Tuesday, July 18, 2006

நவீன விக்கிரமாதித்தனின் 'காலம்'!

உள்ளிருந்து எள்ளி நகைத்தது யார்?
ஒவ்வொரு முறையும் இவ்விதம்
நகைப்பதே உன் தொழிலாயிற்று.
விரிவெளியில் படர்ந்து கிடக்குமுன்
நகைப்போ , நீ விளைவிக்கும் கோலங்களோ,
அல்லது உன் தந்திரம் மிக்க
கதையளப்போ எனக்கொன்றும் புதியதல்லவே.

இரவுவானின் அடுக்குகளில்
உனது சாகசம் மிக்க நகைப்பினை
உற்றுப் பார்த்திடும்
ஒவ்வொரு இரவிலும்,
நட்சத்திரச் சுடர்களில்,
அவற்றின் வலிமையில்
உன்னை உணர்கின்றேன்.

எப்பொழுதுமே இறுதி வெற்றி
உனக்குத்தான்.
எப்பொழுதுமே உன்காட்டில்
மழைதான்.
அதற்காக மனந்தளர்வதென்
பண்பல்ல.
ஆயின்
உன்னை வெற்றி கொள்ளுதலுமென்
பேரவாவன்று.
பின்
உனைப் புரிதல்தான்.

ஓரெல்லையினை ஒளிச்சுடருனக்குத்
தந்துவிடும் பொருளறிந்த எனக்கு
அவ்வெல்லையினை மீறிடும்
ஆற்றலும், பக்குவமும் உண்டு;
புரியுமா?

வெளியும், கதியும், ஈர்ப்பும்
உன்னை,
உன் இருப்பினை
நிர்ணயித்து விடுகையில்
சுயாதீனத்துடன் பீற்றித் திரிவதாக
உணரும் உன்
சுயாதீனமற்ற, இறுமாப்புக்கு
அர்த்தமேதுமுண்டா?

இடம், வலம் , மேல், கீழ்.
இருதிசை, நோக்கு கொண்ட
பரிமாணங்களில்
இதுவரையில்
நீ
ஒருதிசையினைத் தானே காட்டி
புதிருடன் விளங்குகின்றாய்?

உன் புதிரவிழ்த்துன் மறுபக்கத்தைக்
காட்டுதலெப்போ?

இரவி , இச் சுடர்
இவையெலாம் ஓய்வாயிருத்தலுண்டோ?
பின் நான் மட்டுமேன்?

நீ எத்தனை முறை தான்
உள்ளிருந்து எள்ளி நகைத்தாலும்
மீண்டும் மீண்டும்
முயன்று கொண்டேயிருப்பேன்.
நீ போடும் புதிர்களுக்கு
விளக்கம் காணுதற்கு
முயன்று கொண்டேயிருப்பேன்.

வேதாளங்களின் உள்ளிருந்து
எள்ளி நகைத்தல் கண்டும்
முயற்சியில் முற்றுந் தளராதவன்
விக்கிரமாதித்தன் மட்டும்தானா?

நன்றி: திண்ணை.காம், பதிவுகள்.காம்

6 comments:

கோவி.கண்ணன் said...

தமிழ் அறிஞரே, வாருங்கள் என்று வரவேற்பதில் மகிழ்கிறேன்

வ.ந.கிரிதரன் - V.N.Giritharan said...

நண்பரே! உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி. தமிழ் அறிஞரென்றெல்லாம் பெரிய பெரிய வார்த்தைகளெதற்கு? நண்பரே நல்வரவென்று நவின்றிடினின்னும் மகிழ்வேன். - வ.ந.கி -

Chandravathanaa said...

வாருங்கள் கிரிதரன்.
வாழ்த்துக்கள்.

உங்கள் சுயதரிசனத்துக்கான இணைப்பு இயங்கவில்லை.

வ.ந.கிரிதரன் - V.N.Giritharan said...

நன்றி சந்திரவதனா வரவேற்புக்கும், தவறினைச் சுட்டிக் காட்டியதற்கும். விரைவில் பதிவு செய்வேன். வலைப்பூத் தோட்டத்தில் தாங்கள் வளர்க்கும் மலர்களின் எண்ணிக்கை பிரமிப்பைத் தருகின்றது. அதிக வலைப்பூக்கள் வளர்ப்பவர் தாங்களாகத்தானிருக்க வேண்டுமென நினைக்கின்றேன். வாழ்த்துகள்.

Kanags said...

வலைப்பூக்களுக்கு வரவேற்கிறேன் கிரிதரன், நிறைய ஈழ இலக்கிய/வரலாற்றுத் தகவல்களைத் தாருங்கள்.

வ.ந.கிரிதரன் - V.N.Giritharan said...

வணக்கம் கனக்ஸ். உங்களது கருத்துக்கும், ஆலோசனைக்கும் நன்றி. ஈழ இலக்கிய வரலாற்றுத் தகவல்களை இயலுமானவரையில் பாரபட்சமின்றி பதிவு செய்ய வேண்டிய தேவையுண்டு. அன்று
கைலாசபதி அவர்கள் முற்போக்குக் கூட்டணியிலுள்ளவர்களைத் தூக்கிப் பிடித்தாரென்று அன்று குற்றஞ்சாட்டியவர்கள் பலர் இன்று இலக்கிய வானில் கோலோச்சுகின்றார்கள். அன்று பேராசிரியர்
கைலாசபதியுடன் அணிசேர்ந்து நின்ற பேராசிரியர் கா.சிவத்தம்பி காலத்திற்கேற்றபடி மாறியிருக்கின்றார். இன்று கோலோச்சுபவர்கள் ஒரு சிலரைத் தூக்கிப் பிடிக்கின்றார்கள். ஆக
அப்பொழுதும் சரி இப்பொழுதும் சரி முறையாக ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாறு பாரபட்சமின்றி எழுதப்படவில்லை என்பது என் தாழ்மையான நிலைப்பாடு. எத்தனையோ நல்ல பல
சிறுகதையாசிரியர்களையெல்லாம் நம் விமர்சக வித்தகர்களில் பலர் அதிகம் முயன்று வாசிக்காதபடியாலோ என்னவோ குறிப்பிடுவதில்லை. மிகச் சாதாரண படைப்புகளையெல்லாம்
குறிப்பிட மறக்காத இவர்கள் பல முக்கியமான படைப்பாளிகளின் அர்ப்பணிபபுடன் கூடிய பங்களிப்பையெல்லாம் மறந்து விடுவார்கள். ஆனால் உண்மையான எழுத்து எத்தனை இடர்வரிடினும் நின்று
பிடிக்கும். மறைந்து போய் விடாது. இதற்கு பாரதியின் எழுத்துகளே சான்று.

அண்மையில் 'அயலகத் தமிழ் இலக்கியம்' என்றொரு சிறுகதைத் தொகுப்பு இந்திய சாகித்திய அக்காதெமியினரால் வெளியிடப்பட்டிருந்தது. தொகுப்பாளர் 'சாயாவனம்' கந்தசாமி. அதில் ஈழத்துச் சிறுகதையுலகின் முன்னோடிகளான பலரின் சிறுகதைகளைக் காணாதது ஏமாற்றத்தினை அளித்தது. அ.ந.கந்தசாமி, அ.செ.முருகானந்தன் , தாழையடி சபாரத்தினம்.. போன்ற படைப்பாளிகளின் சிறுகதைகளைக் காண முடியவில்லை. இதற்குத் தொகுப்பாளரின் அறியாமை முக்கியமானதொரு காரணம். அந்த அறியாமையின் காரணமாக அவர் அவருக்கு நூல்களைக் கொடுத்து உதவியர்களில் மட்டுமே நிற்க வேண்டிய நிலைமை. இந்நிலையில் மீண்டுமொரு பூரணத்துவமற்ற தொகுப்பை நாம் காண்கின்றோம். அப்பச்சி மகாலிங்கம் என்றொரு சிறுகதையாசிரியர். அற்புதமான மீனவசமுதாயத்தினரை வைத்து அற்புதமான சிறுகதைகளை எழுபதுகளில் எழுதியிருக்கின்றார். ஆனால் அவரைப் பற்றி இந்த விமர்சக வித்தகர்கள் யாருமே கதைப்பதில்லை. இவர்களைப் போல் பலர். அறியாமை காரணமாகவும், புறக்கணிப்பு காரணமாகவும் பலர் பல்வேறு காலகட்டங்களில் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளார்கள்.

ஈழத்து இலக்கிய வரலாற்றின் ஒவ்வொரு காலகட்டத்தையும் பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் பல படைப்பாளிகள், கவிஞர்கள் இருக்கின்றார்கள். அக்குறிப்பிட்ட காலகட்டங்களுக்குரிய படைப்பாளிகள் படைப்புகளை ஆழ்ந்து வாசித்து அதன் பின்னர்தான் படைப்புகளைத் தொகுக்க வேண்டும். அவ்விதமில்லாமல் தொகுத்தால் இவ்விதமான பூரணத்துவமற்ற தொகுப்புகள்தான் வெளிவரும். இத்தகையதொரு சூழலில் முறையாக ஈழத்துத் தமிழ் இலக்கியம் பதிவு செய்யப்பட வேண்டும். பயன்கருதாமல் பங்களித்த நம் முன்னோடிகளுக்கு நாம் செய்யும் கைம்மாறாகத்தான் நான் அதனைக் கருதுகின்றேன். - வ.ந.கி -