Sunday, June 07, 2009

இணையத்தின் வரவும் , கணித்தமிழின் விளைவும், பதிவுகளின் உதயமும்! - வ.ந.கிரிதரன்


இணையத்தின் வரவும் , கணித்தமிழின் விளைவும், பதிவுகளின் உதயமும்! - வ.ந.கிரிதரன்
['வடக்குவாசல்' இலக்கிய மலருக்காக எழுதியது- ஆசிரியர்]

பொதுவாக மானுட குலத்தின் வளர்ச்சியென்பது தொழில்நுட்ப வளர்ச்சியுடன் பின்னிப் பிணைந்தவொன்று. மானுட சமுதாயத்தில் இதுவரையில் நிலவி வந்த, நிலவி வரும் சமுதாய அமைப்புகளின் பரிணாம வளர்ச்சிக்குக் காரணமே தொழில் நுட்ப வளர்ச்சியானது உற்பத்தி முறையில் ஏற்படுத்திய மாற்றங்களின் வளர்ச்சியே. மானுட வரலாற்றின் பலவேறு காலகட்டங்களில் அவ்வப்போது ஏற்பட்ட தொழில்நுட்ப மாற்றங்களெல்லாம் பல்வேறு துறைகளில் மாற்றங்களை ஏற்படுத்தினாலும் வானொலி மற்றும் தொலைக்காட்சிப் பெட்டிகளின் வரவானது தகவற் பரிமாற்றத்தில் மிகப்பெரிய மாறுதல்களை ஏற்படுத்தியது. அதே சமயம் அரசியல், இலக்கியம், கல்வி, ஆய்வு, பிரயாணம், விஞ்ஞானமெனப் பலவேறு துறைகளிலும் மேற்படி உபகரணங்களின் வரவானது தாக்கங்கள் பலவற்றை ஏற்படுத்தின. எந்தவொரு தொழிநுட்பத்தின் தன்மைக்கேற்பவும் மேற்படி வெகுசன ஊடகத்துறையிலுருவான மாற்றங்களும் ஆரோக்கியமான, ஆரோக்கியமற்ற விளைவுகளை உருவாக்கின. தகவல் பரிமாற்றத்தில் மேற்படி தொழில் நுட்பங்களின் மாற்றங்களை இன்னும் நவீனமயப்படுத்தச் செய்மதிகளின் வரவு உதவியதெனலாம். செய்மதிகளின் மூலம் இதுவரை காலமும் நாடுகளின் எல்லைகளுக்குள் மூடி மறைக்கப்பட்டிருந்த பல விடயங்களை, தகவல்களை விரைவாகவே உலகெங்கும் எடுத்துக் கொண்டு செல்வதற்கு வழிவகைகளேற்பட்டன. மேற்படி வெகுசன ஊடகங்களின் தொழிநுட்ப வளர்ச்சியானது இப்பூவுலகின் எல்லைகளைச் சுருக்கிக் கொண்டு வரும் காலகட்டத்தில் இணையத்தின் வரவானது தகவல் தொழில் நுட்படமுட்பட மானுடத்தின் பலவேறு துறைகளிலும், பிரிவுகளிலும் மிகப்பெரிய பாய்ச்சலை ஏற்படுத்தியதோடு , உலகினை எல்லைகளற்றுச் சுருக்கி விட்டது. பலவேறு மட்டத்திலிருக்கும் மானிடர் (அறிந்தவர், அறியாதவர், படித்தவர், படிக்காதவர், வறியவர், செல்வர், நடிகர், அரசியல்வாதி, வர்த்தகர், மாணவர், ஆண், பெண், முதியோர், சிறுவர், சிறுமியர், வியாபாரியென பலவேறு பிரிவினரும்) தமக்கேற்ற வகையில் இணையத்தைப் பாவிக்கும் நிலையேற்பட்டது. தகவற் பரிமாற்றங்கள் விரைவாக நடைபெற இணையம் உதவுகிறது. இதுவரை காலமும் அவ்வப்போது கண்டுபிடிக்கப்பட்ட தொழில்நுட்பங்களெல்லாம் அவற்றின் அறிமுகக் காலகட்டங்களில் உருவாக்கிய, அறிமுகப்படுத்திய மாற்றங்களெல்லாவற்றையும் விட மிகப்பெரிய பாய்ச்சலையே இணையத்தின் வரவு ஏற்படுத்தியது. வாசிப்பிலும், எழுதுவதிலும் மிகுந்த ஆர்வமுள்ள எனக்கு இணையத்தின் வரவும் அதனுடனான எனது உறவும் பல புதிய வழிகளை, சந்தர்ப்பங்களைக் காட்டின; உருவாக்கித் தந்தன. மானுடரின் இலக்கிய முயற்சிகளுக்கு இணையத்தின் வரவு உருவாக்கித் தந்த அளப்பரும் வளங்கள் என்னைக் கவர்ந்தன. குறிப்பாக பதிப்புத் துறையில் அதன் வளங்கள் மலைப்பைத் தந்தன. மிகவும் இலகுவாக உலகின் பலவேறு பகுதிகளிலும் பரந்து வாழும் எழுத்தாளர்கள் மற்றும் கலை இலக்கிய ஆர்வலர்களுடன் தொடர்பு கொள்ள முடிவதுடன்,அவர்களுடன் என் இலக்கிய முயற்சிகளைப் பகிர்ந்து கொள்ள வாய்ப்புகளுமிருப்பதை உணர்ந்தேன். அத்துடன் கருத்துகளை விவாதிக்கவும், பகிர்ந்து கொள்ளவும், அறிந்து கொள்ளவும், புரிந்து கொள்ளவும் வழிகளை இணையமேற்படுத்தித் தந்தது. கணித்தமிழானது தமிழ் மொழியின் வளர்ச்சியின் முக்கியமானதொரு மைல்கல் என்பதை உணர முடிந்தது.

'பதிவுகளின்' தோற்றமும், நோக்கமும்.....

இத்தகையதொரு சூழலில்தான் தகவற் தொழில்நுட்பத் துறையில் மிகப்பிரபலமான நிறுவனங்களுடன் இனைந்து பணியாற்றும்
சந்தர்ப்பங்கள் ஏற்பட்டன. இணையததளப் பராமரிப்புத் துறையில் பணியாற்றிய அனுபவம் மேலும் அதன் ஆரோக்கியமான பயன்களை உணர வைத்தது. அவ்விதமானதொரு சமயத்தில்தான் 'பதிவுகள்' இணைய இதழினை மிக எளிமையாக 2000ம் ஆண்டின் ஆரம்ப காலகட்டத்தில் ஆரம்பித்தேன். முரசு அஞ்சலின் உதவுயுடன் தட்டச்சு செய்வதும் இலகுவானதாதவிருந்தது. பதிவுகள் போன்ற இதழ்கள் பல ஆரம்பத்தில் உருவானதற்கு முரசு அஞ்சலின் வரவு மிகுந்த பங்களிப்பினை அளித்ததை அனைவரும் அறிவர். இதற்காக முத்து நெடுமாறனுக்கு நன்றி கூறவேண்டும்.

பதிவுகள் இணைய இதழ் உருவானதன் முக்கியமான நோக்கங்கள் பற்றி பதிவுகள் சஞ்சிகையிலேயே அவ்வப்போது கூறியிருக்கின்றோம். அவற்றை மீண்டுமொரு முறை இங்கு நினைவு கூர்வது பொருத்தமானதே. 'பல்வேறு நோக்கங்கள். எழுத்தாளனான நான் பல்வேறு படைப்பாளிகள் மற்றும் தமிழ் இலக்கிய ஆர்வலர்களுடன் என் சிந்தனைகளைப் பரிமாறிக் கொள்வது அதிலொன்று. பதிவுகளின் முக்கியமான நோக்கங்களிலொன்று 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்ளல் ( 'Sharing knwoledge with every one'). ஆரம்பத்தில் மிகவும் எளிமையாக ஆரம்பிக்கப்பட்ட 'பதிவுகள்' தளத்தின் தாரகமந்திரமாக 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொளவோம்' என்னும் சொற்றொடரினை உருவாக்கிக் கொண்டேன். ஒவ்வொரு முறை பதிவுகள் இதழினைப் பார்க்கும் சமயங்களிலெல்லாம் மேற்படி சொற்றொடர் நெஞ்சில் உற்சாகத்தினையும், களிப்பினையுமேற்றி அவ்வப்போது ஏற்படும் சலிப்புணர்வுகளையெல்லாம் ஒதுக்கிவிடுவதில் பெரிதும் ஒத்துழைத்தது. தமிழ் இலக்கியத்தின் பல்வேறு பிரிவுகளிலும் வாசகர்கள், படைப்பாளிகள் மற்றும் அறிஞர்கள் அனைவரும் தம் சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்ளுமிடமாகப் பதிவுகள் விளங்குகின்றது. இணையத்தின் ஆரோக்கியமான பயன்களிலொன்று மிக இலகுவாகப் பலரை எல்லைகளைக் கடந்து தொடர்பு கொள்ள வைத்தலென்பது.. இணைய இதழொன்றினால் மிக இலகுவாக, விரைவாகப் பல படைப்பாளிகள், ஆர்வலர்களுடன் தொடர்பு கொள்ள முடியும். அதற்கு அனைவரையும் கணித்தமிழின் நன்மைகளை உணர வைக்க வேண்டும். இத்தகைய இணைய இதழ்களால், அவற்றை வெற்றிகரமாக நடாத்திக் காட்டுவதன் மூலம், அவற்றில் பங்களிக்க வைப்பதன் மூலம் உணர வைக்க முடியும். இதற்கு முதல்படியாக பதிவுகள் ஆரம்பத்தில் பாவிக்கும் எழுத்துருக்களில் ஆக்கங்களை, எண்ணங்களை அனுப்பி வைக்கும்படி கோரினோம். அவ்விதம் வரும் படைப்புகளையே பிரசுரிக்கத் தொடங்கினோம். பல பெரிய எழுத்தாளர்கள் ஆரம்பத்தில் தமிழில் எழுதச் சிரமப்பட்டபோது அவற்றை அவர்களுக்கு விளங்கப்படுத்தினோம். அதன்பின் அவர்கள் பதிவுகளுக்குத் தாங்களாகவே உரிய எழுத்தில் ஆக்கங்களை அனுப்பத் தொடங்கினார்கள். இதன் மூலம் படைப்பாளிகளுக்குக் கணித்தமிழின் பயனை நேரடியாகவே உணரவைக்கக் கூடியதாகவிருந்தது. மேலும் பதிவுகள் இதழினை ஆரம்ப காலத்திலிருந்தே படைப்பாளிகளின், வாசகர்களின்
பங்களிப்புடன் வெளிக்கொணர்ந்திட முடிந்தது. பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்பும் படைப்பாளிகள் தங்களது ஆக்கங்களைத் தாங்களே தட்டச்சு செய்து அனுப்புவதென்பது பதிவுகள் சஞ்சிகையின் வெற்றிக்கு முக்கியமானதொரு தேவையாகவிருந்தது. ஆரம்பகாலப் பதிவுகள் இதழ் மிகவும் மோசமான வடிவமைப்புடன் ஆர்வத்தின் காரணமாக வெளிவந்ததை ஆரம்ப ஆக்கங்களைப் பார்க்கும்போது புரிந்து கொள்வீர்கள். இருந்தும் இவ்விதமாக ஆரம்பத்தில் எளிமையாக வெளிவந்து கொண்டிருந்த பதிவுகள் பலரது கவனத்தையும் கவர ஆரம்பித்தது. பலவேறு சஞ்சிகைகளில் பதிவுகளைப் பற்றிய அறிமுகக் கட்டுரைகள் வெளியாகின. தென்னாபிரிக்கக் கறுப்பின மக்களின் உரிமைக்காகக் குரல்கொடுத்த மகாத்மா காந்தியின் பேரன் தென்னாபிரிக்கக் கறுப்பின மக்களின் விடுதலைப் போரினைப் பயங்கரவாதச் செயற்பாடாகச் சித்திரித்த குடியரசுக் கட்சிக்குச் சார்பாக அன்றைய அமெரிக்க ஜனாதிபதிக்காக தேர்தலில் செயற்படுவதைப் பற்றிய பதிவுகளின் குறிப்பினை ஆனந்தவிகடன் மீள்பிரசுரம் செய்திருந்தது. இவ்விதமாகப் பதிவுகளுடன் பல்வேறு படைப்பாளிகளுட்படப் பலர் வந்து இணைந்து பங்களிப்புச் செய்யத் தொடங்கினர். அடுத்துவந்த ஆண்டுகளில் பதிவுகளில் விவாதக் களத்தினையும் ஆரம்பித்தோம். அச்சமயம் பதிவுகளின் விவாதக் களத்தில் பல படைப்பாளிகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டார்கள். பதிவுகளுக்கும் ஆக்கங்களை அனுப்பினார்கள். கணித்தமிழை படைப்பாளிகள், வாசகர்கள் அனைவரும் பயன்படுத்தும்படி செய்தல். அறிவினை அனைவருடனும் பகிர்ந்து கொள்ளல், படைப்பாளிகள், இலக்கிய ஆர்வலர்கள் அனைவருக்குமிடையிலொரு பாலமாக விளங்குதல் ஆகிவற்றை அடிப்படை நோக்கங்களில் சில எனக். குறிப்பிடலாம்'

பதிவுகளும், பல்வேறு எழுத்துக் குறிமுறை நியமங்களும்!

ஆரம்பத்தில் முரசு அஞ்சலில் இணைமதி எழுத்துருவுடன் ஆரம்பிக்கப் பட்ட பதிவுகள் இணைய இதழ் பின்னர் 'திஸ்கி' (TSCII - Tamil Standard Code for Information Interchange) எனப்படும் தகுதரம் (தமிழ் குறியீட்டு தராதரம்) என்னும் எழுத்துக் குறிமுறை நியமத்திற்கு மாற்றப்பட்டது. 'அஸ்கி' (ASCII - - American Standard Code for Information Interchange) எனப்படும் 'எட்டு பிட்' அடிப்படையிலமைந்த மேற்படி எழுத்துக் குறிமுறை நியமமானது தமிழில் உலகளாவியரீதியில் இணையத்தில் தரப்படுத்தப்பட்டு உருவாக்கப்பட்ட குறிமுறை நியமம். மேற்படி நியமமானது தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் கணினியில் ஆவணமொன்றைத் தயாரிப்பதை இலகுவாக்கியது. இக்குறிமுறை நியமத்தில் 'அஸ்கி' குறிமுறை நியமத்தில் ஆங்கில எழுத்துகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் தவிர்ந்த ஏனைய இடங்களில் தமிழ் எழுத்துகளுக்குரிய இடம் ஒதுக்கப்பட்டன. முன்னர் ஆங்கில எழுத்துகளுள்ள இடங்களிலேயே தமிழ் எழுத்துகளும் அதனை உருவாக்கியவர்களின் விருப்பு வெறுப்புகளுக்கேற்ப பிரதியீடு செய்யப்பட்டதால் அத்தகைய செயற்பாடு ஆங்கிலம், தமிழ் ஆகிய இருமொழிகளைக் கையாள்வதில் சிரமங்களையேற்படுத்தினை. தரப்படுத்தப்படாத எழுத்துக் குறிமுறை நியமத்தில் உருவாக்க்கப்பட்ட பல்வேறு தமிழ் எழுத்துகளில் உருவான கோப்புகளை வாசிப்பதற்கு அந்தந்த எழுத்துருக்களைப் பாவிக்க வேண்டிய தேவையுமிருந்தது. இந்நிலையினை தகுதர எழுத்துக் குறிமுறை நியமம் இலகுவாக்கியது. மேற்படி தகுதர எழுத்துக் குறியீட்டு முறையில் உருவான ஏதாவதொரு எழுத்துரு மூலம் உருவான கணினி ஆவணங்களை இன்னுமொரு தகுதர எழுத்துருவுள்ள கணினியிலும் வாசிப்பதை இவ்வகையான எழுத்துக் குறிமுறை நியமம் சாத்தியமாக்கியது. மேற்படி எழுத்துக் குறியீட்டு முறையினைப் பாவித்துத் தமிழைக் கணினியில் உள்ளிடுவதற்கு 'எ-கலைப்பை', முரசு அஞ்சல் போன்ற மென்பொருட்கள் மிகவும் உதவின. மேற்படி தகுதர எழுத்துக் குறிமுறை நியமத்தில் பதிவுகள் வெளிவந்து கொண்டிருந்த காலகட்டத்தில் இன்றைய தமிழ் இலக்கிய உலகின் பிரபலமான படைப்பாளிகள் பலர் பதிவுகளுக்கு ஆக்கப் பங்களிப்புச் செய்தார்கள். பதிவுகளின் விவாதக் களத்தில் ஆர்வமுடன் பங்கெடுத்துக் கொண்டார்கள். இன்றுபோல் வலைப்பூக்கள் அறிமுகப்படாத அக்காலகட்டத்தில் திண்ணை மற்றும் பதிவுகள் போன்ற இதழ்கள் நடாத்திய விவாதத்தளங்கள் நடைபெற்ற விவாதங்கள் குறிப்பிடத்தக்கன. இன்று பதிவுகள் 'பதினாறு பிட்' எழுத்துருவான ஒருங்குறி (Unicode) எழுத்துக் குறிமுறை நியமத்திற்கு மாறிவிட்டது. ஆயினும் பதிவுகளின் பழைய படைப்புகள் இன்னும் முரசு அஞ்சலின் இணைமதி மற்றும் தகுதர எழுத்துருக்களில் இருக்கின்றன. அவற்றை வாசிப்பதற்கு அவற்றிற்குரிய மென்பொருட்கள் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும். ஆயினும் இன்று ஒருங்குறியில் வெளிவரும் பதிவுகள் இதழினை ஒருங்குறி எழுத்துக் குறியீட்டு முறை நியமத்தினை உள்ளடக்கியுள்ள 'விண்டோஸ் XP' போன்ற இன்றைய 'ஆபரேட்டிங் சிஸ்டம்ஸ்' மூலம் வாசிப்பதில் வாசகர்கள் எந்தவிதச் சிரமங்களையும் எதிர்நோக்கத் தேவையில்லை. மேலும் முன்னர் குறிப்பிட்ட முரசு அஞ்சல், எகலப்பை போன்ற மென்பொருட்கள் ஒருங்குறியில் தமிழைக் கணினியில் உள்ளீரு செய்வதற்கு உதவியாகவிருக்கின்றன. ஆங்கில மொழியைப் போல் ஒருங்குறி எழுத்துக் குறிமுறை நியமத்தில் உலகின் மொழிகளனைத்துக்கும் உரிய இடங்கள் உள்ளன. இதனால் ஒருங்குறியை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட எந்த 'ஆபரேட்டிங் சிஸ்டம்ஸ்' என்றாலும் , அது எந்த மொழ்யில் இருந்தாலும் , தமிழ் தமிழாகத்தான் தெரியும். இது கணித்தமிழ் உலகில் முக்கியமானதோர் வளர்ச்சி. மேற்படி தமிழ் எழுத்துருக்களின் பல்வேறு குறிமுறை நியமங்களின் வளர்ச்சிப்போக்கினூடு பதிவுகளும் வள்ர்ந்து வந்திருக்கின்றது. இதற்காக மேற்படி வளர்ச்சிப்போக்குக்குப் பங்களித்த தகவற் தொழில்நுட்பத்
தொழில் நுட்ப வல்லுநர்களுக்கெல்லாம் பதிவுகள் மிகவும் கடமைப்பட்டிருக்கின்றது.

பதிவுகளின் ஆரம்பகாலத்துப் படைப்புகள் நூற்றுக் கணக்கில் 'அஸ்கி', 'திஸ்கி' போன்ற எழுத்துக் குறிமுறை நியமத்திலுள்ளன. அவற்றையேல்லாம் எழுத்து உருமாற்றிகளைப் பாவித்து இன்றைய ஒருங்குறி முறைக்கு மாற்ற வேண்டும். இது மிகப்பெரிய வேலை. இதனைத் தற்போதுள்ள சூழலில் என்னால் தனித்துச் செய்ய முடியாது. காலப்போக்கில் பகுதி பகுதியாக மேற்படி உருமாற்றத்தைச் செய்ய வேண்டும். ஆர்வமுள்ளவர்கள் தொண்டர்களாக இணைந்து பணியாற்றலாம்.

பதிவுகளின் வளர்ச்சி பற்றி...

2000 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட பதிவுகள் இணைய இதழ் எட்டு ஆண்டுகளைக் கடந்து இன்னும் வெளிவந்து கொண்டிருக்கின்றது. இணைய இதழ்கள் பற்றிய பலவேறு பல்கலைக் கழக ஆய்வுக் கட்டுரைகளில் பதிவுகள் முக்கியமானதோர் இணைய இதழாகக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. பதிவுகளில் வெளிவந்த படைப்புகள் பற்றிய ஆய்வுக் கட்டுரைகள் (என்னுடைய படைப்புகளுட்பட) தமிழகப் பல்கலைக் கழகங்களில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றன. இன்னும் தமிழ் இலக்கிய உலகின் முக்கியமான படைப்பாளிகள், அறிமுகப்படைப்பாளிகளெனப் பலர் ஆர்வத்துடன் மாதாமாதம் பதிவுகளுக்குத் தங்களது படைப்புகளை அனுப்பி வருகின்றார்கள். விரும்பியவர்கள் சந்தா வழங்கி ஆதரவளிக்கலாமென்று கோரியிருந்த போதிலும் பதிவுகள் இதழ் இன்னும் இலவசமாகவே வெளிவருகின்றது.

பதிவுகள் உலகெங்கும் பரந்து வாழும் தமிழ்ப் படைப்பாளிகள், கலை, இலக்கிய ஆர்வலர்களின் ஆர்வம் மிக்க பங்களிப்புடன் தொடர்ந்து வெளிவருகின்ற போதும் , இணைய இதழைப் பொறுத்தவரையில் இன்னும் அதன் ஆசிரியராக, இணையத் தளப் பராமரிப்பாளராக (Webmaster), அதன் பதிப்பாளராக நானே இருந்து வருகின்றேன். கடந்த எட்டு வருடங்களில் இதற்காக நான் செலவழித்த, செலவழிக்கும் நேரம் அதிகமானது. இருந்தும் இன்னும் என் ஆர்வம் குறைந்து விடவில்லை. ஒவ்வொரு மாதமும் ஆயிரக்கணக்கானவர்கள் பதிவுகளை பல்வேறு நாடுகளிலிருந்தும் வாசித்து வருகின்றார்கள். கடிதங்கள், படைப்புகள் மூலம் ஊக்குவித்து வருகின்றார்கள். தனியொருவனாக நின்று, உலகெங்கும் பரந்து வாழும் தமிழ கலை, இலக்கிய ஆர்வலர்கள், படைப்பாளிகளின் ஒத்துழைப்புடன் பதிவுகளை நடாத்தி வருவதை இணையத்தின் வரவு சாத்தியமாக்கியுள்ளது.

ஒருவர் அர்ப்பணிப்புடன் மற்றும் ஆர்வத்துடன் கூடிய உழைப்புடன், தகவற் தொழில்நுட்ப அறிவினையும் உள்வாங்கி, இது போன்றதொரு இணைய இதழொன்றினை வெளிக் கொணர முடியும், இவ்விதம் வெளிவரும் இணைய இதழொன்றின் மூலம் ஆயிரக்கணக்கான உலகின் பல்வேறு பகுதிகளிலும் வாழும் வாசகர்களை இலகுவாகச் சென்றடைய முடியும். இது அச்சு இதழொன்றில் இவ்வளவு இலகுவாகச் சாத்தியப்பட்டிருக்காது.

பதிவுகளின் , இணைய இதழ்களின் எதிர்காலம் பற்றி....

என்னைப் பொறுத்தவரையில் கணித்தமிழ் தமிழ் இலக்கிய உலகின் இன்னுமொரு பரிணாம விளைவு. பொதுவாகத் தொழில்நுட்ப வளர்ச்சி ஊடகங்களின் வளர்ச்சியினையும் கூடவே உருவாக்கி வருவது தெரிந்ததே. ஓலைச் சுவடிகள், தாள்களென வளர்ந்து இன்று கணித்தமிழ் வரை வளர்ச்சியடைந்துள்ளது. இணையத்தைப் பொறுத்தவரையில் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளது போல் பயன்கள் பல். இணையம் மிக இலகுவாக உலகின் பல பாகங்களிலும் வாழும் ஆயிரக்கணக்கான வாசகர்களிடம் சஞ்சிகையினை மிக இலகுவாக எடுத்துச் செல்லும் சக்தி வாய்ந்தது. தகவல்களின் சுரங்கமாக விளங்கும் இணையத்தில் உலாவரும் இணையச் சஞ்சிகைகளில் உடனுக்குடன் இலக்கிய விவாதங்களை, கருத்துப் பரிமாறல்களை நடாத்த முடிகிறது. இது அச்சு ஊடகங்களில் சாத்தியமற்றது. அவை வெளிவரும் வரையில் காத்திருக்க வேண்டும். மேலும் எல்லோருடைய கருத்துகளையும் பிரசுரிப்பதும் சாத்தியமற்றது. இணையத்தில் பலரின் கருத்துகளை, விவாதங்களை உடனடியாகவே பிரசுரிக்க முடியும். மேலும் தனிமனிதரொருவர் கூட தகவல் தொழில் நுட்ப அறிவும், இலக்கிய அறிவும், அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்புமிருந்தால் ஒரு இணையச் சஞ்சிகையினை இலகுவாக வலையேற்றி விடலாம். இதுபோல் பல பயன்களை அடுக்கிக் கொண்டே போகலாம். அதனால்தான் சிற்றிதழ்கள் வரை, வெகுசன ஊடகங்கள் வரை இணையத்தில் காலூன்றுவதில் அக்கறையெடுகின்றன.

இணைய இதழ்களின் வரவு நிச்சயமாகப் பிற ஊடகங்களைப் பாதிக்கத்தான் செய்யும். உடனடியாகவல்ல. ஒருவரால் இணையத்தில் ஒரு சஞ்சிகையின் விடயங்கள முழுவதையும் படிக்க முடியுமென்றால் அவர் எதற்காக அச்சில் வெளிவரும் அவ்வூடகத்தை நாட வேண்டும். ஆனல் அந்த நிலை வருவதற்கு இன்னும் நீண்ட காலமுண்டு. இணையத் தொடர்பு சாதாரண மக்களையும் மிகவும் குறைந்த செலவில் அடையும் வாய்ப்பு முதலில் ஏற்படவேண்டும். கணினி அனைத்து மக்களாலும் இலகுவாக அடையுமொரு பொருளாக இருக்கும் சாத்தியம் வேண்டும். அததகையதொரு சூழலில், பிராந்திய மொழிகளில் மக்களின் அனைத்துப் பிரிவினரும் கணினிகளைப் பாவிக்க முடியும் சூழல் உருவாகும். அததகையதொரு சமயம் ஏற்படும்வரை அச்சு ஊடகங்களின் தேவையும் இருந்து கொண்டுதானிருக்கும்.

தமிழ் இலக்கிய உலகில் கணித்தமிழ் முக்கியமான பரிணாம வளர்ச்சியென நான் கருதுகின்றேன். பதிவுகள் எனக்கு உணர்த்திய பாடமிது. எவ்வளவு இலகுவாக என்னால் பல படைப்பாளிகளுடன் எவ்வளவு இலகுவாகத் தொடர்புகளை ஏற்படுத்த முடிந்தது. அச்சில் ஒரு இதழைக் கொண்டு வந்தால் இவ்வளவு அதிகமான படைப்பாளிகளிடமிருந்து நான் தான் சேகரித்து வெளியிட வேண்டும். ஆனால் இணையம் அதனை எவ்வளவு இலகுவாக்கி விட்டது. புகழ்பெற்ற படைப்பாளிகள் முதல் புதிய படைப்பாளிகள்வரை எல்லோருமே பதிவுகளைத் தாங்களாகவே இனங்கண்டு தொடர்பு கொண்டார்கள். சாதாரண அச்சு ஊடகங்களுக்கில்லாத பல பயன்கள் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளதுபோல் இருப்பதால் இணைய இதழ்களின் வரவு தவிர்க்க முடியாதது மட்டுமல்ல நிலைத்து நிற்கவும் போகின்றது. தமிழ் இலக்கிய உலகில் கணித்தமிழின் நல்லதொரு வரவு. இந்த வகையில் ஆரம்ப காலத் தமிழ் இணைய இதழ்களின் சேவை, பதிவுகளுட்பட, வரலாற்றில் நன்றியுடன் நினைவு கூரப்படுமென நான் நிச்சயம் எதிர்பார்க்கின்றேன்.

ngiri2704@rogers.com

No comments: