Sunday, July 13, 2008

வந்தேறு குடியும், பூர்வீகக் குடியும்! - வ.ந.கிரிதரன் -


1.
பல்கலாச்சாரச் சமூகங்கள் நிறைந்தொளிரும்,
உலகிற்கொரு முன்மாதிரியான மா
நகரிந்தத் 'தொராண்டோ' மாநகர்.
பாதாளப் புகையிரதங்கள், நவீன வாகனங்கள்,
விண்முட்டும் உயர் கட்டடங்கள்,
உலகில் அதியுயர்ந்த சுயதாங்கிக் கோபுரம் (CN Tower),
இயங்கும் தன்மை மிக்க
'குவிகூரை' விளையாட்டு மண்டபம் (SkyDome),
மாபெரும் அங்காடிகள், பூங்காக்களென....
ஒளிருமிந்தப் பெருநகருக்கு
உலகில் நல்லதொரு பெயருண்டு:
இந்நகரொரு குட்டிப்
பூகோளம்.

2.
இம்மாநகரில்தான் நானும்
இத்தனை வருடங்களாகக்
'குப்பை' கொட்டிக் கொண்டிருக்கின்றேன்.
இந்த நாட்டின் குடிமகனென்ற பெயரும்,
உரிமையும் கொண்ட எனைப் பார்த்து
மூன்றாம் உலகத்து வாசிகளுக்குப்
பொறாமையும், ஏக்கமும் அதிகம்.
அதிலும் தென்னிந்தியச் சினிமாக்களில்
இந்நகரைக் காணும் தருணங்களிலெல்லாம்
அவ்வுணர்வுகளதிகமாகும்.


3.
இந்தவிருபது வருடங்களில் தானெத்தனை
எத்தனை மாற்றங்களை இம்மாநகர்
கண்டுவிட்டது.
இருந்தும் இன்னும்
மாறாதவையுமுள சில.அவை:

3.1
அன்றெனை மறித்த காவல்துறையதிகாரி
இன்று ஓய்வுபெற்றுப் போயிருக்கலாம்.
மரித்திருக்கலாம். இருந்தாலும்
அன்றெனை மறித்த தருணத்தில்
அவன் முகத்தில் படர்ந்த அலட்சியம்
ஒருவேளை
அக்காலகட்டத்தின் எனது குடியுரிமை நிலை
காரணமாக இருக்கலாமென்றெண்ணி
ஆறுதலைடைந்ததுண்டு.

3.2.
ஆயின் பின்னர் குடியுரிமைபெற்றுப்
பெருமிதத்தில்
நடைபயின்றவென்னை
இன்னுமொரு அதிகாரி
அதுபோன்றதொரு அலட்சியத்தில்
நடத்தியபோது, அவனுக்குமென்
குடியுரிமை நிலை தெரியாமலிருந்திருக்கலாமென
எண்ணினேன்.

3.3.
ஆயினுமென்ன! நேற்று, நான்
இம்மண்ணில் காலடிவைத்தபோது
அவதரித்துக் காவலதிகாரியாக அவதரித்த
அதிகாரியும் அவ்விதமே
அலட்சியமாக நடந்து கொண்டபோது
அவனலட்சியத்தின் காரணம் புரியாது,அது
எதுவாயிருக்குமென
சிந்தையிலோராயிரமெண்ணங்கள்.
இவர்களுக்கெல்லாம்
நானுமிந்த நாட்டின் பூரணவுரிமை
பெற்றதொரு பிரசைதானென்பதை
எப்படிப் புரியவைப்பேன்?
இவர்களினிந்த அலட்சியத்தின் காரணம்?
என் நிறமா? அல்லதென் மொழியா? எது?

4.
இவ்விதம் பல்சிந்தனைகள் மிகுந்து
நடைபாதையொன்றில் நடந்ததொருதருணத்தில்,
நடைபாதையினோரத்தில் குடங்கிக்கிடந்த
பூர்வீக இந்தியனொருவன் நகைத்தான்;
அவன் பூர்விகமறியாது அவன்
நகைப்பினாலாத்திரம் மிகக்கொண்டு,
நானடைந்த
ஆத்திரம் அவன் விலாவை மேலும்
குலுங்க வைக்கவே அமைதியானேன்.
அப்போதவன் கூறினான்:
'இம்மண்ணின் பூர்வீகக்குடி நான்.
என்னாலேயே முடியவில்லை;
வந்து குடியேறிய மகன் நீ. உன்னாலெவ்விதம்
முடியும்? அதுவேயென் நகைப்பின்
காரணம் தவிர வேறல்ல. ஆத்திரம் தவிர்.
ஒருவேளை என்னால் முடியாதது
உன்னால் முடியக்கூடுமாயின்
அதனையெனக்கும் அறிவிக்க மட்டும்
மறந்துவிடாதே நண்பனே!
சொந்த மண்ணினிழப்பை
அனுபவித்தால்தான் தெரியுமதனிழப்பு'
அப்பொழுது நான் கூறினேன்:
'நண்பனே! சொந்த மண்ணை
இழந்தது நீ மட்டும் தானல்ல'!


********************************

காலத்தின் சார்பு நிலை!

- வ.ந.கிரிதரன் -

எனது பால்யகாலத்தில் எவ்வளவு
ஆறுதலாக, மெதுவாகக் காலம்
சென்று கொண்டிருந்தது.
ஒவ்வொரு கணத்தையும் மிகவும்
ஆறுதலாக உள்வாங்கி, உணர்ந்து, இரசித்து
பொழுதுகளை எவ்வளவு
இனிமையாகக் கழிக்க முடிந்தது.
அன்னையப்பர் மற்றும் பிற
உறவுகளுடன் கழிந்ததந்த
வாழ்வினொவ்வொரு பக்கமும்
நேற்றுத்தான் படித்ததொரு புத்தகமென
இன்னுமென்னகத்தில்
இருக்கும் மாயமென்ன!
ஆறுதலாக , மிக மிக மெதுவாக
விரைந்த காலமே! உழைப்பேயிருப்பென
ஆகிவிட்ட இன்று மட்டுமேன்
ஒளிவேகத்தில் விரைகின்றாய்?
ஐன்ஸ்டைனின் கூற்றினைத் திருப்திப்படுத்துவதில்
உனக்கென்ன அவ்வளவு மோகம், வேகம்?

ngiri2704@rogers.com

No comments: