Friday, October 16, 2009

சுய விமர்சனம்: என் படைப்புகளும், நானும்! - வ.ந.கிரிதரன் -


நான் சிறுவனாகவிருந்த காலத்திலிருந்து அவ்வப்போது நாவல்களென்ற பெயரில் எழுதிக் கொண்டுதான் வருகின்றேன். அவற்றில் பல தற்போது என்னிடமில்லை. இருந்தாலும் என் எழுத்து வாழ்க்கையில் அவற்றுக்கும் முக்கியமானதோரிடம் என்னைப் பொறுத்தவரையிலுண்டு என்பதால் அவற்றின் முக்கியத்துவம் என்னைப் பொறுத்தவரையில் எந்தவிதத்திலும் குறைந்து விடப்போவதில்லை. என் பால்யகாலத்தில் தமிழகத்தின் வெகுஜனசஞ்சிகைகள், பத்திரிகைகளால் நிறைந்திருந்த வீட்டுச் சூழலே அந்தவயதில் என் எழுத்தார்வத்தைத் தூண்டிவிட்ட முக்கியமான காரணிகளிலொன்று. இதனால்தான் என்னைப் பொறுத்தவரையில் எப்போதுமே இலக்கியத்தின் பல்வேறு பிரிவுகளும் ஏதோ ஒரு வகையில், பல்வேறு காரணங்களால், பல்வேறு காலகட்டங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவையாக, தேவையாக இருக்கின்றன. நான் அடிக்கடி கூறுவதுபோல் ஒரு குழந்தை எடுத்த எடுப்பிலேயே எழுந்து நின்று நடக்கத் தொடங்குவதில்லை. உருண்டு, தவழ்ந்து பின்னரே பலவேறு முயற்சிகளுக்குப் பின்னர் எழுந்து நின்று சிரிக்கத் தொடங்குகிறது. எழுந்த எடுப்பிலேயே எல்லோரும் ஞானசம்பந்தரைப் போல் மூன்று வயதிலேயே உமையம்மையின் முலைப்பாலுண்டு ஞானம்பெற்று கவி புனையத் தொடங்கிவிடுவதில்லை. ஒரு படைப்பாளியோ அல்லது இலக்கிய ஆர்வலரோ படிப்படியாகத்தான் வளர்ச்சி பெற்று வருகின்றார்கள். ஆரம்பத்தில் அம்புலிமாமா, கண்ணன் போன்ற சஞ்சிகைகள் அல்லது பத்திரிகைகளின் பாலர் மலர்களில் தொடங்கிப் பின்னர் படிப்படியாக வெகுசன சஞ்சிகைகள், பத்திரிகைகளினூடு வளர்ந்து பின்னர் மெல்ல மெல்ல தி.ஜா. , புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், ராமகிருஷ்ணன் என்று தங்களது இலக்கியப் படைப்புகளினூடான வளர்ச்சியைப் படிப்படியாக அடைகின்றார்கள். அதனால்தான் என்னைப்பொறுத்தவரையில் இத்தகைய வெகுசனப் படைப்புகளும் இலக்கியத்தின் முக்கியமானதோர் பகுதியாக விளங்குகின்றன. எல்லாப் பிரபலமான, தரமான படைப்பாளிகள் எல்லோருமே தததமது வாழ்க்கையில் வெகுசன இலக்கியப் படைப்புகளினூடுதான் வளர்ந்து வந்திருப்பார்கள். அவர்கள் பலரின் நினைவுக் குறிப்புகள் மற்றும் சுயசரிதைகள் பலவற்றின் வாசிப்பு இதனைத்தான் உறுதி செய்கின்றன. ஒரு இலக்கிய ஆர்வலரின் அல்லது படைப்பாளியின் வாசிப்பானது பலவேறு படிகளினூடாகப் பரிணாம வளர்ச்சிபெற்று வருவதுதான் இயற்கை. அது அம்மா அம்புலிமாமா காட்டி பற்சோறு ஊட்டுவதிலிருந்து தொடங்கி, பாலர் கதைகள், வெகுசன இலக்கியப் படைப்புகளென்று தொடங்கிப் பின்னர் படிப்படியாக காப்கா, உம்பத்தே ஈகோவென்று விரிவடைகின்றது. அதற்காக எல்லோருடைய வாசிப்புமே இவ்விதமாக முழுமையாக பரிணாம வளச்சியடைந்து விடுகின்றது என்பதில்லை. ஆனாலும் பலவேறு தரப்பினரின் வாசித்தலுக்கும் ஏதோவொரு வகையான இலக்கியப் போக்கின் தேவை எப்போதுமே இருக்கத்தான் செய்கின்றது.

ஹா! ஹா! ஹா!என் பாலயப் பருவத்தில் என் அப்பாவும் அம்மாவும் அவ்வப்போது ஆனந்தவிகடனில் வெளிவந்த ஜெயகாந்தன் படைப்புகளைப் பற்றி அடிக்கடி விவாதித்துக் கொள்வார்கள். குறிப்பாக ஆனந்தவிகடனில் அன்றைய காலகட்டத்தில் ஜெயகாந்தனின் பல சிறுகதைகள், முழுநாவல்கள் முத்திரைக் கதைகளாக வெளிவந்துகொண்டிருந்தன. 'ஆடும் நாற்காலிகள் ஆடுகின்றன', 'கோகிலா என்ன செயுது விட்டாள்?', 'யாருகாக அழுதான்?', 'உன்னைபோல் ஒருவன்', 'அக்கினிப் பிரவேசம்' இவ்விதம் பல படைப்புகள அன்றைய காலகட்டத்தில் ஆனந்த விகடனில் வெளியாகியிருந்தன. அதனைத் தொடர்ந்து 'ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம்', 'ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்' போன்ற நாவல்களை விகடனும், 'சில நேரங்களில் சில மனிதர்கள்' போன்ற நாவல்களைத் தினமணிக் கதிரும் வெளியிட்டிருந்த காலகட்டம். அன்றைய காலகட்டத்தில் அதுவரையில் மூன்று பாகங்களுடன் வெளியாகிக் கொண்டிருந்த தொடர்கதைகளின் நீளம் ஓரளவுக்குக் குறைந்திருந்தது. அறுபதுகளில் வெளியாகும் பெரும்பாலான வெகுசன சஞ்சிகைகளில் நிச்சயமாக மூன்று பாகங்களுக்குக் குறையாமல் தொடர்கதைகள் வெளியாவதில்லை. நான் கூறவந்ததென்னவென்றால் இவ்விதமாக வெகுசன சஞ்சிகைகளும், படைப்புகளும் கோலோச்சிக்கொண்டிருந்த காலகட்டமொன்றில்தான் நான் வாசிக்கத் தொடங்கியிருந்தேன்; எழுதத் தொடங்கியிருந்தேன். வெகுசன இதழ்களில் வெளியான தொடர்கதைகளை வாராவாரம் காத்திருந்து மக்கள் வாசித்தார்கள். ஓவ்வொரு சஞ்சிகையும் போட்டி போட்டுக் கொண்டு பிரபல எழுத்தாளர்களின் தொடர்கதைகளைப் பாகங்களில் வெளியிட்டுக் கொண்டிருந்த காலகட்டமது. நா.பா, ஜெகசிற்பியன், அகிலன், சாண்டிலயன் போன்றோரது தொடர்கதைகள் பெரும்பாலும் மூன்று பாகங்களில் வெளியான காலமது. அவ்விதமானதொரு சூழலின் பாதிப்பால் அன்றைய காலகட்டத்தில் என் பாடசாலை அப்பியாசப் புத்தகங்களில் பல தொடர்கதைகளை எழுதிக் குவித்தேன். அவற்றிலொன்று 'மறக்க முடியுமா?'. அதைவிட இன்னும் பல குறுநாவல்கள். அவற்றிலொன்று: 'மழைப் பெய்து ஓய்ந்தது'. இவற்றின் முழுக் கதையும் தற்போது ஞாபகத்திலில்லை. இருந்தாலும் 'மழை பெய்து ஓய்ந்தது'. என்னுக் கதையின் ஆரம்பமும், முடிவும் மட்டும் இன்னும் ஞாபகத்திலுள்ளன. அந்தக் கதையின் ஆரம்பத்தில் கதாநாயகன் மிகவும் பலமாக 'ஹா ஹா ஹா'வென்று குரலெடுத்துச் சிரிப்பான். ம்ழை பெய்யத் தொடங்கியிருக்கும். அதுவொரு மர்மக் கதை. கதையின் இறுதியில் சிக்கல் அவிழ்ந்து, மழையும் பெய்து ஓய்ந்திருக்கும். கதாநாயகன் மீண்டும் பலமாகக் 'ஹா ஹா ஹா'வென்று சிரிப்பதுடன் கதை முடிந்திருக்கும். அதனைப் படித்துவிட்டு அப்பா பலமாகக் 'ஹா ஹா'வென்றுச் சிரித்தார். அப்பொழுது எங்கள் வீட்டிற்கு அடுத்த வீட்டில் குடியிருந்த அடுத்தவீட்டு மாமியும் அன்றைய என் வாசகர்களிலொருவர். என் கதைகளை வாசித்துவிட்டுக் குறிப்பாக அந்த 'மழை பெய்து ஓய்ந்தது' கதையினைப் படித்துவிட்டு பலமாகக் 'ஹா ஹா'வென்று சிரித்தபடியே வந்து பாராட்டுத் தெரிவித்தார். நல்லவேளை, அந்த 'மழை பெய்து ஓய்ந்தது' கதை தற்போது என்னிடமில்லை. இருந்திருந்தால் அதனைப் படித்துவிட்டு நீங்களனைவரும்கூடக் 'ஹா ஹா ஹா'வென்று கல்கியின் ரவிதாசன் பாணியில் சிரித்துச் சிரித்தே வயிறுகள் புண்ணாகியிருப்பீர்கள். நல்லவேளை தப்பித்தீர்கள்.

சித்தி வீட்டில் கொண்டாடிய சித்திரையும், ஈழநாடும்......அவ்விதமாக ஆரம்பத்தில் நாவல்கள் சிலவற்றை எழுதிய நான் அதன் பின்னர் கவிதைகள் சில எழுதுவதில் ஆர்வத்தைச் செலுத்தினேன். தமிழகச் சஞ்சிகைகளில் வெளியான தீபாவளிக் கவிதைகளின் பாதிப்பில் ஓர் அறுசீர் விருத்தமொன்றினை அப்பொழுது யாழ்ப்பாணத்திலிருந்து வெளியான ஈழநாடு பத்திரிகையின் சித்திரைச் சிறப்பிதழுக்காக என் அப்பாவின் பெயரில் எழுதி அனுப்பினேன் (ஆனால் இதற்கு முன்னர் என் பெயரில் பொங்கல் கவிதையொன்றை சுதந்திரன் பத்திரிகை பிரசுரித்திருந்தது. அது ஒரு சிறுவர் கவிதை. அதுவே அச்சில் வெளியான எனது முதலாவது கவிதை). அன்றைய காலகட்டத்தில் மரபுக் கவிதைகள் பற்றிய போதிய அறிவு இருக்கவில்லை. இருந்தாலும் அப்பாணியில் அமைந்திருந்த ஏனைய பத்திரிகை, சஞ்சிகைகளில் வெளிவந்திருந்த கவிதைகளின் பாணியில் (குறிப்பாகத் தமிழக வெகுசன இதழ்களின் தீபாவளி மலர்களில் வெளியான கவிதைகளின் பாணியில்) எழுதி அனுப்பியிருந்தேன். சித்தி வீட்டுக்குச் சித்திரைத் திருநாளன்று செல்வது பற்றி எழுதியிருந்தது ஞாபகத்திலுள்ளது. அதனை ஈழநாடும் நான் எதிர்பார்க்காமலேயே பிரசுரித்தும் விட்டது. அப்பாவும் மகிழ்ச்சியடையக் கூடுமென்று அதனைக் காட்டி அப்பாவிடமிருந்து திட்டு வாங்கிக் கட்டிக் கொண்டேன். அதே சமயம் ஈழநாடு பத்திரிகையின் மாணவர் மலரில் கவிதைகள், கட்டுரைகளென அவ்வப்போது எழுதத் தொடங்கியிருந்தேன். 'ஆசிரியர்', 'வான்மதி' போன்ற கவிதைகள் சில ஈழநாடு வாரமலரின் மாணவர் மலரில் வெளியாகியிருந்தன (பின்னர் வீரகேசரி, தினகரன், சிந்தாம்ணி, ஈழமணி போன்ற பத்திரிகைகள் புதுக்கவிதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பிரசுரிக்கத் தொடங்கியபொழுது அவ்ற்றில் சுமார் நூறு வரையிலான கவிதைகளை எழுதியிருப்பேன். அக்காலகட்டத்தில் புதுக்கவிதைகளை வீரகேசரி உரைவீச்சு என்னும் தலைப்பில் பிரசுரித்து வந்தது. சிரித்திரனும் நடத்தியதொரு கவிதைப் போட்டியில் "புது'மை'ப்பெண்" என்று எழுதிய சிறு கவிதையொன்று பாராட்டுக் கவிதைகளிலொன்றாகத் தெரிவுசெய்யப்பட்டுப் பிரசுரிக்கப்பட்டிருந்தது.) உண்மையில் ஈழநாடு பத்திரிகையின் வாரமலர் என்னைப் பொறுத்தவரையில் மிகவும் முக்கியமானதோர் விடயம். என் ஆரம்பகால எழுத்துலகின் பல்வேறு காலகட்டங்களில் ஈழநாடு களமமைத்துக் கொடுத்து ஊக்குவித்திருந்தது மிகவும் மிகவும் முக்கியமானதொரு விடயம். ஆரம்ப்த்தில் மாணவர் மலரில் என் படைப்புகளைப் பிரசுரித்த ஈழநாடு பின்னர் எனது பதினமப் பிராயத்தில் சிறுகதைகள் சிலவற்றையும் பிரசுரித்து ஊக்குவித்திருந்தது. உருவகக் கதையொன்றும் 'நியதி' என்னும் பெயரில் ஈழநாடு பிரசுரித்தது. (அக்காலகட்டத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த 'வெற்றிமணி' என்னும் சிறுவர் மாத சஞ்சிகையும் எனது மாணவர்காலப் படைப்புகளைப் பிரசுரித்து ஊக்குவித்தது. அப்பொழுது நான் ஏழாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தேன். இது தவிர சிரித்திரன் சஞ்சிகை வெளியிட்ட 'கண்மணி' என்னும் சிறுவர் சஞ்சிகையிலும் எனது சிறுவர் கதையொன்று வெளியானது. சிரித்திரனிலும் ஒரு சில சிறுவர் கவிதைகள் வெளியாகியதாக ஞாபகம்). 'மணல் வீடுகள்', 'இப்படியும் ஒரு பெண்', 'அஞ்சலை என்னை மன்னித்துவிடு'... போன்ற சிறுகதைகள் சில திரு. பெருமாளை வாரமலர் ஆசிர்யராகக் கொண்டு வெளிவந்த ஈழநாடு வாரமலர் பிரசுரித்திருந்தது. (தினகரனிலும் 'ஆலமரத்தடியில் பிறந்த ஞானம்' என்னுமொரு எனது இச்சிறுகதை பிரசுரமாகியிருந்தது இச்சமயத்தில் நினைவு கூர்கின்றேன்.) பின்னர் எனது பல்கலைக்கழகக் காலகட்டத்தில் 'நல்லூர் இராஜதானி', மற்றும் யாழ்நகரில் காணப்பட்ட பழமையின் சின்னங்கள் பலவற்றைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் பற்றி நான் எழுதிய சில கட்டுரைகளையும் பிரசுரித்திருந்தது. அன்றைய காலகட்டத்தில் கவிஞர் வ.ஐ.ச. ஜெயபாலனுடன் ஒரு சில நாட்கள் யாழ்நகர முழுவது மேற்படி சின்னங்களைப் பார்க்கத் திரிந்தது ஞாபகத்திற்கு வருகின்றது. எந்நேரமும் வாய்க்கு வாய் 'ராசா' , 'தம்பி' என்று அழைத்து உரையாடலினைத் தொடர்வது அன்றைய காலத்தில் அவரது வழக்கமாயிருந்தது. இந்த வகையில் அப்பொழுது யாழ் பழைய சந்தையிலிருந்த கங்கா சத்திரம்' பற்றி 'பழமையின் சின்னங்கள் பாதுகாக்கப்படுவதன் பற்றிய' எனது ஈழநாடுக் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன். அக்கட்டுரை வெளிவந்து சிறிது காலத்திலேயே அந்தக் 'கங்கா சத்திரம்' யாழ் மாநகர சபை நிர்வாகத்தால் இடிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. பல வருடங்கலின் பின்னர் கவிஞர் ஜெயபாலனை தொராண்டோவில் சந்தித்தபொழுது அதனை மறக்காமல் குறிப்பிட்டபோது ஆச்சரியமடைந்தேன். இன்னும் அக்காலகட்டத்தை மறக்காமல் நினைவில் வைத்திருக்கிறாரே என்பதை எண்ணுகையில் மகிழ்ச்சியாகவிருந்தது.

நான் ஈழநாடு பத்திரிகையினூடு வளர்ந்த எழுத்தாளனென்று கூறிகொள்வதில் மகிழ்ச்சியைடைகின்றேன். அண்மையில் மல்லிகையின் 43வது மலரில் ஈழத்தின் பிரபல நாவலாசிரியர்களிலொருவரான செங்கை ஆழியான் ஈழநாட்டுக் கதைகள் பற்றி எழுதியிருந்த ஆய்வுக கட்டுரையில் ஈழநாட்டுப் பத்திரிகையின் படைப்பாளிகளை ஏழு தலைமுறைப் படைப்பாளிகளாகப் பிரித்து என்னை ஏழாந்தலைமுறைப் படைப்பாளிகளொருவராகக் குறிப்பிட்டு எனது கதைகள் சிலவற்றையும் குறிப்பிட்டிருந்தது ஆச்சரியத்தையும், மகிழ்ச்சியையும் ஒருங்கே அளித்தன. யாருமே ஈழநாட்டுப் படைப்புகளை மறந்துவிடவில்லையென்பது ஒரு வித ஆறுதலைத் தந்தது. ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சியில் ஈழநாடு பத்திரிகைக்கும் முக்கியமானதோரிடமுண்டு. யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த பத்திரிகையென்ற பெருமையும் அதற்குண்டு. அதன் காரணமாகவே பல தடவைகள் அந்நிறுவனம் எரிக்கப்பட்டதும் மறந்துவிடக்கூடிய சம்பவங்களிலொன்றல்ல.

சிரித்திரன் பெற்றுத் தந்த வாசகி....
எனது பதின்ம வயதுப் பருவத்தில் என்னை ஊக்குவித்த இன்னுமொரு சஞ்சிகை சிரித்திரன். சிரித்திரனில்தான் எனது முதலாவது சிறுகதை வெளியாகியிருந்தது. 'சலனங்கள்' என்னும் அச்சிறுகதை சிரித்திரன் சஞ்சிகை நடாத்திய அறிஞர் அ.ந.கந்தசாமி நினைவுதினச் சிறுகதைப் போட்டியில் பாராட்டுப் பெற்ற கதைகளிலொன்றாக வெளியாகியிருந்தது. அந்தக் கதை மூலம் எனக்குச் சிரித்திரன் ஆசிரியரின் தொடர்பு கிட்டியது. சிரித்திரன் ஆசிரியரின் மகனான ஜீவகன் அப்பொழுது யாழ் இந்துக் கல்லூரியில் படித்துக் கொண்டிந்தார். என்னிலும் சில வயதுகள் மூத்தவர். அவர் மூலம்தான் நான் தான் அச்சிறுகதையினை எழுத்தியவனென்ற விடயம் சிரித்திரன் ஆசிரியருக்குத் தெரிந்தது. அதன் பிறகு நான் இலங்கையில் இருந்த காலம் வரையில் பல, தடவைகள் சிரித்திரன் ஆசிரியரைச் சந்திக்கும் சந்தர்ப்பம் கிட்டியது. மேற்படி சிறுகதை எனக்கு இன்னுமொரு வாசகரையும் அறிமுகப்படுத்தி வைத்தது. உண்மையில் அவர் ஒரு வாசகி. அவர்தான் பிரபல யாழ் இந்து மகளிர் கல்லூரியின் முதல்வராகவிருந்த செல்வி இராமநாதன். அவர் என் அம்மாவின் பாட்சாலைத் தோழிகளிலொருவர். அச்சிறுகதை மூலம் என் வாசகர்களொலொருவராக மாறியவர். அன்றிலிருந்து பல தடவைகள் என் எழுத்து முயற்சிகளுக்கு மறைமுகமாக ஆதரவளித்து ஊக்கியவர். என் அம்மாவுடன் சந்திக்கும் சந்தர்ப்பங்களில் பல தடவைகள் அவர் ஈழநாடு, சிரித்திரனில் வெளிவந்த ஒரு சில படைப்புகளைப் பற்றி ஆக்கபூர்வமான கருத்துகளைக் கூறி ஊக்குவித்தவர். ஒரு முறை நானும் , என் நண்பர்களிலொருவனான அநபாயனும் அவரைச் சென்று அவரது விட்டிலேயே சந்தித்திருந்தோம். அப்பொழுதும் அவர் என் எழுத்து முயற்சிகளைப் பாராட்டி ஊக்குவித்தார். வயதில் முதிர்ந்தவரான அவர் அன்று பாடசாலை மாணவனாக்விருந்த என் ஆரம்பகாலத்துப் படைப்புகளுக்கு முக்கியத்தும் கொடுத்து பாராட்டியது உண்மையில் எவ்வளவு ஆரோக்கியமானவிடயமென்பது இப்பொழுது விளங்குகின்றது.

மனையடி சாத்திரமும் , மண்ணின் மாண்பும்!சிரித்திரன் ஆசிரியரைப் பொறுத்தவரையில் இறுதியாக நான் சந்தித்தது கே.கே.எஸ். வீதியில் அவர் புது வீடு கட்டிய காலகட்டத்தில். அப்பொழுது நான் மொறட்டுவைப் பல்கலைக கழகத்தின் கட்டடக்கலை மாணவனாக இருந்த சமயம். ஒரு காலத்தில் கட்டடக்கலை மாணவனாகயிருந்தவர் சிரித்திரன் ஆசிரியர் சிவஞானசுந்தரம் அவர்கள். அன்று கட்டப்பட்டுக்கொண்டிருந்த நிலையிலிருந்த வீட்டினைச் சுற்றிக் காட்டிய ஆசிரியர் , வீட்டின் அமைப்பு தன் துணைவியாரின் தூண்டுதலில் மனையடி சாத்திரத்திற்கேற்ப பல மாறுதல்களை அடையவேண்டியிருந்தது பற்றிச் சிரித்தவாறே கூறியதும் தற்போது ஞாபகத்திற்கு வருகிறது. அன்றைய காலகட்டத்தில் 'மண்ணின் மாண்பு' என்னுமொரு நாவலை எழுதிச் சிரித்திரன் ஆசிரியரிடம் கொடுத்திருந்தேன். அது கிழக்கிலங்கையின் கடற்கரைக்கிராமமொன்று எவ்விதம் உல்லாசப் பிரயாணிகளின் வருகையால் சீரழிகின்றது என்பது பற்றியது. அவ்விதமாக அங்குள்ள உல்லாசப் பயணிகளின் விடுதியொன்றில் பணியாற்றும் உள்ளூர்ப் பெண்ணொருத்தி எவ்விதம் சந்தர்ப்பச் சூழ்நிலைகளால் தவறுகின்றாள் என்பது பற்றியும், பின்னர் எவ்விதம் அவளது கணவனை அவளை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கின்றானென்பது பற்றியும் கூறும் நாவலது. அக்கடற்கரைக் கிராமத்து மக்களின் அமைதியான வாழ்வினை எவ்விதம் உல்லாசப்பயணிகளின் வரவும், அவர்களின் தன்னிச்சையான வாழ்வும் பாதிக்கின்றன் என்பது பற்றிய நாவல். அந்த நாவலை வாசிக்கக் கொடுத்திருந்தேன். ஆனால் அது சிரித்திரனிலும் பிரசுரமாகவில்லை. அதன் மூலப்பிரதி மீண்டும் எனக்குக் கிடைக்கவுமில்லை. பல மாதங்களின் பின்னர் அப்பிரதி தொலைந்து விட்டதாக ஆசிரியர் கூறினார்.

பாடும் பறவைகளும், உறவு தேடும் உள்ளமும்...இதன்பின்ன்ர் இன்னுமொரு நாவல் எழுதியிருந்தேன். அதன் பெயர் 'பறவைகள் பாடுகின்றன'. ஏனோ தெரியவில்லை அன்றைய காலத்து என் நாவல் முயற்சிகள் பலவற்றில் விதவை மறுமணம் முக்கியமாக வலியுறுத்தப்பட்டிருந்தது. மேற்படி நாவலிலும் ஒரு விதவை மறுமணம் விபரிக்கப்பட்டிருக்கும். அன்றைய காலகட்டத்தில் என் தங்கைமாரின் சிநேகிதிகள் சிலர், என் நண்பர்கள் சிலரென்று பலரின் கைகளுக்கு மேற்படி நாவல் மாறிப் பலரின் கருத்துகளையும் எனக்குப் பெற்றுத் தந்திருந்தது. இவையெல்லாம் நூலுருப் பெறவில்லையாயினும், என்னைப் பொறுத்தவரையில் அன்றைய காலகட்டத்தில் என் எழுத்தார்வததின் வடிகால்களாக விளங்கியவை அவை என்ற முக்கியத்தும் வாய்ந்தவை. இது போல் இன்னொரு நாவலும் எழுதியிருந்தேன். அதன் பிரதி இப்பொழுதும் என்னிடமுள்ளது. 'உறவு தேடும் உள்ளம்' என்னும் தலைப்பில் எழுதப்பட்ட குறுநாவல். நாற்பது பக்கங்களுக்குள் அடங்கியது. எண்பதுகளில் முழங்காவில் குடியேற்றத்திட்டத்திற்குச் சென்ற அனுபவத்தின் அடிப்படையில் பூங்குடிக் கிராமமென்ற குடியேற்றத் திட்டக் கிராமமொன்றில் நடைபெறுவதாக அமைந்திருக்கும் நாவல். நாவலின் கதாநாயகி எழுத்தார்வம் மிக்கவள். கணவனோ நேர்மையான விவசாயி. அவனை ஆனை அடித்துக் கொன்று விடுகிறது. நகருக்கு மேற்படிப்புக்காகச் செல்லவிருக்கும் கதாநாயகனுக்கும் கதாநாயகிக்குமிடையிலான நட்பு பற்றியது நாவல். அத்துடன் குடியேற்றத் திட்ட வாசிகள் எவ்விதம் பலவேறு நபர்களால் சுரண்டப்படுகின்றார்களென்பது பற்றியும் நாவல் விபரிக்கும். முழங்காவில் அனுபவத்தில் எவ்விதம் அப்பாவிகளான அக்கிராமத்து மக்கள் அங்குள்ள சங்கககடை மனேஜர், தபாலதிபர், தொழில்நுட்பத் திட்ட உத்தியோகத்தர்கள் எனப் பலராலும் சுரண்டப்படுவதைக் கண்டபோது வேதனையாகவிருநதது. அந்த வேதனையின் விளைவாகவும், தமிழகத்து வெகுசன படைப்புகளின் தாக்குதல்களின் விளைவினாலும் உருவான கலவையாக உருவான நாவலிது. முற்றுப் பெறாத நாவல் பின்னர் வலிந்து முற்றுப் பெற வைக்கப்பட்டுள்ளது.

கணங்களும், குணங்களும்....இவ்விதமாக நான் நாவல்கள் சில எழுதிய போதும் அவை எதுவும் எந்தப் பத்திரிகைகளிலோ சஞ்சிகைகளிலோ வெளிவாகவில்லை. முதல்முறையாக பத்திரிகையொன்றில் வெளிவந்த நாவலென்றால் அது 'கணங்களும் , குணங்களும்' தான். மணிவாணன் என்னும் பெயரில் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் வெளிவந்த நாவல். ( அதற்கு முன்னர் மான்ரியாலிலிருந்து வெளிவந்த கையெழுத்துப் பத்திரிகையான 'புரட்சிப்பாதை' சஞ்சிகையில் 'மண்ணின் குரல்' வெளிவந்திருந்தாலும் அது கையெழுத்துச் சஞ்சிகையென்பதால் 'கணங்களும் குணங்களும்' என்பதையே அச்சு ஊடகமொன்றில் வெளிவந்த முதலாவது நாவலாகக் கருதுகின்றேன்.) நாவலைப் படிப்பவர்கள் உடனேயே எழுபதுகளில் தமிழகத்தில் வெளிவந்த நாவல்களின் பாதிப்புகள், காண்டேகரின் கதைகளின் பாதிப்புகள் இருப்பதைக் கண்டுகொள்வார்கள். தன் காதலியைப் பாலியல் வல்லுறவுக்குட்படுத்திச் சிறைத்தண்டனை பெற்ற நாயகன் , மீண்டும் விடுதலையானதும் அவளைச் சந்தித்துப் பாவமன்னிப்புப் பெற வேண்டி அவளிருக்கும் வவுனியாவுக்குச் செல்லுகின்றான. அவனது, அவனது காதலுக்குரியவள், மற்றும் அங்கு எதிர்ப்ப்டும் இன்னுமொரு பெண் ஆகியோரின் பார்வையில் கூறப்படும் கதையிது. இயற்கை வர்ணனைகள், தத்துவச் சிக்கல்கள் ஆகியன பற்றிய பல்வேறு கோணங்களில் இந்நாவலின் பாத்திரங்கள் சிந்திப்பார்கள். தமிழகத்திலிருந்து வெளிவந்த 'மண்ணின் குரல்' நாவல் தொகுப்பில இந்நாவலுமுண்டு. இந்நாவலின் பெயராகக் 'கணங்களும் குணங்களும்' என்னும் பெயர் வந்ததற்கும் ஒரு காரணமுண்டு. என்னுடைய பாடசாலை நண்பர்களிலொருவன் கீதானந்தசிவம். மிகவும் ஆன்மிகத் தேடுதல் மிக்கவன். எபொபொழுதும் கேள்விக்குமேல் கேள்வியாகக் கேள்விகளைக் கேட்டே, உரையாடல்களைச் சிந்திக்க வைக்கும் ஆற்றல் மிக்கவன். ஒரு முறை இவனுடன் நிகழ்த்திய தொலைபேசி உரையாடலொன்றில் 'நல்லது, கெட்டது' ஆகியனவற்றைப் பற்றிய விவாதமொன்றெழுந்தது. சில கணங்களில் எவ்விதம் நல்லவர்கள் கூடத் தவறுகளைச் செய்து விடுகின்றார்கள் என்பது பற்றியெல்லாம் அவ்வுரையாடலில் அவன் பல்வேறு கருத்துகளை உதிர்த்தான். அப்பொழுது சில கணங்கள் எவ்விதம் சிலரது குணங்களை மாற்றித் தவறிழைக்க வைத்து விடுகிறது என்று எண்ணியதன் விளைவாக உருவானதுதான் 'கணங்களும், குணங்களும்' என்னும் தலைப்பு. இந்நாவல் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' (தமிழ்நாடு) / மங்கை பதிப்பகம் (கனடா) வெளியீடாக வெளிவந்த 'மண்ணின் குரல்' நாவற் தொகுப்பில் அடங்கிய நாவல்களிலொன்று.

பொதுவாக எனக்கு எழுதுவதும், வாசிப்பதும் மூச்சு விடுவதைப் போல. அவையில்லாமல் என்னால் வாழவே முடியாது. எந்தச் சந்தர்ப்பத்திலும் என்னால் இவையிரண்டையும் விட்டு விடவே முடிந்ததில்லை. ஆனால் நான் ஒரு போதுமே யாருடைய பாராட்டுதல்களுக்காகவும், விமர்சனங்களுக்காகவும் எழுதுவதில்லை. எனவே எதை எழுதினாலும் அதனை நான் அனுபவித்தே எழுதுவதுண்டு. என் எழுத்தில், படைப்புகளில் பொதுவான அம்சங்களாக என் வாழ்வில் அனுபவங்களிருக்கும் அதே சமயம் இருப்பு பற்றிய என் தேடல்கள், இயற்கையின் மீதான என் பற்றுதல் ஆகியன ஆங்காங்கே விரவிக் கிடக்கும். உதாரணமாகக் 'கணங்களும், குணங்களும்' நாவலை எடுத்துக் கொண்டால் அதில் வரும் கீழுள்ள பத்திகளைக் கவனித்தாலே போதும் மேற்படி கூற்றினை விளங்கப்படுத்த.


'வாழ்வுதான் எத்தனை விசித்திரமானது. என் வாழ்வின் ஒரு கட்டப் பயணத்தை முடித்துவிட்டுப் புதிய பயணத்தை ஆரம்பித்தவனாக் வந்த என்னை எவ்விதம் இச்சூழல் இன்னுமொரு பயணத்தில் இலாகவகமாகப் பிணைத்து விட்டது. வாழ்வை இன்னுமொரு கோணத்தில் பார்க்கும்படி எவ்விதம் என்னைக்கொண்டு வந்து நிறுத்தி விட்டது. அன்றாட வாழ்வே பிரச்சனையாக ஒவ்வொரு நாளுமே போராட்டமாக வாழ்வும் இந்த மக்கள்.... இவ்வளவு நெருக்கமாக விரிவாக நான் இதுவரை உலகை இன்னுமொரு கோணத்தில் வைத்துப் பார்த்ததே இல்லை. இதுவரையில் நான் எவ்விதம் வெறும் சுயநலக்காரனாக மட்டுமே, என் உணர்வுகளை மட்டுமே முதன்மைப்படுத்தி வாழ்ந்து விட்டிருந்தேன்.

சாதாரண ஒரு மத்திய வர்க்கத்து வாழ்க்கை வட்டத்துடனான பரிச்சயமே கொண்டிருந்த என்னை, முதன் முறையாக ஏழ்மையின் அவலங்களைப்பற்றி ஏறெடுத்துப் பார்க்கத் தூண்டி விட்டிருந்தது எனது இந்தப் புதிய அனுபவம், ... வாழ்வையே பிரச்சனைகளின் போர்க்களமாக எதிர்நோக்கும் இம்மக்களுடன் ஒப்பிடுகையில் என்னைப் போன்றவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் எவ்வளவோ அற்பத்தனமானவையாக , அர்த்தமற்றவையாக அல்லவா தெனப்டுகின்றன. சாதாரண குடும்ப உறவுகளே, நிலவும் பொருளாதாரச் சூழலினால் சிதைந்துவிட... வாழ்வையே அதன் பயங்கரங்களையே தனித்து எதிர்நோக்கி நிற்கும் இந்த மக்களைப் பார்க்கையில் என்னையறியாமலேயே என் நெஞ்சில் ஒருவித பரிவு கலந்த வேதனை இழையோடியது. பெரும்பாலானவர்கள் அப்பாவிகளாக இருக்கிறார்கள். கடினமாக உழைக்கின்றார்கள். ஒருவருக்கொருவர் பரஸ்பரம் உதவியாக இருக்கிறார்கள். எனக்கு என்னை நினைகையிலேயே ஒரு கணம் வெறுப்பாக வந்தது. இவ்வளவு காலமும் எவ்விதம் நான் என் தனிமனித உணர்வுகளையே பூதாகாராமாக்கி, அதற்காகவே வாழ்ந்து விட்டிருந்தேன். அதன் ஒரு பகுதியாக நான் இழைத்துவிட்ட தவறும், தணடனையும்....'

'மனது முன்னெப்போதையும்விட , மிக மிக இலேசாக , இன்பமாக, தெளிவாக , உறுதியாக விளங்குகின்றது. நான் வாழும் இந்த உலகம், இந்த ஆகாயம், தொலைவுகளில் கோடு கிழிக்கும் பறவைக் கூட்டங்கள், ஒளிக்கதிர்களை வாரி வழங்கும் ஆதவன், தண்ணென்று ஒளிவீசி வரும் முழுநிலா, வருடிச் செல்லும் வாயுபகவான், இரவுகளில் கண்சிமிட்டிச் சிரிக்கும் நட்சத்திரப் பெண்கள்.. இந்த மரம், மக்கள், மண், ... எல்லாமே இன்பமாக என்னில் ஒரு பகுதி போன்று அல்லது அவற்றின் ஒரு பகுதி நான் போன்றதொரு பரவசமாகத் தெரிகிறது.

திடீரென்று மனதில் ஒரு காட்சி தென்படுகின்றது. அடிக்கடி என் கனவுகளில் தோன்றும் ஒரு காட்சிதான் அது. மனித நடமாட்டம் அரிதாகக் காணப்பட்ட ஆதிமானிடர் வாழும் ஒரு காலம் போன்றதொரு சூழல்... ஓங்கும் விருட்சங்கள்.. சீறும் காற்று.. உறுமியோடும் புலி முதலான விலங்குகள்... ஓயாது பொழியும் மழை வெள்ளமாக அருவியாக, பேராறாகப் பெருக்கெடுத்து..... அலைக்கரம் கொண்டு சாடும் கடல்... இவற்றிடையே இயற்கையின் குழந்தையாக நான்.

இந்தக் காட்சி என் மனதில் தோன்றியதும் , அலுப்பாகச் சலிப்பாகக் காணப்படும் கணங்கள் அர்த்தம் நிறைந்வையாகக் காணப்படுவது வழக்கம். அது ஏன் என்பதற்கான சரியான உளவியல் காரணம் எதுவாக இருக்குமோ எனக்குச் சரியாகத் தெரியாது... ஆனால் இயற்கையின் குழந்தையான நீ .. இயற்கையுடனான உன் வாழ்வை இழந்து இன்றைய செயற்கை முலாம் பூசப்பட்ட இயற்கையினுள் மாய்ந்து கிடக்கின்றாயே.. அதுவே உன் பிரச்சனைகளின் உறையுள்.. என்கின்ற தெளிவு கலந்த சிந்தனையின் விளைவாக இருக்கலாம்...' (மண்ணின் குரல்; பக்கங்கள் 233, 234, 235 & 235)

மேற்படி 'மண்ணின் குரல்' தொகுப்பிலுள்ள இன்னுமொரு நாவல் 'மண்ணின் குரல்' 1984 காலப்பகுதியில் மான்ரியால், கனடாவிலிருந்து வெளிவந்த 'புரட்சிப்பாதை' கையெழுத்துப் பத்திரிகையில் தொடராக வெளியாகி முற்றுப் பெறாமல் நின்று போன கதை. பின்னர் கனடாவில் பூர்த்தியாக்கப்பட்டு ஒரு சில கவிதைகள், கட்டுரைகளுடன் நூலுருப் பெற்றது. கனடாவிலிருந்து வெளிவந்த முதலாவது நாவலென்ற பெருமை இதற்குண்டு. கனடாவிலிருந்து வெளிவந்த 'மண்ணின் குரல்' நாவலடங்கிய நூல் அதனுடன் மேலும் சில கவிதைகளையும், அரசியற் கட்டுரைகளையும் உள்ளடக்கியிருந்தது. ஆனால் தமிழகத்தில் வெளிவந்த 'மண்ணின் குரல்' நாவல் தொகுப்போ நான்கு நாவல்களின் தொகுப்பாக வெளிவந்திருந்தது. எண்பதுகளின் ஆரம்பத்தில் குறிப்பாக 1983 இனக்கலவரத்தைத் தொடர்ந்து ஈழத்துத் தமிழ்ப்பகுதிகளில் நிலவிய சூழலை மையமாக வைத்து, வர்க்க விடுதலையுடன் கூடிய தமிழீழ விடுதலையினை வலியுறுத்திய நாவல். தலைமறைவாக இருந்து விடுதலைப் போராட்டத்தில் குதித்துவிட்ட விடுதலைப் போராளிகளைப் பற்றி, இராணுவத்தால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட தமிழ்ப் பெண்ணொருத்தி, விடுதலைப் போராளியொருத்தியின் காதலி, போராட்டத்தில் இணைந்தது பற்றி, பின்னர் சாதாரண இளம் வயதுக்கேயுரிய எதிர்பார்ப்புகளுடன் வாழ்ந்து கொண்டிருந்த அவளது தங்கையின் காதலன் எவ்விதம் அவளது வழியைப் பின்பற்றிப் போராட்டத்தில் இணைந்து கொளகின்றானென்பது பற்றி விபரிக்கும் சிறிய நாவல். கருத்துக்கு முக்கியத்துவம் கொடுத்துப் படைக்கப்பட்ட இந்நாவல் அன்றைய காலத்து என் மனதின் பிரதிபலிப்பாக விளங்கும் காலத்தின் சூழலின் விளைவாக உருவான நாவல். கருத்தினை மையமாக வைத்து உருவான இச்சிறு நாவலில் ஆங்காங்ககே தூவிக் கிடக்கும் கருத்துகள் சிலவற்றைக் கீழே காணலாம்:

'தம்பி! மனிதனால் அறியமுடியாதபடி புதிர் நிறைந்ததாக இப்பிரபஞ்சத்தின் தோற்றமிருப்பதை நான் ஒப்புக்கொள்கிறேன் தம்பி. பொருளும், சக்தியும் ஒன்றென்று நவீன விஞ்ஞானம் கூறுகின்றது. என்னைப் பொறுத்தவரையில் இவ்வுலகம், கிரகங்கள், நட்சத்திரங்கள், .. பால்வெளிகளை உள்ளடக்கிய இயற்கையே சக்தி. அச்சக்தியே இயற்கை. இயறகையில் யாவுமே ஒழுங்காக இருக்கின்றன. .. மனிதனும் ஒழுங்காக இருப்பானாயின் பிரச்சனைகளே இல்லை...'

'அறியாமையில் உருவான சமயம் என்கின்றீர்களே! அதனை நீங்கள் நம்புகிறீர்களா?"

"தம்பி! நமக்கும் மேலாகவொரு புதிரான சக்தி இருப்பதை நான் ஏற்றுகொள்கிறேன். ஆனால் சமயத்தையோ அதன் மூடத்தனமான கோட்பாடுகளையோ நான் ஏற்கவில்லை....

அன்ராடம் பிரச்சனைகளால் ஆடும் மனிதனைப் பிரச்சனைகளைத் தீர்த்துப் புதுபாதை காட்டுவதற்குச் சமயங்கள் முயலவில்லை. மாறாக என்ன செய்கின்றன...

- ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தைக் காட்டு -

- கொடுமை செய்பவன் நரகத்திற்குச் செல்வான் -

- எல்லாவற்றையும் கடவுள் மேல் பழி போட்டுவிட்டு நிம்மதியாகவிரு -

இவ்விதமான போதனைகளால் சமயம் மனிதனைப் பிரச்சனைகளுக்கு முகம் கொடுப்பதற்குப் பதில் பிரச்சனைகளிலிருந்து தப்பியோட வைப்பதால், மனிதனை மனிதனாக வாழ்வதற்கு நடைமுறைச் சாத்தியமான வழிகளைக் கூறாமல் நடைமுறைக்கொவ்வாத நரகத்தைப் பற்றியும், சொர்க்கத்தைப் பற்றியும் போதிப்பதால்.. அததகைய சமயத்தை நான் ஆதரிக்கவில்லை.. நமக்குப் புதுவிதமான , நடைமுறைக்குச் சாத்தியமான , பிரச்சனைகளுக்கு அறிவுபூர்வமான தீர்வுகளைக் கூறுகின்ற சமயம் தான் தேவையே தவிர, மூட நம்பிக்கைகளுடன் கூடிய, மனிதனை பிரச்சனைகளிலிருந்து கோழையைப் போல் ஓட வைக்கின்ற சமயம் தேவையில்லை...' (பக்கங்கள் 327 & 328)

'ஆகா.. அந்தியின் சிவப்பிலும் ஒரு தத்துவமே தெரிகிறது"

சிந்தனையினின்றும் நீங்கியவனாக அநபாயன் திரும்பினான். எதிரில் சாமியார் நின்றிருந்தார்.

"இரவு என்னும் கொடுங்கோலன் பகலைக் குற்றிக் குதறியதன் விளைவோ இந்தச் சிவப்பு..." என்றபடியே அருகீலமர்ந்த சாமியாரையே ஆவலுடன் நோக்கினான் அநபாயன்.

"இவ்வுலகில் வாழ்வே ஒரு போராட்டம்தான்.. ஒவ்வொரு உயிருமே தனது வாழ்விற்காகப் போராடிக் கொண்டுதானிருக்கின்ரது... போராட்டமென்பது இயற்கையில் இயல்பாக, நியதியாகவே உள்ளது..."

மேலும் தொடர்ந்தார்:

"இயறகையின் முரணபாடுகளும், போராட்டங்களுமே வரலாற்றை வழி நடாத்திச் செல்கின்றன. ஆதியில் மனிதனின் அகவுலகோ இருண்டு கிடந்தது. அறியாமை அங்கே குடி கொண்டிருந்தது. அவன் தன் அறியாமையின் விளைவாக, புறவுலகில் நிலவிய முரண்பாடுகளைப் பிழையாகக் கையாண்டதன் விளைவே, பிரச்சனைகளைச் சிக்கலாக்கியது.. அவனது அறிவு வளர, வளர முரண்பாடுகளை அவன் கையாணட விதம் , பழைய முரண்பாடுகள் இருந்த இடத்தில் புதிய முரணபாடுகளைக் குடியமர்த்தின. இத்தகைய புதிய முரண்பாடுகளைஒ அவன் தீர்க்கையில் மேலும் சில முரண்பாடுகள் உருவாகின..." (பக்கங்கள் 346 &347)


இவ்விதமாகச் செல்லும் நாவல் பின்வருமாறு முடிந்திருக்கும்:

'அதோ பாருங்கள்... உலகின் நானா பக்கங்களிலுமே அடக்கு, ஒடுக்கு முறைகளுக்கெதிராக ஒரு மக்கள் கூட்டம் தர்மத்திறகான வேள்வித் தீயினில் குதித்துப் போராடிக் கொண்டிருப்பதை.... வறட்டு வேதாந்ததினுள்ளும், அடிமைத்தளைகளுக்குள்ளும், அறியாமையினுள் மாண்டிருக்கும் மானுடத்தைப் புத்துயிர்ப்படையச் செய்வதற்காக, நடுக்கும் குளிரினுள், அர்த்த இராத்திரிகளில், கொடிய வனாந்தரங்களில், குகைகளில், மலைச்சாரல்களில், காடுகளில், ஊன் உறக்கமின்றி , இரவு பகல்களாக, ஏற்றத்தாழ்வுகளால, நாற்றமெடுத்துச் சீழ்பிடித்துச் சிதைந்து கிடக்கும் சமுதாயத்தினைச் சீர்சிருத்துவதற்காக அவர்கள் ஜீவ மரணப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். தாம் பிறந்த மண்ணில், தாணடவமாடிடும் அநீதியினை, அக்கிரமத்தினை அழித்தொழிப்பதறகாக, மலிந்து கிடக்கும் பொய்மையினை ஒழித்திடுவதற்காக, புழுதியில் புரண்டு கிடக்கும் பெண்மையின் புனிதத்தினைப் பேணுவ்தற்காக, சிதைந்துவிட்ட குடும்ப உறவுகளைச் சீராக்குவதற்காக, இழந்துவிட்ட அமைதியையும், இன்பத்தினையும் மீண்டும் நிலைநிறுத்துவதற்காக, மண்ணுடனான தமது கடமையினைச் செய்வதறகான புனிதப் போரினில் அவர்கள் ஈடுபட்டிருகின்றார்கள்.... இந்த மண்ணின் மைந்தர்கள் நடத்தும் போராட்டம் ஒருக்கிறதே.. அது என்றுமே தோற்றுவிடுவதில்லை. இவர்கள் இறந்து விடலாம். இவர்கள் ஏற்றி வைத்த இலட்சியச்சுடர்கள் அணைந்து விடுவதில்லை. விதைத்த தர்மப் பயிர்கள் மடிந்து விடுவதில்லை. இவர்களது உடல்கள் இம்மண்ணுடன் கலந்து விடுகையில்... இம் மண்ணில் வீசும் தென்றலும் புரட்சிப் பண் பாடி நிற்கும். துளிர்க்கும் புற்களும் போர்ப்பண்ணிசைத்து விடும். மலையருவிகள், குன்றுகள்... இங்கெல்லாம் இம்மண்ணின் குரல் கேட்கின்றதே.. உங்களுக்கு அவை புரிகின்றதா? ... ஆமாம்! என்று இம்மண்ணில் அநீதியும், அக்கிரமும் அழிந்தொழிந்து விடுகின்றதொ, பொய்மை உருக்குலைந்து போகின்றதோ, பெண்மை போற்றிடப் படுகின்றதோ, குடும்ப உறவுகள் சீர்பெற்று விடுகின்றனவோ, அன்றுவரை இம்மண்ணின் குரலும் ஒலித்துக் கொண்டுதானிருக்கும்.
எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
இருந்ததும் இந்நாடே! அதன்
முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து
முடிந்ததும் இந்நாடே! அவர்
சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து
சிறந்ததும் இந்நாடே! இதை
வந்தனை கூறி மனத்தில் இருத்தி என்
வாயுற வாழ்த்தேனோ" ( பக்கங்கள்: 352, 353 & 354 )

இவ்விதமாக மேற்படி தொகுப்பிலுள்ள 'மண்ணின் குரல்' அன்றைய காலகட்டத்து என் மனநிலையினைப் பிரதிபலிக்குமொரு படைப்பு. தமிழ் மக்களின் விடுதலையினை வலியுறுத்தும் நாவல். ஆனால் அதன் பின் தமிழ் விடுதலைப் போராட்டத்தில் நடைபெற்ற தவறான போக்குகளை, நிகழ்வுகளை, ஆரோக்கியமாக விமர்சனத்துக்குள்ளாக்கிய படைப்புகளாக மேற்படி தொகுப்பிலுள்ள 'வன்னி மண்', மற்றும் 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்' என்னுமிரு நாவல்களையும் கூறலாம். மேற்படி நாவல்களிரண்டும் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகை / சஞ்சிகையில் வெளிவந்த நாவல்கள். ஆரோக்கியமாக விமர்சனத்துக்குள்ளாக்கிய படைப்புகளென்று நான் கூறுவதற்குக் காரணங்களுண்டு. மேறபடி விமர்சனங்கள் ஒரு போதுமே தமிழ் மக்களின் நியாயமான போராட்டங்களைக் கொச்சைப்படுத்தும் வகையில் அமைந்திருக்கவில்லை. மிகவும் பலமாக சகோதரப் படுகொலைகளை, 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' கேள்விக்குள்ளாகினால் , 'வன்னி மண்' நாவலோ அப்பாவிகள் யாராகவிருந்தாலும் (சிங்களவர்களோ அல்லது தமிழர்களோ) அவர்களுக்கெதிராகத் துப்பாக்கிகள் நீட்டப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியது.

வன்னி மண்ணில் என் வாழ்வு....மேற்படி 'வன்னி மண்' என் வாழ்வின் பால்ய காலத்தில் நடைபெற்ற உண்மைச் சம்பவமொன்றின் அடிப்படையில். நடைபெற்ற நிகழ்வொன்றின் அடிப்படையில், தமிழ் மக்களின் போராட்டத்தை அணுகும் நாவல். என் பாலய காலத்தில் நான் , வவுனியா மகாவித்தியாலயத்தில் படித்துக் கொண்டிருந்தேன். என் அம்மா அங்குதான் ஆசிரியையாகக் கற்பித்துக் கொண்டிருந்தார். அச்சமயம் மன்னார் வீதியில் அமைந்திருக்கும் குருமண்காடு என்னும் பகுதி ஓரிரு குடும்பங்களையே உள்ளடக்கிய, ஒற்றையடிப் பாதையினை மட்டுமே கொண்டிருந்த , காடு மண்டிக் கிடந்ததொரு பகுதி. அங்கு நாங்கள் போவதற்கு முன்னரே ஒரு சிங்கள பாஸ் குடும்பமும் வாழ்ந்து வந்தது. எந்நேரமும் சிரித்தபடி காட்சியளிக்கும் அந்த பாஸ் குடும்பத்தவர்கள் நல்ல அயலவர்களாக விளங்கிவந்தார்கள். எங்களது பண்டிகைகளில் எங்களது உணவு வகைகள் அவர்களது வீட்டிற்குப் போகும். அவர்களது பண்டிகைக் காலங்களில் அவர்களது பாற்சோறு ('கிரி பத்' ) போன்ற உணவு வகைகள் எங்களுக்கு வரும். அவர்களுடன் அன்றைய காலகட்டத்தில் அருகிலிருந்த பட்டாணிச்சுப் புளியங்குளம் என்னும் குளத்திற்குக் குளிக்கப் போவதுண்டு. அப்பொழுது எனக்கு நீந்தத் தெரியாது. நீந்துவதற்குப் பழகிக் கொண்டிருந்தேன். அந்த பாஸ் குடும்பத்தவருடன் சாந்தா என்று ஒரு சிங்கள இளைஞனும் வசித்து வந்தான். அவன் நன்கு நீந்துவான். நீந்தத் தெரியாத நான் அக்குளத்தில் மிதந்து கொண்டிருந்த மரக்குற்றியொன்றைப் பற்றிப் பிடித்தவண்ணம் நீந்தப் பழகிக் கொண்டிருந்தேன். அருகில் சாந்தாவும் நீந்திக் கொண்டிருப்பான். ஒரு நாள் இவ்விதம் மரக்குற்றியினைப் பிடித்தவண்ணம் நீந்திக் கொண்டிருந்தேன். அருகிலேயே சாந்தாவும் நீந்திக் கொண்டிருந்தான். நீந்திக் கொண்டிருந்தவன் மிகவும் ஆழமாக விளங்கிய குளத்தின் நடுப்பகுதிக்கு வந்து விட்டேன். அந்தச் சமயத்தில் மரக்குற்றியைப் பிடித்திருந்த பிடி நழுவி விடவே நான் நீரினுள் மூழ்க ஆரம்பித்துவிட்டேன். இதனைக் கண்ட சாந்தா மிகவும் விரைவாக என்னருகே நீந்திவந்து மூழ்கிக் கொண்டிருந்த என்னைப் பற்றித் தூக்க முயன்றான். அவன் கழுத்தைச் சுற்றிப் பலமாக மூழ்கிக் கொண்டிருந்த நான் கட்டிப்பிடித்துக் கொள்ளவே என்னுடன் சேர்ந்து அவனும் மூழ்க ஆரம்பித்தான். இதனை அவதானித்த குளக்கரையிலிருந்த என் அக்கா கத்தவே, அப்பொழுது கரையில் நின்று சவர்க்காரம் போட்டுக் கொண்டிருந்த பாஸ் , உடனடியாகவே நீந்திவந்து மூழ்கிக் கொண்டிருந்த எங்களிருவரையும் தன் இரு கைகளால் கிடுக்கிப் பிடி பிடித்தபடி கரைக்கு இழுத்துவந்து காப்பாற்றினார். அன்று அந்த பாஸ் எங்களைக் காப்பாற்றியிருக்காவிட்டால். இன்று நான் உங்கள் முன்னிருந்து இவ்விதம் கதை கூறிக்கொண்டிருக்க மாட்டேன். அதன் பின்னர் நாங்கள் மீண்டும் யாழ்ப்பாணம் போய் விட்டோம். யாழ் இந்துக் கல்லூரி, மொறட்டுவைப் பல்கலைக் கழகமென்று திரிந்த என் வாழ்க்கை இன்று கனடாவில் தொடர்கிறது. இதற்கிடையில் இலங்கையில் தமிழ்ர் விடுதலைப் போராட்டம் முனைப்புடன் கொழுந்து விட்டெரிய ஆரம்பித்து விட்டிருந்தது. இனங்களுக்கிடையில் நிலவிய புரிந்துணர்வுகள் சிதைந்தன. முக்கியமாக எல்லைப் புறங்களில் வாழ்ந்த பல்வேறு மக்களுக்கிடையில் நிலவிய நட்புடன் கூடிய சூழலை நாட்டில் ஏற்பட்ட அரசியல் நிலைமைகளும், இனக்கலவரங்களும் , அரசபடையினரின் அடக்குமுறைகளும், தமிழ் மக்கள் மேல் கட்டவிழ்த்து விடப்பட்ட பயங்கரவாதச் சட்டமும் மோசமாகச் சீரழித்து விட்டன. நானும் காலப்போக்கில் அந்த பாஸ் குடும்பததவரை மறந்து விட்டேன். பின்னர் பல வருடங்களின் பின்னர் நான் கனடாவில் வசிக்கும்போதுதான் கேள்விப்பட்டேன் அந்த பாஸ் குடும்பததவர்களுக்கு ஏற்பட்ட நிலைமையினை. 1983ற்குப் பின்னர் நிலவிய சூழலில், தமிழ் விடுதலை அமைப்பொன்றினால் அந்த பாஸின் குடும்பம் முழுவதுமே ஒட்டுமொத்தமாக அழிக்கப்பட்டதாகவும், அதனை அந்தப் பகுதியிலேயே வாழ்ந்த அந்த அமைப்பின் பொறுப்பாளரே செய்ததாகவும், பின்னர் அந்தப் பொறுப்பாளர் இன்னுமொரு அமைப்பினால் கொலை செய்யப்பட்டதாகவும் கேள்விப்பட்டேன். அந்த பாஸ் பின்னர் சிங்கள இராணுவத்துடன் சேர்ந்தியங்கியதாகவும் அதனாலேயே இவ்விதம் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் கூறப்பட்டது. சுயாதீன விசாரணைகளேதுமற்ற நிலையில் நான் கேள்விப்பட்ட அந்த அமைப்பின் பெயரைக் குறிப்பிட விரும்பவில்லை. ஆயினும் அந்த பாஸ் குடும்பம முழுவதும் அருகிலிருந்த காட்டிற்குள் கொண்டு செல்லப்பட்டுக் கொலைசெய்யப்பட்டதாகக் கேள்விப்பட்ட தகவல் என்னைப் பாதித்தது. என்னையும் ,மூழ்கிக் கொண்டிருந்த சாந்தா என்ற சிங்கள் இளைஞனையும் காப்பாற்றிய அந்தச் சம்பவம்தான் உடனடியாக நினவிற்கு வந்தது. உடனடியாகவே வன்னி மண்ணில் கழிந்த என் பால்யகாலத்து நினைவலைகள் ஓடி மறைந்தன. வன்னி மண்ணுடனான என வாழ்வின் அனுபவங்களின் நனவிடை தோய்தலினூடாக எவ்விதம் அந்த வன்னி மண்ணின் அமைதி கலந்த சூழல் நாட்டின் அரசியல் நிகழ்வுகளால் படிப்படியாக மாற்றமடைந்தது என்பதை விளக்குமொரு நாவலாக இந்த வன்னி மண் நாவல் உருவானது. அப்பாவிகள் யாராகவிருந்தாலும் அவர்கள் மேல் துப்பாக்கிகள் நீட்டப்படுவதை என்னால் ஏறக முடியாது. அதே சமயம் ஈழத் தமிழ் மக்களின் நீதியான போராட்டத்தினையும் என்னால் கொச்சைப்படுத்த முடியாது. வன்னி மண் நாவல் மேற்படி இரண்டுவிதமான என்மனப் போக்குகளையும் விவரிக்கும். மேற்படி நாவல் தாயகம் சஞ்சிகையில் தொடராக வெளிவந்துகொண்டிருந்த சமயம் கனடா வந்திருந்த எழுத்தாளர் மாலனுடனானதொரு குறுகிய சந்திப்பு எழுத்தாளர் ரதனின் இருப்பிடத்தில் நிகழ்ந்தது. அப்பொழுது நடைபெற்ற உரையாடலின்போது மாலன் 'ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டம் நடைபெறும் இச்சூழலில் எந்தவொரு ஈழத்தமிழ் எழுத்தாளராவது அப்பாவிச் சிங்கள மக்கள்மேல் நடைபெறும் தாக்குதல்பற்றிக் கண்டித்து எழுதியிருக்கின்றார்களா? இல்லையே' என்று குறைபட்டுக் கொண்டார். அப்பொழுது 'வன்னி மண்ணி'ல் இவ்விதமானதொரு கண்டனத்தை வெளியிட்டிருக்கின்றேன் என்று கூற நினைத்தேன். ஆனாலும் கூறவில்லை.

மேற்படி 'வன்னி மண்' நாவலில் வரும் கீழுள்ள சில பத்திகள் என் மனநிலையினைத் தெளிவாக விளக்கும்:

"..இன்று உன்னால் உயிர் கொடுக்கப்பட்ட நான் இருக்கிறேன். ஆனால் .. நீ.. உளவாளியென்று உன்னோடு சேர்த்து முழுக்குடும்பத்தையும் கூண்டோடு கைலாசமேற்றி அனுப்பிவிட்டார்கள். நியாயப் படுத்துவதற்கா ஆட்களில்லை. எதையும் நியாயப்படுத்த அடுக்கடுக்காக அள்ளி வீசக் காரணங்களாயில்லை. சொந்தச் சகோதரர்களையே தெருவில் எரித்துப் போட்டுவிட்டு அதற்குமொரு நியாயம் கற்பித்த பரம்பரையைச் சேர்ந்தவர்களல்லவா நாங்கள்... வழக்கம்போல் இதற்கும் காரணங்களை அள்ளி வீசுவோம்.
- பாஸ் இராணுவததிற்கு உளவு சொன்னான் -
- பாஸின் மனுசிக்கும் இராணுவத்துக்கும் அப்படியிப்படி ஏதோ தொடர்பாம். விட்டு வைக்கக் கூடாது...-
- அவங்கட பிள்ளைகளும் சேர்ந்துதானாம் -
- போராட்டப் பாதையிலே இதையெல்லாம் விட்டு வைக்கக் கூடாது -
ஆனால் எனக்குத் தெரிந்த நீ .. என்னைவிட அம்மண்ணுடன் உனக்குத்தான் அதிக சொந்தம். நாங்கள் முதன் முறையாக வந்தபோதே அந்தப் பகுதி காடுமண்டிப் போய்க்கிடந்தது. ஆனால் நீ வந்தபோதோ நான் பிறந்திருக்கவேயில்லை. அந்தப் பகுதி எந்த நிலையில் இருந்திருக்கும். இளைஞனான நீ கனவுகளுடன் , கற்பனைகளுடன் புது மண்ணில் வாழ்க்கையைத் தொடங்கியிருப்பாய். திட்டங்கள் பல போட்டிருப்பாய். எல்லாம் அழிக்கப்பட்டுவிட்டன. ..... போராட்டம், இராணுவத் தீர்வு என்ற பெயரில் இன்னும் எத்தனை அப்பாவி உயிர்கள் பலியாகப் போகின்றனவோ? போரில் நேரடியாக ஈடுபட்டவர்களின் அழிவைவிட இதுவரை அழிந்துபோன பாதிக்கப்பட்ட அப்பாவி உயிர்களின் எண்ணிக்கைதான் மிகமிக அதிகம். உலகம் முழுவதும் நிலைமை இதுதான். இதன் முடிவு தானென்ன?

... நான் நிச்சயம் நம்புகிறேன். நீ உளவாளியாகவிருக்க முடியாது. என் உயிரைக் காப்பாற்றும்போது நான் தமிழன் நீ சிங்களவனென்று நீ நினைத்திருக்கவில்லை. மனிதனென்றுதான் எண்ணினாய். அந்த மனிதாபிமானத்தை எனக்கு விளங்கும். என் எதிர்பார்ப்பையும் மீறி உண்மையிலேயே காலம் உன் நெஞ்சிலும் இன உணர்வுகளை விதைத்து விட்டிருந்தால்.. அதற்கும் கூட உனக்கும், உன் குடும்பததவர்களுக்கும் கிடைத்த தண்டனை கொடியதுதான்... மிகவும் கொடியதுதான்... ." (மண்ணின் குரல் ; பக்கங்கள்: 96,97 & 98)

இந்த நாவலின் நோக்கம் பற்றி மேற்படி 'மண்ணின் குரல்' நாவல் தொகுப்பின் இறுதியில் பின்வருமாறு கூறியிருந்தேன். அதனை இங்கு மீண்டுமொருமுறை குறிப்பிடுவதும் பொருத்தமானதே:

'எம்மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராட ஆயுதம் ஏந்தியவர்கள் தொடர்ந்தும் தமக்கிடையில் மோதித்தேவையற்ற அழிவுகள் ஏற்படுவதைத் தவிர்க்க வேண்டும். அப்பாவிகள் யாராகவிருந்தாலும் அவர்களுக்கெதிராகத் துப்பாக்கிகள் நீட்டப்படுவது நிறுத்தப்பட வேண்டும்' என்பதில் என் மனம் மிகவும் தெளிவாகவேயிருந்தது. மேற்படி தாயகம் பத்திரிகையில் வெளிவந்த எனது இன்னுமொரு நாவலான 'அருச்சுனனின் தேடலும் , அகலிகையின் காதலும்' நாவல் முக்கியமாக அமைப்புகளிடையே நிலவிய சகோதரப் படுகொலைகளையும், உட்படுகொலைகளையும், சமுதாயப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக ஆயுதமேந்தியவர்களால் களவு, விபச்சாரம் போன்றவற்றைத் தம் வயிற்றுக்காகப் புரிந்தவர்களை மரணதண்டனைக்குள்ளாக்கிய செயல்களையும் கண்டிக்கிறது. அவ்விதம் கண்டிக்கும் அதே சமயம் அந்நாவல் பின்வருமாறு முடிவது அதன் நோக்கத்தைத் துல்லியமாகவே புலப்படுத்தும்:

" அநியாயமாக, அப்பாவிகள் தண்டிக்கப்படுவதன் காரணம் , சாகடிக்கப்படுவதன் காரணம் விசாரணைகளின்றி விரைவாகத் தண்டனைகள நிறைவேற்றப்படுவதுதான். நீ சொல்வதும் உண்மைதான். ஒரு தனி மனிதனுக்கு உணவில்லை எனில் செகத்தினை அழித்திடுவோம் என்று பாரதி பாடியதும் இதனால்தான். ஒவ்வொரு மனிதனினதும் தனிப்பட்ட உரிமைகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும். பேச்சுரிமை, எழுத்துரிமை உட்படச் சகல உரிமைகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும். போராட்டச் சூழலில் நீண்ட விசாரணைகளை எதிர்பார்க்க முடியாதுதான். இருந்தாலும் மரணதண்டனைகள் விடயத்தில் இயக்கங்கள் மிகுந்த கவனமெடுக்க வேண்டும். இயக்கரீதியாக, சரியான வழியில், பிரச்சினை அணுகப்படவேண்டும். தண்டனைகளை நிறைவேற்றுவதில் அதிக அவசரம் காட்டக் கூடாது. இயக்கங்கள் தங்களது இயக்க விதிகளை, யாப்புகளை மறுசீரமைக்க வேண்டும். மனித உரிமைகளுக்கு மதிப்பளிப்பதில் முன்னிற்க வேண்டும். அதே சமயம் ஒற்றுமையற்று சிதைந்திருக்கும் எம் மக்களுக்கிடையே , இயக்கங்களுக்கிடையே ஒற்றுமை ஏற்பட வேண்டும். நடந்தவற்றைக் கெட்ட கனவாக மறந்துவிட்டு , புதிய பாதையில் இனியாவது நடைபோட வேண்டும். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். இந்தத் தை என்றாலும் நமக்கு நல்லதொரு வழியைக் காட்டட்டும்." (மண்ணின் குரல்; பக்கம் 220)

மேற்படி நாவல்கள் எழுதப்பட்ட காலத்தில் எனக்குத் தெரிந்து யாருமே இவ்விதம் இயக்க உள்முரண்பாடுகளை, இயக்க முரண்பாடுகளை, அப்பாவி மக்கள் மீதான படுகொலைகள், விபச்சாரம், களவு போன்ற வயிற்றுக்காகத் தவறிழைத்தவர்கள் சீர்திருத்தப்படுவதற்குப் பதிலாக, அவ்வாறு அவர்களை வாழ நிர்ப்பந்தித்த சமுதாயத்தைத் திருத்துவதற்குப் பதிலாக, பாதிக்கப்பட்ட அந்த மக்களுக்கே தண்டனை கொடுத்த செய்கையினைக் கண்டித்து நாவல்கள் படைத்திருக்கின்றார்களா? எம் மக்களின் தேசிய விடுதலையுடன் அவர்களது சமுதாயப் பிரச்சினைகளையும் தீர்க்கப் போகின்றோமென்று கூறிய அமைப்புகள், அத்தகைய அமைப்பின் விளைவாக உருவானவர்களுக்குத் தண்டனை அதுவும் மரணதண்டணை கொடுத்ததை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர்களை அவ்விதம் வாழ நிர்பந்தித்த சமுதாய அமைப்பினைத் திருத்துவதன் மூலம்தான் அத்தகைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியுமென்பதென் நிலைப்பாடு. அதை விட்டு விட்டு, வறுமையின் காரணமாக அவ்விதம் வாழ்ந்த மக்களுக்குத் தண்டணை கொடுத்த செயல தவறானதென்பதென் கருத்து. ஆயினும் செழியன் போன்ற முன்னாள் போராளிகள் சிலர் தமது அனுபவங்களைப் பதிவு செய்திருக்கின்றார்கள்? ஆனால் படைப்பாளிகள் யாராவது இவ்விதம் புனைகதைகளைப் படைத்திருக்கின்றார்களா? மேற்படி நாவல்களெல்லாம் 90களின் ஆரம்ப காலகட்டத்தில் எழுதப்பட்டனவென்பதை நினைவில் வைப்பதும் நல்லதே. அக்காலகட்டச் சூழலின் வரலாற்றுக் கடமை கருதி, கருத்துக்கு முக்கியத்துவம் கொடுத்துப் படைக்கப்பட்ட நாவல்களவை. அவை கூறும் பொருளின் அடிப்படையில் மேற்படி நாவல்களுக்கும் முக்கியத்துவமுண்டு என்று நான் கருதுகின்றேன்.

இவை தவிர 'அமெரிக்கா' என்றொரு சிறுநாவலும் தாயகம் சஞ்சிகையில் தொடராக வெளிவந்தது. பின்னர் மேலும் சிறுகதைகளையும் உள்ளடக்கி, தமிழகத்தில் ஸ்நேகா பதிப்பக வெளியீடாக 'அமெரிக்கா' என்னும் பெயரில் தொகுப்பாக வெளிவந்தது. இது பற்றிப் பத்திரிகைகள், சஞ்சிகைகள் சிலவற்றில் (சரிநிகர், புதியபாதை) விமர்சனங்கள் வெளியாகியிருந்தன. மேற்படி 'அமெரிக்கா' அமெரிக்காவிலுள்ள தடுப்புமுகாம்களில் வாடும் அகதிகள் பற்றியது. என் சொந்த அனுபவத்தின் விளைவான பதிவு. பின்னர் 'அமெரிக்கா II ' என்னுமொரு இன்னுமொரு விரிவான நாவல் திண்ணை மற்றும் பதிவுகள் இணைய இதழ்களில் தொடராக வெளிவந்தது. நியூயார்க் மாநகரத்தில் ஈழத்தமிழ அகதியொருவனின் அனுபவங்களை விபரிப்பது. இன்னும் நூலுருப் பெறவில்லை. கூறும் பொருளிலும், கூறும் முறையிலும், பாத்திரப் படைப்பிலும் என் நாவல்களில் முக்கியமானதொன்றாக இதனை நான் கருதுகின்றேன். இந்நாவலில் வரும் மாந்தர் தொடக்கம் அனுபவங்கள் அனைத்துமே ஏனைய புலம்பெயர் படைப்புகளிலிருந்து சிறிது வேறுபட்டு வாசிப்பவர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தினைத் தரக்கூடுமென்று நான் எண்ணுகின்றேன். இந்நாவல் நூலுருப் பெறும்போது மேலும் பலரது கவனத்தைக் கவரக் கூடும்.

இவ்விதமாக எனது நாவல்கள் எல்லாவற்றிலுமே சமகாலப் பிரச்சினைகளின் தாக்கங்கள் என் அனுபவங்களினடிப்படையில் மலிந்து கிடக்கும். அதே சமயம் மேற்படி நாவல்களிலெல்லாம் இருப்பு பற்றிய என் கேள்விகளும், இயற்கையின் மீதான் என் ஆழ்ந்த காதலும் இழையோடிக் கிடப்பதை வாசிப்பவர்கள் அறிந்து கொள்ளலாம். மேற்படி நாவல்களைத் தவிர இணைய இதழ்களில் வெளியான பல சிறுகதைகள் புலம்பெயர்ந்த என் அனுபவத்தின் விளைவான உருவானவை. கவிதைகளும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் எழுதியிருக்கின்றேன். இருப்பு பற்றிய என் கேள்விகளைக் கருப்பொருளாகக் கொண்டு அதிக எண்ணிக்கையில் எழுதியுள்ளேன். இதே போல் கட்டுரைகள் பலவும் பதிவுகள் இணைய இதழில் பத்தி எழுத்துகளும் (ஒரு சில புனைபெயர்களில்) சமகால சமூக, அரசியல் மற்றும் இலக்கிய நிகழ்வுகள், விடயங்களைப் பற்றி எழுதியுள்ளேன். ஆகச் சுருக்கமாகக் கூறின், என் படைப்புகள் எதுவாகவிருந்தாலும் (கதையோ, கட்டுரையோ அல்லது கவிதையோ எதுவாகவிருந்தாலும்) அவற்றில் நிச்சயமாக என் மண்ணின், புலம்பெயர்ந்து வாழும் சூழலின் அனுபவப் பதிவுகள் நிச்சயமாக இழையோடியிருக்கும். அதே சமயம் இருப்பு பற்றிய என் தேடலின் விளைவான சிந்தனைகளும் அவற்றில் நிச்சயம் விரவியே கிடக்கும். [மேற்படி 'மண்ணின் குரல்' தொகுதியின் பிரதிகள் சில என்னிடமுள்ளன. வாங்க விரும்புவர்கள் ngiri2704@rogers.com என்னும் எனது மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள். விலை, தபாற் செலவு மற்றும அனுப்ப வேண்டிய முகவரி போன்ற விடயங்களைத் தருகிறேன்.)


ngiri704@rogers.com

No comments: