Wednesday, August 08, 2007

சிறுகதை: தேவதரிசனம்! - வ.ந.கிரிதரன் -

கண்ணுக்கெட்டியதூரம் வரையில் விரிந்து பரந்திருந்தது இரவு வான். அந்த இரவின் கருமையினைக் கிழித்துக் கொண்டு முழுநிலா. அடிவானில் தெரிந்த வட்டநிலா உண்மையில் நகரின் இன்னுமொரு தெருவிளக்காகத் தொலைவில் தெரிந்தது. அருகில் கட்டிலில் குழந்தையை அணைத்தபடி தூங்கிக் கிடந்த மனைவியின்மேல் ஒருகணம் பார்வை பதிந்து மீண்டது. மீண்டும் ஜன்னலினூடு விரிந்து கிடக்கும் இரவு வான் மீது கவனம் குவிந்தது. வழக்கம் போல் தத்துவ விசாரம். அர்த்தமேதுமுண்டா? வாழ்க்கையின் நிலையாமையினை உணர்ந்த சித்தார்த்தன் துறந்து சென்றான். துறத்தல்தான் கேள்விக்குரிய பதிலா? அப்பொழுதுதான் அந்த அதிசயம் என் கண் முன்னால் நிகழ்ந்தது. எனக்கு வியப்பை ஏற்படுத்தும் வகையில் என்னருகில் இன்னுமொரு மனித உருவமிருப்பதை அப்பொழுதுதான் அவதானித்தேன். வியப்புடன் ஒருவித திகிலும் கலந்ததொரு உணர்வு மேலிட வினவினேன்:

"யார் நீ? எப்பொழுது இங்கு வந்தாய்?"

"நான்?" இவ்விதம் கேட்டுவிட்டு ஒரு கணம் அந்த அந்நியன் சிரித்தான். தொடர்ந்தான்: "விபரிப்பதற்கு அதுவொன்றும் அவ்வளவு சுலபமல்ல நண்பனே! உனக்குப் பொறுமையிருந்தால் சிறிது விளக்குவேன்."

நான் அந்தப் புதியவனை மெளனமாக எதிர்நோக்கி நின்றேன். அவன் தொடர்ந்தான்.

"என் கால்களைப் பார்க்கிறாயா?" இவ்விதம் கூறியவன் தனது ஆடைகளைச் சிறிது உயர்த்தினான். எனக்கு ஆச்சரியமாகவிருந்தது. அங்கு பாதங்கள் நிலத்தைத் தொடாமல் அந்தரத்தில் மிதந்ததை அவதானித்ததின் வியப்பின் விளைவே எனது ஆச்சரியத்துக்குக் காரணம்.

வந்தவன் தொடர்ந்தான்" "இப்பொழுது என் கண்களைச் சிறிது நேரம் பார்." பார்த்தேன். ஏற்பட்ட வியப்பு தொடர்ந்தது. அங்கு அசைவற்ற கண்களைக் கண்டேன்.

வந்தவன் மேலும் தொடர்ந்தான்: "இப்பொழுது உண்மை புரிந்ததா?"

நான் சிறிது தடுமாறினேன்: "அப்படியென்றால் நீ.. நீங்கள் தேவர்களில் ஒருவரா?"

அவன்: "பரவாயில்லை! நீ தேவனென்றே கூறலாம். அப்படித்தான் உன்னவர்கள் என்னைக் கூறுகின்றார்கள். ஆனால் அவர்கள என்னை அறிந்தது பூரணமற்றது. கட்டுக் கதைகளால் இட்டு நிரப்பி விட்டார்கள். அறியாததனாலேற்பட்ட விளைவு. உனக்கு உண்மை பகர்வேன். நீ அதிசயித்துப் போவாய். புரிந்து கொள்வாய். அதற்காகவே நான் இங்கு வந்துள்ளேன். மேலும் நீ காணும் இந்த உருவம் கூட எனது உண்மையான உருவமல்ல. நான் உன்னுலகுனுள் அடியெடுத்து வைக்கும் சமயங்களிலெல்லாம் இது போன்றுதான் வருவது வழக்கம். சில சமயங்களில் நான் ஆணாகவும் வருவேன். வேறு சில சமயங்களில் நான் பெண்ணாகவும் வருவேன். இன்னுமோர் சமயம் நான் ஆணும் பெண்ணும் கலந்த உருவுமெடுப்பேன்."

அவனே தொடர்ந்தான்: "உண்மையில் உன்னால் ஒருபோதுமே ஒரு நிலைக்குமேல் என்னை அறியவே முடியாது. இருக்கும் உன் அறிவின் துணையுடன் ஓரளவு புரிய மட்டும் தான் முடியும்."

"எனக்கு ஒன்றுமே புரியவில்லையே.." எனக்குச் சிறிது குழப்பமாகவிருந்தது.

"உனக்கு உண்மையில் புரிந்தால் மேலும் குழம்பி விடுவாய்."

"குழப்பமா?"

"ஆம்! கூறுகிறேன் கவனமாகக் கேள்."

சிறிது நேரம் இருவருக்குமிடையில் மெளனம் நிலவியது.

அவனே தொடர்ந்தான்: " நண்பனே! நீ வாழ்ந்து கொண்டிருக்கின்றாயே. இந்த வெளி. கழித்துக் கொண்டிருக்கின்றாயே இந்த நேரம். உண்மையில் இந்தப் பரிமாணங்களுக்குள் சிக்கிக் கிடக்கும் உன்னால் எவ்விதம் உண்மையினை அறிதல் சாத்தியம். உண்மையில் இன்னுமொன்றினையும் அறிந்தால் .."

"அறிந்தால்..."

"உண்மையில் இந்தப் பிரபஞ்சம். நீ காணும் இந்தப் பிரபஞ்சம். நான் என் ஓய்வு நேரத்தில் உருவாக்கியதொரு விளையாட்டு. உன்னைப் போல் தான் நானும் என் இருப்பினைப் பற்றிய விசாரங்களுக்குள் சிக்கிக் கிடந்த வேளை விடை புரியாமல் தவித்த போது ஏற்பட்ட வெறுப்பின் விளைவாக என் முழு அதிகாரத்தின் கீழுள்ளதொரு உலகினைப் படைக்க விரும்பினேன். அதன்பொருட்டு நான் உருவாக்கிய விளையாட்டே நீ காணும் இந்தப் பூவுலகு; அண்டசாரசரங்கள்..எல்லாம். புரிந்ததா?"

"புரியவில்லையே நண்பனே?"

"நீ பரிமாணங்களுக்குள் சிக்கிக் கிடக்கின்றாய். அவற்றைக் கடந்தவன் நான். உனது பரிமாணங்களுக்குள் நீ கணினி விளையாட்டுக்களை உருவாக்கி விளையாடுவதைப் போல் நான் என் பரிமாணங்களுக்குள்ளிருந்து உருவாக்கிய விளையாட்டுத்தான் நீ வாழும், நீ காணும், நீ உணருமிந்த உலகு. உன்னவரைப் பொறுத்த அளவில் நான் தேவன். கடவுள். எது எப்படியோ... உன் பரிமாணங்களை மீறியவன் நான். ஆயின் எனக்கும் சில எல்லைகள் உண்டு. உன்னைப் போல் தான் என் பரிமாணங்களுக்கும் அப்பால் என்ன இருக்கிறது என்பதைப் பொறுத்த வரையில் எனக்கும் ஒன்றுமே தெரியாது. அதற்காகவே என் இருப்பும் கழிந்து கொண்டிருக்கிறது. உன்னைப் போன்ற முப்பரிமாணப் பிரபஞ்சத்தின் எந்த மூலைக்குள்ளும் என்னால் உடனடியாக உன்னையொத்த வடிவினை எடுத்து மிக இலகுவாக உட்சென்று பங்கு பற்ற முடியும். உண்மையில் உன்னுடன் இங்கு உரையாடிக் கொண்டிருப்பபதைப் போன்றதொரு தோற்றமே ஒருவித ஏமாற்றுத்தான். நான் உருவாக்கிய இந்த விளையாட்டுக்குள் செல்வதற்காக நான் உருவாக்கியதொரு பொய்யான தோற்றந்தான் இது. உண்மையில் நான் உன்னைப் பொறுத்தவரையில் உருவமற்றவன் எல்லா உருவங்களையும் எந்நேரத்திலும் எடுக்கக் கூடியவன். பரிமாணங்களை மீறியவன். சகலவிதமான பரிமாணங்களுக்குள்ளும் புகுந்து விளையாடக் கூடியவன். இருந்தும் நானும் ஒரு குறிப்பிட்ட பரிமாணங்களை எல்லையாகக் கொண்டவன் தான். உனக்கும் எனக்குமிடையிலான வித்தியாசம்... நீ என்னை விடக் குறைந்த அளவிலான பரிமாணங்களுக்குள் வாழுமோர் ஐந்து அவ்வளவே. வெளியையும் காலத்தையும் உன்னால் என்றுமே மீற முடியாது. ஆனால் அதற்காக உனது பரிமாணங்களுக்கப்பாலெதுவுமில்லையென்று ஆகி விடமாட்டாது. நீ நான் உருவாக்கியதொரு விளையாட்டின் அங்கம் தான். ஆயினும் உன்னைப் பொறுத்த வரையில் இயலுமானவரையில் இருக்கும் சூழல்களுக்கேற்றபடி நீ ஓரளவுக்காகவாது சுயமாக இயங்கும்படி நான் உன்னை, இந்த உலகை, இங்குள்ள அனைத்து உயிர்களையுமே உருவாக்கியுள்ளேன். இந்த எனது விளையாட்டில் காணப்படும் அனைத்துமே சூழலுக்கு ஈடு கொடுத்து தங்களைத் தாங்களே அறிதற்கு, புடமிடுதற்கு முடியும். அதற்கு ஏற்றவகையில் நான் எழுதிய , வடிவமைத்த விளையாட்டு இருப்பதை நீ இங்கு காணும் உயிர்கள் அனைத்தினதும் அடிபப்டை இயல்புகளிலிருந்து இலேசாகப் புரிந்து கொள்ள முடியும்.. ஆனால் முற்றாக அறிந்து கொள்ளல் சாத்தியமற்றது. அந்த வகையில் நீ உருவாக்கும் கம்யூட்டர் வீடியோ விளையாட்டுக்களை விட எனது இந்த விளையாட்டு அதி அறிவியல் நுட்பம் கொண்டது. இந்தப் பிரபஞ்சத்தில் நான் எழுதிய விளையாட்டில் பல இன்னும் தீர்க்கப்படாத குறைகள் உள்ளன. நீ எழுதும் கணினி ஆணைத்தொடர்களில் காணப்படும் வழுக்கள் போன்றவைதான் அவையும். குறைகளற்ற 'புறோகிறாம்'கள் ஏதேனும் உண்டா. ஆனால் உன்னைப் போல் நான் எனது இந்த விளையாட்டின் பிரச்சினைகளில் தலையிட்டுத் திருத்துவதில்லை. உன்னைப் போல் புதிய புதிய பதிப்புக்களை வெளியிடுவதில்லை. எனது படைப்புக்களான உங்களிடமே அதற்குரிய ஆற்றலையும் கூடவே சேர்த்தே படைத்துள்ளேன். நீ சுயமாக இயங்கும் இயந்திர மனிதர்களை, 'ரோபோட்'டுக்களைப் படைப்பதை ஒத்ததிது. உனது அறியும் ஆற்றல் எனது முக்கியமான அம்சங்களிலொன்று. அதனை நீ எவ்விதம் பாவிக்கின்றாயென்பதில் தான் உனது பிரபஞ்சத்தில் காணப்படும் சகல பிரச்சினைகளுக்கும் உரிய வழிவகைகள் உள்ளன."

இவ்விதம் கூறிய எனது படைப்புக்குக் காரணகர்த்தா மேலும் கூறினான்: "இப்பொழுது சிறிது நேரம் என்னுடன் பயணிக்க உனக்கு விருப்பமா? விரும்பினால் இன்னும் சிறிது உண்மையினை உனக்குக் காட்ட என்னால் முடியும்."

எனக்கு இடையிலொரு சந்தேகம் எழுந்தது. கேட்டேன்: "உன் படைப்பிலொரு அற்பப் புழுவான என்மேல் ஏனிவ்விதம் பரிவு காட்டுகின்றாய்? ஆர்வம் கொள்கிறாய்?"

அதற்கு அவன் சிரித்தான்: "யார் சொன்னது உன்மேல் மட்டும் தான் இவ்விதம் ஆர்வம் காட்டுகின்றேனென்று. இது போல் உன்னவர் பலபேரிடம் அவ்வப்போது நான் இரக்கம் கொண்டு காட்சியளிப்பதுண்டு. அறிதலுக்கு உதவுவதுண்டு. பொதுவாக என் அறிவின் குழந்தைகளான உங்களில் எவரெவர் சிந்திக்கும் ஆற்றலைப் பாவித்துச் சூழலை மீறிச் சிந்திக்க விளைகின்றார்களோ அவர்களிடத்தில் எனக்கு மிகுந்த பாசம் உண்டாவதை என்னால் ஒருபோதுமே தவிர்க்க முடிவதில்லை. அவர்களுக்கு உதவுவது எனக்கு மிகவும் உவப்பானதொரு பொழுதுபோக்கு. எனது படைப்புகளின் திறமை கண்டு நானே அத்தகைய சமயங்களில் பிரமிப்பதுண்டு. நான் உருவாக்கிய விளையாட்டின் அடிப்படையினைப் புரிந்து கொள்ள நீங்கள் முனைவது எனக்கு என் விளையாட்டின் சிறப்பினை எடுத்துக் கூறும் முக்கியமான செயல்களிலொன்று. நன்கு இயங்கும் உனது 'புறோகிறாம்' கண்டு நீ வியப்பது, களிப்பது போன்றது தான் இதுவும். பயணத்தைத் தொடங்குவோமா?"

ஆமெனத் தலையசைத்தேன்.

என் கடவுள் , தேவன் (எப்படி வேண்டுமானலும் நீங்கள் கூறிக் கொள்ளுங்கள். எனக்கு ஆட்சேபணையேதுமில்லை) தொடர்ந்தான்: "இப்பொழுது நான் உன்னை என் பரிமாணங்களுக்குள் காவிச் செல்லப் போகின்றேன். உன் நகரின் முக்கியமான, பலத்த காவலுள்ள சிறைச்சாலையொன்றிற்குச் செல்லப் போகின்றேன். மிகவும் பயங்கரமான காவலுள்ள அச்சிறைச்சாலையில் பல பயங்கரச் செயல்களைப் புரிந்த உன்னவர்களை உன்னவர்கள் அடைத்து வைத்திருக்கின்றார்கள்."

இவ்விதம் அவன் கூறியதைத் தொடர்ந்து என்னைக் கடவுள் தன் பரிமாணத்தினுள் எடுத்துச் சென்றான். அதே கணத்திலேயே நானும் அவனும் என் நகரின் முக்கியமான அந்தச் சிறைச்சாலையினுள் நின்றோம். சிறைக்கைதிகளுக்கு மத்தியில் நாம் நின்றோம். ஆனால் அவர்களில் யாருமே எம்மைப் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. இரவானதால் எல்லோரும் துயில்வதற்குத் தயாராகிக் கொண்டிருந்தார்கள்.

"என்ன வியப்பிது. யாருமே எம்மைப் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லையே" என்றேன்.

அதற்கு அந்தக் காரணகர்த்தா கூறினான்: "அதிலென்ன ஆச்சரியம். நாமிருவரும் இன்னும் எனது பரிமாணத்தினுள் தான் இருக்கின்றோம். அதுதான் காரணம். அவர்களால் தான் அவர்களது பரிமாணங்களை மீறமுடியாதே. நான் இப்பொழுது அவர்களில் சிலரை, உன்னவர்களைப் பொறுத்தவரையில் மிகவும் ஆபத்தானவர்களாகக் கருதப்படும் சிலரை எனது பரிமாணத்தினுள் காவி வரப் போகின்றேன். "

அதனைத் தொடர்ந்து சிலரை அவன் மிக இலகுவாகவே தனது உலகுனுள் எடுத்து வந்தான். சிறைச்சாலையினுள் ஒருவித பதட்டமான சூழல் உருவாகியதை அவதானிக்க முடிந்தது.

கடவுள் கூறினான்: "அவர்கள் தமது உலகிலிருந்து மாயமாக மறைந்த இவர்களைத் தேடுகின்றார்கள். அதுதான் பதட்டத்தின் காரணம்"

"என்ன வழக்கம் போல் கனவுதானா?"

குரல் கேட்கவே திரும்பினேன். எதிரில் துணைவி மரகதவல்லி. எனக்குச் சிறிது குழப்பமாகவிருந்தது. கனவா...இதுவரையில் நிகழ்ந்ததெல்லாம் வெறும் கனவா. இவ்வளவு நேரமும் என்னுடன் இவ்வளவு அறிவுபூர்வமாக உரையாடிக் கொண்டிருந்த கடவுள் கனவுத்தோற்றம் மட்டுமே தானா? இருப்பின் இரகசியத்தினை ஓரளவு அறிந்து விட்டேனென்று களிப்படைந்ததெல்லாம் வெறும் கற்பனை மட்டுமே தானா? இது தான் இவ்விதமென்றால் மறுநாட் காலையோ எனக்கு இன்னும் வியப்பளிப்பதாக புலர்ந்தது. முக்கிய தினசரியொன்றின் அன்றைய காலைப் பதிப்பின் முக்கிய செய்தி பின்வருமாறு தொடங்கியிருந்தது:"சிறைச்சாலையிலிருந்து கைதிகள் மறைவு! மறைவின் காரணம் புரியாத சிறைக் கைதிகள், காவலர்கள் திகைப்பு! பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே வெளியில் மறைந்தனர் கைதிகள் சிலர். கூடு விட்டுக் கூடு பாய்ந்தனரா? விடை தெரியாத புதிர்." அப்படியானால்....?
ngiri2704@rogers.com
பதிவுகள் நவம்பர் 2004; இதழ் 59, திண்ணை

No comments: