Tuesday, August 03, 2010

முள்ளிவாய்க்கால்! - வ.ந.கிரிதரன் -


[ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரையில் கருப்பு சூலை 1983 ஒரு திருப்பு முனை. ஒரு குறியீடு. தமிழினத்தின் மீதான அரச பயங்கரவாதத்தைத் தொடர்ந்து ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டம் ஆயுதப் போராட்டமாக விரிவுபெற்றது அதன் பின்புதான். அதனைத் தொடர்ந்து முள்ளிவாய்க்காலில் முடிவுற்ற யுத்தம் இன்னுமொரு திருப்புமுனை. விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்குமிடையிலான யுத்தம் எதிர்பாராதவகையில் முடிவுக்கு வந்தது. கருப்பு சூலை 1983இல் இந்தியாவின் ஆதரவுடன் விரிவுபெற்ற ஆயுதப் போராட்டம், 2009 மேயில் இந்தியா, சீனா, பாகிஸ்தான், மேற்குநாடுகளின் ஆதரவுடன் முடிவுக்கு வந்தது. ஈழத்தமிழர்களின் போராட்டம் முள்ளிவாய்க்காலைத் தொடர்ந்து இன்னுமொரு திக்கில் விரியப் போகிறது. ஆயுதத்தை நோக்கியா அல்லது அமைதியை நோக்கியா என்பதைக் காலம் உணர்த்தும். ]

1.

மனிக் பண்ணை தடுப்பு முகாமில் வாழ்க்கை ஒரு வருடத்தைத் தாண்டியோடிவிட்டதா? இதயச்சந்திரனுக்கு நம்பவே முடியவில்லை. அதை மட்டுமா அவனால் நம்ப முடியவில்லை.. அவன் இன்னும் உயிருடன் இருப்பதையும்தான் நம்ப முடியவில்லை. விடுதலைப் புலிகளுக்கும் , இலங்கை அரசுக்குமிடையில் நடைபெற்ற அந்தக் கொடிய போரின் இறுதி நாட்கள்... அந்த நாட்களின் ஒவ்வொரு கணங்களும் இன்னும் அவன் ஞாபகத்தில் பசுமையாக இருக்கின்றன. அவன் மறையும் வரையும் அவன் நெஞ்சை விட்டு அவை மறையப் போவதில்லை. போரின் கொடூரத்தை அறிந்த, அனுபவித்த நாட்கள். இருப்பு பற்றிய அவனது புரிதல்களை அடியோடு மாற்றிவிட்ட நாட்கள். எவ்விதம் நெஞ்சை விட்டகலும்?

குறுகிய நிலப்பரப்புக்குள் புலிகளும், மக்களும் அடைபட்டுக் கிடந்த நிலையில் , இலங்கை அரசின் பல்வேறு வகையான தாக்குதல்களும்
தீவிரமடைந்திருந்தன. எறிகணைகத் தாக்குதல்கள், கொத்தணிக்குண்டுத் தாக்குதல்கள், இரசாயன வாயுத் தாக்குதல்கள்... ஆயிரக்கணக்கில் மக்கள் கொன்று குவிக்கப்பட்டுக் கொண்டிருந்த தருணத்தில்... பாதுகாப்பு வலயங்களெல்லாம் பாதுகாப்பற்றுப் போன அந்தக் கணங்கள்... மானுடம் தன் நாகரிகத்தை இழந்து அம்மணமாக நின்ற தருணங்களவை. உயிருக்கே உத்தரவாதமற்றுப் போன பொழுதுகள் அதுவரை மக்கள் கண்ட கனவுகளை, கற்பனைகளை, எதிர்கால இலட்சியங்களை, குடும்ப உறவுகளை, வரையறுத்த நீதி, நியாயக் கோட்பாடுகளையெல்லாம் துவம்சம் செய்துவிட்டு வெறியாட்டமாடிய போர் அரக்கரின் அட்டகாசத்தால் சமூக அமைப்புகளும், சூழலும் சிதைந்து போயிருந்த கொடிய தருணங்கள். ஆனால் இவையெல்லாவற்றையும் சர்வதேசமோ வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. அன்று ருவாண்டா! இன்று சிறிலங்கா! அளவில் சிறிதானாலும், அழிவின் தன்மையில் மாறுதலேது?

சிந்தனை வயப்பட்டுக் கிடந்தவனின் கவனம் சரோஜாவின், ஆனந்தனின் பக்கம் திரும்பியது. சரோஜாவையும், ஆனந்தனையும் அவனது வாழ்வுடன் பிணைத்துவிட்டது எது? அதுதான் விதியா? இவற்றிலெல்லாம் ஒரு காலத்தில் நம்பிக்கையில்லாமல் இருந்தவனின் சிந்தனையா இவ்விதம் திரும்பியிருக்கின்றது? அவனுக்கு அவனை எண்ண வியப்பாகவிருந்தது. விரக்தியாகவுமிருந்தது. காலம், அதன் கோலமும் எவ்விதம் ஒருவரை தலைகீழாக மாற்றி விடுகிறது?

புதுக்குடியிருப்பு மருத்துவமனை தாக்கப்பட்டு, எஞ்சியிருந்த உடையார்கட்டு மருத்துவமனையும் தாக்கப்பட்டபோதுதான், அதற்கு முன்னர் நடந்த தாக்குதல்களில் தன் மனைவி, மகள்மாரை இழந்திருந்த இதயச்சந்திரன், எங்கே ஓடுகிறோமென்று தெரியாத நிலையில், உயிரைக் காப்பதற்காக சனங்களோடு சனங்களாக ஓடிக்கொண்டிருந்தபோதுதான், வழியில் சரோஜாவைக் கண்டான். கைகளில் இரத்தம் வழிந்தோடிக்கொண்டிருந்த, ஏற்கனவே உயிரிழந்திருந்த குழந்தையொன்றுடன் , அக்குழந்தை இற்ந்ததைக் கூடப் புரிந்துகொள்ள முடியாமல், வீதியோரம் பேயறைந்தவளாக, சித்தப்பிரமை பிடித்தவளாகக் காணப்பட்ட சரோஜாவைக் கண்டதும் , அதற்கு முன்னர் நடந்த தாக்குதல்களில் தன் குழந்தைகளையும், மனைவியையும் இழந்திருந்த இதயச்சந்திரனால் அவளை அந்த நிலையில் விட்டுவிட்டுப் போக முடியவில்லை. அவ்விதம் விட்டு ஓடியிருந்தால் அவள் அரச படைகளின் குண்டு மழைக்குள் சிக்கி எந்தக் கணத்திலும் உயிர் துறக்கலாம்? மந்தைகளாகத் திரண்டோடிக் கொண்டிருக்கும் அகதிகளின் கால்களுக்குள் அகப்பட்டு உருக்குலையலாம்?

குழந்தையை அருகில் கிடந்த இடிந்த குடிசையொன்றில் வைத்துவிட்டுச் சரோஜாவையும் இழுத்தபடியே ஓடினான். அவ்விதமாக அவர்கள் ஓடிக்கொண்டிருந்தபோது அவர்களுடன் வந்திணைந்து கொண்டவந்தான் ஆனந்தன். பத்து வயது மதிக்கத்தக்க சிறுவன். அவர்களைப் போல் அவனும் தன் தாய், தந்தை, சகோதரர்களை இழந்து, யாருமற்ற நிலையில் சனங்களோடு சனங்களாக ஓடிக் கொண்டிருந்தான். மிகவும் பயந்து போயிருந்தான்.

அவனையும், சரோஜாவையும் இழுத்தபடி இதயச்சந்திரனும் ஓடியோடி, இறுதியில் புலிகளின் ஆயுதங்கள் மெளனிக்கப்பட்ட காலகட்டத்தில் அரச கட்டுப்பாட்டுப் பகுதியை வந்தடைந்தான்.. அதன் பின் இதுவரையில் தடுப்பு முகாமில் வாழ்வு ஓடிக்கொண்டிருக்கின்றது. சர்வதேசத்தின் அழுத்தங்களைத் தொடர்ந்து கட்டம் கட்டமாகத் தடுப்புமுகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்கள் வெளியேறிக்கொண்டிருந்தார்கள். இப்பொழுது நிலைமை முன்பிருந்ததை விடப் பரவாயில்லை. ஆனால் ஆரம்பத்தில் மூன்று இலட்சங்களுக்கும் அதிகமான மக்களை மிருகங்க்ளைப் போல் அடைத்து வைக்கப்பட்டிருந்ததொரு பெரியதொரு பட்டியாகவே அந்த முகாம் விளங்கியது. அரசின் உளவுத்துறை அதிகாரிகள் முகாமெங்கும் திரிந்து கொண்டிருந்தார்கள். புலிகளென்னும் சந்தேகத்தின் பெயரில் இளைஞர்கள், யுவதிகளென நாளுக்கு நாள் காணமல் போய்க் கொண்டிருந்தார்கள். பெண்கள் பாலியல் வல்லுறவுக்குள்ளானது பற்றிய கதைகள் முகாமெங்கும் நிறைந்திருந்தது. குடும்ப உறுப்பினர்களையே பிரித்து, வெவ்வேறிடங்களில்

ஒருவரை ஒருவர் பார்க்க முடியாதபடி அடைத்து வைக்கப்பட்டிருந்தார்கள்.

அவற்றை இப்பொழுது எண்ணவே அவனுக்கு ஒருவித அச்சமாகவிருந்தது.

ஒரு கணம் அவனது பார்வை விரிந்து கிடந்த விண்ணை நோக்கியது. கண்ணுக்கெட்டியதூரம் வரையில் நீலப்படுதாவாக விரிந்து கிடந்த விண் முன்பென்றால் உணர்வுகளை வருடிச் சென்றிருக்கும். இப்பொழுதோ கேள்விகளையே எழுப்ப முனைந்தது.

விரிந்து கிடக்கும் பெருவெளி!
விரைந்தோடும் சுடரும், கோளும்.
விரிவும் தெரியவில்லை!
விரைவும் புரியவில்லை!
சின்னஞ்சிறு கோளுக்குள்,
சின்னஞ்சிறு தீவிற்குள்,
குத்து, வெட்டுகள்!
புரிந்திருந்தால்
படர்ந்திருக்குமோ
சாந்தி!

இவ்விதமாக அவனது மனதினுள் கவிதை வரிகள் சில எழுந்தன. எத்தனை காலம் எழுதி. இத்தகையதொரு பேரழிவுச் சூழலில் கவிதையெங்கே வரும்?


2.

இந்த ஒரு வருடத்தில் அவர்கள் மூவரும் ஒன்றாகத் தற்காலிகமாகக் கட்டப்பட்டிருந்த வீட்டினுள் 'மனிக்பார்ம்'முகாமில் வ்சித்து வந்தாலும், இற்ந்தகாலம் தந்த நினைவுச் சுமையிலிருந்தும், எதிர்காலம் பற்றிய வெறுமையான , நம்பிக்கையற்ற் உணர்வுகளிலிருந்தும்
விடுபடமுடியாதவர்களாகவே பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தார்கள். அவனுக்கு அவனது மனைவி வதனாவையும், மகள்மார்கள் ஆஷா, ஷோபா இருவரையும் மறக்க முடியவில்லை. மிகவும் மென்மையான்வள் இளையவள் ஷோபா. அக்கவென்றால் அவளுக்கு உயிர். இருவருமே ஒருவருக்கொருவர் சகோதரிகளாய், சிநேகிதிகளாய் எவ்வளவுதூரம் ஒன்றித்துப் போயிருந்தார்கள். அவர்களைப்பற்றி, அவர்களின் எதிர்காலத்தைப் பற்றியெல்லாம் அவனும், வதனாவும் எவ்வளவு கற்பனைகளைப் படர விட்டிருப்பார்கள்? எல்லாமே எவ்விதம் அடித்து நொருக்கப்பட்டு விட்டன?

மனிதர்களால் எவ்விதம் இவ்விதம் வெறிகொண்டு தாண்டவமாட முடிகிறது?

இப்பொழுது அவன் முன்னாலுள்ள பிரச்சினை. வெளியில் செல்வதானால் சரோஜாவையும், ஆனந்தனையும் என்ன செய்வது? சரோஜா மன்னார்ப் பக்கமிருந்து ஓடியோடி வன்னிக்கு வந்திருந்தவள் போரில் அகப்பட்டிருந்தாள். அவனது நிலையும் இதுதான். அவனும் முழங்காவில் பகுதியிலிருந்து ஓடி வந்திருந்தான். ஆனந்தனோ கிளிநொச்சி முரசுமொட்டையைச் சேர்ந்தவன். போர்ச் சூழல் எவ்விதம் அவர்கள் மூவரையும் ஒன்றாகச் சேர்த்து விட்டிருந்தது. அவளோ இன்னொருத்தரின் மனைவியாக, தனக்கென்றொரு குடும்பத்துடன் வாழ்ந்து வந்தவள். அவனோ அவளைப்போல் தன் மனைவி, குழந்தைகளென தனக்கொரு வட்டத்தைப் போட்டு , அதனுள் வாழ்ந்து
வந்தவன். ஆனந்தனின் நிலையும் அதுதானே... அவனும் தன் தாய், தந்தையென வாழ்ந்து வந்திருந்தவன். சிந்தனையினின்றும் நீங்கியவனாக, நனவுலகிற்கு வந்த இதயச்சந்திரன் தனக்குள்ளாகவே தீர்மானமொன்றினை எடுத்தவனாக , சரோஜாவுடன் எப்படியும்
இது விடயமாகக் கதைத்துவிட வேண்டுமென்று எண்ணினான். அப்பொழுதுதான் ஆனந்தன் அருகிலிருந்த அவனையொத்த சிறுவர்கள் சிலரைச் சிந்திப்பதற்காகச் சென்றிருந்தான் என்பது நினைவுக்கு வந்தது. நல்லதாகப் போய் விட்டதென்று பட்டது. முதலில் சரோஜாவுடன் கதைப்பதே நல்லதென்ரு பட்டது.

சரோஜாவோ வழக்கம்போல் தனிமையில் மூழ்கியிருந்தாள். இதயச்சந்திரன் தன்னைத் த்யார்படுத்திவனாக அவளருகில் சென்று " சரோஜா" என்றழைத்தான்.

அவனது அழைப்பின் வெறுபாட்டை உடனேயே சரோஜாவின் பெண்ணுள்ளம் புரிந்து கொண்டது. 'என்ன' என்பது போல் அவனை ஏறிட்டுப் பார்த்தாள். அவனே தொடர்ந்தான்: "கெதியிலை வெளியிலை போகலாம் போலக் கிடக்குது. அதுதான் அதைப்பற்றிக் கதைக்கலாமெயென்று பட்டது. அதுதான் உங்களுக்கும் நேரமிருக்குமென்றால் , கொஞ்சநேரம் என்னுடன் நீங்கள் எல்லோரும் சந்தித்துக் கலந்தாலொசிக்க முடியுமே?"

அதற்கவள் பதில் அவளது மனநிலையினை மிகவும் துல்லியமாகவே வெளிப்படுத்தியது.

"எல்லாமே முடிந்து விட்டதே."

"என்ன சொல்லுகிறீர்கள் சரோஜா?"

"சொல்ல என்ன இருக்கு. என்னைப் பொறுத்தவரையில் எல்லாமே முடிஞ்சு போயிற்று. "

இவ்விதம் சரோஜா கூறவே, இதயச்சந்திரன் இடை மறித்தான்: " சரோஜா. நீங்களே இப்படிச் சொன்னால் எப்படி. ஆனந்தனைக் கொஞ்சம் நினைச்சுப் பாருங்கள். அவனுக்காகவாவது நாங்களேதாவது நல்ல முடிவை எடுக்க வேண்டும்தானே.. "

இதற்கு அவள் மெளனமாகவிருந்தாள். அவனே தொடர்ந்துக் கூறினான்: "சரோஜா. நான் நல்லாய் யோசித்துத்தான் இந்த முடிவுக்கு வந்திருக்கிறன். இன்னும் கொஞ்ச நாளிலை எங்களையும் இந்த முகாமிலிருந்து வெளியிலை அனுப்பி விடுவாங்கள். வெளியிலை போனவங்களிலை பலருக்கு இன்னும் குறைஞ்ச அளவு வசதிகள் தானும் செய்து கொடுக்க வில்லையாமே... இப்படியான சூழலிலை நீங்களும் , ஆனந்தனும் தனியே இருந்தால் என்ன நடக்குமென்றதை நினைச்சுப் பார்த்தாலே பயமாயிருக்கு. அதனால்தான் நான் கடைசியிலை இந்த முடிவுக்கு வந்திருக்கிறன்.."

"நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?' சரோஜாதான் கேட்டாள்.

இதற்குச் சிறிது யோசித்துவிட்டு இதயச்சந்திரனே கூறினான்: "சரோஜா. நாங்கள் மூவரும் வெளியிலை போன பிறகும் ஒன்றாகவே வசித்தால் அதுதான் நல்லதுபோலை எனக்குத் தெரியிது. நான் உயிரோடை இருக்கிற வரையில் என்னால் முடிஞ்ச அளவுக்கு உங்களுக்கும், ஆனந்தனுக்கும் செய்வன். உங்களை அன்றைக்கு அந்தப் போர் சூழலிலை பார்த்த அந்தக் கணத்திலேயே எனக்குள் சொல்லிக் கொண்டேன் இந்தப் பெண்ணை எப்படியும் , என்னாலை முடிஞ்ச் அளவுக்குக் காப்பாத்துவேன். நான் ஒன்றாக இருப்போம் என்று சொன்னதும் தவறாக ஒன்றும் நினைச்சு விடாதீங்கள். இருவரும் ஆனந்தனுக்கு அவனது அப்பா, அம்மா இருந்தால் என்ன செய்வாங்களோ அப்படியே எதவிதக் குறையுமில்லாமல் எங்களால் முடிஞ்சதைச் செய்ய வேண்டும். அதுக்காக நாங்களிருவரும் புருசன், பெண்டாட்டியாகத்தான் இருக்க வேண்டுமென்று அர்த்தமில்லை. அப்படி வாழக் கிடைச்சால் அதை நான் மறுக்க மாட்டன். ஆனால் அதுவல்ல என் இப்போதைய விருப்பம். நாங்கள் மூவருமே இந்தப் போரினால் பாதிக்கப்பட்டிருக்கிறம். மனுசங்க என்ர
அடிப்படையில் நாங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொண்டு வாழ வேண்டுமென்றுதான் நினைக்கிறன். நீங்கள் இப்பவே இதுக்கான பதிலைச் சொல்ல வேண்டுமென்றில்லை. நல்லா யோசித்து, ஆற , அமர யோசித்துச் சொன்னால் போதும். இந்த முகானை விட்டு போறதுக்குள்ளை சொன்னால் அது போதும். நீங்கள் நல்ல பதிலைச் சொல்லுவீங்களென்று நினைக்கிறன்"

இவ்விதம் கூறிவிட்டு, சரோஜாவைத் தனிமையில் விட்டுவிட்டு, குடிசையின் வெளியே வந்தான் இதயச்சந்திரன். முதன் முறையாக எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கைக் கீற்றொன்று சிந்தையில் தோன்றி மறைந்தது. முடிவு கூடத் தன்னுள் தொடக்கமொன்றினை எவ்விதம் மறைத்து வைத்துள்ளது.

போர்கள் மட்டும் இல்லையென்றால் இந்தப் பூவுலகுதான் எவ்விதம் ஆனந்தமாக விளங்கும். எந்தவித இன,மத, சாதி வேறுபாடுகளற்று, இந்தப் பூமிப்பந்தின் மானுடர்கள அனைவரும் ஒரு தாய்ப்பிள்ளைகளாக வாழ்ந்திருக்கும் சாத்தியம் ஏற்பட்டால் எவ்விதம் இன்பமாகவிருக்கும்.

போரே ! போய் விடு!
போரே ! போய் விடு!
போரே ! போய் விடு!
போரே ! போய் விடு!

ngiri2704@rogers.com

No comments: