ATN (Asian Television Network) ஆதரவில் கடந்த ஞாயிறன்று ( ஒக்டோபர் 14,2001) நோர்த் யோர்க்கிலமைந்துள்ள டொராண்டோ கலைகளுக்கான மையம் (Toronto Center for the Arts) கலாநிதி பத்மா சுப்ரமண்யத்தின் 'பகவத் கீதை ' என்னும் நிருத்திய நாடகம் நடைபெற்றது. பகவத் கீதையென்னும் ஒரு பொருளை மையமாக வைத்துப் பத்மா சுப்ரமண்யத்தால் நிகழ்த்தப் பட்ட 'ஏகார்த்த நிருத்திய ' நாட்டியமிது. இத்தகையதொரு கலை நிகழ்வினை நிகழ்த்துவதற்குக் காரணமான ATN அதிபர் சாண் சந்திரசேகரைப் பாராட்டத் தான் வேண்டும். மழையினையும் பொருட்படுத்தாமல் வந்திருந்த ஆர்வலர்களால் அரங்கு அநேகமாக நிறைந்திருந்தது. அறிமுக உரையாற்றிய சாண் சந்திரசேகர் எதிர்காலத்தில் பத்மா சுப்ரமண்யம் மேலும் இது போன்ற பல நாட்டிய நிகழ்வுகளுக்காக வரவிருப்பதாக அறிவித்தார். சாண் சந்திரசேகரின் அறிமுக உரையினைத் தொடர்ந்து ஸ்கார்பரோ பாராளுமன்றத் தொகுதி உறுப்பினர் ஜிம் காரியஸ், டொராண்டோ வாழ்த் தமிழர்களுக்கு நன்கு அறிமுகமானவர், கனடாப் பிரதமர் ஜீன் கிறைச்சானின் வாழ்த்துச் செய்தியினை வாசித்ததுடன், டொராண்டோவில் ஐம்பத்தேழு சதவீதமான பல்லினக் குடியேற்ற வாசிகள் வாழ்வதை நினைவுபடுத்தி, இத்தகைய விழாக்களின் அவசியம் பற்றி எடுத்துரைத்தார். அதனைத் தொடர்ந்து ஜெயா சந்திரசேகர் , இவர் சாண் சந்திரசேகரின் மனைவி, கலாநிதி பத்மா சுப்ரமண்யம் பற்றிய விரிவான அறிமுகத்தினைச் செய்து வைத்தார். இந்நிருத்திய நாட்டிய நிகழ்வில் பங்குபற்றுவதற்காகத் தமிழகத்திலிருந்து பின்னணி வாத்தியக் கலைஞர்களும் கூடவே வந்திருந்தனர்.
பத்மா சுப்ரமண்யத்தின் நெடுநாளைய ஆசையொன்று இப்பகவத் கீதை நிருத்திய நாட்டிய நிகழ்வின் மூலம் நிறைவேறியிருக்கிறது. ஆத்சங்கரரின் 'அத்வைத ' தத்துவத்தினையும் 'பகவத் கீதையினை 'யும் நடன் வடிவில் படைத்தளித்திட வேண்டுமென்பது இவரது நெடுநாளைய ஆசைகள். ஏற்கனவே ஆதிசங்கரரின் 'அத்வைத ' தத்துவத்தினை 'ஜெயஜெய சங்கரா ' என்னும் நடன நிகழ்வு மூலம் வழங்கியிருந்த பத்மா சுப்ரமண்யம், பகவத் கீதையின் இரண்டாவது அங்கத்திலுள்ள , நாமக்கல் கவிஞரால் தமிழ்ப் படுத்தப் பட்ட சில சுலோகங்களையும் நடன வடிவில் அளித்திருக்கின்றார். இருந்த போதிலும் 'பகவத் கீதை ' என்னுமிந்த நிகழ்வே அவரது மற்றொரு இலட்சியமான 'பகவத் கீதையினை ' முழு நிருத்திய நாட்டியமாக அளித்திட வேண்டுமென்ற வேட்கையினைத் தீர்த்து வைத்திருக்கின்றது. கலை ஆர்வலர்களின் ஆவலினையும் பூர்த்தி செய்து வைத்துள்ளது. ஒரு கல்லில் இரண்டு மாங்காய்கள்.
பதினெட்டு அங்கங்களையும் எழுநூறு சுலோகங்களையும் கொண்ட 'பகவத் கீதையின் மூல வடிவினை , அதன் மூலம் சிதையாத வகையில் எழுபது சுலோகங்களில் நான்கு அங்கங்களில் அற்புதமானதொரு நிருத்திய நாட்டியமாக வடித்துள்ளார் பத்மா சுப்ரமண்யம். சுலோகங்கள் மூலமொழியான சம்ஸ்கிருதத்திலேயே இசைக்கப் பட்டன. ஒவ்வொரு அங்கத்தின் ஆரம்பத்திலும் அவ்வங்கம் பற்றிய விளக்கம் ஆங்கிலத்தில் பின்னணிக் கலைஞர் கண்ணனால் தரப்பட்டது. எதிர்காலத்தில் இதே நிகழ்வினை முற்று முழுதாகத் தமிழிலும் பத்மா சுப்ரமண்யம் அவர்கள் வழங்குவாரென எதிர்பார்ப்போம்.
முதலாவது அங்கம் போர்க்களத்தே தனது உறவினர்களையும், குரு மற்றும் நண்பர்களையும் எதிர்த்து நிற்கும் அவர்களை எதிர்த்துப் போர் புரிய மனமில்லாதவனாகத் தளர்வுற்று பகவான் கிருஷ்ணிடம் அருச்சுனன் சரணடைதல் பற்றியும் , பகவான் கிருஷ்ணனின் ஞான யோகம் பற்றியும் விளக்கும்.
கர்மயோகத்தினை விளக்குவதாக இரண்டாவது அங்கம் அமைந்துள்ளது. 'கேசவா! செயலை விட ஞானமே மேலானதென்றால் எதற்காக என்னை இத்தகைய பயங்கரமான போர்செயலைச் செய்யும் படி தூண்டுகின்றாய் ' என வினவும் அருச்சுனனிற்குப் பதிலிறுப்பதை விளக்கி நிற்கும் அங்கமிது. 'பகவத் கீதையின் ' புகழ் பெற்ற வாக்கியங்களான 'கடமையைச் செய். பலனை எதிர்பாராதே ' எனக் கண்ணன் போதிப்பது இங்குதான். 'உன்னுடைய கடமையினைச் செய்வது மட்டுமே உன்னுடைய உரிமை. அச்செயலிற்கான பலனை எதிர்பார்ப்பதல்ல. செயலிற்கான பலனோ அல்லது செயலற்ற தன்மையோ உன்னுடைய இலட்சியமாக இருக்கக் கூடாதெனக் கண்ணன் போதிப்பதை விளக்கும் அங்கமாக 'கர்மயோகம் ' அமைந்துள்ளது.
மூன்றாவது அங்கமாக 'பிரகிருதியும் பக்தி யோகமும் ' அமைக்கப் பட்டுள்ளது. 'மண், காற்று, நீர், தீ, வான், மனம், மதி, அகங்காரம் ஆகிய எட்டு வகையாகப் பிரிந்திருக்கிறது இயற்கை (பிரகிருதி). இது எனது கீழியற்கை. என் மேலியற்கையே உயிர். எல்லா உயிர்களுக்கும் இவ்விருவகையான இயற்கைகளே காரணமென அறி. அதனால் உலகம் முழுவதும் ஆக்கத்துக்கும் அழிவுக்கும் நானே காரணமென்றுணர் ' எனவும், 'சத்வ, ரஜஸ், தமோ ஆகிய குணங்களைச் சார்ந்த மன நிலைகளெல்லாம் என்னிடமிருந்தே பிறந்தன.இவற்றால் உலகம் முழுவது மயங்கி அழிவற்ற என்னை உணராதிருக்கின்றன ' எனக் கண்ணன் போதிப்பதைக் கூறுவதாக இவ்வங்கம் அமைந்துள்ளது.
இறுதியான நான்காவது அங்கம் கண்ணனின் விசுவரூப தரிசனத்தைக் காட்டுவதையும், அருச்சுனன் தனது தளர்ச்சி நீங்கிப் போர் புரிய ஆயத்தமாவதையும் கூறி நிற்கிறது. 'காற்றைப் போல் கட்டுபடுத்தமுடியாத நிலையில் தனது மனம் இருப்பதை 'க் கண்ணனிடம் முறையிடும் அருச்சுனனுக்குக் கண்ணன் 'பழக்கத்தாலும் திட நம்பிக்கையாலும் மனதினைக் கட்டுப்படுத்த முடியுமென ' என எடுத்துரைக்கின்றான். இவ்விதமாகக் கண்ணன் உபதேசத்தால் தளர்ச்சி நீங்கிய அருச்சுனன் 'கண்ணனது ஈசுவர ரூபத்தைக் காணவிரும்புவதாகக் ' கூறுகின்றான். ஞானக் கண் மூலம் அருச்சுனனுக்குத் தன் சுயரூபத்தினைக் காட்டும் கண்ணபிரான் ஏற்கனவே தன்னால் கொல்லப்பட்டவர்களையே வெளிப்படையாகக் கொல்லத் தயங்கும் அருச்சுனனுக்கு வழங்கும் உபதேசத்தால் சஞ்சலங்கள் நீங்கிய அருச்சுனன் போர் செய்யத் தயாராகின்றான்.
பகவத் கீதை கூறும் பொருளைப் பலர் பலவிதமாகப் புரிந்து கொள்வர். சிக்கலானதொரு தத்துவத்தை ஒரு நடன நிகழ்வாக அமைப்பதிலுள்ள சிரமங்களை யாவரும் அறிவர். பகவத் கீதை கூறும் பொருளினை, கதையினை, பாத்திரங்களின் குணவியல்புகளை, சம்பவங்கள் நிகழும் சூழலினைப் பார்வையாளர்கள் புரிந்து கொள்ளும் படியாக வெளிபடுத்தப் பட வேண்டியதவசியம். ஆனால் அபிநய சுந்தரியான 'கலாநிதி பத்மா சுப்ரமண்யத்திற்கு ' இது இயல்பாகவே கைவந்த கலையாக அமைந்திருக்கிறது. முகத்தில் தான் எத்தனை விதமான உணர்வுகள். உணர்வுகளை முகத்தில் வெளிப்படுத்தும் சாத்வீக அபிநயத்திலாகட்டும், கைகள், கால்கள் உட்பட உடலுறுப்புகளால் வெளிப்படுத்தும் ஆங்கிக அபிநயமாகட்டும், பார்வையாளர்களைத் தன் அபிநயத்தால் கட்டிப் போட்டே விட்டார் கலாநிதி பத்மா சுப்ரமண்யம். அபிநயத்தில் ஒரு வகையான ஆஹார்ய அபிநயம் காட்சி அமைப்பு, உடை, ஒப்பனை போன்றவற்றை வெளிப்படுத்துவது. 'பகவத் கீதையை ' வெளிப்படுத்தும் நிருத்திய நாட்டிய நிகழ்வான இந்நிகழ்வில் மேடையின் பின்புறத்தே இராமாயணத்தில் வரும் அனுமனின் உருவுடன் கூடியதொரு கொடி வைக்கப் பட்டிருக்கிறது ஏனென்பது தான் புரிபடவில்லை.
ஒரு நடன நிகழ்வானது அபிநயத்தால் மட்டும் சிறந்து விடுவதில்லை. அபிநயத்தால் உணர்வுகளை வெளிப்படுத்த மட்டுமே முடிகிறது. அவ்விதம் வெளிப்படும் உணர்வுகளை போதுமான உடலசைவுகளற்று வெளிப்படுத்தினால் நிகழ்வு எவ்விதமிருக்கும் ? நிருத்தமற்ற அபிநயம் சிறக்க முடியுமா ? பகவத் கீதையென்னும் இந்நாட்டிய நிகழ்வில் வரும் பத்மா சுப்ரமண்யம் கண்ணனாக அருச்சுனனாக மாறி மாறித் தனது உடலசைவுகள் மூலம் வெளிப்படுத்தும் அபிநயமிருக்கிறதே. தனது கட்டுக் கோப்பான வாழ்வின மூலம் அவர் எவ்விதம் தன் உடல் நலனில் கவனமெடுத்திருக்கின்றாரென்பதை வெளிக்காட்டும் அபியயங்களவை. வெறும் அபிநயங்களாலும், உடல் அசைவுகளாலும் மட்டும் ஒரு நடன நிகழ்வு சிறப்படைந்து விடுவதில்லை. 'அங்க சுத்தமும் ' மிகவும் முக்கியம். கூறப்படும் சம்பவங்களிற்கேற்ற வகையில் ஆடுவதற்கு அங்கங்களும் ஒத்துழைத்து நிற்க வேண்டும். அது மட்டுமல்ல கூறப்படும் பொருளில் மனதொன்றி நடனத்தை ஆடவேண்டும். ஆடும் பொழுது பத்மா சுப்ரமண்யம் தான் மட்டும் மனதொன்றி ஆடவில்லை பார்வையாளர்களையும் மனதொன்றிப்போகும்படியாக ஆடி விடுகின்றார். தன் வாழ்வினையே பரதக் கலைக்காக அர்ப்பணித்து வாழும் கலாநிதி பத்மா சுப்ரமண்யத்தின் நல்லதொரு நடன நிகழ்விற்காக அவரைப் பாராட்டுவோம். பத்மா சுப்ரமண்யத்தின் வேகத்திற்கு ஈடு கொடுத்து அருமையாகத் தம்மை வெளிப்படுத்திய பின்னணிக் கலைஞர்கள் அனைவருமே பாராட்டுக்குரியவர்கள். குறிப்பாக மிருதங்கக் கலைஞர் சுதாங்கனைப் பாராட்டத் தான் வேண்டும். நிகழ்வின் ஆரம்பத்தில் இவரது சகோதரரான சாண் சந்திரசேகர் 'பத்மா சுப்ரமண்யத்தைச் சகோதரியாக அடைந்த தான் பாக்கியசாலி 'யெனக் குறிப்பிட்டார். இவர் மட்டுமா ? இத்தகையதொரு நடனமணி நம் மத்தியில் வாழ்வதற்காகத் தமிழர்களான நாமும் தான் பாக்கியசாலிகள்.
நன்றி: திண்ணை.காம் Monday October 22, 2001; பதிவுகள்.காம்