Tuesday, August 03, 2010

முள்ளிவாய்க்கால்! - வ.ந.கிரிதரன் -


[ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரையில் கருப்பு சூலை 1983 ஒரு திருப்பு முனை. ஒரு குறியீடு. தமிழினத்தின் மீதான அரச பயங்கரவாதத்தைத் தொடர்ந்து ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டம் ஆயுதப் போராட்டமாக விரிவுபெற்றது அதன் பின்புதான். அதனைத் தொடர்ந்து முள்ளிவாய்க்காலில் முடிவுற்ற யுத்தம் இன்னுமொரு திருப்புமுனை. விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்குமிடையிலான யுத்தம் எதிர்பாராதவகையில் முடிவுக்கு வந்தது. கருப்பு சூலை 1983இல் இந்தியாவின் ஆதரவுடன் விரிவுபெற்ற ஆயுதப் போராட்டம், 2009 மேயில் இந்தியா, சீனா, பாகிஸ்தான், மேற்குநாடுகளின் ஆதரவுடன் முடிவுக்கு வந்தது. ஈழத்தமிழர்களின் போராட்டம் முள்ளிவாய்க்காலைத் தொடர்ந்து இன்னுமொரு திக்கில் விரியப் போகிறது. ஆயுதத்தை நோக்கியா அல்லது அமைதியை நோக்கியா என்பதைக் காலம் உணர்த்தும். ]

1.

மனிக் பண்ணை தடுப்பு முகாமில் வாழ்க்கை ஒரு வருடத்தைத் தாண்டியோடிவிட்டதா? இதயச்சந்திரனுக்கு நம்பவே முடியவில்லை. அதை மட்டுமா அவனால் நம்ப முடியவில்லை.. அவன் இன்னும் உயிருடன் இருப்பதையும்தான் நம்ப முடியவில்லை. விடுதலைப் புலிகளுக்கும் , இலங்கை அரசுக்குமிடையில் நடைபெற்ற அந்தக் கொடிய போரின் இறுதி நாட்கள்... அந்த நாட்களின் ஒவ்வொரு கணங்களும் இன்னும் அவன் ஞாபகத்தில் பசுமையாக இருக்கின்றன. அவன் மறையும் வரையும் அவன் நெஞ்சை விட்டு அவை மறையப் போவதில்லை. போரின் கொடூரத்தை அறிந்த, அனுபவித்த நாட்கள். இருப்பு பற்றிய அவனது புரிதல்களை அடியோடு மாற்றிவிட்ட நாட்கள். எவ்விதம் நெஞ்சை விட்டகலும்?

குறுகிய நிலப்பரப்புக்குள் புலிகளும், மக்களும் அடைபட்டுக் கிடந்த நிலையில் , இலங்கை அரசின் பல்வேறு வகையான தாக்குதல்களும்
தீவிரமடைந்திருந்தன. எறிகணைகத் தாக்குதல்கள், கொத்தணிக்குண்டுத் தாக்குதல்கள், இரசாயன வாயுத் தாக்குதல்கள்... ஆயிரக்கணக்கில் மக்கள் கொன்று குவிக்கப்பட்டுக் கொண்டிருந்த தருணத்தில்... பாதுகாப்பு வலயங்களெல்லாம் பாதுகாப்பற்றுப் போன அந்தக் கணங்கள்... மானுடம் தன் நாகரிகத்தை இழந்து அம்மணமாக நின்ற தருணங்களவை. உயிருக்கே உத்தரவாதமற்றுப் போன பொழுதுகள் அதுவரை மக்கள் கண்ட கனவுகளை, கற்பனைகளை, எதிர்கால இலட்சியங்களை, குடும்ப உறவுகளை, வரையறுத்த நீதி, நியாயக் கோட்பாடுகளையெல்லாம் துவம்சம் செய்துவிட்டு வெறியாட்டமாடிய போர் அரக்கரின் அட்டகாசத்தால் சமூக அமைப்புகளும், சூழலும் சிதைந்து போயிருந்த கொடிய தருணங்கள். ஆனால் இவையெல்லாவற்றையும் சர்வதேசமோ வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. அன்று ருவாண்டா! இன்று சிறிலங்கா! அளவில் சிறிதானாலும், அழிவின் தன்மையில் மாறுதலேது?

சிந்தனை வயப்பட்டுக் கிடந்தவனின் கவனம் சரோஜாவின், ஆனந்தனின் பக்கம் திரும்பியது. சரோஜாவையும், ஆனந்தனையும் அவனது வாழ்வுடன் பிணைத்துவிட்டது எது? அதுதான் விதியா? இவற்றிலெல்லாம் ஒரு காலத்தில் நம்பிக்கையில்லாமல் இருந்தவனின் சிந்தனையா இவ்விதம் திரும்பியிருக்கின்றது? அவனுக்கு அவனை எண்ண வியப்பாகவிருந்தது. விரக்தியாகவுமிருந்தது. காலம், அதன் கோலமும் எவ்விதம் ஒருவரை தலைகீழாக மாற்றி விடுகிறது?

புதுக்குடியிருப்பு மருத்துவமனை தாக்கப்பட்டு, எஞ்சியிருந்த உடையார்கட்டு மருத்துவமனையும் தாக்கப்பட்டபோதுதான், அதற்கு முன்னர் நடந்த தாக்குதல்களில் தன் மனைவி, மகள்மாரை இழந்திருந்த இதயச்சந்திரன், எங்கே ஓடுகிறோமென்று தெரியாத நிலையில், உயிரைக் காப்பதற்காக சனங்களோடு சனங்களாக ஓடிக்கொண்டிருந்தபோதுதான், வழியில் சரோஜாவைக் கண்டான். கைகளில் இரத்தம் வழிந்தோடிக்கொண்டிருந்த, ஏற்கனவே உயிரிழந்திருந்த குழந்தையொன்றுடன் , அக்குழந்தை இற்ந்ததைக் கூடப் புரிந்துகொள்ள முடியாமல், வீதியோரம் பேயறைந்தவளாக, சித்தப்பிரமை பிடித்தவளாகக் காணப்பட்ட சரோஜாவைக் கண்டதும் , அதற்கு முன்னர் நடந்த தாக்குதல்களில் தன் குழந்தைகளையும், மனைவியையும் இழந்திருந்த இதயச்சந்திரனால் அவளை அந்த நிலையில் விட்டுவிட்டுப் போக முடியவில்லை. அவ்விதம் விட்டு ஓடியிருந்தால் அவள் அரச படைகளின் குண்டு மழைக்குள் சிக்கி எந்தக் கணத்திலும் உயிர் துறக்கலாம்? மந்தைகளாகத் திரண்டோடிக் கொண்டிருக்கும் அகதிகளின் கால்களுக்குள் அகப்பட்டு உருக்குலையலாம்?

குழந்தையை அருகில் கிடந்த இடிந்த குடிசையொன்றில் வைத்துவிட்டுச் சரோஜாவையும் இழுத்தபடியே ஓடினான். அவ்விதமாக அவர்கள் ஓடிக்கொண்டிருந்தபோது அவர்களுடன் வந்திணைந்து கொண்டவந்தான் ஆனந்தன். பத்து வயது மதிக்கத்தக்க சிறுவன். அவர்களைப் போல் அவனும் தன் தாய், தந்தை, சகோதரர்களை இழந்து, யாருமற்ற நிலையில் சனங்களோடு சனங்களாக ஓடிக் கொண்டிருந்தான். மிகவும் பயந்து போயிருந்தான்.

அவனையும், சரோஜாவையும் இழுத்தபடி இதயச்சந்திரனும் ஓடியோடி, இறுதியில் புலிகளின் ஆயுதங்கள் மெளனிக்கப்பட்ட காலகட்டத்தில் அரச கட்டுப்பாட்டுப் பகுதியை வந்தடைந்தான்.. அதன் பின் இதுவரையில் தடுப்பு முகாமில் வாழ்வு ஓடிக்கொண்டிருக்கின்றது. சர்வதேசத்தின் அழுத்தங்களைத் தொடர்ந்து கட்டம் கட்டமாகத் தடுப்புமுகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்கள் வெளியேறிக்கொண்டிருந்தார்கள். இப்பொழுது நிலைமை முன்பிருந்ததை விடப் பரவாயில்லை. ஆனால் ஆரம்பத்தில் மூன்று இலட்சங்களுக்கும் அதிகமான மக்களை மிருகங்க்ளைப் போல் அடைத்து வைக்கப்பட்டிருந்ததொரு பெரியதொரு பட்டியாகவே அந்த முகாம் விளங்கியது. அரசின் உளவுத்துறை அதிகாரிகள் முகாமெங்கும் திரிந்து கொண்டிருந்தார்கள். புலிகளென்னும் சந்தேகத்தின் பெயரில் இளைஞர்கள், யுவதிகளென நாளுக்கு நாள் காணமல் போய்க் கொண்டிருந்தார்கள். பெண்கள் பாலியல் வல்லுறவுக்குள்ளானது பற்றிய கதைகள் முகாமெங்கும் நிறைந்திருந்தது. குடும்ப உறுப்பினர்களையே பிரித்து, வெவ்வேறிடங்களில்

ஒருவரை ஒருவர் பார்க்க முடியாதபடி அடைத்து வைக்கப்பட்டிருந்தார்கள்.

அவற்றை இப்பொழுது எண்ணவே அவனுக்கு ஒருவித அச்சமாகவிருந்தது.

ஒரு கணம் அவனது பார்வை விரிந்து கிடந்த விண்ணை நோக்கியது. கண்ணுக்கெட்டியதூரம் வரையில் நீலப்படுதாவாக விரிந்து கிடந்த விண் முன்பென்றால் உணர்வுகளை வருடிச் சென்றிருக்கும். இப்பொழுதோ கேள்விகளையே எழுப்ப முனைந்தது.

விரிந்து கிடக்கும் பெருவெளி!
விரைந்தோடும் சுடரும், கோளும்.
விரிவும் தெரியவில்லை!
விரைவும் புரியவில்லை!
சின்னஞ்சிறு கோளுக்குள்,
சின்னஞ்சிறு தீவிற்குள்,
குத்து, வெட்டுகள்!
புரிந்திருந்தால்
படர்ந்திருக்குமோ
சாந்தி!

இவ்விதமாக அவனது மனதினுள் கவிதை வரிகள் சில எழுந்தன. எத்தனை காலம் எழுதி. இத்தகையதொரு பேரழிவுச் சூழலில் கவிதையெங்கே வரும்?


2.

இந்த ஒரு வருடத்தில் அவர்கள் மூவரும் ஒன்றாகத் தற்காலிகமாகக் கட்டப்பட்டிருந்த வீட்டினுள் 'மனிக்பார்ம்'முகாமில் வ்சித்து வந்தாலும், இற்ந்தகாலம் தந்த நினைவுச் சுமையிலிருந்தும், எதிர்காலம் பற்றிய வெறுமையான , நம்பிக்கையற்ற் உணர்வுகளிலிருந்தும்
விடுபடமுடியாதவர்களாகவே பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தார்கள். அவனுக்கு அவனது மனைவி வதனாவையும், மகள்மார்கள் ஆஷா, ஷோபா இருவரையும் மறக்க முடியவில்லை. மிகவும் மென்மையான்வள் இளையவள் ஷோபா. அக்கவென்றால் அவளுக்கு உயிர். இருவருமே ஒருவருக்கொருவர் சகோதரிகளாய், சிநேகிதிகளாய் எவ்வளவுதூரம் ஒன்றித்துப் போயிருந்தார்கள். அவர்களைப்பற்றி, அவர்களின் எதிர்காலத்தைப் பற்றியெல்லாம் அவனும், வதனாவும் எவ்வளவு கற்பனைகளைப் படர விட்டிருப்பார்கள்? எல்லாமே எவ்விதம் அடித்து நொருக்கப்பட்டு விட்டன?

மனிதர்களால் எவ்விதம் இவ்விதம் வெறிகொண்டு தாண்டவமாட முடிகிறது?

இப்பொழுது அவன் முன்னாலுள்ள பிரச்சினை. வெளியில் செல்வதானால் சரோஜாவையும், ஆனந்தனையும் என்ன செய்வது? சரோஜா மன்னார்ப் பக்கமிருந்து ஓடியோடி வன்னிக்கு வந்திருந்தவள் போரில் அகப்பட்டிருந்தாள். அவனது நிலையும் இதுதான். அவனும் முழங்காவில் பகுதியிலிருந்து ஓடி வந்திருந்தான். ஆனந்தனோ கிளிநொச்சி முரசுமொட்டையைச் சேர்ந்தவன். போர்ச் சூழல் எவ்விதம் அவர்கள் மூவரையும் ஒன்றாகச் சேர்த்து விட்டிருந்தது. அவளோ இன்னொருத்தரின் மனைவியாக, தனக்கென்றொரு குடும்பத்துடன் வாழ்ந்து வந்தவள். அவனோ அவளைப்போல் தன் மனைவி, குழந்தைகளென தனக்கொரு வட்டத்தைப் போட்டு , அதனுள் வாழ்ந்து
வந்தவன். ஆனந்தனின் நிலையும் அதுதானே... அவனும் தன் தாய், தந்தையென வாழ்ந்து வந்திருந்தவன். சிந்தனையினின்றும் நீங்கியவனாக, நனவுலகிற்கு வந்த இதயச்சந்திரன் தனக்குள்ளாகவே தீர்மானமொன்றினை எடுத்தவனாக , சரோஜாவுடன் எப்படியும்
இது விடயமாகக் கதைத்துவிட வேண்டுமென்று எண்ணினான். அப்பொழுதுதான் ஆனந்தன் அருகிலிருந்த அவனையொத்த சிறுவர்கள் சிலரைச் சிந்திப்பதற்காகச் சென்றிருந்தான் என்பது நினைவுக்கு வந்தது. நல்லதாகப் போய் விட்டதென்று பட்டது. முதலில் சரோஜாவுடன் கதைப்பதே நல்லதென்ரு பட்டது.

சரோஜாவோ வழக்கம்போல் தனிமையில் மூழ்கியிருந்தாள். இதயச்சந்திரன் தன்னைத் த்யார்படுத்திவனாக அவளருகில் சென்று " சரோஜா" என்றழைத்தான்.

அவனது அழைப்பின் வெறுபாட்டை உடனேயே சரோஜாவின் பெண்ணுள்ளம் புரிந்து கொண்டது. 'என்ன' என்பது போல் அவனை ஏறிட்டுப் பார்த்தாள். அவனே தொடர்ந்தான்: "கெதியிலை வெளியிலை போகலாம் போலக் கிடக்குது. அதுதான் அதைப்பற்றிக் கதைக்கலாமெயென்று பட்டது. அதுதான் உங்களுக்கும் நேரமிருக்குமென்றால் , கொஞ்சநேரம் என்னுடன் நீங்கள் எல்லோரும் சந்தித்துக் கலந்தாலொசிக்க முடியுமே?"

அதற்கவள் பதில் அவளது மனநிலையினை மிகவும் துல்லியமாகவே வெளிப்படுத்தியது.

"எல்லாமே முடிந்து விட்டதே."

"என்ன சொல்லுகிறீர்கள் சரோஜா?"

"சொல்ல என்ன இருக்கு. என்னைப் பொறுத்தவரையில் எல்லாமே முடிஞ்சு போயிற்று. "

இவ்விதம் சரோஜா கூறவே, இதயச்சந்திரன் இடை மறித்தான்: " சரோஜா. நீங்களே இப்படிச் சொன்னால் எப்படி. ஆனந்தனைக் கொஞ்சம் நினைச்சுப் பாருங்கள். அவனுக்காகவாவது நாங்களேதாவது நல்ல முடிவை எடுக்க வேண்டும்தானே.. "

இதற்கு அவள் மெளனமாகவிருந்தாள். அவனே தொடர்ந்துக் கூறினான்: "சரோஜா. நான் நல்லாய் யோசித்துத்தான் இந்த முடிவுக்கு வந்திருக்கிறன். இன்னும் கொஞ்ச நாளிலை எங்களையும் இந்த முகாமிலிருந்து வெளியிலை அனுப்பி விடுவாங்கள். வெளியிலை போனவங்களிலை பலருக்கு இன்னும் குறைஞ்ச அளவு வசதிகள் தானும் செய்து கொடுக்க வில்லையாமே... இப்படியான சூழலிலை நீங்களும் , ஆனந்தனும் தனியே இருந்தால் என்ன நடக்குமென்றதை நினைச்சுப் பார்த்தாலே பயமாயிருக்கு. அதனால்தான் நான் கடைசியிலை இந்த முடிவுக்கு வந்திருக்கிறன்.."

"நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?' சரோஜாதான் கேட்டாள்.

இதற்குச் சிறிது யோசித்துவிட்டு இதயச்சந்திரனே கூறினான்: "சரோஜா. நாங்கள் மூவரும் வெளியிலை போன பிறகும் ஒன்றாகவே வசித்தால் அதுதான் நல்லதுபோலை எனக்குத் தெரியிது. நான் உயிரோடை இருக்கிற வரையில் என்னால் முடிஞ்ச அளவுக்கு உங்களுக்கும், ஆனந்தனுக்கும் செய்வன். உங்களை அன்றைக்கு அந்தப் போர் சூழலிலை பார்த்த அந்தக் கணத்திலேயே எனக்குள் சொல்லிக் கொண்டேன் இந்தப் பெண்ணை எப்படியும் , என்னாலை முடிஞ்ச் அளவுக்குக் காப்பாத்துவேன். நான் ஒன்றாக இருப்போம் என்று சொன்னதும் தவறாக ஒன்றும் நினைச்சு விடாதீங்கள். இருவரும் ஆனந்தனுக்கு அவனது அப்பா, அம்மா இருந்தால் என்ன செய்வாங்களோ அப்படியே எதவிதக் குறையுமில்லாமல் எங்களால் முடிஞ்சதைச் செய்ய வேண்டும். அதுக்காக நாங்களிருவரும் புருசன், பெண்டாட்டியாகத்தான் இருக்க வேண்டுமென்று அர்த்தமில்லை. அப்படி வாழக் கிடைச்சால் அதை நான் மறுக்க மாட்டன். ஆனால் அதுவல்ல என் இப்போதைய விருப்பம். நாங்கள் மூவருமே இந்தப் போரினால் பாதிக்கப்பட்டிருக்கிறம். மனுசங்க என்ர
அடிப்படையில் நாங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொண்டு வாழ வேண்டுமென்றுதான் நினைக்கிறன். நீங்கள் இப்பவே இதுக்கான பதிலைச் சொல்ல வேண்டுமென்றில்லை. நல்லா யோசித்து, ஆற , அமர யோசித்துச் சொன்னால் போதும். இந்த முகானை விட்டு போறதுக்குள்ளை சொன்னால் அது போதும். நீங்கள் நல்ல பதிலைச் சொல்லுவீங்களென்று நினைக்கிறன்"

இவ்விதம் கூறிவிட்டு, சரோஜாவைத் தனிமையில் விட்டுவிட்டு, குடிசையின் வெளியே வந்தான் இதயச்சந்திரன். முதன் முறையாக எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கைக் கீற்றொன்று சிந்தையில் தோன்றி மறைந்தது. முடிவு கூடத் தன்னுள் தொடக்கமொன்றினை எவ்விதம் மறைத்து வைத்துள்ளது.

போர்கள் மட்டும் இல்லையென்றால் இந்தப் பூவுலகுதான் எவ்விதம் ஆனந்தமாக விளங்கும். எந்தவித இன,மத, சாதி வேறுபாடுகளற்று, இந்தப் பூமிப்பந்தின் மானுடர்கள அனைவரும் ஒரு தாய்ப்பிள்ளைகளாக வாழ்ந்திருக்கும் சாத்தியம் ஏற்பட்டால் எவ்விதம் இன்பமாகவிருக்கும்.

போரே ! போய் விடு!
போரே ! போய் விடு!
போரே ! போய் விடு!
போரே ! போய் விடு!

ngiri2704@rogers.com

சிறகும், உறவும்! - வ.ந.கிரிதரன் -



1.

மாதவனின் மனதில் அமைதியில்லை. கடந்த சில வாரங்களாக அவனுக்கும், மனைவி வசுந்தராவுக்குமிடையில் ஏற்பட்டிருந்த ஊடல் நாளுக்குநாள் குறைவதற்குப் பதில் அதிகரித்தவண்ணமேயிருந்தது. கூடலிருந்து ஆரம்பமான ஊடலிது. ஊடலுக்குப் பின் கூடுவதிலுள்ள இன்பம் பற்றிப் பல சங்கக் கவிதைகள் விபரித்துள்ளன. ஆனால் கூடலே ஊடலுக்கான காரணம் பற்றி ஏதாவது சங்கப் பாடல் உள்ளதா? இத்தனைக்கும் வசுந்தரா அவனது தாலி கட்டிய மனைவி. அவனைத் துரத்தித் துரத்தி ஒற்றைக்காலில் நின்று காதலித்து மணம் முடித்த துணைவி.

அவன் சலிப்புற்றிருக்கும் நேரங்களீலெல்லாம தன் பார்வையால், சொல்லால், மயக்கும் கண்களால், புன்னைகையால், அரவணைப்பால் அவன் சலிப்பைப் போக்கும் கலையில் வல்லவள். அவளா இப்படி மாறிப் போனாள் என்று சிந்தனையிலாழ்ந்தான் மாதவன். திருமணம் முடிந்து இன்னும் ஒரு வருடம் கூட ஆகவில்லை. அதற்குள் அவளேன் இவ்விதம் மாறி விட்டாளென்பது அவனுக்குப் புரியாத புதிராகவிருந்தது. அவனது மனதில் அண்மைக் காலத்துச் சம்பவங்களின் தொகுப்பொன்று ஓடி மறைந்தது.

எப்பொழுதுமே கலகலப்பாகவிருக்கும் வசுந்தராவின் நடத்தையில் அண்மைக்காலமாகவே ஒரு சிறு மாற்றம். அடிக்கடி தன்பாட்டில் சிந்தனையில் ஆழ்ந்து போய் விடுவாள். அவனுக்கு அது ஒரு வித ஆச்சரியத்தையே தந்தது.

"என்ன வசந்தி! உமக்கேதாவது பிரச்சினையா? கொஞ்சக் காலமாகவே நானும்தான் பார்க்கிறன் .. நீர் ந்ல்லாத்தான் மாறிப் போட்டீர்.. என்ன பிரச்சினையென்றாலும் என்னட்டை மனதைத் திறந்து சொல்லலாம்தானே"

அதற்கு அவள் ஒன்றுமே பதில் கூறாமல் மெளனமாகவிருந்தாள். அவன்தான் மீண்டும் கேட்டான்: "என்ன வசந்தி. நான் பேசுறது காதிலை விழுகுதா?"

அதற்கும் அவள் பதிலெதனையும் கூறாமல் மெளனமே சாதித்தாள். அப்பொழுதுதான் அவனுக்கு அந்த யோசனை வந்தது. அவன் சலிப்பாகவிருக்கும் சமயங்களிலெல்லாம் அவள் எத்தகைய தந்திரங்களைச் செய்து அவனை மாற்றிவிடுவாளோ, அதே மாதிரியான தந்திரங்களை வைத்து அவளையும் மாற்றிவிடவேண்டுமென்று அவன் முடிவு செய்தது அப்பொழுதுதான். கூடலில் இருக்கும் இன்பமே தனி. கூடலுக்கு மயங்காத உயிரினம்தானேது.

மெதுவாக வசுந்தராவின் பின்புறமாகச் சென்றவன் அவளை அப்படியே தன் மார்புடன் வாரித்தழுவ முயன்றான். அடுத்து நடந்த நிகழ்வுகள் அவனுக்குப் பெரிதும் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் கூடவே தந்தன. அவன் அவ்விதம் பின்புறமாக வந்து அணைப்பதை எதிர்பார்க்காத வசுந்தரா அன்னியனொருவன் அணைக்க வந்தால் எவ்விதம் எதிர்த்துப் போராடுவாளோ அவ்விதமே அவனைத் தன் பலமனைத்தையும் ஒன்றாக்கிப் பிடித்துத் தள்ளி, அவன் அனைப்பினின்றும் தன்னை விடுவித்துக் கொண்டாள்.

மாதவன் ஒரு கணம் அதிர்ந்தே போனான். அக்கணத்தில் அவள் தன்னையொரு வேற்று மனிதனாகவேக் கருதி நடந்து கொண்டதாக உணர்ந்தான்.

அதுவே அவனது அதிர்ச்சியின் காரணம். 'இவளுக்கென்ன நடந்து போச்சுது. ஒரு வ்ருசமாய்க் குழந்தை, குட்டியென்று ஒன்றும்
கிடைக்காமலிருக்கிறதாலை ஏதாவது விரக்தி, கிரக்தி அல்லது மன அழுத்தமென்று ஏதாவது மன வியாதி இவளைப் பிடித்தாட்டுகிறதோ?.' அதே சமயம் தன்னை அவள் அவ்விதம் அன்னியனைப் போல் தள்ளியதாலேற்பட்ட ஒருவித சோகம் அவனைப் பிடித்து வாட்டத் தொடங்கியது. அந்த வாட்டத்திற்குரிய சோகமும், அவளது நடத்தையால் ஏற்பட்ட அதிர்ச்சியும் ஒன்று சேர்ந்து தாக்கவே, அவன் அவளத் தன் அணைப்பினிலிருந்து விலக்கினான். தன்னை உயிருக்கு உயிராய் காதலித்து மணந்த துணைவி அவள். அவள் இப்பொழுது தன்னை அன்னியன் ஒருவனைப் போல் நடத்துகின்றாளே. அந்தப் புறக்கணிப்பு அவனுக்கு ஒருவித வேதனையைத் தந்தது.

அத்துடன் ' ஐ ஆம் சொறி' என்றான்.

இவ்விதம் தான் கூறியதும் ,அவளேதாவது மன்னிப்பு கேட்பாளென்று எண்ணிய மாதவனுக்கு , அவள் அப்படியெதுவும் கேட்காமல், தவறு செய்தது அவன்தான் என்பது போலவும், அவனது மன்னிப்பு போதுமானதல்ல என்பது போலவுமொரு நிலையில் தலையைத் திருப்பிக் கொண்டு நின்றது மேலும் அதிர்ச்சியையே தந்தது. அவளாகவே திரும்பி வந்தால் மட்டுமே இனி கதைப்பது என்று விரைவாகவே தீர்மானித்துக் கொண்டான். இப்பொழுது அவனை வசுந்தராவின் திடீர் மனமாற்றத்திற்கான காரணங்கள் என்னவாகவிருக்கும் என்பதுபற்றிய எண்ணங்களே ஆக்கிரமிக்கத் தொடங்கின.

2.

வசுந்தரா வேலையிலிருந்து வரும்போது மணி மாலை ஏழை நெருங்கி விடும். அவர்கள் வசிப்பது ஸ்கார்பரோவில். அவள் வேலை பார்க்கும் வங்கி இருப்பது டொராண்டோ நகரின் மேற்குப் புறத்தின் எல்லையில் ரோயல் யோர்க் வீதியும், புளோர் வீதியும் சந்திக்கும் இடத்திற்கண்மையில். வேலை முடிந்து பாதாள் இரயிலேறி , 'ரபிட் ட்ரான்சிட்', பஸ்களென மாறி மாறி ஏறி இறங்கி வரவேண்டும். இந்த விடயத்தில் அவன் கொடுத்து வைத்தவன்.

அவன் தகவல் தொழில் நுட்ப நிபுணனாக, ஒப்பந்த அடிப்படையில், அத்துறையிலுள்ள வேலை வாய்ப்பு முகவர்களினூடு சுய தொழில் செய்து கொண்டிருந்தான். அடிக்கடி பணி புரியும் நிறுவனங்கள் மாறிக் கொண்டிருந்தாலும், அதனைத்தான் அவனும் விரும்பினான், பல்வேறு நிறுவனங்களில் வேலை செய்வதன் மூலம் அதிக அளவில் தொழில் நுட்ப அனுபவங்களைப் பெறக் கூடியதாகவிருந்தது. அனுபவங்களுக்கேற்ப ஒவ்வொரு முறையும் ஊதியத்தையும் அவனால் அதிகரிக்க முடிந்தது. 'வெப் சேர்வர்' நிர்வகிப்பதில், அதற்குரிய 'அப்ளிகேசன்களை' நிறுவுதற்குரிய 'சேர்வர்'களை உருவாக்கி, 'அப்ளிகேசன்களை' நிறுவுவது .. இவைதான் அவனது முக்கியமான தொழில். மைக்ரோசாவ்ட்டை மையமாகக் கொண்டு அந்நிறுவனத்தால் உருவாக்கப்படும் மென்பொருள்களைப் பாவித்து மேற்படி சேவைகளை ஆரம்பத்தில் வழங்கியவன் ஒப்பந்த அடிப்படையில் மேலும் பல நிறுவனங்களில் பணி புரிந்ததன்வாயிலாக இன்று லினிக்ஸ்/பிஎச்பி/மை எஸ்குயூஎல், ஐபிஎம் எ.ஐ.எக்ஸ் யுனிக்ஸ்/ வெப் ஸ்பெயர் அப்ளிகேஷன் சேர்வர் எனத் தன் அறிவாற்றலையும், அனுபவத்தையும் வளர்த்தெடுத்திருந்தான். இணையமும் அது பற்றிய பல்வேறு தொழில் நுட்பங்களும் அவனை மிகவும் கவர்ந்தவை. இதனால் அவன் தன் பணியினை மிகவும் இரசித்து, விரும்பி, ஆற்றினான். தற்போது அவன் பணி புரியும் நிறுவனம் அவர்களது
இருப்பிடத்திற்கண்மையில்தானிருந்தது. இதனால் நேரத்துடனேயே அவன் வீடு திரும்பிவிடுவான்.

அன்றும் அவ்விதமே திரும்பியவன் வீட்டின் பின் வளவில் பிளாஸ்டிக் கதிரையொன்றைத் தூக்கிக் கொண்டு வந்து போட்டமர்ந்தபடியே சிந்தனையிலாழ்ந்தபோது மாலை மணி ஆறு ஆகிவிட்டிருந்தது. அவனது சிந்தனை முழுவதையும் வசுந்தராவே ஆக்கிரமித்திருந்தாள். இந்தப் பிரச்சினைக்கொரு முடிவு கட்டினால் நல்லதென்று பட்டது. இவ்விதமே இருவரும் அண்மைய மாற்றங்களுக்கென்ன காரணமென்பது தெரியாமல் , ஒருவிதமான ஒட்டாத வாழ்க்கை வாழ்வதிலும், ஆற அமர யோசித்து, பிரச்சினைகளைப் பற்றி மனந்திறந்து கதைப்பதன் மூலம்தான் தற்போது நிலவும் இறுக்கமான சூழலுக்கொரு தீர்விருக்க முடியுமென்று பட்டது. அவ்விதம் நினைத்ததுமே மனதிலொரு ஆறுதலேற்பட்டது. அது வரையில் வசுந்தரா பற்றிய எண்ணங்களில் மூழ்கிக் கிடந்தவனின் கவனம் அதன்பின்பே சுற்றியிருந்த அந்திச் சூழலின்மேல் திரும்பியது.

சிவந்திருந்த அந்தி வான் எப்பொழுதுமே அவனைக் கவருமொரு நிகழ்வு. பொதுவாக விரிந்திருக்கும் நீலவான், சுடர் கொழிக்கும் இரவு வான், முகில் மூடி அவ்வப்போது உறுமும் கார்காலத்துக் கருவான்.. இவ்விதம் விரிந்திருக்கும் வானின் பல்வேறு வடிவங்களும், நிகழ்வுகளும் அவனுக்கு மிகவும் பிடித்தமானவை. இயற்கையை எவ்வளவு இரசித்தாலும் அலுப்பதில்லை. இயற்கையின், படைப்பின் நேர்த்தி மிக்க அழகு எப்போழுதுமே அவனது தாகமெடுத்தலையும் சிந்தனையைத் தூண்டிவிடும் வல்லமை மிக்கது. அவனது பால்யகாலத்தில் காடுமேடென்று அலைந்து திரிவது அவனுக்கு மிகவும் பிடித்தமான பொழுதுபோக்குகளிலொன்று. அதிலும் கொட்டும் மழை அவனை மிகவும் கவர்ந்ததொரு இயற்கை நிகழ்வு. இரவு முழுக்க , ஓட்டுக் கூரை சடசடக்கக் கொட்டும் மழையையும், கூடவே அருகிலிருக்கும் வயற்புறங்களிலிருந்து ஒலிக்கும் தவளைக் கச்சேரிகளையும் கேட்பதைப் போல் மகிழ்ச்சி தருவது வேறொன்றுமுண்டோ?

இவ்விதமே அன்றும் அந்தியின் அழகில் மெய்மறந்திருந்த அவனைக் கண்டதும் படையெடுக்கும் மாடப்புறாக்கள் சில தற்பொழுதும் அவனைக் கண்டதும் அருகில் வந்தமர்ந்தபடி அகப்பட்டடதைக் கொறிக்க ஆரம்பித்தன. ஒவ்வொரு முறையும் அவன் புறாக்களைக் கண்டதும் அவற்றுக்குப் பாணைச் சிறு சிறு துண்டுகளாக்கிப் போடுவான். அதன் விளைவாக ஏற்பட்ட நட்பின் அடிப்படையில் அந்தப் பட்சிகளுக்கும் அவனுக்குமிடையில் ஒருவிதமான உறவும் , பிணைப்பும் ஏற்பட்டிருந்தன. அவற்றின் விளைவாக அந்தப் புறாக்கள் அவன்மேல் எந்தவிதமான ஐயமும், அச்சமும் கொள்வதில்லை. அவனை தங்களது நம்பிக்கைக்குரியதொரு உயிரினமாக அவை கருதின போலும். மாதவன் வீட்டினுள் சென்று கிடந்த பாணொன்றை எடுத்துக்கொண்டு வந்து சிறு சிறு துண்டுகளாக்கி புறாக்களை நோக்கி வீசினான். அவையும் மிகவும் உற்சாகத்துடன் தீனியைத் தேடிக் கொறிக்க ஆரம்பித்தன.

அவனது கவனம் அவற்றின்பால் திரும்பியது. ஆரம்பத்தில் சாதாரணமாகக் கவனிக்க ஆரம்பித்தவனின் கவனத்தை அவற்றின் நடத்தை மிகவும் கவர்ந்து விடவே மனமொன்றிக் கவனிக்க ஆரம்பித்தான். அத்துடன் உள்ளே சென்று மேலுமொரு பாணொன்றைப் பிய்த்தெடுத்துவந்து சிறு சிறு துண்டுகளாக்கி அவற்றிற்கிட்டான்.

ஆரம்பத்தில் உண்பதில் கவனத்தைப் பதித்திருந்த ஆண் புறாவொன்றின் கவனம் , அதன் வயிற்றுப் பசி ஓரளவுக்குத் தணிந்ததும், வேறு திசையில் ப்யணிக்க ஆரம்பித்தது. அவற்றிலிருந்த ஆண் புறாவின் அங்க சேட்டைகள் மாதவனுக்கு ஒருவித சிரிப்பையும், இன்பத்தையும் முடிவில் ஆச்சரியத்தையும் தந்தன. தனது வாலைச் சிறிது விரித்து, தரையுடன் தேய்த்தபடி, கழுத்துப்புறத்துச் சிறகுகளைச் சிலிர்த்தபடி, கழுத்தை மேலும் கீழுமாக விரைவாக மேலும் கீழும் அசைத்தபடி அந்த ஆண் புறா அருகில் உண்பதில் கவனமாயிருந்த பெண் புறாவின் கவனத்தைக் கவர முயன்றது. துணையுடன் கூடுவதற்காக அது செய்த தந்திரமும், அதன் ஒரு விதமான நடன அசைவும் அவனை மேலும் கவரவே அவற்றைக் கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தான் மாதவன். ஒவ்வொரு முறையும் ஆண் புறாவின் முயற்சியினை அந்தப் பெண் புறா கவனித்ததாகத் தெரியவில்லை. அலட்சியம் செய்தபடியே தன் பாட்டில் விலகி, விலகிச் சென்றபடியே தன் கவனத்தை ஆங்காங்கே சிதறிக் கிடந்த உணவுத் துணிக்கைகளைத் தேடி உண்பதில் கவனமாகவிருந்தது. அவனுக்கு அந்த ஆண் புறாவின் மேல் ஒருவித பரிவு கலந்த உணர்வு ஏற்பட்டது. அதே அதன் முயற்சிகளை அலட்சியம் செய்து கொண்டிருந்த அந்தப் பெண் புறாவின்மேல் சிறிது ஆத்திரமாகக் கூட வந்தது. 'என்ன பெண்ணிது... கொஞ்சம் கூடத் துணையின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளமுடியாமல்... சரியான அகங்காரம் பிடித்த பெண்ணாகவிருக்க வேண்டும்' இவ்விதம் தனக்குள்ளாகவே அவன் கூறிக்கொள்ளவும் செய்தான்.

ஆனால் அந்த ஆண் புறா தனது பெண் துணையின் புறக்கணிப்பைப் பற்றியும் சிறிதும் அலட்டிக்கொள்ளவேயில்லை. விடாமல் , சலிக்காமல் மீண்டும் மீண்டும் முயற்சி செய்து கொண்டேயிருந்தது. அப்பொழுது அவனுக்கு அவனது பால்ய காலத்து நினைவொன்று ஞாபகத்துக்கு வந்தது. அவனது அம்மா எப்பொழுதுமே வீட்டில் கோழி வளர்க்கத் தவறியதேயில்லை. அப்பொழுதெல்லாம் முற்றத்தில் அடிக்கடி பெட்டைக் கோழிகளைத் துரத்தித் துரத்தித் தம் ஆண்மையினை அகங்காரத்துடன், பலவந்தமாக வெளிப்படுத்தும் சேவல்களின் ஞாபகம் இச்சமயத்தில் தோன்றியது. அவை இந்தப் புறாக்களிலிருந்து எவ்வளவு வித்தியாசமானவையென்று சடுதியாக பொறியாக அவன் சிந்தையில் எண்ணமொன்று ஓடி மறைந்தது. குறைந்தது பத்து தடவைகளாவது அந்த ஆண் புறா அந்தப் பெண் புறாவினைக் கவருவதற்குத் தன்னால் முடிந்தவரையில் முயற்சி செய்திருக்கும். ஆனால் ஒருமுறை கூட தன் துணையின் அலட்சிய நடத்தைக்காக அது ஆத்திரமுற்று, சேவலைப் போல் துரத்திப் பலவந்தமாகத் தன் வேட்கையினைத் தணிக்க முயற்சி செய்யவேயில்லை என்ற விடயம் அப்பொழுதுதான் அவனது கவனத்தில் உறைத்தது. அந்த ஆண் புறாவின் மேல் மிகுந்த மதிப்பும், பெருமிதமுமேற்பட்டன.

இந்தப் பெண் புறா ஏன் தன் ஆண் கூடுவதற்கு முயன்றும் அலட்சியம் காட்டுகின்றது. எவ்வளவோ காரணங்களிருக்கக் கூடும். அதன் உளவியல், உடலியல் ரீதியிலான எத்தனையோ காரணங்கள் இருக்கக் கூடும். அதற்காக, அதன் அலட்சியத்திற்காக அந்த ஆண் புறா தன் மனதைப் போட்டு அலட்டிக் கொள்ளவில்லையே. எப்பொழுதுமே கலகலப்பாக இருக்கும் வசுந்தராவின் நடத்தையில் அந்தக் கலகலப்பு காணாமல் போனதென்றால் அதற்கேதாவது உளவியல், அல்லது உடலியல்ரீதியிலான காரணங்கள் இருக்கக் கூடும். அவற்றைக் கண்டறிவதற்கு, புரிந்து கொள்வதற்கு அவன் எப்பொழுதுதாவது முயன்றதுண்டா? அதனைவிட்டுவிட்டு, அவளுடன் பலவந்தமாகக் கூடுவதற்கு முய்னற தன் செய்கையையும், கூடுவதற்குக் கூட கண்ணியத்தைக் கடைப்பிடித்த, துணையின் மனநிலையினைக் கவனத்திலெடுத்து அதனை வற்புறுத்தாத அந்த ஆண் புறாவின் நடத்தையையும் ஒரு முறை மனது ஒப்பிட்டுப் பார்த்தது. வெட்கித்துப் போனான்.

( யாவும் கற்பனை )

மின்னஞ்சல்: ngiri2704@rogers.com

Friday, July 30, 2010

நான் அவனல்லன்! - வ.ந.கிரிதரன் -

சென்னையில் இயங்கும் மணிமேகலை பிரசுரம் 'முத்தமிழில் நல் முத்துக்கள்' என்றொரு நூலினை வெளியிட்டுள்ளார்கள். இதன் ஆசிரியர்களாக V.N.கிரிதரன், S.N.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளார்கள். நீண்டகாலமாக வ.ந.கிரிதரன் (V.N.Giritharn) என்னும் பெயரில் எழுதிவருகின்றேன். மேற்படி நூலினை நான் எழுதவில்லை. ஏனென்றால் நான் அவர்களுக்கு எனது ஆக்கங்கள் எதனையும் வெளியிடுவதற்குக் கொடுக்கவில்லை. மேலும் மேற்படி நூலினை நான் இதுவரை வாசிக்கவில்லை. இணையத்தில் விருபா தளத்தில் கண்ட நண்பரொருவர் கூறித்தான் தெரிய வந்தது. நான் எனது ஆக்கங்கள் எதனையும் அவர்களுக்குப் பதிப்பிக்கக் கொடுக்காததனால் அந்த நூலிலுள்ள படைப்புகளை எழுதியவர் இன்னுமொரு கிரிதரனாக இருக்க வேண்டுமென நினைக்கின்றேன். அல்லது எனது ஆக்கங்கள் சிலவற்றை இணையத்திலிருந்து எடுத்து வெளியிட்டார்களோ என்பதும் எனக்குத் தெரியாது. மேற்படி நூலினை இதுவரையில் பார்க்காததனால் இரண்டிற்கும் சாத்தியங்களுள்ளதால், மேற்படி நூலினை வாசித்தவர்கள் யாராவதுதான் அறியத்தர வேண்டும். இங்கு நான் இந்த விடயத்தைத் தெளிவு படுத்துவதற்குக் காரணமுண்டு. அது பெயர்க் குழப்பம்தான். தமிழ் இலக்கிய உலகில் என்னை அறிந்தவர்கள் பெயரைப் பார்த்ததும் நான் எழுதியதாகக் கருதிவிடுவார்கள். மணிமேகலை பிரசுரம் போன்ற பதிப்பகங்கள் நூல்களை வெளியிடும்போது இவ்விதம் பெயர்க் குழப்பங்கள் ஏற்படுத்தும் வகையில் ஆசிரியர்கள் பெயரை வைப்பதைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் அது தேவையற்ற பெயர்க் குழப்பங்களைத் தவிர்க்கும். மேலும் மணிமேகலை பிரசுரத்தினர் மேற்படி பெயரில் மேலும் எத்தனை நூல்களை வெளியிட்டிருக்கின்றார்களோ தெரியவில்லை. நான் எனது நூல் எதனையும் மணிமேகலை பதிப்பகம் மூலம் இதுவரை வெளியிடவில்லை என்பதை அறியத்தருகின்றேன். ஒரு பதிவுக்காகவும், விளக்கத்திற்காகவும் இதனை அறிவிப்பது அவசியமானதென்று கருதுகின்றேன். சங்கர்லால், தமிழ்வாணன் எனத் துப்பறியும் நிபுணர்கள் நடமாடும் நாவல்களைப் படைத்த தமிழ்வாணனின் புதல்வர்கள் நடாத்தும் நிறுவனத்தால் ஏற்கனவே நீண்டகாலமாக எழுதும் என் பெயரைப் பாவித்து நூல் வெளியிடுவதில் விளையக் கூடிய தேவையற்ற குழப்பங்களை உணரமுடியாமலிருப்பது வியப்பிற்குரியது. தந்தையின் நாவல்களில் வருவதைப்போல் சிறிது துப்பறிந்திருந்தால் ஏற்கனவே மேற்படி பெயரில் ஒருவர் எழுதுவதைக் கண்டுபிடித்திருக்கலாம். தேவையற்ற குழப்பங்கள் ஏற்படுவதைத் தவிர்த்திருக்கலாம்.

- வ.ந.கிரிதரன் -
ngiri2704@rogers.com

********************************

இது பற்றி மணிமேகலை பதிப்பகத்தாருக்கு அனுப்பிய மின்னஞ்சலிலிருந்து (அவர்களது பதில் இன்னும் வரவில்லை) சில பகுதிகள்:

வணக்கம் பதிப்பகத்தாரே,
உங்கள் பதிப்பகத்தின் மூலம் வெளியிடப்பட்ட 'முத்தமிழில் நல் முத்துகள்' என்னும் நூலின் ஆசிரியர்களிலொருவராக V.N.கிரிதரன் என்ற பெயர் குறிப்பிடப்பட்டிருக்கிறது. நீண்ட காலமாக வ.ந.கிரிதரன் (V.N.Giritharan) எழுதி வருகின்றேன். இவ்விதமாக நீங்கள் V.N.கிரிதரன் என்னும் பெயரைப் பாவிப்பது பெயர்க் குழப்பங்களை ஏற்படுத்துமென்பதால் எதிர்காலத்தில் கிரிதரன் போன்ற பெயர்களைப் பாவிப்பீர்களென்றால் பெயர்க்குழப்பங்களை அதன் மூலம் தவிர்த்துக்கொள்ளலாம். இதனை நீங்கள் கருத்தில் கொள்வீர்களென நினைக்கின்றேன். மேலும் மேற்படி நூலில் குறிப்பிடப்பட்டுள்ள V.N.கிரிதரன் பற்றிய மேலதிக விபரங்களைத் தந்துதவிட முடியுமா?

- வ.ந.கிரிதரன்:

எதிர்காலச் சித்தன்! _ வ.ந.கிரிதரன் -


[ ஈழத்துத் தமிழ் இலக்கிய வானில் பல்துறைகளிலும் சுடர்விட்டு அமரரான அறிஞர் அ.ந.கந்தசாமியின் கவிதைகளில் 'எதிர்காலச் சித்தன்' என்னும் கவிதை என்னைக் கவர்ந்த அவரது கவிதைகளிலொன்று. அதனைத் தழுவி எழுதப்பட்டுள்ளது இச்சிறுகதை. மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்கள் மீராவின் 'எனக்கும் உனக்கும் ஒரே ஊர். வாசுதேவ நல்லூர்' என்பதையே முதலாவது தமிழில் வெளிவந்த அறிவியற் கவிதையாகக் குறிப்பிடுவார். ஆனால் அதற்கும் பல வருடங்களுக்கு முன்னர் வெளிவந்த அ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன்' கவிதையினையே தமிழின் முதலாவது அறிவியற் கவிதையாக நான் கருதுகின்றேன். சுஜாதாவுக்கும் அ.ந.க.வின் மேற்படி கவிதை பற்றி தெரிந்திருந்தால் அவரும் அவ்விதமே கூறியிருப்பார். மேற்படி கவ்தை நிகழ்கால மனிதன் எதிர்கால மனிதன் ஒருவனைச் சந்தித்து, உரையாடித் திரும்புவதைப் பற்றி விபரிக்கிறது.]

எதிர்காலத்திரை நீக்கி நான் காலத்தினூடு பயணித்தபொழுதுதான் அவனைக் கண்டேன். அவன் தான் எதிர்கால மனிதன். இரவியையொத்த ஒளிமுகத்தினைக் கொண்டிருந்த அந்த எதிர்கால மனிதனின் கண்களில் கருணை ஊறியிருந்தது. அவன் கூறினான்: "நிகழ்கால மனிதா! எதிர்கால உலகமிது. இங்கேன் நீ வந்தாய்? இங்கு நீ காணும் பலவும் உன்னை அதிர்வெடி போல் அலைக்கழிக்குமே. அப்பனே! அதனாலே நிகழ்காலம் நீ செல்க!"

அறிவினில் அடங்காத தாகம் மிக்கவனாக எதிர்காலம் ஏகிட்ட என்னைப் பார்த்து இந்த எதிர்கால மனிதன் கூறுகின்றான் 'நிகழ்காலம் நீ செல்க" என்று. அவனுரையால் என் அறிவுத் தாகம் அடங்குமோ? அதனால் நான் பின்வருமாறு கூறினேன்: " திரண்டிருக்கும் அறிவின் சேர்க்கை வேண்டும் செந்தமிழன் நான். குற்றமேதுமற்ற பேராண்மைக் கோட்டை என்னை மலைவுறுத்தாது இந்த எதிர்காலம். ஆதலால் கவலையை விடு நண்பனே!"

இவ்விதம் கூறிவிட்டு குறுகுறுத்த விழிகளையுடைய சாமர்த்தியசாலியான அந்த எதிர்கால மனிதனின் பெயரென்ன என்று வினவினேன்.

அதற்கவன் பின்வருமாறு கூறினான்: "எனக்கு முன்னே சித்தர்கள் பலர் இருந்தாரப்பா! நானுமொரு சித்தன். எதிர்காலச் சித்தன்..... நிகழ்காலத்தவரான உன்னவரோ உனக்கு முன்னர் வாழ்ந்திட்ட சித்தரல்லாது உன் காலச் சித்தரையும் ஏற்காரப்பா. இதனை நான் எந்தவித மனக்குறையின் காரணமாகவும் கூறவில்லை. உன் நிகழ்காலத்துக் காசினியின் பண்பிதுதானே. அதுதான் அவ்விதம் கூறினேன்."

இவ்விதம் கூறிய வருங்காலச் சித்தன் மேலும் எனக்குப் பல கருத்துகளைப் பகன்றான். சித்தனவனுரைதனை இந்த மாநிலத்தாரும் அறிதற்காய் இங்கு நான் விளக்கிக் கூறுகிறேன்:

" பெரும்போர்கள் விளையும் உன் நிகழ்காலத்தில் பிளவுகளை ஏற்படுத்தும் பல்வகைப் பேதங்களுண்டு. ஒற்றுமையாக இணைய விரும்பும் மானுடரை ஒன்றாக இணையவிடாது செய்யும் அநியாய பேதங்களைக் கூறுவேன் கேள். துண்டுபட்டிருக்கும்தேசங்கள், தூய்மையான இனம், மதம், மொழி, மதமென்ற குறுகிய ம்னப்பாங்குள்ள கோட்பாடுகள் .. இவை போன்ற பேதங்களெல்லாம் உனது நிகழ்கால உலகில் உள்ளன. அவை எல்லாம் அர்த்தமில்லாப் பிரிவினைகள். அவை யாவும் சாகும் எனது எதிர்கால உலகில். ஒன்றுபட்டு இவ்வுலகம் ஒற்றையாகும். ஒரு மொழி கொண்ட ஓரரசு பிறக்குமப்பா. அரசுகளெல்லாம் ஒழிந்து இவ்வுலகில் ஓரரசு உண்டாகும். அறத்தினை வலியுறுத்தும் ஒரு மதமே உலகெல்லாம் நிலவும். விரசங்களையும், விகற்பங்களையும் வ்ளர்க்குமொழிகள் எல்லாம் வீழ்ந்து ஒருமொழியே பொது மொழியாக இவ்வுலகில் இருக்கும் செந்தமிழ் மட்டுமல்ல, சிங்கள மொழியும் சாகும். இச்செகமெல்லாம் ஒரேயொரு மொழியே தலைதூக்கி நிற்கும். எந்த மொழி இவ்வுலகில் நிலவுமெனக் கேட்பீரானால் என் பதில் எண்ணிக்கை அதிகம் கொண்ட மொழியே அதிககாலம் நின்று நிலைக்கப் போகின்றது. அந்த மொழியே அரசாளும். எதிர்காலத்தில். உலகத்து மக்களெல்லாரும் தம்மை ஏற்றத்தாழ்வுகளற்ற மனித இனம் என்றே கருதுவர். தம்மை மதம், இனம், மொழி போன்ற வேறுபாடுகளைக் கொண்டு பிரித்துப் பார்க்கும் வழக்கம் எனது எதிர்கால உலகில் இல்லை. அரசர்கள் , ஏழைகள் , பணக்காரர்கள் போன்ற அத்தனை பேதங்களும் எதிர்கால உலகில் ஒழிந்து விடும். எம் தமிழர் இனம மட்டுமல்ல, பிற இனங்களும் சாகும். நாடெல்லாம் மனித இனமென்ற ஒன்று மட்டுமே தலை தூக்கும். எல்லோரும் மானுடர்கள். பிரிவினைகள் ஒழிதல் நன்றுதானே."

இவ்விதம் வருங்காலச் சித்தன் கூறினான். பின்னர் அவன் மேலும் கூறுவான்: "உன்னவரான நிகழ்காலச் செந்தமிழர் இவற்றைக் கேட்டால் , நீசனே! இவ்விதமாக இங்கு உரைக்காதே. செந்தமிழே உலகின் புகழ்மொழியாய், உலகத்தின் பொதுமொழியுமாகும் புதுமைதனைக் காண்பீர்கள் என்று கூறிடுவார்கள். எதிர்காலச் சித்தனான எனது உரையினை இகழ்ந்திடுவார்கள். இம்மியளவேணும் மானமில்லா மூர்க்கன் நிகழ்காலத்தில் மட்டுமிருந்திருந்தால் என்ன செய்வதென்றறிந்திருப்போம். அவன் நெஞ்சு பிளந்தெறிந்திருப்போம் என்றுமிகழ்ந்திடுவார்கள்"

இவ்விதம் கூறிய வருங்காலச் சித்தன் சிறிது நேர மெளனத்திற்குப் பின்னர் மேலும் கூறுவான்:" பிறப்பாலே நான் தாழ்வுரைக்க மாட்டேன். பிறப்பாலே என் மொழியே சிறந்ததெனச் சொல்லேன். பிறப்பென்றன் வசமோ? அது என் வசமில்லை. அது பிரமத்தின் வசமல்லவா? இந்நிலையில் எவ்விதம் நான் அவ்விதம் பிறப்பாலே பெருமையுற முடியும்? பீருவில் பிறந்திருந்தால் பீருமொழி பெருமையே. இத்தாலியில் பிறந்திருந்தால் இத்தாலி மொழி சிறப்பே. வெறி மிகுந்த உனது நிகழ்காலத்தவர் இதனை உணரமாட்டார். விழழுக்கே பெருங்கலகம் விளைவிக்கும் உன்னவர்கள் செய்வதென்ன? அறிவற்று துன்பங்களை அனைவருக்கும் விளைவிக்கின்றார்கள். ஐயய்யோ! இவரது மடைமையினை என்னவென்று கூறுவேன்?"

எதிர்காலச் சித்தனின் கூற்றிலுள்ள தர்க்கம் என்னைப் பிரமிக்க வைத்தது. புது யுகத்தின் குரலாக அவ்னது குரல் ஒலிப்பதாக எனக்குப் பட்டது. இவ்விதம் அவன் கூறியதன் பின்னர் நான் அவனைப் பார்த்து இவ்விதம் கேட்டேன்: " எதிர்காலச் சித்தா! உனது இனிய மொழி கேட்டேன். மதி கெட்டு எம்மவர்கள் வாழும் நிகழ்கால உலகிற்கு என்னுடன் நீ வந்து புதிய வாழ்வினையேற்றினாயென்றால் அவரது எண்ணங்கள் விரிவடையும். அதற்காகவாவது நீ நிகழ்காலம் வரவேண்டும். அதுவே எனது விருப்பம். அதுவே பிளவுகளால் முட்டி மோதிக்கொண்டிருக்கும் நம்மவர் ஒன்றுபட்டுச் சிந்திக்க உதவும்."

இவ்விதமாக நான் அவனை இறைஞ்சி நின்றேன். அதனைக் கண்ட எதிர்காலச் சித்தனின் செவ்விதழ்கள் மெதுவாகத் திறந்தன. அங்கே மென்முறுவலொன்று பிறந்ததைக் கண்டேன். அத்துடன் மீண்டும் அந்த வருங்காலச் சித்தன் என்னைப் பார்த்து கீழுள்ளவாறு கூறலானான்: "காலக் கடல் தாவி நீ இங்கு வந்திருக்கின்றாய். அதன் காரணமாக எது உண்மையான அறிவென்பதைக் கண்டாய். ஆனால் நிகழ்கால மயக்கத்தில் வாழும் உன் நிகழ்கால மானுடர் உண்மையான ஞானத்தினை, அறிவினைக் காண்பாரோ? காணார்களப்பா! காலத்தைத் தாண்டி காசினிக்கு நான் வந்தால் கட்டாயம் என்னை அவர்கள் ஏற்றி மிதித்திடுவார்கள். பகுத்தறிவுக்காகக் குரல்கொடுத்த சோக்கிரதரையே அன்று ஆலத்தைத் தந்து கொன்றவர்கள் உனது மானுடச் சோதரர்களன்றோ? ஆதலினால் நிகழ்கால மானுடனே! அங்கு நான் வரேன். நீ மீண்டும் அங்கு செல்வாயாக"

இவ்விதம் கூறிய வருங்காலச் சித்தனின்பால் என்னிடத்தில் அன்பு ஊற்றெடுத்தது. அந்த அன்பு மீதுறவே அவனது கமலம் போன்ற பாதங்களைத் தொட்டுக் கண்களிலொற்றி விடைபெற்றேன். அவன் மட்டும் என் நிகழ்காலத்திற்கு வருவானென்றால் எவ்விதம் நன்றாகவிருக்கும். அறிவுக் கடலான அவனால் , ஞானசூன்யங்களாக விளங்கும் நம்மவர்கள் எவ்வளவு பயன்களைப் பெறமுடியும். அறியாமையிலிருக்கும் நம்மவர் அவனுரையினை அறிவதற்குரிய பக்குவமற்றுத்தானே இன்னும் இருக்கிறார்கள். ஆயிரக்கணக்கன வருடங்களுக்கு முன்னர் விடத்தைக் கொடுத்து சோக்கிரதரைக் கொன்றார்களே அன்றைய ஆட்சியாளர்கள். எதற்கு. இன்றும் அதுதானே நடக்கிறது. இந்நிலையில் அவன் வர மறுத்ததிலும் ஒரு நியாயம் இருக்கத்தான் செய்கிறது."

அச்சமயம் .... என்ன ஆச்சரியம்! காலத்திரை நீங்கிற்று.

பாதகர்களின் முழு மடைமைப் போர்களால் சூழந்துள்ள இந்தப் பாருக்கு, பூமிக்கு, நிகழ்காலத்துக்கு நான் மீண்டும் வந்தேன். வந்தவன் எங்கும் தீதுகளே நடம்புரியும் நிலை கண்டேன்; திடுக்கிட்டேன். பிளவுகளற்ற , மானுடர்களென்றரீதியில் இணைந்து, வாழும் எதிர்காலச் சித்தனுலகம் பற்றி ஒரு கணம் எண்ணிப் பார்த்தேன். மடைமையில் மூழ்கிக் கிடக்கும் இந்த நிகழ்கால உலகமெங்கே! அவனது உலகமெங்கே!

என்றிவர்கள் உணமை காண்பாரோ?


ngiri2704@rogers.com
மூலம்: எதிர்காலச் சித்தன் பாடல்! - அ.ந.கந்தசாமி
http://www.geotamil.com/pathivukal/poems_ank.html#ethirkalam