அண்மையில் பிரமிளின் 'வானமற்ற வெளி' (கவிதை பற்றிய கட்டுரைகள்) என்னும் தொகுதியினைப் படிக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. தமிழில் புதுக்கவிதையென்றால் படிமங்களுக்குப் பெயர் போன பிரமிளின் கவிதைகளைக் குறிப்பிட யாரும் மறுப்பதில்லை. குறிப்பாக 'பூமித்தோலில் அழகுத் தேமல், பரிதிபுணர்ந்து படரும் விந்து' என்னும் கவிதையினைக் குறிப்பிடாத விமர்சகர்களே இல்லையெனலாம். இத் தொகுதியிலுள்ள கட்டுரைகள் பிரமிளின் எழுத்துச் சிறப்பினைப் புலப்படுத்துவன. அவரது ஆழ்ந்த சிந்தனையினையும், வாசிப்பினையும் கூடவே புலமைத்துவத்துடன் கூடியதொரு கர்வத்தினையும் வெளிப்படுத்துவன. அந்தக் கர்வம் அளவுமீறி சில சமயங்களில் அணையுடைத்துப் போவதுமுண்டு என்பதற்கும் சான்றாக சில கட்டுரைகளில் வரும் கூற்றுக்கள் விளங்குகின்றன. அவ்விதம் கர்வம் அளவு மீறி விடும்போது, 'தனக்கு எல்லாமே தெரியுமென்ற அதிமேதாவித்தனத்தினைக் காட்ட முற்படும்பொழுது' அதுவே அவர்மேல் எதிர்மறைவான விளவுகளை ஏற்படுத்தி விடுவதற்கு இத்தகைய கூற்றுகள் காரணமாகிவிடுகின்றன.
இந்தக் கட்டுரை பிரமிளின் மேற்படி 'வானமற்ற வெளி' நூல் பற்றிய மதிப்புரையோ அல்லது விரிவான் விமரிசனமோ அல்ல. இது பிரமிளின் கவிதைகள் பற்றிய விரிவான விமரிசனமுமல்ல. மேற்படி நூலிலுள்ள சில கருத்துகள் ஏற்படுத்திய என் மன உணர்வுகளின் வெளிப்பாடாகவே இதனைக் குறிப்பிடலாம்.
முதலில் பிரமிளின் 'காலவெளி' பற்றிய கருத்தினைக் கவனிப்போம். 'கண்ணாடிக்குள்ளிருந்து ஒரு பதில்..' என்னும் அவரது கட்டுரையில் பிரமிள் காலவெளி பற்றிய கருத்தினை விமர்சித்து கோ.ராஜாராம் தாமரை இதழில் எழுதிய கட்டுரைக்குப் பதிலடியாக வெளிவந்துள்ள 'காலவெளி' பற்றிய கருத்துகளையே இங்கு பார்க்கப் போகின்றோம். மேற்படி காலவெளி பற்றி 'கட்டுரைகள் பற்றிய குறிப்புகள்..' பகுதியில் "'காலவெளி' என்று பிரமிள் படைத்த சொல், இன்று பலராலும் பல்வேறு விதங்களில் பயன்படுத்தப்பட்டு, நிரந்தரம் கொண்டு விட்டது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது உண்மையில் பிழையானதொரு கூற்று. காலவெளி என்றொரு சொல் பிரமிளால் கண்டுபிடிக்கப்பட்டதல்ல. ஐன்ஸ்டனின் சார்பியற் தத்துவக் கோட்பாடுகள் இப்பிரபஞ்சத்தைக் 'காலவெளி'யின் தொடர்ச்சியான வெளிப்பாடாகப் புலப்படுத்தி நிற்கின்றன. இதற்காக அறிமுககப்படுத்தப்பட்ட 'Space-Time' என்பதன் தமிழாக்கமே மேற்படி 'காலவெளி' என்பதேயல்லாமல் இது பிரமிள் கண்டு பிடித்த புதுச் சொல் என்று கூறுவது தவறானதொரு மிகைப்படுத்தலாகும்.
'கண்ணாடியுள்ளிருந்து' என்ற பிரமிளின் கவிதைத் தொகுதியில் 'காலவெளி' பற்றித் தெரிவிக்கப்பட்ட பிரமிளின் கருத்துக்குப் பதிலடியாக கோ.ராஜாராம் தனது 'தாமரை (ஜூலை 1973)' விமரிசனத்தில் 'வெளியின் மூன்று பரிமாணங்களல்லாமல் நான்காவதாகக் காலம் என்ற ஒன்றைச் சேர்ப்பது சார்புக் கொள்கை. காலமே வெளியென்று எந்த விஞ்ஞானம் சொல்கிறது என்று எனக்குத் தெரியவில்லை' என்று தெரிவித்திருந்த கூற்று பிரமிளை மிகவும் அதிகமாகவே பாதித்துள்ளதென்பதற்கு அவரது மேற்படி பதிற் கட்டுரையே சான்று. மேற்படி ராஜாராமின் விமரிசனம் தன் ஞானத்தினையே கொச்சைப்படுத்தி விட்டதாகக் கருதிக் கொண்டு மிகவும் ஆக்ரோசமாகவே தனது தாக்குதலைத் தொடுக்கும்போது ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு என்ற நிலைக்குப் பிரமிள் தாழ்ந்து விடுவது துரதிருஷ்ட்டமானது. அதன் விளைவாக அவர் 'காலவெளி' பற்றிய கருத்துக்கு வலு சேர்ப்பதாக எண்ணிக் கொண்டு பின்வருமாறு சான்றுகளை முன் வைக்கின்றார்:இவரது கவனத்துக்கு Expanding Universe என்ற நூலின் ஆசிரியரும், ஐன்ஸ்டனின் சார்பு நிலைக் கொள்கையைக் கேந்திர கணிதத்தின் மூலம் விளக்கியவருமான Sir Arthur Eddington னின் பின்வரும் வரியைக் கவனத்திற்குக் கொண்டுவருகிறேன். 'space and time sink into single shadow'. 'காலமும் வெளியும் ஒற்றை நிழகாக இழைகின்றன'. 'நேற்று நேற்று என்று, இறந்த யுஅகங்களில், என்றோ ஒரு நாளில் அவிந்த , ஒளிவேகத்தின் மந்தகதி தரும் நிதர்சனத்தில், இன்றும் இருக்கின்றன' என்று E=MC2 என்ற கவிதை குறிப்பிடும்போது, அடுத்தவரியான 'காலமே வெளி' என்ற முடிபுக்கு ஆதாரமாகவே மேற்படி வரிகள் பிறக்கின்றன...."இங்கு பிரமிள் சேர்.ஆர்தர் எடிங்டனின் வரிகளையே பிழையாக அர்த்தப்படுத்திக் கொள்கின்றார். மேற்படி கூற்றில் சேர்.ஆர்தர் எடிங்கடன் 'காலமும் வெளியும் ஒற்றை நிழகாக இழைகின்றன' என்று இரண்டையும் ஒற்றை நிழலாகப் பிரிக்க முடியாமல் நிலவுகின்றன என்ற கருத்துப்ப்டக் கூறியிருக்கிறாரே தவிர ஒருபோதுமே இரண்டுமே ஒன்று என்று கூறவில்லை. உண்மையில் நவீன பெளதிகத்தில் 'காலவெளி'யாலான இப்பிரபஞ்சமானது முப்பரிமாணங்களையுள்ளடக்கிய வெளியையும், ஒற்றைப் பரிமாணமுள்ள காலத்தினையும் ஓரமைப்பாக உள்ளடக்கி 'காலவெளிச் சம்பவ்ங்களின் இடையாறாத தொடர்ச்சியாக'க் (Spacetime continnum) கருதப்படுகிறது. முப்பரிமாண உலக வெளியானது நீள, அகல, உயரம் ஆகிய முப்பரிமாணங்களால் ஆனது. நீளம், அகலம், உயரம் ஆகியவை வேறு வேறான அளவுகளைக் கொண்டிருந்தபோதும் முப்பரிமாண வெளியைப் பொறுத்தவரையில் பிரிக்க முடியாதவை. அதுபோல்தான் அதுவரை காலமும் சுயாதீனமானவையாகக் கருதப்பட்டு வந்த முப்பரிமாண வெளியும், காலமும் சார்பியற் கோட்பாடுகளின் விளைவாக ஒன்றையொன்று பிரிக்க முடியாதபடி சார்ந்திருப்பவை என்ற உண்மை உணரப்பட்டது. காலமும், வெளியு ம் வெவ்வேறானவையாக இருந்தபோதிலும், நாம் வாழும் இந்தப் பிரபஞ்சமானது 'காலவெளிச் சம்பவ்ங்களின் இடையாறாத தொடர்ச்சியாகப் புரிந்து கொள்ளப்பட்டது சார்பியற் கோட்பாடுகளின் விளைவாகத்தான்.
ஐன்ஸ்டனின் சார்பியல் தத்துவங்களின்படி வெளியும் பொருளைப் போல்தான் கருதப்படுகிறது. சூரியனின் பொருண்மைகாரணமாக அதனருகிலுள்ள வெளி வளைந்துவிடும் தன்மையினால் அதனருகில் செல்லும்போது ஒளி கூட வளைந்து விடுகிறதென்பதை பிரமிள் குறிப்பிடும் சேர்.ஆர்தர் எடிங்டனே சூரிய கிரகணமொன்றை அவதானித்தபொழுது பரிசோதனை வாயிலாக நிறுவி ஐன்ஸ்டனின் சார்பியற கோட்பாடுகளுக்கு மேலும் வலுவினையளித்தவரென்பதைப் பிரமிள் அறியாமல் போனது விந்தையே. பிரமிளே மேற்படி கூற்றின இறுதிப் பகுதியில் கூறிவதுபோல் "..காலமேவெளி என்ற கூற்று கவிக் கூற்றாகவே இங்கு நிகழ்ந்துள்ளது. ஆதாரம் கவிதைக்குள்ளேயே உள்ளதால் இதற்கு இரண்டாம் பட்சமான ஆதாரம்தான் விஞ்ஞான ஆதாரம்." என்று கூறுவதுடன் நின்றிருக்கவேண்டுமேயல்லாமல் விஞ்ஞானரீதியாக அதனை விளக்க முற்பட்டிருக்கக் கூடாது. அவ்விதம் அவர் விளக்காமல் விட்டிருந்தால் 'காலவெளி'பற்றிய கவிஞனொருவனின் சுதந்திரமான இன்னுமொரு விளக்கமாகவும், கற்பனையாகவும் அதனைக் கொண்டிருக்க முடியும். ஆனால் அவர் அவ்விதம் செய்யாமல் காலவெளி பற்றிய தனது பிழையான புரிதலை நியாயப்படுத்த விளைவதன் மூலம் அக்கவிதைவரிகளின் மேற்படி சிறப்பினை இல்லாமலாக்கி விடுகின்றார்.
இத்துடன் பிரமிள் விடவில்லை. மேற்படி பதிற் கட்டுரையில் மேலும் கோ.ராஜாராமைத் தனிப்பட்டரீதியில் வம்ப்புக்கிழுக்கவும் செய்கிறார். '..கோ.ராஜாராம் ஒரு M.Sc. என்று நான் கேள்விப்படுவதால், ஆரம்பக்கல்வி சர்டிபிகேட் கூட இல்லாத எனது ஞான சூன்யம் பெருமைப் படும்படி, அவருக்கு மேலும் ஒரு சாமான்ய ஸயன்ஸ் நியூஸைத் தர ஆசைப்படுகிறேன்..' என்று கூறும்போது அவரது கர்வம் எல்லை மீறுவதாகவே கருதவேண்டும். சிறுபிள்ளைத்தனமாகவும் இருக்கிறது. இங்கு அவரது ஞான சூன்யம் பெருமைப்படுவதற்கு மாறாகச் சிறுமைப்படவே செய்கிறது.
அடுத்ததாக அவர் கோ.ராஜாராமுடன் மோதுவது 'ஜடம்' பற்றிய வார்த்தைப் பிரயோகத்தைப்பற்றி. மேற்படி கவிதையில் 'சக்தி = ஜடம் .ஓளிவேகம்2 என்ற பிரமிளின் சொற்பிரயோகம் பற்றி ராஜாராம் "M என்பது Mass ஆகும். Mass என்பது ஜடமா?' என்று தனது எதிர்வாதத்தில் கேட்டதுதான் பிரமிளின் ஆத்திரத்தை அதிகரித்திருக்க வேண்டும். அதற்குப் பதிலாகத் தேவையில்லாமல் மீண்டும் ராஜாராமிம் கல்வியறிவினைச் சீண்டியபடி பிரமிள் பினவ்ருமாறு பதிலளித்திருக்கின்றார்: "... அப்படியானால் ஜடம் என்ற பிரயோகம் எதைக் குறிப்பிடுகிறதோ, அதில் பொருண்மை இல்லையா? என்று என் கல்வியறிவின்மை இந்த M.Scயைக் கேட்டுக் கொள்கிறது. அத்தோடு கவிஞன் என்ற வகையில் ஜடம் என்ற வார்த்தையே பொருண்மை என்ற வார்த்தையை விட உடனடித்தொற்றுதலை வாசகனுக்கு ஏற்படுத்துகிறது என்பதையும் சொல்லிக்கொள்கிறேன்" என்கிறார்.பொருண்மை அல்லது திணிவு ஆகிய வார்த்தைப் பிரயோகங்கள் கூறும் கருத்துக்கும், ஜடம் என்பதற்கும் மிகப்பெரிய வித்தியாசமுண்டு. ஜடமென்றால் உயிரற்ற பொருளென்பதைக் குறிப்பது. உயிரற்ற பொருளான கல் போன்ற ஒன்றிற்கும் பொருண்மை அல்லது திணிவு உண்டு. அதற்காக திணிவு அல்லது பொருண்மையை, பொருண்மை என்ற வார்த்தையை விட உடனடித்தொற்றுதலை வாசகனுக்கு ஜடம் ஏற்படுத்துகிறது என்பதற்காக, ஜடமென்று வாதிட முனைவது சிறுபிள்ளைத்தனமானது. கணிதவியலில் பொருண்மை அல்லது திணிவு என்பது ஒருபொருளிலுள்ள பொருளின் அளவைக் குறிப்பது. பொருளும் , அதன் மீதான புவியீர்ப்பு விசையின் தாக்கமும் சேர்ந்ததே நிறையாகக் கருதப்படுவது (W = Mg; இங்கு W என்பது நிறை; M என்பது பொருண்மை அல்லது திணிவு' g என்பது புவீயீர்பபிலான ஆர்முடுகல்). இதற்கு ஆரம்பக் கல்வியறிவே (ஒன்பதாம் வகுப்பிலேயே பிரயோக கணிதம், பெளதிகம் போன்ற பாடங்களில் இதுபற்றிய புரிதல்களேற்பட்டு விடுகின்றன) போதுமானது. இதற்கும் தன் பக்க நியாயத்தை விளக்கப்படுத்துவதற்காக கோ.ராஜாராமின் கல்வியறிவினை இவ்விதம் இழுத்துச் சிறுமைப்பட்டிருக்கத் தேவையில்லை.
இவ்விதமாகப் பிரமிள் தனது 'காலவெளி' மற்றும் 'ஜடம்' போன்ற சொற்பிரயோகங்களுக்கு விளக்கமளிக்காமல் விட்டிருக்கும் ப்ட்சத்தில் அவரது மேற்படி கவிதையினை வாசிக்குமொரு வாசகர் கவிஞன் பிரமிளின் காலவெளி பற்றிய விஞ்ஞானத்திற்கு மாறான அர்த்தத்தினை அவனது கவிதைக்குரிய சிறப்பானதொரு அர்த்தமாகவும் கொண்டிருக்கலாம். பிரமிள் கவிஞனென்ற வகையில் கண்டுகொண்ட அர்த்தங்களாக, கற்பனைகளாக அவற்றைக் கருதிக் கொண்டிருக்கலாம்.அந்தச் சந்தர்ப்பத்தினைப் பிரமிளின் மேற்படி பதிற் கட்டுரையும், விளக்கமும் சீர்குலைத்து விடுகின்றன. அந்த வாய்ப்பையே பிரமிள் கெடுத்துக் கொண்டார் மேற்படி தனது 'அறியாமை'யினால். விஞ்ஞானத்துறையில் படித்த ஒருவரை விடத் தனது புரிதல் மேலென்பதுபோன்றதொரு தொனியில் பிரமிள் விளக்கமளிக்க முற்பட்டதன் மூலம் பிரமிளின் மேற்படி கவிதை தனது கவிதைச் சிறப்பினையே இழந்து சாதாரணமாகி விடுகிறது. அக்கவிதையினை வாசகனொருவன் தன் விருப்பத்துக்குரிய வகையில் புரிந்து கொள்ளலைத் தடுத்துவிடக் காரணமாகிவிடுகிறது பிரமிளின் மேற்படி விடயங்கள் பற்றிய புரிதலும், விளக்கமும்.
நன்றி: பதிவுகள்.காம், திண்ணை.காம்
ngiri2704@rogers.com
No comments:
Post a Comment