Sunday, July 13, 2008

கவிதை பற்றி ! கவிதையும் , யாப்பிலக்கணமும் பற்றியதொரு புரிதல்! - வ.ந.கிரிதரன் -



தற்காலத்தில் கவிதை எழுதுபவர்கள் பலருக்குத் தமிழ்க் கவிதையின் யாப்பிலக்கணம் பற்றி எதுவுமே தெரிவதில்லை. தமிழில் கவிதை எழுதுவதற்குக் கவிதையின் யாப்பிலக்கணம் தெரிந்திருக்க வேண்டுமா என்று யாரும் கேட்கலாம். கட்டாயம் தெரிந்திருக்க வேண்டுமென்பதில்லைதான். ஆனால் நூற்றுக் கணக்கில் கவிதைகளைப் பிரசவித்துத்தள்ளும் எம் இன்றைய நவீனக் கவிஞர்கள் பலருக்கு அவ்விதம் பிரசவித்துத் தள்ளுவதற்குரிய நேரத்தில் ஒரு பங்கினை ஒதுக்கித் தமிழ்க் கவிதையின் யாப்பிலக்கணம் பற்றி அறிந்து கொள்வதிலென்ன சிரமமிருக்க முடியும்? தெரிந்து கொள்வதாலொன்றும் அதிக நட்டமில்லையே. இலாபந்தானே இருக்க முடியும். எந்த ஒரு துறையினைப் பற்றிக் கற்கும்போதும் முதலில் அத்துறையின் வரலாறு பற்றிக் கற்பதுடன்தானே ஆரம்பிக்கின்றோம். அதன் மூலம் அத்துறைபற்றிய பாண்டித்தியம்தானே அதிகமாகின்றது. கவிதையின் யாப்பிலக்கணம்பற்றி அறிய வேண்டுமென்று கூறும்பொழுது அதனைக் கரைத்துக் குடிக்க வேண்டுமென்று நானிங்கு கூற வரவில்லை. அதுபற்றிய அடிப்படை விளக்கங்களையாவது அறிந்திருப்பது நல்லதென்றுதான் கூறுகின்றேன். இதன்மூலம் எமது மரபுக் கவிதைகளைப் படித்துச் சுவைத்திடமுடியும். அத்தகைய மரபுக் கவிதைகளில் எவ்விதம் கவிஞர்கள் சொல்நயம், பொருள்நயம் மிக்க கவிதைகளைப் படைத்திருக்கின்றார்கள், எவ்விதம் சொற்கள் வந்து விழுந்திருக்கின்றன என்பவற்றையெல்லாம் அறிந்து கொள்வது இன்றைய கவிஞர்களின் படைப்பாற்றலினை நிச்சயம் அதிகரிக்க வைத்துவிடுமென்று நான் கருதுகின்றேன்.

உண்மையிலேயே ஒரு சமயம் முக்கியமானதொரு கவிஞருடன் உரையாடிக்கொண்டிருந்தபோது நான் ஆசிரியப்பாவைப் அகவலென்று குறிப்பிட்டபோது ஆசிரியப்பாவும் அகவலும் ஒன்றல்லவென்று என்னுடன் வாதிக்க முனைந்து விட்டார். உண்மையிலேயே நான் அதிர்ச்சியடைந்துதான் போனேன். அவரை விடுங்கள். 'டாக்டர்' பொன்மணி வைரமுத்துவே தனது ஆய்வு நூலான 'சங்க இலக்கியத்தில் புதுக்கவிதைக் கூறுகள்' நூலில் 'சீர் இரண்டும் பலவுமாகச் சேர்ந்த உறுப்பு அடி எனப்படுகிறது. குறளடி, சிந்தடி, நேரடி, நெடிலடி, கழிநெடிலடி என்னும் ஐவகைப் பாகுபாடும் நாற்சீரடிக்கே பொருத்தமுடையது என்று கூறுவர்' (பக்கம் 72) என்று கூறியிருக்கின்றாரே. இதனைப் புரிதற்கு நான் இன்னும் முயன்று கொண்டுதானிருக்கின்றேன். நேரடி அல்லது அளவடி என்பது நான்கு சீர்களைக் கொண்ட அடியினைக் குறிக்கும். மேலுள்ள கூற்றின்படி 'குறளடி, சிந்தடி, நேரடி அல்லது அளவடி, நெடிலடி, கழிநெடிலடி ஆகிய ஐவகைப்பாகுபாடும் நேரடிக்கே அல்லது அளவடிக்கே (ஏனெனில் நேரடி என்பது நாற்சீரடியே) பொருத்தமுடையது என்றல்லவா பொருள்தருகின்றது. மேலும் 'டாக்டர் பொன்மணி வைரமுத்து' தொடர்ந்து '...வெண்பா அளவடி ,சிந்தடியாகவும், ஐவகை அடியும் ஆசிரியப்பாவிற்கும்..வரும்' என்கின்றார். பொதுவாக நானறிந்தவரையில் ஆசிரியப்பா நேரிசை ஆசிரியப்பா, நிலைமண்டில ஆசிரியப்பா, இணைக்குறள் ஆசிரியப்பா, அடிமறி மண்டல ஆசிரியப்பா என்னும் பிரிவுகளை உள்ளடக்கியது. இவற்றில் நேரிசை ஆசிரியப்பாவில் ஈற்றுக்கு அயல் அடி தவிர , அதாவது கடைசிக்கு முதல் அடி தவிர, ஏனைய அடிகள் யாவும் நான்கு சீர்களளைக் கொண்ட நேரடிகளாலனது. இணைக்குறள் ஆசிரியப்பாவைப் பொறுத்தவரையில் முதலும் இறுதியும் அடிகளொத்து, இடையில் இரு சீர் அல்லது ஒரு சீர் குறைந்து சிந்தடிகளாகவும் ( முச்சீரடி), குறளடிகளாகவும் (இரு சீரடி) இருக்கும். நிலைமண்டில எல்லா அடிகளும் நான்கு சீர்களைக்கொண்டு, அளவிலொத்து வரும். அடி மறி மண்டில ஆசிரியப்பாவைப் பொறுத்தவரையில் எல்லா அடிகளும் ஒத்து, எவ்விதம் அடிகளை மாறி வாசித்தாலும் ஓசையும், பொருளும் ஒத்து வரும். ஆகப் பொதுவாக ஆசிரியப்பா என்னும் பாவினத்தில் அதிகமாக அளவடிகளும், அடுத்தபடியாக சிந்தடி, குறளடிகளும் வரும். ஆனால் ஐந்து சீர்களைக் கொண்ட நெடிலடிகளும் எப்போதாவது அருகி ஆசிரியப்பாவினுள் வருவதுண்டு. இதனை யாப்பருங்கலக்காரிகையில் அமிதசாகரர் 'அருகிக் கலியோ டகவன் மருங்கினைஞ் சீரடியும் வருதற் குரித்தென்பர் வான்றமிழ் நாவலர்..' என்பார். இதன் கருத்து: கலிப்பாவினுள்ளும் ஆசிரியப்பாவினுள்ளும் ஐஞ்சீர் அடியும் அருகி வரப்பெறும் என்பதே. இதற்குதாரணமாகக் குணசாகரர் தனதுரையில் 'உமணர்ச் சேர்ந்து கழிந்த மருங்கின் அகன்றலை / ஊர்பாழ்த் தன்ன ஓமையம் பெருங்கா..'வென்னும் குறுந்தொகையினைக் காட்டுவார் [மகாவித்துவான் மே.வீ.வேணுகோபாலப்பிள்ளை பதிப்பித்த 'யாப்பருங்கலக்காரிகை' நூலில்; பக்கம் 157] ஆசிரியப்பாவுக்கு ஐஞ்சீரடியான நெடிலடி மிகவும் அரிதாகவே வரும். இந்நிலையில் ஐஞ்சீர்களுக்கும் அதிகமான சீர்களையுள்ளடக்கிய கழிநெடிலடியினையும் சேர்த்து 'ஐவகை அடியும் ஆசிரியப்பாவுக்கும்' என்று கூறுகின்றார் 'டாக்டர்' பொன்மணி வைரமுத்து அவர்கள். யாப்பிலக்கணத்தில் கரைகண்டவர்கள் யாராவாதுதான் இந்த விடயத்தில் என் ஐயத்தினைப் போக்க வேண்டும்.

இந்நிலையில் புதுமைப்பித்தன் 'சமயத்தையும் கடந்த கலை' என்னும் கட்டுரையில் கவிதை பற்றிக் கூறியுள்ளதை நினைவு கூருவதும் பொருத்தமானது. மேற்படி கட்டுரையில் அவர் "கவிதை தமிழில் இருக்கலாம்; ஆனால் கவிதையைப் பற்றிய ஆராய்சி தமிழில் கிடையாது. தமிழில் செய்யுளியலைப் பற்றி ஆராய்சியிருந்திருக்கிறது. அதாவது கவிதையின் வடிவத்தைப் பற்றி நன்றாக ஆராய்ந்திருக்கிறார்கள். கவிதைக்குத் தமிழ் யாப்பிலக்கணத்தைப்போல் இயற்கையான அமைப்பு வேறு கிடையாதென்றே கூறி விடலாம். ஆனால் கவிதை என்றால் என்ன என்பதைப் பற்றித் தமிழர் ஆராயவே இல்லை. உடற்கூறு படியாவிட்டால் உயிர் வாழ முடியாதென்று சொல்ல முடியாது. அதைப்போல் இலக்கணம் இல்லாவிட்டால் கவிதை இருக்க முடியாதென்று கூற முடியாது. ஆனால் கவிதையை ரஸிப்பதற்குக் கவிதை என்றால் என்னவென்று தெரிந்திருக்க வேண்டும். தற்காலத்திய பண்டிதர்கள் இலக்கியம் எது என்று கவனிக்க முடியாமல் எல்லாவற்றையும் புகழ்ந்து கொண்டு இடர்ப்படுவதற்க்குக் காரணம் அவர்கள் இலக்கியம் என்றால் என்னவென்று அறியாததுதான்" என்று கூறியிருக்கின்றார். உண்மையில் இவர்களில் பலருக்குக் கவிதை பற்றி மட்டுமல்ல அதன் யாப்பிலக்கணத்தில் கூடப் போதிய தெளிவு இல்லாதிருப்பதைத்தான் நாம் நடைமுறை அனுபவத்தில் காணக் கூடியதாகவிருக்கிறது. உள்ளத்தில் உண்மையொளி இல்லாதிருந்தால் வாக்கினிலெவ்விதம் ஒளி வரும்; தெளிவு வரும்?

ngiri2704@rogers.com

No comments: