Sunday, October 29, 2006

அ.ந.கந்தசாமி ஒரு பல்துறை வல்லுநர்-1!

நான் ஏன் எழுதுகிறேன்?

- அறிஞர் அ.ந.கந்தசாமி -

[ஈழத்து முற்போக்கிலக்கியத்தின் முன்னோடியான அறிஞர் அ.ந.கந்தசாமியின் பல படைப்புகளை ஏற்கனவே பதிவுகளில் வாசித்திருப்பீர்கள். அப்படைப்புகளில் சிலவற்றைப் பதிவு செய்யவேண்டியதன் அவசியம் கருதி இங்கு யூனிகோட்டில் மீண்டும் மறுபிரசுரம் செய்கின்றோம். அ.ந.கந்தசாமி ஒரு பல்துறை வல்லுநர். சிறுகதை, கவிதை, நாடகம், நாவல், மொழிபெயர்ப்பு, உளவியல், விமர்சனம், என இலக்கியத்தின் பல்வேறு துறைகளிலும் ஆழமாகக் கால் பதித்தவர். ஈழத்து இலக்கிய வரலாற்றில் எந்தத் துறையினை எடுத்தாலும் அ.ந.க.வின் பெயர் தவிர்க்கப்பட முடியாதது.. பாரதியைப் போல் குறுகிய காலமே வாழ்ந்தாலும் (தனது 44வது வயதில் அ.ந.க. மறைந்துவிட்டார்) அந்தக் குறுகிய காலத்திற்குள் அவர் சாதித்தவை அளப்பரியன. தமிழில் மட்டுமல்லாமல் ஆங்கிலத்திலும் புலமை வாயந்தவர் அ.ந.க. இங்கு வெளியாகியுள்ள அ.ந.க.வின் படைப்புகளே அவரது மேதமையினைப் புலப்படுத்தும். ஆழமான, தெளிந்த, துள்ளுதமிழ் நடையில் அனைவரது நெஞ்சங்களையும் அள்ளிவிடும் வல்லமை அவரது எழுத்துக்குண்டு. ஆசிரியர் ]

அப்பொழுது எனக்குப் பதினேழு வயது நடந்து கொண்டிருந்தது. உள்ளத்திலும் உடம்பிலும் சுறுசுறுப்பும், துடிதுடிப்பும் நிறைந்த காலம். உலகையே என் சிந்தனையால் அளந்துவிட வேண்டுமென்று பேராசைகொண்ட காலம். காண்பதெல்லாம் புதுமையாகவும், அழகாகவும், வாழ்க்கை ஒரு வானவில் போலவும் தோன்றிய காலம். மின்னலோடு உரையாடவும், தென்றலோடு விளையாடவும் தெரிந்திருந்த காலம். மின்னல் என் உள்ளத்தே பேசியது. இதயத்தின் அடியில் நனவிலி உள்ளத்தில் புகுந்து கவிதை அசைவுகளை ஏற்படுத்தியது. பலநாள் உருவற்று அசைந்த இக்கவிதா உணர்ச்சி ஒருநாள் பூரணத்துவம் பெற்று உருக்கொண்டது. எழுத்தில் வடித்தேன்.

'சிந்தனையும் மின்னொளியும்' என்ற தலைப்பில் இலங்கையின் ஓப்புயர்வற்ற இலக்கிய ஏடாக அன்று விளங்கிய 'ஈழகேசரி'யில் வெளிவந்தது.
இக்கவிதை ஒரு காரியாலயத்தில் மேசை முன்னுட்கார்ந்து என்னால் எழுதப்பட்டதல்ல. இயற்கையோடொன்றிய என் மனதில் தானே பிறந்த கவிக்குழதை இது. எனினும் பல ஆண்டுகளுக்குப் பின்னர் இலக்கிய சித்தாந்தங்கள் பலவற்றை ஆராய்ந்து நான் என்ம்னதில் ஏற்றுக் கொண்ட அதே கருத்துகளின் சாயலை இக்கவிதையில் என்னால் இன்று காண முடிகிறது.

மனோதத்துவ அறிஞர் மனதை நனவிலி மனம், நனவு மனம் என்று இரு கூறுகளாகப் பிரிக்கின்றனர். ஆங்கிலத்தில் இவற்றை முறையே Sub Conscious Mind, Conscious Mind என்று குறிப்பார்கள். "நான் ஏன் எழுதுகிறேன்?" என்ற கேள்விக்கு நனவு மனத்திடம் பதில்பெற முடியாது. ஏனெனில் நனவு மனத்தைவிட சக்திவாய்ந்தது நனவிலி மனம் என்பதே மன இயல் அறிந்தவர் முடிவு. கவிதை பெரும்பாலும் நனவிலி மனதில் உருவாகி நனவு மனத்தின் வழியாகப் பிரவாகிக்கும் ஒன்றாகும். பின்னால் நான் ஏற்றுக்கொண்ட கருத்துகள் இக்கவிதையை எழுதிய நாளில் என் நனவிலி மனதில் துளிர்த்திருந்தவை தாம் என்பதையே இக்கவிதையில் நான் வலியுறுத்தும் தத்துவங்கள் இன்று எனக்குணர்த்துகின்றன.
இக்கவிதை எனது முதலாவது கவிதையல்ல. இதற்கு முன்னரே கல்லூரிச் சஞ்சிகையில் ஒன்றிரண்டு கவிதைகளை நான் எழுதியிருந்தேன். இருந்தாலும் இது என் ஆரம்ப இலக்கிய முயற்சிகளில் ஒன்று. எனவே "நான் ஏன் எழுதுகிறேன்?, எழுதினேன்?" என்பதற்கு இக்கவிதையில் பதில் காண முயற்சிப்பது பொருத்தமானதேயாகும்.

இக்கவிதையின் சில வரிகள் நினைவில் மிதந்து வருகின்றன.

"..கொட்டும் இடித்தாளம் இசைய நடம் செய்யும் மட்டற்ற பேரழகு வான் வனிதை போல் மின்னல் தோன்றி மறைந்ததுவே. சிந்தனையின் தரங்கங்கள் ஊன்றி எழுந்தன. இவ் ஒளி ம்ின்னல் செயல் என்னே! வாழ்வோ கணநேரம்! கணநேரந்தானும் உண்டோ? சாவும் பிறப்பு அந்தக் கணநேரத்தடங்குமன்றோ? ....."

மின்னலின் வாழ்வு கணநேரம். ஆனால் அக்கண நேரத்தில்:

"..சூழம் இருள் நீங்கும். சுடர் விளக்குப் போலிங்கு சோதி கொழுத்திச் சோபிதததைச் செய்து விட்டு ஓடி மறைகிறது...."

இம்மின்னல் எனக்குணர்த்தும் செய்தி என்ன? "சில நாட்களே நீ இவ்வுலகில் வாழ்ந்தாலும் மக்களுக்கும், உலகுக்கும் பயனுள்ளவனாக வாழ். இன்று நீ இருக்கிறாய். நாளை இறந்து விடலாம். ஆகவே நன்றே செய்க. அதையும் இன்றே செய்க" இது தான் மின்னல் சொல்லித் தரும் பாடம்.

இருளை விரட்டி ஒளியைப் பரப்பும் மின்னல் சமுதாயத்தில் சூழ்ந்துள்ள மடமை,வறுமை முதலான இருள்களை நீக்கி, அறிவையும் ஆனந்தத்தையும் பரப்பும்படி எனக்குப் பணித்தது. வாழ்க்கையையே இதற்காக அர்ப்பணிக்கவேண்டும் என்ற ஆசை மேலிட்ட நான் என் எழுத்தையும் அத்துறைக்கே பயன்படுத்த வேண்டும் என்று நினைத்ததில் வியப்பில்லை அல்லவா?

மனிதன் சமுதாயத்தின் ஒரு அங்கம். அவனுக்கு சமுதாயப் பொறுப்பொன்று உண்டு. வெறுமனே உண்ணுவதும், உறங்குவதும், புலனுகர்ச்சிகளில் ஈடுபடுவதும் வாழ்க்கையாகாது. அறிவு வளர்ச்சி பெற்ற மனிதன் இவற்றோடு வேறு சில காரியங்களையும் செய்ய விரும்புவான். மற்றவர் முகத்தின் புன்னகை தோட்டத்தில் பூத்துக் குலுங்கும் முல்லைமலர் போல் அவனுக்கு இன்பத்தையூட்டும். "இன்று நாம் வாழும் சமுதாயத்தில் நாம் புன்னகையைக் காணவில்லை. துன்பமும், துயரமும், அழுகையும், ஏக்கமும், கண்ணீரும், கம்பலையுமாக நாம் வாழுமுலகம் இருக்கிறது. ஏழ்மைக்கும், செல்வத்துக்கும் நடக்கும் போரும், அடிமைக்கும், ஆண்டானுக்கும் நடக்கும் போரும், உயர்சாதியானுக்கும் தாழ்ந்த சாதியானுக்கும் நடக்கும் போரும், அசுரசக்திகளுக்கும், மனித சக்திகளுக்கும் நடக்கும் போரும் இன்று உலகையே கலங்க வைத்துக் கொண்டிருக்கின்றன. இப்போர்களினால் வாழ்வே ஒரு சோககீதமாகிவிட்டது. இப்போர்களை எவ்வளவு விரைவில் ஒழிக்க முடியுமோ அவ்வளவு விரைவில் ஒழித்துவிட வேண்டும். அதன்ப பின்தான் போரொழிந்த சமத்துவ சமுதாயம் பூக்கும். அதைப் பூக்க வைக்கும் பணியில் எழுத்தாளன் முன்னோடியாகத் திகழ வேண்டும் என்ற கருத்தை உலகின் புகழ்பெற்ற பேனா மன்னர்கள் என் மனதில் தோற்றுவித்தனர்.

பிரெஞ்சுப் புரட்சி கண்ட ரூசோ, வால்டயர் தொடக்கம் மார்சிம் கோர்க்கி, எஹ்ரென்பேர்க் வரைக்கும் எல்லா நல்ல எழுத்தாளர்களும் இந்தச் செய்தியையே எனக்குக் கூறினர். பேர்னாட் ஷாவின் எழுத்துகளும் இன்றைய பேட்ரண்ட் ரசல் எழுத்துகளும் கூட சமுதாய முன்னேற்றத்துக்குரிய பிரச்சினைகளுக்குத் தீர்ப்பு காணும் பணியை அலட்சியம் செய்துவிடவில்லை. வங்கக் கவிஞர் தாகூரும், தமிழ்க் கவிஞன் பாரதியும் தாம் வாழ்ந்த சமுதாயத்தின் உடனடிப் பிரச்சினைகளைத் தீர்க்கும் பணிக்குத் தமது பேனாக்களை அர்ப்பணம் செய்ய மறக்கவில்லை....உலகப் பண்பாட்டுப் பாடிய பாரதிதாசனும் சமுதாய ஊழல்களைச் சுட்டெரிக்கும் பணிக்குத் தன்னாளான சேவையைச் செய்திருக்கின்றான்.
"மக்கள் இலக்கியம்" என்ற கருத்தும் "சோஷலிஸ்ட் யதார்த்தம்" என்பனவுமே என் மனதைக் கவர்ந்த இலக்கிய சித்தாந்தங்களாக விளங்குகின்றன. எழுத்தாளன் வாழ்க்கையை விமர்சிப்பதுடன் நின்று விடக்கூடாது. அந்த விமர்சனத்தின் அடிப்படையில் வாசகர்களுக்கு எதிர்காலத்தில் நம்பிக்கை ஊட்டவேண்டும். அவ்வித நம்பிக்கையில்லாவிட்டால் முன்னேற்றமில்லை. வாழ்வே இல்லை. இவ்வித பிரக்ஞையில் பிறக்காமல் வெறுமனே யதார்த்தத்தை ஒரு சுத்த இலட்சியமாகக் கொண்டு எழுதும்போது நம்பிக்கைக்குப் பதில் அவநம்பிக்கையின் தொனிகளே கேட்க ஆரம்பிக்கலாம். நைந்த உள்ளத்தின் சோகக்குரலாகக் கேட்கும் எழுத்தால் பயனில்லை. நொந்த உள்ளத்தின் செயல் துணிவுகொண்ட வேகக் குரலாக அது ஒலிக்க வேண்டும். வாழ்வதற்கு நேரடியாகவோ, குறிப்பாகவோ, மெளனமாகவோ வழிகாட்டும் எழுத்தே எழுத்து. இந்தக் கருத்துகள் என்னை உந்துகின்றன. அவற்றுக்காகவே நான் எழுதுகின்றேன்.

எழுத்தில் பலவகை உண்டு. நேரடிப் பிரச்சார எழுத்து ஒருவகை. கதை, கவிதை, நாடகம் என்ற உருவங்களில் வாழ்க்கையின் படமாகவும் வழிகாட்டியாகவும் எழுதப்படுபவை வேறொருவகை. இந்த இரண்டாவது வகை எழுத்தே இலக்கியம். அதுவே நிலைத்து நிற்கும் தன்மை வாய்ந்தது. ஆகவே அதைப்பற்றியே நான் இங்கு அதிகமாகக் கூறியிருக்கிறேன்.
ஆனால் சோஷலிஸ யதார்த்தப் பாதையில் இலக்கியப் பணிபுரிவோர் வெறும் அழகையே நோக்காகக்கொண்ட கருத்துகள் இயற்கையாக மனதில் தோன்றும்பொழுது அவற்றை எழுதாது விட்டுவிட வேண்டுமா? நல்ல கருத்துகளைக் கருக்கிச் சாகவிட்டு விடவேண்டுமா என்று கேட்கப்படுகிறது.

பாரதி முற்போக்குக் கவிஞன். ஆனால் மக்கள் பிரச்சினைகளைப் பாடிய அதே வாயால் 'கண்ணன் என் காதலனை'யும் பாடினான். ஆம், தோட்டக்காரன் கத்தரிக்காயையும், கீரையையும், தக்காளியையும் பயிரிடுகிறான். ஆனால் வீட்டு வாசலிலே மல்லிகைக் கொடியைப் படர விடுவதில்லையா? கத்தரித் தோட்டத்து வேலையின் களைப்புப் போக, மல்லிகைப் பந்தலின் நறுமணத்தை மகிழ்ச்சியோடு உறிஞ்சி மகிழ அதன் கீழ்ச் சென்று உட்காருவதில்லையா?
எமக்கு நெல்லும் வேண்டும். கோதுமையும் வேண்டும். காய்கறிகளும் கிழங்குகளும் வேண்டும். ஆனால் ரோசா மலர்களும் வேண்டும். ரோசாமலர்களை மனநிறைவுக்காக நடும் தோட்டக்காரன் ரோசா மலர் நடுபவன் என்று சொல்லப்படமாட்டான். தோட்டக்காரன் என்றுதான் அழைக்கப்படுவான்.

பிள்ளையைத் தூங்க வைக்கத் தாலாட்டுப் பாடுவோம். ஏற்றமிறைக்கையில் ஏற்றப்பாட்டுப் பாடுவோம். அணிவகுப்பில் புரட்சிக் கீதம் பாடுவோம். ஆனால் குளிக்கும் அறையில் வெறும் ஸ்வரங்களை நாம் வாய்விட்டு இசைப்பதில்லையா?

சோஷலிச யதார்த்தப் பாதையில் முற்போக்கு இலக்கியம் சமைப்பவனைக் கடும் விலங்குகளால் கட்டிவிடக்கூடாது. பொதுவாக ஒரு எழுத்தாளன் எத்துறைக்குத் தன்னை அர்ப்பணிக்கிறான் என்பதைப் பார்க்க வேண்டும். அதில் அவன் சரியாக இருந்தால், மற்ற விஷயங்கள் சம்பந்தமாக நுணுக்கமாகச் சட்டதிட்டங்களை உண்டாக்குதல் அவன் கலைச் சுதந்திரத்தில் தலையிடுவதாகும்.

'சிந்தனையும் மின்னொளியும்' தொடக்கம்
'எதிர்காலச் சித்தன் பாட்டு ' வரை என் கருத்தோட்டம் ஒன்றாகவே இருந்திருக்கிறது. ஆனால் இடையிடையே ரோசாக்களையும் நான் நட்டதுண்டு. 'புரட்சிக் கீதம்' பாடாத வேளையில் 'காதல் கீதம்' பாடியதுமுண்டு. வெறும் சுவரங்களை இசைத்ததுமுண்டு. என்றாலும் என் பொதுவான இலட்சியம் ஒன்று. என் எழுத்துக்கள் மக்களை உயர்த்த வேண்டும். அவர்களின் போராட்டங்களில் எந்த அம்சத்தோடாவது அவை சம்பந்தப்பட்டிருக்க வேண்டும். இந்த இலட்சியத்துக்காகவே நான் எழுத ஆசைப் படுகிறேன்.

ஆனால் போர்க்களத்தில்கூட பூக்கள் பூப்பதுண்டு. இதை நாம் மறக்கக்கூடாது. வாளேந்திப் போர்க்களம் புகும் வீரன் கூட தும்பை மாலையை கழுத்திலணிந்து செல்வது பண்டைத் தமிழ் நாட்டு வழக்கமாகும். இந்த விவகாரம் இக்கட்டுரைக்குப் புறப்பிரச்சினையானாலும் முற்போக்கு இலக்கியத்தோடு சம்பந்தப்பட்ட பிரச்சினையென்பதால் சில வார்த்தைகள் கூறும்படி நேரிட்டது. முடிவாக "எதற்காக எழுதுகிறேன்?" என்பதற்கு நான் இரத்தினச்சுருக்கமாகச் சில காரணங்களைக் கூறி இக்கட்டுரையை முடிக்க விரும்புகிறேன்.

முதலாவதாக என் வாழ்வு சமுதாயத்துக்குப் பயனுள்ளதாக வேண்டும் என்ற காரணம். சுரண்டலும் அநீதியும் நிறைந்த சமுதாயத்தை ஒழிக்கவும் புதிய ஒளிமிக்க சமுதாயத்தை தோற்றுவிக்கவும் என்னாலான பணியை எழுத்து மூலம் செய்ய வேண்டுமென்ற காரணம். இதனை நான் முன்னரே விரித்துக் கூறிவிட்டேன்.

இரண்டாவதாக எழுதும் கலை, பாடும் கலையைப் போல் எழுதுபவனுக்கு இன்பமூட்டும் கலை. எந்தவிதமான சிருஷ்டி வேலையிலுமே இயற்கை இன்பத்தைப் பொதித்து வைத்திருக்கிறது. அழகிய பதுமையைச் சிருஷ்டிப்பது தொடக்கம், தாயின் கருவில் ஒரு குழந்தையைச் சிருஷ்டிப்பது வரை எந்த சிருஷ்டி வேலையிலும் இன்பம் கிடைக்க வேண்டுமென்பது இயற்கையின் நியதிபோலும். எழுத்திலே உலகை மறக்கலாம். உள்ளக் கவலைகளை மறக்கலாம். அதனால்தான் உலகில் கவலைகளுக்கும், துன்பத்துக்கும் பெரிதும் ஆளாகிய எழுத்தாளர் பலர் புகழ்வாய்ந்த எழுத்தாளர்களாகி விடுகின்றனர்.

மூன்றாவதாக மனிதனுக்கு எதையாவது சாதிக்க வேண்டும். அதன் மூலம் மற்றவர்களின் மதிப்பையும் அன்பையும் பெறவேண்டும். தான் ஒருவன் உலகில் இருப்பது சுற்றியுள்ள மற்றவர்களுக்குத் தெரிய வேண்டும் என்ற ஆசை நனவிலி மனதில் என்றும் இருந்து கொண்டிருக்கும் ஒன்றாகும். குழந்தை கூட தன்னை மற்றவர்கள் கவனிக்க வேண்டுமென்பதற்காகக் கையைத் தட்டுகிறது. ஆரவாரங்கள் செய்கிறது. இந்த ஆசையை நாம் வெளியரங்கமாகப் புரிந்து கொள்ள முடியாதிருக்கலாம். ஆனால் இவ்வித உள்மன ஊக்கங்களில் இருந்து நமக்கு விடுதலையில்லை. ஏனென்றால் நாம் மனிதர்கள். மனித மனத்தின் இயல்பு அப்படி.

மனக்கண்!

- அறிஞர் அ.ந.கந்தசாமி

ஈழத்திலிருந்து வெளிவரும் தினகரன் பத்திரிகையில் அக்டோபர் 21, 1966 தொடக்கம் ஜூன் 29, 1967 வரையில் தொடராக வெளிவந்த அ.ந.கந்தசாமியின் 'மனக்கண்' நாவலுக்கு அவர் எழுதிய முடிவுரை இக்கட்டுரை. இதுவே இவரது வெளிவந்த ஒரே நாவலாகும். இந்நாவலின் பிரதியினைப் பெறுவதற்காக நாம் பெற்ற சிரமங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. இதன் பிரதியினை வைத்திருந்த திருமதி கமலினி செல்வராஜனுடன் தொடர்பு கொண்டபொழுது அவர் அப்பொழுது கேட்ட பணத்தொகையினை எம்மால் கொடுக்க முடியாது போனதால் அம்முயற்சி தடைபட்டுப் போனது. மீண்டும் தொடர்பு கொண்டபோது அவர் அதனைக் கிழக்கிலங்கையின் பல்கலைக்கழகத்துக்குக் கொடுத்து விட்டதாக அறியத்தந்தார். பின்னர் இலங்கைச் சுவடிகள் திணைக்களத்துடன் இணையத்தின் வாயிலாகத் தொடர்பு கொண்டு மனக்கண் நாவலின் பிரதியினைப் பெற்றுக் கொண்டோம். அதனைத் தேடுவதற்கும், அத்தியாயங்களைப் பிரதியெடுப்பதற்கும் மட்டுமே மிகவும் நியாயமான கட்டணம் அறவிட்டார்கள். ஆனால் அவர்கள் அனுப்பிய நாவற் பிரதி சாதாரண A1 பக்க அளவிலமைந்தருந்ததனால் வாசிக்க முடியாத அளவுக்குச் சிறியதாகவிருந்தது. இதனால் அப்பிரதியினை ததமிழகத்திலுள்ள சிநேகா பதிப்பக பாலாஜி அவர்களுக்கு அனுப்பி, அவர் மூலம் அங்குள்ள ஒருவர் மூலம் மீண்டும் கட்டண அடிப்படையில் தட்டச்சு செய்து வரவழைத்தோம். அதே சமயம் இலங்கைச் சுவடிகள் திணைக்களத்திடமிருந்து எமக்குக் கிடைத்த பிரதியில் அத்தியாயம் 30 விடுபட்டுப் போயிருந்தது. இதற்காக மீண்டும் பலமுறை இலங்கைச் சுவடிகள் திணைக்களத்துடன் இணையம் வாயிலாக எடுத்த முயற்சிகள் பலனற்றுப் போகவே கொழும்பிலுள்ள சில பதிப்பகங்களுடன் தொடர்பு கொண்டோம். அவர்களும் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. பின்னர் 'பதிவுகள்' இணைய இதழில் இதுபற்றி அறிவித்தல் கொடுத்து அ.ந.க.வின் ப்டைப்புகளையும் மேற்படி அத்தியாயத்தையும் எமக்குப் பெற்றுத்தர உதவுவோருக்கு செலவிடும் மணித்தியால அடிப்படையில் வேதனம் தருவோமென்று அறிவித்தோம். அதனடிப்படையில் கொழும்பிலிருந்து பேரின்பநாயகம் மயூரன் என்னும் தமிழ் இலக்கிய ஆர்வலர் தொடர்பு கொண்டு அ.ந.கவின் ஆங்கிலக் கட்டுரைகள் சில, அ.ந.க.மொழிபெயர்த்த நாவலான எமிலி சோலாவின் 'நானா' , மேலும் சில கவிதைகளையும் எமக்குப் பெற்றுத் தந்தார். நண்பர் பலதடவைகள் இலங்கைச் சுவடிகள் திணைக்களத்தில் மனக்கண் நாவலின் முப்பதாவது அத்தியாயத்தைத் தேடிப்பார்த்தும் அதற்கான தடயமெதுவும் கிடைக்கவில்லை. இந்நிலையில் பதிவுகளில் அ.ந.க.வின் மனக்கண் நாவலை அந்த அத்தியாயம் இல்லாமலே வெளியிட முடிவு செய்தோம். யாராவது அ.ந.க.வின் மனக்கண் நாவலின் அத்தியாயம் 30இனை வைத்திருந்தால் எம்முடன் தொடர்பு கொள்ளவும். எம்முடன் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி:
ngiri2704@rogers.com அல்லது editor@pathivukal.com]

1966ம் ஆண்டு அக்டோபர் மாதம் ‘மனக்கண்’ தொடர் நவீனம் மூலம் வாசகர்களுக்கும் எனக்கும் உண்டான தொடர்புகள் சென்ற வாரம் ஒரு முடிவுக்கு வந்தன. அதாவது, எட்டு மாதங்களாக வாரந் தவறாது நிலவிய ஓர் இனிய தொடர்பு சென்ற பெளர்ணமித் தினத்தன்று தன் கடைசிக் கட்டத்தை அடைந்தது. கதை என்ற முறையிற் பார்த்தால் மனக்கண் சற்று நீளமான நாவல்தான் என்றலும் உலக நாவல்களோடு ஒப்பிடும்போது அதனை அவ்வளவு நீளம் என்று சொல்லிவிட முடியாது. கிரேக்க கவிஞனான களீமாச்சன் (Callimachun) “ஒரு பெரிய புஸ்தகம், ஒரு பெரிய பீடை” என்று கூறியிருக்கிறான். அவன் கூற்றுபடி பார்த்தால் என்னுடைய நாவல் ஒரு நடுத்தரமான பீடையே. ஏனென்றால், நாவல் என்பது ஒரு சீரிய இலக்கியத் துறையாக வளர்ச்சியடைந்துள்ள மேல் நாடுகளில் பொதுவாக நாவல்கள் 20,000 வார்த்தைகளில் இருந்து 20 இலட்சம் வார்த்தைகள் வரை நீண்டவையாக வெளி வந்திருக்கின்றன. யார் அந்த 20 இலட்சம் வார்த்தை நாவலை எழுதியவர் என்று அதிசயிக்கிறீர்களா? பிரெஞ்சு நாட்டின் புகழ்பெற்ற நாவலாசிரியரான மார்சேல் புரூஸ்ட் (Marcel Proost) என்பவரே அந்த எழுத்தாளர். நாவலின் பெயர் “நடந்ததின் நினைவு” (Remembrance of the past). ஆனால் புரூஸ்ட் மட்டும் தான் இவ்வாறு நீண்ட நாவல்களை எழுதினார் என்று எண்ணி விட வேண்டாம். உலகத்தின் மிகச் சிறந்த நாவல் என்று கருதப்படும் (War and peace) “யுத்தமும் சமாதானமும்” லியோ டால்ஸ்டாய் எழுதியது. விக்டர் ஹியூகோவின் (Les miserables) “ஏழை படும் பாடு” என்பனவும் குறைந்தது ஏழெட்டு இலட்சம் வார்த்தைகள் கொண்ட பெரிய நாவல்கள் தான். இவர்களில் முன்னவர் ருஷ்யாக்காரர். மற்றவர் பிரான்சைச் சேர்ந்தவர். இவர்களைப் போலவே ஆங்கிலத்தில் ஹோன்றி பீல்டிங் (Henry Fielding) நீண்ட நாவல்கள் எழுதியிருக்கிறார். இவரது “டொம் ஜோன்ஸ்” (Tom Jones) பதினெட்டு பாகங்களைக் கொண்டது. இதில் இன்னொரு விசேஷமென்னவென்றால் இந்தப் பதினெட்டுப் பாகங்களில் ஒவ்வொன்றுக்கும் ஒரு விசேஷ முன்னுரையும் அவரால் எழுதப்பட்டது. தமிழில் இவ்வாறு நீண்ட நாவலெழுதியவர் “கல்கி”.

நான் இங்கே எடுத்துக் காட்டிய நாவலாசிரியர் எவருமே சாதாரணமானவரல்லர். உலக இலக்கிய மண்டபத்திலே தம் சிலையை நிலையாக நிறுவிச் சென்றிருக்கும் பேனா உலகின் பெரியவர்கள் இவர்கள். இவர்கள் எவருமே சுருங்கச் சொல்லி விளங்க வைப்பதில் தம் கவனத்தைச் செலுத்தவில்லை. தாம் சொல்ல விரும்பிய பொருளை விரிவாக எடுத்துரைப்பதிலேயே இவர்கள் தம் புலனைச் செலுத்தினார்கள். பாரதம் பாடிய வியாசர் ஓர் இலட்சத்து இருபதினாயிரம் சுலோகங்களில் தம் கதையை விரித்துரைத்தது போல இவர்களும் தாம் கூற வந்த கதைகளை அமைதியாகவும், ஆறுதலாகவும் சாங்கோபாங்கமாகவும் எடுத்துச் சொல்லிச் செல்கிறார்கள்.

என்னைப் பொறுத்தவரையில் பாரகாவியமும் நாவலும் ஒன்றென்றே நான் கருதுகிறேன் - ஒன்று வசனம், மற்றது கவிதை என்ற வித்தியாசத்தைத் தவிர, பாரகாவியம் எப்பொழுதுமே அவசரமாகக் கதையைச் சொல்லத் தொடங்குவதில்லை. நாட்டு வர்ணனை, நகர வர்ணனை, பருவ வர்ணனை என்று மெதுவாகவே அது கிளம்பும். காரின் வேகம் அதற்கில்லை. தேரின் வேகமே அதற்குரியது. வழியிலே ஒரு யுத்தக் காட்சி வந்ததென்று வைப்போம். உதாரணத்துக்கு வியாச பாரதத்தை எடுத்தால் பதினேழு நாள் யுத்தம் நடந்தது - பாண்டவர் வென்றனர் - கெளரவர் தோற்றனர் என்று மிகச் சுருக்கமாகவே அதனைக் கூறியிருக்கலாமல்லவா? ஆனால் அவ்வாறு எழுதினால் கதாநிகழ்ச்சியை நாம் புரிந்து கொண்டாலும் யுத்தத்தின் அவலத்தையும் வெற்றி தோல்வியையும் நேரில் பார்த்தது போன்ற உணர்ச்சி நமக்கு ஏற்படாது. அந்த உணர்ச்சி நமக்கு ஏற்படும் வரை பொறுமையாக விவரங்களை ஒன்றின் பின்னொன்றாக சலிப்பின்றி எடுத்துக் கூறி நிற்கும் ஆற்றல் பெற்றவனே பாரகாவியஞ் செய்யும் தகுதியுடையவன். நல்ல நாவலாசிரியனுக்கும் இப் பண்பு இருக்க வேண்டும்.
நாவலும் சிறுகதையும் இந்த இடத்தில் நாவலுக்கும் சிறு கதைக்கும் இருக்கும் வேற்றுமையைப் பற்றிச் சில வார்த்தைகள் நான் கூறவிருக்கிறேன். இந்த இரு இலக்கிய உருவங்களுக்கும் உள்ள வேற்றுமை கதை அமைப்பிலே மட்டுமல்ல, சொல்லும் முறையிலுமிருக்கிறது. சிறுகதை வேகமாக ஒரே மூச்சில் நிலத்தை நோக்கிக் குதிக்கும் நீர் வீழ்ச்சியைப் போன்றது. மின்னலின் வேகம் அதிலிருக்கும். ஆனால் நாவலோ ஓடுகிறதா, ஓடாமல் நிற்கிறதா என்று எடுத்த எடுப்பில் கூற முடியாத படி பெரு நதியின் மந்தமான அசைவில் செல்ல வேண்டும். கங்கை, கழனி, காவேரி போல் அசைய வேண்டும். குதிரை வண்டி போல் வேகமாகச் செல்லாது கோவிற்தண்டிகை போல் ஆடி அசைந்து வர வேண்டும்.
நாவல் இவ்வாறு வர வேண்டியதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று நாவலின் முக்கிய நேரங்களில் ஒன்று பாத்திரப் படைப்பாக இருப்பது. இரண்டு, கதை நிகழும் சூழலை வர்ணனைகள் மூலம் மனக் கண்ணின் முன்னர் கொண்டு வந்து நிறுத்த வேண்டியிருப்பது. சிறுகதைக்கு இந்நோக்கங்களில்லை - ஒரு சிலர் தமது சிறுகதைகளில் இவற்றைச் செய்ய முயன்றாலும் கூட நானிங்கே நாவலின் இரண்டு முக்கிய நோக்கங்களையே சொன்னேனாயினும், டால்ஸ்டாய் போன்ற பெரு நாவலாசிரியர்களில் சிலர் அறிவூட்டலும் நாவலின் பணி என்று கருதினார்கள். அதனால் தான் யுத்த விவரங்களையும், சரித்திர விவரங்களையும் மிகவும் அதிகமாக விளக்கும் அத்தியாயங்களை “யுத்தமும் சமாதானமும்” என்னும் நூலில் டால்ஸ்டாய் சேர்த்திருக்கிறார். விக்டர் ஹியூகோவின் “ஏழை படும் பாட்டி”ல் பாரிஸ் சாக்கடை பற்றிய செய்திகள் விரிவாகச் சேர்க்கப்பட்டுப்பதும் இக் காரணத்தினாலே தான். சுருங்கச் சொன்னால் பார காவியம் செய்யும் கவிஞனும் காத்திரமான நாவலை எழுதும் நாவலாசிரியனும் கதை சொல்லிச் செல்கையில் வழியில் தென்படும் எந்த விஷயத்தையும் பற்றிப் பூரணமான விளக்கம் கொடுக்காமல் மேலே செல்வதில்லை. ஆனால் இவ்வித விளக்கம் கொடுக்க ஒருவன் கதை கட்டும் ஆற்றல் பெற்றவனாக இருந்துவிட்டால் மட்டும் போதாது. பல விஷயங்களையும் தெரிந்து ஓர் அறிஞனாகவும் விளங்க வேண்டியிருக்கிறது. ஒருவனுக்கு எவ்வளவுக்கு எவ்வளவு நூலறிவும், அனுபவ அறிவும் சமுதாய அறிவும், இருக்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு இந்த விளக்கங்களை அவன் திறம்படச் செய்து கொண்டு போகலாம். சிறு கதாசிரியனுக்கோ இத் தொல்லை இல்லை. ஆனால் இங்கே நாம் மறக்கவொண்னாத ஒரு விஷயமென்னவென்றால், என்ன தான் அழகான விளக்கம் கொடுத்தாலும் அவ்விளக்கம் கதைக்கும் குறுக்கே வந்து விழக் கூடாது என்பதாகும். இதற்கு மிகவும் நுட்பமான ஓர் அளவுணர்ச்சி நாவலாசிரியனுக்குத் தேவை. கதை தன் வழக்கமான ஓட்டத்தில் போய்க் கொண்டிருக்க, அதனோடு கை கோத்துக் கதாசிரியனின் விளக்கங்களும் போய்க் கொண்டிருக்க வேண்டும். இது விஷயமாக சாதாரணமாக உரையாடும்போது நாம் நம் நண்பர்களுக்குப் பிரெஞ்சு புரட்சி போன்ற ஒரு பொருள் பற்றிக் கொடுக்கும் ஒரு விளக்கத்துக்கும், ஒருமேடையில் அது பற்றிச் செய்யும் சொற்பொழிவுக்கும் உள்ள வித்தியாசத்தை நினைவு கூர்வது நன்று. நாவல்களில் வரும் விளக்கம் நண்பரோடு பேசும் போது நாம் கொடுக்கும் விளக்கம் போல் அமைய வேண்டும். இல்லாவிட்டால் அவை சரித்திர நூல்களாகவோ, சமூக இயற் பனுவல்களாகவோ, பொருளாதாரக் கட்டட நிர்மாண விவாத நூல்களாகவோ மாறிவிடும். உலகப் பெரும் நாவலாசிரியர்கள் பலரும் தம் விளக்கங்களை அளவறிந்து கையாண்டிருப்பதே அவர்களது படைப்புகளின் கலையழகு சிதைவுறாதிருப்பதற்குக் காரணம். உதாரணமாக விக்டர் ஹியூகோவின் பாரிஸ் நகரத்தின் சாக்கடை வர்ணனைகள் நீண்டவையாயிருந்தாலும் பரபரப்பான சம்பவங்களை மிகுதியாகக் கொண்ட அக்கதையின் ஓட்டத்தை அவை எவ்விதத்திலும் தடுக்கவில்லை. இந்தத் தன்மை இருப்பதால்தான் இன்றும் உலகெங்கும் விரும்பி வாசிக்கும் கதையாக இது இருந்து வருகிறது.

நாவலியக்கத்தின் தன்மைகள் பற்றி நான் இங்கு இவ்வாறு விவரித்ததன் காரணம் நாவல் தமிழுக்குப் புதியதோர் இலக்கிய உருவமாயிருப்பதுனாலேயேயாகும். புதிய இலக்கிய உருவமொன்று உருப்பெற்று வரும்போது அதை எவ்வாறு சுவைப்பது - எவ்வாறு விமர்சிப்பது என்பது சொல்லிக் கொடுக்கப்பட வேண்டிய ஒன்றுதானே? இது வாசகர்களின் சுவைக்கும் திறனை உயர்த்துவதோடு, எழுத்தாளர்களுக்கும் கூட அவர்களின் எழுத்துக்கு வழிகாட்டியாக அமையும். என்னைப் பொறுத்த வரையில் ஆரம்பத்திலிருந்தே நான் ஆக்க எழுத்தாளனாக மட்டுமல்ல, கலை இலக்கிய விமர்சகனாகவும் பயின்று விட்டதால் இவ்வித பிரச்சினைகளை என்னால் தட்டிக் கழிக்க முடியாமலிருக்கிறது.

நாவலிலே நாம் எதிர்பார்ப்பது சுழல்கள் நிறைந்த ஒரு கதை; உயிருள்ள பாத்திரங்கள்; கண் முன்னே காட்சிகளை எழுப்பும் வர்ணனைகள் என்பனவாம். கதை இயற்கையாக நடப்பது போல் இருக்க வேண்டும். ஆனால் அதே சமயத்தில் அந்த இயற்கை சட்டமிடப்பட்ட ஒரு படம் போல் ஓர் எல்லைக் கோடும் அழுத்தமும் பெற்றிருக்க வேண்டும். இன்னும் எந்தக் கதையுமே மனிதனிடத்தில் நெஞ்சை நெகிழ வைக்கும் ஓர் இரக்க உணர்ச்சியைத் தூண்டல் வேண்டும். இதில்தான் ஒரு நாவலின் வெற்றியே தங்கியிருக்கிறதென்று சொல்லலாம். உண்மையில் மனித உணர்ச்சிகளில் இரக்கமே மிகவும் சிறந்ததென்றும் அதுவே ஒருவனது உள்ளத்தைப் பயன்படுத்தி அவளை நாகரிகனாக்குகிறதென்றும் கூறலாம். டேனிஸ் சேனாரட் (Denis Sanarat) என்ற அறிஞர் நாவலின் இத்தன்மையைப் பற்றிப் பேசுகையில் “காதலர்களின் நெஞ்சுடைவைப் பற்றி வாசிக்கும் வாசகன் தன் கண்ணில் நீர் பெருக்கிறானே, அது தான் நாவலாசிரியன் தன் உழைப்புக்குப் பெறும் பெரும் பரிசாகும்” என்று கூறுகிறார். ஷேக்ஸ்பியருக்குப் பின்னால் பாத்திர சிருஷ்டியின் பரப்பிலே ஆங்கில மொழி கண்ட மகாமேதை என்று கருதப்படும் சார்லஸ் டிக்கென்ஸ் (Charles Dickens) பெற்ற வெற்றிக்கு, அவர் கதைகளில் இவ்வித இரக்க உணர்ச்சி விஞ்சியிருப்பதே காரணம், டிக்கென்ஸின் கதைகளில் இரண்டு பண்புகள் தலை தூக்கி நிற்கின்றன. ஒன்று அனுதாப உணர்ச்சி, மற்றது உற்சாகமூட்டும் நகைச்சுவை. உண்மையில் மனித வாழ்க்கைக்கே மதிப்பும் இன்பமும் நல்குவன இவ்விரு பண்புகளுமே. விக்டர் ஹியூகோவின் “ஏழை படும் பாடு”ம் இவ்விரு பேருணர்ச்சிகளையுமே பிரதிபலிக்கிறது.

“மனக்கண்”ணைப் பொறுத்த வரையில் நாவல் பற்றிய மேற்கூறிய பிரக்ஞையுடனேயே நான் அதனை எழுதியிருக்கிறேன். வாசகர்களுக்குச் சுவையான ஒரு கதையைச் சொல்ல வேண்டும்; அது அவர்கள் அனுதாபத்தையும் இரக்க உணர்ச்சியையும் தூண்ட வேண்டும்; அதே நேரத்தில் முடிந்த இடங்களில் வாழ்க்கையில் பிடிப்பைத் தரும் நகைச்சுவை, வேடிக்கை போன்ற உணர்ச்சிகளுக்கும் இடமிருக்க வேண்டும்; சூழ்நிலை வர்ணனையையும் பாத்திர அமைப்பும் சிறந்து விளங்க வேண்டும்; கதைக்கு இடக்கரில்லாது வரும் அறிவுக்கு விருந்தான விஷயங்கள் இடம் பெற வேண்டும் என்பன போன்ற நோக்கங்கள் இந்நாவலை எழுதும்போது என்னை உந்திக் கொண்டேயிருந்தன. இன்னும் உலகப் பெரும் நாவலாசிரியர்களான டிக்கென்ஸ், டால்ஸ்டாய், சோலா, டொஸ்டோவ்ஸ்கி, கல்கி, தாகூர், விகடர் ஹியூகோ போலத் தெட்டத் தெளிந்து ஒரு வசன நடையில் அதைக் கூற வேண்டுமென்றும் நான் ஆசைப்பட்டேன். இன்று தமிழில் ஒரு சிலர் - முக்கியமாகக் கதாசிரியர் சிலர் இயற்கைக்கு மாறான சிக்கலான ஒரு தமிழ் நடையை வலிந்து மேற்கொண்டு எழுதுவதை நாம் பார்க்கிறோம். இப்படி யாராவது எழுத முயலும்போது அவர்கள் வசன நடை முன்னுக்கு வந்து பொருள் பின்னுக்குப் போய்விடுகிறது.

நடை என்பது ஒருவனின் உடையைப் போல. சாமுவேல் பட்லர் என்ற ஆங்கில எழுத்தாளர் எந்தக் கலையிலுமே “ஸ்டைல்” (Style) அல்லது “நடை” என்பது நாகரிகமான உடையைப் போல இருக்க வேண்டுமென்று கூறியிருக்கிறார். அது பார்ப்பவர்களின் கவனத்தை மிக மிகக் குறைவாக ஈர்க்க வேண்டுமென்பது அவரது கருத்து. அநாவசியமான “ஜிகினா” வேலைப்பாடுகள் உள்ள உடை கூத்து மேடைக்கோ, வீதியில் வெற்றிலை விற்பனை செய்பவனுக்கோ தான் பொருத்தம். ஸ்டீபன் ஸ்பெண்டர் இதனை இன்னும் அழுத்தமாகக் கூறியிருக்கிறார். ஆகச் சிறந்த எழுத்தாளர்களுக்கு நடையே இல்லையாம். எடுத்த இவ்விஷயத்தை எவ்விதம் சொன்னால் தெளிவும் விளக்கமும் ஏற்படுகிறதோ அவ்விதம் சொல்லிச் செல்வதை விட்டு செயற்கையான மேனிமினுக்கு வேலைகளை மேற்கொள்வதைப் பண்பும் முதிர்ச்சியும் பெற்ற எழுத்தாளர்கள் இன்று முற்றாக ஒதுக்கி வருகிறார்கள்.
இயற்கைக்கு மாறான செயற்கை நடைகளை வருவித்துக் கொண்டு எழுதுபவர்கள் சொந்த மயிருக்குப் பதிலாக டோப்பா கட்டிக் கொண்டவர்களை ஞாபகமூட்டுகிறார்கள். சிரில் சொனோலி (Cyril Chonolly) என்ற ஆங்கில விமர்சகர் இயற்கையான நடையில் எழுதுபவர்களை “அவர்கள் சொந்த மயிருடன் விளங்குபவர்” என்று பாராட்டுகிறார். வீதியில் யாராவது இயற்கைக்கு மாறாக ராஜ நடை போட்டு நடந்தால் நாம் அதைப் பார்த்துச் சிரிக்கிறோமல்லவா? இலக்கியத்திலும் இதே நிலைதான்.

“மனக்கண்”ணை நேரிய ஒரு நடையிலேயே நான் எழுதியிருக்கிறேன். நான் வாசகர்களுக்குக் கூற வந்த பொருளின் தெளிவே என் குறிக்கோள். அதனால் தான் பாத்திரங்களின் பேச்சிற் கூட ஒவ்வொரு பிரதேசத்தினருக்கே விளங்கக் கூடிய பிரதேச வழக்குகளை மிகவும் குறைத்து பொதுவாகத் தமிழர் எல்லோருக்குமே விளங்கக் கூடிய சரளமான ஒரு செந்தமிழ் நடையை நான் கையாள முயன்றிருக்கிறேன். இதனால் தான் இக்கதை யாழ்ப்பாணத்திலும் மட்டக்களப்பிலும் மலை நாட்டிலும் ஏக காலத்தில் வாசகர்களின் பேராதரவைப் பெற்றது.
ஆனால் நடையில் மட்டுமல்ல. “மனக்கண்” வேறு பல எழுத்தாளர்களின் நாவல்களுடன் மாறுபடுவது கதை அமைப்பிலும் தான். நாவலில் பாத்திர அமைப்பும் சூழ்நிலையும் மிக முக்கியமானவை என்றாலும் கூட இறுக்கமான நாடகத்தன்மை கொண்ட கதை அமைப்பும் அவசியமாகும். இவ்வித கதை அமைப்பில்லாத பாத்திர சிருஷ்டி நாவலாகாது. வெறும் வியாசமாகத்தான் விளங்கும். அடிசன் என்ற ஆங்கில எழுத்தாளர் இப்படிப்பட்ட பாத்திர சிருஷ்டியில் வல்லவர். சர் ரோஜர் டிகவுர்லி, கறுப்புடை மனிதன் போன்ற பாத்திரங்களை அவர் சிருஷ்டித்தார். ஆனால் அவர் தம் எழுத்தை நாவல் என்று கூறவில்லை. வியாசங்கள் என்றே வர்ணித்தார். இன்று நாவலைப் பற்றிய ஒரு புதிய கருத்தைச் சில விமர்சகர்கள் உலகின் பல பகுதிகலிலும் பரப்ப முயன்று வருகிறார்கள். நாவலில் கதை பின்னல் அவ்வளவு முக்கியமல்ல என்பது இவர்களின் கருத்து. இவர்களைப் பற்றி சோமர்சேட் மோம், “இந்த அளவுகோவலின்படி பார்த்தால் வியாசமெழுதுபவர்களே சிறந்த நாவலாசிரியர்கள். சார்லஸ் லாம்பும், ஹல்லீட்டுமே நல்ல நாவலாசிரியர்கள்” என்று கேலி செய்திருக்கிறார்.
கதை அமைப்பற்ற சப்பட்டை நாவல்களை எழுதுபவர்களைப் பற்றி அவர் இன்னோரிடத்தில் பின் வருமாறு கூறுகிறார்: “உயிருள்ள மனிதர்களைச் சிருஷ்டிக்கும் ஆற்றல் படைத்த கெட்டிக்கார எழுத்தாளர் பலர், அவ்வாறு அவர்களைச் சிருஷ்டித்த பின்னர் அவர்களை வைத்து என்ன செய்வதென்றறியாது மயங்குகின்றார்கள். அவர்களை வைத்து பொருத்தமான கதையை உண்டாக்கும் ஆற்றல் இவர்களிடம் இல்லை. ஆகவே எல்லா எழுத்தாளர்களையும் போல (எல்லா எழுத்தாளரிடமும் ஓரளவு பொய்மை (Humburg) இருக்கிறது) இவர்களும் தமது குறைபாட்டை ஒரு நிறைபாடாகக் காட்ட முயல்கின்றனர். என்ன நடக்கிறது என்பதை வாசகர்களே யூகித்துக் கொள்ளட்டுமென்றோ, வாசகர்கள் இந்த விஷயத்தை அறிய முயல்வதே தவறென்றோ கூறி விடுகின்றனர். வாழ்க்கைக் கதைக்கு முடிவு இல்லையென்றும், சம்பவங்கள் செதுக்கப்பட்ட ஒரு முடிவை அடைவதில்லை என்றும், நிகழ்ச்சிகள் தொங்கிக்கொண்டுதான் கிடக்கும் என்றும் கூறி விடுகின்றனர். அவர்களின் இக்கூற்று எப்பொழுதும் உண்மையல்ல. ஏனென்றால் எல்லோர் கதைக்கும் சாவென்ற முடிவாவது இருக்கத்தான் இருக்கிறது. ஆனால் அவர்கள் சொல்வது உண்மையாயிருந்தாலும் கூட அது நல்ல வாதமாகாது. ஒரு சிறந்த கதையைப் படைப்பது கஷ்டமான ஒரு வேலைதான். ஆனால் அதற்காக அதை வெறுப்பது நல்ல நியாயமல்ல. துன்பியல் நாடகங்கள் பற்றி அரிஸ்டாட்டில் கூறியது போல் ஒரு கதைக்கு ஒரு தொடக்கமும் நடுவும் முடிவும் இருக்கவே வேண்டும்.

கதை அமைப்புப் பற்றி இக் கருத்தைக் கொண்ட சோமர்செட் மோம் நடையைப் பற்றி, “தெளிவும் இனிமையும் எளிமையும் கொண்டதே நல்ல நடை” என்ற கருத்தைப் பல இடங்களில் வெளியிட்டிருக்கிறார். கதை, நடை என்ற இரண்டிலும் மோமுடன் எனக்கு உடன்பாடு. ஏன், இவற்றில் டிக்கென்ஸ் தொடக்கம் தாகூர் வரைக்கும் உலகின் நல்ல நாவலாசிரியர்கள் எல்லோருமே இவ்வப்பிப்பிராயத்தையே கொண்டிருந்திருக்கின்றனர். “மனக்கண்”ணில் நான் பின்பற்றியிருப்பதும் இக்கொள்கைகளைத்தான்.

நாவலே இன்று வழக்கிலுள்ள இலக்கிய உருவங்களில் மிகவும் பிந்தியது. இருந்த போதிலும் அது மிகவும் வலிமை கொண்டதாக வளர்ந்து விட்டது. இன்னும் உலகின் எதிர்கால இலக்கியம் பெரிதும் நாவலாகவே இருக்கப் போகிறதென்பதிலும் சந்தேகமில்லை. நாவல் இவ்வாறு வெற்றி கட்டி வருவதற்குக் காரணம் மனிதரில் பெரும்பாலோருக்கு நாவல்தான் வாழ்க்கை அனுபவத்துக்கே வாயிலாவது இருக்கிறது என்பதாகும். தன்னந்தனியாகத் தூரக் கிராமத்தில் வாழ்பவள் நகரத்து அனுபவங்களை நேரடியாக அனுபவிக்காமலே நான் அனுபவிக்கக் கூடியதாயிருப்பது நாவல்களின் மூலம்தான். காதலை, நேரில் அனுபவியாதவள் காதலையும், தாய்மையின் அன்பை அறியாதவள் தாய்மையையும், பிள்ளைப் பாசத்தை நேரில் காணாதவள் பிள்ளைப் பாசத்தையும் , யுத்தத்தை நேரில் காணாதவன் யுத்தத்தையும், தான் நேரில் துய்த்தது போல் இன்று அனுபவிக்கக் கூடியதாயிருப்பது நாவல்கள் மூலமேயாகும். நாவல்கள் முழு உலக அனுபவத்தையுமே நமக்குத் திறந்து காட்டி நம் உளப்பண்பை விருத்தி செய்கின்றன.

ஆனால் நாவலென்பது புற நிகழ்ச்சிகளை மட்டும் கூறும் ஓர் இலக்கிய உருவமல்ல. அது மனதின் உட்புற நிகழ்ச்சிகளையும் காட்டுகிறது. அதனால்தான் சர் ஐவர் எவன்சன்ஸ் என்ற இலக்கிய விமர்சகர் “நாவல் இன்று ஓர் உட்புறத் தனி மொழியாகவும் வளர்ச்சியடைந்து வருகிறது” என்று கூறியுள்ளளார். “மனக்கண்”ணில் பல இடங்களில் சிந்தனையோட்டங்கள் நீள வர்ணிக்கப்படுவதைக் காணலாம். பாத்திரங்களின் குணா குணங்களை விளக்கிக் கொண்டு அவர்களின் அக நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ள அவை நமக்குப் பெரிதும் உதவுகின்றன.
கதாசிரியனாகிய என்னைப் பொறுத்தவரையில் “மனக்கண்”ணை எழுதியது எனக்கு ஒரு பெரிய அனுபவம். இதற்கு முன் சிறுகதைகளையும் , கவிதைகளையும், சிறுவர் நெடுங் கதை ஒன்றையும், நாடகங்களையும் எழுதியுள்ள நான் எமிலி சோலாவின் “நானா” என்ற நாவலைத் தமிழ்ப்படுத்தியிருந்த போதிலும் “மனக்கண்”ணை எழுதிய போது புதியதோர் உலகில் சஞ்சரிப்பது போன்ற உணர்ச்சி எனக்கு ஏற்பட்டது. பாத்திரங்களைச் சிருஷ்டித்து அவர்களைச் சமுதாயப் பின்னணியிலே உலவ விடும்போது அவர்கள் முன்னில்லாத ஒரு சக்தியையும் வலிவையும் பெற்று ஆசிரியனையே மலைக்க வைத்து விடக் கூடும் என்பதை நான் அனுபவத்தில் கண்டேன். நாவலை வாசிப்பவர்கள் மட்டுமல்ல அதை எழுதும் ஆசிரியனும் உணர்ச்சிப் பொங்கலில் அகப்பட்டுக் கொள்ளவே செய்கிறான். இந்தக் கதையை உருவாக்கிய கடந்த ஒரு வருட காலமும் நான் “அமராவதி வளவில்” ஓர் அங்கத்தினனாகவே ஆகிவிட்டேன். ஸ்ரீதர், சிவநேசர், பாக்கியம், சுசீலா, சுரேஷ், முரளி ஆகிய யாவரும் இரவும் பகலும் என்னோடிருந்தார்கள். அவர்களின் இன்பத் துன்பங்களை நானும் அனுபவித்தேன். இப்படிப்பட்ட அனுபவமேற்பட்டு அதனை எழுத்தில் வடிப்பதற்கு எழுத்தாளன் தன் உடல் சக்தி, மனச் சக்தி, நரம்பின் சக்தி ஆகியவற்றை மிகவும் அதிகமாக ஈடுபடுத்த வேண்டியிருக்கிறது. அதனாற்றான் ஆர்னால்ட் பெனட் என்ற ஆங்கில நாவலாசிரியர் “நாவல் எழுதுவதற்கு நாடகம் எழுதுவதிலும் பார்க்க அதிக நரம்புச் சக்தி தேவைப்படுகிறது” என்று கூறியிருக்கிறார்.
“மனக்கண்”ணின் பாத்திரங்களைப் பற்றிப் பேசுகையிலே, என்னைப் பெரிதும் மலைக்க வைத்தவர் சிவநேசரே. அவர் எவ்விதம் நடந்து கொள்வார் என்பது எனக்கு முன் கூட்டியே தெரியாது. பெரிய மனிதரான அவர் தன்னிஷ்டம் போல் நடந்து கொள்வார். அவரை நினைத்தால் வாசகர்களுக்கு எப்படியோ. என்னைப் பொறுத்தவரையில் எழுந்து நின்று மரியாதை செய்ய வேண்டும் போன்ற உணர்ச்சி அவர் முன்னால் எனக்கு ஏற்படுகிறது.
முன்னர் கூறிய பாத்திரங்களைத் தவிர பத்மா தொடக்கம் வேலாயுதக் கிழவன் வரை, அதிகார் அம்பலவாணர் தொடக்கம் அடுத்த வீட்டு அன்னம்மாக்கா, அவளது மகன் திராவிடதாசன், வாத்தியார் பரமானந்தர், கமலநாதன், தங்கமணி, அவள் தோழி ரெஜீனா, சின்னைய பாரதி, நன்னித்தம்பி, பேராசிரியர் நோர்த்லி போல் ஏராளமான பாத்திரங்கள் மனக்கண்ணில் வந்து சென்ற போதிலும்’மோகனா’ என்னும் கிளியும் ‘ஸ்ரீதர்’ ‘சுரேஷ்’ என்ற மீன்களும் என் மனதை விட்டு ஒரு போதும் அகலா. இதில் ‘மோகனா’ என்னும் கிளி மனிதரால் மாற்ற முடியாத சிவநேசரின் உள்ளத்தைத் தன் கிளிப் பேச்சால் மாற்றித் தனிப் பெருமை கொண்டதல்லவா? கருங்கல்லில் ஈரத்தைப் பெய்த கல்லுருக்கு வேலையை அது செய்திருக்கிறது.

“மனக்கண்” முடிவோடு நாம் ஸ்ரீதர் தொடக்கம் ‘மோகனா’ வரை எல்லாப் பாத்திரங்களிடமிருந்தும் விடை பெறுகிறோம். அத்துடன் பல்கலைகழகத்து நாடக மேடை தொடக்கம், தேர்ஸ்டன் வீதி, கொட்டாஞ்சேனை, மவுண்ட் வவீனியாக் கடற்கரை, நொச்சிக்கடை சுந்தரேஸ்வரர் கோவில், ‘அமராவதி வளவு, 'கிஷ்கிந்தா' இல்லம்,, பம்பலப்பிட்டி ‘எஸ்கிமோ’ ஐஸ்கிறீம் பார்லர் ஆகிய இடங்களில் நாம் ஸ்ரீதருடன் சுற்றித் திரிந்ததற்கும் முடிவு வந்துவிட்டது. ஸ்ரீதரின் செயல்களில் என்னால் மறக்க முடியாத ஒன்று அவன் கால்பேஸ் கடற்கரையில் பத்மாவுடன் மழை நீராடியமை. காவிய நாயகர்கள் கடல் நீராடியமையையும் புனல் நீராடியமையையும் நாம் முன்னர் பல நூல்களில் படித்திருக்கிறோம். ஆனால் ஸ்ரீதர் தான் முதன் முதலாக மழை நீராடிய கதாநாயகனென்று நான் நினைக்கிறேன். “மனக்கண்” ஒரு விரிந்த நாவல். அதில் ஓர் இதிகாசத் தன்மை இருக்க வேண்டுமென்று நான் விரும்பினேன். அதில் நான் எவ்வளவு தூரம் வெற்றி பெற்றிருக்கிறேன் என்பதை நான் அறியேன். பெரிய படாங்கில் எழுதப்பட்ட பரந்த சித்திரம் அது. ஆனால் சித்திரம் குறைவற்றதா? கலை இலக்கியத் துறைகளைப் பொறுத்தவரையில் குறைவற்ற படைப்பு எதுவுமே இவ்வுலகில் எவராலும் படைக்கப்பட்டு விடவில்லை. விக்டர் ஹியூகோ பற்றியும் டால்ஸ்டாய் பற்றியும் கூட அப்படித்தான் சொல்கிறார்கள்.

இலக்கிய விமர்சனப் பிரச்சினையான இது பற்றி இங்கே விரிவாக எழுத இடமில்லை. இன்னும் நூலாசிரியரே தந்து நூலின் சிறப்புகளையும் குறைகளையும் பற்றி எழுதலாமா என்ற இன்னொரு கேள்வியும் பிறக்கிறது. அவ்வாறு அவன் எழுத முற்படும்போது, பொய்யான அடக்கமும், தன் குஞ்சு பொன் குஞ்சு என்ற மனப்பாங்கும் சரியான விமர்சனத்துக்குப் பாதகமாக அமையலாம். ஆகவே “மனக்கண்”ணை எவ்விதத்திலும் இங்கே விமர்சிப்பது என் நோக்கமல்ல.

நான் இத்தொடர்கதையை எழுத ஆரம்பித்ததும் எனது சக எழுத்தாளரும் நாவலாசிரியருமான செ.கணேசலிங்கனின் இந்திய விஜயத்தின் பயனாக, சென்னை இலக்கிய வட்டாரங்களில் எழுந்த ஒரு கேள்வியைப் பற்றி நான் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். ஒரு தொடர் நவீனம் நல்ல இலக்கியமாக அமைய முடியுமா என்பதே அது. பத்திரிகையின் கொள்கை நாவலின் போக்கை அமுக்கலாமென்பதும், வாராந்த வாசகனின் ஆவலைத் தூண்டுவதற்காக ஓர் எழுத்தாளன் நாடகத் தன்மையற்ற இடங்களையும் நாடகமாகக் காட்ட முயலாமென்றும், இவ்விதம் விட்டுக் கொடுப்பது அவனது பண்பாகிவிட்டால் அவன் கலையில் பொய்மை புகுந்து விடுமென்றும் கனேசலிங்கன் சுட்டிக்காட்டினார். இதில் ஓரளவு உண்மை அடங்கியிருக்கிறது என்பதை நான் மறுக்க வில்லையாயினும், முழு உண்மையின் சொரூபமும் அதில் இல்லை என்றே நான் எண்ணுகிறேன். ஏனெனில் இன்று உலகப் பேரிலக்கியங்களாகக் கொண்டாடப்படும் பல நாவல்கள் தொடர் கதைகளாக எழுதப்பட்டனவே. டொஸ்டோவ்ஸ்கியின் “காம்சோவ் சகோதரர்கள்” நெக்ரசோவ் ரிவ்யூ என்னும் சஞ்சிகையில் வெளிவந்த தொடர் கதைதான். எமினி சோலாவின் ‘ நானா’வும் முதலில் தொடர்கதையாகவே வெளியிடப்படது. டிக்கென்ஸின் ‘ஒலிவர் டுவிஸ்ட்,’ ‘நிக்கலஸ் நிக்கல்பி,’ ‘இரு நகரக் கதைகள்’ என்பனவும் ‘பென்ட்லீஸ் வீக்லி’ போன்ற சஞ்சிகைகளில் தொடர்கதைகளாக வெளியிடப்பட்டவை தாம். ஏன், தமிழகத்தின் சிறந்த நாவலாசிரியர் என்று கருதப்படும் ‘கல்கி’யின் எல்லா நாவல்களுமே ‘ஆனந்த விகடனி’லும் ‘கல்கி’யிலும் தொடர் கதைகளாக வெளிவந்தவை தாமே? ஆகவே ஒரு நாவல் நல்ல இலக்கியமாக அமைகிறதா அல்லவா என்பதை, அது தொடர்கதையாக எழுதப்படுகிறதா அல்லது நேரடியாகவே புத்தகமாக வெளியிடப்படுகிறதா என்பது ஒருபோதும் நிர்ணயித்து விடாது என்பதே எனது கருத்து. சிறந்த இலக்கியப் புலன்வாய்ந்த எழுத்தாளனால் சிரமமான சூழலிலும் நல்ல இலக்கியத்தைப் படைக்க முடியும்.

இவை போக முடிவுரையின் ஓர் அம்சம் நன்றி நவிலலாகும். ‘மனக்கண்’ நாவலை நான் உருவாக்கித் தொடர் கதையாக வெளியிடுவதற்குத் ‘தினகரன்’ வார மஞ்சரி எனக்களித்த வாய்ப்பை நான் ஒரு போதும் மறக்க முடியாது. இதற்காக எனது மனப்பூர்வமான நன்றியைத் ‘தினகரன்’ வார மஞ்சரிக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

[நன்றி: தினகரன்]

"மதமாற்றம்"

- அ.ந.கந்தசாமி -
['மதமாற்றம் 'நாடக ஆசிரியரான அறிஞர் அ.ந.கந்தசாமி 3-7-1967 வெளிவந்த 'செய்தி' இதழில் எழுதிய சுயவிமர்சனக் கட்டுரையிது.]
சுய விமர்சனம் , எழுத்துத் துறைக்குப் புதிதல்ல. ஜவர்ஹலால் நேரு தன்னைப் பற்றித் தானே விமர்சனம் செய்து நேஷனல் ஹெரால்ட்ட் பத்திரிகையில் ஒரு விமர்சனக் கட்டுரை எழுதினார். பெர்னாட்ஷா தனது நாடகங்களுக்குத் தானே விமர்சனங்கள் பத்திரிகைகளில் எழுதியிருக்கிறார். ஆனால் எனக்கும் அவர்களுக்கும் ஒரு வித்தியாசம். அவர்கள் புனை பெயர்களுக்குள் ஒழிந்திருந்து எழுதினார்கள். நான் எனது சொந்தப் பெயரிலேயே இக்கட்டுரையை விளாசுகிறேன். காலஞ்சென்ற கல்கி அவர்களும் தமது சிருஷ்டியைப் பற்றித் தாமே விமர்சனக் கட்டுரைகள் எழுதியிருக்கிறார். 'தியாக பூமி' சினிமாப் படத்தைப் பற்றி அவர் விமர்சனக் கட்டுரைகள் எழுதி, நாடெங்கும் ஏற்படுத்திய பரபரப்பு எனக்கு ஞாபகமிருக்கிறது. 'கல்கி' கூடத் தமது சொந்தப் பெயரில் இவற்றை எழுதவில்லை. 'யமன்' என்ற புனை பெயருக்குள் புகுந்து கொண்டே அவர் இவற்றை எழுதியதாக நினைவு.


கொழும்பில் எனது 'மதமாற்றம்' நாடகம் நான்காவது முறை அரங்கேறியிருக்கிறது. அரங்கேற்றியவர் பிரபல சிறுகதையாசிரியர் காவலூர் இராசதுரை. டைரக்ஷன் லடீஸ் வீரமணி. நடித்தவர்களில் தான் தோன்றிக் கவிராயரென்று புகழ் படைத்த சில்லையூர் செல்வராசன், ஞானாஞ்சலி, தோத்திரமாலை போன்ற பல நூல்களை எழுதிய நவீன உவமைக் கதாசிரியர் முத்தையா இரத்தினம் என்பவர்கள் இவர்களில் சிலர்.

நல்ல முறையில் அரங்கேற்றுவதன் மூலம், தமிழ் நாடகத்துக்குப் புத்துணர்ச்சியும் புதுமலர்ச்சியும் கொடுக்க முடியும் என்று நம்பியவர்கள் இவர்கள். இலங்கையில் சிங்கள ஆங்கில நாடகங்களுக்குத் தரத்தில் குறைவில்லாத தமிழ் நாடகங்களைத் தயாரித்து அளிக்க வேண்டுமென்று துடித்தவர்கள். ஆகவே இப்போது விமர்சகனின் முன்னுள்ள ஒரே கேள்வி இதில் இவர்கள் எவ்வளவு தூரம் வெற்றி பெற்றார்கள் என்பதுதான்.

நாடகம் எழுதுவது, ரேடியோவில் விமர்சனம் செய்வது, நாடக இயல் பற்றி நான் ஆராய்வது-பேசுவது ஆகிய யாவற்றிலும் நான் சிறிது காலமாகவே ஈடுபட்டு வந்திருக்கிறேன். ஆனால் இவை யாவற்றிலும் பார்க்க நான் செய்து வந்த முக்கியமான வேலை நாடகங்களைப் பார்ப்பதாகும். இதில் நான் எவருக்கும் சளைத்தவனல்ல. தமிழ் நாடகங்களைப் பொறுத்தவரையில் கலாநிதி சு.வித்தியானந்தனின் 'கர்ணன் போர்' தொடக்கம் லடீஸ் வீரமணியின் 'சலோமியின் சபதம்' வரை அனேகமானவற்றை நான் பார்த்திருக்கிறேன். ஆங்கில நாடகங்களில் பெர்னாட்ஷாவின் 'மில்லியனரெஸ்' ('கோடிஸ்வரி') தொடக்கம் ஆர்தர் மில்லரின் 'டெத் ஒவ் ஏ சேல்ஸ்மேன்' ('விற்பனையாளனின் மரணம்') அனேக நாடகங்களை நான் பார்த்திருக்கிறேன். சிங்கள நாடகங்களில் தயானந்த குணவர்த்த்னாவின் 'நரிபேனா' தொடக்கம் சுகத பால டி சில்வாவின் 'ஹரிம படு ஹயக் ' வரை பல நாடகங்களை நான் பார்த்திருக்கிறேன்.

'மதமாற்றம்' நாடகத்தின் முதற் சிறப்பு, அது இலங்கையில் சுயமாக எழுதப்பட்ட ஒரு மூல நாடகமென்பதாகும். மேலே நான் கூறிய நாடகங்கள்- சிங்கள நாடகமாகட்டும், ஆங்கில நாடகமாகட்டும் - எதுவுமே இலங்கையில் எழுதப்பட்ட மூல நாடகங்களல்ல. 'கர்ணன் போர்' இதிகாசத்தின் வழி வந்த கர்ணபரம்பரை நாடகம். 'சலோமியின் சபதம்' ஓஸ்கார் வைல்ட் தழுவல். ஆங்கில நாடகங்களிரண்டும் உலகின் பிரசித்தி பெற்ற அன்னிய நாடகாசிரியர்களின் சிருஷ்டிகள். 'நரிபேனா' கிராமியக் கதை. 'ஹரிம படு ஹயக்' இத்தாலிய நாடகாசிரியர் பிரான் டெல்லோ எழுதியது. என்னைப் பொறுத்தவரையில் நாடகம் என்பது எழுத்தும் தயாரிப்பும் சேர்ந்தது. ஒரு மொழியில் சுயமான நாடக இலக்கியங்கள் எழுந்து அவை மேடையில் அரங்கேற்றப்படுவதுதான் சிறப்பு. ஆனால் இதற்கு உலகின் சிறந்த நாடகங்கள் இங்கு அரங்கேற்றப்படுவதை நான் ஆட்சேபிப்பதாக பொருள் கொண்டு விடக் கூடாது. உண்மையில் அவை மூலத்திலுள்ள மாதிரியே இங்கு அரங்கேற்றப்படும்போது நமது நாடக எழுத்தாளர்களுக்கு அவை வழிகாட்ட வல்லனவாய் அமையும். அத்துடன் நமது நாடக ரசிகர்களின் ரசிகப்புலன் வரையும் அவை உதவும் என்பது என் அபிப்பிராயம்.
ஆனால் ஐந்து வேற்று நாடகங்கள் அரங்கேற்றும் பொழுது ஒரு சுயமான நாடகமாவது எழுதி அரங்கேற்றப்படாது விட்டால் நாடகம் இங்கு ஒரு இலக்கியத் துறையாக வளர்வது எப்படி? 'மதமாற்றத்தை'ப் பொறுத்தவரையில் அது சுயமாக எழுதப்பட்ட மூல நாடகம். மூலநாடகமாயிருந்து விட்டால் மட்டும் ஒரு நாடகம் சிறந்ததாகி விடாது. அதில் போதிய நாடகத்தன்மை கொண்ட நாடகக் கதையுண்டா, நல்ல உரையாடல்கள் இருக்கின்றனவா, மனதைத் தாக்கும் கருத்துகள் உள்ளனவா என்பதைக் கவனிக்க வேண்டும். இவ்வகையில் 'மதமாற்றம்' நல்ல நாடகமே. அதனால் தான் பல ஆங்கில தமிழ் விமர்சகர்கள் அதை இப்சனோடும், ஷாவோடும், சாட்ரேயோடும் ஒப்பிட்டு எழுதியிருக்கிறார்கள். இப்படி ஒப்பிட்டவர்களில் டெயிலி மிரர் 'அர்ஜூனா' , சில்லையூர் செல்வராசன் ஆகியோர் குறிப்பிடத் தக்கவர்கள். சென்ற வாரம் இலங்கை வானொலியின் ஆங்கில ஒலிபரப்பில் பேசிய கே.எஸ்.சிவகுமாரனும் ஷாவின் 'ஆர்ம்ஸ் அண்ட் மான்' நாடகத்துடன் 'மதமாற்றை'த்தை ஒப்பிட்டுப் பேசியிருக்கிறார். ஆனால் இந்நாடகத்தை இலக்கியம் என்ற முறையில் துருவி ஆராய்ந்து தீர்ப்பு வழங்கியிருப்பவர் ஈழத்தின் சிறந்த கலை இலக்கிய விமர்சகரான கலாநிதி கே.கைலாசபதியேயாவர். 'இதுவே தமிழில் முதல் முதலாக எழுதப்பட்டுள்ள மிகவும் சிறந்த காத்திரமான நாடகம் (Serious Play). இவ்வாறு நான் சொல்கையில் தென்னிந்தியாவையும் அடக்கியே கூறுகிறேன்' என்று சமீபத்தில் 'சிலோன் ஒப்சேர்வர்' பத்திரிகையில் தமிழ் நாடக நிலை பற்றி எழுதிய கட்டுரையில் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

நடிப்பு
ஒரு நாடகம் எவ்வளவு தான் சிறப்புள்ளதானாலும் அது அரங்கில் சிறப்படைவது நடிகர்களாலும் தயாரிப்புத் திறனாலுமே. காவலூர் ராசதுரையின் மதமாற்றம் இந்த வகையில் எவ்வாறு அமைந்திருந்தது? நாடகக்கதையைப் பற்றி எழுதும்போது நாடகத்தை எழுதியவன் நானென்ற காரணத்தினால் மற்றவர்களின் கருத்துகளையேதான் அதிகமாக எடுத்துக் கூறவேண்டியதாயிற்று. ஆனால் நடிப்பைப்பற்றி எழுதும்போது இந்தத் தொல்லை எனக்கில்லை. இதில் எனது கருத்துகளை நான் மிகப்பட்டவர்த்தனமாகவே கூறிவிட முடியும்.
கலாநிதி கைலாசபதி தனது ஆங்கிலக் கட்டுரையில் 'மதமாற்றத்'தின் முன்னைய தயாரிப்புகள் பற்றிக் கூறுகையில், அவை தயாரிப்புத்தரம் குறைந்திருந்ததால் முழுப் பொலிவையும் பெற்று மிளிரவில்லை என்று குறிப்பிட்டிருந்தார். புதிய 'மதமாற்றத்தைப்' பற்றி எவரும் அவ்வாறு கூறுவதற்கில்லை. பல இடங்களில் அது முழுப் பொலிவையும் பெற்றுச் சோபித்ததென்றே சொல்ல வேண்டும். ஆகச் சிறந்த ஆங்கில சிங்கள நாடகங்களுக்குச் சமதையான, சிறந்த நடிப்பை நான் 'மதமாற்றத்தில்' கண்டேன். நடிப்பைப் பொறுத்தவரையில் ஈழத்தில் அதிகப் புள்ளிகள் பெறும் தமிழ் நாடகம் இதுதான். நடிகர்களில் என் மனதைக் கொள்ளை கொண்டவர் சில்லையூர் செல்வராஜனே. அர்த்தபுஷ்டியுள்ள வசனங்களை நறுக்குத் தெறித்தாற்போல் பேச வேண்டிய பொறுப்பு அவருக்கேற்பட்டது. அதை அவர் மிகச்சிறப்பாகவே நிறைவேற்றி விட்டார். இயற்கையான நடிப்பு. அவர் நடிக்கவில்லை என்ற பிரமையை எவருக்கும் ஏற்படுத்தத்தான் செய்யும்.

பொதுவாகக் கருத்து நாடகங்களை எழுதும் ஷா போன்ற பெரிய நாடகாசிரியர்களின் படைப்புகளில் சில சமயங்களில் பாத்திரங்கள் மிக நீண்ட பிரசங்கங்களைச் செய்ய ஆரம்ப்பிப்பார்கள். செயிண்ட் ஜோன், பாக்டு மெதுசேலா என்ற அவரது நான்கு மணி நேர நாடகங்களில் நாலைந்து பக்கங்களுக்குச் செல்லும் இப்படிப்பட்ட அதிகப் பிரசங்கங்களைக் காணலாம். நல்ல வேளையாக 'மதமாற்றத்'தில் இக்குறையில்லை. எந்த பாத்திரமுமே தொடர்ந்தாற்போல் ஐந்து வசனங்களைக் கூடப் பேசவில்லை. இது செல்வராஜனின் நடிப்புக்கும் பேச்சுக்கும் ஓரளவு உதவி செய்யவே செய்தது. இதனால் தனது கருத்து நிறைந்த வசனங்களை அதிகப் பிரசங்கத் தன என்று தோன்றாமலே பொழிந்து தள்ள முடிந்தது அவரால்.

செல்வராஜனுக்கு அடுத்தபடி என் மனதைக் கவர்ந்தவர் கதாநாயகியாக நடித்த ஆனந்தி. தன்னம்பிக்கையோடு மேடையைத் தன் வீடுபோல் கருதி வசனங்களைக் கொட்டித் தள்ளினார் ஆனந்தி. சபையோரிடையே மிகுந்த பரபரப்பையூட்டிய பாலச்சந்திரன் - ஷீலா சந்திப்பு சீனில், அவர் நடிப்பு மிகச் சோபித்தது. ஆனால் இரண்டோர் இடங்களில் அவர் வசனங்களை மறந்து திண்டாடியதை மட்டும் என்னால் மன்னிக்க முடியாது. நாடகத்தில் நடித்த மற்றையவர்கள் எல்லோருமே தம் தம் பாகங்களுக்குப் பொருத்தமாகவே இருந்தனர். சில நடிகர்கள் சிறிய பாகங்களை வகித்ததால், தமது முழு நடிப்புத் திறனையும் காட்ட முடியவில்லை. ஆனால் அதற்காக எல்லோருக்கும் சமசந்தர்ப்பம் அளிக்கு நாடகத்தை யாராலும் எழுதிவிட முடியாதல்லவா?

செட்டுகள்
நாடகத்தின் அடுத்த சிறப்பம்சம் அதன் செட்டுகளாம். அனேகமான தமிழ் நாடகங்களில் ஆர்ப்பாட்டமான செட்டுகளை அமைத்து சபையோரின் கவனத்தை நாடகத்திலிருந்து செட்டுக்குத் திருப்பி விடுகிறார்கள். லடீஸ் வீரமணியின் செட்டுகளில் இக்குறையில்லாதிருந்ததே அதன் தனிச் சிறப்பு. ஆனால் கடைசிக் காட்சியில் ஒளி அமைப்பு பிரமாதமாயிருந்த போதிலும் நாடகத்தின் சுறுசுறுப்பை ஓரளவு குறைத்து விட்டதென்றே கூற வேண்டும். பின்னணியைப் பொறுத்தவரையில் லடீஸ் வீரமணியின் 'நாடகத்தின் காவியத்தில்..' என்ற பாரதி பாட்டு அதிக அற்புதமாக இருந்தது.

இயக்கம்
'மதமாற்றம்' டைரக்டர் லடீஸ் வீரமணி ஏற்கனவே பல நாடகங்களை அரங்கேற்றிப் புகழ் பெற்றவரென்றாலும் இந்நாடகமே அவரது மிகசிறந்த தயாரிப்பு என்று நான் கருதுகிறேன். இதற்குக் காரணம் அவர் நாடகப் பிரதியை கூடியவரை அடியொற்றிச் சென்றமையும் நல்ல நடிகர்கள் பலர் அவருக்குக் கிடைத்தமையுமேயாகும்.

பொதுவாகச் சொல்லப் போனால் 'மதமாற்றத்தின்' நான்காவது அரங்கேற்றம் அந்நாடகத்துக்கு முன்னில்லாத சிறப்பை அளித்திருக்கிறது. நடிப்புத் துறையிலும் தயாரிப்பிலும் இலங்கையின் சிங்கள ஆங்கில நாடகங்களுக்குச் சமமாக விளங்கும் அது, எதிர்காலத்தில் நமக்கு நம்பிக்கையையூட்டுகிறது. இத்தகைய ஒரு நாடகத்தை தயாரித்தளித்தற்காக தன் தயாரிப்பாளர் காவலூர் ராசதுரையைப் பாராட்டுகிறேன்

நன்றி: 'செய்தி' , ஜுலை 3, 1967

தான்தோன்றிக் கவிராயரின் கவிதைகள்!

- அறிஞர் அ.ந.கந்தசாமி -

[ சில்லையூர் செல்வராசனின் கவிதைகளை ஒரு அரைகுறை விமர்சகர் Blank Verse என்று விமரிசிக்கப் போய் அறிஞர் அ.ந.கந்தசாமியிடம் வசமாக வாங்கிக் கட்டிக் கொண்டார். அதன் விளைவே கீழுள்ள கட்டுரை. இச்சமயத்தில் பேராசிரியர் கைலாசபதி அவர்கள் தனது 'ஒப்பியல் யாப்பிலக்கணம்' நூலினை அறிஞர் அ.ந.கந்தசாமிக்கே சமர்ப்பணம் செய்திருந்ததை ஞாபகப் படுத்துவதும் பொருத்தமானதே - ஆர்]

சமீபத்தில் கொழும்பில் நடைபெற்ற ஒரு நாடகத்தொடக்க விழாவில் பேசிய ஒரு பட்டதாரி சிறு கதாசிரியர், சில்லையூர் செல்வராசனின் கவிதைகளைப் பற்றிப் பேசும்போது அவை வெறும் Blank Verse என்று குறிப்பிட்டாராம். இத்தகைய தீர்ப்பை அளிக்க, ஒருவருக்கு யாப்பிலக்கணம், தமிழில் மட்டுமல்ல, ஆங்கிலத்திலும் நன்கு தெரிந்திருக்க வேண்டும். அவ்வாறு தெரியாமல் வாயைப் பிளந்தால் அவரது அறியாமையின் நாற்றந்தான் ஊரெல்லாம் பரிமளிக்கும். பட்டதாரிச் சிறு கதாசிரியரின் பேச்சு இதற்கு நல்ல உதாரணமாக அமைந்துள்ளது. நமது நாட்டிலுள்ள 'மரபு'களில் ஒன்று, நாலு நூல்களை நெட்டுருப் போட்டு, நான்கு முறை நூன சித்தியும் ஐந்தாம் முறை மூன்றாம் வகுப்பில் முழுச் சித்தியும் பெற்றுப் பண்டிதரோ, பட்டதாரியோ ஆகி விட்டால் அவர் ஒரு படித்தவர் என்று கணித்துக் கொள்வதாகும். ஆனால் இஅவர்களில் பலர் பாடப் புத்தகங்களைத் தவிர வேறெதையும் படித்தவர்களல்ல.

இங்கு நான் ஒரு கேள்வியை எழுப்ப விரும்புகிறேன். தொல்காப்பியத்தின் ஒரு பகுதியையும், திருவாசகத்தின் ஒரு பகுதியையும், பாரதத்தின் இரண்டு சருக்கத்தையும் பள்ளிக்குச் சென்று படித்துப் பெற்றவனா அல்லது வீட்டிலிருந்து கொண்டே மூன்று நூல்களையும் முழுவதும் கற்றவனா அவற்றை முற்றாகப் படித்தவன்?

ஞானசம்பந்தர் ஓதாதுணர்ந்தவர், முலைப்பாலைக் குடித்தே முழு அறிவும் பெற்றவர் என்கிறார்கள். ஒரு சில பண்டிதர்களும் பட்டதாரிகளும், ஏன் பயிற்சி பெற்ற தமிழ் வாத்தியார்களில் சிலர் கூட, தம்மை ஞானசம்பந்தர்கள் என்றுதான் காட்டப் பார்க்கிறார்கள். யாப்பிலக்கணத்தைக் கற்காமலே அது பற்றித் தீர்ப்புக் கூறத் தமக்கு உரிமையுண்டு என்று அவர்கள் நினைக்கிறார்கள். இப்படிப்பட்ட ஒரு பயிற்சி பெற்ற தமிழ் வாத்தியார்- நான் முன்னே கூறிய பட்டதாரிச் சிறு கதாசிரியரால் 'சொறி விமர்சகர்' என்று ஒரு முறை வர்ணிக்கப்பட்டவர் - நான் சில ஆண்டுகட்கு முன்பே 'வெண்பா எழுதுவது எப்படி?' என்ற யாப்பிலக்கணம் சம்பந்தமான தொடர் கட்டுரையை வீரகேசரியில் எழுதியபோது, அதில் ஏதோ பிழை இருப்பதாகக் குறிப்பிட்டார் இப்போ செத்துமடிந்து போன ஒரு யாழ்ப்பாண ஏட்டில்! ஆனால் என்ன பிழை என்று அன்றும் காட்டவில்லை, இன்றும் காட்டவில்லை. பிழை இருந்தால் அல்லவா காட்டுதற்கு? மேலும் பிழை காட்டுவதற்கு அவருக்கு யாப்பிலக்கணம் பிழையறத் தெரிந்திருக்க வேண்டும். அவர் அந்த நிலையில் இல்லை. இருந்தாலும் பேசத்துணிவு கொண்டு விட்டார்! ஏன்? அவர் தமிழ் வாத்தியார்; ஓதாது உணரக்கூடிய ஞானசம்பந்தர்! படித்திராவிட்டாலும் படித்திருப்பார் என்று எண்ணக்கூடிய மெளடீகங்கள் எம்மிடையே பலர் உண்டு என்பது அவருக்குத் தெரியும், அதுதான் அவ்வளவு துணிவு!

Blank Verse பற்றிப் பேசியவருக்கு ஆங்கிலப் படிப்பு உண்டு. ஆனால் அது பற்றிப் பேச ஆங்கிலமொழி அறிவு மட்டும் போதாது. ஆங்கில யாப்பிலக்கண அறிவு வேண்டும். மேலும் சில்லையூர் கவிஞன் தமிழ்க் கவிஞன். அவனது கவிதை எந்த தமிழ் யாப்புக்குள் அடங்குகிறது என்பதைத் தெரிந்து கொள்ளத் தமிழ் யாப்பிலக்கண அறிவும் வேண்டும். இரண்டும் தெரியாதவன், ஒப்பியல் யாப்பிலக்கண சம்பந்தமான இந்தப் பிரச்சினைப்பற்றிப் பேசவே கூடாது. எந்த ஜனநாயகத்திலும் இந்த உரிமையை நாம் மறுத்தேயாக வேண்டும். இரண்டும் தெரியாமலே இந்த மெளடீகம் தான் ஓதாது உணரக்கூடிய ஒரு ஞானசம்பந்தர் என்ற எண்ணத்தில் போலும் தன் வாயைப் பிளந்து வாந்தி எடுத்தது! ஆனால் அந்த வாந்தியில், பார்ப்பனக் குறவனின் பால் மணம் வீசவில்லை; சாராய நெடி தான் சந்தி சிரித்தது!

என்னைப் பொறுத்தவரையில் நான் பண்டிதரல்ல, பட்டதாரியல்ல, பயிற்சி பெற்ற தமிழ் வாத்தியுமல்ல, ஓதாதுணர்ந்த ஞானசம்பந்தன் என்று மார் தட்டி நிற்க! ஒரு சிலவற்றையேனும் ஓதியுணர்ந்த, சாதாரண மனிதன் நான். உலகில் எட்டு அதிசயம் என்றெல்லாம் ஏதேதோ சொல்லுகிறார்கள் இன்று. இதில் நான் கண்ட பேரதியம் என்னெவென்றால், விஷயந் தெரியாதவர்கள் மிகத் துணிவுடன் விஷயந் தெரிந்தவர்கள் போலப் பேச முன்வந்து விடுவதுதான். இந்த அதிசயத்தைப் பார்த்த பிறகு மற்ற அதிசயங்களை நேரில் சென்று பார்க்க வேண்டுமென்ற் ஆசையே எனக்கு இல்லாமல் போய் விட்டது.

பண்டிதத் தராதரப் பத்திரமோ, பட்டதாரித் தராதரப் பத்திரமோ, வாய்க்கு வந்ததை எல்லாம் உளறுவதற்கு லைசென்ஸ் அளிக்கிறது என்று எவரும் எண்ணக் கூடாது! 'எப்பொருள் யார் வாய்க் கேட்பினும் எப் பொருள் எத்தன்மைத்தாயினும், அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு ' என்ற வள்ளுவன் கருத்து, இன்றைய உலகின் கருத்து என்பதை மறந்துவிட வேண்டாம்.

இத்துடன் பீடிகை போக நான் எடுத்துக் கொண்ட ஒப்பியல் யாப்பிலக்கண விவகாரத்துக்கு வருவோம்.

முதலாவதாக, Blank Verse என்றால், வெறும் செய்யுள் என்று மொழி பெயர்த்துக் கொண்டு, வெறும் செய்யுள் என்றால் வெற்றுச் செய்யுள் என்று வியாக்கியானம் செய்து, 'ஆகா வெற்றுச் செய்யுள் என்றால் மோசமான செய்யுள்!' என்று ஆர்ப்பரிக்க, இலக்கணம் தெரியாத, ஓதாதுணர்ந்த, 'மரபு' காக்க முற்பட்ட மெளடீகங்களால்தான் முடியும்! 'வெண்பா' என்றால் 'வெள்ளைக் கவி'. வெள்ளைக் கவி என்றால் ஆழ்ந்த பொருள் அமையாக் கவி. அதனால்தானே 'வெள்ளைக் கவி காளமேகமே! உன் கள்ளக் கவிக் கடையைக் கட்டு' என்று அதிமதுரன் பாடினான், என்று யாராவது ஆர்ப்பரித்தால் அது எத்துனை அபத்தமோ அத்தகைய அபத்தம் தான் Blank Verse பற்றி இப்படி நினைப்பதும். Blank Verse என்றால் வெற்றுக் கவி அல்ல. வெண்பா என்பது வெள்ளைக் கவி அல்ல. Blank Verse ஒரு ஆங்கிலப் பாவினம். வெண்பா தமிழ்ப் பாவகைகளான வெண்பா, கலிப்பா,வஞ்சி,ஆசிரியம் என்ற நான்கு பாக்களில் ஒன்று.
Blank Verse இன் இலக்கண அமைதி பின்வருமாறு;

அதில் எதுகை இருக்கக் கூடாது. எதுகை என்றதும் இந்தப் பட்டதாரிகளும் பண்டிதர்களும் தாம் ஓதாதுணர்ந்த யாப்பிலக்கண , அறிவோடு 'எதுகை - கை எது?' என்று கேட்டுக்கொண்டு கிளம்ப வேண்டாமென்று அவர்களை மிகத் தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறேன். இன்னும் எனக்குத் தெரிந்த ஒரு பண்டித வித்துவான் யாப்பிலக்கணம் என்றால் எதுகையும் மோனையும்தான் என்று எண்ணிக் கொண்டிருப்பவர்; அவர் , - அதெப்படி? எதுகை இல்லாமலும் ஒரு பாட்டா?' என்று கேட்டுக்கொண்டு வரலாம். கரை போட்ட துணியில் அழகிருக்கிறது. ஆனால் கரை போடாத துணியிலும் இன்னொரு வகை அழகு இருக்கத்தான் செய்கிறது என்பதுதான் நாம் இவருக்கு அளிக்கக் கூடிய பதில்! ஆனால் அதைப் புரிந்து கொள்ள அழகுணர்ச்சி வேண்டும். அது அவரிடம் இருக்கிறதா என்பதைப் பொறுத்துத்தான் அவர் நம் பதிலை ஏற்றுக் கொள்வார். இது ஆங்கில இலக்கண விவகாரம். ஆங்கில யாப்பின்படி Blank Verseஇல் எதுகை இருக்கக் கூடாது.

மோனை இருக்கலாம் அன்றி இல்லாதிருக்கலாம். மோனை என்றதும், இது மகனே என்பதன் மரூஉ. யாழ்ப்பாணப்பகுதியில் வழங்கும் ஒரு கொடுந்தமிழ்ப் பிரயோகம் என்று ஆர்ப்பரிக்க வேண்டாமென்று இந்த அரைகுரைப் படிப்புள்ள பட்டதாரிகளையும் பண்டிதர்களையும் வேண்டிக் கொள்கிறேன். உளரும் லைசென்ஸ் பெற்றவர்களல்லவா? அதனால்தான் இவ்வேண்டுகோள்.

ஆனால் அளவொத்த அடி வேண்டும். அடி என்றதும் கையால் அடித்தல், காலால் அடித்தல் அல்ல. அடி என்றால் வரி. வரி என்றால் திருமணம் செய், சுயம் வரி என்றெல்லாம் பாதை தவறிப் பேசலாம் பத்திரம் பெற்ற பட்டதாரிகள். பத்திரம் இருக்கும்போது பயம் உண்டோ? ஆனால் அஞ்சுவது அஞ்சாமை பேதமை என்பதை நான் இங்கு சுட்டிக் காட்ட விரும்புகிறேன். அல்லது அடி விழலாம். அடி என்றால் பொல்லடி மட்டுமல்ல, சொல்லடியும் கல்லடியும்தான்.
ஒரு வகைச் சீரில் இயங்க வேண்டும். சீர் என்றதும் சிறப்பு, சீர்வரிசை என்று ஓதாதுணர்ந்தவர்கள் பொருள் தர முன்வரலாம். இது யாப்பிலக்கணச் சீர்; நீங்கள் நினைக்கும் சீர் அல்ல.

இந்த Blank Verse இற்கு ஒரு உதாரணத்தைத் தந்து அதை அலகிட்டுப் பார்ப்பது நல்லதென்ரு நான் நினைக்கின்றேன். பட்டதாரி மெளடீகம் Blank Verse என்றால் என்ன என்று இதைப் பார்த்தாவது புரிந்து கொள்ளட்டும்.

Oh, Swear Nor By the Moon The Incon sis stant Moon That Monthly changes in Her Cir cied orb (Shakespeare, Romeo Juliet)

இதில் எதுகை கிடையாது.

முதல் அடியில் மோனையில்லை. இரண்டாம் அடியில் Changes in her cricied orb என்று வருவது மோனை. மோனை வரலாம்; அல்லது வராது விடலாம்...

ஒவ்வொரு அடியும் ஐந்து சீர்கொண்ட Pentameter என்ற அடிகள். ஆகவே அளவொத்த அடிகள்.
இதில் காணும் சீரின் பெயர் Lambic. இரண்டு அடிகளும் ஒருவகைச் சீரிலேயே இயங்குகின்றன.
Blank Verse என்பது இதுதான். இது போல் அமைந்ததைத்தான் ஆங்கில யாப்பில் Blank Verse என்று அழைப்பார்கள். ஆனால் ஆங்கிலத்திலும், இதர மேனாட்டு மொழிகளிலும் Verse Librre அல்லது Free Verse என்று இன்னொன்றும் உண்டு. அதற்குத்தான் விதிகள் கிடையாது. எதுகை, மோனை, அளவு, சீர், தளை என்பன எதுவுமே கிடையாது அதற்கு. ஆனால் அதற்கும் இலக்கண அமைதி ஒன்றுண்டு. கூறும்பொருள் கவிதைத் தன்மை கொண்டதாயிருக்க வேண்டும். Cadense என்ற இன்னிசை அதில் ஒழுக வேண்டும்.

Blank Verse ஆங்கிலத்தில் எப்படிப்பட கவிஞர்களால் இதுவரை எழுதப்பட்டுள்ளது என்பதைத் தெரிந்து கொள்வதும் நல்லது. உலகின் மிகச் சிறந்த கவிஞன் என்று பலரால் கருதப்படும் ஷேக்ஸ்பியரின் கவிதை, பெரும்பாலும் இந்த எதுகையற்ற Blank Verseஆல் தான் எழுதப்பட்டுள்ளது. டெனிசன், மார்ளோவ், மில்டன் எல்லோரும் தம் நீண்ட காவியங்களை இந்த Blank Verseஇல்தான் எழுதினார்கள். பெரும்பாலும், தமது சிறுகவிதைகளில் தான் இக்கவிஞர்கள் எதுகையை உபயோக்கித்துள்ளார்கள்.

சரி, இதுவரை ஷேக்ஸ்பியடின் Blank Verseஐப் பார்த்தோம். இனி, தான் தோன்றிக் கவிராயர் என்னும் சில்லையூ செல்வராசனின் கவிதைகளை அலகிட்டு, அவற்றில் Blank Verse என்ற யாப்பின் தன்மைகள் ஓரளவாவது இருக்கின்றனவா என்பதை ஒருவகை ஒப்பியல் யாப்பிலக்கண முறையில் கவனிப்போம்.

சில்லையூர் செல்வராசன் வெண்பாக்கள், விருத்தங்கள்,சிந்துக்கள், ஆசிரியப்பாக்கள், கட்டளைக் கலித்துறை என்ற பலவித பா வகைகளிலும் தமது கவிதைகளைப் புனைந்து தமிழன்னையின் பாதங்களில் சூட்டியிருக்கிறார். இவை யாவும், அவற்றுக்குரிய இலக்கணத்துக்குள் அமைந்திருக்கின்றனவே அல்லாமல் Blank Verse என்ற கவி உருவத்தின் தன்மைகளைப் பெறவில்லை.

பொதுவாகக் கவி அரங்கங்களில் அவர் பாடும் பாடல்கள் வெண்டளை தழுவிய ஒரு புதிய கவி உருவமாகும். இது பாரதிதாசன் போன்ற பெருங் கவிஞரால் கையாளப்பட்டு, இன்று தமிழ்க் கவிஞர் பலராலும் உபயோக்கிக்கப்படும் ஒன்று. இக்கவி உருவத்திற்கு உதாரணமாக செல்வராசன் கவி அடிகள் ஒன்றிரண்டை இங்கு அலகிட்டுப் பார்ப்போம்.

யாழ்ப்பாணச் சாமி தனைக்
காழ்ப்பால் இகழ்ந் தெழுதும்
கூழ்ப்பானைப் பண்டிதரைக்
குட்டுதற்கே வந்துள்ளேன்!

இது பின்வரும் சீரமைதி:

தேமாங்காய் - கூவிளங்காய்
தேமா - கருவிளங்காய்
தேமாங்காய் - கூவிளங்காய்
கூவிளங்காய் - தேமாங்காய்

இவை யாவும் வெண்பாவில் பயிலும் சீர்கள். காய் முன் நேரும், மா முன் நிரையும், நிரை முன் நேரும், வருவது வெண்டளை. தளை அமைதி சரி. இப்புதிய பாவினத்தில், சாதாரணமாக, குறளைப்போல, இணை எதுகையே வரும். ஆனால் இவரது அடியிலோ யாழ், காழ், கூழ் என்ரு மூன்று எதுகைகள் வந்துள்ளன. ஆகவே, எதுகையமைதி தேவைக்கதிகமாகவே இருக்கிறது. முதலடியில் இரண்டு எதுகை விழுந்து விட்டதால் மோனை அவசியமில்லை. ஆனால் அங்கும் 'யா'வுக்கு 'இ' மோனையாக விழுகிறது. சொல்லாட்சியில் கவிஞர் வல்லவராய் இருப்பதால் அவரால் தேவைக்கதிகமாகவே எதுகைகளையும், மோனைகளையும் அள்ளி வீச முடிகிறது. தமிழ்ப் பாட்டில் எதுகை மோனை நயம் அதிகமாயிப்பது குற்றமல்ல, தனிச்சிறப்பு எனக் கருதப்படுகிறது என்பதையும் நான் இங்கு சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

நிச்சயமாக இது Blank Verse அல்ல. அதில் எதுகையே இருக்கக் கூடாது. செல்வராசனின் கவி அதற்கு முற்றிலும் முரண். அப்படியானல், இது Verse Libre ஆக இருக்கலாமோ? அதுவும் முடியாது. ஏனெனில் அளவொத்த அடிகள், அதுவும் தளைச் சிறப்புக் கொண்டவை, எதுகை மோனை எல்லாம் கொண்டவை, எப்படி Verse Libre ஆக முடியும்? அதுவும் முடியாது.
ஆகவே செல்வராசனின் கவியரங்கக் கவிதைகள் Blank Vesre அல்ல' வேறு பாவினம்.
உண்மையைச் சொல்லப்போனால் செல்வராசன் இதுவரை எழுதாத பாவினங்களில் ஒன்றுதான் Blank Verse. அவர் எதுகையற்ற பாட்டு எழுதினதே கிடையாது. எதுகையற்ற பாட்டுத்தான் Blank Verse.

ஏன், இந்தப் பட்டதாரிச் சிறுகதையாளர் பேசிய கூட்டத்திலேயே செல்வராசனின் கவி மழை பொழிந்தது. அதுகூட பஃறொடை வெண்பா (சிலர் இதைக் கலி வெண்பா என்று அழைத்தலும் உண்டு)வில் தான் பொழிந்தது.

உதாரணத்திற்குச் சில வரிகளை இங்கு தருகிறேன். சீரமைதி, தளையமைதி, எதுகை, மோனை எல்லாம் சரிவர அமைந்த பஃறொடை அது:-

'.......... பாராட்டைப் பெற்றவர்கள் பாலவும் பீரிசுடன்
சீராளன் ஆறுமுகச் செல்வனும் - ஆராய்ந்து
செய்யும் கருமம் சிறப்பாகச் செய்பவர்கள்
எய்யும் இலக்கறிந்தே எய்பவர்கள் - ஐயமிவண்
சற்றுமில்லை அன்னார்கள் காரியத்தைச் சாதிப்பர்
முற்றும் சிறப்பாய் முடிப்பார்கள்....!'

இவ்வாறு அழகுறச் செல்லும் பஃறொடையே இது. ஆனால் Blank Verse தமிழிலும் உண்டு. அது ஒரு வகை ஆசிரியம். ஆசிரியத்தில் எதுகை வரலாம்; அல்லது வராது விடலாம்.

அளவொத்த அடி

எதுகை இன்மை

மோனை இருத்தல் அல்லது இல்லாதிருத்தல்

ஒரே வகைச் சீர்

இவை எல்லாம் அமைந்த எதுகை அற்ற நிலை மண்டில ஆசிரியம் - அதாவது கடைசியடிக்கு முன்னடி முச்சீராக வராத ஆசிரியம் - ஏறக்குறைய, ஏன் முற்றாகவே ஆங்கில Blank Verse இற்குச் சமம் என்று கூறலாம்.

ஆனால் இவ்வகை Blank Verse தமிழில் கவிஞர்களின் விருப்பினை ஏனோ இதுவரை பெறவில்லை. செல்வராசனும் இதுவரை அதனைக் கையாண்டது கிடையாது. அவர் இதுவரை எழுதாத பாவினம் உண்டானால் அது Blank Verse தான்.

விஷயம் இவ்வாறிருக்க செல்வராசனின் கவிதையை ஆராய்ந்து, அது Blank Verse என்கிறார் பட்டதாரிச் சிறுகதையாசிரியர், ஒப்பியல் யாப்பிலக்கணம் அறிந்த மேதாவி போல! 'தேவதைகள் போவதற்கஞ்சும் இடங்களிலும் குட்டிச் சாத்தான் நாணாது செல்லுமாம்' என்ற வசனம் தான் எனக்கு ஞாபகம் வருகிறது, இதைப் பார்க்கும்பொழுது!

நன்றி: 31 ஜூலை 1970 - தேசாபிமானி - வசந்தம் நவம்பர் 1965

அ.ந.கந்தசாமியின் கவிதைகள் சில!

சிந்தனையும் மின்னொளியும்!

சாளரத்தின் ஊடாகப் பார்த்திருந்தேன் சகமெல்லாம்
ஆழ உறங்கியது அர்த்த ராத்திரி வேளையிலே,
வானம் நடுக்கமுற, வையமெல்லாம் கிடுகிடுக்க,
மோனத்தை வெட்டி யிடியொன்று மோதியதே!
'சட்' டென்று வானம் பொத்ததுபோல் பெருமாரி
கொட்டத்தொடங்கியது. 'ஹேர்' ரென்ற இரைச்சலுடன்
ஊளையிடு நரியைப் போல் பெருங்காற்றும் உதறியது.
ஆளை விழுத்திவிடும் அத்தகைய பேய்க்காற்று
சூறா வளியிதுவா உலகினையே மாய்க்க வந்த
ஆறாத பெருஊழிக் காலத்தின் காற்றிதுவா?
சாளரத்துக் கதவிரண்டும் துடிதுடித்து மோதியது.
ஆழிப்பெரும் புயல்போல் அல்லோலம் அவ்வேளை
உலகம் சீரழிவிற்ற(து); அப்போ வானத்தில்
மாயும் உலகினுக்கு ஒளிவிளக்கந் தாங்கிவந்த
காயும் மின்னலொன்று கணநேரம் தோற்றியதே.
கொட்டுமிடித்தாளம் இசைய நடம் செய்யும்
மட்டற்ற பேரழகு வான்வனிதை போல் மின்னல்
தோன்றி மறைந்ததுவே; சிந்தனையின் தரங்கங்கள்
ஊன்றியெழுந்தன இவ் வொளிமின்னல் செயல் என்னே?
வாழ்வோ கணநேரம்; கணநேரம் தானுமுண்டோ?
சாவும் பிறப்புமக் கணநேரத் தடங்குமன்றோ?
ஐனனப் படுக்கையிலே ஏழைமின்னல் தன்னுடைய
மரணத்தைக் கண்டு துடிதுடித்து மடிகின்ற
சேதி புதினமன்று; அச் சேதியிலே நான் காணும்
சோதி கொளுத்திச் சோபிதத்தைத் செய்துவிட்டு
ஓடி மறைகிறது; வாழும் சிறு கணத்தில்
தேடி ஒரு சேவை செகத்திற்குச் செய்ததுவே!
சேவையதன் மூச்சு; அச்சேவை யிழந்தவுடன்
ஆவிபிரிந்து அகல்வானில் கலந்ததுவே!
என்னே இம் மின்னல(து) எழிலே வென்றிருந்தேன்.
மண்ணின் மக்களுக்கு மின்னல் ஒரு சேதி சொல்லும்.
வாழும்சிறு கணத்தில் வைய மெலாம் ஒளிதரவே
நாளும் முயற்சி செய்யும் நல்லசெயல் அதுவாகும்.
இந்த வாறாகச் சிந்தனையில் ஆழ்ந்துவிட்டேன்.
புந்தி நடுங்கப் புரண்டதோர் பேரிடி; நான்
இந்த உலகினிற்கு வந்தடைந்தேன்; என்னுடைய
சிந்தனையால் இச்சகம்தான் சிறிதுபயன் கண்டிடுமோ? -

அறிஞர் அ.ந.கந்தசாமியின் ஆரம்பகாலக் கவிதையிது. ஈழகேசரியில் வெளிவந்தது.-

எதிர்காலச் சித்தன் பாடல்!

எதிர்காலத் திரைநீக்கி அதற்கப் பால்யான்
ஏகிட்டேன் ஏகிட்ட போதில் என்முன்
கதிர்போலும் ஒளிமுகத்தான் கருனையூறும்
கமலம்போற் கண்ணினையான் ஒருவன் வந்தான்
"எதிர்கால உலகமி·து மனிதா நீயிங்
கேன்வந்தாய் இவன்காணும் பலவுமுன்னை
அதிர்வெடி போல் அலைக்கழிக்கும் ஆதலாலே
அப்பனே நிகழ்காலம் செல்க" என்றான்.

அறிவினிலே அடங்காத தாகம் கொண்டேன்
அவ்வுரையால் அடங்கவில்லை அவனை நோக்கிச்
'செறிவுற்ற பேரறிவின் சேர்க்கை வேண்டும்
செந்தமிழன் யானொருவன் ஆதலாலே
மறுவற்ற பேராண்மைக்கோட்டை என்னை
மலைவுறுத்தா தெதிர்காலம்" என்று கூறிக்
குறுகுறுத்த விழியுடையான் குழுத வியான்
குணமென்ன பெயரென்ன என்று கேட்டேன்.

"எனக்குமுன்னே சித்தர்பலர் இருந்தா ரப்பா
எதிர்காலச் சித்தன்யான் நிகழ்காலத்தர்
உனக்குமுன்னர் வாழ்ந்திட்ட சித்த ரல்லால்
உன்காலச் சித்தரையும் ஏற்கா ரப்பா
மனக்குறைவால் கூறவில்லை மகிதலத்தில்
மடமையொரு மயக்கத்தின் ஆட்சி என்றும்
கனத்துளதிங் கென்பதையே கருதிச் சொன்னேன்
காசினியின் பண்பிதனைக் கானப் பா நீ.

வருங்காலச் சித்தனுரை செய்த வார்த்தை
வையகத்தார் அறிதற்காய் இங்கு சொல்வேன்
"பெரும்போர்கள் விளைகின்ற நிகழ்காலத்தில்
பிளவுறுத்தும் பலவகையாம் பேதமுண்டு
ஒருமைபெறும் மனிதர்களை ஒன்றா வண்ணம்
ஊடமைத்த சுவரனைய பேதம் யாவும்
நோக்கிடுவாய் தூரஎதிர் கால மீதே"

அண்டுபவர் அண்டாது செய்வதேது
அநியாய பேதங்கள் பெயரைச் சொல்வேன்
துண்டுபட்டுத் தேசங்கள் என்றிருத்தல்
தூய்மையாம் இனம்மொழிகள் மதங்க ளென்று
அன்றுதொட்டிங் கின்றுவரை இருக்குமந்த
அர்த்தமிலாப் பிரிவினைகள் எல்லாம் சாகும்.
ஒன்றுபட்டிவ் வுலகெல்லாம் ஒற்றையாகும்
ஒருமொழியில் ஓரரசு பிறக்குமப்பா.

அரசெல்லாம் ஒழிந்துலகில் ஓரரசே யுண்டாம்
அறங்கூறும் ஒருமதமே உலகெல்லாம் ஆகும்
விரசமொடு விகற்பங்கள் வளர்க்குமொழி எல்லாம்
வீழ்ந்துவிடும் ஒருமொழியே இவ்வுலகில் உண்டாம்
சரசமொடு உலகத்து மககளெல்லாம் தம்மைச்
சமானர்கள் மனித்குலம் என்ற இன மென்பார்
அரசர்கள் ஏழைபணக்காரனென்ற பேதம்
அத்தனையும் ஒழிந்து விடும் எதிர்கால உலகில்.

செந்தமிழும் சாமீழச் சிங்களமும் சாகும்
செகமெல்லாம் ஒருமொழியே தலை தூக்கி நிற்கும்.
நந்தமிழர் இனம் இனஞ்சாகும் பிற இனமும் சாகும்
நாடெல்லாம் மனித இனம் ஒன்றுதலை தூக்கும்.
எந்தமொழி இவ்வுலகில் நிலவுமெனக் கேட்பில்
எண்ணீக்கை கொண்டமொழி எம்மொழியோ இங்கு
அந்த மொழி தானப்பா அரசாகும் உண்மை
அதுநன்று தானப்பா பிரிவினைகள் ஒழிதல்.

நிகழ்காலச் செந்தமிழர் இது கேட்டுச் சீறி
நீசனுரை நிகழ்த்தாதே செந்தமிழே உலகின்
புகழ்மொழியாய் உலகத்தின் பொது மொழியும் ஆகும்
புதுமைதனை காண்பீர்கள் என்றுபுகன் றிடுவார்.
இகழ்ந்திடுவார் எதிர்காலச் சித்தனுரை தன்னை
இம்மியள வேணும்பி மானமில்லா மூர்க்கன்
நிகழ்காலத் திருந்திருந்தால் செய்வதறிந்திடுவோம்.
நெஞ்சுபிள ந் தெறிந்திருப்போம் என்றுனிகழ்த்திடுவார்.

பிறப்பாலே யானுயர்வு தாழ்வுரைக்க மாட்டேன்
பிறப்பாலே என்மொழியே சிறந்ததெனச் சொல்லேன்.
பிறப்பென்றன் வசமாமோ? பிரமத்தின் வசமாம்.
பீருவில் பிறந்திருந்தால் பீருமொழி பீடே
வெறிமிகுந்த நிகழ்காலத் தீதுணரமாட்டார்
விழழுக்கே பெருங்கலகம் விளக்கின்றார் அன்னார்
அறிவற்றே துன்பங்கள் அனவர்க்கும் விளைப்பவர்
ஐய்யய்யோ இவர்மடமை எனென்ன்று சொல்வேன்.

புதுயுகத்தின் குரல்போல் எதிர்காலச் சித்தன்
புகன்றமொழி கேட்டபின்னர் யானவனைப் பார்த்து
"எதிர்காலச் சித்தா உன் இனியமொழி கேட்டேன்.
எண்ணங்கள் விரிவடையும் என்னுடன் நீவந்து
மதி கெட்டார் வாழ்கின்ற வையகத்தில் புதிய
வாழ்வேற்றிச்செல்வாயோ என்றிறைஞ்சி நிற்க
மெதுவாகச் செவ்விதழ்கள் திறந்ததையுமங்கே
மென்னிலவுக் குஞ்சிரிப்புப் பிறந்ததையும் கண்டேன்.

காலத்தின் கடல் தாவி நீஇங்கு வந்த
காரணத்தால் ஏதறிவு என்பதை நீ கண்டாய்
ஞாலத்தில் நிகழ்கால மயக்கத்தி லுள்ளோர்.
ஞானத்தைக் கான்பாரோ? காணார்களப்பா
காலத்தை யான்தாண்டிக் காசினிக்கு வந்தால்
கட்டாயம் ஏனையவர்கள் ஏற்றிமிதித்திடுவார்
ஆலத்தைத் தந்தன்று சோக்கிரதரைக் கொன்ற
அன்பர்களுன் மனிதச் சோதரர்களன்றோ?

ஆதலினால் நிகழ்கால மனிதா அங்கு
யான்வரேன் நீபோவாய் என்றான் ஐயன்
காதலினால் கால்களென்னும் கமலம் தொட்டுக்
கண்ணொற்றி விடைபெற்றேன் திரை நீங்கிற்று.
பாதகர்கள் முழுமடைமைப் போர்கள் சூழும்
பாருக்கு நிகழ்காலம் வந்தேன் எங்கும்
தீதுகளே நடம்புரியும் நிலைமை கண்டு
திடுக்கிட்டேன் என்றிவர்கள் உண்மைகாண்டல்?

முழுவதும் வாசிக்க....

http://www.pathivukal.com/ank_unicode_november2006.htm

No comments: