மீண்டும் மீண்டும் அந்தத் துன்பகரமான நினைவுகளே சிந்தையில் வளைய வந்து கொண்டிருந்தன. அந்தச் செய்தியின் ஆழமும், அதன் பின்னால் புதைந்து கிடக்கும் துயரமும் நெஞ்சினைப் பிளக்குமொரு வலியாகக் கோடிழுத்தன. எதற்காக? ஏன்? இணையக் கடலின் ஆழத்தில் முத்தெடுக்க முனைந்தவன் முள்ளையெடுத்த கதையாக ஆகிப் போன நிலைமை. எத்தனை கனவுகளுடன், கற்பனைகளுடன், துள்ளல்களுடன், தழுவல்களுடன், மகிழ்ச்சி கலந்த உணர்வுகளுடனிருந்தது சூழல். பொறுப்பும், கனிவும், காதலும் மிக்கு விளங்கியது பொழுது. இளங்கணவனும் தந்தையுமான அந்த இளைஞன்; தாயும், தாரமுமான அந்த இளம் யுவதி. வஞ்சகமற்ற பால் மணம் மாறா அந்தப் பச்சிளங் குருத்துகள்.
எதற்காக இந்தக் கூத்து?
படைப்பின் இன்பத்திற்குப பின் இவ்விதமொரு சோகமா?
சில சம்பவங்கள், சில சொற்கள், சில காட்சிகள் இவையெல்லாம் சில வேளைகளில் நெஞ்சினை உலுப்பி விடும் ஆற்றல் பெற்றவையாக இருந்து விடுகின்றன. இந்தச் சம்பவமும், அது பற்றிய ஊடகச் சித்திரிப்புகளும், பிம்பங்களும் அத்தகைய வல்லமை மிக்கவை.
மீண்டும் மீண்டும் அந்தக் காட்சிகளும், அவற்றின் பின்னால் பொதிந்து கிடக்கும் துயரங்களும், சோகங்களும்....
உலகம் முழுவதும்தானே இத்தகைய காட்சிகளாலும், துயரங்களாலும், கொடுமைகளாலும் நிறைந்து கிடக்கின்றது. ஏன் இந்தக் கண்ணீர்த் தீவின் தென்பகுதியில் கூட இத்தகைய காட்சிகள், துயரங்கள் நடக்கவில்லையா?
உண்மைதான். இந்தப் பூமிப்பந்தின் எந்தத் திக்கிலென்றாலும் இத்தகைய சம்பவங்கள் நடந்து விடுகையில் நெஞ்சு வலிக்கத்தான் செய்கிறது. ஆயினுமென்ன.. நானுமோர் அற்ப மனித ஐந்துதானே. அதே குறை நிறைகளும் எனக்கிருக்காதா? ஊரின் துயரங்களையும், சோகங்களையும்விட என் வீட்டுத் துயரமும், சோகமும் என்னைத் தாக்கும் வீச்சு அதிகமல்லவா? அதற்கு நான் மட்டுமென்ன விதி விலக்கா?
போரில், யுத்தத்தில் நடைபெறும் அழிவுகளை விடத் தனிப்பட்ட துன்புறுத்தல்களுடன், வதைகளுடன் கூடிய இத்தகைய அழிவுகளின் தாக்கம் மிகவும் அதிகம்தான்.
மீண்டும் மீண்டும் அதே நினைவுகள்...
அன்று காலையில் வழக்கம்போல் எத்தனை எத்தனை கனவுகளுடன், இன்பங்களுடன், அந்தக் குடிசையின் பொழுது விடிந்திருக்கும்? அந்தப் பிஞ்சுகளில் எத்தனை எத்தனைப் பிஞ்சுக் கனவுகள், கற்பனைகள் பூத்திருக்கும்? துணையிரண்டின் நெஞ்சங்களில் எத்தனை எத்தனை காதல் மலர்கள் வழக்கம் போல் பூத்திருக்கும்?
எனக்கு மட்டும் வருங்காலம் அறிந்து எதிர்வு கூடும் சாத்தியமிருந்திருந்தால்....... காலத்தை மீறிடும் வல்லமை இருந்திருந்தால்.... கடந்த காலத்திலிருந்து உம்மிருப்பின் முடிவு வரையிலான சம்பவக் கோர்வைகளை உயிர்ப்புடன் மீள அடுக்கி வைத்திருக்க மாட்டேனா?
சோதிடர்களே ! எங்கு போயொளிந்தீர்?
கண்களுக்கு முன்னால் உறவுகள சீர்குலைக்கப்பட்ட போது அவ்வுறவுகளின் உள்ளங்களில் தானெத்தனை உணர்வுகளோ?
முடிவில் கூட நிம்மதியற்ற இருப்பு!
என்ன உலகமிது! என்ன உலகம்!
போரொழிந்த பாரொன்றின் சாத்தியமுண்டா? என்றாயினும்.
சொந்த மண் துறந்து, தொலைவிலினிலே என்னிருப்பு. நீரோ தொலைவிலிருந்து மண் நாடி மீண்டீர்? உம் விடயத்தில் நிலமென்னும் நல்லாள் நல்லாளற்றுப் போனாதேனோ?இருந்தும், மண் நாடி, வல்லூறுகளுக்கு மத்தியில் கூடு கட்டி இருப்பை எதிர்பார்த்த புட்களே! உம்மிருப்பின் உறுதியும், துணிவும், நம்பிக்கையும் போற்றுதற்குரியன. போற்றுதற்குரியன. பயனற்றுப் போகாதும் இருப்பு இங்கொருபோதும்.
வங்காலை தலை நிமிர்ந்து நிற்கிறது.
ngiri2704@rogers.com
**மன்னாருக்கு தென் கிழக்கே வங்காலை பத்தாம் வட்டாரத்திலுள்ளது தோமஸ்புரி கிராமம். ஈழச் சூழல் காரணமாகத் தமிழகத்திற்கு அகதிகளாகச் சென்று விடுதலைப் புலிகளுக்கும், ஸ்ரீலங்கா அரசுக்குமிடையில் ஏற்பட்ட யுத்த நிறுத்தத்தைத் தொடர்ந்து தமிழகத்திலிருந்து மீண்டும் தமது தோமஸ்புரிக் கிராமத்திற்குத் திரும்பிய குடும்பம் மூர்த்தி மாட்டினுடையது (வயது: 35). மனைவி: மேரி மெக்ரனினின் சித்திரா (வயது 27). குழந்தைகளிருவர்: ஆன் லக்சிகா (பெண் குழந்தை, வயது 09), ஆன் டிலக்சன் (ஆண் குழந்தை, வயது 07). மூர்த்தி மாட்டின் தச்சுத் தொழில் செய்து பிழைக்கும் தொழிலாளி. அவரது தொழிலுக்குப் பயன்படுத்தும் உழி போன்ற உபகரணங்களால் பயங்கரமான சித்திரவதைகளின் பின்னர் குடும்பத்தினர் அனைவரும் படுகொலை செய்யப்பட்டனர். ஸ்ரீலங்காப் படையினரே இப்படுகொலைக்குக் காரணமெனக் குற்றஞ்சாட்டிய கிராமத்தவர்கள் படையினருக்கெதிராக நீதி வேண்டி ஆர்ப்பாட்டம் செய்தனர்.**
No comments:
Post a Comment