வ.ந.கிரிதரனின் கவிதைகள் சில!
இருப்பொன்று போதாது
இருத்தல் பற்றியெண்ணி இருத்தற்கு!
- வ.ந.கிரிதரன் -
படைப்பின் நேர்த்தியெனைப்
பிரமிக்க வைத்திடுதல்போல்
பாரிலெதுவுமில.
வீழும் மலர்,
ஒளிரும் சுடர்,
துணையில் களிப்புறும் இணை,
நிலவுமனைத்திலுமிங்கு
நிலவும் நேர்த்தியென்
நினைவைக் கட்டியிழுத்தல்போல்
நினைவெதுவுமில.
முறையெத்தனையெனினும்
மறையாத நினைவுப் புயல்!
இருப்பு,
இன்னும் புதிர் மிகுந்து
இருந்திடுமோ?
இல்லை இதுவும்
'நிச்சயமற்றதொரு
தற்செயலின்'
சாத்தியம் தானோ?
இருப்பொன்று போதாது
இருத்தல் பற்றியெண்ணி
இருத்தற்கு!
விண்ணும் மண்ணும்!
வ.ந.கிரிதரன்
விரிந்து கிடக்குமிந்த விசும்பு
ஓர் உளவியல் நிபுணரைப் போல்
பலருக்கு அறிவுரை பகரும்
அதிசயத்தினைப் பார்த்து
ஒவ்வொரு முறையும்
அதிசயித்துப் போகின்றேன்.
'வானத்தைப் போல்.....'
அப்பொழுதெல்லாம் இவ்விதம்
நான் எனக்குள்ளேயே அடிக்கடி
கூறிக் கொள்வதில்
ஒரு வித மகிழ்ச்சியில்
பூரித்துப் போகின்றேன்.
இவ்விதமான வேளைகளில்
ஒரு மாபெரும் நூலகத்தினைப் போல்
இந்த வானம் எவ்வளவு விடயங்களைத்
தன்னுள் தாங்கி வைத்திருக்கின்றதென்பதை
உணர்ந்து கொள்கின்றேன்.
கற்பதற்கெவ்வளவு உள.
கற்பதற்கெவ்வளவு உள.
காலவெளி நூலகத்தில்தான்
கற்பதற்கெவ்வளவு உள.
அளவுகளுக்குள்ளிருந்து ஆகாயம் பார்க்கும்
மண்பார்த்து
அப்பொழுதெல்லாம் இந்தவான் தனக்குள்
நகைத்துக் கொள்ளுமோ!
அப்பொழுதெல்லாம் கீழ்க்கண்டவாறு
நினைத்துக் கொள்வேன்:
'படைகளுக்குள்ளோரிருப்பு! மேலும் படையெடுப்பெதற்கு?'
ஆகாயத்தின் இயல்புகளில் சில: அகலம்! விரிவு!
அவை கூறும் பொருளெம் அகம் உணர்தல் சாத்தியமா?
'அகத்தின் விரிவில், அகலத்தில்
மண்ணிலின்பம்! அட மானுடரே!'
தன்னியல்பினுள் விடைபொத்தி
வைத்திருக்கும் விசும்பு
மண்ணின் கேள்விகள் அனைத்துக்கும்.
விண்ணிலிருந்து மண்
கற்பதற்கு நிறைய உள.
கற்பதற்கு நிறைய உள.
முதற்காதல்!
அதிகாலைகளில் ஆடி அசைந்து
அகமசைத் தாயிழையவள் சென்றதெல்லாம்,
பொட்டிட்டுப் பின்னலிட்டு நிலம் பார்த்து
நடைபயின்று நங்கையவள் நடந்ததெல்லாம்,
இன்றும் நனவிடைதோய்கையில்
நினைவுக்கு வருவதுண்டு.
பிள்ளைப் பிராயத்தில் அவள்
பெண்மை கண்டு மயங்கினான் மாகவி.
முதற்காதல் வயப்படாத
மனிதருளரோ?
வாழ்வேயொரு போராய்
வாழ்வேயொரு புயலாய் மாறிடாது
நந்தவனமாயிருக்குமொரு பொழுது. ஆங்கு
பூத்திடும் அற்புதமானதொரு பூவோ
முதற்காதல்!
பெரும்பாலும் முதற்காதல்
முற்றுப் பெறுவதில்லை;
அதனால் தான் அது
முதற்காதல்!
இல்லாவிடினது இறுதிக்
காதலுமன்றோ!
நகர் வலம்!
- வ.ந.கிரிதரன் -
பெரு நகரின் இருண்டதொரு
அந்தியில் தொடங்கினேன்
என் நகர் வலத்தை
ஒரு மன்னனைப் போல.
சகதிக்குள் குளித்துக் கொண்டிருக்கும்
ஓர் எருமையைப் போல்
புரண்டு புரண்டு குளித்துக்
கொண்டிருந்தது
நகரம்.
வீதிக் கால்வாய்கள் வழியாக
மெதுமெதுவாய்
நகர்ந்து கொண்டிருந்த
வாகனப் பாம்புகளை
அவை வயிற்றில் சுமப்பவர்களை
வியப்புடன் ஒருவித அருவருப்புடனும்
பார்த்துக் கொண்டிருந்தனர்
நகரத்து மாந்தர்.
உயரமான, பழையதொரு
கோதிக் பாணியில் அமைந்திருந்த
கிறித்தவ
ஆலயமொன்றின் உச்சியில் வாசம்
செய்யும் புறாக்கள் சில
பறப்பதும் சிறகுகளை
உதறுவதுமாக
பறவைகளின் இருப்பின் சாட்சியாகச்
சோர்ந்து கிடந்தன.
இரவின் கருமையை கார் மேகங்கள்
மேலும் அதிகரித்துப்
பார்வைப் புலத்தினைப் பழுதாக்கின.
அழகான பெண்கள் அலங்கரித்தபடி
கரைகளில் நின்றபடி
கால்வாய்களில் நகரும் பாம்புகளையும்
அவற்றில் பயணித்தவர்களையும்
ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
இந்த இரவு முழுக்க
இவர்களது பொழுது
இவ்விதமே கழியும்?
ஆகாயமே கூரையாக வாழும்
ஊர் உலாத்தி மனிதர்கள்
உற்சாகம் குன்றி நகரின் நடுநடுவே தெரியும்
நந்தவனங்களில் போர்வைகளிற்குள்
நடுங்கி, முடங்கிக் கிடந்தனர்
எந்தவிதக் கணப்புமின்றி.
கிளப்புகளில் களியாட்டம்
தொடங்கி விட்டது.
மேடைகளில் ஆண்கள், பெண்கள்
ஆடைகளின்றி ஆடினர்
முலைகளைக் குறிகளைக்
குலுக்கியபடி.
பாயும் மதுவெள்ளத்தில் நீந்தி நீந்தி
மூழ்கினர் நகரத்தின்
பெருங்குடி மக்கள்.
போதை வஸ்த்து, பியர், விஸ்கி
பொங்கி நகரை வெள்ளக்த்தில்
மூழ்க வைத்தன.
திருடர்கள் கன்னக்கோல் வைத்தழகு
பார்க்கத் தொடங்கினர்.
துப்பாக்கிக் கரங்கள் நீண்டு
நகரைச் சுற்றி வளைக்கத் தொடங்கி விட்டன.
பகல் முழுக்கச் சட்டங்கள் இயற்றிவர்கள்,
உரிமை பற்றி வாய் கிழிய முழங்கியவர்கள்,
பார்களில், ஓட்டல்களில்
சல்லாபித்துக் கிடந்தனர்.
நகரை நோக்கி இன்னும் பலர்
படையெடுப்புகள் நிகழ்த்திக் கொண்டிருந்தார்கள்.
ஆலைகளில், உணவகங்களில்
இன்னும் மனிதர்கள் உழைத்துக்
கொண்டுதானிருந்தார்கள்
எந்தவித களிப்புமின்றி இருப்பிற்காக
ஆனால் பெருங் கனவுகளுடன்.
களியாட்டமிடும் நகரை
ஓரமாக ஒதுங்கி நின்று பார்த்து
ஏக்கத்துடன் சோகித்துக் கிடந்தன
கிராமங்கள்.
நகரத்தின் விளையாட்டைச்
சகிக்க முடியாத விண்மீன்கள்
தங்களை மூடித்
தொலைந்து போயின
எங்கோ.
விரிந்து கிடந்த பெருவானோ
எந்தவிதச் சலனமுமின்றி
மெளனித்துக் கிடந்தது
இது வழக்கமானதொரு
நிகழ்வு போல.
சுடர்களற்ற இந்த இரவில்,
இந்த மழையில்
எதற்காக நான்
என் நகர்வலத்தை
ஆரம்பித்தேன்?
நகரத்து மனிதனின் புலம்பல்!
- வ.ந.கிரிதரன் -
மரங்களிலிருந்து 'காங்ரீட்' மரங்களிற்கு...
குரங்கிலிருந்து மனிதனிற்கு...
ஆதிமானுடத்திலிருந்து அதியுயர் மானுடத்திற்கு...
பரிணாம நிகழ்வு, வளர்ச்சி என்கின்றது
முந்தாநாள் சந்திரனில்
கால் பதித்தவனின் சுற்றம்.
இதற்கொரு விளக்கம் வேறு...
ஒளியையுறுஞ்சுதலென்பது
இவ்விரு விருட்சங்களிற்கும்
பொதுவான செயலென்று கருத்தியல் வேறு.
உறுஞ்சுதலிலொன்றெனினுமிவை
உம்மைப்போல் விருட்சத்தோழரே!
உணவைப் படைப்பதில்லையே?
உயிரையெமக்குத் தருவதில்லையே?
தோழரே! நீரோ மேலும் நிழலைத்தந்தீர்!
உமது காயைத்தந்தீர்! கனியைத்தந்தீர்.!
இலையைத்தந்தீர்! இறுதிலும்மையே தந்தீர்!
ஆனால்.......
நவீன விருட்சங்களிவை தருவதென்ன?
'நன்றி மறத்தல்' நம்மியல்பன்றோ?
நன்றியை மறந்தோம்.
நண்பருனது தொண்டினையிகழ்ந்தோம்.
இதனால் இன்றெமக்கு
இரவு வானத்துச் சுடரையும்
நிலவுப்பெண்னின் எழிலையும்
பாடும் புள்ளையும்
இரசிக்கும் உரிமை கூட
மறுதலிக்கப் பட்டு விட்டது.
உம்மையிழந்ததினால்
இந்த மண்ணும் உலர்ந்து போனது.
'எரியுண்ட தேச'மென்பதாக
இன்று எமது கிரகமும்
'எரியுண்ட கிரகம்' என்பதாச்சு.
ஞானம்!
- வ.ந.கிரிதரன் -
நேரம், சூழல், இடம்
இவையெல்லாம் சரியாக
அமைந்து விடவேண்டும்
சிந்தை குடையும்
சில சிக்கல்களை அவிழ்ப்பதற்கு.
அப்பொழுதுதான் அதுவரை
புதிராய்த் தெரிந்ததெல்லாம்
'ப்பூ' இவ்வளவுதானா என்றிருக்கும்.
பிரமிப்பில் அத்தகைய தருணங்களில்
நான்
ஆழ்ந்து விடுவதுண்டு.
அறிவின் தெளிவெனை
புடமிட்டு வைத்துவிடும்
தருணங்களவை.
புரியாதவற்றைத் தெரிதற்கு
நான் இப்பொழுதெல்லாம்
முன்புபோல் குத்துக்கரணங்களடித்து
முயல்வதில்லை.
கூடிவரும் பொழுதுகளிற்காகவும்,
பொருந்தியதொரு சூழலுக்காகவும்,
அமைந்தவோரிடத்துக்காகவும்
நான்
இப்பொழுது காத்திருக்கப் பழகிவிட்டேன்.
கவிதை: கனவுக் குதிரைகள் (Walt Bresette நினைவாக)!
ஆங்கிலத்தில்: அல் ஹண்டர் (Al Hunter)!
தமிழில்: வ.ந.கிரிதரன்!
1 நிலவு வெளிச்சத்திற்குக் கீழாக
விண்ணில் எனது கனவுக் குதிரைகள்
தெற்கு நோக்கி ஓடும்.
தெற்கு: பயணம் இங்குதான் முடியும்,
அத்துடன் தெற்கு: பயணம்
இங்குதான்
மீண்டும் தொடங்கும் - ஆத்மாக்களின் பயணத்தில்.
தெற்காகச் செல்லும் அடிச்சுவட்டில்
செல்லுமிடம் தெரியாமல்
ஒருவேளை மூடப்பட்ட
நதிப் பள்ளத்தாக்கு நோக்கி
அல்லது மறைந்திருக்கும்
மலைப்பாறைகளினுச்சியின்
மேலாகச் செல்லும் கிளைவிட்டுச்
செல்லும் பாதைகளுமுண்டு.
குதிரைகள் அங்கு போவது கிடையாது.
நான்கு நாட்களாக இரவும் பகலுமாகப்
பயணித்து விட்டு
அதிகாலைப் பொழுதில்
உண்பதற்காக அவை தங்கும்.
கனவுக் குதிரைகள் முன்னர்
கடந்து சென்ற இந்த வழியில்,
நினைவுகளின் ஞாபகங்களின் பழந்தீயில்
அவை இரவுகளினூடும்
அந்திக் கருக்களினூடும்
தம்மைச் சூடேற்றிக் கொள்ளும்.
ஐந்தாவது நாட் காலையில்
அவை கடக்கத் தேவையில்லாத
ஆற்றங்கரையினை வந்தடையும்.
மீண்டுமொரு வைகறையில் மீள்பிறப்பிற்காக
ஏனைய கனவுக் குதிரைகள் கூடும் தெற்குக் கரையினை அடையும் வரையில்,
நீரின் மேற்பரப்பினூடாக
வைரங்களைப் போல் நர்த்தனமிட்டபடி
அவற்றின் குளம்புகளே அவற்றினை இழுத்துச் செல்லும்.
ஓ! உயர்ந்த ஞாபகசக்தி மிக்கவரே
திரும்பி வாரும். திரும்பி வாரும்
எனது கனவுகளின் வளம் மிக்க
நீல வயல்களிற்குள்...
2 பனித்துளிகள் ஒட்டிக் கொண்டிருக்கும்
இனிய புதிய புற்களிருக்குமிடத்தில்,
உதிக்கும் சூரியனை நோக்கி
உனது குதிரையினைத் திருப்பியபடி,
அதன் பிடரி மயிரினை ஒரு சேரப் பிடித்தபடி,
கனவுகள் பயிரிடப்படாத வயலிற்குள் முறைத்தபடி
நீல இருதயத்துடன் நீ!
அதனை நீர் அருந்தவிடு. அதனைச் சுவைக்க விடு.
அதன் பின் அதன் மீது சவாரி செய்.
மூலம்: பிரிட்டிஸ் கொலம்பியாப் பல்கலைக் கழகத்தினால் வெளியிடப்படும் கனேடிய இலக்கியம் ( Canadian Literature காலாண்டிதழ், மாரி 2000, இதழ் இலக்கம்: 167)
நன்றி: பதிவுகள்.காம், திண்ணை.
1 comment:
நண்பர் நா.கி.வுக்கு, உங்களது கருத்துகளுக்கு நன்றி. கவிதையொன்றில் மறைந்திருக்கும் பொருளறிதல் உரைநடையுணர்தல் போல் எளிதானதல்ல. கவிதையின் சொற்களுக்குள் மறைந்து நிற்கும் பொருளறிதல் கவிதையின் தன்மைக்கேற்ப மாறுபடும். கவிஞரின் சிந்தனையாற்றலைப் பொறுத்து அக்கவிஞரின் கவிதைகளை உணர்ந்தறிதலின் தன்மையும் மாறுபடும். சிறிது பொறுமையும், தேடலுமிருப்பின் ஒவ்வொருவரும் தத்தமது அறிவு, அனுபவத்திற்கேற்பக் கவிதையொன்றை உணர்ந்து மகிழ்ந்திட முடியும். மகிழ்ந்திடுதல் (இன்பத்தை அடைதலென்பதும் கலையின் பண்புகளிலொன்றுதானே). இந்நிலையில் என் கவிதைகளைப் பற்றிக் கொஞ்சமாவது சிந்தித்து உங்கள் கருத்துகளை அறியத் தந்தது மகிழ்ச்சியையே தருகிறது. 'இருப்பொன்று போதாது..' என்னும் கவிதை பற்றி ''இருப்பொன்று போதாது இருத்தல் பற்றி எண்ணி இருப்பதற்கு அற்புதம்" என்றெழுதியிருந்தீர்கள். இக்கவிதை பலரது சிந்தனையைத் தூண்டி விட்டிருப்பது மகிழ்ச்சிக்குரிய விடயம். இது பற்றிச் சிறிது காலத்துக்கு முன்னர் ஐரோப்பியத் தமிழ்க் கவிஞரொருவரும் பாராட்டிக் கடிதமொன்று எழுதியிருந்ததுடன், அங்கிருந்து ஒலிபரப்பாகும் வானொலி நிகழ்ச்சியொன்றிலும் இதுபற்றி விவாதித்ததாக எழுதியிருந்தது ஞாபகத்துக்கு வருகிறது. இணையத்தின் மூலம் கடல் கடந்தெல்லாம் பல இலக்கிய ஆர்வலர்களை, படைப்பாளிகளையெல்லாம் எவ்வளவு இலகுவாகச் சந்திக்க முடிகிறது! மேலும் "'விண்ணும் மண்ணும் கவிதையில் 'அளவுக்குள்ளிருந்து ஆகாயம் பார்க்கும் மண்பார்த்து' என்பதை 'மனிதர்கள் பார்த்து' என்றே நான் வாசித்தேன்." என்று குறிப்பிட்டுள்ளீர்கள். அளவுக்குள்ளிருந்து ஆகாயம் பார்ப்பது யார்? நாம் புரிந்து கொள்ளும் விசும்பு பற்றி என்ன நினைக்கின்றீர்கள்? நாம் கண்டுணரும் விசும்பின் தோற்றமென்பது காட்சியின் உருந்திரிந்ததொரு வடிவமா அல்லது உண்மையே அதுதானா? ஒரு கவிதையொன்றினை வெவ்வெறு காலகட்டங்களில் என் அறிவுக்கும், அனுபவத்திற்குமேற்ப நான் வெவ்வேறு விதமாகப் புரிந்து கொண்டிருக்கின்றேன். இத்தகையதொரு நிலையில் கவிதைகளை உணர்ந்து இரசிக்கும் சுதந்திரத்தில் தலையிட நான் விரும்பவில்லை. மேலும் "இருப்பினை கேள்விக்குட்டுத்தி மாறுபட்ட சிந்தனைகளை தங்கள் கவிதைகளெங்கும் தோற்றுவித் திருக்கிறீர்கள். தொடர்ந்து கவிதைகளை எழுந்துங்கள்" என்று வேண்டுகோள் விடுத்திருக்கின்றீர்கள். நிச்சயமாக அவ்வேண்டுகோளை நிறைவேற்றுவேன்.
Post a Comment