Sunday, May 03, 2020

தொடர் நாவல்: குடிவரவாளன் - வ.ந.கிரிதரன் -


அத்தியாயம் இருபத்தியிரண்டு: சுதந்திரதேவிக்கொரு விண்ணப்பம்!

 
இளங்கோ அருள்ராசாவிடம் ஹரிபாபுவுடனான வேலை முடிவுக்கு வந்த விடயத்தைக் கூறியபோது அவன் கொஞ்சமும் ஆச்சரியப்படவில்லை. "இதை நான் எப்பவோ எதிர்பார்த்திருந்தேன். ஆனால் இவ்வளவு நாளைக்காவது வேலையும் தந்து சம்பளமும் தந்தானே. அதுக்காக அவனைப் பாராட்ட வேண்டியதுதான். அவனுக்கு நன்றியாக இருக்க வேண்டியதுதான்" என்றவன் கார்லோவிடம் பிரசுரங்கள் விநியோகிக்கும் வேலை கிடைத்தது பற்றிக் குறிப்பிட்டதும் "ஒரு விதத்திலை இதுவும் நல்லதுக்குத்தான்" என்றான்.

"அருள் எந்த விதத்திலை இது நல்லதென்று நீ நினைக்கிறாய்?"

"கார்லோவிடம் வேலை பின்னேரங்களிலை ஒரு சில மணித்தியாலங்கள்தானே. அப்ப நாள் முழுக்க எங்களுக்கும் நிறைய நேரமிருக்கும் வேறேதாவது நல்ல வேலை தேட. இல்லையா? அதோடை 'இமிகிரேசன்' அலுவலைப் பார்க்கலாம் இல்லையா..."

அருள்ராசா கூறியதும் சரியாகத்தான் பட்டது. "ஒரு விதத்திலை நீ சொல்லுறதும் சரியாய்த்தானிருக்கு... எல்லாமே நல்லதுக்குத்தான்.
பகல் முழுக்க வேறேதாவது வேலையைத் தேடிப்பார்க்க வேண்டியதுதான். சும்மா நேரம் இருக்குதென்று விஸ்கியை அடித்துப் போட்டுப் பகல் முழுக்கப் படுத்துப் படுத்துக் கிடக்கிறதில்லை. இந்த விசயத்திலை உன்னை நல்லக் கட்டுப்பாட்டிலை வைத்திருக்க வேண்டும் கண்டியோ?"

"நீ சொல்லுறதும் சரிதான். இப்பிடியே காலத்தை வீணக்கிக் கொண்டிருக்க முடியாது. எப்படியாவது நிரந்தரமானதொரு வேலையைக் கண்டு பிடிக்க வேண்டியதுதான்.."

"இல்லாவிட்டால்... கொஞ்சமும் காசு கீசு சேர்க்க முடியாது... இப்பப் பார்.. ஒவ்வொரு நாளும் இந்த வாழ்க்கையைக்
கொண்டோடிறதிலையே முடிஞ்சு போகுது. ஒரு பொழுதுபோக்கு அது இதென்று ஒன்றுமில்லை. எப்பவாவது இருந்திருந்திட்டு அடிக்கிற தண்ணிப் 'பார்ட்டி'யோடை எல்லாமே சரி..."

"என்ன செய்யிறதடா இளங்கோ... எல்லாம் இந்த இமிகிரேசக்காரங்களாலை வந்த கரைச்சல்தானே... அவங்கள் மட்டும் இந்நேரத்துக்கு 'சோசல் இன்சுரன்ஸ் கார்ட்'டைத் த்ந்திருந்தாங்களென்றால் இந்த வேலைப் பிரச்சினை இந்நேரம் போயிருக்கும். ம்.. எல்லாம் காலம்.."

அருள்ராசா கூறுவதும் இளங்கோவுக்குச் சரியான கூற்றாகத்தான் பட்டது. அன்றிரவு எல்லோரும் தூக்கத்தில் சாய்ந்த பின்னும்
இளங்கோவுக்குத் தூக்கமே வரவில்லை. வழக்கமாக இவ்விதமான சமயங்களில் செய்வதுபோல் தனது குறிப்பேட்டையும், பாரதியார்
கவிதைகளையும் எடுத்துக் கொண்டு அறையில் தூக்கத்திலாழ்ந்திருப்பவர்களின் தூக்கத்தினைக் கலைப்பதற்கு விரும்பாமல் உணவறைக்கு வந்தான். சிறிது நேரம் பாரதியாரின் கவிதைகளைப் படிப்பதிலீடுபட்டான். அவனைப் பொறுத்தவரையில் வாழ்க்கை சலிப்பும், விரக்தியுமாகச் சாய்ந்திருக்கும் சமயங்களிலெல்லாம் அவனுக்குத் துணையாக இருப்பவை நூல்களே. முக்கியமாகப் பாரதியாரின் கவிதைகளைப் படிக்கும்போது அவனது சோர்ந்து, துவண்டிருக்கும் மனதானது உற்சாகம் பெற்றுத் துள்ளிக் குதிக்கவாரம்பித்துவிடும்.
பாரதியாரின் கவிதைகளைப் படிக்கப் படிக்க மனது இலேசாகிக் கொண்டே வந்தது. உள்ளத்தில் உறுதி கலந்த உற்சாக உணர்வுகள்
சிறகடிக்கவாரம்பித்தன. அதன்பின் தனது குறிப்பேட்டினை எடுத்து எழுதவாரம்பித்தான். குறிப்பேடு பல வழிகளில் அவனுக்குதவி புரிந்து கொண்டிருந்தது. மனதிலுள்ள பாரங்களை இறக்கி வைப்பதற்குரிய சுமைதாங்கியாக, வாழ்க்கையைத் திட்டமிடுவதற்குரியதொரு சாதனமாக, அந்தரங்க உணர்வுகளைப் பகிர்ந்துகொளவதற்குரியதொரு துணையாகப் பல்வகைகளில் உதவிக்கொண்டிருந்தது. குறிப்பேட்டினைப் பிரித்தவன் முதலில் ஏற்கனவே எழுதப்பட்டிருந்த குறிப்புகளைச் சிறிது நேரம் வாசித்தான். அதன்பின் எழுதவாரம்பித்தான்:

'நாட்டை விட்டு வெளியேறி இன்றுடன் ஆறுமாதங்கள் கழிந்து விட்டன. முதல் மூன்று மாதங்கள் தடுப்பு முகாமில். அடுத்த மூன்று மாதங்கள் வெளியில் காற்றிலாடும் சருகாக. ஒவ்வொரு நாளையும் கழிப்பதற்கான போராட்டத்திலேயே வாழ்க்கை கழிந்து கொண்டிருக்கிறது. இரவு வானை, மதியை, சுடரை, வீசும் தென்றலை, புள்ளை, அந்தியின் அடிவானத்து வர்ண விளையாட்டை.. இவற்றையெல்லாம் மனம்விட்டு இரசிக்க முடியவில்லை. அந்த அளவுக்கு இருப்புப் பிரச்சினையே பெரியதொரு பிரச்சினை. இதற்கு விரைவில் முடிவொன்றினைக் கட்ட வேண்டும். இப்படியே வாழ்வினைச் செல்ல விடக்கூடாது. போனது போகட்டும். இனி அடுத்த ஆறு மாதத்திற்குள் என் வாழ்க்கை உறுதியானதொரு அடித்தளத்தில் கட்டப்பட வேண்டும். அதற்கான உறுதியை இப்பொழுதே இந்தக் கணமே எடுத்துக் கொள்கின்றேன். என் அருமைக் குறிப்பேடே! நீ தான் இதற்குச் சாட்சி!

வீட்டாருக்கு இங்கு நான் படுகிற கஷ்ட்டங்கள் தெரியாது. சொன்னாலும் புரியப் போவதில்லை. ஒரு நேரச் சாப்பாடிற்காக என் மண்ணில் ஒவ்வொரு நாளையும் குடும்பம், குட்டிகளுடன் கழிக்கும் குடியானவர்களின் அன்றாட நிலைமையை இந்தக் கணத்தில் என்னால் மனப்பூர்வமாக உணர முடிகிறது. எந்தவித நம்பிக்கைகளுமின்றி அன்றாடம் வாழ்வே போராட்டமாக வாழும் மக்களுடன் ஒப்பிடும்பொழுது என்நிலை ஒரு பொருட்டேயல்ல. ஆனால் இவற்றையெல்லாம் வீட்டார் உணரும் நிலையில் இருப்பார்களென்று நினைக்க முடியாது. அவர்களைப் பொறுத்தவரையில் மகன் உலகின் குபேரபுரியில் வாழ்கிறான். 'பொடியன் அமெரிக்காவிலை' என்று சொல்லும்போதே அவர்களது வாயெல்லாம் பூரிப்பால் மலர்ந்து விடும். ஆனால் 'பொடியன் இங்கு படுகிற பாட்டை' நேரில் வந்து பார்த்தால் மட்டும்தான் அவர்களால் ஓரளவுக்காவது உணர்ந்து கொள்ள முடியும்.' இவ்விதம் சிறிது நேரம் குறிப்பேட்டில் எழுதினான். அதன் பின் இளங்கோவின் கவனம் அடுத்த ஆறு மாதங்களைப் பற்றிய எதிர்காலத் திட்டங்களில் ஆழ்ந்து போனது. அவற்றைப் பற்றி எழுதும்போது மேலும் மேலும் உள்ளம் நம்பிக்கையால், உற்சாகத்தால் துள்ளிக் குதிக்கத் தொடங்கியது.

'சரியாக இன்னும் ஆறு மாதத்திற்குள் இந்த மண்ணில் மிகவும் உறுதியாகக் காலூன்ற வேண்டும். அதற்கு இயலுமானவரையில் குடிவரவு அதிகாரிகளுடன் மீண்டும் மீண்டும் கதைத்துப் பார்க்க வேண்டும். இந்த ஆறு மாதங்களுக்குள் எதுவுமே சரிவராவிட்டால் தொடர்ந்தும் இங்கிருப்பதை என்னால் நினைத்துப் பார்க்க முடியாது. எந்த விதச் சட்டரீதியான அடையாளத்துக்குரிய ஆவணங்களுமில்லாமல் ஒன்றுமே செய்ய முடியாது. ஒரு வங்கிக் கணக்குத் தொடங்கக் கூட முடியாது. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொருத்தரின் துணையை நாட வேண்டும். இதற்கொரு முடிவை எவ்வளவு விரைவில் கட்ட வேண்டுமோ அவ்வளவு விரைவில் கட்ட வேண்டும். இந்த விசயத்தில கடமையைச் செய்வேன். பலனை எதிர்பார்க்காமல். ஆனால் செயலுக்குரிய பலனெதுவுமில்லாதிருக்கும் பட்சத்தில் தொடர்ந்தும் செயலாற்றிக் கொண்டிருப்பதில் அர்த்தமெதுவுமிருப்பதாகத் தெரியவில்லை. ஆறு மாதங்களுக்கு மேல் பலனை எதிர்பார்க்க வேண்டியதுதான். அதுவரையில் எந்தவிதப் பயனையும் எதிர்பார்க்காமல் முடிந்தவரையில் முயல வேண்டியதுதான். அதன் பிறகும் எந்தவிதப் பயனும் விளையாவிட்டால் இந்த மண்ணில் நான் ஒருபோதுமே இருக்கப் போவதில்லை.

விறகுவெட்டி, தெருவிளக்கில் படித்த ஆபிரகாம் லிங்கனுக்குச் சாத்தியமான அமெரிக்கக் கனவு எனக்குச் சாத்தியமாக வேண்டுமென்றால் முதலில் எனக்கும் அவர்களுக்கிருந்ததைப் போல் இந்த மண்ணில் காலூன்றுவதற்குரியதோரிடம் , அது தற்காலிகமாகவேனுமிருக்க வேண்டும். அதனை இந்த அரசு செய்து தர வேண்டும். அடுத்த ஆறு மாதங்களிலாவது அதனை இந்த அரசு செய்து தருமா?

நியூயார்க்கின் துறைமுகத்தில் நின்றபடி தனது குடிமக்களை, வந்தேறு குடிகளை, அடக்கு ஒடுக்கு முறைகளுக்குள்ளாகி ஓடோடிவரும் அகதிகளை வரவேற்கும் சுதந்திரதேவி ஏன் சிலையாக நிற்கிறாளென்று இப்பொழுதுதான் தெரிகிறது? சுதேசிகளுக்கொரு சட்டம். விதேசிகளுக்கொரு சட்டம். சுதேசிகளுக்குள்ளும் வர்ண அடிப்படையில் நிலவுகின்ற இன்னுமொரு சட்டம். அபயக் குரலெழுப்பி ஓடிவரும் அகதிகளுக்கு நீரிலொரு சட்டம்; நிலத்திலொரு சட்டம். ஓடிவரும் அகதிகளுக்குச் சுதந்திரவொளி காட்டி இருகரம் நீட்டி ஆதரிக்க வேண்டிய உன்னால் அது முடியாமல் போனதினால் ஒருவேளை சிலையாகிப் போனாயோ

சுதந்திரதேவியே! இந்த உலகுக்கெல்லாம் நீ விடுதலையினையும், அது பற்றிய ஞானத்தினையும் போதிப்பதாகக் கூறுகின்றார்களே!
ஆனால். என் விடயத்தை எடுத்துப் பார். இங்குள்ள தடுப்பு முகாம்களுக்குள் அன்றாடம் கனவுகளுடனும், கற்பனைகளுடனும்,
ஏக்கங்களுடனும் வளைய வரும் இந்தப் பூவுலகின் பலவேறு திக்குகளிலிருந்தும் வந்து வாடிக் கொண்டிருக்கும் சுதந்திரம் மறுக்கப்பட்ட அகதிகளை எண்ணிப் பார்! உலகுக்கெல்லாம் சுதந்திரத்தைப் போதிக்குமுன் மண்ணில் அடைக்கலம் நாடி வந்தவர்களுக்கேனிந்த நிலை? என்னைப் பொறுத்தவரையில் இந்த மண்ணை நோக்கிக் களவாகவோ அல்லது சட்டவிரோதமாகவோ வந்தவனல்லன். முறையான ஆவணங்களுடன் இன்னொரு நாட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்தவனை இங்கிருந்து கொண்டு செல்ல வேண்டிய விமானம் கொண்டு
செல்ல மறுத்து விட்ட நிலையினால் இந்த மண்ணில் நிர்க்கதிக்குள்ளாகிப் போனவன். சட்டரீதியாக இந்நாட்டினுள் நுழைந்தவனைச் சட்டவிரோதமாக நுழைந்தவனென்ற பிரிவில் வைத்துத் தடுப்பு முகாமில் அடைத்து வைத்ததும் நீ சுதந்திரத்தைப் போதிக்குமிந்த மண்ணில்தானே நிகழ்ந்தது. சுதந்திரதேவியே!'

இவ்விதம் சிறிதுநேரம் மனப்பாரங்களையெல்லாம் தனது உற்ற துணையான அந்தக் குறிப்பேட்டில் கொட்டித் தீர்த்தான் இளங்கோ.
இவ்விதம் சுமைகளை இறக்கிய மனதில் சிறிது உறுதியும், உற்சாகமும் குமிழியிட்டன. இறுதியாக இவ்விதம் எழுதினான்: -
சுதந்திரதேவியே! உன் மண்ணில் நீ போதிக்கும் சுதந்திரம் என்னைப் போன்றவ்ர்களுக்கு மறுக்கப்பட்டபோதும் நான் உன்னைப் போற்றுகின்றேன். நீ போதிக்கும் சுதந்திரத்தின் அருமையினை உணர்ந்தவன் நான். அதனால் உன்னைப் போற்றுகின்றேன். இரவிலும், பகலிலும், மழையிலும், வெயிலிலும் தனியாக உயர்ந்து நின்று விடுதலையினை உலகுக்கெல்லாம் போதிக்கின்றாயே! அந்தத் தியாகத்தை நான் மதிக்கின்றேன். 'எத்தனை இடர் வரினும் தளர்ந்து விடாதே! விடுதலைக்காகப் போராடு! உலக விடுதலைக்காகப் போராடு!' என்று நீ இயம்புவதை என்னால் உணர்ந்து கொள்ள முடிகிறது. சுதந்திரதேவியே நீ வாழி! -

இவ்விதம் உணர்வுச் சுமைகளைக் குறிப்பேட்டிலிறக்கியதும் உள்ளத்தில்தானெத்தனை மகிழ்ச்சி! அந்த மகிழ்ச்சியுடன் பாரதியாரின் கவிதை நூலினை மீண்டும் பிரித்தான் இளங்கோ.

'அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே!
இச்சகத்து ளோரெல்லாம் எதிர்த்துநின்ற போதினும்,
அச்சமில்லை , யச்சமில்லை, அச்சமென்ப தில்லையே.
துச்சமாக வெண்ணிநம்மைத் தூறுசெய்த போதினும்,
அச்சமில்லை , யச்சமில்லை, அச்சமென்ப தில்லையே.
பிச்சைவாங்கி யுண்ணும்வாழ்க்கை பெற்றுவிட்ட போதினும்,
அச்சமில்லை , யச்சமில்லை, அச்சமென்ப தில்லையே.
இச்சைகொண்ட பொருளெலாம் இழந்துவிட்ட போதினும்,
அச்சமில்லை , யச்சமில்லை, அச்சமென்ப தில்லையே.......
உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும்,
அச்சமில்லை , யச்சமில்லை, அச்சமென்ப தில்லையே.'

அதன்பின்னர் நண்பர்கள் ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்த அறையினுள் மெதுவாக வந்தவன் தன் படுக்கையில் சாய்ந்தான். சாய்ந்தவனை விரைவிலேயே நித்திராதேவி வந்து அரவணைத்துக் கொண்டாள். அவளது அரவணைப்புக்குள் தஞ்சமாவதற்கு முன்னர் அவன் பின்வருமாறு உறுதியாக நினைத்துக் கொண்டான்: 'இன்னும் ஆறு மாதங்கள் மட்டும்தான். அதன்பிறகு சரிவராவிட்டால் அடுத்த பயணத்தைத் தொடங்க வேண்டியதுதான்.' இவ்விதமாக எதிர்காலம் பற்றியதொரு தெளிவான சிந்தனையால் இளகிக் கிடந்தவனை நித்திராதேவி மிகவும் இலகுவாகவே அணைத்துக் கொண்டாள்..

[தொடரும்]

No comments: