன்று பார்ப்பதற்கு முடிவு செய்திருந்தாலும், இளங்கோவின் திட்டங்களுக்குத் தடைபோட அவன் விரும்பவில்லை. இவ்விதமாக அவர்கள் உரையாடிக் கொண்டிருந்தபொழுது கோஷ் இவ்விதமொரு கேள்வியினைத் தொடுத்தான்:

"உங்களுக்கு இழைத்த மனித உரிமை மீறல்களுக்காக உங்களது வழக்கறிஞரின் ஆலோசனையில் அமெரிக்க அரசுக்கெதிராக வழக்கு போட்டீர்களே? அதன் நிலை என்னவாச்சு?"

இதற்கு அருள்ராசாவே இடைமறித்துப் பதிலளித்தான்: "அண்மையில் எங்கள் சட்டத்தரணியைச் சந்தித்தபபொழுது இதுபற்றி நாங்களும் அவரிடம் கேட்டிருந்தோம்?"

கோஷ்: "அதற்கவனென்ன சொன்னான்?"

அருள்ராசா: "அவனது பதில் புதிராகவிருந்தது. அவன் கூறினான் நாங்கள் அந்த வழக்கினைத் தொடர்ந்து நடத்தினால் அமெரிக்க இராஜங்கத் திணைக்களத்தினால் ஊரிலுள்ள எங்களது உறவினர்களுக்குப் பிரச்சினைகள் வருமாம்? அதனால் அவ்வழக்கை அப்படியே போட்டுவிடுவதே நல்லதாம். எனக்கென்றால் அவனது கதை விளங்கவேயில்லை. அப்படியென்றால் எதற்காக அவனாகவே எங்களைத் தூண்டி அவ்விதமாக வழக்குப் போடும்படி செய்தான்?"

இதற்கு கோஷ் இவ்விதமானதொரு காரணத்தை முன்வைத்தான்: "எனக்கென்றால் இந்த விடயத்தில் அவனை நம்ப முடியாமலிருக்கிறது.... என்னைப் பொறுத்தவரையில் நான் என்ன நினைக்கிறேனென்றால்...."

இவ்விதம் கோஷ் இடை நிறுத்தவே இளங்கோவும் அந்த உரைடாடலில் கலந்து கொண்டான்: "கோஷ். உன்னைப் போல்தான் எனக்குமிந்த விடயத்திலொரு சந்தேகம். முதலில் உன்னுடையதைக் கூறு.".

கோஷ்: "நான் என்ன நினைக்கிறேனென்றால்... அமெரிக்க இராஜத் திணைக்களம் அவனுடன் சேர்ந்தொரு இணக்கத்துக்கு வந்திருக்கலாம். இந்த வழக்கை எடுக்காமல் அப்படியே விடுவதற்கு உங்களது வழக்கறிஞருக்கு அமெரிக்க அரசால் ஏதாவது கடுமையான அழுத்தம் கொடுக்கப்பட்டு, பணமேதாவது கைமாறியிருக்கலாம். யார் கண்டது? நீங்களோ சட்டவிரோதக் குடிகள். இந்த வழக்கை அவன் தொடர்ந்து நடத்தி, ஒரு சமயம் வெற்றியடைந்திருந்தால், உங்கள் நிலையிலுள்ள பலர் மேலும் இதுபோன்ற வழக்குகள் தொடர்வதற்கு அதுவொரு முன்மாதிரியாகவந்து விடக்கூடிய சாத்தியமுமிருக்கிறது. அவ்விதமானதொரு சூழல் அமெரிக்க அரசுக்கு அரசியல்ரீதியிலும், பொருளியல்ரீதியிலும் பலத்த பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடிய சாத்தியக் கூறுகளிருப்பதையும் மறுப்பதற்கில்லை. இவற்றைப் பார்த்தால் 'மேசைக்கடியால்' பணம் கைமாறப்பட்டு முளையிலேயே இந்த வழக்கு கிள்ளியெறியப்பட்டுவிட்டதுபோல்தான் எனக்குத் தோன்றுகிறது."

அருள்ராசா: "என்னைப் பொறுத்தவரையில் நான் இதைப்பற்றிக் கவலைப்படவில்லை. அவனாகவே ஆரம்பித்தான். அவனாகவே முடித்துக் கொண்டான்."

இளங்கோ: "என் நிலையும் அதுதான். நாங்கள் ஆரம்பிக்காதவொன்று. சமயம் வந்தால் ஒருகாலத்தில் உண்மையினை அறிய முயற்சிக்கலாம். அவ்வளவுதான்."

கோஷ்:"என்றாலும் உங்களது வழக்கறிஞன் சரியான கெட்டிக்காரன்தான். அவன் காரியம் முடிந்து விட்டது. பணம் அவனது கைக்கு வந்திருக்கும்பட்சத்தில் அவன் கவலை முடிந்தது."

அத்துடன் அவர்கள அந்த விடயம் பற்றிய உரையாடலினை நிறுத்திவிட்டு வேறு விடயங்களில் கவனத்தைச் செலுத்தினார்கள். இந்தச் சமயத்தில் திருமதி பத்மா அஜீத் அவர்களது அறைக்கு அவ்வாரத்துக்குரிய வாடகைப் பணத்தை வாங்கும்பொருட்டு வந்தாள். வந்தவள் அவர்களது உரையாடலிலும் பங்கெடுத்துக் கொண்டாள். "என்ன பலமானதொரு விடயத்தைப் பற்றி உரையாடுவதைப் போலொரு தோற்றம் தெரிகிறதே.." என்றாள்.

அதற்கு கோஷ் " நீங்கள் கூறுவது சரிதான். உங்களுக்குத்தான் பெருத்த நட்டம்?" என்றான்.

அதற்கு திருமதி அஜீத் "என்ன எனக்குப் பெருத்த நட்டமா? என்ன சொல்லுகிறீர்கள்? எனக்கு ஒன்றூமே விளங்கவேயில்லையே?" என்றாள்.

அதற்கு கோஷ் "பின்னே! இளங்கோ மாதிரி நல்லவனொருவனை வாடகைக்கு இந்த மண்ணில் தேடிப்பிடிப்பதென்பது அவ்வளவு இலகுவான வேலையா என்ன." என்றான்.

அப்பொழுதுதான் திருமதி அஜீத்துக்கு விடயம் ஓரளவுக்கு விளங்கியது. அவள் இளங்கோ பக்கம் திரும்பியவளாக "என்ன இளங்கோ? கோஷ் சொல்லுவது உண்மையா? நீ இந்தவிடத்தை விட்டு வேறெங்காவது போகப் போகிறாயா? " என்றாள்.

இதற்கு அருள்ராசா பதிலளித்தான்: "அவன் இந்த இடத்தை விட்டுமல்ல, இந்த மண்ணையும் விட்டுப் போகப் போகின்றான். அதுபற்றித்தான் பேசிக் கொண்டிருந்தோம்."

திருமதி பத்மா அஜித் இளங்கோவைப் பார்த்து "எங்கு போவதாக உத்தேசம்?" என்றாள்.

இதற்கு இளங்கோ வழக்கம்போலவே அவளை 'திருமதி பத்மா அஜித்' என்று விளித்துப் பின்வருமாறு தொடர்ந்தான்: "இந்த மண்ணில் காலடியெடுத்து வைத்து ஒருவருடமாகப் போகிறது. இதுவரையில் பொருளியல்ரீதியிலும்சரி, குடியுரிமைரீதியிலும் சரி ஒருவித முன்னேற்றங்களுமில்லை. இந்த நிலையில் தொடர்ந்தும் என்னால் இங்கிருக்க முடியாது. அதுதான் கனடா போவதாக முடிவு செய்திருக்கிறேன்."

திருமதி அஜித்: "அதுசரி. நீயோ சட்டவிரோதக் குடி. எந்தவிதச் சட்டரீதியான ஆவணங்களும் உன்னிடமில்லை. இந்த நிலையில் கனடாவுக்குள் எவ்விதம் நுழைவாய்? அங்கு இதைவிடப் பெரிதாகப் பிரச்சினைகளேதும் வந்துவிடாதா?'

கோஷ்: "அதைத்தான் நானும் சிந்திக்கிறேன். திருமதி பத்மா அஜித் கூறுவதிலும் நியாயமிருப்பதாகத்தான் படுகிறது. இளங்கோ இதுபற்றி இந்தக் கோணத்தில் நீ சிந்தித்துப் பார்த்திருக்கிறாயா?"

இளங்கோ: "நீங்கள் சொல்வதும் ஒருவிதத்தில் சரிதான். ஆனால் நானறிந்த வரையில் கனடா அகதிகள் விடயத்தில் மிகவும் நெகிழ்ச்சியான போக்குள்ள நாடு. இங்கிருந்து என்நாட்டைச் சேர்ந்த பலர் இதுவரையில் எல்லையைக் கடந்து சென்றிருக்கிறார்கள். பலருக்கு அந்நாட்டு நிரந்தரவசிப்பிட உரிமைகூட கிடைத்திருக்கிறது. அங்கு உள் நுழைந்து விட்டால் எல்லாமே நல்லதாக முடிந்து விடும். ஆனால்..."

கோஷ்: "ஆனால்.. என்ன?"

இளங்கோ: "எல்லையைக் கடக்கும்போது கனடியக் குடிவரவு அதிகாரிகளின் கணினியில் என் பெயரைக் கொண்ட இன்னொருவரின் பெயரில் யாராவது பயங்கரக் குற்றங்கள் செய்திருக்கிற ஒருவரின், 'இண்டர்போல்' போன்ற சர்வதேசப் பொலிசாரால் தேடப்படுகின்ற ஒருவரின் பெயர் இருக்கிறதென்று வைத்துக் கொள்ளுங்கள். அத்தகையதொரு சூழலில் நிலைமை மோசம்தான். உள்ளேயே வைத்துவிட்டாலும் வைத்து விடுவார்கள். ஆனால் அதற்கான சாத்தியக் கூறுகள் மிகவும் குறைவே."

திருமதி பத்மா அஜித் (ஒருவிதப் பெருமூச்சுடன்): "இளங்கோ. எந்தவிதப் பிரச்சினைகளுமில்லாமல் நீ அங்குபோய்ச் சேர்ந்து நல்வாழ்க்கையொன்றை ஆரம்பித்து விட்டாயென்றால் எனக்கது போதும். போனால் எங்களை மறந்து விடாதே. அவ்வப்போது அழைத்து விசாரித்துக் கொள்."

அருள்ராசா: "இளங்கோ. நீ முதலிலை போ. உன்ர நிலையைப் பார்த்துப் பிறகு நான் வாறன்."

கோஷ்: "இளங்கோ. நீ போவதென்று முடிவு செய்து விட்டாய். உன் எதிர்காலம் சிறப்பானதாக அமைய நல்வாழ்த்துக்கள். போவதென்றால் எப்பொழுது செல்வதாகத் திட்டம்?"

இளங்கோ: "நாளை இரவே செல்வதாகத் திட்டம்."

கோஷ்: "இளங்கோ. நீ ஒரு வித்தியாசமான பேர்வழி. முடிவு செய்து விட்டாயானால் ஒரு நிமிடம் கூடத் தாமதிக்க மாட்டாய். அப்படியா?"

இளங்கோ: "கோஷ். அப்படியில்லை. இந்த மண்ணில் ஒரு வருடம் வரையில்தான் தங்குவதென்பது ஆரம்பத்திலேயே நான் உறுதியாக முடிவு செய்திருந்த விடயம். இந்த ஒரு வருடம் முடியப் போகிறது. இந்த நிலையில் தொடர்ந்திருப்பது என்னைப் பொறுத்தவரையில் சிரமமானது."

இச்சமயம் திரு.அஜித்தும் வந்து அவர்களது கலந்துரையாடலில் கலந்து கொண்டார். அவரும் இளங்கோ கனடா செல்லவிருக்கிற விடயம் பற்றி அறிந்ததும் சிறிது கவலைப் பட்டார். அத்துடன் கூறினார்: "நண்பர்களே. இளங்கோவின் பிரியாவிடையினையிட்டு நாம் இன்றொரு சிறியதொரு விருந்து வைத்தாலென்ன?"

இச்சமயம் இடையில் புகுந்த திருமதி பத்மா அஜித் "இன்றைய சமையல் என்னுடையது. நல்லதொரு சிக்கன் பிரியாணி செய்யப் போகின்றேன். என்ன சொல்லுகிறீர்கள்?"

எல்லோரும் திருமதி பத்மா அஜித்தின் ஆலோசனைக்குச் சம்மதித்தார்கள். வளைக்கரத்தால் உணவுண்டு எத்தனை நாட்களாகி விட்டன? கசக்குமா அவர்களுக்கு.

2.அன்றிரவு அறை நண்பர்களுடனும், அஜித் தம்பதியினருடனும் பொழுது கழிந்தது. திருமதி பத்மா அஜித்தின் கைவண்ணத்தை பிரியாணியின் சுவையில் காணக்கூடியதாகவிருந்தது. அதன்பின்னர் அனைவரும் இளங்கோவின் எதிர்காலச் சிறப்பிற்காக வாழ்த்திவிட்டுப் படுக்கைக்குத் திரும்பினார்கள். சிறிது நேரம் இளங்கோவும், அருள்ராசாவும் வீட்டின் முறபுறத்தில் வந்தமர்ந்து கொண்டு உரையாடினார்கள். அறையினுள் தூக்கத்திலாழ்ந்து கிடந்தவர்களைத் தங்களது உரையாடல் குழப்பி விடக்கூடாதேயென்ற எண்ணத்தில் வெளியிலிருந்து உரையாடுவதே சரியாகப் பட்டது.

இளங்கோவின் உள்ளத்தில் உற்சாகம் பொங்கி வழிந்து கொண்டிருந்தது. தற்போது அவன் வாழ்வில் நிலவும் சூழலுக்கொரு முடிவு வரப் போவதையிட்டுண்டான களிப்பு. மீண்டுமொருமுறை அவன் முதலிலிருந்து இருத்தலுக்கான போராட்டத்தை ஆரம்பிக்கப் போகின்றான். மீண்டும் முதலிலிருந்தது ஆரம்பிக்கப் போவதையிட்டு அவன் கவலைப் படவில்லை. வாழ்க்கையின் சவால்களை எப்பொழுதுமே உற்சாகத்துடன் எதிர்கொள்பவனவன். இந்த மண்ணில் எந்தவித முன்னேற்றங்களுமின்றி நிச்சயமற்றதொரு இருப்பில் தொங்குவதைவிட அது எவ்வளவோ மேல்.

அருள்ராசாவுக்கு இளங்கோ கனடா போவதையிட்டு ஒருவிதத்தில் சிறியதொரு கவலை. இனி அவன் தனித்துப் போகப்போகின்றானே. இது அவனது கவலைக்குக் காரணம். ஆயினும் இளங்கோ எடுத்த முடிவையிட்டு அவன் கவலைப்படவில்லை. முடிவுகளையெடுப்பதில் இளங்கோவுக்கிருக்கும் துணிச்சல் அவனுக்கில்லை. அவனது கடவுச்சீட்டு இன்னும் அமெரிக்கக் குடிவரவுத் திணைக்களத்திடம்தானிருக்கிறது. இந்நிலையில் நடந்த உண்மைகளைக் கூறித்தான் இளங்கோ கனடாவிற்குள் நுழையத் தீர்மானித்திருக்கிறான். அவ்விதம் நுழையும்போது 'அமெரிக்காவில் ஏற்கனவே அகதிக்காக விண்ணப்பித்திருக்கிறாயே அதற்கான பதிலைப் பெற்றபின் வா'வென்றால், அங்கிருந்து மீண்டும் திருப்பியனுப்பினால் என்ன செய்வது? இளங்கோ இந்த விடயம் பற்றியும் சிந்தித்துப் பார்த்திருக்கின்றான். அதற்கும் அவனொரு காத்திரமான பதிலை வைத்திருக்கிறான். முதலாவது கடந்த ஒருவருடமாக இங்கு அவனுக்கு வேலை செய்வதற்குரிய எந்தவிதச் சட்டரீதியான ஆவணங்களுமில்லை. எந்தவித அரச உதவிகளுமில்லாமல், சட்டரீதியாக வேலை செய்து வயிற்றை நிரப்புவதற்கு முடியாமலிருக்கிறது. அடுத்தது வேலை வழங்கலுக்கான கடிதம் பெற்று சட்டத்தரணியூடு விண்ணபித்தும்கூட இதுவரையில் அதற்கான பதிலேதும் வரவில்லை. இதுவரையில் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் ஒருவாறு காலத்தைத் தள்ளியாகி விட்டது. இனியும் அவனால் இத்தகையதொரு நிலையினைத் தொடர்ந்தும் தாங்க முடியாது? இதுதான் அவனது பதில். இதனையும் மீறி அங்கிருந்து மீண்டும் திருப்பியனுப்பினால் வேறென்ன செய்வது? மீண்டும் இங்கு வந்து மட்டையடிக்க வேண்டியதுதான். வேறு வழியில்லை. ஆயினும் அதற்காக இவ்விதம் முயன்று பார்க்காமலிருக்க முடியாது.

அருள்ராசா கூறினான்: "இளங்கோ! உனக்கிருக்கிற துணிச்சல் எனக்கில்லை. நீ அங்கு போனதும் விரிவாக அங்குள்ள நிலைமையையெல்லாம் அறிவி. அதுக்குப் பிறகுதான் நான் முடிவு செய்ய வேண்டும்"

அதற்கு இளங்கோ "கட்டாயம் எல்லாவற்றையும் விசாரிச்சு, எனக்கு ஏற்படுகிற நிலைமைகளெல்லாவற்றையும் அறிவிக்கிறன். அதுக்குப் பிறகு ஆறுதலாக நீ வரலாம். அவசரமிலை" என்றான்.

அதற்கு அருள்ராசா "எல்லாம் நல்லதுக்குத்தான். இங்கை மட்டும் 'சோசல் கார்ட்'டெல்லாம் கிடைச்சிருக்குமென்றால் இங்கையே போவென்று கலைக்கும் மட்டும் இருந்திருக்கலாம். பார்ப்பம் எனக்காவது கெதியிலை கிடைக்குதாவென்று. அது மட்டும் கிடைச்சுட்டுதென்றால் நான் கடைசிவரை அகதிக்கோரிக்கைக்குப் பதில் கிடைக்கிறவரை இங்கேயே தங்கி விடுவன்." என்றான்.

இவ்விதமாக உரையாடிக் கொண்டிருந்துவிட்டு திரும்பினார்கள். அருள்ராசா சிறிது நேரத்திலேயே தூங்கி விட்டான். இளங்கோவுக்கோ வழக்கம்போல் இத்தகைய சந்தர்பங்களிலேற்படுவதுபோல் தூக்கம் வருவதற்குத் தயங்கியது. சிறிதுநேரம் தூங்குவதற்கு முயன்றான்; முடியாமல் போகவே உணவறைக்கு வந்து சிறிது நேரம் பாரதியின் கவிதைகளைப் புரட்டினான். சிறிது நேரம் குறிப்பேட்டினில் பார்வையை ஓட்டினான். வழக்கம்போல் பாரதியின் கவிதைகளும், குறிபேடும் அவனது ஓரளவு சோர்ந்திருந்த உணர்வுகளைத் தட்டியெழுப்பின. 'மண்ணில் தெரியுது வானம் அதுநம் கைவசப்பட லாகோதோ? எண்ணி யெண்ணிப்பல நாளு முயன்றிங்கிறுதியிற் சோர்வோமோ?'. குறிப்பேட்டினைத் திறந்தவன் அன்றைய இரவுப் பொழுதின் தன் உள்ளத்துணர்வுகளையதில் கொட்டத் தொடங்கினான்.

3.

இளங்கோவின் குறிப்பேட்டிலிருந்து.........

'கடந்த ஒருவருடம்தான் எவ்வளவு விரைவாகக் கழிந்து விட்டது! இந்த மண் மீதிலான என்னனுபவங்கள் பல்வேறு உண்மைகளை எனக்குப் புரிய வைத்துள்ளன. உலகின் சொர்க்கபுரியாக விளங்கும் இந்த மண்ணின் மறுபக்கத்தை எனக்கு இந்த அனுபவங்களே உணர்த்தி வைத்தன. தனியுடமையின் கூடாரமாக விளங்குமிந்த மண்ணில் எத்தனை தனி மனிதர்கள் தடுப்பு முகாமகளுக்குள் வாடிக் கொண்டிருக்கிறார்கள். வறுமையின் பிடிக்குள் சிக்கி எத்தனை ஆயிரக்கணக்கில் மக்கள் அல்லற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஒரு புறம் வாழ்வதற்கு எவ்வளவோ வழிவகைகள். மறுபுறத்திலோ வாழுவதற்கான உரிமைகளே மறுக்கப்பட்ட நிலையில் மாயும் மக்கள் கூட்டம். மில்லியன் கணக்கில் இந்த மண்ணில் வாழும் சட்டவிரோதக் குடிகளின் உழைப்பில் சுகித்து வாழுவதற்கு யாருமே தயங்குவதில்லை. ஆனால் அதே சமயம் அவர்களுக்குரிய உரிமைகளைக் கொடுத்து அவர்களது கடின உழைப்புக்கு அங்கீகாரம் கொடுப்பதில் மட்டுமென்ன தயக்கம்? இவ்விதம் தயங்குபவர்கள் அவ்வளவு சட்டவிரோதக் குடிகளையும் ஒட்டுமொத்தமாக நாட்டை விட்டு அனுப்பி வைக்கலாமே? ஆனால் அதுமட்டும் முடியாது? அவ்விதம் அனுப்பினால் அதனாலேற்படும் இடைவெளியை ஈடூகட்டுவதற்குரிய தொழிலாளர்களின்றி உணவகங்கள், தொழிற்சாலைகளெல்லாம் முடங்கிக் கிடக்க வேண்டியதுதான். சொந்த மண்ணில் தலை விரித்தாடும் அடக்குமுறைகளைத் தாங்க முடியாமல் நுழையும் அகதிகளைச் சட்டவிரோதக் குடிகளாக்கித் தடுப்பு முகாமில் வைத்திருக்கிறது. ஆனால் ஒருகாலத்தில் செல்வம் நாடி இந்த மண்ணுக்குச் சட்டவிரோதமாகப் படையெடுத்த, இந்த மண்ணின் பூர்வீக குடிகளை நிர்மூலமாக்கிய, ஐரோப்பியர்களின் வழித்தோன்றல்களதானே இன்றைய மக்களில் பெரும்பான்மையினர். உலகின் பல்வேறு திக்குகளுளிருந்தும் அரசியல், பொருளியல் காரணங்களுக்காக இம்மண்ணை நோக்கிப் படையெடுக்கும் மக்களைச் சட்டவிரோதக் குடிகளாக்கி சிறுமைப்படுத்துவதற்கு நவ அமெரிக்கர்களுக்கென்ன தார்மீக உரிமை இருக்க முடியும்? தங்களது தேசிய பாதுகாப்பு நலன்களுக்காக உலகெங்கும் இவர்களால் அரசியல்ரீதியில் , இராணுவரீதியில் புகுந்து விளையாட முடியும். ஆனால் அதன் விளைவாகப் பாதிக்கப்பட்ட மக்கள் அகதிகளாக வந்தால் ஏற்பதில் மட்டும் தயக்கமேன்? இந்த மண்ணின் அமைப்பிலுள்ள பல நல்ல அம்சங்களுள்ளன. முக்கியமாக அறிவியற் தொழில் நுட்ப வளர்ச்சி. மிகவும் கடினமாகத் தொலைநோக்குடன் உழைக்கின்றார்கள். ஒருபுறம் அரசின் தேசிய பாதுகாப்பு, அபிவிருத்திக் கொள்கைகளால் உலகம் பற்றியெரிகிறது. இயற்கை வளங்கள் சூறையாடப்பட்டுச் சமநிலை குலைக்கப்படுகின்றது. மறுபுறம் இந்த மண்ணில் வாழும் மக்களால் தொலை நோக்கில் சிந்தனை முன்னெடுக்கப்படுகிறது. அரசின் நடவடிக்கைகளையிட்டுக் கண்டனம் பலமாக
முன்வைக்கப்படுகின்றது. சூழல் பாதுகாப்புக்காக, மூன்றாம் உலகத்து முன்னேற்றத்துக்காக இலாபநோக்கற்ற ரீதியில் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. அமெரிக்காவைப் பொறுத்தவரையில் ஆரோக்கியமான, நம்பிக்கை மிகுந்த, ஆற்றல்மிக்கதொரு பக்கமிருக்கிறது. அதே சமயம் இன்னுமொரு இருண்ட பக்கமும் அதற்கிருக்கிறது. நம்பிக்கையிழந்த, சந்தேகத்துடன் கூடிய, சுயநலம் மிகுந்த , எதிர்மறையானதொரு பக்கமது. அறிவியற் தொழில்நுட்ப வளர்ச்சிகள், கலை இலக்கியங்களில் காணப்படும் முன்னேற்றகரமான போக்குகள், பொருளியற் வளர்ச்சி இவையெல்லாம் அதன் நல்ல பக்கங்களென்றால் அதன் இருண்ட பக்கங்களாக வலிமை குன்றிய உலக நாடுகள்மீது அது தொடுக்கும் ஈவிரக்கமற்ற யுத்தங்கள் (பிஞ்சுக் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள், நோயாளிகளென எத்தனை அப்பாவி உயிர்களை அது காவு கொள்கிறது), சமுதாயத்தில் உலாவும் பலவேறு மனநோய் பீடித்த சமூக விரோதிகள், இனவாதச் சேற்றில் புதைந்துள்ள அமைப்புகள், அகதிகளை அடைத்து வைக்கும் தடுப்பு முகாம்கள்.. இவையெல்லாம் விளங்குகின்றன.'

இவ்விதமாக இளங்கோ குறிப்பேட்டில் தன் உள்ளத்துணர்வுகளைக் கொட்டித்தீர்த்தான். எழுதவெழுத மனத்திலொரு தெளிவு , அமைதி பிறந்தது. அந்தத் தெளிவுடனும், அமைதியுடனும், அதன் விளைவாக கிளர்ந்தெழுந்த ஒருவிதப் பரவசத்துடனும் மேலும் எழுதத்தொடங்கினான்:

'சிறியதொரு நீலவண்ணக் கோளின் மீது வாழும் மனிதர் எதற்காக இவ்விதம் பல்வேறு பிரிவுகளுக்குள் சிக்கி வாழ வேண்டும்? 'யாதும் ஊரே! யாவரும் கேளீர்' என்று வாழுவதற்குரிய பக்குவத்தைத் தடுப்பதெது? எத்தனை விதமான ஏற்றத்தாழ்வுகளால் இந்த உலகு நிறைந்து கிடக்கிறது? வெளியினூடு பிரமாண்டமானதொரு வேகத்தில் விரையும் கோளிது. இதன் விரைதலை உணரமுடியவில்லை. பரந்த இந்தப் பிரபஞ்சத்தில் இதன் அற்பத்தன்மையினை அறிந்து கொள்ள முடியவில்லை. இருந்தாலும் அறிவின் பல்நிலைகளில் நிற்கும் மாந்தர்கள் ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்கிறார்கள். போர்களால், ஏற்றத்தாழ்வுகளால் இந்த அழகிய கோள் ஒவ்வொரு கணமும் சீரழிந்து கொண்டிருக்கிறது. பெருகும் இரத்த ஆற்றில் அடிபட்டுச் செல்லும் உயிரினங்கள்தானெத்தனை? சகமனிதரை, உயிர்களைக் கொன்றொழிப்பதில்தான் எத்தனையெத்தனை வழிமுறைகள்! போர்கள், அவற்றின் அழிவுகளெல்லாம் இன்று திரையில் நடைபெறும் கூத்துக்களாகிவிட்டன. அழிவுகளுக்குப் பின்னால் உறைந்து கிடக்கும் இரத்த ஆறுகளை, துயர்மிக்க உணர்வுகளை யாரறிவார்? யாருணர்வார்? அறிந்தால், உணர்ந்தால் இவ்விதம் கொல்வதில் நாட்டம் செல்லுமோ? ஒரு குழந்தையின் பிஞ்சு உடல் சிதறிக்கப்படும்போது அதன் பெற்றோரின் உள்ளங்கள் என்ன பாடுபடும்? யாரோ ஒருபிள்ளையென்று பேசாமல் போய்விட முடிகிறதா? மனிதரால் உருவாக்கிய மதம், மொழிக்காக எத்தனை ஆயிரக்கணக்கில் யுத்தங்கள்! இரத்தக் களரிகள்! இந்தச் சிறிய கோள் எத்துணை அற்புதமானது! இதனற்புதத்தினை உணராமலிதையிவ்விதம் சிதைப்பதெதற்காக? 'உங்களுக்குத் தொழிலிங்கே அன்பு செய்தல் கண்டீர்!' என்று வாழ ஏன் முடியவில்லை?'

இவ்விதமாக மேலும் மேலும் தூக்கம் கண்களைத் தழுவும் வரையில் எழுதித்தீர்த்தான். ஒரு கட்டத்தில் நித்திராதேவியின் அரவணைப்பின் கனம் அதிகமாகிவிடவே அவளுடன் தன்னை மறந்து சங்கமமானான் இளங்கோ.

4.
மறுநாள் பகல்முழுவதும் இளங்கோ மான்ஹட்டன் முழுவதும் அலைந்து திரிந்தான். கடந்த ஒரு வருடமாக அந்த மண்ணில் அலைந்து திரிந்த வீதிகள், இடங்களையெல்லாம் மீண்டுமொருமுறை பார்வையிட்டான். ஹரிபாபு, அவன் மனைவி இந்திரா, ஹென்றி இவர்களிடமெல்லாம் கூறி விடைபெற்றான். அன்றிரவு நியூயார்க் பஸ் நிலையத்துக்கு அவன் அருள்ராசாவுடன் புறப்பட்டபோது கோஷ், அஜித் தம்பதிகள் எல்லோரும் வழியனுப்ப வந்தனர். இளங்கோ இதனைக் கொஞ்சமும் எதிர்பார்த்திருக்கவில்லை. ஆனால் இதை விட மிகப்பெரிய ஆச்சரியமென்னவென்ரால் ஹரிபாபுவும், இந்திராவும் அவனை வழியனுப்ப வந்திருந்தததுதான். எல்லோரும் அவனது எதிர்கால வாழ்வு நன்கமைய வாழ்த்துத் தெரிவித்தார்கள்.

அவன் புறப்படும் நேரம் வந்தது. சோகம் கவிந்த முகங்களுடன் நின்ற அவர்களனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டு இளங்கோ பஸ்ஸிலேறி மூலையிலிருந்த இருக்கையொன்றில் சென்றமர்ந்தான். அந்த நள்ளிரவில் அவனையும் , சக பயணிகளையும் ஏற்றிக் கொண்டு அந்த பஸ் 'தொராண்டோ' மாநகரை நோக்கிப் புறப்பட்டது. தொலைவில் விரிந்திருந்த இரவுவானில் சுடர்க் கன்னிகள் அவனது புதிய பயணத்தையெண்ணிக் கெக்கலி கொட்டி நகைத்துக் கொண்டிருந்தார்கள். 'நட்சத்திரக் கன்னியரே ! நகைக்கவா செய்கிறீர்கள். நல்லாக நகையுங்கள். நகையுங்கள். உங்கள் நகைப்பில் நானொருபோதும் துவண்டு விடப்போவதில்லை. ஆனால் உங்கள் நகைப்பில் நானறியும் அர்த்தமே வேறு. மோனித்துக் கிடக்கும் வெறுமை படர்ந்த வெளிகளை ஊடுருவி நீங்கள் அனுப்பும் ஒளிக்கதிர்களின் தொலைதூரப் பயணங்கள் என்னைப் பிரமிக்க வைக்கின்றன. வெற்றிடங்களைத் துளைத்து, பல்வேறு காலகட்டங்களிலிருந்தும் எத்தனை துணிச்சலுடனவை தம் பயணத்தை ஆரம்பித்திருக்கின்றன. தனிமைகளைக் கண்டு , தொலைவுகளைக் கண்டு பயமற்ற அவற்றின் பயணங்களுடனொப்பிடுகையில் என் பயணத்துக்கொரு அர்த்தம்கூட இருந்திட முடியுமா?'

நள்யாமத்துப் பொழுதினில் புறப்பட்ட பஸ் அதிகாலையில் கனடாவை நெருங்கிக் கொண்டிருந்தது. அடிவானில் விடிவெள்ளி முளைக்கத் தொடங்கி விட்டது. 'அதிகாலை மெல்லிருட் போதுகளில் அடிவானில் நீ மெளனித்துக் கிடக்கின்றாய்! படர்ந்திருக்கும் பனிப்போர்வையினூடு ஊடுருவுமுந்தன் நலிந்த ஒளிக்கீற்றில் ஆதரவற்றதொரு சுடராய் நீ ஆழ்ந்திருப்பாய் விடிவு நாடிப் போர் தொடுக்கும் என் நாட்டு மக்களைப் போல. விடிவின் சின்னமென்று கவி வடிப்போர் மயங்கிக் கிடப்பார். ஆயின் சிறுபோதில் மங்கலிற்காய் வாடிநிற்கும் உந்தன் சோகம் புரிகின்றது. அதிகாலைப் போதுகளில் சோகித்த உந்தன் பார்வை படுகையிலே, என் நெஞ்சகத்தே கொடுமிருட் காட்டில் தத்தளிக்கும் என் நாட்டின், என்மக்களின் பனித்த பார்வைகளில் படர்ந்திருக்கும் வேதனைதான் புரிகின்றது. விடிவினை வழிமொழியும் சுடர்ப்பெண்ணே! வழி மொழிந்திடுவாய்!'

இளங்கோ தன் புதிய பயணத்தைத் துணிச்சலுடனும், நம்பிக்கைகளுடனும் எதிர்பார்த்து ஆரம்பித்திருக்கின்றான்.' இயற்கைத்தாயே! போதுமென்றே திருப்தியுறும் பக்குவத்தைத் தந்துவிடு! தாயே! இயற்கைத்தாயே! உந்தன் தாள் பணிந்து கேட்பதெல்லாம் இதனைத்தான்! இதனைத்தான்! விதியென்று வீணாக்கும் போக்குதனை விலக்கி விடு! மதி கொண்டு விதியறியும் மனத்திடத்தை மலர்த்தி விடு! வளர்த்து விடு! கோள்கள், சுடர்களெல்லாம் குறித்தபடி செல்வதைப்போல் வாழும் வாழ்வுதனை என் வாழ்நாளில் வளர்த்து விடு! தாயே! இயற்கைத்தாயே! உந்தன் தாள் பணிந்து கேட்பதெல்லாம் இதனைத்தான்! இதனைத்தான்!'

கனடா எல்லையினை அடையும் பொழுது எது நடந்தாலும் அதனை ஏற்கும் பக்குவத்தை அவன் பெற்றிருந்தான். விரிந்திருக்கும் ஆகாயமும், பூமியும் இருக்கும்வரை, இங்குள்ள உயிரினங்களொவ்வொன்றுமே தான் வாழும் சூழலுடன் தப்பிப்பிழைத்தலுக்காகப் போராடிக் கொண்டுதானிருக்கிறது. தப்பிப்பிழைத்தலில்தானே உயிரினம் ஒவ்வொன்றினதும் இருப்பின் தொடர்ச்சியே தங்கியுள்ளது. எத்தகைய சூழலையும் துணிச்சலுடன், உறுதியுடன், நம்பிக்கையுடன் உள்வாங்கித் தொடர்ந்து நடைபயில்வதற்குரிய பக்குவத்தை அவனது அமெரிக்க மண்மீதான அனுவங்கள் மேலும் அதிகமாக்கி விட்டுள்ளன. அந்த அனுபவங்களின் துணையுடன் அவன் அடுத்த கட்டத்தில் அடியெடுத்து வைக்கின்றான். நம்பிக்கையுடன் வாழ்க்கை அற்புதமாக விரிந்து கிடக்கின்றது.

இப்பூமிப்பந்தின் நானா திக்குகளிலும் போர்களினாலும், அடக்குமுறைகளினாலும் ஏதிலிகளாக மக்கள் கூட்டம் உறவுகளைப் பிரிந்து இருத்தலுக்கானதொரு போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறது; சொந்தமண் பற்றிய கனவுகளுடன் அவர்களின் பயணம் பலவேறு திக்குகளிலும் தொடருகின்றது. ஒட்டிஉறவாடிச் சொந்தம் கொண்டாடிய மண்ணுடன் மீண்டும் பின்னிப் பிணைந்து சுகித்திட முடியாத சுழல்கள்! போர்கள்! புகுந்த இடத்திலும் வாழ்வின் ஒவ்வொரு கணமும் தப்பிப் பிழைத்தலுக்கான போராட்டங்கள். அங்குமில்லை. இங்குமில்லை. நம்பிக்கைக் கனவுகளுடன் தொடரும் திரிசங்கு வாழ்க்கை.

வாயுக் குமிழிக்குள் வளையவரும் விரையும் வாழ்வு! உணராத உயிர்களால் குமிழி என்று உடையுமோ? குமிழியின் நிலையற்ற தன்மையினை உணராத உயிர்களோ உள்ளிருந்து கும்மாளமிடுகின்றன. குமிழியினை உடைப்பதென்றே கங்கணம் கட்டி நிற்கின்றனவா! ஆயினும் அவனது பயணம் மீண்டும் தொடங்கும் மிடுக்கெனத் தொடர்கிறது. 'தீமையெலாம் அழிந்துபோம்! திரும்பி வாரா!'வென்னும் நம்பிக்கையில் தொடரும் பயணமது! 'எப்போதுஞ் சென்றதையே சிந்தை செய்து கொன்றழிக்குங் கவலையெனும் குழியில் வீழ்ந்து குமையாது தொடரும் பயணமது! 'இன்று புதிதாய்ப் பிறந்தோமென்று எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு, தின்று விளையாடியின்புற்றிருந்து வாழுமொரு' பயணமது! பஸ் இருளைத் துளைத்துக் கொண்டு எல்லையினை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறது. இந்த இருளின்பின்னால் நிச்சயமாக விடிவொன்று மலருமென்ற நம்பிக்கையில் தொடரும் பயணமது.


முற்றும்!

தொடர் நாவல்: குடிவரவாளன்! - வ.ந.கிரிதரன் -


அத்தியாயம் இருபத்தியாறு: நடுவழியில்...

ஸ்பானிஷ்கார முகவனான பப்லோவுடனான அனுபத்தின் பின்னர் இளங்கோ முகவர்களின் மூலம் வேலை தேடும் படலத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்தான். நேரடியாகவே நகரில் அலைந்து திரிந்து வேலை தேடும் படலத்தை ஆரம்பித்தான். சட்டவிரோதக் குடிகள் மில்லியன் கணக்கில் வசிக்குமொரு மாநகரில் தனக்கேன் வேலையொன்றை எடுப்பது சிரமமாகவிருக்கிறதென்று எண்ணியெண்ணி மனம் சலித்தான். இருந்தாலும் சோர்ந்து விடாமல் முயனறு கொண்டிருந்தான். இத்தகையதொரு சந்தர்ப்பத்தில்தான் அவன் ஜெயரடணத்தை மான்ஹட்டன் நகரத்துத் தெருக்களிலொன்றில் தற்செயலாகச் சந்தித்தான். ஈழத்தின் வன்னிமாவட்டத்தின் முக்கிய நகர்களிலொன்றான வவுனியாவைச் சேர்ந்தவனவன். நாற்பத்தியாறாவது தெருவிலுள்ள இத்தாலியனின் உணவகமொன்றில் பகல் நேரத்தில் உணவக உதவியாளனாக வேலை பார்த்துக் கொண்டிருந்தான். இளங்கோ அன்றாட வாழ்வுக்கே திண்டாடுவதைப் பார்த்த அவன் இளங்கோவுக்குப் பின்வருமாறு புத்திமதியொன்றைக் கூறினான்: "இளங்கோ உனக்கு விருப்பமென்றால், பகல்நேரத்தில் ஓரிரு மணித்தியாலங்கள் செய்யக் கூடியதொரு சிறு வேலையொன்றுள்ளது, அதனை உனக்கு எடுத்துத் தரலாம். ஆனால் உன்னால் அதனைச் செய்ய முடியுமோ தெரியாது.."

இவ்விதம் ஜெயரட்ணம் இழுக்கவே இளங்கோ "பரவாயில்லை ஜெயம். சொல்லு. முடிந்தால் செய்யிறேன். பார்ப்பம்" என்றான்.

அதற்கு ஜெயரட்ணம் "வேலையொன்றும் பெரிதாகக் கஷ்ட்டமான வேலையில்லை. மத்தியான நேரத்தில் பதினொரு மணியிலிருந்து இரண்டு மணிவரையிலை எங்கட ரெஸ்ட்ராண்டிறிற்கு வருகிற ஓர்டர்களுக்குரிய சாப்பாட்டைக் கொண்டு சென்று குடுப்பதுதான். 'டெலிவரி' வேலை. சில் நேரத்திலை கிட்டடியிலையும் இருக்கும். சில நேரத்திலை ஹை ரைஸ் பில்டிங்கிலை ஐம்பது அறுபது புளோரென்று ஏறி இறங்கவேண்டியும் வரும். பெரிதாகச் சம்பளமெதுவும் தரமாட்டான்கள். மினிமத்திற்கும் குறைச்சுத்தான் தருவான்கள். ஆனா சாப்பாட்டை ஓரடர் பண்ணுறவங்கள் நல்லா டிபஸ் தருவாங்கள். அதெல்லாம் உனக்குத்தான். மற்றது..."

"மற்றது.. என்ன " என்றான் இளங்கோ.

அதற்கு ஜெயரடணம் தொடர்ந்து விளக்கமளித்தான்: "மத்தியானச் சாப்பாடும் தருவாங்கள். எங்கடை ரெஸ்டாரண்டிலிருந்து என்னத்தை வேண்டுமென்றாலும் எடுத்துத் தின்னலாம். அந்த விதத்திலை பார்க்கேக்கை பரவாயில்லையென்று சொல்லலாம். இன்னொரு நல்ல வேலை கிடைக்கிற வரையிலை கொஞ்ச நேரம் செய்யிறதாலை உனக்குத்தான் நல்லது. நல்லா யோசித்துச் சொல்லு. இன்றைக்கு முழுக்க நல்லா யோசி. விருப்பமென்றால் நாளைக்கே எங்கட ரெஸ்டாரண்டிற்கு பத்து மணி போலை வா. முதலாளிக்கு உன்னை அறிமுகம் செய்து வைக்கிறன்."

இதற்கு அடுத்த நாள் மறுமொழி கூறுவதாகக் கூறி விட்டு இளங்கோ ஜெயரட்ணத்திடமிருந்து விடைபெற்றான். அன்று தன்னிருப்பிடம் திரும்பும்போது பாதாள இரயிலில் அதுபற்றியே சிந்தித்துக்கொணடிருந்தான். ஒரு விதத்தில் ஜெயரட்ணம் கூறுவதும் சரியாகவே பட்டது. பக்ற்பொழுதில் மூன்று மணித்தியாலங்கள்தான் வேலை. மணிக்கு மூன்று டாலர்கள் தருவார்கள். ஐந்து நாட்கள் வேலை செய்தால் நாற்பத்தியைந்து டாலர்கள் சம்பளமாகக் கிடைக்கும். அது அறை வாடகைக்கும், ஒரு போத்தலுக்கும் போதும். மூன்று மணித்தியாலத்திலும் பத்திலிருந்து இருபது டாலர்கள் வரையில் டிப்ஸ் கிடைக்குமென்று ஜெயம் கூறியிருந்தான். அந்த வழியில் பதினைந்து டாலர்களென்று பார்த்தாலும் வாரத்திற்கு எழுபத்தைந்து டாலர்கள் வரையில் வரும். எழுபத்தைந்தும் நாற்பத்தைந்தும் நூற்றியிருபது டாலர்கள் வரையில் வருமானம் வரும். அதே சமயம் மத்தியானச் சாப்பாடு இலவசமாக் கிடைக்கும். அதற்குரிய செல்வாகப் பத்து டாலர்களைப் போடலம். அந்த வகையில் வாரத்திற்கு ஐம்பது டாலர்கள் வரையில் வரும். ஆக மொத்தம் வாரம் நூற்றியெழுபது டாலர்கள் வரையில் வருமொரு தொழிலாக அதனைக் கருதலாம். அதுவும் மூன்றே மூன்று மணித்தியாலங்கள்தான் வேலை. செய்து பார்ப்பதில் தவறெதுவுமில்லை. கிழமைக்கு ஐம்பது டாலர்களையாவது சேமிக்க வேண்டும். அவ்விதம் சேமித்தால் ஒரு
மாதத்திலை இருநூறு டாலர்கள வரையில் சேமிக்கலாம். ஆறு மாதங்கள் இவ்விதம் செய்தாலும் குறைந்தது ஆயிரத்தி இருநூறு டாலர்கள் வரையிலாவது சேர்க்கலாம். குறைந்தது கையில ஆயிரம் டாலர்கள் சேரும் வரையிலாவது இவ்விதம் வேலை செய்து பார்ப்பதில் தவறெதுவுமில்லை. இன்னுமொரு நியூயார்க் மாநகரத்து அனுபவமாக இதுவும் இருந்து விட்டுப் போகட்டும். இதற்குப் பிறகு கோஷிடமும் அவனுடைய தொழிற்சாலையிலேதாவது வேலை கிடைக்குமாவென்று முயன்று பார்க்க வேண்டும். அதுவே அவன் நியுயார்க் மாநகரத்தில் இவ்விதமாகச் சட்டவிரோதமாகச் செய்யும் இறுதி வேலையாகவிருக்க வேண்டும். அதுவும் பிழைத்தால் இந்த நகருக்குப் பிரியாவிடை கூறிவிட வேண்டியதுதான். எந்த நாட்டுக்குப் போகவென்று ஆரம்பத்தில் பயணத்தைத் தொடங்கினானோ அந்த நாட்டுக்குக், கனடாவுக்குச் சென்று விட வேண்டியதுதான். உலகத்தின் சொர்க்கபுரியான அமெரிக்காவின் பிரதான நகரான நியுயார்க் மாநகரில் இதுவரையில் உணவகத்தில் 'கிட்டார்' அடித்துப் பார்த்தாகி விட்டது; மழைக்குக் குடை பிசினஸ் செய்து பார்த்தாயிற்று; நடைபாதை வியாபாரமும் செய்தாயிற்று; போதாதற்கு விளம்பரங்களும் விநியோகித்துப் பார்த்தாயிற்று. இனி மத்தியான உணவினை விநியோகித்துப் பார்ப்போம்; அதுவும் சரியில்லாவிட்டால் கொஷின் தொழிற்சாலையிலும் ஏதாவது வேலை கிடைக்கிறதாவென்று பார்ப்போம். ஒரு சமயம் அனிஸ்மானிடம் தொடுப்பதாகக் கையெழுத்திட்டுக் கொடுத்துள்ள அமெரிக்க அரசுக்கெதிரான மானநஷ்ட்ட வழக்கில் அதிருஷ்ட்டமடித்தால் இங்கேயே இருந்து விட வேண்டியதுதான். இவ்விதமாகச் சிந்தனை பல்வேறு வழிகளிலும் கிளைவிட்டோடும் நதியாகவோடியது. இளங்கோ பெரிதும் சிந்தனை வயப்பட்டிருந்தான்.

அன்று அவன் நகர் முழுவதும் அலைந்து அறைக்குத் திரும்பும்பொழுது இரவு மணி பத்தைத் தாண்டி விட்டது. பாதாள இரயிலில் சிந்தனையில் மூழ்கிக் கிடந்தவனை ஒரு குரல் நனவுலகுக்கு மீட்டு வந்தது.

"உனக்கு ஆட்சேபனையேதுமில்லையென்றால் உன்னுடன் கொஞ்சம் கதைக்கலாமா?"

அவனது இருக்கைக்கெதிரிலிருந்த பெண்ணொருத்தியின் குரல்தானது. பார்ப்பதற்கு 'பாப்' பாட்டுக்காரி 'சிந்தி லோப்பர்' அவளது புகழ்பெற்ற பாடலான 'Time After Time' இல் வருவதைப் போல் பல்வேறு வர்ணங்களிலான ஆடைகளுடனும், கூந்தலுடனுமிருந்தாள். அவனது அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்க்கையில் அறிமுகமான பாப் பாடகி சிந்தி லோப்பர். அவளது 'நேரத்திற்கு நேரம்' என்ற மேற்படி பாடலை அவன் இரசித்துக் கேட்பதுண்டு; பார்ப்பதுண்டு. அவளது உணர்ச்சி பூர்வமான குரலில் அந்தப் பாடலைக் கேட்பது அவனுக்குப் பிடிக்கும்..நள்ளிரவில் படுக்கையில் படுத்திருந்தபடி, கடிகாரத்தின் 'டிக்' 'டிக்' ஒலியினைக் கேட்டபடி பிரிந்த காதலனைப் பற்றிய நினைவுகளில், நினைவுகளுடன் மல்லாடியபடி பாடும் பாடல் சிந்தி லோப்பரின் அற்புதமான குரலிலும், நடிப்பிலும் சிறந்து விளங்கும். எண்பதுகளில் ஒரு கலக்குக் கலக்கிய பாடலது.

If youre lost you can look and you will find me
Time after time.
If you fall I will catch you Ill be waiting
Time after time.

After my picture fades and darkness has
Turned to gray
Watching through windows youre wondering
If Im ok
Secrets stolen from deep inside
The drum beats out of time

என்று அவள் பாடும்பொழுது உணர்வு பூர்வமாக உருகியுருகிப் பாடுவாள். அவனுக்குப் பிடித்த வரிகள். பார்வைக்கு சிந்தி லோப்பரைப் போலவேயிருந்த அந்த வெள்ளைக்காரப் பெண் தன்னுடன் எதைப் பற்றிக் கதைக்கப் போகின்றாளோவென்று வியந்தபடி , தனது சிந்தனையைக் கலைத்த அவளையே நோக்கினான் இளங்கோ. அத்துடன்

"எனக்கேதும் ஆட்சேபனையில்லை. தாராளமாகவே நீ கதைக்கலாம்" என்றும் கூறினான்.

"நானும் அப்பொழுதிருந்து பார்த்துக் கொண்டே வருகிறேன். அப்படியென்ன பலமான ஆழ்ந்த யோசனை?" என்றாள்.

அதற்கவன் "சிந்திப்பதென் பொழுது போக்குகளிலொன்று. சிந்திக்கும்பொழுது நான் என்னையே மறந்து விடுவதுண்டு." என்றான்.

அதற்கவள் தன் அகன்ற விழிகளை மேலும் விரித்தபடி "சிந்திப்பதுன் பொழுது போக்கா? ஆச்சரியமாகவிருக்கிறதே! எததனையோ பொழுதுபோக்குகளைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். இந்தவிதமான பொழுதுபோக்கு பற்றி இப்பொழுதுதான் கேள்விப்படுகிறேன்" என்று
வியந்தாள்.

அதை விட்டால் ஒவ்வொரு கணமும் இருப்புக்காகப் போராடுமவன் வாழ்க்கையில் வேறென்ன பொழுது போக்கிருக்க முடியும்? கனவுகள், கற்பனைகள், திட்டங்களெனச் சிந்திப்பதையும், இழந்தவற்றை இரை மீட்டு மகிழ்வதையும் விட்டால் வேறென்ன பெரிய பொழுது போக்கிருக்க முடியும்? செலவில்லாத பொழுது போக்குகளிலொன்று இவ்விதம் சிந்திப்பது. அவனது தற்போதைய பொருளியல் நிலைக்கேற்ற நல்லதொரு பொழுதுபோக்கு.

அவன்: "செலவில்லாத பொழுது போக்கு இதுபோல் வேறென்னவிருக்க முடியும்?"

அவள்: "ஒரு விதத்தில் நீ கூறுவதும் சரிதான்"

அவன்: "ஒன்று சொல்வேன் தவறாக நினைத்துக் கொள்ள மாட்டாயே?"

அவள்: "நிச்சயமாக நினைக்க மாட்டேன். நீ தாராளமாகக் கூறலாம்."

அவன்: "இரவின் மடியில் இழந்த நாட்களின் நினைவுகளை இரை மீட்டபடி சிந்தி லோப்பர் பாடும் 'நேரத்துக்கு நேரம்' பாடல்
கேட்டிருக்கிறாயா?"

அவள்: (ஆச்சரியத்துடன்)"உனக்கு அவளைத் தெரியுமா? சிந்தி எனக்கு மிகவும் பிடித்த பாடகி. அவளது இந்தப் பாட்டு எனக்கு மிகவும் பிடிக்கும். உனக்கும் பிடிக்குமா?"

அவன்: "எனக்கும் கேட்பதற்குப் பிடித்த பாடல்களிலொன்று இந்தப் பாடல். நான் சொல்ல வந்தது..."

அவள்: "ஆம். ஆம். நீ ஏதோ சொல்ல வந்தாய். இடையில் குறுக்கிட்டு விட்டேன். அப்படியென்ன சொல்ல வந்தாய்?"

அவன்: "உன்னைப் பார்த்தால் அந்தப் பாடகியைப் போலவே தோற்றத்திலிருக்கிறாய். அவளைப் போலவே கூந்தலை பல்வர்ணங்களில் அலங்கரித்திருக்கிறாய். ஆடைகளையும்தான். குறிப்பாக உன் அகன்ற கண்களும், வட்ட முகமும், சிரிப்பும் கூட அவளையே எனக்கு ஞாபகப்படுத்துகிறது"

அதைக் கேட்டதும் அவள் பலமாகச் சிரித்தாள். அத்துடன் கூறினாள்: "இதையா கூற வந்தாய்? உனது பாராட்டுதல்களுக்கு எனது மனமார்ந்த நன்றி. என் சிநேகிதிகள் கூட அவ்விதம்தான் கூறுவார்கள். பல சமயங்களில் நானும் அவளைப் போலவே ஆடைகள் அணிந்து கொள்வதும், தலையலங்காரம் செய்து கொள்வதும் வழக்கம். உண்மையில் நீ இவ்விதம் கூறுவது எனக்கு மகிழ்ச்சியைத்தான் தருகிறது. என் அபிமானப் பாடகிகளொருத்திபோல் நானிருக்கிறேனென்று நீ கூறுகிறாய். எவ்வளவு பெருமையாகவிருக்கிறது தெரியுமா? நன்றி.
நன்றி. மிகவும் பற்பல நன்றி.."

இவ்விதமாக அவர்களது உரையாடல் பல்வேறு விடயங்களைத் தொட்டுத் தொடர்ந்தது.

"உன்னுடன் இதுவரையில் இவ்விதம் கதைத்துக் கொண்டு வந்தது மகிழ்சியாகவிருந்தது. இந்த இரவினை ஒருபோதுமே மறக்க மாட்டேன். உனக்கு விருப்பமென்றால் இந்த இரவினை உன்னுடன் கழிப்பதில்கூட எனக்கு ஆட்சேபனையேதுமில்லை. எங்காவது உணவகத்துக்கோ அல்லது கிளப்புக்கோ செல்லலாம். என்ன சொல்லுகிறாய்?'

அவனுக்கு அவளது வெளிப்படையான பேச்சு வியப்பினைத் தந்தது. அவளது வெளிப்படையான பேச்சும், நடத்தையும் அவளது நல்லுள்ளத்தை வெளிப்படுத்தின.

அத்துடன் அவன் கூறினான்: "உன் அழைப்புக்கு நன்றி. ஆனால் தற்போது நான் முக்கியமானதொரு விடயமாக ஒருவரை சந்திக்க வேண்டியிருக்கிறது. மன்னித்துக் கொள். நடுவழியில் என் பிரயாணத்தை உன் சந்திப்பு மூலம் சிறப்பித்ததற்கு என் நன்றி பல. இந்த இரவையும், உன்னுடனான இந்தச் சந்திப்பையும் ஒருபோதும் மறக்க மாட்டேன். சிந்தி லோப்பரின் பாடலைக் கேட்கும் ஒவ்வொரு சமயமும் நீயும் என் நினைவுக்கு வருவாய்" என்றான். மூஞ்சூறு தான் போக வழியைக் காணவில்லை. விளக்குமாறைத் தூக்கச் சொல்கிறாள். ஒருவேளை சாப்பாட்டுக்கே 'ததிங்கிணதோம்' போடவேண்டிய நிலையில் கிளப்புக்கு அழைக்கிறாள்?

அவள் இறங்குவதற்கான தரிப்பிடம் வந்ததும் சிறிது வாடிய வதனத்துடன் சிறிய காகிதத்துண்டொன்றில் தனது தொலைபேசி இலக்கத்தையெழுதி அவனிடம் தந்தபடி "எப்பொழுதுதாவது நீ என்னச் சந்திக்க் விரும்பினால் இந்தத் தொலைபேசி இலக்கத்துக்கு அழை. நல்லதொரு சந்திப்பினைத் தந்ததற்காக இந்த இரவுக்கு நன்றி.. இந்தப் பயணத்தில் நல்லதொரு துணையாகவிருந்ததற்கு உனக்கும் நன்றி" என்றவள் சிந்தி லோப்பரின் Time After Time பாடலில் வரும் 'If youre lost you can look and you will find me Time after time; If you fall I will catch you Ill be waiting Time after time' என்ற வரிகளைப் பாடி அவனை நோக்கிக் கண்களைச் சிமிட்டியபடி விடைபெற்றாள்.

அவனது தனித்த பயணம் அந்த நள்ளிரவில் தொடர்ந்தது.

[அடுத்த அத்தியாயத்தில் முடியும்]

தொடர் நாவல்: குடிவரவாளன் - வ.ந.கிரிதரன் -


அத்தியாயம் இருபத்தைந்து: பப்லோவென்றொரு சமர்த்தனான முகவன்!

இளங்கோவின் குறிப்பேட்டிலிருந்து..........
வாழ்க்கை வழக்கம் போலவே உருண்டோடிக் கொண்டிருக்கிறது. ஒரு சில சமயங்களில் சலிப்பு மிகவும் அதிகமாகி நம்பிக்கை தளர்ந்து விடுகிறது. அச்சமயங்களிலெல்லாம் எந்தவிதமான எதிர்மறையான சிந்தனைகளும் தாக்கவிடாமலிருப்பதற்காக நேரம் காலமென்றில்லாமல் நகர் முழுவதும் அலைந்து திரிந்து கொண்டிருப்பேன். அருள் கூட சில சமயங்களில் என் அலைச்சலுக்கு ஈடு கொடுக்க முடியாமல் அறையிலேயே தங்கி விடுவான். இவ்விதமான சமயங்களில் நகரை, நகர மாந்தரை, சூழலை, சமூக வாழ்க்கையினை எனப் பல்வேறு விடயங்களை அறியும்பொருட்டுக் கவனத்தைத் திருப்பினேன். அவ்வப்போது நகரத்தின் பிரதான நூலகத்துக்குச் செல்வதுமுண்டு. ஒரு சில சமயங்களில் புரூக்லீன் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் நண்பர்களைச் சென்று சந்தித்து அவர்களுக்கு ஆறுதலாக அளவளாவி வருவதுமுண்டு.

இதே சமயம் அனிஸ்மான் கூறியபடி மான்ஹட்டனிலிருந்த பலசரக்குக் கடையொன்றை நடாத்திக் கொண்டிருந்த குஜராத் தம்பதியினரிடமிருந்து வேலை வழங்கற் கடிதமொன்றினையும் எடுத்து வேலை செய்வதற்குரிய அனுமதிப்பத்திரத்துக்காக விண்ணப்பித்தோம். அதே சமயம் அனிஸ்மான் கூறியபடியே எம் விடயத்தில் சட்டவிரோதமாகத் தடுப்புக் காவலில் வைத்தத்னாலேற்பட்ட மனித உரிமை மீறல்கள் விளைவித்த பாதிப்புகளுக்காக அமெரிக்க அரசிடம் நட்ட ஈடு கேட்டும் விண்ணப்பித்தோம். நாட்கள்தான் வேகமாகச் சென்று கொண்டிருந்தனவே தவிர காரியமெதுவும் நடக்கிறமாதிரித் தெரியவில்லை. இதே சமயம் மீண்டும் பகல் நேரங்களில் வேலை தேடும் படலத்தை ஆரம்பித்தோம். இவ்விதமாகக் காலம் சென்று கொண்டிருந்தபோதுதான் ஒருநாள் நண்பகற் பொழுதில் மகேந்திரனைச் சந்தித்தேன். இவன் கிரேக்கக் கப்பலொன்றில் பல வருடங்களாக வேலை பார்த்து விட்டு அண்மையில் அக்கப்பல் நியூயார்க் வந்திருந்த சமயம் பார்த்து இங்கேயே தங்கி விட்டவன். இப்பொழுது என்னைப்போல் வேலை தேடிக் கொண்டிருந்தான். ஒரு நாள் வழக்கம் போல் பகல் முழுவ்தும் அலைந்து திரிந்து சலித்துப் போய் நாற்பத்திரண்டாவது வீதியிலிருந்த பிரதான பஸ் நிலையத்தில் பொழுதினை ஓட்டிக் கொண்டிருந்தபொழுது அவனாகவே வந்து தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான். தான் வேலை தேடித்தருமொரு முகவனைச் சந்திக்கப் போவதாகவும் , அவன் மிகவும் திறைமைசாலியென்று கேள்விப்பட்டிருப்பதாகவும், நான் விரும்பினால் நானும் அவனுடன் அந்த முகவனைச் சந்திக்க வரலாமென்றும் கூறினான். அவனது கூற்றிலிருந்த உற்சாகம் சலித்துக் கிடந்த என் மனதிலும் மெல்லியதொரு நப்பாசையினை ஏற்படுத்தியது. அத்துடன் மகேந்திரன் கூறிய இன்னுமொரு விடயம்தான் எனக்கு மீண்டும் அத்தகையதொரு நப்பாசையினை ஏற்படுத்தக் காரணமாகவிருந்தது. அவனறிந்தவகையில் இந்த முகவன் அவனைச் சந்திக்கும் முதல்நாளிலேயே உடனடியாக வேலைக்கு அனுப்பி விடுவானாம். அதுதான் அவனது சிறப்பாம். அவன் அமெரிக்க மண்ணில், குறிப்பாக நியூயார்க் மாநகரில் சட்டவிரோதமாகத் தங்கியிருக்கும் மக்களனைவருக்கும் ஆபத்தில் அபயமளிக்கும் கடவுளாம். அவன் இவ்விதமாகவெல்லாம் அந்த முகவனைப் பற்றி அளந்து கொட்டவே நான் கேட்டேன்: "இதையெல்லாம் எங்கையிருந்து நீ அறிந்து கொண்டனி". அதற்கவன் வழியில் சந்தித்த ஸ்பானிஷ்காரனொருவன் கூறியதாகவும், அவன் தந்திருந்த பத்திரிகையொன்றிலும் இந்த முகவனின் விளம்பரம் வந்திருந்ததாகவும், அதில் கூட இவனைச் சந்திக்கும் எவரையும் உடனடியாகவே வேலை செய்யுமிடத்திற்கு அனுப்பிவிடுவதில் இவன் சமர்த்தனென்று குறிப்பிடப்பட்டிருந்ததைத் தான் பார்ததாகவும் கூறியபொழுது எனக்கும் அந்த முகவன்பேரில் நல்லதொரு அபிப்பிராயமேற்பட்டது. இதன்விளைவாக நானும் மகேந்திரனுடன் சேர்ந்து அந்த முகவனிடம் செல்வதற்குச் சம்மதித்தேன். விடா முயற்சியில்தானே வாழ்க்கையின் வெற்றியே தங்கியுள்ளது. ஊக்கமது கைவிடேலென்று அவ்வைக் கிழவி கூட ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் எடுத்துரைத்திருக்கின்றாளல்லவா.

பப்லோ ஒரு ஸ்பானிஷ்கார முகவன். மிகவும் அழகிய தோற்றமும், மயக்கும் குரல்வாகும் வாய்க்கப்பட்டவன். அவனும் நகரின் பிரதான பஸ் நிலையத்திற்கண்மையிலுள்ள சிறியதொரு காரியாலயத்தில் தன் தொழிலை நடாத்திக் கொண்டிருந்தான். நாங்களிருவரும் அவனைச் சந்தித்தபொழுது அவன் சிறிது ஓய்வாகவிருந்தான். ஓரிருவர்தான் அவனைச் சந்திப்பதற்காகக் காத்திருந்தார்கள். அவர்களையெல்லாம் அனுப்பிவிட்டு எம்மிடம் வந்தவன் எங்களிருவரையும் தன்னறைக்கு அழைத்துச் சென்றான். எங்களிருவரின் சோகக் கதைகளையும் மிகவும் ஆறுதலாகவும், அனுதாபத்துடனும் கேட்டான். அதன்பிறகு அவன் கூறினான்: "உங்களைப் போல்தான் நானும் ஒருகாலத்தில் தென்னமெரிக்காவிலிருந்து இந்த மண்ணுக்குக் கனவுகளுடன் காலடியெடுத்து வைத்தவன். அதனால் உங்களது உள்ளத்துணர்வுகளை என்னால் நன்கு உணர முடிகிறது. அன்று நானடைந்த வேதனையான அனுபவங்களின் விளைவாகத்தான், இவ்விதமாக இந்த மண்ணில் நான் அன்று வாடியதைப் போல் வாடும் உங்களைப் போன்றவர்களுக்கு உதவுவதற்காக இந்த வேலை வாய்ப்பு முகவர் நிலையத்தையே ஆரம்பித்தேன். இதற்காக நான் அறவிடுவதும் கூட அப்படியொன்றும் பெரிய கட்டணமல்ல. ஐம்பது டாலர்கள் மட்டும்தான்".

அதன்பின் எங்களிருவரையும் வேலை தேடுவதற்கான விண்ணப்படிவங்களை நிரப்பும்படி தந்தான். தான் எங்களிருவரையும் நல்லதொரு தொழிற்சாலைக்கு அனுப்பப் போவதாகவும் , அதற்கேற்ற வகையில் அனுப்புமிடத்தில் எம் வேலை அனுபவங்களைக் கூறவேண்டுமெனவும் அறிவுரைகள் தந்தான். ஐம்பது டாலர்களைக் கட்டிய மறுகணமே தொலைபேசியில் யாருடனோ எம்மிருவரின் வேலை விடயமாகக் கதைத்தான். உடனடியாகவே அனுப்பி வைப்பதாகவும் உறுதியளித்தான். அதன்பிறகு எங்கள் பக்கம் திரும்பி "நண்பர்களே! இன்று நீங்கள் யார் முகத்தில் விழித்தீர்களோ! உங்களுக்கு நல்ல காலம் பிறந்து விட்டது. உங்களிருவரையும் நகரிலுள்ள நல்லதொரு 'மெயிலிங்' தொழிற்சாலைக்கு அனுப்பப் போகின்றேன். வேலையும் அவ்வளவு சிரமமானதல்ல. மெயில்களை தரம் பிரிப்பதுதான் பிரதானமான வேலை. அது தவிர வழக்கம்போல் தொழிற்சாலைக்குரிய பொதுவான வேலைகளுமிருக்கும். வேலையை மட்டும் ஒழுங்காகச் செய்தீர்களென்றால் உங்களிருவருக்கும் நல்லதொரு எதிர்காலமே இருக்கிறது. என்னை உங்களின் கடவுளாகவே கொண்டாடுவீர்கள்." இவ்விதம் கூறியவன் குயீன்ஸ்சில் 'ஸ்டெயின்வே' பாதாள இரயிற் தரிப்பிற்கண்மையிலிருந்த தொழிற்சாலையொன்றின் முகவரியைத் தந்து, அங்கு சென்றதும் மனேஜர் டோனியைச் சந்திக்கும்படி கூறி வாழ்த்தி அனுப்பி வைத்தான்.

மகேந்திரனோ இதனால் பெரிதும் உற்சாகமாகவிருந்தான். "பார்த்தியா. ஆள் வலு கெட்டிக்காரன்தான். இவனைப் பற்றிக் கேள்விப்பட்டதெல்லாம் உண்மைதான்" என்றான். இதே சமயம் என் நெஞ்சிலும் ஆனந்தம் கூத்தாடாமலில்லை. இந்த வேலை கிடைத்ததும் இரவு அருளிடம் கூறி அவனை அதிசயிக்க வைக்க வேண்டுமென்று தீர்மானித்துக் கொண்டேன். அத்துடன் அவனையும் அடுத்தநாள் பப்லோவிடம் அழைத்துச் சென்று அறிமுகப்படுத்த வேண்டுமென்றும் மேலதிகத் திட்டமொன்றினையும் போட்டேன். இவ்விதமான திட்டங்கள், கனவுகளுடன் அத்தொழிற்சாலையினைச் சென்றடைந்தோம். 'ரிசப்ஷனில்' இருந்தவளிடம் மனேஜர் டோனியைச் சந்திக்க வந்த விடயத்தைக் குறிப்பிட்டோம். அச்சமயம் அவ்வழியால் வந்த நடுத்தர வயதினான வெள்ளை நிறத்தவனொருவன் "நான் தான் நீங்கள் குறிப்பிடும் டோனி. யார் உங்களை அனுப்பியது பப்லோவா" என்றான். நாம் அதற்கு "ஆம்" என்று பதிலளிக்கவுமே அவன் உடனடியாக எங்களிருவரையும் அருகிலிருந்த உணவறைக்குக் கூட்டிச் சென்றமர்த்தினான். அத்துடன் பின்வருமாறும் கூறினான்: "உண்மையைச் சொன்னால் எனக்கு இந்த ப்ப்லோவை யாரென்றே தெரியாது. அண்மைக் காலமாகவே இவன் என் பெயரை எப்படியோ தெரிந்து கொண்டு உங்களைப் போல் பலரை இங்கு இவ்விதமாக அனுப்பி வைக்கின்றான்." . எங்களிருவருக்கும் பெரிதும் திகைப்பாகவிருந்தது. இதனை நாங்கள் எதிர்பார்க்கவேயில்லை. டோனி மேலும் தொடர்ந்து "யாரவன்? வேலை வாய்ப்பு தேடித்தரும் முகவனா?" என்றான். அதற்கு நாங்களிருவரும் 'ஆமென்று ' தலையாட்டவே அவன் கேட்டான்" "இதற்காக நீங்களேதாவது பணம் கொடுத்தீர்களா?" இதற்கும் நாம் பரிதாபமாக 'ஆமென்று ' பதிலிறுக்கவே அவன் சிறிது பரிதாப்பட்டான். அத்துடன் கூறினான்: "இந்த விடயத்தில் நான் கூறக் கூடியது இது ஒன்றுதான். இந்த விடயத்தை இங்குள்ள காவற துறையினரிடம் சென்று முறையிடுங்கள். இல்லாவிட்டால் இவன் தொடர்ந்தும் உங்களைப் போல் பலரை ஏமாற்றிக் கொண்டேயிருப்பான். என்னை இந்த விடயத்தில் நீங்கள் சாட்சியத்திற்காக அழைத்தால் வந்து கூறத் தயாராகவிருக்கிறேன்."

அச்சமயத்தில் மகேந்திரனின் முகத்தைப் பார்த்தேன். என்னைப் பார்ப்பதற்கே கூச்சப்பட்டுக் கொண்டிருந்தான். வெளியில் வந்தபொழுது சிறிது நேரம் இருவருமே ஒன்றுமே பேசிக் கொள்ளவில்லை. காவற் துறையினரிடம் முறையிடும்படி டோனி கூறியது நினைவுக்கு வந்தது. எப்படி முறையிடுவது? நாங்களோ வேலை செய்வதற்கும் அனுமதியற்ற சட்டவிரோதக் குடிகள். சட்டவிரோதமாக வேலை செய்வதற்காகப் பணம் கொடுத்தோமென்று எவ்விதம் அவர்களிடம் முறையிடுவது? எங்களைப் போன்றவர்களின் நிலையினைப் பயன்படுத்திப் பணம் பறிப்பதற்குத்தான் எத்தனையெத்தனை கூட்டங்களிங்கே?

அச்சமயம் மகேந்திரன் பப்லோவைப் பற்றி 'அவனைச் சந்திக்கும் முதல்நாளிலேயே உடனடியாக வேலைக்கு அனுப்பி விடுவானாம். அதுதான் அவனது சிறப்பாம். அவன் அமெரிக்க மண்ணில், குறிப்பாக நியூயார்க் மாநகரில் சட்டவிரோதமாகத் தங்கியிருக்கும் மக்களனைவருக்கும் ஆபத்தில் அபயமளிக்கும் கடவுளாம்' என்று கூறியது நினைவுக்கு வந்தது. இலேசாகச் சிரிப்பும் வந்தது. "என்ன சிரிக்கிறாய்?" என்றான் மகேந்திரன்.

"நீ அவனைப் பற்றி ஆரம்பத்தில் கூறியதை நினைச்சதும் சிரிப்பு வந்த'தென்றேன்.

அவன் புரியாத பார்வையுடன் என்னைப் பார்த்தான்.

நான் கூறினேன்: "நீ தானே சொன்னாய் அவன் முதல்நாளிலேயே வேலைக்கு அனுப்பி விடுவதில் வல்லவனென்று. அதை நினைச்சுத்தான் சிரித்தேன். ஒரு விதத்திலை அதுவும் சரிதான். எங்களையும் உடனேயே வேலை செய்யுமிடத்துக்கு அனுப்பி விட்டான்தானே. வேலைக்கு அனுப்புவதிலை கெட்டிக்காரனறுதானே சொல்லுகிறான். வேலையை எடுத்துத் தருவதிலை கெட்டிக்காரனென்று அவன் கூறவில்லைதானே. இந்த விதத்திலை அவன் தன்னைப் பற்றிப் பண்ணியிருக்கிற விளம்பரம் சரிதானே"

இதைக் கேட்டதும் மகேந்திரனின் முகம் போன போக்கைப் பார்க்க வேண்டுமே!

அன்றிரவு அறைக்குத் திரும்பியபொழுது அருள்ராசா கேட்டான்: "ஏதாவது கொத்தியதா?".சென்ற விடயம் வெற்றியா , தோல்வியா அல்லது காயா பழமா என்பதற்குப் பதிலாக நாம் 'கொத்தியதா' என்ற சொல்லினைப் பாவிப்பது வழக்கம். அந்த வழக்கத்தில்தான் அருள்ராசா அவ்விதம் கேட்டான். ஆனால் அவனுக்குப் பப்லோவென்றோர் அரவம் கொத்திய விடயத்தை எவ்விடம் தெரிவிப்பது?

[தொடரும்]

தொடர் நாவல்: குடிவரவாளன் - வ.ந.கிரிதரன் -


அத்தியாயம் இருபத்திநான்கு: அனிஸ்மானின் ஆலோசனை!

"வாருங்கள் என் அன்புக்குரிய நண்பர்களே! காலை வணக்கங்கள்! இன்று நான் உங்களை சந்திக்க விரும்பியதற்கொரு முக்கியமான காரணமுண்டு. அதற்குமுன்னர் உங்களது வாழ்க்கையைப் பற்றிச் சிறிது அறிய விரும்புகின்றேன். வாழ்க்கை எப்படியிருக்கிறது? என்னால் ஏதாவது உடனடியாகச் செய்ய வேண்டியதேதாவதிருக்கிறதா?" இவ்விதமாக இளங்கோவையும் அருள்ராசாவையும் வரவேற்றார் சட்டத்தரணி அனிஸ்மான்.

இதற்கு இளங்கோவையே பதிலளிக்குமாறு பார்வையால் உணர்த்தினான் அருள்ராசா. அதனைப் புரிந்து கொண்ட இளங்கோ சிறிது விபரமாகக் கூறத்தொடங்கினான்: "நற்காலை வந்தனங்கள் உங்களுக்கும் உரித்தாகட்டும் அனிஸ்மான் அவர்களே! உங்களது பரிவான விசாரணைக்கு எமது நன்றி. நீங்கள் உடனடியாக அழைத்ததால்தான் தற்போது வந்துள்ளோம். இருந்தாலும் சிறிது காலமாகவே உங்களைச் சந்திக்க வேண்டுமென்று எண்ணியிருந்தோம். அதற்குள் நீங்களே அழைத்து விட்டீர்கள் பழம் பழுவிப் பாலில் விழுந்தது மாதிரி"

'மேலே கூறுங்கள்' என்பது போன்றதொரு பாவனையில் அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தார் அனிஸ்மான். இளங்கோவே மேலே தொடர்ந்தான்: "தற்போது எங்கள் முன்னாலுள்ள முக்கியமான பிரச்சினையே 'சமூகக் காப்புறுதி இலக்க அட்டை' போன்ற சட்டரீதியான ஆவணங்களைப் பெறுவதுதான். 'ச.கா.இ' அட்டை இல்லாமல் ஒன்றுமே செய்ய முடியாதுள்ளது. எங்களிடமிருந்த கடவுச் சீட்டையும் குடிவரவுத் திணைக்களத்தினர் பாஸ்டனிலேயே பறித்து வைத்துள்ளனர். இந்நிலையில் 'ச.கா.இ.' அட்டையில்லாமல் சட்டரீதியாகவொரு வேலைகூடச் செய்ய முடியாமலுள்ளது. வங்கியொன்றில் கணக்கொன்றும் ஆரம்பிக்க முடியாமலுள்ளது. நீங்கள்தான் இந்த விடயத்தில் எப்படியாவது உதவ வேண்டும். ஒழுங்காக வேலையொன்றும் செய்ய முடியாமல் அன்றாட வாழ்க்கையையே கொண்டு நடத்த முடியாமலுள்ளது"

இளங்கோ இவ்விதம கூறவும் அவன் கூறுவதையே மிகவும் அவதானமாகச் செவிமடுத்துக் கொண்டிருந்த சட்டத்தரணி அனிஸ்மான "உங்கள் நிலை எனக்கு நன்றாகவே புரிகிறது. நிச்சயமாக என்னால் முடிந்த அளவுக்கு முயன்று பார்க்கிறேன் மேலும் நீங்கள் மட்டும் யாராவது ஒருவரது வர்த்தக நிறுவனத்திலிருந்து உங்களுக்கு வேலையிருப்பதாக ஒரு கடிதமொன்றினை எடுத்துத் தந்தால் அதனையும், உங்களது இன்றைய நிலையினையும் வைத்து குடிவரவுத் திணைக்களத்திடம் உங்களுக்கு வேலை செய்வதற்குரிய அனுமதிப் பத்திரம் கோரி விண்ணப்பிக்கலாம்."

சட்டத்தரணி அனிஸ்மான் இவ்விதம் கூறவே அவர்களது உரையாடலின் நடுவே புகுந்த அருள்ராசா "எபபடியாவது நீங்கள் கூறியது போன்றதொரு கடிதத்தினை எடுத்துத் தருகின்றோம். தந்தால் எங்களுக்குச் சமூகக் காப்புறுதி இலக்க அட்டை கிடைக்குமென்பது என்ன நிச்சயம்?" என்று கேட்கவும் அனிஸ்மான் அதற்குப் பதிலாக "எதுவுமே நூற்றுக்கு நூறு நிச்சயமில்லை. ஆனால் முயன்று பார்ப்பதில் தவறொன்றுமில்லையே. அவ்விதமானதொரு 'வேலை வழங்கல்' கடிதமொன்றிருந்தால் அது உங்களுக்கு மிகவும் சார்பாக அமையும்" என்று விடையிறுத்தார்.

அதற்கு இளங்கோவும், அருள்ராசாவும் "நீங்கள் கூறுவதும் சரிதான். எப்படியாவது அவ்விதமானதொரு 'வேலை வழங்கல்'
கடிதமொன்றினை எடுத்துத் தருகின்றோம்." என்று கூறினார்கள். அதன்பின் அவர்களது உரையாடல் அகதிக் கோரிக்கைக்கான விண்ணப்பம் பற்றித் திரும்பியது. அவர்களது அகதிக் கோரிக்கைக்கான விண்ணப்பத்திற்கான விசாரணைக்கான திகதி அறிவித்துக் கடிதம் வரும். அதற்கு முன்னர் அவர் இன்னுமொருமுறை அவர்களிருவரையும் சந்தித்து அவர்களது அகதிக் கோரிக்கைக்கான முழு விபரங்களையும் பெற்றுக் கொள்வார். இவ்விதம் தெரிவித்த அனிஸ்மான தற்போது அவர்களது முக்கிய பிரச்சினை வேலை செய்வதற்குரிய சமூகக் காப்புறுதி இலக்க அட்டை பெறுவதுதான் என்றார். அவரைப் பொறுத்தவரையிலும் அது முக்கியமான விடயம். அவர்களிருவரும் வேலை செய்தால் மட்டுமே அவர்களால் அவருக்கு வழங்கவேண்டிய கட்டணத்தைச் செலுத்த முடியும். இவ்விதமாகப் பல்வேறு விடயங்களைப் பற்றி அவருடன் கலந்துரையாடியபின் அனிஸ்மான் அன்று அவர்களை அழைத்ததற்கான விடயத்திற்கு வந்தார்.

சட்டத்தரணி அனிஸ்மான்: " இது உங்களுக்கு இங்கேற்பட்ட நிலையுடன் தொடர்புள்ளது.."

இளங்கோ, அருள்ராசா (ஒரே குரலில்): "புரியவில்லையே திரு. அனிஸ்மான். சற்று விபரமாகவே கூறுங்களேன்."

அனிஸ்மான்: "உங்களைப் பொறுத்தவரையில் நீங்கள் இந்த நாட்டிற்குச் சட்டவிரோதமாக வந்தவர்களல்லர். கனடாவிலுள்ள மான்ரியால் நகருக்குச் செல்வதுதான் உங்களது நோக்கமாகவிருந்தது."

இளங்கோ, அருள்ராசா (இருவரும் மீண்டும் ஒருமித்த குரலில்): "ஆம்! ஆம்! நீங்கள் சொல்லுவது சரிதான்"

அதன்பின் இளங்கோ தொடர்ந்தான்: "அப்படித்தான் நாங்கள் பயணித்துக் கொண்டிருந்தோம். அதுதான் எங்களது நோக்கமாகவுமிருந்தது. அமெரிக்காவில் சட்டவிரோதமாக நுழையவேண்டுமென்று எப்பொழுதுமே நாங்கள் நினைத்திருக்கவில்லை. எங்களது போதாத காலம் எங்களை மான்ரியால் நகருக்கு ஏற்றிச் செல்ல வேண்டிய டெல்டா விமான நிறுவனம் மறுத்து விட்டதுதான். அதனால்தான் எங்களுக்கிந்த நிலை ஏற்பட்டது. அதுதான் காரணம். நீங்கள் சொல்வது சரிதான்."

இப்பொழுது இளங்கோவை இடைமறித்த அனிஸ்மான் கூறினார்: "உண்மைதான். இந்த நாட்டிற்குச் சட்டவிரோதமாக வரவேண்டுமென்று எந்தவித எண்ணமுமில்லாமல் வந்த உங்களுக்கு இந்த நிலையேற்பட்டது வருத்ததிற்குரியது. அதற்காக இந்த நாட்டுக் குடிமகனென்ற வகையில் நான் வெட்கமடைகின்றேன். அதுதான் என் மனதினைப் போட்டு வருத்திக் கொண்டிருந்தது. அதற்காகத்தான் இந்த விடயத்தில் உங்களுக்கு நீதி கேட்டு என்னால் முடிந்த ஏதாவது உதவிகளைச் செய்ய முடியலாமாவென்ரு யோசித்துப் பார்த்தேன். உதவலாமென்று பட்டது. அதற்காகத்தான் உங்களுடன் சிறிது கலந்தாலோசிக்க விரும்புகின்றேன்."

இளங்கோ: "உங்களது பெருந்தன்மைக்கு மிகவும் நன்றி. நாங்கள் உண்மையில் பெருமைப் படுகின்றோம் உங்களது உயர்ந்த
உள்ளத்தையெண்ணி. எந்தவகையில் இந்த விடயத்தில் உதவலாமென்று நீங்கள் நினைக்கின்றீர்கள்"

அனிஸ்மான்: "உண்மையில் மனித உரிமைகள் விடயத்தில் உங்களுக்குத் தீங்கு இழைக்கப்பட்டிருபப்தாகக் கருதுகின்றேன். உங்களைப் பொறுத்தவரையில் உங்களுக்கு எட்டு மணி நேரம் இந்த மண்ணில் தங்கியிருக்க சட்டரீதியான அனுமதியிருந்தது. உங்களது கடவுச் சீட்டுகளில் அதற்கான முத்திரை கூட இடப்பட்டிருந்தது. ஆனால் உங்களது துரதிருட்டம் உங்களை மான்ரியால் ஏற்றிச் செல்ல வேண்டிய விமான நிறுவனம் மறுத்து விட்டதுதான். அதனால் உங்களைத் திருப்பி அனுப்ப முடிவு செய்யப்பட்டபோது அதனைத் தவிர்ப்பதற்காக இங்கு அரசியல் அடைக்கலம் கோரி விண்ணப்பித்தீர்கள். சட்டரீதியாக இந்த மண்ணில் இருக்கும்போதுதான் அவ்விதம் விண்ணப்பித்தீர்கள். இந்த நாட்டினுள் சட்டரீதியாக அனுமதிக்கப்பட்ட நிலையில்தான் நீங்கள் அந்த விண்ணப்பத்தினைச் சமர்ப்பித்திருந்தீர்கள். ஆனால் உங்களுக்கு தங்கியிருக்க அனுமதியளிக்கப்பட்ட அந்த எட்டு மணி நேரம் கடந்ததும் நீங்கள் அந்த சட்டரீதியான நிலையினை இழந்தீர்கள். அந்த நிலையில் உங்களுக்குப் பிணையில் வெளியில் வருவ்தற்குரியதொரு வாய்ப்பிருந்தது. அதனை உங்களுக்கு வழங்குவதற்குப் பதில் உங்களை இந்த நாட்டினுள் அனுமதிக்கப்படாத சட்டவிரோதக் குடிகளாகத் தவறாகக் கருதிய குடிவரவுத் திணைக்களம் உங்களைத் தடுப்புமுகாமில் போட்டு அடைத்தது. நீங்கள் அவ்விதம் தடுப்பு முகாமில் தங்கியிருந்த காலகட்டமானது உங்களுக்குரிய மனித உரிமைகள் மறுதலிக்கப்பட்ட காலகட்டமாகும். அதற்காக உங்களுக்கேற்பட்ட பாதிப்புகளுக்காக இந்த அரசிடமிருந்து நட்ட ஈட்டினைப் பெறுவதற்குரிய உரிமை உங்களுக்கிருப்பதாகவே நான் கருதுகின்றேன். நீங்கள் விரும்பினால் இந்த விடயத்தில் உங்கள் சார்பில் அதற்கான வழக்கினை முன்னெடுத்து வாதாட நான் தயாராகவிருக்கிறேன். அதற்குரிய ஊதியத்தினை வழக்கு வெற்றிபெறும் பட்சத்தில் கிடைக்கும் நட்ட ஈட்டுத் தொகையிலிருந்து நான் பெற்றுக் கொள்ளச் சித்தமாகவிருக்கின்றேன். நீங்கள் இதற்கென்ன சொல்லுகிறீர்கள்?"

இவ்விதம் ச்ட்டத்தரணி அனிஸ்மான் கூறவும் ஒருகணம் இருவரும் என்ன பதில் கூறுவதென்று தெரியாமல் திண்டாடிப் போனார்கள். சட்டத்தரணி அனிஸ்மானே தொடர்ந்தார்: "நீங்களிருவரும் உங்களுக்கிடையில் தாராளமாகவே கலந்தாலோசித்து முடிவினைக் கூறுங்கள். மேலும் இவ்விதம் அரசுக்கெதிராக வழக்குத் தொடுப்பதனால் ஒருவேளை உங்களது அகதிக் கோரிக்கை விடயத்தில் அவர்கள் ஓரளவுக்கு விட்டுக் கொடுத்து வழக்கினைத் தீர்ப்பதற்கும் வாய்ப்புகளுள்ளன".

இதற்குப் பின்னர் அவர்களிருவரையும் தமக்குள் கலந்துரையாட விட்டுவிட்டு சட்டத்தரணி அனிஸ்மான் வேறு காரியமாக வெளியே சென்றார். நண்பர்களிருவரும் தமக்குள் இது விடயமாகக் கலந்துரையாடினர்.

இளங்கோ: "என்ன அருள் இவன் சொல்லுறதைப் பத்தி உன்னுடைய யோசனையென்ன? காத்தியை இந்த விசயத்திலை நம்பலாமென்று நினைக்கிறியா?"

அருள்ராசா: "இவன் சொல்லுறதிலையும் நியாயமிருக்குதானே. எங்கட நிலையிலை இதிலை வென்றால் லொத்தர் விழுந்தமாதிரித்தானே.. சும்மா வாறதை ஏன் விடுவான். வந்தவரைக்கும் லாபம்தானே... எனக்கென்றால் அவன் சொல்லுறபடியே செய்து பார்க்கலாமென்றுதான் படுகிது. சில நேரம் அவன் சொல்லுற மாதிரி எங்கட அகதிக் கோரிக்கை வழக்குக்கும் இது 'பார்கயின்' பண்ன உதவலாம். எனக்கு ஓகே."

இவ்விதமாக நண்பர்களிருவரும் கலந்துரையாடி இறுதியில் சட்டத்தரணி அனிஸ்மானின் ஆலோசனைக்குச் சம்மதிப்பதாக முடிவு செய்தார்கள். சிறிது நேரத்தில் மீண்டும் திரும்பிய அனிஸ்மான் " என் அன்புக்குரிய நண்பர்களே! இந்த விடயத்தில் என்ன முடிவினையெடுத்துள்ளீர்கள்?" என்றார். அதற்கு அருள்ராசா "நாங்கள் நன்கு ஆலோசித்துப் பார்த்தோம். நீங்கள் கூறுவது சரியாகவே படுகிறது. சம்மதிக்கிறோம்." என்றான். அதைக்கேட்ட சட்டத்தரணி அனிஸ்மானின் முகமெல்லாம் உடனடியாகவே பல்லாக மலர்ந்தது. அந்த முகமலர்ச்சியுடன் "நல்ல முடிவாக எடுத்திருக்கிறீர்கள். நாளைக்கு மீண்டும் வாருங்கள். உரிய பத்திரங்களைத் தயாரித்து வைக்கிறேன். கையெழுத்துப் போட வேண்டியிருக்கும்." என்றும் கூறினார்.

[தொடரும்]

தொடர் நாவல்: குடிவரவாளன் - வ.ந.கிரிதரன் -

அத்தியாயம் இருபத்திமூன்று: சட்டத்தரணி அனிஸ்மானின் அலுவலக்த்தை நோக்கி!

கார்லோவிற்காக மாலை நேரங்களில் விளம்பரங்களை விநியோகிக்கும் வேலையும் புதியதொரு அனுபவத்தை அவர்களுக்குத் தந்தது. நான்காவது தெரு மேற்கும், ஆறாவது அவென்யுவும் சந்திக்குமிடத்தில் இளங்கோ பிரசுரங்களை விநியோகிக்கத் தொடங்கினான். அருள்ராசா கிறிஸ்தோபர் வீதி, ஏழாவது அவென்யு மற்றும் நான்காவது தெரு மேற்கும் சந்திக்குமிடத்தில் அவற்றை விநியோகிக்கத் தொடங்கினான். அவர்களைப் பொறுத்தவரையில் அவ்விதமாக விளம்பரங்களை விநியோகிப்பது பெரிதும் சிரமமானதாகவிருக்கவில்லை. ஆரம்பத்திலிருந்த கூச்சமெல்லாம் ஒரு சில நிமிடங்களிலேயே மறைந்து விட்டது. 'ஒன்றுக்கு இரண்டு. ஒன்று வாங்கினால் இன்னுமொன்று இலவசம். (Two for one!)' இதுதான் கார்லோவின் மலிவு விற்பனை விளம்ப்ர வாசகங்கள். ஒன்றுக்கு இரண்டு என்று கூவிக் கூவி விளம்பரங்களை விநியோகிப்பதும் சிறிது இலகுவாகவிருந்தது. ஒன்றுக்கு இரண்டு என்றதும் நடைபாதையால் நடந்து சென்று கொண்டிருந்தவர்கள் ஒருகணம் நின்று அதுபற்றி விசாரித்தார்கள். அதன்பின் விளம்பரங்களையும் வாங்கிக் கொண்டார்கள். ஆளுக்கு ஆயிரம் விளம்பரங்களையாவது விநியோகிக்க வேண்டும். அவ்விதம் ஆயிரம் விளம்பரங்களை ஒருவர் விநியோகித்தால் அவற்றை வாங்கிய ஆயிரம் பேரில் குறைந்தது நூறு பேர்களாவது கார்லோவின் கடைக்கு விஜயம் செய்வார்கள். அவர்களில் குறைந்தது பத்துப் பதினைந்து பேராவது ஏதாவது வாங்கிச செல்வார்கள். இவ்விதமாக விளம்பரங்களை விநியோகிக்கும்போது பெரும்பாலும் நடைபாதைவாசிகள் நின்று விசாரித்து வாங்கிச் சென்றதால் வேலை மிகவும் இலகுவானதாகப் பட்டது. அதேசமயம் பல்வேறு வயதினராக, நிறத்தினராக, மொழியினராக, மதத்தினராக, நாட்டினராக நடைபாதைவாசிகளிருந்தார்கள். பலர் அவர்களுடன் சிறிது நேரமாவது நின்று நிதானித்து சிறியதொரு சம்பாசணையினை நிகழ்த்தினார்கள். ஒரு சிலர் அவர்களது பூர்வாசிரமத்தைப் பற்றி விசாரித்தார்கள். இன்னும் சிலர் அவர்களது தாய்நாடு பற்றிய தங்களது பூகோளவியல் சம்பந்தமான தமது அறிவினை வெளிப்படுத்தும் வகையில் கேள்விகளைத் தொடுத்தார்கள் அல்லது பகிர்ந்து கொண்டார்கள்.

இளங்கோவைப் பொறுத்தவறையில் அவ்விதமாக விளம்பரங்களை விநியோகிக்கையில் மேலும் சிலரின் நட்பினைச் சம்பாதித்துக் கொண்டான். அவர்களிலொருத்தி 'ஹரே கிருஷ்ணா! ஹரே ராமா' அமைப்பினச் சேர்ந்த இங்கிரிட். இங்கிரிட் சேலை உடுத்தித் தொலைவிலிருந்து பார்க்கையில் ஓரிந்தியப் பெண்ணாகவே காட்சி தந்தாள். ஆரம்பத்தில் அவளுடனான சந்திப்பு பின்வருமாறு அமைந்திருந்தது.

இளங்கோவை முதன்முதலாக அவ்விடத்தில் விளம்பரங்களுடன் கண்டதும் அந்நடைபாதையிலிருந்து 'ஹரே கிருஷ்ணா! ஹரே ! ராமா!' அமைப்பினரின் பிரசுரங்களை விநியோகித்துக் கொண்டிருந்த இங்கிரிட் தானே வலியவந்து தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள். "ஹாய்! என்பெயர் இங்கிரிட். ஹரே கிருஷ்ணா! ஹரே ராமா! அமைப்புக்காகத் தொண்டராக பணிபுரிந்து கொண்டிருக்கிறேன். நீ யாருக்காக வேலை செய்கின்றாய். அது என்ன? எவற்றை நீ விநியோகித்துக் கொண்டிருக்கிறாய்?"

அதற்கு அவன் "கார்லோவின் ஆடைக்கடைக்காக விளம்பரங்கள் விநியோகிக்கின்றோம். தற்போது அங்கு ஒன்றுக்கு இரண்டு என்று மலிவு விற்பனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விரும்பினால் நீங்களும் ஒருமுறை சென்று பாருங்களேன்." என்று கூறிவிட்டு அவளுக்கும் இரண்டு மேலதிக விளம்பரங்களை கொடுத்தான். அதைச் சிறிது நேரம் வாசித்துவிட்டு அவள் 'பிரயோசனமான மலிவு விற்பனைதான். வேலை முடிந்து செல்லும்போது ஒருமுறை சென்று பார்க்க வேண்டியதுதான்." என்று பதிலுரைத்தாள். அத்துடன் அவள் அவனின் அமெரிக்க வாழ்க்கை அனுபவங்களையும் அனுதாபத்துடன் கேட்டுத் தெரிந்து கொண்டாள். அவனதும், அவனது நண்பனினதும் நிலையையெண்ணி அனுதாபம் கொண்ட இங்கிரிட் அவர்களுக்குப் பலனளிக்கக் கூடியதோர் ஆலோசனையினையும் வழங்கினாள். அது வருமாறு: "எங்களது ஆலயத்திற்கு வந்தால் உங்களுக்கு நல்ல உணவு கிடைக்கும். அவ்வப்போது வரப்பாருங்கள். உணவுக்கு உணவு. இந்த நகர அலைச்சலிலிருந்து கொஞ்சநேரமாவது நிம்மதியான ஓய்வு". அத்துடன் ஒருநாள் அவர்களிருவரையும் ஹரே கிருஷ்ணா ஹரே ராமா ஆலயத்துக்கும் அழைத்தும் சென்றாள்.

இவ்விதமாகக் காலம் ஓடிக்கொண்டிருந்த சமயம் திடீரென ஒருநாள் அவர்களது நியுயார்க் சட்டத்தரணி அனிஸ்மானிடமிருந்து அழைப்பொன்று வந்தது. அனிஸ்மானின் சட்ட அலுவலகம் மான்ஹட்டனில் அமைந்ததிருந்த 'அந்நாள்' புகழ் எம்பயர் ஸ்டேட் கட்டடத்தில், முப்பத்துநான்காவது மாடியில் அமைந்திருந்தது. விரைவில் தன்னை வந்து சந்திக்கும்படி தனது செய்தியினைப் பதிவு செய்திருந்தான். அத்துடன் அவர்களது அகதிக்கோரிக்கை பற்றிய வழக்குகள் மற்றும் வேலை செய்வதற்கான தற்காலிக வேலை அனுமதிப் பத்திரத்துக்கு விண்ணப்பிப்பது சம்பந்தமான விடயங்கள் பற்றியெல்லாம் கலந்துரையாடத் தான் விரும்புவதாக அந்தச் செய்தியில் அவன் மேலும் தெரிவித்திருந்தான்.

இவ்விதமானதொரு காலகட்டத்தில் ஒருநாள் இளங்கோவும் அருள்ராசாவும் அவர்களது வழக்கறிஞரான அனஸ்மானைச் சந்திப்பதற்காகச் சென்றார்கள். உலகப் புகழ்பெற்ற 'எம்பயர் ஸ்டேட் பில்டிங்'கில் காலடி வைத்தபொழுது அருள்ராசா கூறினான்:" ஒரு பத்து வருசத்துக்கு முந்தி இதைப்போலை இந்தக் கட்டடத்திலை காலடி வைக்கிறதைப் போலை கனவு கண்டிருப்பியா அல்லது நினைச்சுத்
தானிருந்திருப்பியா?"

அருள்ராசாவின் கேள்விக்கு இயலுமானவரையில் நியாயமாக, உண்மையாகப் பதிலளிக்க விரும்பிய இளங்கோ "நீ சொல்லுறது
ஒருவிதத்திலலை சரிதான். கனவிலை கூட இப்பிடி கண்டிருக்கவில்லைதான்"

இவ்விதமாகக் கதைத்தபடி சென்று கொண்டிருந்த நண்பர்களின் உரையாடல் இறுதியில் சட்டத்தரணி அனிஸ்மானுடனான சந்திப்பு
பற்றியே மீண்டும் மீண்டும் வந்து வந்து நின்றது. அனிஸ்மானின் நினைவுடன் இளங்கோ அருள்ராசாவுக்குப் பின்வருமாறு
ஞாபகப்படுத்தினான்: "எதுக்காக அனிஸ்மான் இப்படித் திடீரென்று விரைவாக அழைத்திருக்கிறானோ தெரியவில்லை. எதுக்கும் இந்த
முறை கட்டாயம் அவனிட்டை வேலைக்கான அனுமதிப்பத்திரம் பெறுவது பற்றியும், அகதிக் கோரிக்கை பற்றிய வழக்கு பற்றிய
விபரங்கள்பற்றியும் நிறையக் கலந்து ஆலோசிக்க வேண்டும். ஆனால் இவன் ஏன் இருந்தாற்போலை திடீரென்று கூப்பிட்டிருக்கிறானோ? எனக்கென்றால் ஆச்சரியமாகததானிருக்குது."

அருள்ராசா சிரித்தபடியே "இளங்கோ! இன்னும் கொஞ்ச நேரத்திலை அவனைச் சந்திக்கப் போகிறோம். அவனிடமே கேட்டுத் தெரிஞ்சு கொள்ளுறதுதானே! அதுக்குள்ளை என்ன அவசரம்?" என்றான்.

அருள்ராசா இவ்விதம் சிறிது சிரிப்புடன் கூறவும் இளங்கோவுக்குச் சிறிது வெட்கமாகவிருந்தது. அந்த வெட்கத்தை இயலுமானவரையில் மறைததவனாக "இந்த நியூயோர்க் குடிவரவுத் திணைக்களத்தில் ஒரு விடயத்தை எதிர்பார்ப்பதென்பது கல்லிலை நார் உரிப்பது மாதிரி. பார்ப்பம் இந்தக் கல்லிலை நாரி உரிப்பதிலை அனிஸ்மான் எந்த அளவுக்குத் திறமைசாலியென்று."

இதற்கு அருள்ராசா " சும்மா சொல்லக் கூடாது. இந்த யூதர்கள் வலு கெட்டிக்காரங்கள். கார்ல் மார்க்சைப் பார்! ஐன்ஸ்டனைப் பார்! சிக்மண்ட் பிராய்ட்டைப் பார். இன்றைய நோம் சாம்ஸ்கியைப் பார். இப்பிடி எந்தத் துறையிலும் பிரகாசிக்கிறது அவங்கதான். பிசின்சிலை இறங்கி நல்லாக் காசைச் சேமித்து வைக்கிறதும் அவங்கள்தான். இந்தத் தனியுடமையை ஒழிச்சுப் பொதுவுடமையைப் பரப்ப வேண்டுமென்ற புரட்சித் தத்துவததை உலகுக்குப் போதித்ததும் அவங்கள்தான். ஆச்சரியமாயில்லை?". இளங்கோ அதுவரையில் அவ்விதமானதொரு கோணத்தில் சிந்தித்துப் பார்த்ததில்லை. அருள்ராசா கூறியதும்தான் அவ்விதம் ஒப்பிட்டுச் சிந்தித்துப் பார்த்தான். ஆச்சரியமாகத்தானிருந்தது. இவ்விதமாக உரையாடியபடி நண்பர்களிருவரும் அவர்களது நியுயார்க் சட்டத்தரணியான அனிஸ்மானின் அலுவலகமிருந்த திக்கை நோக்கி நடையைக் கட்டினார்கள்.

[தொடரும்]

தொடர் நாவல்: குடிவரவாளன் - வ.ந.கிரிதரன் -


அத்தியாயம் இருபத்தியிரண்டு: சுதந்திரதேவிக்கொரு விண்ணப்பம்!

இளங்கோ அருள்ராசாவிடம் ஹரிபாபுவுடனான வேலை முடிவுக்கு வந்த விடயத்தைக் கூறியபோது அவன் கொஞ்சமும் ஆச்சரியப்படவில்லை. "இதை நான் எப்பவோ எதிர்பார்த்திருந்தேன். ஆனால் இவ்வளவு நாளைக்காவது வேலையும் தந்து சம்பளமும் தந்தானே. அதுக்காக அவனைப் பாராட்ட வேண்டியதுதான். அவனுக்கு நன்றியாக இருக்க வேண்டியதுதான்" என்றவன் கார்லோவிடம் பிரசுரங்கள் விநியோகிக்கும் வேலை கிடைத்தது பற்றிக் குறிப்பிட்டதும் "ஒரு விதத்திலை இதுவும் நல்லதுக்குத்தான்" என்றான்.

"அருள் எந்த விதத்திலை இது நல்லதென்று நீ நினைக்கிறாய்?"

"கார்லோவிடம் வேலை பின்னேரங்களிலை ஒரு சில மணித்தியாலங்கள்தானே. அப்ப நாள் முழுக்க எங்களுக்கும் நிறைய நேரமிருக்கும் வேறேதாவது நல்ல வேலை தேட. இல்லையா? அதோடை 'இமிகிரேசன்' அலுவலைப் பார்க்கலாம் இல்லையா..."

அருள்ராசா கூறியதும் சரியாகத்தான் பட்டது. "ஒரு விதத்திலை நீ சொல்லுறதும் சரியாய்த்தானிருக்கு... எல்லாமே நல்லதுக்குத்தான்.
பகல் முழுக்க வேறேதாவது வேலையைத் தேடிப்பார்க்க வேண்டியதுதான். சும்மா நேரம் இருக்குதென்று விஸ்கியை அடித்துப் போட்டுப் பகல் முழுக்கப் படுத்துப் படுத்துக் கிடக்கிறதில்லை. இந்த விசயத்திலை உன்னை நல்லக் கட்டுப்பாட்டிலை வைத்திருக்க வேண்டும் கண்டியோ?"

"நீ சொல்லுறதும் சரிதான். இப்பிடியே காலத்தை வீணக்கிக் கொண்டிருக்க முடியாது. எப்படியாவது நிரந்தரமானதொரு வேலையைக் கண்டு பிடிக்க வேண்டியதுதான்.."

"இல்லாவிட்டால்... கொஞ்சமும் காசு கீசு சேர்க்க முடியாது... இப்பப் பார்.. ஒவ்வொரு நாளும் இந்த வாழ்க்கையைக்
கொண்டோடிறதிலையே முடிஞ்சு போகுது. ஒரு பொழுதுபோக்கு அது இதென்று ஒன்றுமில்லை. எப்பவாவது இருந்திருந்திட்டு அடிக்கிற தண்ணிப் 'பார்ட்டி'யோடை எல்லாமே சரி..."

"என்ன செய்யிறதடா இளங்கோ... எல்லாம் இந்த இமிகிரேசக்காரங்களாலை வந்த கரைச்சல்தானே... அவங்கள் மட்டும் இந்நேரத்துக்கு 'சோசல் இன்சுரன்ஸ் கார்ட்'டைத் த்ந்திருந்தாங்களென்றால் இந்த வேலைப் பிரச்சினை இந்நேரம் போயிருக்கும். ம்.. எல்லாம் காலம்.."

அருள்ராசா கூறுவதும் இளங்கோவுக்குச் சரியான கூற்றாகத்தான் பட்டது. அன்றிரவு எல்லோரும் தூக்கத்தில் சாய்ந்த பின்னும்
இளங்கோவுக்குத் தூக்கமே வரவில்லை. வழக்கமாக இவ்விதமான சமயங்களில் செய்வதுபோல் தனது குறிப்பேட்டையும், பாரதியார்
கவிதைகளையும் எடுத்துக் கொண்டு அறையில் தூக்கத்திலாழ்ந்திருப்பவர்களின் தூக்கத்தினைக் கலைப்பதற்கு விரும்பாமல் உணவறைக்கு வந்தான். சிறிது நேரம் பாரதியாரின் கவிதைகளைப் படிப்பதிலீடுபட்டான். அவனைப் பொறுத்தவரையில் வாழ்க்கை சலிப்பும், விரக்தியுமாகச் சாய்ந்திருக்கும் சமயங்களிலெல்லாம் அவனுக்குத் துணையாக இருப்பவை நூல்களே. முக்கியமாகப் பாரதியாரின் கவிதைகளைப் படிக்கும்போது அவனது சோர்ந்து, துவண்டிருக்கும் மனதானது உற்சாகம் பெற்றுத் துள்ளிக் குதிக்கவாரம்பித்துவிடும்.
பாரதியாரின் கவிதைகளைப் படிக்கப் படிக்க மனது இலேசாகிக் கொண்டே வந்தது. உள்ளத்தில் உறுதி கலந்த உற்சாக உணர்வுகள்
சிறகடிக்கவாரம்பித்தன. அதன்பின் தனது குறிப்பேட்டினை எடுத்து எழுதவாரம்பித்தான். குறிப்பேடு பல வழிகளில் அவனுக்குதவி புரிந்து கொண்டிருந்தது. மனதிலுள்ள பாரங்களை இறக்கி வைப்பதற்குரிய சுமைதாங்கியாக, வாழ்க்கையைத் திட்டமிடுவதற்குரியதொரு சாதனமாக, அந்தரங்க உணர்வுகளைப் பகிர்ந்துகொளவதற்குரியதொரு துணையாகப் பல்வகைகளில் உதவிக்கொண்டிருந்தது. குறிப்பேட்டினைப் பிரித்தவன் முதலில் ஏற்கனவே எழுதப்பட்டிருந்த குறிப்புகளைச் சிறிது நேரம் வாசித்தான். அதன்பின் எழுதவாரம்பித்தான்:

'நாட்டை விட்டு வெளியேறி இன்றுடன் ஆறுமாதங்கள் கழிந்து விட்டன. முதல் மூன்று மாதங்கள் தடுப்பு முகாமில். அடுத்த மூன்று மாதங்கள் வெளியில் காற்றிலாடும் சருகாக. ஒவ்வொரு நாளையும் கழிப்பதற்கான போராட்டத்திலேயே வாழ்க்கை கழிந்து கொண்டிருக்கிறது. இரவு வானை, மதியை, சுடரை, வீசும் தென்றலை, புள்ளை, அந்தியின் அடிவானத்து வர்ண விளையாட்டை.. இவற்றையெல்லாம் மனம்விட்டு இரசிக்க முடியவில்லை. அந்த அளவுக்கு இருப்புப் பிரச்சினையே பெரியதொரு பிரச்சினை. இதற்கு விரைவில் முடிவொன்றினைக் கட்ட வேண்டும். இப்படியே வாழ்வினைச் செல்ல விடக்கூடாது. போனது போகட்டும். இனி அடுத்த ஆறு மாதத்திற்குள் என் வாழ்க்கை உறுதியானதொரு அடித்தளத்தில் கட்டப்பட வேண்டும். அதற்கான உறுதியை இப்பொழுதே இந்தக் கணமே எடுத்துக் கொள்கின்றேன். என் அருமைக் குறிப்பேடே! நீ தான் இதற்குச் சாட்சி!

வீட்டாருக்கு இங்கு நான் படுகிற கஷ்ட்டங்கள் தெரியாது. சொன்னாலும் புரியப் போவதில்லை. ஒரு நேரச் சாப்பாடிற்காக என் மண்ணில் ஒவ்வொரு நாளையும் குடும்பம், குட்டிகளுடன் கழிக்கும் குடியானவர்களின் அன்றாட நிலைமையை இந்தக் கணத்தில் என்னால் மனப்பூர்வமாக உணர முடிகிறது. எந்தவித நம்பிக்கைகளுமின்றி அன்றாடம் வாழ்வே போராட்டமாக வாழும் மக்களுடன் ஒப்பிடும்பொழுது என்நிலை ஒரு பொருட்டேயல்ல. ஆனால் இவற்றையெல்லாம் வீட்டார் உணரும் நிலையில் இருப்பார்களென்று நினைக்க முடியாது. அவர்களைப் பொறுத்தவரையில் மகன் உலகின் குபேரபுரியில் வாழ்கிறான். 'பொடியன் அமெரிக்காவிலை' என்று சொல்லும்போதே அவர்களது வாயெல்லாம் பூரிப்பால் மலர்ந்து விடும். ஆனால் 'பொடியன் இங்கு படுகிற பாட்டை' நேரில் வந்து பார்த்தால் மட்டும்தான் அவர்களால் ஓரளவுக்காவது உணர்ந்து கொள்ள முடியும்.' இவ்விதம் சிறிது நேரம் குறிப்பேட்டில் எழுதினான். அதன் பின் இளங்கோவின் கவனம் அடுத்த ஆறு மாதங்களைப் பற்றிய எதிர்காலத் திட்டங்களில் ஆழ்ந்து போனது. அவற்றைப் பற்றி எழுதும்போது மேலும் மேலும் உள்ளம் நம்பிக்கையால், உற்சாகத்தால் துள்ளிக் குதிக்கத் தொடங்கியது.

'சரியாக இன்னும் ஆறு மாதத்திற்குள் இந்த மண்ணில் மிகவும் உறுதியாகக் காலூன்ற வேண்டும். அதற்கு இயலுமானவரையில் குடிவரவு அதிகாரிகளுடன் மீண்டும் மீண்டும் கதைத்துப் பார்க்க வேண்டும். இந்த ஆறு மாதங்களுக்குள் எதுவுமே சரிவராவிட்டால் தொடர்ந்தும் இங்கிருப்பதை என்னால் நினைத்துப் பார்க்க முடியாது. எந்த விதச் சட்டரீதியான அடையாளத்துக்குரிய ஆவணங்களுமில்லாமல் ஒன்றுமே செய்ய முடியாது. ஒரு வங்கிக் கணக்குத் தொடங்கக் கூட முடியாது. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொருத்தரின் துணையை நாட வேண்டும். இதற்கொரு முடிவை எவ்வளவு விரைவில் கட்ட வேண்டுமோ அவ்வளவு விரைவில் கட்ட வேண்டும். இந்த விசயத்தில கடமையைச் செய்வேன். பலனை எதிர்பார்க்காமல். ஆனால் செயலுக்குரிய பலனெதுவுமில்லாதிருக்கும் பட்சத்தில் தொடர்ந்தும் செயலாற்றிக் கொண்டிருப்பதில் அர்த்தமெதுவுமிருப்பதாகத் தெரியவில்லை. ஆறு மாதங்களுக்கு மேல் பலனை எதிர்பார்க்க வேண்டியதுதான். அதுவரையில் எந்தவிதப் பயனையும் எதிர்பார்க்காமல் முடிந்தவரையில் முயல வேண்டியதுதான். அதன் பிறகும் எந்தவிதப் பயனும் விளையாவிட்டால் இந்த மண்ணில் நான் ஒருபோதுமே இருக்கப் போவதில்லை.

விறகுவெட்டி, தெருவிளக்கில் படித்த ஆபிரகாம் லிங்கனுக்குச் சாத்தியமான அமெரிக்கக் கனவு எனக்குச் சாத்தியமாக வேண்டுமென்றால் முதலில் எனக்கும் அவர்களுக்கிருந்ததைப் போல் இந்த மண்ணில் காலூன்றுவதற்குரியதோரிடம் , அது தற்காலிகமாகவேனுமிருக்க வேண்டும். அதனை இந்த அரசு செய்து தர வேண்டும். அடுத்த ஆறு மாதங்களிலாவது அதனை இந்த அரசு செய்து தருமா?

நியூயார்க்கின் துறைமுகத்தில் நின்றபடி தனது குடிமக்களை, வந்தேறு குடிகளை, அடக்கு ஒடுக்கு முறைகளுக்குள்ளாகி ஓடோடிவரும் அகதிகளை வரவேற்கும் சுதந்திரதேவி ஏன் சிலையாக நிற்கிறாளென்று இப்பொழுதுதான் தெரிகிறது? சுதேசிகளுக்கொரு சட்டம். விதேசிகளுக்கொரு சட்டம். சுதேசிகளுக்குள்ளும் வர்ண அடிப்படையில் நிலவுகின்ற இன்னுமொரு சட்டம். அபயக் குரலெழுப்பி ஓடிவரும் அகதிகளுக்கு நீரிலொரு சட்டம்; நிலத்திலொரு சட்டம். ஓடிவரும் அகதிகளுக்குச் சுதந்திரவொளி காட்டி இருகரம் நீட்டி ஆதரிக்க வேண்டிய உன்னால் அது முடியாமல் போனதினால் ஒருவேளை சிலையாகிப் போனாயோ

சுதந்திரதேவியே! இந்த உலகுக்கெல்லாம் நீ விடுதலையினையும், அது பற்றிய ஞானத்தினையும் போதிப்பதாகக் கூறுகின்றார்களே!
ஆனால். என் விடயத்தை எடுத்துப் பார். இங்குள்ள தடுப்பு முகாம்களுக்குள் அன்றாடம் கனவுகளுடனும், கற்பனைகளுடனும்,
ஏக்கங்களுடனும் வளைய வரும் இந்தப் பூவுலகின் பலவேறு திக்குகளிலிருந்தும் வந்து வாடிக் கொண்டிருக்கும் சுதந்திரம் மறுக்கப்பட்ட அகதிகளை எண்ணிப் பார்! உலகுக்கெல்லாம் சுதந்திரத்தைப் போதிக்குமுன் மண்ணில் அடைக்கலம் நாடி வந்தவர்களுக்கேனிந்த நிலை? என்னைப் பொறுத்தவரையில் இந்த மண்ணை நோக்கிக் களவாகவோ அல்லது சட்டவிரோதமாகவோ வந்தவனல்லன். முறையான ஆவணங்களுடன் இன்னொரு நாட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்தவனை இங்கிருந்து கொண்டு செல்ல வேண்டிய விமானம் கொண்டு
செல்ல மறுத்து விட்ட நிலையினால் இந்த மண்ணில் நிர்க்கதிக்குள்ளாகிப் போனவன். சட்டரீதியாக இந்நாட்டினுள் நுழைந்தவனைச் சட்டவிரோதமாக நுழைந்தவனென்ற பிரிவில் வைத்துத் தடுப்பு முகாமில் அடைத்து வைத்ததும் நீ சுதந்திரத்தைப் போதிக்குமிந்த மண்ணில்தானே நிகழ்ந்தது. சுதந்திரதேவியே!'

இவ்விதம் சிறிதுநேரம் மனப்பாரங்களையெல்லாம் தனது உற்ற துணையான அந்தக் குறிப்பேட்டில் கொட்டித் தீர்த்தான் இளங்கோ.
இவ்விதம் சுமைகளை இறக்கிய மனதில் சிறிது உறுதியும், உற்சாகமும் குமிழியிட்டன. இறுதியாக இவ்விதம் எழுதினான்: -
சுதந்திரதேவியே! உன் மண்ணில் நீ போதிக்கும் சுதந்திரம் என்னைப் போன்றவ்ர்களுக்கு மறுக்கப்பட்டபோதும் நான் உன்னைப் போற்றுகின்றேன். நீ போதிக்கும் சுதந்திரத்தின் அருமையினை உணர்ந்தவன் நான். அதனால் உன்னைப் போற்றுகின்றேன். இரவிலும், பகலிலும், மழையிலும், வெயிலிலும் தனியாக உயர்ந்து நின்று விடுதலையினை உலகுக்கெல்லாம் போதிக்கின்றாயே! அந்தத் தியாகத்தை நான் மதிக்கின்றேன். 'எத்தனை இடர் வரினும் தளர்ந்து விடாதே! விடுதலைக்காகப் போராடு! உலக விடுதலைக்காகப் போராடு!' என்று நீ இயம்புவதை என்னால் உணர்ந்து கொள்ள முடிகிறது. சுதந்திரதேவியே நீ வாழி! -

இவ்விதம் உணர்வுச் சுமைகளைக் குறிப்பேட்டிலிறக்கியதும் உள்ளத்தில்தானெத்தனை மகிழ்ச்சி! அந்த மகிழ்ச்சியுடன் பாரதியாரின் கவிதை நூலினை மீண்டும் பிரித்தான் இளங்கோ.

'அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே!
இச்சகத்து ளோரெல்லாம் எதிர்த்துநின்ற போதினும்,
அச்சமில்லை , யச்சமில்லை, அச்சமென்ப தில்லையே.
துச்சமாக வெண்ணிநம்மைத் தூறுசெய்த போதினும்,
அச்சமில்லை , யச்சமில்லை, அச்சமென்ப தில்லையே.
பிச்சைவாங்கி யுண்ணும்வாழ்க்கை பெற்றுவிட்ட போதினும்,
அச்சமில்லை , யச்சமில்லை, அச்சமென்ப தில்லையே.
இச்சைகொண்ட பொருளெலாம் இழந்துவிட்ட போதினும்,
அச்சமில்லை , யச்சமில்லை, அச்சமென்ப தில்லையே.......
உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும்,
அச்சமில்லை , யச்சமில்லை, அச்சமென்ப தில்லையே.'

அதன்பின்னர் நண்பர்கள் ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்த அறையினுள் மெதுவாக வந்தவன் தன் படுக்கையில் சாய்ந்தான். சாய்ந்தவனை விரைவிலேயே நித்திராதேவி வந்து அரவணைத்துக் கொண்டாள். அவளது அரவணைப்புக்குள் தஞ்சமாவதற்கு முன்னர் அவன் பின்வருமாறு உறுதியாக நினைத்துக் கொண்டான்: 'இன்னும் ஆறு மாதங்கள் மட்டும்தான். அதன்பிறகு சரிவராவிட்டால் அடுத்த பயணத்தைத் தொடங்க வேண்டியதுதான்.' இவ்விதமாக எதிர்காலம் பற்றியதொரு தெளிவான சிந்தனையால் இளகிக் கிடந்தவனை நித்திராதேவி மிகவும் இலகுவாகவே அணைத்துக் கொண்டாள்..

[தொடரும்]

தொடர் நாவல்: குடிவரவாளன் - வ.ந.கிரிதரன் -

அத்தியாயம் இருபத்தொன்று: கார்லோவின் புண்ணியத்தில்... .

"என்ன பையா! வியாபாரமெல்லாம் எப்படி? இன்று எனக்கு உதவியதற்கு நன்றி. நீ இல்லாவிட்டால் உண்மையில் நான் பெரிதும் சிரமப்பட்டிருப்பேன்" என்று வந்ததும் வராததுமாக இளங்கோவைப் பார்த்துக் கூறிய நடுத்தெருநாராயணன் மனைவியின் பக்கம் திரும்பி "கொஞ்சநேரம் தனியாக வியாபாரத்தைக் கவனித்துக் கொள். கொஞ்சநேரம் நான் இளங்கோவுடன் நமது வியாபாரம் பற்றிய முக்கியமான விடயம் பேச வேண்டும்." என்றான்.

இளங்கோவுக்குச் சிறிது ஆச்சரியமாகப் போய்விட்டது. வந்ததும் வராததுமாகக் ஹரிபாபு இவ்விதம் கூறியது அவன் எதிர்பார்க்காததொன்று. ஹரிபாபுவின் உளவியல் பற்றிச் சற்று நேரத்துக்கு முன்னர் அவன் மனைவி கூறியவை நினைவுக்கு வரவே இலேசாகப் புன்னைகையொன்றும் மலர்ந்தது. அதனை அவதானித்த ஹரிபாபு "என்ன சிரிக்கிறாய். நான் வேடிக்கையாகக் கூறுகிறேனென்று நினைத்து விட்டாயா? இல்லை. மிகவும் முக்கியமானதொரு விடயம் பற்றிக் கதைக்கத்தான் அழைக்கிறேன். கடந்த சில நாட்களாகவே இது பற்றி உன்னுடன் கதைக்கவேண்டுமென்று நினைத்துக் கொண்டிருந்தேன். இன்றுதான் முடிவெடுத்தேன். வா.அங்குள்ள உணவகத்துக்குச் சென்று சிறிது நேரம் தேநீர் அருந்தி, கதைத்து வருவோம்" என்று கூறவும் இளங்கோ அவன் கூறப்போகும் அந்த முக்கியமான விடயம் என்னவாகவிருக்குமெனத் தனக்குள் எண்ணியவனாகக் ஹரிபாபுவைப் பின் தொடர்ந்தான்.

இருவருக்கும் ஹரிபாபுவே தேநீர் வாங்கி வந்தான். இளங்கோவுக்கு அருகில் அமர்ந்தவனாக அவனே முதலில் உரையாடலை ஆரம்பித்தான்: "இளங்கோ. உனக்கும் அருள்ராசாவுக்கும் நான் மிகவும் நன்றி கூறவேண்டும். இதுவரையில் நீங்கள் செய்த உதவியை ஒருபோதுமே மறக்க மாட்டேன்"

இளங்கோ ஹரிபாபுவையே மெளனமாகச் செவிமடுத்துக் கொண்டிருந்தான். ஹரிபாபு தொடர்ந்தான்: "என்னுடைய வியாபாரம் மீண்டும் மந்தமடைய ஆரம்பித்து விட்டது. இனி விற்பதுக்கும் அதிகமாகப் பொருட்கள் எதுவுமில்லை. உங்கள் புண்ணியத்தில் தேங்கிக் கிடந்த பித்தளைச் சிலைகள், ஆபரணங்கள் போன்றவற்றிலும் கணிசமான அளவுக்கு விற்று விட்டோம். இந்த நிலையில் என்னிடமுள்ளவற்றை விற்பதற்கு என்னையும் என் மனைவியையும் தவிர மேலதிகமாக ஆட்கள் தேவையில்லையென நினைக்கிறேன். மேலும் என் மனைவியும் இன்னுமொரு வாரங்களில் தொழிற்சாலையொன்றில் வேலை செய்யப் போகிறா. அதன் பிறகு நான் மட்டுமே இதனைக் கவனிக்கப் போகிறேன். ஹென்றியும் அதுமுதல் தன் வியாபாரத்தை மீண்டும் தொடங்க இருக்கிறான்."

இளங்கோவுக்கு விடயம் விளங்கி விட்டது. இங்கும் அவனது வேலை வழக்கம்போல் தொடரப் போவதில்லை. அடுத்த வேலைக்கு மீண்டும் முழு மூச்சுடன், வீச்சுடன் முயன்று பார்க்க வேண்டியதுதான். உறுதியான கைகளும், கால்களும், உள்ளமும், மேலே விரிந்திருக்கும் ஆகாயமும், கீழே பரந்திருக்கும் பூமியுமிருக்கையில் அச்சப்படுவதற்கென்னவிருக்கிறத. இருப்புக்கான இந்தப் போராட்டத்தில் முடிந்தவரை போராடிப் பார்க்க வேண்டியதுதான்.

ஹரிபாபு இறுதியில் இவ்விதம் கூறினான்: "நாளைக்கு நீ மட்டும் வேலைக்கு வந்தால் போதுமானது. உன் நண்பன் வரத் தேவையில்லை. நாளையிலிருந்து நீயும் வரவேண்டிய தேவையில்லை. ஆனால் அதற்காகத் தொடர்புகளை விட்டுவிடாதே. மீண்டும் எனக்கு உங்களது உதவி தேவைப்பட்டால் அழைப்பேன். அச்சமயம் உங்களுக்கும் தற்போதுள்ளதைப்போல் நேரமிருந்தால் வந்து உதவலாம்"

இதற்கு இளங்கோவின் பதிலிவ்விதமாகவிருந்தது: "நிச்சயமாக உங்களுக்கு உதவத் தயாராகவேயிருக்கிறோம். எங்கள் வாழ்வின் சோதனையானதொரு காலகட்டத்தில் நீங்கள் செய்த உதவியை நிச்சயம் நாங்கள் மறக்கவே மாட்டோம். குறுகியகாலமே உங்களுடன் வேலை செய்யச் சந்தர்ப்பம் கிடைத்ததென்றாலும் எங்கள் நேரமறிந்து நீங்கள் செயத இந்த உதவி இந்த உலகைவிட மிகப்பெரியது. எங்கள் இலக்கியத்தில் இதுபற்றிய அழகானதொரு கவிதையேயுண்டு. 'காலத்தினாற்செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது' என்று இரு அடிகளில் ஒரு கவிஞன் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கூறிச் சென்றிருக்கிறான்"

இவ்விதம் இளங்கோ மிகவும் விரிவாக நன்றி கூறிப் பதிலளித்தவிதம் ஹரிபாபுவைச் சிறிது நெகிழவைத்தது. அத்துடன் அவன் "உங்களது நிலை என்னைக் கவலைக்குள்ளாக்குகிறது. உங்கள் நாட்டு நிலை விரைவில் சீரடைந்து நீங்கள் உங்கள் குடும்பத்தவர்களுடன் சேர நான் எப்பொழுதுமே பிரார்த்திப்பேன். நீ மிகவும் பெருந்தன்மையாக எனக்கு நன்றி கூறினாலும் உண்மையில் உங்களது கவிஞன் கூறியது எங்களுக்கு நீங்கள் செய்த உதவிக்குத் தான்மிகவும் பொருந்தும். காலமறிந்து நீங்களளிருவரும் செய்த இந்த உதவியினை நாங்களும் நிச்சயம் மறக்க மாட்டோம். மற்றது..." என்று கூறிச் சிறிது நிறுத்தினான்.

"மேலே கூறுங்கள் ஹரிபாபு" என்றுவிட்டு அவன் பதிலுக்காகக் காத்திருந்தான் இளங்கோ. ஹரிபாபு தொடர்ந்தான்: "நீங்கள் விரும்பினால எனது கடையில் இலவசமாக , உங்களுக்கு ஒரு வேலை கிடைக்கும் மட்டும், தங்கலாம். எனக்கு எந்தவித ஆட்சேபணையுமில்லை. அங்கு விற்பதற்குரிய பொருட்கள் மட்டும்தான் இருக்கின்றன. ஆனால்..."

"ஆனால்..."

"ஆனால்... குளிப்பதற்குரிய வசதிகளில்லை. கழிவறை மட்டும்தானுள்ளது. முகம் கழுவலாம். குளிப்பதற்கு வேண்டுமானால் என்னிருப்பிடத்தில் வந்து குளிக்கலாம். என்ன சொல்லுகிறாய்?"

இளங்கோவுக்கு ஹரிபாபுவின் யோசனை பிடித்திருந்தது. "தற்போது எங்களுக்கு இருப்பிடப் பிரச்சினையேதுமில்லை. ஆனால் எல்லாம் எங்களுக்கு வேலை கிடைப்பதைப் பொறுத்திருக்கிறது. எதற்கும் அருள்ராசாவுடனும் இதுபற்றிக் கதைத்துவிட்டு என் பதிலைக் கூறுகிறேன். நீங்கள் இவ்விதம் கேட்டது உங்களது நல்ல உள்ளத்தைத்தான் காட்டுகிறது. நன்றி ஹரிபாபு. குளிப்பது பிரச்சினையென்றாலும் அவ்வப்போது உங்களிருப்பிடத்தில் வந்து குளிப்பதுவும் அவ்வளவு சிரமானதல்ல எங்களது தற்போதைய வாழ்க்கையுடன் ஒப்பிடும்போது."

அன்று மாலை ஹரிபாபுவுக்கும், அவனது மனைவி இந்திராவுக்கும் நன்றி கூறிவிட்டுத் தன்னிருப்பிடம் நோக்கித் திரும்புவதற்காக இளங்கோ திரும்பிக் கொண்டிருந்தபொழுது அவனது கவனத்தைக் கிறிஸ்தோபர் வீதியிலிருந்த தோலாடைகளை விற்பனை செய்யுமொரு இத்தாலியனின் ஜவுளிக்கடை கவர்ந்தது. கடையின் கண்ணாடி ஜன்னலில் ஒட்டப்பட்டிருந்த விளம்பரம்தான் உண்மையில் அவனது கவனத்தைக் கவர்ந்ததென்று கூறவேண்டும். அதில் 'எங்களது விளம்பரங்களை மாலை நேரத்தில் இச்சுற்றாடலில் குறைந்தது மூன்று மணித்தியாலங்களாவது விநியோகம் செய்வதற்குப் பணியாட்கள் தேவை. ஆர்வமுள்ளவர்கள் உள்ளே வந்து விண்ணப்பிக்கவும்' என்று எழுதப்பட்டிருந்தது. இளங்கோவுக்கு அவ்விளம்பரம் எத்தகைய மகிழ்ச்சியினைத் தந்ததென்று கூறத் தேவையில்லை. உடனடியாகவே உள்ளே நுழைந்தான். அவன் ஜன்னலிருந்த விளம்பரத்தைப் பார்த்துக் கொண்டிருந்ததை ஏற்கனவே அவதானித்துக் கொண்டிருந்த அக்கடையின் சொந்தக்காரனான இத்தாலியன் "நண்பனே! நான் உதவி உனக்குச் செய்யலாமா?" என்று கூறியவாறே அருகில் வந்தான்.

அதற்கு இளங்கோ "நிச்சயமாக" என்றவன் தொடர்ந்து "நீங்கள்தான் இக்கடையின் சொந்தக்காரரா" என்றான். அதற்கு அந்த இத்தாலியன் "சரியாகச் சொன்னாய் நண்பனே! நானேதான் இக்கடையின் உரிமையாளன். கார்லோ இந்தக் கடையின் சொந்தக்காரன்தான். என்ன விழி பிதுங்குகிறாய். கார்லோ என்பது எனபெயர்தான். அதுசரி உன் பெயரென்ன?" என்றான்.

இளங்கோவுக்கு கார்லோவென்னும் அந்த இத்தாலியனின் உரையாடற்போக்கு சிறிது ஆச்சரியத்தைத் தந்தது. ஏனோ தெரியவில்லை அச்சமயத்தில் அவன் ஹரிபாபுவை ஒருகணம் நினைத்துக் கொண்டான்.

"என் பெயர் இளங்கோ.. நானும் இச்சமயத்தில் வேலை பகுதி நேரமோ அல்லது முழு நேரமோ தேடிக் கொண்டிருக்கிறேன். உண்மையில் நாங்கள் தேடிக்கொண்டிருக்கிறோம்..."

இத்தாலிய உரிமையாளன் கார்லா: "நாங்களா.... மற்றது யார்?"

இளங்கோ: "அவன் என் நண்பன். இருவரும்தான் வேலை தேடிக் கொண்டிருக்கிறோம். நீங்கள் விளம்பரங்களை விநியோகம் செய்யப் பணியாட்களைத் தேடிக் கொண்டிருப்பதாக விளம்பரத்தில் அறிவித்திருக்கிறீர்கள். அந்த வேலை பற்றித்தான் மேலதிகமாக அறிய விரும்புகிறேன்."

கார்லா: "நீ முன்பு இதுபோல் ஏதாவது விளம்பர விநியோகம் செய்திருக்கிறாயா?"

இளங்கோ: "இல்லை. ஆனால் என்னால் முடிந்தவரையில் கடுமையாக வேலை செய்வேன்"

அவனது பதிலும் அதில் கலந்திருந்த உண்மையான உணர்வும், ஆர்வமும், உற்சாகமும் அந்த இத்தாலிய உரிமையாளனைக் கவர்ந்தது. அதன் விளைவாக அவனது அடுத்து வந்த சொற்களிருந்தன: "உண்மையில் உன்னைப் போன்ற ஆர்வமும், உற்சாகமும் மிக்க உண்மையான பணியாட்களே எமக்குத் தேவை. குறைந்தது மூன்று வாரங்களாவது எமக்கு உனது உதவி இந்த விடயத்தில் தேவைப்படும். நீயும் , உனது நண்பன் விரும்பினால் அவனும் எமக்கு இந்த விடயத்தில் உதவலாம். நாங்கள் குறிப்பிடும் இரு சந்திகளில் நீ ஒரு சந்தியிலும், உனது நண்பன் அடுத்த சந்தியிலும் எங்கள் விளம்பரங்களை விநியோகிக்க வேண்டும். அவ்வளவுதான். ஆறு நாட்களும் திங்கள் முதல் சனி வரை , குறைந்தது மூன்று மணித்தியாலங்கள் இவ்விதம் விநியோகிக்க வேண்டும். மணித்தியாலத்திற்கு நான்கு டாலர்கள் தருவோம். பகுதி நேரமாக எழுபத்தி இரண்டு டாலர்கள் வாரத்திற்கு உழைக்கலாம். விரும்பினால் நாளைக்கே நீயும் உனது நண்பனும் வேலையை ஆரம்பிக்கலாம். இப்பொழுதே நீ உன் பதிலைக் கூறத்தேவையில்லை. வீடு சென்று உனது நண்பனுடனும் இதுபற்றி ஆறுதலாகக் கதை. இருவரும் விரும்பினால் நாளை மாலை உன் நண்பனையும் அழைத்துக் கொண்டு வந்து வேலையை ஆரம்பி"

ஒரு கதவு மூடினால் மறு கதவு திறக்குமென்று கூறுவது இதனைத்தானென்று பட்டது இளங்கோவுக்கு. மனதில் இலேசானதொரு உணர்வு படர்ந்தது. ஒரு வாரத்துக்கு 72 டாலர்கள். வீட்டு வாடகைக்கும் மட்டுப்படுத்தப்பட்ட உணவுக்கும் போதுமானது. இத்தாலியத் துணிக்கடைக்காரன் கார்லோவின் புண்ணியத்தில் ஒருவாறு இன்னும் சிறிது காலம் வண்டியோட்டலாமென்று பட்டது.

[தொடரும்]