Wednesday, September 06, 2006

வ.ந.கிரிதரனின் 'திண்ணை'க் கவிதைகள்: 2!

இருப்புணர்ந்து இளகும் நெஞ்சு!!

உன்னைப் பார்க்கும் போதெல்லாம்
உனக்குள் எனக்குள்
பரவிக் கிடக்கும் வெறுமை
கண்டு மனம் அதிரும்.
உள்ளூம் புறமும் வெளியாய்ப்
பரவிக்கிடக்குமிந்தப் பெருவெளி.
சோகமேன் சகியே!
உனைப் பார்த்து மட்டுமல்ல
உன்னருகே கிளைதாவுமந்த
அணில், அதனருகே தனித்துணவு
தேடுமந்தச் சிட்டு,
அவசர அவசரமாய் வீடு
விரையுமந்த அந்த அராபிய மனிதன்
ஆபிரிக்க அணங்கு
ஆலயம் விட்டு ஆடிவரும்
அந்த முதிய சிறிலங்காத் தமிழன்
அந்த இந்திய மனிதன்
அந்த எருது
அந்த அமெரிக்கன்
அந்த ஆங்கிலேயன்
இவ்விதம் யாரைப் பார்த்தாலும்
எதனைப் பார்த்தாலும்
எனக்குத் தெரிவதெல்லாம்
வெளியும்,கதியும்,முகிலும்,
சுடரும்,சக்தியும் தானே.
வெறுமைக்குள் வெறுமையாய்
அரங்கேறும் நாடகங்கள்.
சிறுதுளியாய்க் கணநேர இருப்பு.
இருப்பினை இருத்திவிடுமொரு
பொறுப்பு மட்டுமில்லையென்றால்...
அதற்குள் தானெத்தனை ஆட்டங்கள்!
அடிப்படையில் அனைத்துமொன்றே.
இது கூடப்
புரியாத பொழுதெனவே
போகுமிந்த இருப்பினிலே
இருப்புணர்ந்து இளகும் என் நெஞ்சே!.

திண்ணை.காம்: Tuesday September 24, 2002

பெய்பேய் மழை!

மழையே! மழையே! வா! வா! வா!
மழையே! மழையே! வா! வா! வா!
மாமழையே! மழையே! வா! வா! வா!
மாமழையே! மழையே1 வா! வா! வா!

இரவிரவாய் பெய்யுமேயிந்த அடை மழை.
அடம் பிடித்துஅடாது பெய்யும் பேய்
மழையாய்! பெருமழையாய்.
விண்ணிடித்துப் படம்பிடித்த
பேரரவாய் காரிருளில்
மின்னல். புந்தி
நடுங்கிக் கிடந்தும், புரண்டும்
கண்ணயர விடாது
கொட்டும் வானம் இரவின்
மோனம் சிதைத்தபடி.
என்ன மழையிது ? என்ன மழை ?
இயற்கைப் பெண்ணே! உன்
இதயம் குமுறியதேனோ ?
மழையென்றால் நினைவில்
மழைக்காளான், வயற்புறத்
தவளை, வாற்பேத்தை, விரால்
சிறகொடுங்கிய கிளிப்புள்,
இருண்டதோர் மோனத்தில்
மருண்டிருக்கும் மழைவான்,.
வந்து வந்து போகும்.
வந்து வந்து போகும்.
மின்னல், இடி, கோடிழுக்கும்
மழைத் தாரை, பெருவெள்ளம்
இவையெல்லாம் கதைபல
கதைபல கூறும்.கூறும். கூறும்.
காகிதக் கப்பல், 'மழை வா ',
'வெயில் போ
'படம் விரிக்கும் நினைவுத்
திரை.
விரிந்திருக்கும் பெருவான் பார்க்க
விரிவெளியில் கிடப்பதென்
பெருவிருப்பு. அது போல்
படுத்திருந்து பெய்பேய்மழை
பார்த்துருளல்
இன்னுமோர் இலயிப்பு.
ஆண்டு போயென்ன ?
அடைமழையில் இன்னும்
அடங்கிவிடும் ஆழ்மனது.
நடுப்பகல் மழை நள்யாம
மழை கண்டும் ஆடாத
மனமும் உண்டோ!
கவிவடிப்போர் கற்பனைக்குப்
புவியில் பஞ்சம் வைக்குமோ
பெய்யுமிந்தப் பெருமழை.
அன்னைபூமி அவலம் கண்டு
அகல்வான் உதிர்க்கும் கண்ணீர்.
அகதி அலைச்சல் கண்டு மேகம்
வடிக்கும் கண்ணீர்.
மழையில் புனலாடுதல்
பேரின்பம் ஒரு போதில்.
மாசற்றபுறம் நீங்கி
மாசுற்று வரும் நீரில்
நிலப்பெண்ணும்
நிலைதளர்வாள்.
பூவுலகின் தோழர்களோ
நீரில், நிலத்தில்,வெளியில்
நீரரித்து நீலம் பாரிப்பர்.
இயந்திரப் பேயரக்கர்
புகை கக்கும் நகரத்துப்
பெரும்பரப்போ கனலடங்கிக்கண்சாய
பெய்யும் மழையோ
பெய்யும்! பெய்யும்! பெய்யும்!
பெருமழையாய்ப் பெய்யும்.
பேய்மழையாய்ப் பெய்யும்.

மழையே! மழையே! போ! போ! போ!
மழையே! மழையே! போ! போ! போ!
மாமழையே! மழையே! போ! போ! போ!
மாமழையே! ம்ழையே! போ! போ! போ!

திண்ணை, Saturday May 25, 2002

மின் பின்னியதொரு பின்னலா ?

உண்மையென்று ஏதேனுமொன்றுண்டா ?

நான் பார்ப்பது, நீ இருப்பது இதுவெல்லாம்
உண்மையென்று
எவ்விதம் நான் நம்புவது ?
நீயே சொல்.
நீ சொல்கின்றாய்
நீ இருக்கிறாயென்று.
உண்மையாக நீ இருக்கின்றாயென்று.
என்னை விட்டுத் தனியாக
எப்பொழுதுமே
இருப்பதாக நீ கூறுகின்றாய்.
எவ்விதம் நம்புவது.
ஆயிரம் மில்லியன் ஒளிவருடங்களிற்கு
அப்பாலிருந்து இருந்து வரும்
ஒளிக்கதிர்களுக்கும்
உன்னிலிருந்து வரும் ஒளிக்கதிர்களுக்கும்
இடையிலென்ன வித்தியாசம் ?
நேரத்தினைத் தவிர.
உனக்கும்
எனக்குமிடையில்
எப்பொழுதுமே ஒரு தூரம்
இருக்கத் தானேசெய்கிறது.
அது எவ்வளவுதான் சிறியதாக
இருந்த போதிலும்.
எப்பொழுதுமே ஒரு நேரம்
இருக்கத் தானே செய்கிறது
கணத்தினொரு சிறுபகுதியாய்
என்றாலும்.
நீ இருப்பதாக
நீ சொல்லுவதைக் கூட
நான் அறிவதற்கும் புரிவதற்கும்
எப்பொழுதுமே இங்கு நேரமுண்டு.
தூரமுமுண்டு கண்ணே!
காண்பதெதுவென்றாலும்
கண்ணே! அதனை
அப்பொழுதே காண்பதற்கு
வழியென்றுண்டா ?
காலத்தைக் கடந்தாலன்றி
ஞாலத்தில் அது
நம்மால முடியாதன்றோ ?
தூரமென்று ஒன்று உள்ளவரை
நேரமொன்று இங்கு
இருந்து தானே தீரும் ?
அது எவ்வளவுதான்
சிறியதாக இருந்த போதும்.
வெளிக்குள்
காலத்திற்குள்
கட்டுண்டதொரு இருப்பு
நம் இருப்பு கண்ணம்மா!
காலத்தினொரு கூறாய்
உன்னை நான் காண்பதெல்லாம் இங்கு
உன்னை நான் அறிவதெல்லாம்
மின்னலே!
மின் பின்னியதொரு
பின்னலா ? உன்னிருப்பும்
இங்குமின் பின்னியதொரு
பின்னலா ? என் கண்ணே!

திண்ணை Tuesday September 24, 2002

சித்தும் சித்தமும்!

'இருப்புப் ' பாதையில்
விரைந்திடும் காலவண்டித் தொடரென
'இடவெளி 'க் குறுக்குவெட்டுகள்.
'ஒளிக் கூம்புகளுக்குள் 'குடங்கிக் கிடத்தல்
வியப்பிற்குரியதல்ல
கிணறு
தாண்டாத் தவளையென.
'இருப்புப் ' பாதை
இருக்கும்புதிர்கள் நிறைந்ததொரு
இருப்பென. வியப்பென்னே!
இருப்புப் பாதையின்
அதிர்வுகள் நெஞ்சில்
ஏற்படுத்தும் கோடி அதிர்வலைகளை.
'இருப் 'பென்பதனாலா ?யாத்திரையோ
'அதிர்வுகளின்
'சித்து விளையாட்டா ? இல்லை
சித்த விளையாட்டா ?

திண்ணை Sunday June 15, 2003