Wednesday, August 08, 2007

சிறுகதை: சொந்தக்காரன்! - வ.ந.கிரிதரன்


கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலங்களாக விடாமல் உறை பனி (snow) மழை பொழிந்து கொண்டிருந்தது. வீதிகளெல்லாம் உறை பனி படிந்து, படர்ந்து ..போதாதற்குக் குளிர் வேறு. சோமசுந்தரம் மணியைப் பார்த்தார். இரவு மணி பத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. அவரிற்கு இந்தக் குளிரிலை, கொட்டுகின்ற உறை பனி மழையில் நனைந்தபடி வேலைக்குச் செல்லவே விருப்பமில்லாமலிருந்தது. ஊரங்கிக் கிடக்கும் இந்தச் சமயத்தில் சாமத்துக் கோழியாக அலைய வேண்டியிருக்கிறதே என்று நொந்து கொள்ளத்தான் முடிந்தது. ஊரிலை அவர் ஒரு பௌதிக ஆசிரியர். அவரிடம் பயின்ற எத்தனை மாணவர்கள் 'டாக்டர்கள்', 'எஞ்சினியர்கள்' என்று வந்திருக்கின்றார்கள்..ஆனால் ..இங்கோ அவரோ ஏழு நாட்களும் வேலை செய்து கனடாவின் பொருளாதாரத்தினைக் கட்டியெழுப்பும் நல்லதொரு 'இமிகிரண்ட்'. வார நாட்களில் தொழிலாளி; வார இறுதி நாட்களில் தொழிலாளியைக் கண்காணிக்கும், முதலாளிக்கு ஏவல் புரியும் ஒரு கடமை தவறாத பாதுகாவலன். சற்று முன்னர் அவரது மேலதிகாரி ஜோ குறோபட் தொலைபேசியில் கூறியது நினைவிற்கு வந்தது.

"சாம். இன்று உனக்கு நகர மண்டபப் பாதாள வாகன தரிப்பிடத்தில் தான் வேலை ( City hall Under ground parking lot).கடந்த ஒரு வாரமாக நிறைய முறைப்பாடுகள் ...பல வாகனங்களிலிருந்து பொருட்கள் பல களவாடப் பட்டிருக்கின்றன... பல 'வீதி மக்கள்' இரவு நேரங்களில் அங்கு படுத்துறங்குவதாகப் பலர் முறைப்பாடுகள் செய்திருக்கின்றார்கள்... எனக்கு உன்னில் நிறைய நம்பிக்கையுண்டு. கடமை தவறாத கண்டிப்பான பாதுகாவலன் நீ...யாரும் அங்கு அத்துமீறிப் பிரவேசிக்காதபடி பார்த்துக் கொள்ள வேண்டியது உனது பொறுப்பு.."

'இந்தப் உறை பனிக்குளிரிற்குள் இந்தப் 'பார்கிங் லொட்டில்' போய் வேலை செய்யச் சொல்லுகிறானே'டென்று ஜோவின் மேல் எரிச்சல் கூடத் தோன்றியது. வழக்கமாக அவர் வேலை பார்ப்பது வாசனைத் திரவியங்கள் செய்யும் தொழிற்சாலையொன்றில் தான். சுகமான வேலை. 'ரிஷப்ஷ'னில் அமர்ந்திருந்து , தொலைபேசி அழைப்புகளிற்கு பதிலிறுப்பது, மணித்தியாலத்திற்கொருமுறை தொழிற்சாலையை, தொழிலாளர்களை ஒருமுறை சுற்றிப் பார்ப்பது....கட்டடத்திற்குள்ளேயே அதன் கணகணப்பில் சுகமாகக் காய்ந்து கொண்டிருக்கலாம். 'என்ன செய்வது ஆட வெளிக்கிட்டாச்சு. ஆடத்தானே வேண்டும்'

வார இறுதி நாட்களிலாவது ஓய்வெடுக்கலாமென்று பார்த்தால் ..முடிகிறதா? அவரது தர்மபத்தினி அகிலாண்டேஸ்வரி குழந்தைகளை அணைத்தபடி ஆனந்தமாகத் தூங்கிக் கொண்டிருந்தாள். அவளைப் பார்க்கப் பார்க்கப் பொறாமையாகவிருந்தது. அவள் கனடா வந்ததிலிருந்து, கடந்த பத்து வருடங்களாக அவர் அவளை வேலைக்குப் போவென்று வாய்திறந்து கூறியது கூடவில்லை. குழந்தைகளைப் பார்க்கிறாளே, வீட்டைக் கவனிக்கிறாளே... பாவமென்று அவள் மேல் பரிதாபம்தான் கொண்டிருந்தார். ஆனால் அவளென்னடாவென்றால்..."நீங்களும்தான் கனடா வந்து இத்தனை வருடமாச்சு..என்னத்தைச் சேர்த்து வைத்தீர்கள்...ஆளிற்காள் வீடு வாசலென்று இருக்கிறார்கள்...நீங்களோ..'வீடு' 'வீடு' என்று உங்கடை வீட்டாருக்கே எல்லாம் செய்து போட்டீங்கள்...என்னைத்தைக் கண்டனீங்கள்....உங்கடை வீட்டாரே இப்ப உங்களை மதிக்கினமா..." அகிலாண்டேஸ்வரி வாயைத் திறந்தால் அவ்வளவுதான்..அவளது தொணதொணப்பை அவரால் தாங்கவே முடியாது. "இஞ்சேரும்..சும்மா வாயைத் தொணதொணகாதேயும்..நீர் இங்கை வந்து இவ்வளவு வருஷமாய் உமக்கு நான் என்ன குறை வைத்தனான்.."என்று இவர் பதிலிற்குக் கேட்டு வைத்தாலோ ..அவ்வளவுதான்."என்னத்தைச் செய்து கிழித்தனீங்கள்...நீங்களில்லையென்றால் நான் 'வெல்வெயர்' எடுத்துச் சுகமாகவாவது இருந்திருப்பேனே...." என்று அவள் இளக்காரமாகப் பதிலிறுப்பதைத்தான் இவரால் தாங்கவே முடிவதில்லை. ஊரில் பாடசாலையொன்றில் உயர்தர வகுப்பிற்கான பௌதிக ஆசிரியராகவிருந்த அவர், இந்த வயதில் நாற்பது மணித்தியாலங்கள் முதுகு முறிய, முறியவென்று ஒரு தொழிற்சாலையில் வேலை செய்து உழைத்துக் கொண்டு வாடுகின்ற அவரது உழைப்பை எவ்வளவு துச்சமாக அவள் மதித்து வைத்திருக்கின்றாள். அதைத் தான் அவரால் தாங்க முடிவதில்லை. பொங்கிவரும் ஆத்திரத்தை வெகுவாகச் சிரமப்பட்டு அவர் அடக்கிக் கொள்வார். அப்பொழுதெல்லாம் எங்காவது கண்காணாத இடத்திற்கு ஓடிப்போய் விடலாமாவாவென்றிருக்கும். குழந்தைகளின் மேல் அவர் வைத்திருக்கின்ற பாசம் அவரைக் கட்டிப் போட்டு விடும். அவளது 'தொணதொண'ப்பிலிருந்து தப்புவதற்காகவே அவராகத் தேடிக்கொண்ட வார இறுதி வேலைதான் இந்தப் 'பாதுகாவலர்' உத்தியோகம்.

"அப்ப நான் போயிட்டு வாறன். கதவை உள்ளுக்குள்ளாலை பூட்டி வையும். என்ன.."என்று மனைவிக்குக் குரல் கொடுத்து விட்டு வெளியில் வந்த பொழுதுதான் சூழலின் யதார்த்தம் அவரிற்கு உறைத்தது. வீதியெல்லாம் மலை போல் உறை பனி குவிந்து கிடந்தது. வாகன நடமாட்டம், ஆள் நடமாட்டமின்றி உறை பனி பொழிந்து கொண்டிருக்கும் அந்த இரவு ஒரு வித மோனத்தில் ஆழ்ந்திருந்தது. ஒரு மாதிரி 'பஸ்' பிடித்து, பாதாள ரயிலேறி வேலைக்கு நேரத்திற்கு வந்து சேர்ந்து விட்டார். கடமை தவறாத பாதுகாவலனல்லவா அவர். மற்றவரென்றால் காலநிலையினைச் சாட்டாக வைத்து ஆறுதலாக ஆடிப் பாடி வருவார்கள். இதனால் தான் ஜோ அவரை அனுப்பி வைத்திருந்தான். சோமசுந்தரத்தை நம்பி அனுப்பலாம் என்று அவனிற்குத் தெரியும்.

தமக்குரிய 'பூத்'தில் 'காஷியர்கள் தங்களது வேலையினை ஆரம்பித்து விட்டார்கள். அவர்களிற்கு முகமன் கூறிவிட்டுத் தன் அறையினுள் நுழைந்தார் சோமசுந்தரம். இரவு 'பார்க்கிங் லொட்'டினைத் துப்புரவு செய்யும் தொழிலாளியான போலந்து நாட்டுக் கிழவன் இவரிற்கு முகமன் கூறினான்.சோமசுந்தரம் இதற்கு முன்னரும் சில தடவைகள் இங்கு தற்காலிகமாக வேலை செய்திருக்கின்றார். அதனால் போலந்து நாட்டுக் கிழவனை அவரிற்குத் தெரியும். வாயில் நுழைய முடியாத நீண்டதொரு பெயர்.நல்லவன். இரண்டாம் உலக மகா யுத்தத்தில் இராணுவத்தில் கடமையாற்றியவன்.அவனது புதல்வர்களிருவரும் நகரில் 'வான்கூவரில்' மருத்துவர்களாகக் கடமை புரிகின்றார்கள். போர்க் காலக் கதைகள் பலவற்றினை அவன் கூறுவான். ஒருமுறை தரைக் கண்ணி வெடியில் சிக்கிப் பல நாட்கள் அவன் அவஸ்த்தைப் பட்டிருந்திருக்கின்றான். நிலத்திற்குக் கீழுள்ள நான்கு தளங்களையும் கூட்டித் துப்புரவு செய்வது தான் அவனது பிரதான கடமை. அவனுடன் கதைத்த படியே சோமசுந்தரத்தின் பொழுது போகும். கிழவனிற்கும் தனிமையில் கிடைத்த துணையாக இவர் விளங்கினார். அத்துடன் அவ்வப்போது யாராவது அத்து மீறி நுழைந்தால் சோமசுந்தரத்திற்குத் தகவல் தந்தும் அவன் உதவி புரிவான்.

"ஏ! நண்பனே! யாராவது எங்காவது படுத்திருப்பதைப் பார்த்தால் தகவல் தர மறந்திடாதே என்ன?" என்று அவனிற்கு ஒருமுறை நினைவூட்டி விட்டுத் தன் வேலையினைத் தொடர்ந்தார் சோமசுந்தரம். ஜோ வேலை தொடங்கியது அழைக்கக் கூறியிருந்தது நினவிற்கு வந்தது. அழைத்தார். ஜோ பெரிதும் மகிழ்ந்து போனான்."சாம்! கூடிய விரைவில் உனக்குச் சம்பள உயர்வு பெற்றுத்தர முயல்கின்றேன்." என்று உறுதியளித்தான். இவ்விதம் பல உறுதிகளை அவர் ஏற்கனவே ஜோவிடமிருந்து அவர் கேட்டிருக்கின்றார்.

ஒரு மாதிரி பாதி நேரத்தினைத் தாண்டியாகி விட்டது. ஒரு குறிப்பிடத்தக்க சம்பவங்களும் நடக்கவில்லை. மணிக்கொருமுறை நான்கு பாதாளத் தளங்களையும் சுற்றிப் பார்ப்பதும், இருபத்து நான்கு மணிநேர தமிழ் வானொலியில் நிகழ்சிகளைச் செவி மடுப்பதுமாகப் பொழுது போய்க் கொண்டிருந்தது. வெளியில் உறைபனி மழை இன்னும் பொழிந்து கொண்டேயிருந்தது. உறைபனி படர்ந்து கிடக்கும் வீதிகளைத் துப்புரவு செய்வதற்காகன கனரக வாகனங்கள் தங்கள் வேலையினைச் செய்யத் தொடங்கிவிட்டிருந்தன. முதியவர்களிர்கான நிகழ்ச்சியொன்றின் மறு ஒலிபரப்பு வானொலியில் சென்று கொண்டிருந்தது. ஒரு வயதான பெண்மணி தனக்கு மிகவும் பிடித்தமான ஆசிரியர் ஒருவரிற்காக ஒரு பாடலைக் கேட்க விரும்பினார். அதற்காக அவர் கேட்க விரும்பிய பாடல்: "எங்கிருந்தாலும் வாழ்க.." அதற்கு அந்நிகழ்ச்சியினை நடாத்திக் கொண்டிருந்த அறிவிப்பாளர் "அம்மா! அந்தப் பாட்டின் முதல் வரி தவிர அதன் அர்த்தமே வேறாச்சே" என்று கூற பதிலிற்கு அந்த அம்மா "அதையே போடுங்கோவென். அந்தப் புண்ணியவான் எங்கிருந்தாலும் வாழ்க.."என்று மிகவும் அப்பாவித்தனமாகக் கூறியதைக் கேட்ட பொழுது சோமசுந்தரத்திற்குச் சிரிப்பாகவிருந்தது. 'வயது ஏற ஏற முதியவர்கள் குழந்தைகளாகித் தான் விடுகின்றார்கள்' என்று தனக்குள் ஒருமுறை நினைத்துக் கொள்ளவும் செய்தார்.

நேரம் மூன்றை நெருங்கிக் கொண்டிருந்தது. போலந்துக் கிழவன் ஓடி வந்தான்.

"என்ன விசயம்.... இப்படி ஓடி வருகிறாய்.."

கிழவன் ஓடி வந்ததில் சிறிது களைத்துப் போயிருந்தான். நின்று சிறிது நிதானித்தான்.

"நான்காவது தளத்திலை ஒருவன் படுத்திருப்பதைப் பார்த்தேன். என்னுடன் வந்தாயென்றால் காட்டுகிறேன்" என்றான். வானொலியினை நிறுத்தி விட்டு சோமசுந்தரம் அவனுடன் நான்காவது தளத்திற்குச் சாய்தளப் பாதை வழியாகக் கீழிறங்கினார். கிழக்கு மூலை வாசலிற்கண்மையில் அவன் படுத்திருந்தான். ஐம்பதை எட்டிய தோற்றம். கந்தல் உடை. அருகில் நெருங்கிய பொழுது 'வைன்' வாசனையுடன் கூடிய பல நாட்கள் குளிக்காத உடம்பு வாசனை, துவைக்காத அழுக்கான கந்தல் வாசனை என்பனவும் மூக்கைத் துளைத்தன.

அவன் ஒரு பூர்வீக இந்தியன். படுத்திருந்த அந்தப் பூர்வீக இந்தியனிற்கு சோமசுந்தரம் வருவது தெரிந்து தானிருந்தது. தெரியாதது போல் படுத்திருந்தான். இவரைப் போல் எததனையோ பாதுகாவலர்களை அவன் பார்த்திருப்பான் போலும். இதற்கிடையில் அவன் எழும்பாமலிருப்பதைக் கண்ட போலந்துக் கிழவன் அவன் தோள்களை உசுப்பி எழுப்பி விட்டான். ஏதோ முணுமுணுத்தபடி அந்தப் பூர்வீக இந்தியன் எழும்பினான். தூக்கத்தினைக் கெடுத்து விட்ட கோபம் முகத்தில் தெரிய அவன் இவர்களைப் பார்த்தான்.

"மகாராஜாவிற்கு வருகின்ற கோபத்தைப் பார்" என்று போலந்துக் கிழவன் கிண்டல் வேறு செய்தான். சோமசுந்தரத்திற்கு வெளியில் கொட்டிக் கொண்டிந்த உறை பனி மழை ஞாபகத்திற்கு வந்தது. பூர்வீக இந்தியன் மேல் சிறிது பரிதாபம் கூட வந்தது. இதற்கிடையில் போலந்துக் கிழவன் "இவர்களால் தான் சரியான தொந்தரவு. படுத்திருப்பார்கள். யாருமில்லையென்றால் வாகனங்களை உடைத்துத் திருடி விடுவார்கள்" என்றான். அவனது மேலதிகாரி ஜோ அவனிடம் யாரையும் அத்து மீறிப் பிரவேசித்து விடாதபடி பணித்திருந்ததும் நினவிற்கு வந்தது. இந்தப் பூர்வீக இந்தியனைப் பார்த்தால் அப்படியொன்றும் திருடுபவனாகத் தெரியவில்லை. இன்னும் சில மணித்தியாலங்களில் அவரது வேலை முடிந்து விடும். பொழுதும் புலர்ந்தும் விடும். ஆனால் அது மட்டும் இவனைத் தங்க அனுமதிக்க அவரிற்கு அனுமதியில்லை. போதாதற்கு இந்தப் போலந்துக் கிழவன் வேறு அருகில் நிற்கிறான். இவனிற்கு இந்தப் பூர்வீக இந்தியர்கள் மேல் அவ்வளவாக நல்ல அபிப்பிராயம் கிடையாது. குடிப்பதும் திருடுவதும் தான் இவர்களது வாழ்க்கை என்று கருதுபவன். வைத்தி வைத்து விடுவான். சோமசுந்தரம் இக்கட்டான நிலையிலிருந்தார். என்ன செய்யலாமென்று சிந்தித்துப் பார்த்தார். முதலில் போலந்துக் கிழவனை அங்கிருந்து அனுப்பினால் நல்லதென்று பட்டது. அவனிற்கு நன்றித் தான் இவனைக் கவனிப்பதாகக் கூறி அனுப்பி வைத்தார்.கிழவனிற்கு நகர விருப்பமேயில்லை. 'விடுப்பு' பார்ப்பதென்றால் யாரிற்குத் தான் ஆசையில்லை.

போலந்துக் கிழவன் சற்று அப்பால் நகர்ந்ததும் அந்தப் பூர்வீக இந்தியன் மீண்டும் படுப்பதற்கு ஆயத்தமானான். சோமசுந்தரம் சிறிது கண்டிப்பை முகத்தில் வைத்துக் கொண்டார்.

"எதற்காக இங்கு வந்து படுத்திருக்கிறாய். இங்கு படுக்க உனக்கு அனுமதியில்லையென்பது உனக்குத் தெரியுமல்லவா. விடுதிகளிலேதாவதொன்றில் போய்ப் படுப்பது தானே " என்றார்.

"எல்லா விடுதிகளும் நிறைந்து விட்டன. இன்னும் சிறிது நேரம் படுக்க அனுமதியளித்தால் போதும். நான் ஒரு பிரச்னையும் உனக்குத் தர மாட்டேன்" என்று அவன் பதிலிறுத்தான். சோமசுந்தரத்திற்கு அவனை இந்த வகையான காலநிலையில் வெளியேற்றுவதும் நல்லதாகப் படவில்லை. ஆனால் அவரது உத்தியோகத்தில் இவற்றையெல்லாம் பார்க்க முடியாது. கண்டிப்பான, கடமை தவறாத அதிகாரி அவர்.

"பூமிப் பந்தின் இன்னுமொரு கோடியிலிருந்து நான், சொந்த மண்ணை விட்டுத் துரத்தப் பட்டு அகதியாக ஓடி வந்திருக்கின்றேன். நீயோ சொந்த மண்ணிலேயே அதனையிழந்த இந்த மண்ணின் சொந்தக்காரன்". சோமசுந்தரத்திற்கு உண்மையில் அந்தப் பூர்வீக இந்தியன் மேல் ஒருவித தோழமை கலந்த உணர்வு தோன்றியது.

"நானோ அன்னிய நாட்டிலொரு அகதி. இவனோ சொந்த நாட்டிலேயே அகதியாகிப் போனவன்."

ஒரு காலத்தில் இவனது இனத்தவர்கள் அமெரிக்கக் கண்டத்தில் கொடி கட்டிப் பறந்தவர்கள். இயற்கையினைப் பேணுவதில் அன்றே பெரிதும் ஆர்வம் காட்டியவர்கள். இவர்கள் சடங்குகள், தத்துவங்களெல்லாம் இயற்கைச் செல்வத்தைப் பேணுவதை முக்கிய நோக்காகக் கொண்டவை.

சோமசுந்தரம் கடமை தவறாத, கண்டிப்பான, நிறுவனத்திற்குப் பெயர் வாங்கித் தரும் பாதுகாவல் அதிகாரிதான். ஆனால் சோமசுந்தரம் மனிதாபிமானத்தை இழந்த பாதுகாவலனல்லவே.

"நான் உன் வார்த்தைகளை நம்புகின்றேன். ஆனால் விடிந்ததும் போய் விட வேண்டும்" என்று கூறி விட்டுத் திரும்பி நடந்தார் சோமசுந்தரம். முதலாவது தளத்தினைத் துப்புரவு செய்து கொண்டிருந்த போலந்துக் கிழவன் சோமசுந்தரத்தைக் கண்டதும் கேட்டான்: " என்ன அவனைத் துரத்தி விட்டாயா?".

"ஒரு மாதிரி அவனைத் துரத்தி விட்டேன். துரத்துவதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது" என்று பதிலிறுத்தார் சோமசுந்தரம்.

"இந்தக் கொட்டும் உறை பனி மழையிக்குள் அவன் எங்கு போவானோ? பாவம்" என்று இரக்கப் பட்டான் போலந்துக் கிழவன். "பாவம் புண்ணியம் பார்த்தால் இந்த வேலை செய்ய முடியாதே" என்றவாறு சோமசுந்தரம் கடமையில் மூழ்கியவாறு மேலே நடந்தார்.

- நன்றி 'கணையாழி' (கணையாழி டிசம்பர் 2000 'கனடா சிறப்பிதழிலிருந்து..-), பதிவுகள், திண்ணை.

No comments: