Thursday, November 02, 2006

அ.ந.கந்தசாமி ஒரு பல்துறை வல்லுநர் 3.

அ.ந.கந்தசாமியின் சிறுகதைகள் சில!

நள்ளிரவு!

- அ.ந.கந்தசாமி -

‘நான் நாளைக்கு ஜெயிலுக்குப் போகிறேன்’ என்றான் அவன் சர்வதாரணமாக.அவன் பேச்சிலே துக்கமோ, துயரமோ, அல்லது ஏக்கத்தின் ரேகைகளோ தென்படவில்லை. அமைதியாகவும் ஒருவித விரக்தியோடும் பேசினான் அவன். என் மனதிலே சுந்தராம்பாள் பாடிய ‘சிறைச்சாலை ஈதென்ன செய்யும்’ என்ற பாடல் ஞாபகத்திற்கு வந்தது. அந்தப்பாட்டிலே கூறப்பட்ட ‘சரீராபிமானமற்ற ஞான தீரரில்’ இவன் ஒருவனோ என்று என்னுள் நானே கூறிக்கொண்டேன். ஆனால் அவன் பேச்சில் விரக்தி மட்டுமல்ல ஒருவித ஆனந்தம்கூட அலை வீசியது. ஜெயிலுக்குப் போவதற்கா இவ்வளவு தூரம் சந்தோசப்படுகிறான் என்று எண்ணினேன் நான்.என்னுடன் பேசிய ‘அவன்’ ரொம்பக்காலம் என்னுடன் பழகியவன் அல்ல. அன்றுதான் அகஸ்மாத்தாக அவனைச் சந்தித்தேன். இரவு சினிமாவில் இரண்டாவது ஆட்டம் பார்த்துவிட்டு தன்னந்தனியாக கொழும்பு நகரில் எனது அறையை நோக்கி வந்துகொண்டிருந்தேன். அப்போழுது திடீரென எங்கள் நட்புக்குதவியாக மழை பொழிய ஆரம்பித்தது. நான் ஓடோடிச் சென்று, மெயின்ஸ்ரீட்டும், பூந்தோட்ட வீதியும் சந்திக்கும் இடத்தில் உள்ள கட்டடத்தில் ஒடுங்கிக்கொண்டேன். பழைய கிறீஸ்தவ தேவாலயங்களைப் போல் பிரமாண்டமான வளைவுகள் உள்ள வராந்தாவுடன் கூடிய இக்கட்டடத்தைப் பல தெருத்திகம்பரர்கள் தமது திருப்பள்ளிக்கு உபயோகப்படுத்திக் கொள்வது வழக்கம் என்பதை அப்படி ஒதுங்கியபோதுதான் தெரிந்துகொண்டேன்.

அங்குமிங்குமாய் சிலர் நீட்டி நிமிர்ந்தும் மடங்கி முடங்கியும் கூனிக் குறுகியும் படுத்துக் கிடந்தார்கள். ஒருசிலர் நித்திரையாகிவிட்டார்கள். இன்னும் சிலர் சுருட்டுப் பிடித்துக் கொண்டிருந்தார்கள். மேலும் சிலர் மெல்லிய குரலில் சம்பாஷித்துக் கொண்டிருந்தார்கள்.
நான் அங்கே ஒதுங்கி ஒருசில வினாடிக்குள் மழையின் வேகம் அதிகரித்தது. சாரல் வராந்தாவின் உள் சுவர்வரை வீசி அடித்தது. படுத்திருந்தவர்கள் எல்லோரும் எழுந்து விட்டார்கள். அங்குமிங்குமாக தமது படுக்கை இடங்களை மாற்றிக் கொண்டார்கள், அல்லது மாற்றிக் கொள்வதற்கு முயற்சி செய்துகொண்டிருந்தார்கள்.

அந்தக் காட்சி எல்லாம் எனக்குப் புதுமையாகவும் கவர்ச்சி நிறைந்ததாகவும் தோன்றியது. அவற்றைப் பார்ப்பதில் ஈடுபட்டிருந்தேன். அப்பொழுதுதான் அங்கு மழையோடு போட்டி போட்டு வந்து வராந்தாவில் ஏறினான் அவன். பக்கத்திலே சந்தியிலிருந்த மின்சார வெளிச்சம் மழையால் மங்கி இருந்தபோதிலும் வராந்தாவில் ஒரு சிறிது வீழ்ந்து கொண்டிருந்தது. அந்த வெளிச்சத்திலே அவனைக் கவனித்தேன். உற்சாகமான சிரித்த முகம். சுத்தமான ஷர்ட்டும், கோடுகளிட்ட வெள்ளைச் சாரமும், இடையில் ஒரு புலித்தோல் பெல்ட்டும் காட்சி அளித்தன. வயதில் வாலிபன். நன்றாக நனைந்து போயிருந்தான்.

‘இழவு பிடித்த மழை!’ என்று கூறிய அவன், என்னைப் பார்த்து “நீங்கள் மழையினால் இங்கு அகப்பட்டுக் கொண்டீர்களோ?” என்று கேட்டான்.

“ஆம்” என்றேன். அத்துடன் சம்பாஷிப்பது அந்த நேரத்திலே டானிக் போல உற்சாகம் தருவதாய் இருந்ததாலதனைத் தொடர விரும்பி “நீ எங்க அவசரமாய் போகின்றாய்?” என்றேன் சுமுகமாய்.

அவன் சிரித்தான். “இதுதான் எனது மாளிகை! படம் பார்த்துவிட்டு வருகிறேன், படுப்பதற்கு” இப்படியாக ஏற்பட்ட பேச்சு எங்கெல்லாமோ சுற்றி, எவ்விதமாகவோ வளைந்து வளைந்து சென்றது. அவன் நான் யார், எங்கிருக்கிறேன் என்பதையெல்லாம் விபரமாகக் கேட்டான். நான் பத்திரிகை ஆசிரிய பீடத்தைச் சேர்ந்தவன் என்றால் அவன் பயந்து திகைத்து விடுவானோ என்று அஞ்சி ஒரு கடையிலே சேல்ஸ்மேன் என்று கூறினேன்.

பேசிக்கொண்டிருக்கும்போதே அவன் சர்வசாதாரணமாக கஞ்சாச் சுருட்டொன்றைப் பற்றவைப்பதகாக அதற்கு வேண்டிய முஸ்தீபுகளைச் செய்ய ஆரம்பித்தான். மடியில் கஞ்சாவை எடுத்து கையில் வைத்துக் கசக்கினான். பின்னால் சிகரட்டைச் சீர்குலைத்து அதனுள்ளே அதைப் பொதிந்தான்.

என்னைப் பார்த்து “நீங்கள் கஞ்சா பிடிப்பதில்லையா?” என்றான் சிரித்துக் கொண்டு. “இல்லை” என்ற பாவத்தை முகத்தில் பரவவிட்டேன். “குளிருக்குக் கொஞ்சம் சூடேற்றிக் கொள்ளலாம், குடித்துப் பாருங்கள்” என்று வற்புறுத்தினான். அவன் பேச்சு, அவன் புன்னகை எல்லாமே என்னை அடிமை கொண்டிருந்தன. குடித்துத்தான் பார்ப்போமே என்று சிகரெட்டை வாங்கினேன். அவன் தன் கையிலிருந்த நெருப்புப் பெட்டியால் பற்றிவைத்து விட்டான்.

கஞ்சாப் புகையை உள்ளே இழுத்தேன். அந்தக் குளிருக்கு அது சிறிது தெம்பு தரத்தான் செய்தது. மழையோ இப்போது மேலும் அடித்துப் பெய்யத் தொடங்கியது. பொட்டுப் பொட்டாக ஆங்காங்கு பரந்து கிடந்த மின்சார வெளிச்சத்தில் தார் ரோடு எண்ணெயால் மெழுகியதுபோலப் பளபளத்தது.

எனக்குப் போதை உண்டாகியதோ என்னவோ தெரியாது; ஆனால் மஸ்துப் பொருட்களின் போதைக்கு ஒரு அபூர்வசக்தி உண்டு. மனிதனின் தன்னுணர்ச்சியையும், வெட்கத்தையும், பயத்தையும் போக்கடித்து விடுகிறது. இதன் காரணமாகத்தான் சிலர் போதையின் வயப்பட்டதும் வேதாந்தம் பேசுகிறார்கள். பயத்தாலோ வெட்கத்தாலோ அவர்கள் உள்ளக் கூஜாக்களில் அடைபட்டிருந்த வேதாந்தம் மெல்ல மெல்ல வெளியே கிளம்ப லாகிரிப்போதை மூடியைத் திறந்து விடுகின்றது.

நானும் நண்பனும் அளவளாவிப் பேசிக்கொண்டிருந்தோம். நான் ஐந்தாறு தடவை கஞ்சாவை இழுத்த பின்னர் குறைச் சிகரட்டை அவன் வாங்கிக் கொண்டான்.

நான் கேட்டேன்: “நீ நாளைக்கு ஜெயிலுக்குப் போகிறேன் என்றாயே, ஏன் போகிறாய்? என்ன குற்றஞ் செய்தாய்?”
அவன் சிரித்தான். “அதோ பார்த்தீர்களா ஒரு பெண் முடங்கிப் படுத்திருக்கிறாள்! அவளைப் பலாத்காரம் செய்ததாகக் குற்றச்சாட்டு”
“ஒருநாளிரவு கள்ளுக்கடை முடுக்கிலே அவளைப் பலாத்காரம் செய்கையில் பொலிசார் பிடித்து வழக்குப் போட்டுவிட்டனர்” என்று கூறி அவன் கலகலவெனச் சிரித்தான்.

“யார் அந்தப் பெண்?” என்றேன் ஆவலுடன்.

“அவளா? யாரென்று யாருக்குத் தெரியும்! ஆனால் அவள் பக்கத்திலே படுத்திருக்கிறதே குழந்தை, அது என் குழந்தைதான்!”
“அப்போ அவள் உன் மனைவியா?”

அவன் முகத்தைச் சுளித்தான். “அவள் எல்லோருக்கும் மனைவிதான். ஆனால் என்னிடம் மட்டும் அவளுக்குச் சிறிது அதிகப் பிரியம்! நானும் அப்படித்தான்!”

எனக்கு ஒரு விசயம் ஒரே புதிராகிவிட்டது. கஞ்சா மயக்கத்தில் முன்னுக்குப் பின் முரணாக அவன் பேசுகிறானோ, அல்லது எனக்குத்தானவன் ஒன்றுபேச வேறொன்று கேட்கிறதா என்ற சந்தேகம் ஜனித்தது.

எனது நண்பன் இப்பொழுது அந்தப் பெண்ணிருந்த பக்கத்துக்குச் சென்றான். நிச்சிந்தையாகத் துயின்று கொண்டிருந்த அவளுக்கு அருகில் சென்று, “பேபி பேபி” என்று கூப்பிட்டான். அதை அவள் எதிர்பார்த்துத் துயின்றுகொண்டிருந்தவள் போல எழுந்து உட்கார்ந்தாள். கண்களை கசக்கி விட்டுக் கொண்டாள். பின் அவர்கள் இருவரும் ஏதோ சில வார்த்தைகள் குசு குசுவென்று பேசிக்கொண்டிருந்தனர். இரண்டு நிமிஷத்தில் நண்பன் மீண்டும் என்னிடம் வந்தான். அவன் கையில் வெற்றிலை பாக்கு நிறைய இருந்தது.

“நீங்கள் வெற்றிலை பாக்கு போடுவீர்களா?” என்று என்னிடம் கேட்டான் அவன். நான் வெற்றிலை பாக்குப் போடுவதில்லை. என் மனதில் ஆச்சரியமும் இந்த வினோதமான காதலர்களின் தன்மையை அறிவதில் அவாவும் அதிகமாகி இருந்தது. இவர்கள் காதலர்களா? அல்லது பலாத்கார வழக்கிலே சம்பந்தப்பட்ட இ பகைவர்களா? அவன் கூறுவதின்படி அவர்கள் இண்டுமென்று அர்த்தமாகிறது. குளிர்ந்த நீர் கையை வைத்ததும் கையைச் சுட்டது என்று கூறுவது போல் இந்தது, இத வினோதச் செய்தி. இன் பூரா விபரங்களையும் அறிய வேண்டுமென்ற ஆவல் அடக்க முடியாமல் என் மனதிலே கிளம்பியது.

மீண்டும் சம்பாஷணையில் ஓட்டத்தை உண்டாக்குவதற்காக “நீ என்ன தொழில் செய்கிறாய்?” என்று அவனிடம் கேட்டேன்.
அவன் அர்த்தபுஷ்டியுடன் புன்னகை புரிந்தான். “தொழில் எதுவென்றிருக்கிறது? எப்படியும் ஜீவனோபாயம் நடந்தாற் சரிதானே?” என்று வேதாந்தி போல் பேசினான் அவன்.

“அப்படியானால்..” என்று ஆரம்பித்த வசனத்தை பூர்த்தி செய்யாது நிறுத்தினேன் நான்.

அவன் சிரித்தான்.

மழை இப்பொழுது முன்னிலும் திடீர் வேகத்தோடு பெய்ய ஆரம்பித்தது. இடிகள் வானவெளியிலே உருண்டுருண்டு சப்தித்தன. வானம் தன் மூடிய கண்களைத் திறந்து உலகை ஒருதடவை பார்த்து பின் படீரென்று இமைக் கதவுகளை மூடிக்கொள்வது போல மின்னல் ஒன்று பளிச்சிட்டு மறைந்தது.

எனக்கு ஒரே ஆச்சரியமாயிருந்தது. புத்திசாலியாகவும், நேர்மை உள்ளவனாகவும் தோன்றும் இவன் பிக்பாக்கட்டா? ம். அவன் நேர்மையுள்ளவன்தான். இல்லாவிட்டால் தான் பிக்பாக்கட் என்பதைக் கூறிவிடுவானா? இந்த முடிச்சுமாறிக்கும் சமூகத்தின் இதர கள்வர்களுக்கும் ஒரு வித்தியாசம் இருந்தது. அவர்கள் தம் போக்கை மூடி மறைத்துக் கண்ணியம் நிறைந்தவர்களாக நடிக்கிறார்கள். இவனோ உண்மையைக் கூறிவிடுகிறான். இதன் காரணமாக என் உள்ளத்தில் ஒரு மகாத்மாவாக, சத்தியவந்தனாகத் தோன்றினான் அவன்.
“அப்படியானால் உனக்கு ஒழுங்கான வருமானம் கிடைக்காதே! ஒரு நாளைக்கு எவ்வளவு சம்பாதிப்பாய்?” என்று சாதாரணமாகக் கேட்டேன்.

உலகத்திலே எல்லோரும் பிக்பாக்கட்டைப் பற்றிப் பேசுகிறார்கள். ட்ராமிலும், பஸ்ஸிலும், சினிமா நெருக்கடியிலும், அங்கிங்கெனாதபடி நிறைந்திருப்பவன் போல, நகரத்தில் மடியில் கனமுள்ள எவரும் அவனை ஞாபகப்படுத்தி அஞ்சிக்கொண்டிருந்தார்கள். ஆனால், ஆயிரத்தில் ஒருவனுக்குத்தானும் அவன் நேரில் காட்சியளிப்பதாகத் தெரியவில்லை. ஏதோ ஒருவகை உடையைக் கொண்டு இவன் பிக்பாக்கட்டாயிருக்கலாம் என அனுமானிக்க முடிகிறதே அல்லாமல் நிச்சயம் செய்து கூறுவதற்கில்லை. பழைய காலத்து ‘சதாரம்’ நாடகத்தில் கள்ள உடைபோட்டு ‘கொள்ளையடிக்க போவோமடா’ என்று பாடிவரும் கொள்ளைக்காரர்கள் நாடகத்திற்குத்தான் சரியேயல்லாமல், வாழ்க்கையில் நாம் காணக்கூடியவர்கள் அல்ல. பிக்பாக்கட்டுக்கள் தீயணைக்கும் வீரர்கள் போல் அதற்கென்றுள்ள உடையை உடுத்துக்கொண்டா தமது தொழிலுக்குப் போகப் போகிறார்கள்? – பார்க்கப்போனால் கடவுள் போல் இவர்களும் பலர் மனதிலே அரூபிகளாகத்தான் விளங்க முடியும். ஒரு சிலர் பிடிபடுவதும் உண்மைதான்! ஆனால் அவர்கள் உண்மைக் குற்றவாளிகள்தாம் என்பதை யார் கண்டார்கள்?

என் மனதிலும் ‘பிக்பாக்கெட்’ என்பவன் நகரில் அங்கிங்கெனாதபடி நிறைந்திருக்கும் ஒரு அரூபியாகத்தான் இதுவரை இருந்தான்.
ஆனால் இப்பொழுதோ என் கண்முன் காட்சி தந்துவிட்டான். என்புதோல் போர்த்த சதையுடம்புடனே நிற்கும் அவனது அந்தரங்கங்களை எல்லாம் கூடிய அளவு தெரிந்து கொள்ளவேண்டும் என்ற ஆசை, அந்த ஆசையில்தான் ‘எவ்வளவு சம்பாதிப்பாய்?’ என்ற கேள்வி என் உள்ளத்தில் ஜனித்து வாயினால் வெளிப்பட்டது.

“மாதம் முடிந்ததும் இவ்வளவு கிடைக்கும் என்று நிச்சயமாய்ச் சொல்லக்கூடிய தொழிலல்ல இது. சில சமயம் ஒன்றுமே கிடைக்காது.”
எனக்கு இதிலே மனம் படியவில்லை. என் உள்ளத்தை அலைக்கழித்த அந்தப் பெண்ணின் விவகாரத்திற்கு எப்படி வருவது என்று தெரியவில்லை. இருந்தும் ஒருவாறு சமாளித்துக் கொண்டு “ஆமாம், நீ நாளைக்கு ஜெயிலுக்குப் போகிறாயே, உனக்கு கவலையாய் இல்லையா? பயம் கிடையாதா?” என்று அந்தத் திசைக்கு சம்பாஷணையைத் திருப்புவதற்குச் சாதகமான முறையில் என் பேச்சை ஆரம்பித்தேன்.

அவன் இதற்கும் தன் புன்னகையுடனேயே பதிலளித்தான். “பன்னிரண்டாவது தடவையாக ராஜா வீட்டுக்குப் போகிறேன், பயமா? எதற்கு?” என்றான் அவன்.

ஆரம்பத்திலிருந்தே அவன் பேச்சு, செயல் எல்லாம் எனக்குப் புதுமையாயிருந்தன. ஆனால் இப்பொழுதோ அந்தப் புதுமையின் உச்சியை நான் எட்டிப்பிடித்துக் கொண்டிருப்பதாக எனக்குத் தோன்ற ஆரம்பித்தது.

அவன் மேலும் தொடர்ந்தான். “ஜெயிலிலே எனக்கு எல்லோரும் நண்பர்கள்தான். உண்மையில் அங்கிருந்து நான் வெளியே வந்து ஒண்ணரை மாதந்தான் ஆகிறது. பத்துப் பன்னிரண்டு பேர்களைத் தவிர அனேகமாக மற்ற நண்பர்களெல்லாம் இன்னும் அங்குதான் இருப்பார்கள்..”
ஏதோ நண்பர்களைச் சந்திக்க வேலையிலிருந்து ஓய்வெடுத்துக் கொண்டு செல்லும் ஒருவன் போல அவன் பேசினான். மறியற்சாலை அவனைத் தன் இருண்ட அறைகளைக் கொண்டு பயமுறுத்தவில்லை. அவன் வர்ணனையைப் பார்த்தால் அவனை அது மயக்கி அழைப்பது போலத் தெரிந்தது.

நான் அவன் முகத்தை நோக்கினேன். கஞ்சா நெருப்பு இப்பொழுது தன் முடிவான கட்டத்தை அடைந்து கொண்டிருந்தது. மழை நேரத்தில் குளிர்ந்த பாரமான காற்றினாற் போகும் புகை விரைவாக மேலெழுந்து மறையவில்லை. ஆறுதலாக சுருள் சுருளாக மாடிப்படிகளில் சிரத்தையோடு ஏறும் ஒரு குழந்தை போல மெல்ல மெல்ல எழுந்து கொண்டிருந்தது. அதனூடாக அவன் கண்களைப் பார்த்தேன். அதில் ஒளியும் இன்பமும் அலைவீசிக் கொண்டிருந்ததைக் கண்டதும், ஆச்சரியம் மேலும் அதிகமாகியது.

“அப்போது சிறைக்குப் போவது உனக்குப் பிரியமென்று சொல்லு!”

“சந்தேகமில்லாமல்”

“ஏன்? அங்கே என்ன அவ்வளவு விஷேசமிருக்கிறது?”

“என்ன இருக்கிறதா? அப்போது உங்களுக்குச் சிறையைப் பற்றி ஒன்றுமே தெரியாதென்று சொல்லுங்கள்”

குருவின் சொற்களை ஆவலுடன் எதிர்நோக்கும் பக்தி நிறைந்த ஒரு சிஷ்யன்போல அவன் வார்த்தைகளை நான் கேட்டுக் கொண்டிருந்தேன்.

“இந்த மழை ஓய்ந்ததன் பிறகு நீங்கள் உங்கள் வீட்டுக்கோ கடைக்கோ செல்வீர்கள். அடைமழை இரவுக்கும் நித்திரைக்கும் நல்ல பொருத்தம். நன்றாகத் தூக்கம் வருமல்லவா?”

நான் தலையை ‘ஆம்’ என்ற பாவனையில் அசைத்தேன்.

“எனக்கும் தூக்கம் வரும். ஆனால் துங்கத்தான் இடமில்லை! பார்த்தீர்களா நமது மாளிகை எப்படி ஈரமாய் போய்விட்டதென்று.”
கதை சுவாரஸ்யத்தில் ஈடுபட்டிருந்த நான் அப்போது தான் நிலத்தை நோக்கினேன்; காலிலே செருப்பு அணிந்து இருந்ததால் சுற்றிலுமிருந்த ஈரம் என்னை அவ்வளவாகத் தாக்கவில்லை. அவன் கால்களை நோக்கினேன். அவை ஈரத் தரையில் பதிந்து சிறிது வெளிறி இருந்தன.

குளிர்ந்த காற்றொன்று மழைச் சாரலை உள்ளே அடித்து வீசியது. உடம்பிலே சிலிர்ப்பும் நடுக்கமும் சிறிது தோன்றின.

“நீங்கள் சாப்பிட்டுவிட்டீர்களா?” என்று என்னை விசாரித்தான் அந்த அதிசய நண்பன்.

“சாப்பிட்டுவிட்டுத்தான் படம் பார்க்கக் கிளம்பினேன்” என்றதும் அவன் சிறிது நேரம் மெளனமாக இருந்தான். எதையோ பேச அவன் கூச்சமடைந்தானென்று தெரிந்தது.

பேசிக்கொண்டிருந்தவர்கள் மெளனமாகியதும் காதிலே மழையின் ‘ஓ’வென்ற இரைச்சல் ரீங்காரம் செய்ய ஆரம்பித்தது. அந்த ஓசையிலே ஒரு தனிமையுணர்ச்சி இருப்பது போல எனக்குப் பட்டது. வானம் யாரை நினைத்து இவ்வளவு கண்ணீரையும் கொட்டி ஓவென்று அழுதுகொண்டிருக்கிறதோ? என்ற வினோதமான கற்பனை என் மனதிலே தோன்றியது.

“நீ சாப்பிட்டு விட்டாயா?” என்றேன்.

“இன்று இந்தக் கஞ்சாவோடு சரி! ஒரு டீ அடித்துவிட்டுப் படுக்க வேண்டியதுதான்! ஆமாம், நீங்கள் கேட்டீர்களே, ஜெயிலிலே என்ன சுகமென்று. நேரத்துக்கு உணவு! இது போன்ற அடைமழை நேரத்தில் இருண்ட சிறைச்சாலை ‘கம்’ என்றிருக்கும். நல்லாக நித்திரை வரும்! அந்தக் கருங்கற் சுவர்களை மீறிக் குளிர் உள்ளே நுழைந்துவிட முடியாது..”

நான் திகைத்து விட்டேன்.

அடிமைத்தனத்திலே கிடைக்கும் சுகத்தை விரும்பிய இவன் சிறையை நாடுகிறான்! என் மனதைச் சிறிது நேரத்தின் முன் கவர்ந்து நின்ற அவனது உருவம் இப்பொழுது வெறுக்கத்தக்கதாகத் தோன்ற ஆரம்பித்தது. இப்படியும் ஒரு மனித ஜன்மம்! ஒருவேளை ஆகாரத்துக்காக தனது சுதந்திரத்தையே விற்கத் தயாராகி விடுகிறதா?

“அப்படியானால் உன் சுதந்திரம் பறிபோவதைப் பற்றி உனக்குக் கவலை இல்லையா?” என்றேன் நான்.

“சுதந்திரம்!.. ஜெயிலுக்குப் போனதும் அடுத்த வேளை உணவு எங்கே கிடைக்கும் என்பது போன்ற கவலையிலிருந்து விடுதலை கிடைக்குமல்லவா?” என்றான் அவன்.

என் சிந்தனையில் புதிய அலைகளைக் கிளறிவிடும் அவன் பிக்பாக்கட் என்று என்னால் நம்ப முடியவில்லை. என் உள்ளத்திலே மீண்டும் மோகனரூபம் பெற்றான் அவன்.

“அப்படியானால் ஜெயிலுக்குப் போக நீயேதான் சந்தர்ப்பத்தை சிருஷ்டித்துக் கொண்டாயா?”

அவன் இதற்கும் தன் சிரிப்புடனேயே பதில் தந்தான். அவனது கசந்த வாழ்விலே எப்படி இந்தச் சிரிப்பென்னும் இனிமை உதயம் ஆகிறது என்று ஆச்சரியப்பட்டேன் நான்.

“ம் அந்தப் பெண்ணின் ஒத்தாசையால் அது முடிந்தது. நான் என்ன சொன்னாலும் அவள் அதை மறுக்கமாட்டாள். அவளுக்கு என் மீது அவ்வளவு பிரியம். அன்று பொலீஸ்காரர் ரோந்துவரும் நேரத்தில் பலாத்கார நாடகத்தை நடத்தினோம். அவள் பலே கெட்டிக்காரி. ‘டவர்ஹால்’ நடிகைகள் கூட அவள்மாதிரி நடிக்க மாட்டார்கள்! அவ்வளவு கூச்சல் போட்டாள் அவள்.. அடுத்த நாள் கோட்டில் ஜரானோம்” என்று கூறிச் சற்று நிறுத்தினான் அவன்.

“அங்கே குற்றத்தை ஒப்புகொண்டாயாக்கும்” என்றேன் நான்.

“இல்லை! நாளைத் தவணையன்றுதான் ஒப்புக்கொள்ளப் போகிறேன்” என்று விளக்கினான் அவன். இதுவரை பிணையிலிருந்து வருவதாகவும் அவனது கோஷ்டியில் ஒருவன் இப்பொழுது வர்த்தகத் துறையில் சிறிது முன்னேறி வந்ததாகவும் அவனே தனக்குப் பிணை கொடுக்க முன்வந்ததாகவும் மற்ற விபரங்களையும் தெளிவுபடுத்தினான்.

“நாளை குற்றத்தை ஒப்புக்கொண்டால் குறைந்த பட்சம் ஆறுமாதம் சிறைவாசம் நிச்சயம்!”

விஷமம் செய்து ‘ஓ’வென்று கூச்சலிட்டு அழுதுகொண்டிருந்த இளம் சிறுமி ஒருத்தி படிப்படியே காரம் குறைந்து பின்னர் நீண்ட நேரம் சிணுங்கிக்கொண்டு உட்கார்ந்து விடுவது போல வேகமும், வலியும் குன்று மழை மந்த நடை போட்டுக் கொண்டிருந்தது. என்னுடைய உள்ளத்தில் தாண்டவமாடிய பல கேள்விகளுக்கும் பதில் கிடைத்து விட்டதால், அங்கும் சிந்தனைக்குகந்த ஒரு மந்தமான சூழ்நிலை உருவாகிக் கொண்டிருந்தது.

மணிக்கூண்டுக் கோபுரம் சமீபத்தில்தான் இருந்தது. நிமிர்ந்து பார்த்தேன். இரண்டு மணிக்கு பதினைந்து நிமிசங்கள் இருந்தன. ஒரு கூப்பிடு தொலைவில் தேநீர்க்கடை இருந்தது. தூறலிடையே அங்கு நண்பனையும் அழைத்துச் சென்று தேநீர் அருந்தினேன். நானே தேநீருக்குப் பணத்தைச் செலுத்தினேன்.

கடையிலிருந்து வெளியே வரும்போது மழை முற்றாக நின்று விட்டது. அவனிடம் விடைபெற்றுக்கொண்டு நான் ஜம்பட்டா வீதியில் உள்ள என் விடுதியை நோக்கி நடந்து கொண்டிருந்தேன்.

சிறையை விரும்பி அங்கே செல்ல முனைந்த அந்த இளைஞன் எழுப்பிய எண்ணங்கள் மனதிலே சுழன்று கொண்டிருந்தன. அவன் கல்லால் ஆகிய சிறையை விரும்புவது நாட்டிலுள்ள பசி பட்டினி என்னும் சிறைகளிலிருந்து ஓரளவு விடுபடவே என்பதை நினைத்ததும் தான் அச்சிறைகள் எவ்வளவு பயங்கரமானவை என்பது எனக்குத் தெரிய ஆரம்பித்தது. குற்றம் புரியாமலே குற்றம் புரிந்ததாகச் சட்டத்தை ஏமாற்றி அதனால் கிடைக்கும் தண்டனையை அடைந்து சுகிப்பதற்கு ஒருவன் முன்வருகிறான் என்றால் அது நம் சமுதாய அமைப்பின் ஓட்டையையே காட்டுகிறது என்ற எண்ணமும் என் உள்ளத்தில் பளிச்சிட்டது.

வீதியிலே யாருமில்லை. என் செருப்பின் சப்தம் மட்டுமே என்னைப் பயமுறுத்துவதுபோல ஒலித்துக் கொண்டிருந்தது. யாரோ ஒருவன் ஒரு குறுக்குத் தெருவில் இருந்து ஒரு ‘கொக்கை’த்தடியுடன் அங்கே பிரசன்னமானான். மழையின் காரணமாக எங்கோ ஒதுங்கி இருந்து விட்ட நகரசபையின் இருட்டடிப்புத் தொழிலாளியான அவன் மின்சாரதீபங்களை அணைத்துச் சென்று கொண்டிருந்தான். இருளின் தூதுவனாக நடந்து கொண்டிருந்த அவன் மக்கள் வாழ்வில் இருளைப் பரப்பி நின்ற இன்றைய சமுதாயத்தைத்தான் எனக்கு ஞாபகமூட்டிக் கொண்டிருந்தான்!

- “உழைக்கப்பிறந்தவர்கள்” 1950 தொகுதியிலிருந்து. மேற்படி சிறுகதை சுதந்திரனில் ஐம்பதுகளில் வெளிவந்தது.-

'பாதாள' மோகினி

-அ.ந.கந்தசாமி -

கலைஞன் சிவகுமார் ஒரு சித்திரம் வரைந்தான். அற்புதமான ஓவியம். ஒளியையும் நிழலையும் சேர்த்து, வர்ணத்தையும் வடிவையும் சேர்த்து எழுதிய செளந்தர்யப் பிழம்பான அந்த அழகு ஜோதியிலே தன்னை மறந்து வீற்றிருந்தான் அவன். சிவப்பு ரோஜாவையும் செந்தாமரையயும் மேகப் புரவி மீது பவனிவரும் முழுநிலவையும் அழகின் எல்லை என்று கவிஞர்கள் பாடினார்கள். அவற்றின் மோகனத் தோற்றத்திலே வாழ்வின் திருப்தியைக் கண்டார்கள். சாந்தி எய்தினார்கள்.கலைஞன் சிவகுமார் இதற்கு மாறானவன். கருங்கற் பாறை பிழந்து, வெள்ளியை உருக்கி வார்த்தார்களோ என்னும்படி பாய்ந்துவரும் வேகமான அருவியிலும் ஏன் ரமணீயமான ரோஜா மலரிலும், சிவந்த கமலப் புஷ்பத்திலும்கூட அவன் குறை காணுவான். குளிர்ந்த பூரணை நிலவின் அழகிலும் அவன் கலைக் கண்ணுக்குக் குறைபாடு தென்படும். அவன் இலட்சியவாதி. அழகின் லட்சியமான பேரழகை தெய்வீகமான ஒரு விந்தையழகைத் தேடி அலைந்து அவன் உள்ளம் அவன் ஆத்மா அமைதியற்றுத் துடிதுடித்தது.

கலைஞன் சிவகுமார் இவ்வுலகை வெறுத்தான். சாதாரண மக்களிடையே காணும் அவலட்சணமான் தோற்றமும், பண்பற்ற செயலும் பேச்சும், அவர்களின் பொறாமையும் துவேஷமும் சுயநலமும் அவனை மானிடர் மீதே அருவருப்புக் கொள்ளும்படி செய்தன. இதனால் சாதாரண பாமர மக்களினது போலிருந்த தனது இயற்பெயரான ராமலிங்கம் என்பதே அவனுக்குப் பிடிக்கவில்லை. இப்பெயர் தாங்கிய எத்தனையோ ரெளவுடிகளை முட்டாள்களை ரசிகத்தனம் அற்ற கோவேறு கழுதைகளை அவன் வாழ்க்கையில் கண்டிருந்தான். தனது இயற்பெயர் தன்னையும் இந்தக் கேவலப் பிராணிகளோடு சேர்த்துவிடும் என அஞ்சி 'சிவகுமார்' என்ற புதுப் பெயரைச் சூடினான்.


அவன் பருவ வாலிபர்கள் தலைமயிரை வெட்டி காற்சட்டை அணிந்தனர். இங்கும் தன் பெயருக்கு இருந்த பேராபத்து விளங்குவதை அவன் கண்டான். ஆடை அலங்கார விஷயத்திலும் மற்றவர்களுக்குப் புறம்பாக விளங்க வேண்டுமென எண்ணிய அவன் தனது மேன்மையான பளபளக்கு கேசத்தை நீள வளர்த்தான்; நீண்டதோர் பட்டு அங்கியை அணிந்தான். இயற்கையிலே உயர்ந்த கம்பீரமான தோற்றமும் நீலோற்பலம் போல் நீண்ட பெண்மை ததும்பும் நேத்திரங்களும் அமைந்த சிவகுமார் இந்த அலங்காரங்களுடன் உண்மையில் பாபக்கலப்பற்ற பசுமையான குழந்தை உள்ளம் படைத்த ஒரு தேவகுமாரன் போலக் காட்சி அளித்தான்.


அழகுத் தெய்வத்தின் உபாசகனான அவன் ஒரு சமயம் களியாட்ட விழாவொன்றிற்கு அழகு ராணிகளைத் தேர்ந்தெடுக்கும் நீதிபதிகளில் ஒருவனாக அழைக்கப்பட்டான். நீதிபதிகள் மிஸ்.ரதிப்பிரியா என்னும் உயர்குலச் சுந்தராங்கியைக் களியாட்டத்தின் அழகு ராணியாகச் சிபார்சு செய்தனர். அவளது அழகிலும் குறை கண்டான் கலைஞன். எனவே அழகுப் போட்டியின் முதலாம் இரண்டாம் இடங்களைக் காலியாக வைத்து மூன்றாவது இடத்துக்கு மிஸ் ரதியைத் தேர்ந்தெடுத்திருக்கலாம் என்று கருதினான். கூந்தல் கரி போல ஒரே கருமையாகவில்லாமல் பஞ்சு போலப் பறிக்கும் அலைகளைக் கொண்டு ஒரு மன மோகனத் தோற்றத்தை அளிக்க வேண்டும்; கொங்கைகள் அண்ணாந்து பார்க்கும் இரு கலசங்கள் போல் இலங்க வேண்டும்; கொடி போன்ற இடை அவசியம்தான். ஆயினும் மிகவும் மெலிந்து பஞ்சையின் இடைபோல் இருக்கக் கூடாது; பாதங்கள் இரு மாடப்புறாக்கள் போல் சிறிதாகவும் மல்லிகை மொக்குப் போல பூரித்தும் விளங்க வேண்டும்; - இனி அவள் கண்கள்! "அவை அற்புதமான நீலோற்பல நேத்திரங்கள் போலவே விளங்க வேண்டும்" இவ்வாறு அவன் கற்பனையிலே குளிர் நிலவும் பூந்தென்றலும், பூவின் மென்மையும், விண் மீன்களின் ஒளியும் ஒன்று சேர்ந்து உருவானது போன்ற ஒரு தோற்றம் எழுந்தது.


அதனைத்தான் சிவகுமார் கடந்த இரு நாட்களாக தன் அறையில் உட்கார்ந்தபடி சித்திரமாகத் தீடினான். ஆனால் அந்த ஓவியத்தை எழுதுகையில் எதிர்பாராத ஒரு விபத்து ஏற்பட்டது. கண்ணெழுதும் போது கரிய மையில் ஒரு துளி அக்கண்ணாடிக் கன்னங்களில் தவறி வீழ்ந்து விட்டது. சிவகுமார் ஒரு கணம் யோசித்தான். இதனை அழித்து அக்கன்னத்தை மீண்டும் எழுதும் பட்சத்தில் அதற்கு திரும்பவும் இவ்வர்ண வாய்ப்பு ஏற்படுமா என்பது சந்தேகமே. இவ்வாறு நினைத்த அவன் அக்கரிய புள்ளியை இயற்கையில் அமைந்த ஒரு மச்சம் போல அமைத்து நிறுத்தினான்.


பின்னும் ஒருமுறை படத்தை நோக்கினான். அவன் நீண்ட நேரம் தியானத்தமர்ந்து எழுதிய அச்சொப்பன சுந்தரி ஒரு தெய்வீகத் தன்மையுடன் கொலு வீற்றிருந்து தன் உதயத்தையும் உலகத்தின் இதர கலை உள்ளங்களையும் ஆட்சி செலுத்துவது போலிருந்தது அவனுக்கு! தன் வாழ்வின் அரும்பணி முற்றுப் பெற்றதென மமதையும் இறும்பூதங்கொண்டு ஆனந்த உலகில் சஞ்சரித்தான் அவன்.


அன்று பிறைச்சந்திரன் வானில் பவனி வந்தான். கலைஞன் ஜன்னலண்டை உட்கார்ந்து கீழே நகரத்து அலைமோதலை ஒரு முறை பார்த்துவிட்டு மேலே ஆகாயத்தை நோக்கி நிமிர்ந்தான். அப்போதுதான் அவன் நண்பன் பாலச்சந்திரன் அந்த அறையில் பிரவேசித்து "சிவகுமார்" என்று குரல் கொடுத்தது கேட்டது.


நண்பர்கள் சேஷமம் விசாரித்தனர். "பாலசந்திரன்! அருமையான படமொன்றை எழுதுவதில் கடந்த இரண்டு நாட்களும் கழிந்தன. அற்புதமான படம்! அதோ பார்!" பாலச்சந்திரன் அந்தப்புறம் பார்த்தான். சிலைபோல் அமைந்துவிட்டான் அவன்.


சிறிது நேரம் கழித்து "சிவகுமார், உனக்கு அவளை எவ்வளவு காலமாகத் தெரியும்? அல்லது அவள் வசிக்கும் விடுதியிலா?"


"என்ன சொல்லுகிறாய்?...இவள் போன்ற பெண் எங்காவது இருக்கிறாளா? எங்கே?"


"நீ அவளைப் பார்க்காமல் இந்தப் படத்தை என்பதை என்னால் நம்ப முடியாது. அதோ அவளது கன்னத்திலுள்ள நீல மச்சத்தைக் கூடக் கணக்காக எழுதியிருக்கிறாயே?"
சிவகுமார் பதிலளித்தான்:


"கண்னின் புருவ வளைவைச் செப்பனிடும்போது ஒரு துளி மை தவறி வீழ்ந்தது. அதைத்தான் மச்சமாக அமைத்தேன் நான்....அவள் என் கற்பனைச் சுந்தரிதான். என்ன சொல்லியும் நம்ப மறுக்கிறாயே!"


"சரி அப்படியானால் அக்கண்கள் எவ்விதம் வந்தன?..உனக்கு ஞாபகமிருக்கிறதா? இரண்டு மாதங்களின் முன் நான் ஏழாம் குறுக்குத் தெருவிலிருக்கும் ஒரு இடத்துக்கு உன்னை என்னுடன் வரும்படி அழைத்தேன்..... நீ பெரிய சாமியார் வேஷம் போட்டுக் கொண்டு வர மறுத்துவிட்டாய்......"


"ஆம் நினைவில்லாமல் என்ன? நினைவிருக்கிறது"


"ஆனால் நான் போய் வந்தேன். வந்தபோது உன்னிடம் அற்புதமான பேரழகி ஒருவள் அந்த விபசார விடுதிக்குப் புதிதாக வந்திருக்கிறாள் என்று கூறி அவளை அதிகநேரம் வர்ணித்துக் கொண்டேயிருந்தேனல்லவா?..."


"ஆம்"


"அவள் கண்களைப்பற்றி என்ன சொன்னேன்? அக்கண்கள் உனது கண்களைப் போலவே விளங்கின என்று வர்ணித்தேன்.அவ்விதம் சொன்னேனா இல்லையா?"


"ஆம்....சொன்னதுண்டு" என்று வேண்டாய் வெறுப்பாய்க் கூறிய கலைஞனை பாலச்சந்திரன் இடைமறிப்பது போன்று "பார் கண்ணாடியில்! உன் கண்களுக்கும் இக்கண்களுக்கும் ஏதாவது வித்தியாசமுண்டா?" என்று கூறினான் வெற்றித் தோற்றத்துடன்.

"பாலச்சந்திரன் நீ சொல்வது ஆச்சரியமாயிருக்கிறது என் கண்களைப் பார்த்துத்தான், அந்தக் கண்களைப் நான் வரைந்தேன். ஆனால் நீ நம்ப மாட்டாய்! ஏனெனில் உனக்கு அருமையான சாட்சிகள் இருப்பது போலத் தெரிகிறது. நான் சத்தியம் செய்கிறேன். இப்பெண்ணை நான் கற்பனை உலகத்தில்தான் கண்டு பிடித்தேன்...இருந்த போதிலும் இலட்சிய அழகுபடைத்த மோகினி போன்றவள் விபசார வீட்டில் இருக்கிறாள் என்றால் அதை நான் நம்பமாட்டேன்."
"இது விந்தையாகவல்லவா இருக்கிறது! என்ன அதிசய ஒற்றுமை! ஆனால் நீ விரும்பும் பேரழகு நீ வெறுக்கும் விபசார விடுதியில் வசிக்கும் ஏழையிடம்தான் காணப்படுகிறது! வேண்டுமானால் நாளை வா - நான் காட்டுகிந்றேன்"


சிவகுமாருக்கு எல்லாம் பெரிய விந்தையாக இருந்தது. முதலில் அவன் விபசார விடுதிக்குப் போகத்தயங்கினான். ஆனால் முடிவில் "இது பரிசோதனை போகலாம்" என்ற முடிவுக்கு வந்தான் அவன்.


ஏழாம் குறுக்குத் தெருவில் இருந்த அந்த விடுதி அந்த நகரின் "பாதாள லோகத்துக்"கே ஒரு அரிய அணிகலனாக இலங்கி வந்தது. நாகரிகமான அந்தஸ்து படைத்த கனவான்கள் கூசாமல் போககூடியதாக இருந்த ரகசிய இன்பவீடு அது ஒன்றுதான் என்பதே பாலச்சந்தர் அபிப்பிராயம்.


எந்த நகரிலும் தடுக்கப்பட்ட பொருட்கள் கஞ்சா, அபின், குடிவகை, ரேஸ் பந்தயம் என்பன பொலிஸ் காவல் அமைந்த வெளியிலுள்ள உலகில் கிடைக்காவிட்டால் நகரின் மேல் மூடிக்குக் கீழே இருக்கும் இன்னோர் உலகிலே தாராளமாகக் கிடைத்தன. இந்த உலகை நகரின் 'பாதாள லோகம்' என்று கூறுவது பொருத்தமானதுதானே?


அந்த இல்லம் பார்ப்பதற்கு ஒரு விபசார விடுதிபோலத் தோன்றவில்லை. அக்கம் பக்கத்திலுள்ள எவருமே அதனை அவ்விதம் சந்தேகிக்க முடியாது. பாதாளலோகத் தரகர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்குமே அது தெரியும்! மிகுந்த திறமையோடு ஜாக்கிரதையாகவும் மிக ரக்சியமாகவும் தொழில் நடைபெற்றது.


பாலச்சந்தரும், சிவகுமாரும் அங்கு சென்றனர்.பீடிகையான பண விஷயங்கள் பைசாலானதும் சிவகுமார் அவனுக்குக் காட்டப்பட்ட ஒரு அறையினுள் நுழைந்தான். அவன் கண்களை அவனால் நம்ப முடியவில்லை!


அந்த அழகி - அதே கன்னத்து மச்சம். அதே கருநெடும்நீலோற்பல நேத்திரங்கள் - கூந்தல் அலை அலையாகப் புரண்டு கிடக்க ஒரு மெத்தையிலே ஒரு பட்டுப் பாவாடையுடன், ஒரு ஜாக்கட்டு பட்டுமணிந்து அலங்கோலமான நிலையில் காணப்பட்டாள். அவன் கற்பனைச் சுந்தரி- அழகு தெய்வம் கண்ணெதிரே உயிர்ப்பெற்றுக் காட்சியளித்தாள்!
அவன் திக்பிரேமை பிடித்தவன் போல் ஆகி விட்டான்! பேச்சுக்கோ செயலுக்கோ எழுச்சி ஏற்படவில்லை.


அந்த மோகினி அவனைப் பார்த்து முல்லைச் சிரிப்புதிர்த்தாள். வாருங்கள் என்று அழைப்பதுபோல் இருந்தது. அவளது மயக்கும் பார்வை - அதில் கள்ளின் போதையும் கவிதையின் போதையும் காணப்பட்டன.


ஆனால் அவன் நகரவில்லை. அழகின் தெய்வம் விபசாரியா என்ற சிந்தனை அவனைக் கலக்கியது.


ஆனால் அவளோ அவனை ஆசையுடன் நோக்கினாள். இதுவரை - இது போன்ற அழகன் அவளை நாடி வந்தது கிடையாது. அழகுமட்டும் போதாது. ஆண்மையும் வேண்டும். அப்போதுதான் வாழ்க்கை இன்பமாகும் என்பதை அவள் அறியாதவளல்ல. அவன் இத்துறையில் நல்ல அனுபவசாலியாக இருந்தபோதிலும் ஒருகணம் அவனது பேரழகு அவளை அடிமை கொண்டது.


சிவகுமார் இவ்வாறு வெகுநேரம் நிற்கவில்லை. அங்கிருந்து வெளியேறுவது நல்லதுபோல் தோன்றியது. அவனுக்கு அவன் கனவுகள் சிதைந்தன. மெல்ல வெளியேறினான்.
"இது என்ன விசித்திரப்பிரகிருதி!" என்றூ கூறிக்கொண்டே பெருமூச்சு விட்டாள் அந்தப் பாதாளமோகினி. ஆனல், சீக்கிரமே அறைக்கதவு திறந்து மூடியது. பாலச்சந்தர் சர்வ சகஜமாக உள்ளே நுழைந்தான்.

இரவு 11 மணியளவில் பாலச்சந்தர் அன்று சிவகுமாரைச் சந்திப்பதற்கு அவன் அறைக்குச் சென்றான். சிவகுமார் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தான். அவன் எழுதிய அற்புத ஓவியமோ கிழிந்து கிடந்தது. அழகின் தெய்வீகத்தில் அவன் கொண்ட் நம்பிக்கை சிந்தைது போய்விட்டது என்பதை அது காட்டியது.


சிவகுமார் இப்பொழுது யதார்த்த உலகிற்கு வந்தான். அங்கே அழகிற்கும் அலங்கோலத்திற்கும் அவனுக்கு வித்தியாசம் தெரியவில்லை. அவன் குழம்பிப் போய்விட்டான்! உலகை அவன் இதுவரை நோக்கிய நோக்கு கோணல் நோக்குப் போல அவனுக்குத் தோன்றியது.
அவன் அயர்ந்து தூங்கிப்போயிருந்தான். அவனைக் குழப்ப வேண்டாமென பாலச்சந்தர் வெளியேறிவிட்டான்.


ஒரு வாரங்கழித்து சிவகுமாரைக் கண்ட அவனது நண்பர்கள் அவனை அடையாளங் கண்டுகொள்ள முடியவில்லை. காரணம் அவன் சிலை உடை எல்லாமே மாறிப்போயிருந்தன - ஏன் அவன் பெயர்கூட மாறிப்போய்விட்டது. ராமலிங்கம் என்றே அவன் தன்னை வர்ணித்துக் கொண்டான். மொத்தத்தில் அவன் இப்போது கலை மணம் வீசும் கற்பனத் தேவ உலகில் வசிக்கவில்லை. பாதாளத்திற்கு போய் வந்ததின் பயனாக அவன் இப்போது பூவுலக வாசியாக மாறிவிட்டான்!


[நன்றி: சுதந்திரன் 01.04.1951

உதவி வந்தது!

- அ.ந.கந்தசாமி -


அழகான வீடுகளில் அலங்கார வாழ்வு நடத்திய பெரிய மனிதர்களுக்கு முடிவு காலம் வந்து விட்டது. தமது வலிவிழந்த முதுகின்மேல் ஏறியுட்கார்ந்து ஆதிக்கஞ் செலுத்திவந்த சோம்பேறிக் கும்பலுக்கு 'அரோகரா' கூறி முதுகை நிமிர்த்தி எழுந்துவிட்டார்கள், ஏழை மக்கள். எங்கும் புரட்சியின் பெருந்தீ கொழுந்து விட்டெரிந்தது.அதிலே பழய நிலச்சுவான்தார்களின் பவிசும்,பட்டயமும் பஸ்மீகரித்தன. ஆனால் அந்த அக்கினியில் இருந்து நவஜீவனம் என்ற அற்புதக் குழந்தை ஜனித்தது. அந்தக் குழந்தையின் மோஹனத்திலே மூழ்கி மயங்கி ஆனந்தித்தனர் மக்கள். ஆனால் இவ் அக்கினி குமாரனைக் கண்டு கொள்ளிக் கண் பாய்ச்சிய கொடியோர்களும் இல்லாமல் இல்லை. அவர்கள் அதன் கழுத்தை நெரித்துக் கொல்லுவதற்குத் தருணம் பார்த்துக் காத்துக் கிடந்தனர்.......


இந்த நிலைமையில்தான் லேயாங் நகரம் அப்போது விளங்கியது. சீனாவின் ஒரு கோடியிலே புதுவாழ்வென்னும் சிசு அப்போதுதான் அங்கு ஜனித்திருந்தது. ஆனால் மணிபோன்ற தன் சிறு கண்களை இன்னும் அச்சிசு திறக்கவில்லை. தன் பூங்கால்களை உதைத்து, தளிர்க்கரங்களை அசைத்து விளையாட ஆரம்பிக்கவில்லை குழந்தை.


இருந்தபோதிலும் குழந்தை பிறந்ததும் மகிழாத தாய் உண்டோ? நகரத்தாய் ஆனந்தநகரா முழக்கிக் கொண்டிருந்தாள். அவள் நரம்பொவ்வொன்றிலும், இசைகதித்து விம்மும் வீணையின் நரம்புபோல, சந்தோஷம் துலங்கித் ததும்பிக்கொண்டிருந்தது. அவளை ஆடைபோல் சுற்றியிருந்த நகரச் சுவரிலே இந் நவீன குழந்தையின் ஜனனத்தை உணர்த்தச் செங்கொடி பறந்து கொண்டிருந்தது.


காலைக் கதிரவனின் பொன்னொளி அதன் மீது பட்டுச் சிதறுகையில் அச்செங்கொடி அக்கினிப் பிளம்புபோல அசைந்தாடிக் கொண்டிருந்தது. ஆம், அது அக்கினிப் பிளம்புதான். துஷ்ட்டர்களைக் கொடுங்கோலர்களைச் சுட்டெரிக்கும் அக்கினித் தீ! முன்னேற்றத்தை, இன்பத்தை, புது வாழ்வை முன்னின்று வரவேற்கும் ஆராத்தியின் செஞ்சுடர் அது!


நகர மக்களுக்கு செங்கொடி நம்பிக்கையை, நல்வாழ்வின் நறுமணத்தை உணர்த்தியது. கமிண்டாங் படைகளுக்கும், நிலச் சுவான்தார்களின் படைகளுக்கும் முன்னே தம் படை எதிர்த்து நிற்கவல்லதா என்ற அச்சம் அவர்களை நடுங்க வைந்தது. ஆனால் அவர்களுக்கொன்று மட்டும் தெரியும். தாம் புரியப் போகும் போர் ஒரு சிலரின் நன்மைக்காக் நடத்தப் போகும் போரல்லவே? தங்கள் ஒவ்வொருவரது நன்மைக்காகவும் நடக்கும் போராட்டம்! எனவே ஷியாங் கே ஷேக்கின் கூலிப்பட்டாளம் போல் தாம் விளங்க மாட்டார்கள். அசகாய செயல்களெல்லாம் செய்வதற்கு வேண்டிய ஆவேச உணர்ச்சி அப்படியே பொங்கிப் பரிமளிப்பது திண்ணம். எனவே தோல்வியுற மாட்டார்கள் என்ற என்ணம் பசுமரத்தில் ஆணிபோல அவர்கள் உள்ளத்தில் தைத்திருந்தது.


தாம் கூட்டாக நடத்தும் போர் எப்படிப்பட்டதாயிருக்கும்? புதிதாகப் பெற்றெடுத்த புது வாழ்வுக் குழந்தை. பல மாதங்களல்ல; ஆண்டுகளாகப் பாடுபட்டு தாங்குதற்கரிய வலியோடு பெற்றெடுத்த அருமைச் சிசு. ஆகவே தாம் நடத்தும் போர் நகரத்தாய் தன் சிசுவைக் காப்பாற்றிக்கொள்ள நடத்தும் போராக இருக்கும். கொடிய கழுகின் வாயிலிருந்து தன் சின்னஞ்சிறு குஞ்சுகளைக் காப்பாற்ற கோபத்துடன் முன்னிற்கும், தாய்க் கோழியின் உக்ரோஷம் அப்போராட்டத்திலே பொங்கி நிற்கும். ஆனால் அதுமட்டும் போதுமா?


கோழி எவ்வளவு சீறினாலும் கொத்தும் கழுகு விட்டுச் செல்லுமா? கை கொடுத்துதவ 'செஞ்சேனை வரும். செஞ்சேனை வரும்' என்று ராப்பகலாய் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர் மக்கள். சூ-டே என்ற மகா வீரன் தலைமையிலே ஏழை மக்களின் பக்கத்திலே நின்று கமிண்டாங் கொள்ளையரை எதிர்த்து நின்ற செஞ்சேனை பற்றி, அதன் ஒப்பற்ற திறமைகளைப்பற்றிப் பலவிதமான கதைகளை அவர்கள் கேட்டிருந்தார்கள். ஆகவே அது எப்போது வரும், விடுதலைப் பட்டாளம் வருவதெப்போ என்று அங்கலாய்த்துக் கொண்டிருந்தனர் மக்கள். அதன் வரவுக்கு மங்கள கீதம் பாடுவதற்கு தயாராகிக்கொண்டிருந்தனர் மாந்தர். கடைசியில் ஒரு நாள்........

நகரத்தைக் காவல்காத்த காவலாளர்கள் தூரத்திலே காற்றில் அலையும் செங்கொடிகளோடு புழுதி கிளப்பிக்கொண்டு வருகின்ற செம்படையைக் கண்டார்கள். நகர மக்கள் உள்ளம் அவர்களைக் கூவிக் கூவி அழைத்தது. மதிலில் பறந்த செங்கொடியோ 'வா வா' என்று காற்றில் துடி துடித்து வரவேற்றது. செஞ்சேனையின் வரவு! அச்சேதிக்கு சீனப் பாலவைனங்களில் துள்ளிப் பொங்கும் சூறாவழிக்கில்லாத வேஹம் உண்டாகிவிட்டது. நாட்டின் மூலை முடுக்கெல்லாம் ஆனந்த வெள்ளம் அணையுடைத்துப் பாய்ந்தது. செஞ்சேனை! செஞ்சேனை! விடுதலைப் பட்டாளம்! தொழிலாள விவசாயிகளின் பட்டாளம்! ஏழை மக்களின் உயர்வையே தன் லட்சியமாகக் கொண்ட மண்ணாசை அற்ற மகா பட்டாளம்! இதுவே யாவர் வாயிலும் விளங்கிய சொற்கள். இந்த அபூர்வபடையைக் கண்கொண்டு பார்க்கும் பாக்கியத்தை அடைய நகரின் கோணங்களில் எல்லாம் உறைந்து கிடந்த பொதுமக்கள், வயோதிபர் பெண்கள், சிறுவர் எல்லோரும் குவிந்து நின்றனர் நகரவாயிலிலே.


சூ-டே கம்பீர நடைபோட்டு முன்னே வர நகரத்துள் நுழைய ஆரம்பித்தது செம்படை. வானமதிரக் கோஷங்கள், சந்தோஷ ஆர்ப்பரிப்பு. சூ-டேயை முன்னின்று வரவேற்றாள் ஒரு பெண். சீனாவில் மலர்ந்திருந்த புதிய வாழ்வுக்குச் சான்று கூறுவது, போல் இருந்தது ஒரு பெண் முன்னின்று வரவேற்பது. அவள் பெயர் காங். சீனப்பெண்களின் பழய பழக்கங்கள் அவளிடம் இல்லை. நீண்டு தொங்கும் கூந்தலுக்குப் பதில் கத்தரிக்கப்பட்ட தலைமயிர். இரும்புச் சப்பாத்தணிவதால் குறுகிச் சிறுத்திருக்கும் பாதங்களுக்குப் பதில் பூரண வளர்ச்சியுற்ற இயற்கையான பாதங்கள். நயனம் கோணிய, நாணப்பார்வைக்குப் பதில் நேரிய வீரப்பார்வை.


காங்கும் சூடேயும் சந்தித்தனர். உடல்கள் மட்டுமல்ல கணத்திலே இரண்டுயிர்களும் சந்தித்துச் சம்பாஷித்து ஒன்றை ஒன்று புரிந்து கொண்டன. பிரிய முடியாத ஓர் பிணைப்பிலே ஒன்றிக் கொண்டன அவர்களது அந்தரங்க ஆசைகள். சூடேயில் ஆண் குலத்தின் ஈரமும் அவ் ஈரத்திற் பிறந்த வீரமும் உருவெடுத்து விளங்கின. காங்கிலோ பெண்ணின் பெருமையாவுமே உறைந்து கிடந்தது. ஏழைகள் சார்பிலே - ஒடுக்கப்பட்டார் சார்பிலே பேசிய வீரம் அவள் உள்ளத்திலே ஊற்றெடுத்துப் பிரவகித்தது.


* * *
லெயாங் நகரம் பாதுகாப்பில் நெடுநாள் இருக்கவில்லை. மக்களின் பந்தோபஸ்து வாழ்வு நீடிக்கவில்லை. கமிண்டாங் காடையர்களின் அட்டஹாசம் ஆரம்பித்தது. குஞ்சுப்பறவைகளைக் கொத்தத் திரியும் கழுகு போலவே தலைக்கு மேலே வட்டமிட்டுக் கொண்டிருந்தது ஷியாங்கின் ராணுவ பலம். மெல்லமெல்லமாகத் தாக்குதல்களும் ஆரம்பித்தன. பசி, பட்டினி, சாவு, பயம் எல்லாம் வேகத்துடன் நகர மாந்தரைப் பற்றிப் படர்ந்து கவ்வின. ஆனால் உரிமைப் போருக்கெழுந்த அவர்கள் அகராதியில் 'சரணாகதி' என்ற வார்த்தை மட்டும் இல்லை. கடைசிவரையில் போரிடக் கங்கணங் கட்டி விட்டார்கள். செஞ்சேனையோ பக்கத்திலே கைகொடுத்து உதவிக் கொண்டிருந்தது.


ஆனால் கமிண்டாங் படையின் அடிகள் பலமாக விழத்தலைப்பட்டன. அதற்கு அன்னிய ஏகாதிபத்தியங்களின் மர்மக் கைகள் ஆயுதபலத்தை அளித்தன. தோல்விக்கு மேல் தோல்வி. செம்படையினர் வீழ்ச்சியின் ஓரத்திலே நிற்கிறார்கள். எத்தனையோ வீரர்கள் போராடி வீழ்ந்து கொண்டிருக்கிறார்கள். போதாதற்கு நகருக்கு உணவு வரும் இடங்கள் எல்லாம் தடை செய்யப்பட்டு விட்டன.


இங்ஙனம் அழிவு பயமுறுத்தப் பயமுறுத்த ஆக்ரோஷம் பொங்கியதல்லாமல் அச்சம் உண்டாகவில்லை. போராவது போர்....! ரத்த வெள்ளம் தண்ணீர்ப்பிரவாஹம் போல் பாய்ந்தது. வெற்றியின் தூரக்காட்சி வெளிப்பட வெளிப்பட கமிண்டாங் படைகளுக்கு கரை கடந்த வெறியும் உத்ஸாகமும். அதன் முன்னே செம்படை சிதறிச் சின்னாபின்னமாகி ஒழிந்து அழிந்து மரணத்தின் வாயிலிலே வீழ்ந்து கொண்டிருந்தது.......


ஆம். இனி நம்பிக்கை இல்லை. லெயாங் வெறுக்கப்பட்ட முதலாளிகளுக்கும் அன்னிய ஏகாதிபத்தியங்களுக்கும் கொண்டாட்ட ஸ்தலமாகப் போகிறது.


சீனத்தின் சின்னஞ்சிறு முதலாளிகளும், சீன் நகரங்களில் வியாபாரம் எல்லாவற்றையும் அழுங்குப் பிடியாய் பிடித்துக் கொண்டிருந்த அமெரிக்கப் பணமூட்டைகளும், ஜப்பானியகெய்ஷாப் பெண்களோடு ஆடிப்பாடிக் குடித்துக் குதூகலித்து வாழப்போகும் பாவபூமி!- மறு புறமோ ஏழைகள் எழும்பை எருவாக்கிப் பட்டினிப் பயிர் வளர்க்கப் போகிறார்கள்!


ஆனால் என்ன செய்வது? லெயாங்கைக் காப்பாற்றினோம் என்று சாக முடியவில்லை. ஒரு உத்தமக் கொள்கைக்கு உயிர் விட்டோம் என்றாவது சாவோம் என்று செம்படை போராடுகிறது.


கமிண்டாங் தளகர்த்தர்கள் வெற்றி மதுவைக் குடித்து வெறி கொண்டு விட்டார்கள். எக்காளமும், ஏளனமும் கலந்த சிரிப்பு அவர்களின் முகத்திலே! ஆம், அவர்களின் பின்னே அமெரிக்க ஏகாதிபத்தியமும் அல்லவா போராடுகிறது? சமாளிக்க முடியவில்லை. வீழ்ந்து கொண்டிருக்கிறது செஞ்சேனை!


நம்பிக்கை இழந்து கொண்டிருக்கும் அந்நேரத்திலே, யுத்தத்தின் பேரொலியின் ஊடே வாத்திய சங்கீதம் ஒன்று பொங்கி ஒலித்தது. ஆஹா,! இது எங்கிருந்து வருகிறது? செஞ்சீனாவின் போர்க் கீதத்தை அழகுற இசைக்கும் வாத்திய சங்கீதம்! அதைத் தொடர்ந்து பட்டாள அசைவின் பேரொலியொன்று. ஆயுதந் தாங்கிய லொறிகளின் ஆர்ப்பாட்டச் சபதம்.
செம்படையினர் சப்தத்தின் திசையை நோக்கினர். கமிண்டாங்க் படையினர் கண்களும் திரும்பின.


தூரத்து வான வளையத்தண்டை பிரமாண்டமான மக்கள் கூட்டம் அசைவது மங்கலாய்த் தெரிந்தது.....


ஆம், இதைப் போன்ர பெரிய சேனையைக் கண்டதில்லை. சப்தங்களின் கலவையை நோக்கினால் ஆயுதத்திலும் இதைப் போன்ற சைனியம் ஒன்று சீனத்தில் இதுவரை இல்லை.....
மெல்ல மெல்லக் காட்சி தெளிவடைந்தது. அரிவாள் அம்மட்டி குறுக்கிட்ட செங்கொடுகள் கடல் அலைகள் போல அந்த ஜனக்கடல் மீது தெரிந்தது.


ஆம்! செம்படை! செம்படை! எங்கிருந்து வந்தது பிரமாண்டமான இச்செம்படை! கமிண்டாங் சேனைகள் கலங்கின. அவர்கள் முகத்திலே பயத்தின் முத்திரை. சிந்தனை செய்ய நேரம் இல்லை. அவர்களின் அழிவு நீச்சயமாகி விட்டது! வேறென்ன?

கண்ணை மின்ன விழிக்கும் நேரத்தில் ஓட்டம் பிடித்தனர். குதிகால்கள் பிட்டத்திலே தட்டும்படியான பெரும் ஓட்டம். ஆயுத லொறிகள் எல்லாம் மணிக்கு அறுபது மைல் வேகத்தில் வெறியோட்டம் தொடங்கின. ஓட்டம்!..ஓட்டம்!...ஓட்டம்!...

கமிண்டாங் சேனை ஓடி விட்டது. ஒரு கண்டம் தப்பித்தது. செஞ்சேனை தங்களுக்கு உதவி கொண்டுவந்த புதுமைப் படையினரை எதிர்கொண்டு வாழ்த்த காத்த நின்றது. "எங்கிருந்து வந்தது இத்தகைய சேனை!" என்று அவர்களால் யூகிக்க முடியவில்லை. 'கமிண்டாங்க் சேனைதான் ஷியாங் கை ஷேக்கை விட்டுப் பிரிந்து எம்முடன் சேர வருகிறார்களோ" என்றெண்ணினர் சிலர். "இல்லை என்றால் இதுவென்ன?" என்று தயங்கினர். வேறெதுவும் அவர்களால் சிந்திக்க முடியவில்லை.


* * *
இரு சேனைகளும் எதிர் ஊன்றின. செஞ்சேனையை நோக்கி வந்து கொண்டிருந்தது இப்புதிய செஞ்சேனை.


இரு செஞ்சேனைகளும் எழுப்பும் வெற்றிக் கீதம் ஒன்றுடன் ஒன்று சங்கமாகிவிட்டன. வாத்திய சங்கீதம் பேர் இரைச்சலாக முழங்கிற்று.

திடீர் நிசப்தம். சப்தங்கள் ஓய்ந்தன. இரு சேனைகளும் அசையாது நின்றன. செங்கொடிகள் மட்டும்தான் அசைந்து கொண்டிருந்தன. ஆனால் இது என்ன ஆச்சரியம்! புதிய சேனை சேனை போலவே தெரியவில்லையே! சாதாரண ஜனக்கள், பெண்கள்,வயோதிபர், சிறுவர்கள் எல்லோரும் கூடிய வெறும் ஜனத்திரளாய் அல்லவா இருக்கிறது!

செம்படையினர் திகைத்தனர். புதிய செம்படையில் இருந்து ஒருவன் முன்னே வந்தான்.
"செஞ்சேனை தோற்றுக் கொண்டிருக்கும் சேதி எங்கள் காதில் ஈட்டிபோல் பாய்ந்தது. கிராமம் முழுவதையும், அயல் கிராமங்களையும் ஒன்று திரட்டிக் கூட்டம் போட்டோம். அப்பொழுது ஒரு யோசனை. எல்லாருமாகச் சேர்ந்து செங்கொடிகளோடும் சேனையின் சங்கீததோடும், ஆயுத லொறிகளின் சப்தத்தை உருவாக்க தகரங்களை உருட்டிக் கொண்டும் செல்வோம் என்ற யோசனை. பலித்து விட்டது. பிரமாண்டமான சேனை என்று எண்ணி விட்டனர் கமிண்டங் கொள்ளையர்கள். வீரர்களின் ஓட்டம் வெகு வேகமாயிருந்தது. அதை மெச்ச வேண்டும்! நம்து படையையும் நகரத்தையும் நாம் காப்பாற்றி விட்டோம்" என்ற வார்த்தைகள் அவன் வாயில் இருந்து உணர்ச்சியோடு பொங்கின. அவ்வளவுதான். செம்படையினர் கண்களில் நீர் துளிர்த்தது. ஒவ்வொருவரும் தம் கைக்குட்டையைக் கண்ணருகில் கொண்டு சென்றனர். மக்களின் இத்தகைய ஒத்துழைப்பு இருக்கும் போது எம்மை வெல்ல யாரால் முடியும் என்ற கம்பீரமும், மிடுக்கும் அவர்கள் உருவங்களிலே பாய்ந்தது.


எதிர்காலம் என்றுமில்லாத வெற்றிகளை அவர்களுக்கு வைத்திருப்பதனை உணர்ந்து கொண்டார்கள் வீரர்கள்!
* * *
சீக்கிரமே சந்தோஷ ஆரவாரம் நகரத்தை அப்படியே அதிர வைத்துக் களேபரப்படுத்தியது. நகரச் சுவரிலே செங்கொடி புதுயுகக் காலையின் செவ்வானைப் போல, அலை வீசிக் கொண்டிருந்தது. பிடுங்கப் படாது அதனைக் காப்பாறி விட்டதற்காக மக்கள் உள்ளத்திலோ ஆனந்த வெள்ளம் அலை அடித்தது. செங்கொடிக்கு உண்டோ அழிவு என்று வாழ்த்தினர் அவர்கள்!

{பாரதி இதழிலிருந்து. கே.கணேஷ் , ராமநாதனைக் கூட்டாசிரியர்களாகக் கொண்டு வெளிவந்த ஈழத்துச் சிற்றிதழ் பாரதி)

வழிகாட்டி!

- அ.ந.கந்தசாமி -

சமுதாயத்தை மூடி இருக்கும் பகட்டை நீக்கி, உண்மை நிலைகளை அம்பலப்படுத்தும் ஒரு புதுமை எழுத்தாளன் போல, இரவின் இருள் திரையை நீக்கி உலகின் சோக நாடகத்தை வெளிக்காட்ட ஆரம்பித்தான் உதயசூரியன். அவன் ஒளியில் முதலில் உயர் மரங்களின் பொன் கொம்புகள் அசைந்தாடின. மாரிக் காலம். ஆனால் வசந்தத்தின் செந்தளிர்கள் பெற்றவை போல் மரங்களெல்லாம் அவன் மந்திர ஸ்பர்ஸத்தில் மாயஞ் செய்தன. இரவு பெரு மழையிலே குளித்திருந்த உலகம் ஒரு புதுமை எழில் கொண்டு ஸ்நானம் முடித்து வந்த ஒரு கன்னிப் பெண்ணின் அழகு கொண்டு விளங்கிற்று.ஆனால் போலிக் கலைஞர் போல உலகை ஒரு முகப் பார்வையில் சித்தரிப்பவனல்ல சூரியன். நாட்டைச் சூழ்ந்துள்ள சகதி, சேறு, வறுமை, துன்பம் எல்லாவற்றையும் எடுத்துக் காட்ட ஆரம்பித்தான். அந்தக் குட்டிப் பட்டணத்தின் செல்வ மாளிகைகளின் பக்கத்திலே ஒடிந்து கிடக்கும் குடிசைகளையும், குமைந்து கிடக்கும் ஏழைகளையும் தன் ஒளிக்கரத்தினால் சுட்டிக் காட்டினான். இரவு மழையினாலும் புயலினாலும் சின்னா பின்னப் படுத்தப் பட்டு சிதறிக் கிடந்த ஓலைக் கூரைகளையும், , அவற்றைக் கொண்ட வீடுகளின் சில்லிட்ட ஈரத்தன்மையயும் அவன் கதிர்கள் கெளவிப் பிடித்தன.

அப்படிப்பட்ட ஒரு ஈரத்தெருத் திண்ணையில் தான் இன்றும் நித்திரைக் கூட்டில் அடைபட்டுக் கிடந்தான் அந்தக் கபோதி. இரவு முழுவதும் கூதிரின் வெட வெடக்கும் சில்லிட்ட குளிர். வருண தேவனின் வெறியாட்டுக் கடுமையாயிருந்தது. இடியின் பயங்கர மத்தளமும், அதற்கிசைய மின்னல் மோஹினியரின் நடனலாகவமும், வான் மேடைக்குக் கோர அழகொன்றை ஊட்டின.

திண்ணையில் கொட்டும் மழையின் சுக விசாரணை. விடியுமட்டும் 'ஏகாதேசி'. மழை ஓய்ந்த பிறகு தான் அந்தகனுக்கு நித்திரை வந்தது. விடிவெள்ளி கிழக்கிலே விழித்தெழுந்து விட்டது. கோழிகள் கூவ ஆரம்பித்து விட்டன, அவன் துயில் போகும்போது. அயர்ந்து ஆறுதலான நித்திரையில் ஆழ்ந்து விட்டான். அவன்.
* * *
காலையில் வீட்டுக்காரர் விஸ்வநாதர் திறந்ததும் கண்ணெதிர்ப்பட்ட காட்சி இது தான். கூனிக் குறுகிப் படுத்திருக்கும் வற்றல் கபோதி. அருகே அவனைப் போலவே வளைந்து மெலிந்த தண்டு. அவனது பிரியாத பிரிய நண்பனான ஒரு கோல்- அவனுக்கு வழிகாட்டி நடத்தும் அனபன் - ஆம், சொல்லப் போனால் கண்ணற்ற அவனுக்குக் கண்ணாய் விளங்கிய கழி - கிடந்தது. தலைப் புறத்தில் ஒரு தகரம், சில மூட்டை, முடிச்சுகள்- இவைதான் அவனது சர்வ சொத்தும்.


இன்றுமட்டுமல்ல அவர் கண்ணெதிரில் அவன் காலையில் பட்டது. எத்த்னையோ தடவை அவன் முகத்தில் விழித்திருக்கிறார் அவர். ஆனால் அவன் அப்பொழுதெல்லாம் கைக்கெட்டாத தூரத்தில் வீட்டின் எதிரேயிருந்த தேநீர்க்கடை அண்டை காட்சி அளிப்பான். ஆனால் இன்று தன் வீட்டுத் திண்ணைய்யில்! பக்கத்தில்!

எரிமலை வெடித்தது போன்ற ரெளத்திராகரமான ஆத்திரம் அவருக்கு. "காலை சகுனமாகப் பள்ளி கொள்ளும் கபோதி!" அவரால் தாங்க முடியவில்லை. எள்ளும் கொள்ளும் வெடித்தது அவர் முகத்தில். தன் குடுமியைத் தட்டி முடிந்து கொண்டு வாய்க்கு வந்த செந்தமிழில் திட்ட ஆரம்பித்தார் அவர். கையில் அகப்பட்ட குச்சி ஒன்றை அவன் மீது விட்டெறிந்தார் கோபத்தில்.
இயற்கையில் விஸ்வநாதர் சாந்த சொரூபி அல்லாவிட்டாலும் குரூர சுபாவம் படைத்தரென்று கூற முடியாது. இன்றைக்கு அவர் உள்ளம் ஆத்திரத்தில் ஏற்றுண்ணும் ஒரு தெப்பம் போல் இருந்தது. காரணம் அவர் வயிற்றுப் போராட்டத்தோடொட்டிய ஒரு சேதி.
அவர் ஒரு கல்யாண தரகர். சென்ற இரு மாத காலமாக அவர் ஊரில் எந்த ஜதையையும் சேர்த்து வாழ்க்கைப் படகில் ஏற்றவில்லை. மன்மதன் தன் கரும்புவில்லில் புஷ்ப பாணங்களைத் தொடுத்து ஜதை சேர்ப்பதாக கஞ்சா மயக்கத்தில் கவிஞர்கள் கூறுவது வழக்கம். அதில் சரி பிழை தெரியாதவருக்கும் ஒன்று மட்டும் தெரியும். விஸ்வநாதர் போன்ற தரகர்கள் வானத்தை வில்லாக வளைக்காது நடத்தப்படும் கல்யான வாணிபம் அபூர்வம்.
அவரது கண்ணியில் ஒரு மாத காலமாக ஒருவரும் சிக்கவில்லை. இரண்டு தினங்களின் முன்பு தான். ஒரு 'பெரிய' இடத்தில் மோப்பம் பிடித்திருந்தார். இது விஷயத்தில் விஸ்வநாதர் கை தேர்ந்த வேட்டை நாய் என்று கூற வேண்டும். அது சம்பந்தமாகத் தன் கண்ணியை விரித்து ஏதாவது அகப்படுத்துவதற்கு ஆயத்தமாக சில முக்கியஸ்தர்களைக் காண்பதெற்கென்றே காலையில் பஞ்சாங்கம் பார்த்து ராகு காலத்தின் முன் கிழம்பியிருந்தார் அவர்.

அந்த வேளையில் குருடன் சகுனமாகக் காட்சி அளித்தால்...?
வீசி எறிந்த குச்சி உடம்பில் பட்டதும் அவன் விழித்தான். விழிகளல்ல. அவைதான் நிரந்தரமாக மூடி விட்டனவே! அவன் உணர்வுகள், கோபதாப, பசி துக்கங்கள் விழித்தன. காதூடே வைரம் போல் ஊடுருவி அறுத்துச் சென்றன கர்ணகடூர வசை மொழிகள்! நீண்ட நேர நித்திரை கொண்டு விட்டதை உணர்ந்து அவசர அவசரமாகத் தடுமாறி எழுந்தான். அவன்.
விஸ்வநாதர் அவ்வளவுடன் நிற்கவில்லை...'டாங்க்' என்ற சப்தம்...அருகிலிருந்த கழி ஆகாயத்தில் பறந்து சென்று வீட்டுத் தகரக் கூரைமேல் மோதி நாதம் எழுப்பிற்று. சப்தத்தின் உண்மை அர்த்தம் புரியவில்லை குருடனுக்கு. எழுந்து நடப்பதற்காகக் கழியை அங்குமிங்கும் தடவித் தேடினான் அவன்.

வேகத்தோடு நுரை கக்கி வீசி வந்த ஆத்திர அலை மோதி வெடித்து விட்டதால் விஸ்வநாதருக்குத் திருப்தி. சீறிக் கொண்டே போய் விட்டார் அவர்.

* * *
முகந்தெறியாத காரிருளில் வெளியே செல்வதற்கு அறையின் வாயிலைத் தேடி நடக்கும் கைகள் போல, தடுமாறியும் அவசரமாகவும், அலைந்தன கபோதியின் கரங்கள். ஆம. அவன் வாழ்வு நிரந்தரமான ஒரு காரிருளில் தான் கழிகிறது. கன்னங்கருத்த சூன்யமான பேயிருள்! அதில் அவன் அப்படியே சொக்கி துக்க சொரூபமாக, நம்பிக்கை இழந்தவனாக, ஆகிவிடாது காப்பாற்றிய தன் நண்பனைத் தான் ஆசையோடு தேடுகிறான் அவன். ஆனால், தேடுகிறான், தேடுகிறான் காணவில்லை!

இரண்டு மூன்று நிமிஷங்கள் நிலத்தைத் தடவித் தடவித் தேடியாய் விட்டது. காணவில்லை! இருந்தால் கைக்கு அகப்பட வேண்டுமே! காணாது போகவே அவனால் தாங்க முடியவில்லை. திகைத்தான். யாரோ சதிகாரர்கள், ஒருபோதும் உபகாரம் அல்லாது அபகாரம் செய்வதறியாத தன் நண்பனை நீண்ட வருட காலமாக அவனை விடாது தொடர்ந்த உண்மைத் தோழனை தன்னிடமிருந்து பிரித்து விட்டார்கள் என்பதை உணர்ந்தான் அவன்.

தன்னைத் திட்டிய பிரமுகராகத்தான் இருக்க வேண்டுமென்பதை யூகித்தறிந்து கொண்டான். அவனால் வேறொன்றும் செய்ய முடியவில்லை. கண்ணோரத்தில் ஒரு கண்ணீர்த் துளி வெடித்தது. உள்ளத்தின் பொருமல்தான் அவ்வெடிப்பினால் பாய்ந்தது போலும்.

* * *
அவன் உயிரின் ஓர் அம்சம் அந்தக் கழி. அது பிரிந்தால் தன் வாழ்வின் கொடியே துவண்டு வாடிவிடும் என்றெல்லாம் சில சமயம் அவன் எண்ணுவதுண்டு. நன்றி அறிதலோடு அதனை அணைத்து முத்தம் இடுவது கூட உண்டு. இன்று அது பிரிந்து விட்டது. உள்ள வானில் சோக கருமேகம் கவிந்து முகத்தையே இருளடையச் செய்து விட்டது.


அந்தக் கழி அவனோடு பொருந்திய வரலாறே அதிசயம். அதன் பின்னே மனிதனின் அன்புணர்வுச்சியின் காவியம் இருந்தது.


ஆறு வருடங்களின் முன் திருவிழாத் தினமொன்று. அன்றுதான் யந்திர யமனொன்று - ஒரு மோட்டார் லொறி- அவன் கண்களைக் காணிக்கையாகப் பறித்துப் பெற்றுக் கொண்டது. விபத்து நடந்த வீதியில் ஒரு வாலிப வைத்தியர் அவன் மீது இரக்கம் காட்டி இலவசமாக அவன் கண்ணிலுள்ள புண்ணை சொஸ்தப்படுத்தினார். அந்த வைத்தியரின் இனிய வார்த்தைகள், மறக்க முடியாத உயர்ந்த சங்கீதம் போல, இன்னும் காதில் ரீங்காரம் செய்து கொண்டிருந்தன. அவர் முகம்! - அதனைத் தான் அவனால் பார்க்க முடியாதே!


கண் சொஸ்தமான பின்னர் கழியையும் அவர்தான் உதவினார். உண்மையான பதிவிரதை ஒருவளைப் போல அது அவனோடு விடாது தொடர்ந்தது. கணங்கூடப் பிரிந்ததில்லை. பார்க்கச் சகிக்காத பாவிகள் அதனிப் பிரித்து விட்டார்கள். அது எங்கே, எங்கே என்றலறிய துள்ளம.


* * *
மாலை மயங்கி விட்டது. தெரு லாம்புகள் மினுங்க ஆரம்பித்தன. வீதியில் ஜனப் புழக்கம் குறைந்தது. சப்தங்கள் குறைந்தன.


சேர்ந்த சல்லிகளை எடுத்து எண்ண ஆரம்பித்தான். போவதற்காயத்தமாகினான் குருடன். ஆனால் வழக்கம் போல் அவன் நண்பன் வந்து விட்டான். இருவரும் கதைக்க ஆரம்பித்தார்கள். இவ்இருவருள் நட்பு வளர்ந்ததே ஆச்சரியம். ஒருவன் ஐம்பதின் ஓரத்தைத் தொட்டு விட்ட வயோதிபக் கபோதி. மற்றவன் ஒன்றுமறியாத பத்து வயதுச் சிறுவன்.
இவை வேற்றுமைகள். ஆனால் ஒற்றுமைகள் பல இருந்தன. பிச்சையில் ஜீவிப்பவர்கள், அரைப்பட்டினி கிடப்பவர்கள், யாருமற்ற அநாதைகள் என்பன சில. இவ் ஒற்றுமை அடிப்படையில்தான் போலும் வேற்றுமையின் வேலிகளைத் தாண்டி இரு உள்ளங்களும் ஒன்றுபட்டு நட்பு ஜனித்தது.


இருவருள்ளும் சில்லறைக் கொடுக்கல், வாங்கல், பரஸ்பர உதவிகள் என்பன உண்டு. கிழவனுக்கு சிறுவன் மீது குழந்தை ஆச்சே என்று இரக்கம். சிறுவனுக்கு அவன் மீது வயோதிபராச்சே, குருடராச்சே என்ற அனுதாபம். இந்தப் பரஸ்பர நல்லெண்ணம் பற்றிப் படர்ந்து ஒருவிதப் பாசமாக இரு உள்ளங்களையும் இறுகப் பிணைத்தது. கொழுகொம்பற்ற கொடிகள் இரண்டு தோட்டத்தில், தம்முள் தாமே பிணைந்து படர்வது போல.


கிழவன் உணர்ச்சி விம்மும் குரலில் தனது அன்றைய அபாக்கிய அனுபவங்களைக் கூறினான். கண் இழந்ததை விட கழி இழந்ததால் தான் பட்ட துன்பம், அது தனக்குக் கிடைத்த வரலாறு, அதை உதவிய வாலிப வைத்தியர் பற்றிய விபரங்கள் எல்லாவற்றையும் ஒன்றன்பின்னொன்றாகக் கூறி வந்தான்.


சிறுவன் உள்ளத்தை அது தொட்டது. "வருத்தப்படாதே. நான் இன்னோர் கழி நாளைக்குத் தருகிறேன்" என்றான் அவன். எப்படியாவது கிழவனுக்கு ஒரு நல்ல கழி பெற்ருக் கொடுத்து விடவேண்டுமென்று தீர்மானித்துக் கொண்டான். அவன்.


கிழவனுக்குத் திருப்தி ஏற்பட ஆரம்பித்தது. "அதையும் இந்த மாதிரி யாராவது பாவி எடுத்து வீசி விடாதிருக்க வேண்டும்" என்று கூறிக்கொண்டான் அவன்.


இதைக் கேட்டதும் மின்னல் போல் ஒரு யோசனை சிறுவன் உள்ளத்தில் வீசி அடித்தது. துடிதுடிப்போடு அவன் சொன்னான்:" அப்படியானால் நானே வழிகாட்டியாய் இருக்கிறேனே! என்னை யாராலும் தூக்கி வீச முடியாதல்லவா?" என்றான் அவன். "அது மட்டுமல்ல, வீதி எல்லாம் சுற்றிப் பணம் சேர்ப்பதும் முடியும். இருவரும் பங்கு போட்டுக்கொள்ளலாம்" என மேலும் தொடர்ந்தான்.


கிழவனால் நம்ப முடியவில்லை. தன்மீது இத்தகைய அன்புணர்ச்சி கொண்ட உள்ளமும் இருக்கிறதா என்று ஆச்சரியப்பட்டான். சிறுவனின் கள்ளங்கபடமற்ற அன்பு அவன் இதயத்தைக் கெளவியது. அவன் பேச விரும்பினான்.


முடியவில்லை. குரல் தளதளத்தது. "ஆகட்டும்!" என்று தன் தலையை அசைத்தான் கிழவன்.
அவனது குருட்டுக் கண்ணின் சூன்யத்திலும் அன்பின் உணர்ச்சி மின்னல் ஒரு கணம் ஜொலித்தது போல் தோன்றிற்று. ஒருவிதப் பரவச உணர்வால் அவன் நரம்புகளில் எல்லாம் இன்ப மின்சாரம் படர்ந்து சென்றது. "இழந்த வழிகாட்டிக்கு இது குறைந்த வழிகாட்டியல்ல" என்று கூறிக் கொண்டான் அவன். பொலபொலவென்று காற்றில் உதிரும் பூக்கள் போல கண்ணீர்த்துளிகள் அவன் கபோலத்தைத் தடவிச் சென்றன. அக்கண்ணீர்த்துளிகளில் துக்கத்தின் பாரமில்லை. ஆன்ந்த உணர்ச்சி நிறைந்திருந்தது.


இருவரும் மெளனமாக எழுந்தார்கள். சிறுவன் கையைப் பிடித்து வழிகாட்டத் தேநீர்க் கடைக்கு சென்றான் கிழவன். தேநீர் அன்று அமிர்தம் போல் இனித்தது. காரணம்: அதில் இன்பத்தின் மதுரமும் கலந்து கரைத்திருந்தது.

[ 'பாரதி' இதழிலிருந்து..]

No comments: