Wednesday, October 24, 2007

தொடர் நாவல்: குடிவரவாளன் - வ.ந.கிரிதரன் -


அத்தியாயம் இருபத்திநான்கு: அனிஸ்மானின் ஆலோசனை!

"வாருங்கள் என் அன்புக்குரிய நண்பர்களே! காலை வணக்கங்கள்! இன்று நான் உங்களை சந்திக்க விரும்பியதற்கொரு முக்கியமான காரணமுண்டு. அதற்குமுன்னர் உங்களது வாழ்க்கையைப் பற்றிச் சிறிது அறிய விரும்புகின்றேன். வாழ்க்கை எப்படியிருக்கிறது? என்னால் ஏதாவது உடனடியாகச் செய்ய வேண்டியதேதாவதிருக்கிறதா?" இவ்விதமாக இளங்கோவையும் அருள்ராசாவையும் வரவேற்றார் சட்டத்தரணி அனிஸ்மான்.

இதற்கு இளங்கோவையே பதிலளிக்குமாறு பார்வையால் உணர்த்தினான் அருள்ராசா. அதனைப் புரிந்து கொண்ட இளங்கோ சிறிது விபரமாகக் கூறத்தொடங்கினான்: "நற்காலை வந்தனங்கள் உங்களுக்கும் உரித்தாகட்டும் அனிஸ்மான் அவர்களே! உங்களது பரிவான விசாரணைக்கு எமது நன்றி. நீங்கள் உடனடியாக அழைத்ததால்தான் தற்போது வந்துள்ளோம். இருந்தாலும் சிறிது காலமாகவே உங்களைச் சந்திக்க வேண்டுமென்று எண்ணியிருந்தோம். அதற்குள் நீங்களே அழைத்து விட்டீர்கள் பழம் பழுவிப் பாலில் விழுந்தது மாதிரி"

'மேலே கூறுங்கள்' என்பது போன்றதொரு பாவனையில் அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தார் அனிஸ்மான். இளங்கோவே மேலே தொடர்ந்தான்: "தற்போது எங்கள் முன்னாலுள்ள முக்கியமான பிரச்சினையே 'சமூகக் காப்புறுதி இலக்க அட்டை' போன்ற சட்டரீதியான ஆவணங்களைப் பெறுவதுதான். 'ச.கா.இ' அட்டை இல்லாமல் ஒன்றுமே செய்ய முடியாதுள்ளது. எங்களிடமிருந்த கடவுச் சீட்டையும் குடிவரவுத் திணைக்களத்தினர் பாஸ்டனிலேயே பறித்து வைத்துள்ளனர். இந்நிலையில் 'ச.கா.இ.' அட்டையில்லாமல் சட்டரீதியாகவொரு வேலைகூடச் செய்ய முடியாமலுள்ளது. வங்கியொன்றில் கணக்கொன்றும் ஆரம்பிக்க முடியாமலுள்ளது. நீங்கள்தான் இந்த விடயத்தில் எப்படியாவது உதவ வேண்டும். ஒழுங்காக வேலையொன்றும் செய்ய முடியாமல் அன்றாட வாழ்க்கையையே கொண்டு நடத்த முடியாமலுள்ளது"

இளங்கோ இவ்விதம கூறவும் அவன் கூறுவதையே மிகவும் அவதானமாகச் செவிமடுத்துக் கொண்டிருந்த சட்டத்தரணி அனிஸ்மான "உங்கள் நிலை எனக்கு நன்றாகவே புரிகிறது. நிச்சயமாக என்னால் முடிந்த அளவுக்கு முயன்று பார்க்கிறேன் மேலும் நீங்கள் மட்டும் யாராவது ஒருவரது வர்த்தக நிறுவனத்திலிருந்து உங்களுக்கு வேலையிருப்பதாக ஒரு கடிதமொன்றினை எடுத்துத் தந்தால் அதனையும், உங்களது இன்றைய நிலையினையும் வைத்து குடிவரவுத் திணைக்களத்திடம் உங்களுக்கு வேலை செய்வதற்குரிய அனுமதிப் பத்திரம் கோரி விண்ணப்பிக்கலாம்."

சட்டத்தரணி அனிஸ்மான் இவ்விதம் கூறவே அவர்களது உரையாடலின் நடுவே புகுந்த அருள்ராசா "எபபடியாவது நீங்கள் கூறியது போன்றதொரு கடிதத்தினை எடுத்துத் தருகின்றோம். தந்தால் எங்களுக்குச் சமூகக் காப்புறுதி இலக்க அட்டை கிடைக்குமென்பது என்ன நிச்சயம்?" என்று கேட்கவும் அனிஸ்மான் அதற்குப் பதிலாக "எதுவுமே நூற்றுக்கு நூறு நிச்சயமில்லை. ஆனால் முயன்று பார்ப்பதில் தவறொன்றுமில்லையே. அவ்விதமானதொரு 'வேலை வழங்கல்' கடிதமொன்றிருந்தால் அது உங்களுக்கு மிகவும் சார்பாக அமையும்" என்று விடையிறுத்தார்.

அதற்கு இளங்கோவும், அருள்ராசாவும் "நீங்கள் கூறுவதும் சரிதான். எப்படியாவது அவ்விதமானதொரு 'வேலை வழங்கல்'
கடிதமொன்றினை எடுத்துத் தருகின்றோம்." என்று கூறினார்கள். அதன்பின் அவர்களது உரையாடல் அகதிக் கோரிக்கைக்கான விண்ணப்பம் பற்றித் திரும்பியது. அவர்களது அகதிக் கோரிக்கைக்கான விண்ணப்பத்திற்கான விசாரணைக்கான திகதி அறிவித்துக் கடிதம் வரும். அதற்கு முன்னர் அவர் இன்னுமொருமுறை அவர்களிருவரையும் சந்தித்து அவர்களது அகதிக் கோரிக்கைக்கான முழு விபரங்களையும் பெற்றுக் கொள்வார். இவ்விதம் தெரிவித்த அனிஸ்மான தற்போது அவர்களது முக்கிய பிரச்சினை வேலை செய்வதற்குரிய சமூகக் காப்புறுதி இலக்க அட்டை பெறுவதுதான் என்றார். அவரைப் பொறுத்தவரையிலும் அது முக்கியமான விடயம். அவர்களிருவரும் வேலை செய்தால் மட்டுமே அவர்களால் அவருக்கு வழங்கவேண்டிய கட்டணத்தைச் செலுத்த முடியும். இவ்விதமாகப் பல்வேறு விடயங்களைப் பற்றி அவருடன் கலந்துரையாடியபின் அனிஸ்மான் அன்று அவர்களை அழைத்ததற்கான விடயத்திற்கு வந்தார்.

சட்டத்தரணி அனிஸ்மான்: " இது உங்களுக்கு இங்கேற்பட்ட நிலையுடன் தொடர்புள்ளது.."

இளங்கோ, அருள்ராசா (ஒரே குரலில்): "புரியவில்லையே திரு. அனிஸ்மான். சற்று விபரமாகவே கூறுங்களேன்."

அனிஸ்மான்: "உங்களைப் பொறுத்தவரையில் நீங்கள் இந்த நாட்டிற்குச் சட்டவிரோதமாக வந்தவர்களல்லர். கனடாவிலுள்ள மான்ரியால் நகருக்குச் செல்வதுதான் உங்களது நோக்கமாகவிருந்தது."

இளங்கோ, அருள்ராசா (இருவரும் மீண்டும் ஒருமித்த குரலில்): "ஆம்! ஆம்! நீங்கள் சொல்லுவது சரிதான்"

அதன்பின் இளங்கோ தொடர்ந்தான்: "அப்படித்தான் நாங்கள் பயணித்துக் கொண்டிருந்தோம். அதுதான் எங்களது நோக்கமாகவுமிருந்தது. அமெரிக்காவில் சட்டவிரோதமாக நுழையவேண்டுமென்று எப்பொழுதுமே நாங்கள் நினைத்திருக்கவில்லை. எங்களது போதாத காலம் எங்களை மான்ரியால் நகருக்கு ஏற்றிச் செல்ல வேண்டிய டெல்டா விமான நிறுவனம் மறுத்து விட்டதுதான். அதனால்தான் எங்களுக்கிந்த நிலை ஏற்பட்டது. அதுதான் காரணம். நீங்கள் சொல்வது சரிதான்."

இப்பொழுது இளங்கோவை இடைமறித்த அனிஸ்மான் கூறினார்: "உண்மைதான். இந்த நாட்டிற்குச் சட்டவிரோதமாக வரவேண்டுமென்று எந்தவித எண்ணமுமில்லாமல் வந்த உங்களுக்கு இந்த நிலையேற்பட்டது வருத்ததிற்குரியது. அதற்காக இந்த நாட்டுக் குடிமகனென்ற வகையில் நான் வெட்கமடைகின்றேன். அதுதான் என் மனதினைப் போட்டு வருத்திக் கொண்டிருந்தது. அதற்காகத்தான் இந்த விடயத்தில் உங்களுக்கு நீதி கேட்டு என்னால் முடிந்த ஏதாவது உதவிகளைச் செய்ய முடியலாமாவென்ரு யோசித்துப் பார்த்தேன். உதவலாமென்று பட்டது. அதற்காகத்தான் உங்களுடன் சிறிது கலந்தாலோசிக்க விரும்புகின்றேன்."

இளங்கோ: "உங்களது பெருந்தன்மைக்கு மிகவும் நன்றி. நாங்கள் உண்மையில் பெருமைப் படுகின்றோம் உங்களது உயர்ந்த
உள்ளத்தையெண்ணி. எந்தவகையில் இந்த விடயத்தில் உதவலாமென்று நீங்கள் நினைக்கின்றீர்கள்"

அனிஸ்மான்: "உண்மையில் மனித உரிமைகள் விடயத்தில் உங்களுக்குத் தீங்கு இழைக்கப்பட்டிருபப்தாகக் கருதுகின்றேன். உங்களைப் பொறுத்தவரையில் உங்களுக்கு எட்டு மணி நேரம் இந்த மண்ணில் தங்கியிருக்க சட்டரீதியான அனுமதியிருந்தது. உங்களது கடவுச் சீட்டுகளில் அதற்கான முத்திரை கூட இடப்பட்டிருந்தது. ஆனால் உங்களது துரதிருட்டம் உங்களை மான்ரியால் ஏற்றிச் செல்ல வேண்டிய விமான நிறுவனம் மறுத்து விட்டதுதான். அதனால் உங்களைத் திருப்பி அனுப்ப முடிவு செய்யப்பட்டபோது அதனைத் தவிர்ப்பதற்காக இங்கு அரசியல் அடைக்கலம் கோரி விண்ணப்பித்தீர்கள். சட்டரீதியாக இந்த மண்ணில் இருக்கும்போதுதான் அவ்விதம் விண்ணப்பித்தீர்கள். இந்த நாட்டினுள் சட்டரீதியாக அனுமதிக்கப்பட்ட நிலையில்தான் நீங்கள் அந்த விண்ணப்பத்தினைச் சமர்ப்பித்திருந்தீர்கள். ஆனால் உங்களுக்கு தங்கியிருக்க அனுமதியளிக்கப்பட்ட அந்த எட்டு மணி நேரம் கடந்ததும் நீங்கள் அந்த சட்டரீதியான நிலையினை இழந்தீர்கள். அந்த நிலையில் உங்களுக்குப் பிணையில் வெளியில் வருவ்தற்குரியதொரு வாய்ப்பிருந்தது. அதனை உங்களுக்கு வழங்குவதற்குப் பதில் உங்களை இந்த நாட்டினுள் அனுமதிக்கப்படாத சட்டவிரோதக் குடிகளாகத் தவறாகக் கருதிய குடிவரவுத் திணைக்களம் உங்களைத் தடுப்புமுகாமில் போட்டு அடைத்தது. நீங்கள் அவ்விதம் தடுப்பு முகாமில் தங்கியிருந்த காலகட்டமானது உங்களுக்குரிய மனித உரிமைகள் மறுதலிக்கப்பட்ட காலகட்டமாகும். அதற்காக உங்களுக்கேற்பட்ட பாதிப்புகளுக்காக இந்த அரசிடமிருந்து நட்ட ஈட்டினைப் பெறுவதற்குரிய உரிமை உங்களுக்கிருப்பதாகவே நான் கருதுகின்றேன். நீங்கள் விரும்பினால் இந்த விடயத்தில் உங்கள் சார்பில் அதற்கான வழக்கினை முன்னெடுத்து வாதாட நான் தயாராகவிருக்கிறேன். அதற்குரிய ஊதியத்தினை வழக்கு வெற்றிபெறும் பட்சத்தில் கிடைக்கும் நட்ட ஈட்டுத் தொகையிலிருந்து நான் பெற்றுக் கொள்ளச் சித்தமாகவிருக்கின்றேன். நீங்கள் இதற்கென்ன சொல்லுகிறீர்கள்?"

இவ்விதம் ச்ட்டத்தரணி அனிஸ்மான் கூறவும் ஒருகணம் இருவரும் என்ன பதில் கூறுவதென்று தெரியாமல் திண்டாடிப் போனார்கள். சட்டத்தரணி அனிஸ்மானே தொடர்ந்தார்: "நீங்களிருவரும் உங்களுக்கிடையில் தாராளமாகவே கலந்தாலோசித்து முடிவினைக் கூறுங்கள். மேலும் இவ்விதம் அரசுக்கெதிராக வழக்குத் தொடுப்பதனால் ஒருவேளை உங்களது அகதிக் கோரிக்கை விடயத்தில் அவர்கள் ஓரளவுக்கு விட்டுக் கொடுத்து வழக்கினைத் தீர்ப்பதற்கும் வாய்ப்புகளுள்ளன".

இதற்குப் பின்னர் அவர்களிருவரையும் தமக்குள் கலந்துரையாட விட்டுவிட்டு சட்டத்தரணி அனிஸ்மான் வேறு காரியமாக வெளியே சென்றார். நண்பர்களிருவரும் தமக்குள் இது விடயமாகக் கலந்துரையாடினர்.

இளங்கோ: "என்ன அருள் இவன் சொல்லுறதைப் பத்தி உன்னுடைய யோசனையென்ன? காத்தியை இந்த விசயத்திலை நம்பலாமென்று நினைக்கிறியா?"

அருள்ராசா: "இவன் சொல்லுறதிலையும் நியாயமிருக்குதானே. எங்கட நிலையிலை இதிலை வென்றால் லொத்தர் விழுந்தமாதிரித்தானே.. சும்மா வாறதை ஏன் விடுவான். வந்தவரைக்கும் லாபம்தானே... எனக்கென்றால் அவன் சொல்லுறபடியே செய்து பார்க்கலாமென்றுதான் படுகிது. சில நேரம் அவன் சொல்லுற மாதிரி எங்கட அகதிக் கோரிக்கை வழக்குக்கும் இது 'பார்கயின்' பண்ன உதவலாம். எனக்கு ஓகே."

இவ்விதமாக நண்பர்களிருவரும் கலந்துரையாடி இறுதியில் சட்டத்தரணி அனிஸ்மானின் ஆலோசனைக்குச் சம்மதிப்பதாக முடிவு செய்தார்கள். சிறிது நேரத்தில் மீண்டும் திரும்பிய அனிஸ்மான் " என் அன்புக்குரிய நண்பர்களே! இந்த விடயத்தில் என்ன முடிவினையெடுத்துள்ளீர்கள்?" என்றார். அதற்கு அருள்ராசா "நாங்கள் நன்கு ஆலோசித்துப் பார்த்தோம். நீங்கள் கூறுவது சரியாகவே படுகிறது. சம்மதிக்கிறோம்." என்றான். அதைக்கேட்ட சட்டத்தரணி அனிஸ்மானின் முகமெல்லாம் உடனடியாகவே பல்லாக மலர்ந்தது. அந்த முகமலர்ச்சியுடன் "நல்ல முடிவாக எடுத்திருக்கிறீர்கள். நாளைக்கு மீண்டும் வாருங்கள். உரிய பத்திரங்களைத் தயாரித்து வைக்கிறேன். கையெழுத்துப் போட வேண்டியிருக்கும்." என்றும் கூறினார்.

[தொடரும்]

No comments: