Monday, May 07, 2007

தொடர் நாவல்: குடிவரவாளன் - வ.ந.கிரிதரன் -


அத்தியாயம் எட்டு: விருந்தோ நல்ல விருந்து!

பல்பொருள் அங்காடி நண்பர்களிருவருக்கும் பெரு வியப்பினை அளித்தது. முதன் முறையாகப் புலம் பெயர்ந்ததன் பின்னர் அவர்களிருவரும் இவ்விதமானதொரு வர்த்தக நிலையத்துக்கு விஜயம் செய்திருக்கின்றார்கள். மரக்கறி, மாமிசத்திலிருந்து பல்வேறு வகையான பலசரக்குப் பொருட்கள், பழங்கள், பியர் போன்ற குடிபான வகைகளென அனைத்தையும் அங்கு வாங்கும் வகையிலிருந்த வசதிகள் அவர்களைப் பிரமிக்க வைத்தன. நண்பர்களிருவருக்குமிடையில் சிறிது நேரம் எவற்றை வாங்குவது எனப்து பற்றிய சிறியதொரு உரையாடல் பின்வருமாறு நிகழ்ந்தது:

இளங்கோ: "முதன் முறையாகப் புதிய இடத்தில் சமைக்கப் போகின்றோம். இதனைச் சிறிது வித்தியாசமாகச் செய்ய வேண்டும்? நீ என்ன சொல்லுகின்றாய் அருள்?"

அருள்ராசா: "எனக்கும் நீ கூறுவது போலையொரு எண்ணம்தான் வருகுது. அதுதான் சரியென்று படுகுது. வேண்டுமானால் இப்படிச்
செய்தாலென்ன?"

இளங்கோ: "எப்படிச் செய்யலாமென்று நினைக்கிறாயோ?"

அருள்ராசா: "முதல் முறையாகச் சமைக்கப் போகிறம். அதுவும் புது இடத்திலை.. சின்னதொரு விருந்து அங்குள்ளவர்களுக்கும் சேர்த்து வைத்தாலென்ன? புது வாழ்வை விருந்துடன் ஆரம்பிப்போம். அவர்களுக்கும் சந்தோசமாகவிருக்கும். அவ்வளவு செலவும் வராது.."

இளங்கோ: "நீ தான் நல்லாச் சமைப்பாயே.. என்ன சமைக்கலாமென்று நினைக்கிறாய்?"

அருள்ராசா: "சுடச் சுடச் சோறும், நல்லதொரு கோழிக் கறியும், கோழிப் பொரியலும், உருளைக்கிழங்குப் பிரட்டல் கறியொன்றும், முட்டைப் பொரியலும், பருப்புக் கறியும், இன்னுமொரு மரக்கறியும், இறால் குழம்பொன்றும் வைக்கலாமென்று நினைக்கிறன். அங்கைதான் எல்லா வசதிகளுமிருக்கே. கெதியாகச் செய்து விடலாம்"

இளங்கோ:"என்ன எல்லாத்தையும் சொன்ன நீ, ஒன்றை மட்டும் மறந்திட்டியே?"

அருள்ராசா: "தண்ணியில்லாமல் விருந்தா? தண்ணியை நானாவது மறப்பதாவது.. அவசரப்படாதை. ஒரு 'டசின்' 'பட்வைசர்' பியர் காணுமென்று நினைக்கிறன். விஸ்கி வேண்டுமென்றால் 'ஓல்ட் ஸ்மக்கிளரி'ல் ஒன்றை வாங்கலாம். அவ்வளவு விலையுமில்லை. அருகில்தான் விஸ்கி கடையுமிருக்கு. வரும் போது பார்த்தனான்."

இவ்விதமாக நண்பர்களிருவரும் மிகவும் விரைவாகவே திட்டமிட்டு, அதிலொரு மகிழ்வெய்தி, தேவையான பொருட்களுடன், குடிவகைகளையும் வாங்கிக் கொண்டு தம்மிருப்பிடம் திரும்பினார்கள். அவர்கள் கைகளில் 'பட்வைசருடன்' திரும்புவதைக் கண்ட திருமதி பத்மா அஜித் பின்வருமாறு தன் கருத்தினை அவர்களுக்கு ஆத்திரப்படாமல், மிகவும் நாகரிகமாக, விநயத்துடன் கூறினாள்:

"அமைதியாக மற்றவ்ர்களுக்கு இடையூறெதுவுமில்லாமல் நீங்கள் விருந்து கொடுப்பதையிட்டு ,குடிப்பதையிட்டு எனக்குக் கவலையேதுமில்லை. புதுவாழ்வினை ஆரம்பிக்கப் போகின்றீர்கள். நல்லதாக அமைய எனது வாழ்த்துக்கள்."

கோஷ் மிகவும் மகிழ்ந்து போனான். இவ்விதம் நண்பர்களுடன் கூடிக் குலாவி , உண்டு, மகிழ்ந்துதான் எவ்வளவு நாட்களாகி விட்டன. அந்த மகிழ்ச்சி குரலிலும் தொனிக்க அவன் கூறினான்: " இன்று நான் மிகவும் மகிழ்ச்சியாகவிருக்கிறேன். இவ்விதம் நண்பர்களுடன் ஆடிப்பாடி விருந்துண்டுதான் எத்தனை நாட்களாகி விட்டன!". இதற்கிடையில் அருளராசா 'ஓல்ட் ஸ்மக்கிளரை'த் திறந்து கொண்டு சமையலறையிலிருந்த மேசையில் கொண்டு வைத்தான். தொட்டுக் கொள்வதற்காக வாங்கி வந்திருந்த உருளைக்கிழங்கு பொரியலைத் தட்டொன்றில் போட்டு வைத்தான். அத்துடன் கூறினான்: " நண்பர்களே! வெட்கப் படாமல் தேவையானதை எடுத்துச் சாப்பிடலாம். குடிக்கலாம்". அதனைத் தொடர்ந்து மூவருக்கும் அளவாக 'கிளாஸ்க'ளில் விஸ்கியினை ஊற்றினான். இச்சமயம் பார்த்து தூக்கத்தினின்றும் நீங்கியவனாக மான்சிங் எழுந்து வந்தான். வந்தவனின் பார்வை பரிமாறுவதற்குத் தயாராக வைக்கப்பட்டிருந்த விஸ்கியின் மேல் திரும்பியது. அவனது முரட்டு முகமும் முறுவலொன்றைப் பூத்தது.

மான்சிங்கைக் கண்டதும் கோஷ் இவ்விதம் அவனுக்கு அழைப்பு விடுத்தான்: "மான். நீயும் எங்களுடன் விருந்தில் இணைவதுதானே. ஆட்சேபணையேதுமுண்டா? நீயும் இணைந்தால் நாங்கள் மகிழ்ச்சியடைவோம்.". மான்சிங்கும் மகிழ்ச்சியுடன் வந்து அவர்களுடன் இணைந்து கொண்டான். அவனது நிலையும் கோஷின் நிலையை ஒத்ததுதான். எத்தனை நாட்களாகி விட்டன இயந்திர மயமான மாநகரத்து வாழ்வில் இவ்விதம் கவலை நீங்கிக் களித்துக் கும்மாளமிட்டு; விட்டு விடுதலையாகிப் பறந்து. ஆனந்தமாக அவர்களது உரையாடல் குடியும் கும்மாளமுமாகக் கழிந்து கொண்டிருந்தது. அருள்ராசா மட்டும் சமையலை மறந்து விடாமல் கவனித்துக் கொண்டான். அவ்வப்போது நன்கு பொரிக்கப்பட்ட கோழிப் பொரியல்களைத் தொட்டுக் கொள்ள இன்னுமொரு தட்டொன்றில் போட்டு வைத்தான். இறாலையும் பொரித்துக் கொண்டு வந்தான். அவர்களனைவருக்கும் அவையெல்லாம் அளவற்ற மகிழ்வினைத் தந்தன. ஆர்வத்துடன் கோழி, இறால் பொரியல்களைச் சுவைத்தபடி 'ஓல்ட் ஸ்மக்கிள'ரை அருந்தினர். அது முடிந்ததும் 'பட்வைசரி'ல் நாக்கை நனைத்தனர். சோமபானம் உள்ளிறங்கியதும் மெல்லியதொரு கிறுகிறுப்பு பரவ இருப்பு மிகவும் மகிழ்ச்சியுடன் விரிந்தது.

கோஷ் கூறினான்: "எனது சிறிலங்கா நண்பர்களே! உங்களது விருந்தோம்பலுக்கு எமது நன்றி. அருள்ராசாவின் கை வண்ணமே தனி. உணவகமொன்றை ஆரம்பித்து விடலாம். இதெல்லாம் எங்கு பழகினாய் அருள்ராசா?"

அதற்கு அருள்ராசா கூறினான்: "வங்க நண்பனே. உனது பாராட்டுதல்களுக்கு எனது நன்றியும் கூட. எல்லாம் அனுபவம்தான். ஒரு சிறிது காலம் கிரேக்கத்துக் கப்பலொன்றிலும் சமையற்காரனாக வேலை பார்த்திருக்கின்றேன். அது தவிர என் மாமா ஒருவருடன் அவரது பெரியதொரு பண்ணையொன்றில் சிறிது காலம் என் பாடசாலை விடுமுறை நாட்களைக் கழித்திருக்கின்றேன். கானகச் சூழலில் அமைந்திருந்த அந்தப் பண்ணை வாழ்வில் நான் பலவற்றை அறிந்திருக்கின்றேன். அதிலிதுவுமொன்று. மாமா மான் வற்றலும், ஆட்டுக்கறியும் வைப்பதில் வல்லவர். அவரது கை வண்ணத்தின் ஒரு சிறு பகுதிதான் இது"

மான்சிங் பின்வருமாறு அவர்களது உரையாடலில் கலந்து கொண்டான்: "ஏய் நண்பனே! கோஷ் சொல்வது சரிதான். நீ நல்லாச் சமைக்கின்றாய். உனக்கு இங்கு உணவகங்களில் வேலை எடுப்பதில் அப்படியொன்றும் சிரமமிருக்காது."

இடையில் இடைமறித்த கோஷ் பின்வருமாறு உரையாடலினைத் தொடர்ந்தான்: "நான் வேலை பார்ப்பதும் மான்சிங் இனத்தைச் சேர்ந்த ஒருவனின் ஏற்றுமதி / இறக்குமதி நிறுவனத்தில்தான். ஆடைகளை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்து இங்குள்ள பிரபலமான ஜவுளிக் கடைகளுக்கெல்லாம் அனுப்புவது. அவன் ஆள் நல்ல கெட்டிக்காரன். நகரின் மத்தியிலுள்ள காட்சி அறைகளில் வெள்ளையினத்தவர்களையே வேலைக்கு அமர்த்தியிருக்கிறான். அவர்களைக் கொண்டே ஆடை வகைககளை வடிவமைத்து அவற்றை இந்தியாவிலிருந்து எடுப்பித்து இங்கு விற்பனை செய்கிறான். நல்ல வியாபாரம். அங்கிருந்து பெறப்படும் ஆடை வகைகளை இங்குள்ள பண்டகசாலையொன்றில் வைத்துப் பல்வேறு மாநிலங்களிலுள்ள கடைகளுக்கும் அனுப்புவான். பண்டகசாலையில் வேலை
செய்வதெல்லாம் நம்மவர்கள்தான். தற்சமயம் அங்கு வேலை எதுவுமில்லை. விரைவில் நத்தார் பண்டிகையையிட்டு அங்கு மேலும் சிலருக்கு வேலை வாய்ப்புகள் வரலாம். அப்பொழுது உங்களிருவரையும் அங்கு சேர்த்துக் கொள்ள என்னாலான முயற்சிகளை நிச்சயமாகச் செய்வேன். என்னை நீங்கள் நம்பலாம்."

இதுவரை மெளனமாகவிருந்த இளங்கோ பின்வருமாறு தனது வினாவினைத் தொடுத்தான்: "கோஷ். உடனடியாக ஏதாவது வேலை செய்வதற்குரிய வழியேதுமுண்டா? என்னிடம் உரிய வேலை செய்வதற்குரிய ஆவணங்களெதுவும் இதுவரையிலில்லை. இனித்தான் சமூகக் காப்புறுதி இலக்த்தினை எடுப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும்."

மான்சிங் இது பற்றிய தனது கருத்தினை இவ்விதம் விளக்கினான்: "நீங்களிருவரும் ஒரு மிகப்பெரிய தவ்றினைச் செய்து விட்டீர்கள்?"

இளங்கோ , அருள்ராசா இருவரும் ஒரே நேரத்தில் "என்ன மிகப்பெரிய தவறினை நாங்கள் செய்து விட்டோமா? என்ன சிங் சொல்லுகிறாய்?" என்றார்கள்.

அதற்கு மான்சிங் இவ்விதம் கூறினான்: "ஆம். நீங்கள் தான். நீங்கள் நியுயார்க் வந்திருக்கவே கூடாது. நியு ஜேர்சி அல்லது பாஸ்டன் போன்ற நகரங்களுக்குச் சென்றிருக்க வேண்டும். அங்கு சென்றவர்களுக்கெல்லாம் சமூகக் காப்புறுதி இலக்கம் போன்றவற்றை எடுப்பதில் சிரமமிருக்காது. ஆனால் நியூயார்க்கில் மில்லியன் கணக்கில் சட்டவிரோதக் குடிகாரர்கள் வசிக்கிறார்கள் அதனால் இங்குள்ள குடிவரவு திணக்களத்தினர் இத்தகைய விடயங்களில் மிகவும் கடுமையாக இருப்பார்கள். எனக்குத் தெரிந்து இவ்விதம் ஒருவன் இரண்டு வருடங்களாகக் களவாகவே, சட்டவிரோதமாகவே வேலை செய்து கொண்டிருக்கிறான்."

இளங்கோவுக்கும், அருள்ராசாவுக்கும் மான்சிங் கூறுவதிலொருவித உண்மையிருப்பதாகவே பட்டது. இளங்கோ கூறினான்: "மான்சிங் கூறுவதிலும் உண்மை இருப்பதாகத்தான் படுகிறது. எங்களுடன் வந்தவர்களில் ஏனையோர் பாஸ்டனுக்கும், நியூ ஜேர்சிக்கும் சென்று உரிய ஆவணங்களையெல்லாம் பெற்றுக் கொண்டு வேலை பார்க்கின்றார்கள்."

கோஷ் இடை மறித்துப் பின்வருமாறு ஆறுதல் வார்த்தைகளைக் கூறினான்: "நண்பர்களே அவற்றைப் பற்றி இப்பொழுதே எதற்குக் கவலை. அவ்விதம் பிரச்சினையேதும் வந்தால் நியூஜேர்சியோ பாஸ்டனோ சென்று அங்கு உங்களது குடிவரவுக் கோப்புகளை அனுப்பும்படி சட்டரீதியாக விண்ணப்பித்து விட்டு, அங்கு உரிய ஆவணங்களையும் பெற்றுக் கொண்டு பின்னர் நல்ல வேலைகளுக்கு முயற்சி செய்யலாம். அதுவரையில் உணவகங்களிலோ, அல்லது தொழிற்சாலைகளிலோ வேலை ஏதாவதை பார்த்துக் கொண்டு கொஞ்சம் காசு சேர்க்கப் பாருங்கள். இங்கு அவ்விதமான வேலைகளை எடுப்பதில் அப்படியொன்றும் பெரிய சிரமமெதுவும் இருக்காதென்று நினைக்கிறேன். இங்கு எட்டாவது அவென்யுவில் நியூயார்க் பஸ் நிலையத்திற்கு அண்மையில் எனக்குத் தெரிந்து பீற்றர் என்றொரு கிரேக்கன் வேலை முகவர் நிலையம் நடத்துகின்றான். அவனது வேலையே இவ்விதம் சட்டவிரோதக் குடிகளுக்கு உணவகங்களிலோ அல்லது தொழிற்சாலைகளிலோ வேலைகள் பெற்றுக் கொடுப்பதுதான். நாளைக்கு அவனது முகவரியினைத் தருகிறேன். சென்று பாருங்கள். அவனுக்கு எண்பது டாலர்கள் கொடுக்க வேண்டும். அதனை அவன் வேலை எடுத்துத் தந்ததும் பெற்றுக் கொள்வான். நான் இங்கு வந்தபோது அவனூடாகத்தான் எனது முதலாவது வேலையினைப் பெற்றுக் கொண்டேன்."

கோஷ் இவ்விதம் கூறவும் மான்சிங் இவ்விதம் கூறினான்: "என்ன அவன் இன்னும் முகவர் நிலையத்தை நடத்துகின்றானா? நானும் அவனிடம்தான் என் முதல் வேலையினைப் பெற்றுக் கொண்டேன்."

இவ்விதமாக அனைவரும் உரையாடலினைத் தொடர்ந்தபடி, பல்வேறு விடயங்களைப் பற்றி அளவளாவியபடிப் பொழுதினை இன்பமாகக் கழித்னர். அவர்களது உரையாடலினைக் கீழிருந்து செவிமடுத்த வீட்டு உரிமையாளரான அஜீத்தும் இடையில் வந்து சேர்ந்து கொண்டார். அஜித் இயல்பிலேயே மிகவும் கலகலப்பானதொரு பேர்வழி. பிறகு கேட்கவும் வேண்டுமா அட்டகாசத்திற்கு. இவ்விதமாக அன்றைய இரவு விருந்தும் கேளிக்கையுமாகக் கழிந்தது.
[தொடரும்]

No comments: